LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1194 - கற்பியல்

Next Kural >

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி', என்ற தோழிக்குச் சொல்லியது.) வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை: நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையோற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின், விருப்பமில்லாராவர். இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளுக்கு நீ இவ்வாறு கூறுவையாயின் நின்னைப் புகழ்கின்ற உலகத்தாருள் மிக வாழ்வார் யாரென்ற தோழிக்கு அவள் கூறியது. கொண்டான் காயிற் கண்டான் காயுமென்பது பழமொழி.
தேவநேயப் பாவாணர் உரை:
(காதலரை யியற்பழித்த லஞ்சி அவரது அருளின்மையை மறைத்த நீ தெய்வக் கற்பினை யாதலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாய் என்ற தோழிக்குச் சொல்லியது.) வீழப்படுவார்-கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப் படுவாரும் ; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர்-தாம் காதலிக்குங் கணவராற் காதலிக்கப்படாராயின் தீவினையாட்டியரே. தீவினையேற்கு அந்நன்குமதிப்பாற் பயனில்லை யென்பதாம். கெழீஇயின்மை நல்வினையின்மை. 'கெழீஇ' இன்னிசையளபெடை 'படாஅர்' இசைநிறையளபெடை. சிறப்பும்மை தொக்கது.
கலைஞர் உரை:
விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.
Translation
Those well-beloved will luckless prove, Unless beloved by those they love.
Explanation
Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.
Transliteration
Veezhap Patuvaar Kezheeiyilar Thaamveezhvaar Veezhap Pataaar Enin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >