|
||||||||||||||||||
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார் |
||||||||||||||||||
ஜப்பான் தமிழ்ச் சங்கம்: ஜப்பான் நாட்டில் பணிபுரிந்து வரும் தமிழரான திரு. சதீஸ் குமார் அவர்கள், ஜப்பானில் இருக்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் ‘ஜப்பான் தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்பை நிர்வகித்து வருகிறார். பல முயற்சிகளுக்குப் பிறகு ஜப்பான் தமிழ்ச் சங்கமானது கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி ஜப்பானிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தாய் நாட்டின் பெருமையை உணர வைக்கும் வெளிநாடு: ஊர் தெரியாத, மொழி தெரியாத நாட்டிற்கு வேலை தேடிச் செல்பவர்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற நிலையை உணர்கின்றனர். அங்கே தன் நாட்டு மனிதனை, தன் தாய் மொழி பேசும் மனிதனைக் கண்டால் அவனை அறியாமலே கண்கள் கலங்கி விடுகின்றன. அத்தருணத்தில் ‘அவன் நம் நாட்டுக்காரன்’ என்பதைத் தவிர வேறு எந்த பிரிவினையும் கிடையாது. வேகமாகச் செல்லும் போது தன் தாய் நாட்டின் மொழியை யாரோ ஒருவர் பேசக் கேட்டால் சற்று நின்று சிலிர்த்து விடுகின்றனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ‘தமிழன்’ என்ற ஒரு அடையாளத்தால் மட்டுமே ஒன்றிணைகின்றனர். ஜப்பானில் இன்று உள்ள தமிழர்கள்: 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் தமிழர்கள் அதிகம் கிடையாது. ஆனால் இன்று அங்கே இருக்கும் 40,000 இந்தியர்களில் 6000 பேர் தமிழர்கள் ஆவர். ஒரு தொடர்வண்டி பெட்டியில் ஏறினால் நிச்சயம் இன்னொரு தமிழரைப் பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஜப்பானில் இன்று தமிழர்கள் பெருகியுள்ளனர். தென்னிந்திய உணவகங்களும் ஜப்பானில் இன்று பெருகியுள்ளன. தமிழ் நாட்டு மளிகைப் பொருட்கள் கூட இன்று அதிகம் ஜப்பானில் கிடைக்கின்றன. தமிழ் மக்களின் இட்லி, தோசை போன்ற உணவுகள் ஜப்பானிய மக்களையும் ஈர்க்கும் வண்ணம் காணப்படுகிறது. மன அழுத்தத்தைப் போக்க… உலகின் மற்ற நாடுகளை விட ஜப்பான் நாட்டில் மக்கள் அதிகமான நேரத்தை வேலை செய்வதில் செலவிடுகின்றனர். ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரத்தை வேலை செய்வதற்காகச் செலவிடுகின்றனர். இந்நிலை வேலை தேடி அந்நாட்டிற்குச் செல்லும் மற்ற நாட்டவர்க்கும் பொருந்தும். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு, ஒரு தாய் தன்னுடைய குழந்தையைத் தேற்றுவது போல, ‘ஜப்பான் தமிழ்ச் சங்கம்’ தன் மொழியால் தமிழர்களின் மன அழுத்தத்தைப் போக்க முயற்சி செய்கிறது. செயல்பாடுகள்: ஜப்பான் தமிழ்ச் சங்கம் ஜப்பானில் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. அவ்வகையில் குழந்தைகளுக்குத் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பறையடிக்கும் போட்டி போன்ற பல போட்டிகளை நடத்துகிறது. மேலும் தீபாவளி, பொங்கல், பிறந்த நாள் போன்ற விழாக்கள் தமிழ் மக்களால் ஒன்றிணைந்து கொண்டாடப்படுகின்றன. அங்குள்ள இந்தியப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கொண்டு வந்த முயற்சியிலும் ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் பங்கு அளப்பரியது. ‘தமிழ் குடி’ என்ற அமைப்பை வைத்து அதில் தமிழ்நாட்டின் தலைவர்கள், இசைக்கருவிகள், படங்கள், வீடுகளின் அமைப்பு, சுற்றுலாத் தலங்கள் போன்றவற்றைக் காட்சிப் பொருளாக, தாங்கள் நினைவுகூரும் வகையிலும், ஜப்பானியர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் பெருமையை உணர்த்திய விமானச்சேவை: ஜப்பானிலிருந்து நேரடியாகச் சென்னைக்கு விமானச் சேவை வேண்டும் என்பது ஜப்பானில் வசித்த முன்னாள் தமிழர்களின் பெரும் கனவாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன் வரை ஜப்பானில் வசிக்கும் தமிழர்கள் தமிழகத்திற்கு வர வேண்டும் என்றால் டெல்லி அல்லது இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்று பின் வர வேண்டும். இந்த நிலையை மாற்றத் திரு. சதீஷ் குமார் உள்ளிட்ட பலர் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக உழைத்துள்ளனர். தமிழ்நாட்டின் பெருமையைக் குறிப்பாகச் சென்னையின் பெருமையை எடுத்துக்கூறி அக்கருத்துக்களை ஒப்புக்கொள்ள வைத்து ஜப்பான்--சென்னை என்ற விமானச் சேவையைப் பெற்றனர். சென்னையில் மட்டும் தான் விமானச் சேவையும் உள்ளது, துறைமுக வசதியும் உள்ளது. வான் வழிப் பயணத்திற்கும், கடல் லழி பயணத்திற்கும் வழி வகுக்கும் மாவட்டமாகச் சென்னை திகழ்வதால், சுற்றுலா மற்றும் பல்வேறு வசதிகளுக்குக் காரணமாக அமையும் என்று வலியுறுத்தி விமானச் சேவையைப் பெற்றனர். சென்னையில் வசிக்கும் மக்களுக்குக் கூட சென்னையின் பெருமை சிறிதளவேத் தெரியும். வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் நொடிக்கு நொடி தன் சொந்த ஊரையே நினைத்துக் கொண்டு இருப்பர். வேரை மறவாத வெளிநாடு வாழ் தமிழர்கள்: தமிழ்நாட்டில் ஏற்படும் பேரிடர் காலங்களில் மக்கள் படும் இன்னல்களைத் தீர்க்கும் வகையில் அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக தங்களால் இயன்ற பங்கை ஜப்பானில் வாழும் தமிழர்கள் அளிக்கின்றனர். பெரிய தொகை சேர வேண்டும் என்று காத்திருக்காமல், சிறியத் தொகை கிடைத்தாலே அதை உடனுக்குடன் உதவி செய்யக் கொடுத்து விடுகின்றனர்.
|
||||||||||||||||||
by Lakshmi G on 25 Nov 2020 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|