LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

வள்ளுவ இல்லறம் - இரா.முருகன்

மனித சமூகம் சார்ந்த வாழ்வியல் நிகழ்வுகளே இலக்கிய ஆக்கங்களாகப் படைக்கப்படுகின்றன. இப்படைப்புகள் தனிமனிதனையோ சமூகத்தையோ பாடு பொருளாகக் கொண்டு இலங்குகின்றன. மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுபவை ஒரு வகையாகவும், வாழ்வியல் நெறிகளை அல்லது விதிகளைப் பற்றிப் பேசுபவை மற்றொரு வகையாகவும் என இவ்விலக்கிய வகைகளை இரண்டாகப் பகுக்கலாம். வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம், காலத்தின் தேவை போன்ற காரணங்களால் முதல் வகை இலக்கியங்கள் சமூகத்தில் நிலைகுன்றிப் போய் விடுகின்றன. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் வாழ்வியல் கோட்பாடுகளில் ஏற்படுவதில்லை. எனவேதான் இரண்டாம் வகைப் படைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன.
தமிழிலக்கிய வரலாற்றிலேயே வாழ்வியலைப் பிழிந்து இலக்கியம் கண்ட பெருமை வள்ளுவரையே சாரும். இந்தி இலக்கியம், மலையாள இலக்கியம் என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் மொழி, இனம், நாடு என இவற்றைத் தாண்டி உலகம் முழுவதுமே போற்றக் கூடிய உலகப் பொதுமறையாய் விளங்குவது தமிழரின் திருக்குறளே எனில் மிகையாகா.
உறுதிப் பொருட்கள் நான்கனுள், முதல் மூன்றும் மண்ணுலக வாழ்வைப் பற்றியன. மண்ணுலக வாழ்வு என்பது உலகப் பந்தமாகிய ''குடும்பம்'' பற்றியது. இதனை வள்ளுவர் ''இல்லறம்'' எனும் சொல்லாடல் மூலம் புலப்படுத்திச் செல்கிறார். வள்ளுவம் காட்டும் இல்லறவியல் குறித்த செய்திகளை இவண் நோக்கலாம்.
குடும்பம்
தனிமனித நிலையிலிருந்து கூட்டு வாழ்வை ஏற்படுத்திக் கொண்ட அமைப்பு சமூகம். இச்சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் இடையேயான உறவை விளக்குவதே சமூகவியல் (Sociology), மனித சமூகம் சார்ந்த முக்கிய நிகழ்வுகளைச் சமூகவியல் அறிஞர்கள், ''சமூக நிறுவனங்கள்'' எனக் குறிக்கின்றனர். இதில் திருமணம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இதுவே குடும்பம் எனும் அமைப்பிற்கு அடிப்படையாகிறது.
கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் சேர்ந்த ஓர் ஒழுங்கான கூட்டமைவே குடும்பம். இது சிறப்பாய்ச் செயல்பட வேண்டுமானால் ஒவ்வொருவரும் தத்தம் பணியைச் செம்மையாகச் செய்ய வேண்டும். வள்ளுவரின் காலம் கூட்டுக் குடும்பம் நிலைபெற்றிருந்த காலமாக இருக்க வேண்டும். எனவேதான் சமூகத்தின் சிறு அங்கமான குடும்பத்தை ஒட்டுமொத்தச் சமூகத்துடன் இணைத்துப் பேசுகிறார் (குறள்கள் 42, 23).
இல்லற வாழ்வில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். அவ்வாழ்க்கையும்கூட அறவழியில் அமைய வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புடன் இருந்துள்ளார். ''அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை'' எனும் தொடர் இதனை உறுதி செய்கின்றது. எனவே இல்வாழ்வின் பயனாக அன்பையும் அறத்தையும் குறிக்கின்றார். இல்வாழ்க்கையை அறவழியில் மட்டுமே கொண்டுசெலுத்தினால் அது மகிழ்வான வாழ்க்கையாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுமே செல்லும் கட்டாய வாழ்வாக முடிந்துவிடும். அல்லது இல்வாழ்வில் அறம் தவறுதல் என்பது தன்னை மீறிய ஒன்றாகவும் நிகழ்ந்துவிடும். எனவே அன்பை முதன்மைப்படுத்தி அறத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறார் (குறள் 45). ஆக வள்ளுவரின் பார்வையில் குடும்ப வாழ்வு என்பது அறவழியை அடியொற்றியது என்றாலும் அதன் நோக்கம் இன்பத்தை முதன்மைப்படுத்தியதாய் இருக்க வேண்டும் என்பதேயாகும்.
குடும்பத் தலைவனின் இயல்புகள்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடிப்படையாய் விளங்குபவர் குடும்பத் தலைவர். குடும்பத்தின் உயர்வும், தாழ்வும் அவரைச் சார்ந்தே அமையும். எவ்வித எதிர்பார்ப்பு, பொறுப்பும் இல்லாத இளைஞன் ஒருவன் திருமணமானதும் தனக்கென்று சில பொறுப்புகளை ஏற்கிறான். அதுவரை தனிமனிதனாக இருந்த அவன் மணமானதும், சமூக ஒழுங்கமைவுக்குக் காரணமாகிறான். அதுமுதல் தான் எனும் நிலையை விடுத்துப் பிறருக்காகச் செயல்பட ஆரம்பிக்கிறான். சுயநலம் மட்டுமே தேடும் குடும்பத் தலைவனை வள்ளுவர் படைக்கவில்லை. மாறாக இல்லறத்தானுக்குரிய தனித்த சில பண்புகளைச் சுட்டுவதன் மூலம் சமூக நலனில் (பொதுநலனில்) அக்கறையுள்ளவனாகவே குடும்பத் தலைவனைப் படைத்துக்காட்டுகிறார். இல்வாழ்க்கை என்ற நிறுவனம்தான் மனிதன் பிறருக்காக வாழவேண்டும் என்ற உணர்வை உண்டாக்குகிறது என்பதை இதன் வழி உணர்த்திவிடுகிறார்.
பெண்களைப் போலவே ஆண்களும் கற்புநெறி தவறாது, ஒருத்தியுடன் மட்டுமே வாழவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார். இதன் காரணம் பற்றியே ''பிறனில் விழையாமை'' எனும் அதிகாரத்தை யாத்துள்ளார். பிறனில் விழைதலாகிய அறமற்ற செயலைச் செய்வதனால் பகை, பாவம், அச்சம், பழி போன்றவற்றை ஏற்க வேண்டியிருக்கும் என்கிறார். பகை, பழி, பாவம் போன்றவை தவறு செய்வதனால் ஏற்படும் பின்விளைவுகள். ஆனால் அச்சம் (பயம்) என்பது தவறு செய்வதற்கு முன்னர்த் தோன்றவேண்டிய ஒரு மெய்ப்பாடு. இதனை, தவறு செய்தற்குப் பின்னர் ஏற்படும் உணர்வாகக் காட்டியிருப்பது சிந்திக்கற் பாலது. இங்கு வள்ளுவர் சுட்டிய அச்சம் என்பது முறையற்ற உறவினால் வரும் ஆட்கொல்லி நோய் (Aids) குறித்த அச்சமாகவே இருந்திருக்க வேண்டும்.
இவ்வகையான பழி, பாவம் ஏதுமில்லாத குடும்பத்தலைவன் துறந்தவர், தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் போன்றோர்களுக்குரிய கடமைகளைச் செய்து அன்பு, நடுவுநிலைமை, ஒழுக்கம், பொறுமை, ஈகை போன்ற நற்பண்புகளையும் பெற்றிருக்க வேண்டும் என்கிறார். குடும்பத்தின் ஒழுங்கமைப்புதான் நாட்டின் ஒழுங்கமைவுக்கு மூலமாக அமைகிறது. வள்ளுவர் குடும்பத்தை நாட்டின் முன்மாதிரியாகவே (Ideal) கண்ணுறுகிறார். எனவேதான் நெறிதவறாது அறவழியில் நடக்கும் மன்னனுக்கு இணையாக, வீட்டை ஆளும் குடும்பத் தலைவரைத் தெய்வமாகக் குறிக்கிறார். இல்லறத்தை முதன்மைப்படுத்தும் வள்ளுவரின் உயர் நோக்கத்தினை இதன் வழி உணரலாம்.
இல்லாளின் பண்புகள்
இல்லத்தின் அறத்தை வழிநடத்திச் செல்பவள் இல்லாள். இவள் மனைவிக்குரிய நற்குணம் கொண்டவளாய் இருப்பதோடு கணவனின் வருவாயறிந்து வாழ்வு நடத்தி விருந்தோம்புபவளாய் இருக்க வேண்டும். ''அன்பு காரணமாகத் தான் அடைந்த கணவனுக்கு வாழ்க்கைத் துணைவியாய் அவன் சொல்வழி நின்று, அவனைத் தெய்வமாகக் கொண்டொழுகும் ஒருத்தியும், அவ்வாறே அவளைத் துணைவியாகக் கொண்டு அவளுக்கு வழித்துணையாய், மற்றவர்களுக்கெல்லாம் உற்றவிடத்து உறுதுணையாய், அறவழி நிற்பான் ஒருவனும் ஒன்றுபட்டு, ஒருவரை ஒருவர் விட்டு நீங்காது வாழவேண்டும் என்பதே திருக்குறளின் துணிபாகும்'' என்பர் மொ.அ. துரை. அரங்கசாமி.
இல்வாழ்வுதான் அழியாப் புகழைத் தரும். ஒருவனுக்கு அமையும் மனைவியானவள் கற்புநெறியில் தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனோடு பிள்ளைகளையும் காக்க வேண்டும். அதோடு தாய்வீடு மற்றும் புகுந்த வீடு ஆகிய இருவீட்டாரின் புகழையும் காப்பவளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வில் வள்ளுவர் சுட்டிய வாழ்நெறியைப் பின்பற்றினால் இல்வாழ்க்கை என்பது இன்பமாக இருக்கும். இல்லற வாழ்வில் பேதம் பார்க்காது கணவனைத் தெய்வமாகக் கருத வேண்டும் (குறள் 55). மனிதர்கள் சுயநலவாதிகள். தெய்வம் மட்டும்தான் நன்மை, தீமைகளுக்குச் சரியான பலனைக் கொடுக்கும். கடவுள் - பக்தன் நிலையில் கணவன், மனைவி உறவு இருக்க வேண்டும். இந்த உறவு மட்டும்தான் என்றும் பிரியாதது. பிரிக்க முடியாதது. எனவேதான் வள்ளுவர் இச்சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார். ஆணுக்குப் பெண் சரிசமமாக விளங்கும் தற்காலச் சூழலையும் மனத்திற்கொண்டு, புரிதல் மற்றும் விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் இல்லாமையால் குடும்ப வாழ்வில் ஏற்படும் விரிசல்களுக்கு (Divorce) அன்றே தீர்வு சொல்லியுள்ளார் வள்ளுவர் எனில் மிகையில்லை.
மக்கட்பேறு
உலகில் பெறக்கூடிய செல்வங்களில் எல்லாம் உயர்வானது மக்கட்பேறு. அதிலும் அறிவிற் சிறந்த நன்மக்களைப் பெறுதல்தான் உண்மையான செல்வம் என்கிறார். மக்கட்பேறு என்பதில் பிள்ளைகளுக்குப் பங்கில்லை. மாறாக முழுப் பொறுப்பையும் பெற்றோர்களின் மேல் சார்த்தி விடுகிறார். அவரவர்கள் செய்யும் வினைப் பயனையே காரணமாக்குகின்றதோடு பண்பில்லாத மக்களைப் பெறுவதால் ஏழேழு பிறவிக்கும் துன்பம் தொடரும் என்கிறார். இதன்வழி மக்களிடையே அறச் செயல்களைச் செய்யும் நல்லெண்ணத்தை விதைக்கிறார். தந்தையைப் போன்ற பழக்க வழக்கங்களும் செயல்பாடுகளும் இல்லையென்றால் மகனின் பிறப்பில் ஐயம் தோன்றலாம் என்கிறார். தான்பெற்ற பிள்ளையை யாரும் ஐயுறமாட்டார். பிறர் சந்தேகிக்கவும் விடமாட்டார். பிறப்பு முறையில் மரபணு நெறியாகச் சில குறைகள் இருப்பது இயல்பு. இந்நிலையை (அறவழியிலான) வளர்ப்பு முறையால் போக்க வேண்டும் என்பதனை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
அவையத்து முந்தியிருக்கச் செய்து, சான்றோன் எனக்கேட்டு மகிழ்கின்றவர்களாய்ப் பெற்றோர்களை முதன்மைப்படுத்தும் வள்ளுவர் பிள்ளைகளுக்கென்றும் சில கடமைகளைச் சுட்டுகிறார். இதன்வழி அறவழியில் ஒழுகி உலகோர் போற்றும் சான்றோனாகப் பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்றும் பிள்ளைகளின் உயர்நிலையின் மூலம் பெற்றோர்களின் உன்னத நிலையை உயர்த்த வேண்டும் என்றும் சுட்டுகிறார்.
மேற்கண்டவற்றிலிருந்து பின்வரும் முடிவுகளைப் பெறமுடிகின்றது.
* உறுதிப் பொருட்கள் மூன்றையும் இல்லறத்திற்காகப் படைக்கிறார்.
* இல்வாழ்க்கையை அறவழியில் நடத்தச் செய்து நாட்டு நலனுக்கு வழி கோலுகிறார்.
* இன்றைய நவீன சமூகத்திற்கும் பொருந்துகின்ற கருத்துகளை அன்றே கூறியுள்ளார்.
* உலகின் தேவை அனைத்தையும் இல்லறம் என்பதிலேயே அடக்கிவிடுகிறார்.

by Swathi   on 08 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.