பாரதி, விடுதலை அவாவிய நின் சிட்டுக் குருவி எங்கள் வீட்டு முற்றத்திலும் மேய்தல் கண்டேன்.
விடுதலைத் தாகத்தின் துடிப்புன் குரலென்றால் அதன் இதழ்களிலும் 'விடு விடு' என்ற அதே துடிப்புத்தான்.
முற்றத்தில் மேயும் போதும் திண்ணையில் தி¡¢யும் போதும் வீட்டு வளையின் மேலும் விண்ணை அளக்கும் போதும் 'விடு விடு' என்ற ஒரே ஐபம்தான்.
துயிலும் கட்டிலில் தொற்றியும் தூங்கும் குழந்தையின் தொட்டில் கயிற்றினைப் பற்றியும் 'விடு விடு' என்றே அது ஜபிக்கிறது.
தானியம் பொறுக்கும் போதும். கூடுகட்டக் குச்சுப் பொறுக்கும் போதும், 'விடு விடு' என்ற ஐபத்தை அது விடவில்லை. அதன் சிற்றுடலே விடுதலைத்துடிப்புடன் வேக இயக்கமாயிருக்கிறது.
தலையை உருட்டுதலில், சிறகைக் கோதுதலில், காற்று வெளியில் 'ஜிவ்' வென்ற சிறகுதைப்பில் அதே துடிப்பு! சதா துடிப்பு!
நீ நேசித்த தேசத்திலும் அதன் ஒவ்வோர் அங்ககளினதும் - பெண்மையில், ஆண்மையில், பிணைக்கின்ற காதலில் மொழியில், இசையில், கவிதையில், உரைநடையில், அரசியலில், தொழிலில், ஆன்மீகத்தில் -- இதே துடிப்பை நீ உடுக்கொலித்தாய்.
'குடு குடு குடு நல்லகாலம் வருகுது' என்று நாட்டுக்கு நல்ல குறி சொல்ல தூக்கிய நின் உடுக்கின் ஒவ்வொரு முழக்கிலும் விடுதலைக் குருவியின் வீச்சு நிகழ்ந்தது. 'கொட்டு முரசு'வின் அதிர்விலும் அதே விட்டு விடுதலையாகும் வீச்சேதான்.
தூக்கம் எங்கெங்கு கெளவிற்றோ அங்கெல்லாம் துயிலெழுப்ப இந்தத் துடிப்புக் குருவியை நீ தூதுவிட்டாய். உயிர்த்துடிப்பின் உன்னதபடிமம், நின் விடுதலைக்குருவி.
அந்த விடுதலைக்குருவி எங்கள் வீட்டு முற்றத்திலும் மேய்தல் கண்டேன்.
சோம்பித் துயின்ற என்குழந்தைகளை எழுப்பி யுதுரு துருரு வென்ற குருவியைக் காட்டினேன் சோம்பலை உதறிய அவர்களில் தொற்றிய துடிப்பின் உயிரொளி கண்டேன். குருவியின் பின்னால் ஓர் கூட்டமே இயங்கிற்று.
விடுதலைக் குருவியோடு 'சடுகுடு' ஆடும் சிறுவா¢ன் கூத்து. 'விட்டேன் விடுதலை விட்டேன் விடுதலை' என்றந் நாளில் 'சடுகுடு' ஆடிய இளமையின் வேகம் என்னுள் புதுநடை பயிலும்.
விடுதலைக் குருவி! வீடுதேடி வந்தாய் நீ வாழி! நின் அலகிதழ் முனையில் எம் இருள் துயரெல்லாம் கிழிபடுகிறது. மூலை முடக்குகள், நாடி நரம்புகள் தோறும் விடுதலை வீச்சோட்டம் நிகழ்கிறது
சிட்டுக்குருவி! எட்டுத்திக்கும் பறந்தொரு சேதிசொல் விட்டு விடுதலையானோம் நம் கட்டுகள் யாவும் அறுந்தன வாமென்று. குறி சொன்னானே அந்தக் குடுகுடுப்பை காரன்! அவன் காதிலும் மெல்ல இச் சேதியைப் போடு!
|