LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- காஞ்சனா தாமோதரன்

வழிப்பறி

ஏ பாமா, நீ ரெடியா ? ' ராவுத்தர் மகள் சலிமா அக்கா வாசலில் நின்று குரல் கொடுத்தாள்.

'அவா எங்க ரெடி ? இவ்ளோவ் நேரமா ஒரு பொஸ்தகத்தை வச்சிக்கிட்டு ஒக்காந்திருந்தா. நேரத்தோட குளிப்பியான்னு நா இப்பத்தான் வெரட்டி விட்டேன். ' அரிசியைச் சுளவில் பரப்பிக் கல் பொறுக்கிக் கொண்டு முன் திண்ணையில் உட்கார்ந்திருந்த பாமாவின் தாய் வாஞ்சையுடன் அலுத்துக் கொண்டாள்.



அவளுக்கு எல்லாம் கேட்டது. புத்தகம் படிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் போவது தெரியவில்லைதான். மாடப்பிறைக்கு மேல் மாட்டியிருந்த கண்ணாடியில் தன் முகத்தை இன்னொரு முறை பார்த்துக் கொண்டாள். சாயம் போன சிவப்புக் கண்ணாடி ஃபிரேமுக்குள் விளம்பரப் படம் மாதிரி அவள் முகம். குறுகுறுக்கும் பெரிய கண்கள், குளித்த ஈரத்தைத் தேக்கிக் கொண்டு. பளிச்சென்று பவுடர் பூச்சில் மினுங்கும் மாநிறம். நல்லாத்தான் இருக்கோம்...மனசில் இயற்கையான துள்ளல். தலையில் செருகியிருந்த சீப்பை எடுத்துவிட்டு, ஒரு பின்னலை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டாள். அந்தக் கரும்பச்சை ஸ்டிக்கர் பொட்டையே வைத்திருக்கலாம் போல. இந்தப் பச்சைப் பொட்டு தாவணி கலருக்கோ பாவாடை பார்டர் கலருக்கோ சரியான மேட்ச் இல்லை. சரி, இனி பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆயிற்று. சலிமா வேறு காத்திருக்கிறாள். ஒரு நாள் மேட்ச் ஆகாத பொட்டோடு போனால் தப்பில்லை. புத்தகப் பையை எடுத்துக் கொண்டாள்.

'போயிட்டு வா தாயீ. ' பள்ளிக்குப் போகும் மகளைப் பற்றி அம்மையின் முகத்தில் தெறிக்கும் பெருமை அவளுக்குப் பாராமலேயே தெரியும். அப்பன் என்பவன் அந்த வெறும் பெயரோடும் அடுத்த ஊரிலிருந்து வயலில் வேலை செய்ய வந்த ஒருத்தியோடும் தென்னந்தோப்பு வீட்டோடும் நின்று விட்டான். அம்மைதான் ஆண்பிள்ளையாய். கல்யாணத்தின் போது போட்ட நகைகளை அடித்து மிதித்து அம்மையிடமிருந்து பிடுங்கினவன் அப்பன்காரன். அவள் பூர்வீக நிலத்தையும் பறிக்க அவன் வந்த போது பஞ்சாயத்து போர்டு வழியாக அதைத் தக்க வைத்துக் கொண்ட ஒரு புத்திசாலி, அம்மை. அந்தக் கையகல நிலத்தை ராவுத்தரிடம் குத்தகைக்கு விட்டு, வயிற்றைக் கழுவி அவளையும் படிக்க வைக்க வழி செய்திருக்கிறாள். அவ்வப்போது வந்து தொந்தரவு பண்ணும் அப்பனுக்கும் வாய்க்காிசி போடுகிறாள். கல்லான தன் கணவன் புல்லினும் கீழான ஒரு புருஷன் என்று தொிந்த பிறகும்.....

'என்ன பாமா, மூஞ்சை 'உர் 'ருன்னு வச்சிக்கிட்டு பேசாம வார ? இதுக்குள்ள நூறாயிரம் ஊர்க்கதைய வக்கணையா அளந்துருப்பியே. ' சலிமாவின் குரல் நினைப்பைக் கலைத்தது.

'ஒண்ணுமில்ல சலிமா 'க்கா, சும்மாத்தான். இங்க பாரேன். அணில் கடிச்சுப் போட்டதும் காத்துல உதுர்றதுமா எவ்ளோவ் நவ்வாப்பழம் கீழ விழுந்து கெடக்கு.. கொஞ்சம் நில்லு 'க்கா. நம்மளும் ரெண்டு மூணு பழம் பொறுக்கி தின்னுக்கிட்டே போலாம். மொத பெல் அடிக்கவே இன்னும் கொஞ்சம் நேரம் இருக்குல்லா. '

நாவல் பழங்கள் மேலிருந்த மணலை ஊதி ஊதித் தின்று கொண்டு, நாக்கு ஊதா நிறமாக மாறுவதை ரசித்துக் கொண்டே நடந்தார்கள். மண் சாலையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள நாவல் மரங்களும் அத்தி, ஆல மரங்களும் வளைந்து பின்னி வேய்ந்திருக்கும் பச்சைக் கூரை. நடு நடுவே பளிச்சிடும் காலைக் கதிர்களின் உள்ளே குளிர்காய்ந்து ஆட்டம் போடும் தூசுப் பட்டாளங்கள். மரங்களுக்கு அப்பால் அடர்ந்த சிவப்பு அரளிச் செடிகளிடம் கோடையில் சுருங்கிய ஆற்றின் மெளன முணுமுணுப்பு. ஆடிமாதக் காற்றில் பாவாடைகள் கால்களைச் சுற்றும் குடைராட்டினமாயின. காற்றாடியாய் அலைந்த தாவணித் தலைப்பை இறுக இடுப்பில் செருகிக் கொள்ள வேண்டியிருந்தது. நெற்றியிலும் காதோரத்திலும் உள்ள குட்டைத் தலைமயிர் கலைந்து சுருள் சுருளாகச் சிலும்பிற்று. உச்சியைத் தொட்ட காற்று உடம்பு முழுதையும் நனைத்து பாதத்தை நோக்கி வழிந்தது.

'காத்து சொகம்மா இருக்குல்லா 'க்கா ? '

'ம்ம்ம்ம்....ஸ்கூல் ஆண்டு மலர்ல காத்தப் பத்தியும் காளானப் பத்தியும் கவிதை எழுதுறவா நீ. காத்து சொகமா இருக்குன்னு சொல்லுத. பாழாப் போன காத்து இப்டி பாவாடையைப் பறத்தி மானத்த வாங்குதேன்னு நான் நெனச்சிக்கிட்டு இருக்கேன். ' சலிமா அக்கா ஒரு யதார்த்தவாதி.

'இந்த வருஷம் பத்தாங்கிளாஸ் முடிச்சப்றம் மேல ப்ளஸ்-டூவுக்கு ஒங்க வீட்ல அனுப்புவாகளா 'க்கா ? '

'இல்ல, நிக்காஹ்தான். வாப்பா நேத்து கூட உம்மாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தாக. பத்தமடைலருந்து சொத்து பத்து உள்ள ஒரு நல்ல சம்மந்தம்னு. '

'ஒனக்கு மேல படிக்கணும்னு ஆசையில்லையா 'க்கா ? '

'ஸ்கூல் எனக்கு இப்பவே போரடிக்கி, பாமா. நீ என்ன மெத்தப் படிச்ச மேதாவியாகி கலெக்டர் உத்தியோகம் பார்க்கப் போறியாக்கும் ? ' சலிமா அக்கா சிரித்தாள். பளீரென்று முகத்தில் விளக்கேற்றும் சிரிப்பு.

அவளும் சேர்ந்து சிரித்தாள். 'கலெக்டர் உத்தியோகம்னு இல்ல 'க்கா. அம்மைக்குக் கொஞ்சம் நெலம் நீச்சு இருக்கு. கூடவே கொஞ்சம் படிப்பும் இருந்துதுன்னா நல்லதுன்னு படுது. நாளக்கி நம்மளக் கட்டுறவனுக நெலத்தையும் நகையையும் அடிச்சு உதச்சு புடுங்கினாலும் புடுங்கிருவானுக. நம்ம படிப்பை அப்டி புடுங்கிற முடியாதுல்லா. அதான். '

சலிமா அக்கா மெளனமானாள். பாமா ஏன் அப்படிப் பேசுகிறாள் என்பது அவளுக்குப் புாிந்ததுதானே.

'தளுக்கி மினுக்கிக்கிட்டு பொட்டச்சி இவா பள்ளிக்கூடத்துக்கு போணுமாங்கும் ? ' 'வீட்ல ஒரு ஆம்பள இருந்தா ஒரு தட்டு தட்டிப் போட்டிருப்பான். அவன எவாகிட்டயோ கூட்டி குடுத்துப்புட்டு இவா இங்க பவுரு பண்ணத பாரேன். ' 'பொிய ஐயமாருவ பொண்ணுன்னு நெனப்பு போல. கொஞ்சம் வெளுத்த தோலா இருந்தா போதுமே, ஆடிருவாளுவ. ' 'என்னத்த படிச்சி என்னத்துக்கு, ரெண்டு கொம்பா மொளைக்கப் போவுது ? நாளக்கி இவளும் நம்மள மாதிாி சட்டி சொரண்டத்தான போறா, மயினியோவ் ? ' 'இவா அம்மக்காாிக்கி கோட்டி (பைத்தியம்) புடிச்சுருக்கு. சமஞ்ச பொண்ண இப்டி ஊரு தாண்டி பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவாளா ? ' சொந்த பந்தத்தின் ஏச்சுகளும் எகத்தாளமும் நினைவுக்கு வந்தன....கூடவே அம்மையின் வைராக்கியமான மெளன பதிலும். வைராக்கியத்தையே வாழ்க்கையாக்கி விட்ட அம்மை.

ஆறும், அதை ஒட்டிய மரங்கள் அடர்ந்த சாலையும் வளைந்து விலகிப் போயின. இனி ஒரு குறுகிய முடுக்கைக் கடந்தால் பள்ளிக்கூடம். முடுக்கின் இரு புறமும் மண்ணாலான வீடுகள். சாணம் தெளித்து திருத்தமான புள்ளிக்கோலங்கள் ஒவ்வொரு வீட்டின் முன்னும். கோலம் போடுவது அழகான அருமையான வழக்கம்தான். போட்ட சில மணி நேரங்களிலேயே காற்று அழித்து விடும் என்று தொியும். இருந்தும் தினம் கோலம் போடுவது நடக்கிறது...மறுமலர்ச்சியில், அதன் தொடர்ச்சியில் மனிதர்களுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை. சில திண்ணைகளில் ஆடுகள் உட்கார்ந்து நிதானமாய் அசை போட்டுக் கொண்டிருந்தன. என்ன நினைவுகளோ இவை மனசில். கோழிகளும் பன்றிகளும் தங்கள் குடும்பங்களோடு சமத்துவமாய் அதே சாக்கடையில் விருந்து சாப்பிட்டன. அரை டிராயர் சிறுவர்கள் அந்த டிராயர்கள் கீழே விழுந்து விடாமல் ஒரு கையால் பிடித்தவாறு குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் ஏன் இந்த நேரத்தில் பள்ளிக்கூடத்தில் இல்லாமல்....

நினைப்பும் மூச்சும் திடாரென்று நின்றன. அவளைக் கடந்து வேகமாய்ப் போன சைக்கிளிலிருந்து ஒரு கரம் அவள் கழுத்தை நோக்கி நீண்டது. அவள் கை தானாகவே கழுத்திலிருந்த மெல்லிய சங்கிலியை இறுக்கப் பற்றிக் கொண்டது, திருடனிடமிருந்து பாதுகாப்பாய். திருடன் சங்கிலியைக் குறி வைக்கவில்லை என்பது அவன் போன அரைக் கணத்துக்கு அப்புறம்தான் புரிந்தது. அவன் பிசைந்து சுகித்த வலது மார்பகம் வலித்தது.

அந்த மின்வெட்டுக் கணத்துக்குப் பிறகு அவள் உறைந்து போனாள். உணர்வுகள் மரத்து, சுற்றிலும் உள்ள சப்தங்கள் எல்லாம் அடங்கி.. இன்னொருவாின் பயங்கரமான கனவுக்குள் விழித்துக் கொண்ட மாதிரி. சலிமா அக்கா அவள் கையைப் பிடித்துக் கொண்டு சத்தமில்லாமல் அழுதது ஞாபகம் இருக்கிறது. பாவம், இவள் ஏன் அழணும் ? அம்மாவிடம் அவளுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி வீட்டில் விட்டு விட்டுப் போனதும் சலிமா அக்காதான். கால் தரையில் பாவாமல் எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் என்று நினைவில்லை. தலையணையைப் போட்டுத் தரையில் உடம்பைச் சாய்க்கையில், உத்திரத்துப் பனங்கட்டையில் ஒரு பல்லி அவளையே கண்ணிமைக்காமல் பார்த்தது நினைவிருக்கிறது. அப்புறம் தூக்கமோ மயக்கமோ ஏதோ ஒன்று கறுப்புப் போர்வையாய் அவளைத் தன்னுள் பொத்திக் கொண்டது, கருணையுடன்.

சலிமா அக்காவும் அவளும் சேர்ந்து பள்ளிக்குப் போகிறார்கள். அதே முடுக்கு. அதே சைக்கிள். அதே கரம் அவளைப் பார்த்து நீண்டது. இந்தத் தடவை அவள் வீண் அதிர்ச்சியிலும் பயத்திலும் தன்னினைவு இழக்கவில்லை. புத்தகப் பையை உயர்த்தி அவன் கையைத் தள்ளி விடுகிறாள். கனத்த பை அவன் மீது மோதும் வேகத்தில் அவன் நிலைகுப்புற சைக்கிளோடு விழுகிறான். இப்போது அவன் கண்களில் பயம். தன்னை அடையாளம் காட்டாமல் வம்பு பண்ணும் கோழைப்பயலின் கண்ணில் பயம் இல்லாமல் வீர தீரமா இருக்கும் பின்னே ? சலிமா அக்கா கத்தி ஊரைக் கூட்டுகிறாள். கூடியவர்கள் அவனைத் திட்டி அடித்து விரட்டுகிறார்கள். திரும்பிப் பாராமல் ஓடுகிறான் பயந்தாங்கொள்ளி.

திடுமென்று அவளுக்கு விழிப்பு தட்டியது. இருட்டியிருந்தது. தெருவிளக்கின் வெளிச்சம் ஜன்னல் கம்பிகளால் சிறையிடப்பட்டு சதுரமாய் அறைக்குள் சாிந்திருந்தது. உத்திரத்தில் பல்லியைக் காணோம். அதுவும் தூங்கப் போயிருக்கலாம். பல்லிகள் எங்கே எப்போது போய்த் தூங்குமோ...தொியாது. அவள் நெற்றியில் அம்மை பூசியிருந்த பச்சிலைச் சாந்து காய்ந்து சொரசொரவென்று உதிர ஆரம்பித்திருந்தது. அம்மை தீமூட்டிக் குழலால் விட்டு விட்டு அடுப்பை ஊதும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டு பங்குசம் அத்தை குழம்புக்கு அரைக்க அம்மி தட்டிக் கொண்டிருந்தாள். சுற்றுக் குடிசைகளில் ராச்சோறு கொதிக்கையில் பீடி சுற்றும் பெண்கள் பாடும் பாட்டு. எல்லாமாய்ச் சேர்ந்து ஒரு முழுக் கச்சோியே நடந்து கொண்டிருந்தது, வழக்கம் போல். எல்லாம் எங்கேயோ தூரத்திலிருந்து வருவது போலத் தெரிந்தது.

முந்தி மாதிரி கன்றுக்குட்டி துள்ளல் இனியும் அவளுக்குள் இருக்குமா ? தொியவில்லை. சந்தேகமும் தற்காப்பு உணர்ச்சியும் மரப்புத் தன்மையும் இன்னும் கொஞ்சம் கூடவே தேவைதான் போல. நெஞ்சு எாிவது போலிருந்தது. கூடவே காரணமில்லாத ஓர் அவமானமும் உடம்பெல்லாம் கூசுவது போல உணர்வும். இவையெல்லாம் இன்னும் கொஞ்சம் நாளில் மறைந்து போகலாம், அச்சமே இல்லை என்று ஆனாலும் ஆகலாம். ஆனால் இப்போதைக்கு, பேசாமல் அம்மையின் வயிற்றுக்கே திரும்பிப் போய் ஒரு பையனாகப் பிறந்து வந்தால் தேவலை என்றிருந்தது

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.