பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தின் சிறப்பம்சம். மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது. இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. நரசிம்மர் கோயில்களில், நரசிம்மர் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் தரிசனம் தருவார். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் கோயிலில் உள்ள நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது."பாடலம்' என்றால் "சிவப்பு' "அத்ரி' என்றால் "மலை'. நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்தால் "பாடலாத்ரி' என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது. இது பல்லவர் கால குடைவரைக் கோயிலாகும்.தாயார், ஆண்டாள் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், விஷ்வக்ஸேனர், லட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. கருடன், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னதிகளும் உள்ளன கோயில் முகப்பில் பெருமாளின் தசாவதாரக்காட்சிகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. |