வாழ்க்கை என்னும் ஓர் வற்றும் நதி
அதில் வாழத் துடிப்பது மனிதன் விதி
யாவும் மாயையென அறியா மதி
உன்னை அடிமையாக்குமே எல்லாம் சதி!
பொய்யும் மெய்யேற்றிப் பேசுமடா
தினம் புகழுக்கு ஏங்கியே சாகுமடா
மெய்யும் பொய்யாய் மாறுமடா
தினம் வாழ்க்கை போலியாய் போகுமடா!
தன் மனம் தான் நன்று என்றிடுமாம்
தனைத் தவிர பிறர் கண்டு சிரித்திடுமாம்
பிறர் பாடும் துதிக்காக ஏங்கிடுமாம்
துதிபாட மறந்துவிட்டால் பொங்கிடுமாம்!
ஊருக்குள் உபதேசம் செய்திடுவார்
உள் வீட்டிற்குள் உண்மையை மறந்திடுவார்
பேருக்குப் பெருமையாய் வாழ்ந்திடுவார்
பிறர் வாழ்வில் தாழ்வு கண்டு இகழ்ந்திடுவார்!
தன் அறிவு பாராட்ட விருப்பம் வரும்
தன் தவறை மறைக்கும் எண்ணம் வரும்
பிறர் தவறு நோக்கும் புத்தி வரும்
விசயமற்று விமர்சிக்கும் வித்தை வரும்!
கல்லை பாலாய்ப் பார்ப்பதுவோ
பாலையும் கல்லுடன் சேர்ப்பதுவோ
உண்மையைச் சொல்பவர் யார் எவரோ
அவரையும் இவருடன் சேர்ப்பதுவோ!
நிலையில்லா வாழ்வென தெரிந்துமே
மனம் நிலைக்கப் பொய்பலச் சொல்லுமே
உண்மை முன்வந்து நிற்பினும்
அதை மறுத்து புறம் தள்ளுமே!
|