LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

விவாகரத்து? - என்.செல்வராஜ்

"கோர்ட் நோட்டீஸ் வந்திருக்கு. அப்பா ஊருக்கு வரச்சொல்றாரு " என்றான் நடராஜன். எதுக்கு என்று கேட்டான் குமார். எல்லாம் என் பொண்டாட்டி பண்ற வேலைதான்.அவளுக்கு விவாகரத்து வேணுமாம்" பதில் சொன்ன நடராஜன் வார்த்தையில்  கோபம் கொப்பளித்தது. கேட்டா நீ கொடுக்கணுமா. "அவங்க கேட்கட்டும் நீ முடியாதுன்னு சொல்லிடு" என்றான் குமார். "இல்ல, அப்பா கோர்டில விவாகரத்து கேஸ் ஃபைல் பண்ண வரச்சொல்றாரு" என்றான் நடராஜன்.


    நீ வரமுடியாதுன்னு உங்க அப்பா கிட்ட தெளிவா சொல்லிடு. இப்போதைக்கு ஆறப் போடு. ஆறு மாசம் போனா தானா உன் மனைவி வீட்டுக்கு வருவா. அவங்க பிடிவாதமா விவாகரத்து கேஸை தொடர்ந்தா அப்புறமா என்ன பண்றதுன்னு யோசிக்கலாம் "என்றான் குமார்.


கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகியும் மனைவி சீதா  கரு தரிக்கவில்லையே என்று மனக்கவலையில் இருந்தான் நடராஜன்.இருவரும் ஒரே ஊர்.தெருமட்டும் தான் வேறு வேறு. நடராஜன் வீடு இருந்த தெருவின் ஆரம்பத்திலேயே ஒரு அழகிய பெருமாள் கோயில் இருக்கிறது. மன நிம்மதிக்காக அங்கே போய் அமருவான் நடராஜன். பல நாட்கள் சீதாவை அந்த கோயிலிலே பார்த்திருக்கிறான். சீதா பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறாள். நடராஜன் பட்டப்படிப்பு முடித்துவிட்டான். ஒரே ஊர் என்பதால் அவ்வப்போது இருவரும் பேசிக்கொள்வதுண்டு. வேலை கிடைத்து வெளியூர் கிளம்பியபோது அவளின் கண்களை பார்க்க அவன் சிரமப்பட்டான்.அவன் அவளை மனைவியாக்கிக்கொள்ள விரும்பினான். ஆனால் அதை அவன் அவளிடம் சொன்னதில்லை. வேலையில் சேர்ந்தவுடன் பெற்றோரிடம் சொன்னான்.அவர்களும் அந்த பெண்ணையே பேசி முடித்து அவனின் மனைவியாக்கினர்.


 அவன்  மனைவி மிகவும் நல்லவளாக இருந்தாள். இல்லற வாழ்க்கையும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் குழந்தை இல்லை என்ற குறை மட்டும் மனதில் இருந்துகொண்டே இருந்தது. நகரின் பிரபல மருத்துவமனைக்கு சென்று வந்தான். குறை எதுவும் இல்லை என்று சொன்ன மருத்துவர் சில மாத்திரைகள் எடுத்துக்கொள்ள சொல்லி அறிவுறுத்தினார். அதன்படி மருந்து சாப்பிட்டு வந்த சில மாதங்களில் மனைவி கற்பமானாள்.  கற்பமான மனைவியை சைக்கிளில் வைத்து நண்பணின் வீட்டுக்கு அழைத்து சென்றான்.செல்லும் வழியில் திடீரென ஒரு சைக்கிள் வந்து மோத மனைவியுடன் கீழே விழுந்துவிட்டான். அந்த இடத்தில் சாலை மிகவும் சுத்தமானதாக இருந்ததால் அடி அதிகம் இல்லை. இருந்தாலும் மனைவிக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற பயம் அவ்னுக்கு வந்து விட்டது. உடனே மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் சென்றான். கூட்டம் மிக அதிகமாக இருந்தது.அவனுடைய தவிப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. நெஞ்சில் ஒரு பயம். ஏதேனும் ஆகி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே இருந்தான்.குமார் டாக்டரின் உதவியாளரிடம் சென்று நடந்த விபத்தை சொல்லி உடனே டாக்டரை பார்க்க அனுமதிக்குமாறு கேட்டான் உதவியாளர் உடனே மருத்துவரை பார்க்க அனுமதித்தார். டாக்டரம்மா  நடராஜனின் மனைவியை பரிசோதனை செய்தபிறகு பிரச்னை  எதுவும் இல்லை என்றார்.


 எப்படியாவது உடனே ஒரு ஸ்கூட்டர்  வாங்கவேண்டும் என்று நினைத்தான். அப்போது வெஸ்பா ஸ்கூட்டர் பிரபலமாக இருந்தது.அவனுக்கு பிடித்த நீல நிற ஸ்கூட்டரை  கடன் வாங்கி உடனே வாங்கினான். அதில் மனைவியை உட்காரவைத்து அழகு பார்த்தான்.சீதாவுக்கும் பெருமைதான். கணவன்  ஸ்கூட்டர் வாங்கியதை எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக்கொண்டாள்.


      எதைச்செய்தாலும் அதை சிறப்பாக பலரும் பாராட்டும்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் நடராஜனுக்கு. வீட்டுக்கு வரும் நண்பர்களை நன்றாக உபசரிப்பான். எந்த நேரத்தில் போனாலும் சாப்பிடச்சொல்வான்.குமார் அவன் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் சாப்பிடச் சொல்வான். ஆனால் குமாரின் பழக்கம் வேறு. நண்பர்கள் வீட்டுக்கு முன்பே முடிவுசெய்து அவனுக்காகவும்  சமையல் செய்யப்பட்டால் தான் சாப்பிட ஒத்துக்கொள்வான். இல்லை என்றால் ஏதேனும் காரணம் சொல்லிவிட்டு அவன் வீட்டுக்குப் போய்விடுவான்.எப்போது போனாலும் நடராஜனின் மனைவியும் சாப்பிடச் சொல்வார். அவனது பழக்கத்தை அவன் மாற்றிக்கொள்ளமாட்டான். எனவே நடராஜனும் அவன் மனைவியும் குமார் வந்தால் வீட்டில் இருக்கும் காரவகையில் கொஞ்சம் வைத்து காப்பி அல்லது டீ சாப்பிட சொல்வார்கள். அவனும் அவர்களின் நலம் விசாரித்துவிட்டு கிளம்பி விடுவான்.


    நடராஜனின் சில நண்பர்கள் அவனின் வற்புறுத்தலுக்கு இணங்கி சாப்பிடுவார்கள். அவன் தப்பாக நினைத்து விடக்கூடாதே என்று சாப்பிடுவார்கள். ஆனால் அவன் மனைவிக்கு சாப்பிட மிஞ்சுகிறதா என்பதை அவன் பார்க்காமல் விட்டுவிடுவான். பல நாட்களில் அவன் மனைவி சாப்பாடு இன்றி அசதியில் படுத்து விடுவாள். அவளுக்கு எரிச்சலாக இருக்கும். என்ன மனிதர் இவர். மனைவி சாப்பிட இருக்கிறதா என்றுகூட பார்க்காமல் வரும் நண்பர்களுக்கு உபசரிக்கச் சொல்கிறாரே என்று நினைப்பாள்.இந்த மாதிரியான எரிச்சல்கள் அவள் பார்வையில் கணவன் மீது கோபத்தை வரவழைத்தன. ஐந்து மாதம் நெருங்கி விட்டது.அவளது அண்ணன், அண்ணி இருவரும் ஒரு நாள் வந்தனர். விருந்து தடபுடலாக நடந்தது. மனைவியின் அண்ணனாச்சே. தங்கை குறை வைப்பாளா? அவர்கள் எதற்கு வந்திருப்பார்கள் என்பது நடராஜனுக்கு நன்றாகப் புரிந்தது. நடராஜனுக்கோ அவளது பிரசவத்தை தான் வேலை செய்யும் இடத்திலேயே வைத்துக்கொள்ளலாம் என்று ஆசை.


       மனைவியைப் பிரிந்திருப்பது மிகவும் கஷ்டம் என்று அவனுக்குத் தோன்றியது.மனைவியின் அண்ணன் " நடராஜன் என் தங்கச்சியை ஊருக்கு அழைச்சிகிட்டு போகலாம்னு வந்திருக்கேன். என்னைக்கு அழைச்சுட்டு  போகலாம் ? என்றார். அம்மாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன் என்றான் நடராஜன்.ஊரில் இருக்கும் அப்பா, அம்மாவுடன் தொலைபேசியில் பேசினான். அவன் அம்மா " தலைப்பிரசவம் , அவங்க அம்மா வூட்டில தான் வச்சுக்கணும்.அது தான் முறை. நீ அனுப்பிடு . ஒரே ஊரு தானே. நான் பாத்துக்கிறேன். வந்து நம்ம வூட்டில ஏழாம் மாசம் வரைக்கும் இருக்கட்டும். வளைகாப்பிட்ட பிறகு அவங்க வூட்டுக்கு அனுப்பலாம் என்றார் அம்மா. நடராஜனும் சம்மதித்தான். இன்னும் இரண்டு மாசம் நம்ம வூட்டில தான இருப்பாள். அம்மாவுக்கு தெரிஞ்ச பெரிய டாக்டர் கிட்ட காட்டலாம். அந்த டாக்டர் கிட்டேயே பிரசவத்தையும் வச்சுக்க சொல்லலாம் என நினைத்தான்.


   மறுநாள் மச்சானிடம் பதில் எப்படி சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான். மனைவி சீதாவிடம் கலந்து பேசுவது நல்லது என அவனுக்குத் தோன்றியது. மனைவியிடம் "உங்க அண்ணன் என்ன சொல்றாரு. இப்பவே ஊருக்குப் போகனுமா " எனக் கேட்டான். எனக்கு ஒண்ணும் இல்லீங்க. அம்மா அழைச்சிட்டு வரச் சொன்னதா அண்ணன் சொல்றாரு. நீங்க தான் சொல்லனும். நான் ஊருக்குப் போனா வர எப்படியும் ஒரு வருஷம் ஆயிடும். அதுவரைக்கும் நீங்க தனியா இங்க இருக்கணும்.அதான் ஒங்க கிட்ட கேட்க சொன்னேன்" என்றாள். "சரி அம்மாகிட்ட கேட்டேன். அவங்க உன்னை அனுப்ப சொல்லிட்டாங்க.ஆனா வளைகாப்பு  வரைக்கும் எங்க வீட்டுல தான் இருக்கனும். அப்புறமா உங்க அம்மா வீட்டுல இருக்கலாம். டாக்டர் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்க. அவங்க கிட்ட காட்டிக்கலாம். எல்லா செலவையும் நானே பாத்துக்குறேன். நீ நல்லா இருந்தா எனக்கு போதும் . அப்புறம் உன் இஷ்டம் " என்றான் நடராஜன். ஊருக்குப் போக கணவன் சம்மதம் சொன்னதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள் சீதா. அம்மாவைப் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டன. கர்ப்பமாக இருப்பவள்  மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள். கருவில் இருக்கும் காலத்திலேயே அபிமன்யு சக்கரவியூகததை உடைத்து உள்ளே நுழையும் வித்தையை அறிந்தான் என்கிறது மகாபாரதம். பிரகலாதன் கருவில் இருக்கும்போது நாரதரின் உபதேசத்தால் நாராயணனின் பக்தனானான். எனவே அவளை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்றே நடராஜன் விரும்பினான்,


         மனைவி ஊருக்குப் புறப்பட்டாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. முந்தானையை எடுத்து துடைத்துக்கொண்டாள். நடராஜன் அதை கவனித்துவிட்டு

'சீதா நீ நம்ம வீட்டுக்குத்தானே போற, அதுக்குப்போயி கண் கலங்குறியே " என்றான். "இல்லீங்க உங்களை நெனச்சா கஷ்டமா இருக்கு. நான் இல்லாம எப்படி கஷ்டப்படுவீங்களோன்னு நெனச்சேன். அதான் கண் கலங்கிட்டுது " என்றாள். ஊருக்கு போனதும் அவளும் அண்ணனும் முதலில் அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டுக்கு போனதும் அம்மா " ஏண்டி ஒன் வீட்டுக்கு போகப்போறீயா " என்றாள்." ஆமாம்மா. என் வீட்டுக்காரரு அப்படித்தான் சொல்லி அனுப்புனாரு" "அதெல்லாம் சரி. ஆனா உன்னோட மாமியார் உன்ன விடாம திட்டிகிட்டே இருப்பாங்களே.அத எப்படி சமாளிப்ப"  "எப்படியும் பொறுத்து தான் போகனும் . ரொம்ப முடியாம போச்சுன்னா நா இங்க வந்துடுறன்"  "சரி அவங்க கிட்ட மரியாதை கொடுத்து பேசு . ஏதாவது சொன்னாலும் மரியாதை இல்லாம பேசிடாதே "  "அதெல்லாம் எனக்குத் தெரியும். நான் பாத்துக்கறன்."   அம்மாவிடம்  சொல்லிவிட்டு மாமியார் வீட்டுக்குப் போனாள் சீதா.


            மாமியார் வாசலிலேயே வரவேற்றார்." என்னக்கி வந்தவளுக்கு இன்னக்கி தான் வழி தெரிஞ்சுதா. ஒன்ன சொல்லி குத்தமில்ல. எல்லாம் எம் மவன் கொடுக்கிற தைரியம். ஊருக்கு வந்து ரெண்டு நாள் கழிச்சு வரே. என் மவன் என்னடான்னா பொண்டாட்டி ஊட்டுக்கு வந்துட்டாளா.. வந்துட்டாளான்னு தெனம் போன் போட்டு கேட்டுகிட்டு இருக்கான். நான் என்னத்த சொல்ல ... " என்றவாறே " சரி உள்ளே போ" என்றாள். "என்ன மருமவளே துணி மணியெல்லாம் எங்கே ?சும்மா வந்திருக்க " என்றார் மாமியார். "அத்தே நான் எங்க அம்மா வீட்டிலேயே தங்கிக்கிறனே, தெனம் இங்க வந்துட்டுப் போறேன் " என்றாள் அவள். " மவன் கிட்ட பேசிட்டுதான் சொல்ல முடியும் " என்றார் அவர் மாமியார்.


    அன்னக்கி சாயங்காலம் மகனின் போன் வந்தததாக போஸ்ட் ஆபீசில் இருந்து தகவல் வந்தது. மாமியார் மருமகளையும் அழைத்துக்கொண்டு போஸ்ட் ஆபீஸ் போனார். மகனின் போன் வந்ததும் " தம்பி இன்னிக்குத் தான் மருமவ நம்ம வூட்டுக்கு வந்தா. அவங்க வூட்டிலேயே தங்கிக்கறேன்றா, என்னடா சொல்றே "என்றார் அவனின் அம்மா. மறுமுனை சற்று அமைதியானது." சரி போன என் பொண்டாட்டிகிட்ட கொடும்மா நான் பேசிக்கிறன் "என்றான் நடராஜன்.போனை மருமகளிடம் கொடுத்தார். மறுமுனையில் இருந்த சீதாவின் கணவன் எடுத்த எடுப்பிலேயே திட்ட ஆரம்பித்தான். சீதா பதிலேதும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து "ஏன் எங்க வூட்டில இருக்க மாட்டியா" " இல்லீங்க ஒங்க வீடு நீங்க இல்லாம எனக்கு சரிப்பட்டு வராது. அதான் எங்க வீட்டிலேயே இருக்கலாம்னு நெனைக்கிறன்"  "அதை ஊருக்கு கிளம்பும்போதே சொல்லி இருக்கலாம்ல. ஊருக்கு போயிட்டு இப்படி பண்றியே" "அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க தெனம் நம்ம வூட்டுக்கு வந்துட்டு போறேன். அடுத்த தெரு தானே எங்க வூடு "  " ஏதாவது பண்ணித்தொல . அம்மா வூட்டுக்கு போயிட்டா பொண்ணுகள புடிக்க முடியாது. அங்க ஏதாவது பிரச்னை வந்ததுன்னா நான் உன்னை பார்க்ககூட வரமாட்டேன், அம்மா கிட்ட போன கொடு" போனை மாமியாரிடம் கொடுத்தாள். " அம்மா அவ அவங்க வூட்டுல இருந்துட்டு போகட்டும்.நீ ஒன்னும் கேக்க வேணாம்"  "எக்கேடாவது கெட்டுப்போங்க எனக்கென்ன " என்றபடி போனை வைத்த அம்மா தன் மருமகளிடம் ஏதும் பேசாமல் வீடு திரும்பினாள்.


      தினம் வீட்டுக்கு வருவதாக சொன்ன மருமகள் வாரத்துக்கு ஒரு நாள் கூட வரவில்லை. மகனுடன் பேசும்போது மருமகளைப் பற்றிய வருத்தத்தை அம்மா தெரிவித்தாள். ஊருக்கு வந்ததிலிருந்தே சீதா எதிர் வீட்டில் குடியிருக்கும்  சதீஷுடன் அடிக்கடி பேசப் போய்விடுவதாகவும் வீட்டுக்கு இரவில் கூட நேரமாகித்தான் வருவதாகவும்  செய்திகள் அம்மாவுக்கு வந்துகொண்டே இருந்தன. செய்திகளைக் கொண்டு வந்து தந்தவள் அவள் சிறிய மகள். தினம் அவள் அண்ணியைப் பார்க்கப் போவாள். அப்படியே அங்கு கிடைக்கும் செய்திகளை அம்மாவிடம் வந்து சொல்லிவிடுவாள். அண்ணியைப் பக்கத்து வீடுகளில் இருக்கும் பெண்கள் கேலியாக பேசுவதை அம்மாவிடம் சொல்லிய அவள் மகள் செல்வி " அம்மா அண்ணி இங்க வந்தால் இத கேளும்மா" என்றாள். எப்படி கேட்பது என்று தயங்கியபடி இருந்த அம்மா ஒரு நாள் சம்மந்தி வீட்டுக்கு போனார். அவர் போனபோதும் சீதா எதிர் வீட்டுக்கு போயிருந்தாள். சம்மந்தியம்மாவிடம் மருமகள் எப்படி இருக்கிறாள் என்று கேட்ட அம்மா எங்கே என் மருமவ எனக்கேட்டாள். சீதா எதிர்வீட்டுக்கு போயிருப்பதாக சொன்னால் பிரச்னை  வரும் என்று நினைத்த அவள் அம்மா " அண்ணன் வீட்டுக்கு போனாள்.எப்ப வருவாளோ தெரியாது " என்றாள். அம்மாவின் கண் எதிர்வீட்டிலேயே இருந்தது. தன் மகள் சொல்வது உண்மையா என பார்க்கவே அவள் அன்று அங்கே வந்தார். இரவு எட்டுமணிக்கு மேல் சீதா எதிர் வீட்டிலிருந்து வெளியே வந்தாள். அவள் பின்னாலேயே சதீசும் வீட்டைவிட்டு வெளியே வருவது தெரிந்தது. அதைப் பற்றி எதுவும் கேட்காத சீதாவின் மாமியார் சம்மந்தி அம்மாவிடம் விடைபெற்று கிளம்பினாள்.


எதுவும் கேட்காமல் வீடு திரும்பிய நடராஜனின் அம்மா தன் கணவரிடம் " சீதா பண்றது ஒண்ணும் சரியில்லீங்க. எப்ப பாத்தாலும் எதிர் வீட்டுல போய் உக்காந்துகிட்டு சதீசுடன் பேசிக்கொண்டே இருக்கிறாள். நாளக்கி பையன் பேசுனான்னா அவன்கிட்ட சொல்லிடுறன். அவனே அவ கிட்ட கேட்கட்டும். நாம பேசுனா நாம அவ மேல தப்பா சொல்றோம்னு சொல்லிடுவாங்க.வயித்தில புள்ளய சுமந்துகிட்டு இருக்கிறவள நாமளும் ஒன்னும் கேட்க முடியாது " என்றார். அவரும் சரி என்றார். மறுநாள் நடராஜனின் அழைப்பு வந்தது. அம்மா மட்டும் போன் பேசப் போனார். " எப்படிம்மா இருக்கே? அப்பா நல்லா இருக்காரா. என் சீதா எப்படி இருக்கா " என்று கேட்ட நடராஜனிடம் " எல்லாரும் நல்லாதான் இருக்காங்க. ஆனா உன் பொண்டாட்டி பண்றது தான் இப்போ ஊரே பேச்சா கிடக்கு.எப்ப பாத்தாலும் எதிர் வீட்டு சதீசு வீட்டிலேயே கிடக்கிறாள். அவளை கண்டிச்சி வை. இல்லேன்னா அவ கத இங்க நாறிப்போயிடும். நா அம்புட்டுதான் சொல்லமுடியும்" என்றார் அம்மா.


நடராஜனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. சீதா பேசும்போது கேட்டுவிடத் துடித்தான். இருந்தாலும் எந்த வித ஆதாரமும் இல்லாமல் அவள் மீது குற்றம் சுமத்த முடியாமல் தவித்தான்.அவன் அம்மா சொல்வதை நம்புவான் என்றாலும் சீதாவின் விஷயத்தில் நம்பமுடியவில்லை.அம்மா அவ இப்ப எங்க? என்ற மகனிடம் அவள் வரவில்லை என்று பதில் சொன்னார் அம்மா. சீதாவிடம் பேசவேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு போய்விட்டது.வெறுத்துப்போய் போனை வைத்துவிட்டான்.சில நாட்கள் மனைவி அழைத்துப் பேசுவாள் என்று பொறுத்துப் பார்த்தான் நடராஜன். ஆனால் அவள் பேசவில்லை. அவள் மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. கடைசியில் அவளிடம்  பேசிவிட முடிவு செய்து அவன் ஊர் போஸ்ட் ஆபிஸை அழைத்தான்.போஸ்ட் மாஸ்டரிடம் சீதாவை வரச்சொல்லுங்கள் என்றான். அவரும் சீதாவை அழைத்துவர ஆள் அனுப்பிவிட்டு சற்று நேரம் கழித்து மீண்டும் கூப்பிடச்சொன்னார். கொஞ்ச நேரம் கழித்து நடராஜன் போஸ்ட் ஆபீஸ் எண்ணுக்கு அழைத்தான். போஸ்ட் மாஸ்டர் சீதாவிடம் போனைக்கொடுத்தார்.யாரு சீதாவா? என்ற நடராஜனுக்கு பதிலாக ஆமாங்க, எப்படி இருக்கீங்க ? என்றாள் சீதா.


      " ஏண்டி எத்தனை நாளாவுது. என்னைக் கூப்பிட்டு பேசனும்னு உனக்கு தெரியாதா?"  நீங்க கூப்பிடுவிங்கன்னு இருந்தேன்.இன்னிக்கு தான் பேசத்தோணுச்சா உங்களுக்கு " உன்னை என் ஊட்டுக்குத்தானே போவச்சொன்னேன். ஒங்கம்மா ஊட்டுக்கு போய் தங்கிகிட்டு எதிர்வீட்டுக்காரனோட கூத்தடிக்கிறியா? "  எப்பவும் பேசற அவன் கிட்ட பேசறத எப்படி தப்பா பேசுறீங்க? " நீ அவங்கிட்ட பேசக்கூடாது. ஒடனே எங்க வூட்டுக்கு போய் தங்கிக்க. ஒங்க அம்மா வூட்டுக்கு நான் வர்ரப்ப போய்க்கலாம் " யாரோ சொல்றதுக்கெல்லாம் என் பேர்ல தப்பு சொல்றீங்க. நான் ஒரு தப்பும் பண்ணல. நான் ஒங்க வூட்டுக்கு போவ முடியாது. நீங்க வரப்ப  நான் ஒங்க வூட்டுக்கு வரேன் " ஒங்க அம்மா இருக்கிறவரைக்கும் நீ உருப்படமாட்டே, சொன்னா கேளு,. எங்க ஊட்டுக்கு போ. நான் ஒரு மாசத்துல வரேன்.அப்ப எல்லாத்தையும் பேசிக்கலாம்." ஏன் ஒங்கம்மா யோக்யமா ? அவங்களால தான் பிரச்னையே. எங்க ஊட்டுக்கு ஆள் அனுப்பி வேவு பாக்குறாங்க" ஏண்டி நீ எதுத்த வூட்டுல இருக்கும்போது ஒங்கம்மா நீ உன் அண்ணன் வூட்டுக்கு போயிருக்கிறதா எங்கம்மாகிட்ட பொய் சொன்னாங்க? "ஓ அதான் பிரச்னையா. நான் அங்கே போனதுல என்ன தப்பை கண்டுபிடிச்சுட்டீங்க? " ஊர்ல ஒன்னபத்தி யாரும் தப்பா பேசிட்டா என்ன செய்றது " யார் பேசுறா ? ஒங்கம்மாதான் வூடு வூடா போய் என்னப்பத்தி பேசிட்டு இருக்காங்க. நான் உத்தமி இல்லேங்குறாங்க.அப்புறம் அங்க நான் எப்படி போகமுடியும். என்னால முடியாது.நீங்களாச்சு ஒங்கம்மாவாச்சு, எப்படியாவது போங்க. நான் பத்தினி இல்லேனே வச்சுக்கிங்க. கெட்டபேரு வாங்கிகிட்டு ஒங்க வூட்டுல என்னால இருக்கமுடியாது. இதுக்கு மேல நான் என்ன சொல்ல. போன வச்சுடுங்க" அவள் பேச்சை முடித்துக்கொண்டாள். அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை.


       சீதாவுக்கு ஆண்  குழந்தை பிறந்துவிட்ட செய்தியை நடராஜனின் அம்மா தெரிவித்த போது அவன் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். அம்மாவிடம் எங்கிட்ட பேசாத அவள் பெத்த என் புள்ளய எப்படிம்மா நான் பாக்குறது? என்றான். அம்மாவின் குரலில் கோபம் எதுவும் இல்லை. ஆசுபத்திரியில தான் இப்ப இருக்கா. அங்க போய் பாத்துட்டு வா. பாவம் உனக்காக காத்துட்டு இருப்பா. உடனே வா" என்றார் தாய். மறுநாள் ஊருக்கு வந்த நடராஜன் தன் மனைவியையும், குழந்தையையும் மருத்துவமனையில் சென்றுபார்த்தான். அம்மாவும் கூடவே வந்தார்கள். அங்கேயும் சீதாவின் அம்மா தன் மருமகனிடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்." ஒங்கம்மா எப்படி என் பொண்ண தப்பானவள்னு சொன்னாங்க.அதுக்கு ஒரு பதில் தெரியற வரைக்கும் என் பொண்ணு ஒன் வூட்டுக்கு  வரமாட்டா" என்றார். இங்க பாருங்க, என் பொண்டாட்டிய என்னெக்கு என் வூட்டுக்கு அனுப்ப தோணுதோ அப்ப சொல்லுங்க. அதுவரைக்கும் வாய மூடிக்கிட்டு இருங்க .வீணா பிரச்னையை வளக்காதீங்க" என்றவன்  அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டு  சென்றான். ஊருக்கு போனவனுக்கு சில நாட்கள் கழித்து வக்கீல் நோட்டீஸ் தான் வந்தது.இவ்வளவும் அவனது மனத்திரையில் ஓடியது. இனி வாழ்வு வேதனையானது தான்  என்று அவன் நினைத்தபோது தான் அவன் நண்பனின் வார்த்தைகள் சரி எனப்பட்டன.ஆனாலும் சமாதானம் செய்வது யார் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. ஒரு நாள் முழுவதும் அவன் மனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. குமார் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று மனம் முடிவு செய்ய, அவன் தந்தைக்கு போன் செய்து தன் தந்தையிடம்  விவாகரத்தில் தனக்கு விருப்பமில்லை என்று பதில் சொல்லி போனை வைத்துவிட்டான்..


Email:- enselvaraju@gmail.com

Vivakaraththu?
by Enselvaraj   on 24 Oct 2017  8 Comments
 தொடர்புடையவை-Related Articles
உணர்ந்த போது உணர்ந்த போது
புளிய மரம் புளிய மரம்
விஞ்ஞானியின் காதல் விஞ்ஞானியின் காதல்
“பீனிக்ஸ்” பறவை “பீனிக்ஸ்” பறவை
புதிதாய் பிறப்போம் புதிதாய் பிறப்போம்
கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள் கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள்
சண்டை சண்டை
திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி
கருத்துகள்
06-Jun-2019 04:50:03 Charu V Raman said : Report Abuse
தம்பதி நடுவில யாரும் வர கூடாது அவங்க அம்மா அப்பா இவங்க அம்மா அப்பா பக்கத்து வீடு யார் ஆனாலும் இது தான் விளைவு
 
18-Apr-2019 18:28:09 bharathi said : Report Abuse
divorce is not a solution for all the problems - this is what author trying to tell
 
18-Apr-2019 18:27:51 bharathi said : Report Abuse
divorce is not a solution for all the problems - this is what author trying to tell
 
21-Jan-2019 09:29:52 Mohan raj said : Report Abuse
kadhai mudivu therila
 
20-Nov-2017 13:52:31 Pandiyarajan said : Report Abuse
கதை இன்னும் முற்று பெற வில்லை
 
20-Nov-2017 13:52:10 Pandiyarajan said : Report Abuse
கதை இன்னும் முற்று பெற வில்லை
 
20-Nov-2017 13:51:52 Pandiyarajan said : Report Abuse
கதை இன்னும் முற்று பெற வில்லை
 
20-Nov-2017 13:51:31 Pandiyarajan said : Report Abuse
கதை இன்னும் முற்று பெற வில்லை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.