|
||||||||
வள்ளுவர் சொன்ன உவமை கதைகள் - தமிழிறைவன் .சித்திரா நிலையம் |
||||||||
"வள்ளுவர் சொன்ன உவமை கதைகள் ".
தமிழிறைவன் .சித்திரா நிலையம் முதல் பதிப்பு 2012 மொத்த பக்கங்கள் 130 விலை ரூபாய் 40.
# இது ஒரு திருக்குறள் புத்தகம் . சிறுவர்களுக்கான புத்தகம் என்று சொல்லலாம் . சிறுகதை புத்தகம் என்றும் சொல்லலாம்.
1.அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை
2.உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு .339.
3.அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்
மக்கள் பண்பு இல்லாதவர்.997
4.வலியில் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று .273
5.தாளாண்மை இல்லாதவன் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போல கெடும் .614.
6.தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்தற்று.208.
7 .உடையார் முன் இல்லார் போல்
ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர் .395.
8.பொருள் ஆட்சி போற்றதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு.252
9 . பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன்றாங்கு .532
10. பீலிபெய் சாக்காடும் அச்சிறும். அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் .475 .
11.நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற .495.
12.புறம்குன்றி கண்டனைய ரேனும்
அகம் குன்றி
மூக்கில் கரியார் உடைத்து .277.
13.அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.
முதலான 13 திருக்குறளுக்கு கதைகள் வடிவத்தில் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.
சிறுவர்களுக்கு ஒரு கதை சொல்லிவிட்டு அதற்குரிய திருக்குறளை சொல்லும் போது அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடும். இந்த அனுபவம் எனக்கு உண்டு .
சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களாக ஆனபோதும் கூட சில திருக்குறளுக்கு சில கதைகள் மூலம் விளக்கம் சொல்லும் பொழுது மென்மையாக வன்மையாக தன்மையாக மனதில் பதிந்து விடும்.
* மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அனைத்து அறன்
ஆகுல நீர பிற.*
என்கிற ஒரு திருக்குறள் .இதற்கு 12 பக்கங்களுக்கு குறையாத அளவில் ஒரு சிறுகதையை அல்லது நெடுங்கதையே சுஜாதா அவர்கள் எழுதியிருந்தார் .திருக்குறள் எப்போதோ படித்திருக்கிறேன் .அதற்கான விளக்கமும் எனக்கு தெரியும் .ஆனால் அவர் கதை சொல்லிய பிறகு அதனுடைய அர்த்தம் பரிமாணம் மாறுபட்டு போனதை நான் கண்கூடாக கண்டேன்.
**
புத்தகத்தில் கீழ்கண்ட 13 கதைகள் சொல்லப்பட்டு இருக்கிறது இறுதியில் குறள் தந்து விளக்கம் அருமையாக அமைகிறது.
I. மூடனும் சீடனும்
2.தூங்கினவர் விழிப்பார்
3. "மியாவ்! மியாவ்!"
4.புலி புல் மேய்கிறது?
5. கோழை கையில் கூர்வாள்.
6. நிழல்கள் நீங்குவதில்லை.
7. அறிவுப் பிச்சை
8. பொருளில் இருக்கிறது உலகம்
9. வறுமையும் அறியும்.
10. எளியோர் எல்லாம் எளியோர் அல்லர்
11. முதலைக் கல்யாணம்
12. குன்றிமணி
13. அச்சமில்லை! அச்சமில்லை!
***
இது ''வள்ளுவர் சொன்ன உவமைக் கதைகள்" என்ற நூல்வரிசையில், நான்காம் தொகுதி .சிறுவர்க்கானது.
இதிலுள்ள சிறுகதைகள் சற்றே பெரியவை எனினும் சிறுவர் நெஞ்சில் நிற்கக்கூடியவை பிஞ்சுப் பிள்ளைகளின் நெஞ்சில் திருக்குறளைக் கற்கவேண்டும் என்ற ஆவலை உண்டாக்கக் கூடியவை.
பசுமரத்தாணி போல காலத்திற்கும் நினைவில் நின்று வழிகாட்டி நெறிப்படுத்தக் கூடியவை.
பள்ளிகளில் குழந்தைகளுக்குத் தாங்கமுடியாத பாடச்சுமைகள் இன்று ஏற்றப்படுகின்றன. காலையில் கண் விழித்து எழுந்தது முதல், இரவில் படுக்கச்செல்லும் வரை படிப்பு என்ற பெயரால் குழந்தைகள் படும்பாடு கொடுமையானது. அவர்களுக்குள் இருக்கும் மனித மனம், அவர்களது இயல்பான வளர்ச்சி, விருப்பம் பற்றி சிறிதும் கருதாமல், ஆக்கிரமிக்கப்பட்டு நசுக்கப்பட்டு வருகிறது.
பாடச் சுமைகள் ஒருவகுப்பில் இருந்து மறு வகுப்புக்கு மாறிச்செல்லப் பயன்படுகின்றனவேயன்றி, அவர்களுக்குத் தரப்படும் கல்வி உத்தியோக நோக்கம் கொண்டதாக உள்ளதேயன்றி ,ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கின்ற, ஒரு மாபெரும் மனிதளின் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுவதாக இல்லை.
இதனால் படிப்பு வேறாகவும், ஒழுக்கம், பண்பாடு வேறாகவும் உள்ளது. கடவுள் வழிபாடு வேறு. நீதி நியாய உணர்வு வேறு என்று உள்ளது. இலக்கியம் வேறு வாழ்க்கை வேறு என்று ஆகிவிட்டது .
இவற்றை சிறுவயது முதலே குழந்தைகள் நெஞ்சில் ஒன்றாக இணைத்து வளர்க்காமல்போனால்; நம் சமுதாயப் பிரச்சனைகளுக்கு ஒருநாளும் நிரந்தரத் தீர்வு ஏற்படப் போவதில்லை.
நமது இலக்கியங்கள் யாவும் பண்பட்ட மனத்தின் வெளிப்பாடுகளே! அவற்றைப் படிக்கின்றவர்களின் மனம் தானாகவே பண்படும். ஒரு பண்பட்ட சமுதாயம் உருவாக வேண்டுமானால் பள்ளிப் புத்தகங்களுக்கு அப்பால் குழந்தைகள் படிப்பதற்கு வாய்ப்பும் வசதியும் ஏற்படுத்தித்தர வேண்டும். அந்நியமொழி கலாச்சார ஆதிக்கத்திலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். தமிழ்மொழியின் மேன்மையையும், அதிலுள்ள இலக்கியங்களின் அருமையையும் தமிழ்க்குழந்தைகள் உணருமாறு செய்ய வேண்டும்.
தாய்மொழியை அந்நியப்படுத்திவிட்டு,எந்த
இனமும் தலைநிமிர்ந்து வாழ இயலாது . தனது அடையாளத்தைத் தொலைத்து விட்டு. அந்நியத்தின் "நகல்" ஆகத்தான் அது இருக்க முடியும்!
நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் என்பார்கள் இந்தப்புத்தகம் நம் குழந்தைகளுக்குச் சிறந்த நண்பர்களாக அமைவதோடு அவர்களிடையே தமிழ்ப் பண்பை வளர்க்கவும் உதவும் என்பதில் ஐய மில்லை.
**கதையை பார்ப்போம்.
* குன்றிமணி* என்கிற கதை.
அப்பா ஏதோ அடிக்கவே மதுரை என்பவன் வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறான். மதுரை என்கிற பெயருள்ளவன் மதுரைக்கு வருகிறான் .
ஊர் உலகம் எல்லாமே அவனுக்கு புதிது .மக்களும் புதியது .நான்கு நாட்களாக உண்ண உணவின்றி குடிக்க தண்ணீர் இன்றி மிகவும் தவித்து போய் தடுமாறி மயங்கி கீழே விழுந்து விடுகிறான் .
அப்போது ஒருவர் வந்து அவனை காப்பாற்றுகிறார் .சில நாட்களில் அவன் கம்பீரமாக வலம் வருகிறார் .அவர் போகிற இடங்களுக்கு எல்லாம் அவனும் போகிறான் காரில் .
ஒரு நாள் அவனை இந்த பெட்டியை அங்கு கொடுத்துவிட்டு வா என்று தூரத்தை நிற்பவனை கைகாட்டி அனுப்புகிறார் .இவன் பெட்டி கொடுக்கப் போகிறான் .சுற்றி வந்த காவல் துறையினர் இவனை கைது செய்து விடுகின்றனர் .காரணம் இவன் கொடுத்த பெட்டியில் கத்த கத்தியாக பணம் அவன் பெற்றுக்கொண்ட பெட்டியில் கோயில் ஐம்பொன் சிலை உன்னை அனுப்பியது யார் என்று கேட்க அவன் கை காட்டுகிறான் அங்கு யாருமே இல்லை அவர் தெய்வம் போல் என்கிறான் அந்த தெய்வம் தான் தெய்வச் சிலையை கருத்தைச் சொன்னதா என்று காவல்துறையினர் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
மதுரையின் கால்கள் தள்ளாடின .நடப்பது போலவே அவனுக்கு தோன்றவில்லை .பூமி குடை சாய்ந்து விட்டது போலவும் தலைகீழாக அவன் எங்கோ பறப்பது போலவும் அவனுக்கு தோன்றியது.
**
குன்றிமணியின் வெளிப்பக்கம் சிவப்பாக இருப்பது போல் சிலர் வெளி உலகுக்கு நல்லவர்போல் இருப்பார்கள். ஆனால் அந்தக் குன்றிமணியின் மூக்கு கருமையாக இருப்பதைப் போல அந்தப்போலி மனிதர் நம் உள்ளுக்குள் மிகவும் கெட்டவர்களாக இருப்பார்கள்.
''புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி மூக்கில் கரியார் உடைத்து"
-திரு.கருணாமூர்த்தி , (முகநூல் பதிவு )
|
||||||||
|
||||||||
by Swathi on 29 Sep 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|