LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- அ.முத்துலிங்கம்

வெளிச்சம்

சிலர் செல்பேசியை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். சிலர் பேனாவை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். சிலர் சாவியை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். நான் ஒருமுறை என் காரை தொலைத்தேன்.

அன்று ரொறொன்ரோவில் பனிகொட்டி கால நிலை மோசமாகும் என்று ரேடியோவில் அறிவித்தல் வந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு அவசரமாகப் போய்ச் சேர்ந்தேன். மருத்துவர் கொடுத்த நேரத்துக்கு அவருடைய வரவேற்பறையில் நிற்கவேண்டும். இன்னும் ஐந்து நிமிடம் மட்டுமே இருந்தது. அந்த ஆஸ்பத்திரியில் கார்கள் நிறுத்துவதற்கு நாலு தளங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள். ஒவ்வொரு கார் தரிக்குமிடத்திலும் ஒவ்வொரு கார் நின்றது. கார்கள் வரிசையாகச் சுற்றிச் சுற்றி தரிப்பதற்கு இடம் தேடின. நானும் பலதடவைகள் சுற்றி இடம் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் ஓடினேன். அந்த அவசரத்தில் எங்கே காரை நிறுத்தினேன் என்பதை அவதானிக்க தவறிவிட்டேன்.பின்மதியம் இரண்டு மணியளவில் மருத்துவரைப் பார்த்துவிட்டு திரும்பி வந்தபோது எங்கே காரை நிறுத்தினேன் என்பது மறந்துவிட்டது. எந்த தளம் என்பது கூட நினைவில் இல்லை. எந்தப் பிரிவு எந்த தரிப்பு இடம் என்பது சுத்தமாக மூளையிலிருந்து அகன்றுவிட்டது. நிதானமாக ஒவ்வொரு காராக தேடிக்கொண்டே வந்தேன். இப்பொழுதுதான் அப்படி எழுதுகிறேன். ஆனால் உண்மையில் இங்குமங்குமாக ஒருவித ஒழுங்குமின்றி தேடித்தேடி சுற்றினேன். காரைக் காணவில்லை.

என் கையிலே கார் சாவி இருந்தது. அதை அமத்தினால் காரின் முகப்பு வெளிச்சம் எரியும். நான் கையை முன்னுக்கு நீட்டி, ஒவ்வொரு செக்கண்டும் சாவியை அமத்தியபடி தேடிக்கொண்டே வந்தேன். அப்பொழுதுதான் அந்த வெள்ளைக்கார தம்பதியினரைக் கண்டேன். மனைவியை கணவன் சக்கர நாற்காலியில் உட்காரவைத்து தள்ளிக்கொண்டு போனார். அவருக்கு வயது 45 இருக்கலாம். மனைவிக்கு அதனிலும் குறைவு. மனைவிக்கு உற்சாகம் காட்டுவதற்காக ஏதோ உரத்து சொல்லிக்கொண்டே நடந்தார். மனைவி ஒரு காலத்தில் அழகாக இருந்திருப்பார். மெலிந்து 70 றாத்தல் எடையில் நாற்காலியை பாதிகூட நிறைக்காமல் தலை ஒரு பக்கம் விழுந்துபோக இருந்தார். தலையில் கத்தை கத்தையாக தலமையிர் உதிர்ந்துபோய் கிடந்தது. கணவர் சொன்னதைக் கேட்டு சிரிக்க முயன்றார். ஆஸ்பத்திரி நுழைவு வாயிலை நோக்கி என்னைத் தாண்டிப் போனவர் நான் சாவியை அமத்தியபடி தேடி வருவதை கவனித்தார். ‘காரை தொலைத்துவிட்டீர்களா?’ என்றார். ‘கார் எங்கேயோ நிற்கிறது. நான்தான் தொலைந்துவிட்டேன்’ என்றேன். பாதி சிரிப்புடன் ‘தேடுங்கள் கிடைக்கும். நீங்கள் நாயை தொலைக்கவில்லை. பூனையை தொலைக்கவில்லை. அவை நகர்ந்து கொண்டேயிருக்கும். தேடிப்பிடிப்பது கஷ்டம். உங்கள் கார் நகராமல் அதே இடத்தில் நிற்கும். கண்டுபிடிப்பீர்கள்’ என்று சொன்னார். பின்னர் அப்படியே நாற்காலியுடன் மறைந்துபோனார். நான் மறுபடியும் தேடுதலை ஆரம்பித்தேன்.

ஒரு மணி நேரம் மேலும் கீழுமாக, எல்லா பிரிவுகளிலும் தேடியும் கார் கிடைக்கவில்லை. அதிசயமாக இருந்தது. ஒரு தூணுக்கு பக்கத்தில் வலப்புறமாக நிறுத்தியது மட்டும் ஞாபகத்தில் இருந்தது. மீண்டும் வலப்புறத்தில் தூண் இருக்கும் தரிப்பு இடங்களை மட்டும் தேடியபடி முன்னேறினேன். சாவியை அமத்தவும் தவறவில்லை. ஒரு முகப்பு வெளிச்சமும் எரியவில்லை; வயிறுதான் எரிந்தது. எல்லா தளங்களும் நீள அகலமாக இருந்ததால் நடந்து நடந்து கால்களும் களைத்துவிட்டன. கார் தரிப்பு நிலைய அதிகாரியிடம் சென்று என் பிரச்சினையை சொன்னேன். அவர் தினம் தினம் நடக்கும் ஒரு சங்கதியை கேட்பதுபோல என்னைப் பார்த்தார். பின்னர் ‘மன்னிக்கவேண்டும். வாடிக்கைக்காரர்களைவிட்டு என்னால் இப்ப வரமுடியாது. இன்னும் ஒரு மணிநேரத்தில் என் கடமை முடிகிறது. அப்பொழுது வந்து நான் உங்களுக்கு உதவி செய்வேன்’ என்றார்.

மறுபடியும் நான் தேடத்தொடங்கினேன். இரண்டு மணிநேரம் ஆகியிருக்கும். வெளியே ஓர் அடி உயரத்துக்கு பனி கொட்டிவிட்டது. அப்போது நான் முன்பு பார்த்த மனிதர் திரும்பவும் வந்தார். இப்போது நாற்காலியும் இல்லை, மனைவியும் இல்லை. என்னைப் பார்த்துச் சிரித்து ‘இன்னமுமா தேடுகிறீர்கள்?’ என்றார். ‘கார் அதுவாக ஓடவில்லை. இங்கேதான் எங்கேயோ நிற்கிறது’ என்றேன். அவர் மனைவியை மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள். அவர் வீட்டுக்குப் போய் சில சாமான்கள் எடுத்து வரவேண்டும். தன் காரை நோக்கி சென்றவர் திரும்பவும் என்னிடம் வந்தார். என்ன கார் என்று கேட்டார். சொன்னேன். என்ன நிறம். சொன்னேன். தகடு இலக்கம். அதையும் சொன்னேன். கார் சாவியை கேட்டார். கொடுத்தேன். ஒவ்வொரு தளமாக அவர் கார் சாவியை அமத்தியபடி வர நான் எதிர் முனையிலிருந்து தேடிக்கொண்டே அவரை நோக்கி நடந்தேன். பத்து நிமிடமாகியிருக்கும். ஒரு தூணுக்கு பக்கத்தில் கார் வெளிச்சம் பத்தி பத்தி நூர்ந்தது. ‘அதுதான் அதுதான்’ என்று அலறினேன். அவர் சாவியை நீட்ட நான் அவருக்கு நன்றி கூறினேன். அவர் பெயரைக் கேட்டேன். ‘என் பெயரை தெரிந்து என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று சொன்னார். ‘உங்களுக்கு நான் ஒன்றும் திருப்பி செய்யவில்லை. உங்கள் பெயரையாவது ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறேன்.’

‘நோம்’ என்றார்.

‘உங்கள் மனைவி சீக்கிரம் குணமடைந்து வீட்டுக்கு வருவார்.’

‘இனிமேல் வரமாட்டார்.’

அவர் முகம் மாறியது. ஏன் சொன்னோம் என்று ஆகிவிட்டது.

எனக்கு பின்பக்கத்தை காட்டியபடி காரை நோக்கி நகர்ந்த அவர் திரும்பாமல் கையை தூக்கி அசைத்து விடைபெற்றார்.

by Swathi   on 29 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்னா செய்தாரை இன்னா செய்தாரை
மாங்காய் மாங்காய் மாங்காய் மாங்காய்
உடல்நிலை உடல்நிலை
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.