LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 362 - துறவறவியல்

Next Kural >

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும், அது வேண்டாமை வேண்ட வரும் - அப் பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம். (அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், பிறவாமையை வேண்டும் என்றும் ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒருபொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், அது வேணடாமை வேண்ட வரும் என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அதுவரும்வழி கூறத்தொடங்குகின்றமையின் 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது.)
மணக்குடவர் உரை:
வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்பெல்லாந்துன்பமாதலை யறிந்தவன் ஒன்றை விரும்பின் பிறவாமையைத் தான் விரும்புவான்; அது வேண்டாமை வேண்ட வரும் - அப்பிறவாமை ஒரு பொருளின் மேலும் ஆசைகொள்ளாமையை விரும்பி மேற்கொள்ளின் அவனுக்குத்தானே வந்து சேரும். தொடக்கமிலியாகப் பிறப்புப் பிணிமூப்புச் சாக்காட்டால் தொடர்ந்து துன்பமுற்று வருகின்றவனுக்கு இயல்பாகவே பிறவி நீக்கத்தின்மேல் ஆசையுண்டாகு மாதலால், பிறவாமை வேண்டும் என்றார். 'வேண்டும்' செய்யும் என்னும் வினைமுற்று. 'வேண்ட' என்றது வேண்டி மேற்கொள்ளுதலை. 'மற்று' வினைமாற்றிடைச் சொல். இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.
கலைஞர் உரை:
விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.
Translation
If desire you feel, freedom from changing birth require! 'I' will come, if you desire to 'scape, set free from all desire.
Explanation
If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.
Transliteration
Ventungaal Ventum Piravaamai Matradhu Ventaamai Venta Varum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >