LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

அன்னா ஹசாரேவை அரசியலுக்கு வரவேற்போம்

அன்னா ஹசாரேவின் சமீபத்திய அரசியல் அறிவிப்பு பலராலும் பல கோணங்களில் அலசப்படுகிறது.  இதில் பல முன்னணி பத்திரிகைகளின் தலையங்கங்கள் சில விஷயங்களை மிக நுணுக்கமாக ஆராய்ந்து எழுதிள்ளனர்.   ஆனால் பல கோணங்கள் அதில் விடுபட்டுள்ளது. மேலும் அன்னா ஹசாரே போன்றவர்கள் அரசியலுக்கு வரமால் இந்த அறிய வாய்ப்பை நாம் தவற விட்டால் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முழுமையாக ஆராய்வதே இந்த வார நம் வலைத்தமிழ் தலையங்கத்தின் நோக்கம்.

 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கூடிக் கலைந்த அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான மாபெரும் போராட்டத்தைப்போல, இப்போது நடந்து முடிந்திருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் மிகப்பெரிய ஆதரவைப் பெறவில்லை என்பதாலேயே, மக்கள் மனதில் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எதிரான மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்றோ, லோக்பால் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவிழந்துவிட்டது என்றோ நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது.

 

ஊழலை ஒழிக்க வேண்டும் என்கின்ற ஆத்திரம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களின் வெளிப்படுத்த முடியாத சமூகக் கோபத்தைக் கொட்டித்தீர்க்க ஒரு மேடை அமைத்துக்கொடுத்தார் அண்ணா ஹசாரே. அதனால்தான் அண்ணா ஹசாரேயின் போராட்டத்துக்கு நாடு தழுவிய வரவேற்புக் கிடைத்தது.

 

அதுநாள் வரை, லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றம் மட்டும்தான் கொண்டுவர முடியும், தெருவில் போகிறவர் வருகிறவர் எல்லாம் கொண்டுவர முடியாது என்று ஏளனமாகப் பேசியவர்கள், லோக்பால் அமைக்கக் குழுவை அமைத்தார்கள். நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மட்டுமன்றி, அண்ணா ஹசாரே குறிப்பிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகளையும் சேர்த்துக்கொண்டார்கள். மக்கள் மனவெழுச்சி சற்றே மட்டுப்பட்டது.

இந்த இடத்தில்தான் காந்தியின் போராட்டத்துக்கும் அண்ணா ஹசாரேயின் போராட்டத்துக்கும் வேறுபாடு உண்டானது. காந்தி தனது போராட்டத்தை எந்த வகையிலும் ஒடுக்கிவிட முயன்ற பிரிட்டிஷ் அதிகாரிகளைக் குறைவாகப் பேசியதில்லை. அவர்கள் போராட்டத்தை அடக்க எந்த அளவுக்கு அத்துமீறல் செய்கிறார்களோ அந்த அளவுக்கு தானும் தன் அகிம்சையை உறுதிப்படுத்துவதுதான் அவரது இயல்பு. ஆனால், அண்ணா ஹசாரேவுடன் இருந்தவர்களும், சில நேரங்களில் அண்ணா ஹசாரேவும்கூட, அரசியல்வாதிகளைச் சாடத் தொடங்கினார்கள்.

 

இத்தகைய போராட்டத்துக்குத் திரண்ட மக்கள் அனைவரும் கட்சி சாராதவர்கள் என்கின்ற அடிப்படை உண்மை புரியாமல், வட மாநிலங்களில் நடந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே குழுவினர் அறிவுரை வழங்கத் தொடங்கியபோது, இயக்கம் பலவீனப்படத் தொடங்கியது.

 

கடந்த ஆண்டு நடந்த அண்ணா ஹசாரேயின் போராட்டத்துக்கும் இப்போது நடந்து முடிந்த போராட்டத்துக்கும் வேறுபாடு உண்டு. அப்போது முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் முழு ஆதரவும் அவருக்கு இருந்தது. இப்போது பாஜக ஆதரவு இல்லாத நிலையிலும் அவருக்கு என்று ஆதரவு தொடர்கிறதே தவிர, ஹசாரே இயக்கம் முழுமையாக மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாகச் சொல்லிவிட முடியாது. ஆதரவு குறைந்ததுபோலத் தோற்றமளிப்பதன் காரணம், அவருக்கு ஆதரவு அளித்த அரசியல் சக்திகள் இப்போது சற்றே ஒதுங்கி வேடிக்கை பார்ப்பதால்கூட இருக்கக்கூடும். அரசுக்கும் மக்களுக்குமான போராட்டமாக இல்லாமல், ஒரு கட்சிக்கும் ஒரு அமைப்புக்கும் இடையிலான போராட்டமாகச் சுருங்கியதுதான் இதற்குக் காரணம்.

இப்போதும் இந்த உண்ணாவிரதத்தைக் கைவிட்ட பிறகு அண்ணா ஹசாரே கூறியிருப்பது, "2014 தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. ஏன் காலத்தை வீணாக்க வேண்டும்? மக்களிடம் சென்று பேசுவோம்' என்பதுதான்.  

 

ஹரியாணா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக அண்ணா ஹசாரே குழுவினர் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியதுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. கடுமையான லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படாததற்குக் காங்கிரஸ் மட்டுமே காரணம் அல்ல. எல்லா அரசியல் கட்சிகளும் அதிகார வர்க்கமும்கூடக் காரணம். எந்தவொரு கட்சியை முன்னிலைப்படுத்தி இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றாலும் அதற்கு ஆதரவு இருக்காது.

 

2014-ல் காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டும் லோக்பால் வந்துவிடும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அவர்களும் கூட்டணிக் கட்சிகளுக்காக இந்தச் சட்டத்தை இழுத்தடிக்கவே செய்வார்கள். லோக்பால் சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர, எந்தக் கட்சி கொண்டுவருகிறது என்பதல்ல முக்கியம்.

 

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிராக நடத்தப்படும் இயக்கம் ஓர் அரசியல் கட்சியாக மாறுவதைத்தான் விரும்பும். அப்படி அந்த இயக்கம் மாறும்போது, எதிர்க்கட்சி வாக்குகள் சிதறித் தனக்குச் சாதகமான தேர்தல் முடிவுகள் ஏற்படாதா என்று காங்கிரஸ் சிந்தித்தால் ஆச்சரியப்பட வேண்டாம். காங்கிரúஸா, பாஜகவோ, மாநிலக் கட்சிகளின் கூட்டணியோ, எதுவுமே அடுத்தாற்போல ஆட்சி அமைத்தாலும் கடுமையான லோக்பால் சட்டம் கொண்டு வராது என்பது நிச்சயம்.

 

இந்த நிலையில், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும், பலவீனமான மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பதவியில் இருக்கும்போதே, திருத்தப்பட்ட லோக்பால் சட்டம் கொண்டுவர முயற்சிப்பதுதான் புத்திசாலித்தனம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், லோக்பாலுக்கான கோரிக்கை அடுத்த சில ஆண்டுகளுக்கு வலுவிழந்துவிடும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

 

மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அவர்களை ஒருங்கிணைக்க அண்ணா ஹசாரே குழுவினர் எத்தகைய யுக்தியை கையாளவேண்டும் அல்லது எதை அறிந்து செயல்பட வேண்டும் என்பதை பார்ப்போம்.

 

  • காங்கிரஸ் அரசை,சோனியா, மன்மோகனை எதிர்க்கிறேன் என்ற நிலையை அன்னா  எடுத்தால் பிஜேபி சந்தோஷமடையும்.  அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் ஒழிந்துவிடுமா? அவர்கள் இந்தியாவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வ நிவாரணியாக இருப்பார்களா?  அவர்கள் ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதை ஆராயவேண்டும்.  அன்னா ஹசாரேயின் அரசியல் சிந்தனை தற்போதுள்ள அனைத்து கட்சிகளையும் தவிர்த்த ஒரு வலிமையான மாற்று அரசியலை நோக்கியதாக, இளைய தலைமுறையை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
  • லோக்பால் என்பது ஊழலை ஒழிப்பதில் ஒரு ஆரம்பம்தான்.  நம் நாட்டின் எதார்த்தம் என்பது, சட்டங்கள் இல்லை என்பதோ, சட்டங்களில் ஓட்டைகள் உள்ளது என்பதோ இல்லை. எதோ லோக்பால் சட்டம் வந்தவுடன் அனைத்து உழலும் உடனே சரியாகிவிடும் என்று கருதுவது முட்டாள்தனம்.லோக்பால்  இல்லாமல் கூட 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில்,  இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி பலரை கைது செய்ய முடிகிறது. எனவே, லோக்பால் வந்தவுடன் அதை வைத்து ஊழல் அரசியல்வாதிகள் அவர்களாகவே தண்டனைக்கு உட்படுவார்கள் என்பது பகல் கனவு. அன்னாவின் அரசியல் பிரவேசம் லோக்பால் எல்லையைத்தாண்டி அதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிரமங்களை, அந்த ஓட்டைகளை அடைக்கும் நிலையில் இருக்கவேண்டும்.
  • கடந்த சில நாட்களாக முன்னனி இந்திய பத்திரிகைகளின் தலையங்கங்கள் அன்னா அரசியலுக்கு வருவதைவிட ஒரு ஊழல் எதிப்பு இயக்கமாகவே இருந்து போராட்டம் நடத்தட்டும் என்ற விதத்தில் எழுதுகின்றன. இவர்களுக்கு நாம் கேட்கும் ஒரே கேள்வி: காந்திக்கு அடுத்து இந்திய அளவில் மக்கள் மத்தியில் கோபம் அன்னா தலைமையில் உருவாகியுள்ளது. இதை வைத்து நாம் லோக்பால் பில் என்ற இன்னொரு சட்டத்தை உருவாக்க நாட்டு நலனில் அக்கறை கொண்ட நல்லவர்களின் சொச்ச வாழ்க்கையை உண்ணாவிரதத்தில் கரைத்து, அதன் மூலம் ஒரு சட்டத்தை உருவாக்கி, அதை மீன்டும் அதே ஊழல் பெருசாளிகளின் கைகளில் நடைமுறைப் படுத்துங்கள் என்பதா?  அல்லது இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உழலை அடியோடு அழிக்கும் சிந்தனை உள்ள நல்லோர்களை அடையாளம் கண்டு அரசியலை மாற்றி ஒரு நிரந்தர தீர்வை காண்பதா? 
  • அன்னா போராட்டத்தை இதோடு முடித்துக் கொண்டால், இன்னொரு மனிதரை நாம் எங்கே போய் தேடப்போகிறோம்?  அப்படிப்பட்ட நிகழ்வுகள் அத்திப் பூத்தாற்போல் அரிதாக நடக்கும் நிகழ்வல்லவா? அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுக்கிவிட்டு, அதன் கரையில் நின்று ஒரு உயந்த கருத்தை உருவாக்கி, அதே மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் சாக்கடையில் நீந்தும் அரசியலில் சக்திகளிடம் அல்லவா அங்கீகாரம் பெற வாழ்நாள் முழுதும் போராடவேண்டும்?  இதில் எத்தனை நல்லவர்களின் ஆவிகள் விரயமாகும்?
  • இந்தியா போன்ற நாடுகளில் எதை சாதிக்கவேண்டும் என்றாலும், நாம் ஜனநாயக முறையில் தேர்தலில் போட்டியிடாமல், மக்களின் அங்கீகாரத்தை பெறாமல் வெளியில் நின்று நாடளுமன்றத்திக்கு சவால் விடுவது ஒரு ப்லாக்- மெயில் அணுகுமுறையாக அல்லவா பார்க்கப்படும்.
  • ஒருவேளை அன்னாவின் அரசியல் முயற்சி தொல்வியுற்றால் அது மக்களின் தோல்விதானே தவிர அந்த அன்னா என்ற தனிமனிதனின் தோல்வியோ, அவரின் கொள்கையின் தோல்வியோ அல்ல.
  • டாக்டர் உதயமூர்த்தி அரசியலில் இறங்க வந்தபோது, அவரின் கொள்கை நல்லவர்களுக்கு வாக்களியுங்கள், உதயமூர்த்திகளுக்காக வாக்களியுங்கள் என்பதாகவே இருந்தது.அவரிடம் தோல்வி குறித்து நிருபர்கள் கேட்டபோது “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்று சொல்லிவிட்டு அடுத்த நூலை எழுதச் சென்றுவிட்டார்.  இந்த சமுகம் தொடர்ந்து நல்லவர்களை அடையாளம் காணாமல், அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவதும், அதன் விளைவுகளை சந்திப்பது ஒன்றும் புதிது அல்ல. அன்னா அரசியலுக்கு வந்து அந்த முயற்சி தோற்றால் அது ஒரு வரலாற்றுப் பிழையாகப் பதிவாகிவிட்டுப் போகட்டுமே.. அவரை தவிர்த்து இன்றைய அனைத்து பிரச்சினைக்கும் ஊற்றுக்கன்னான ஊழலை ஒழிக்க அவரும் உண்ணாவிரதம் இருந்து சென்றுவிட்டால் அனைத்தும் சரியாகிவிடுமா?
  • அரசியல் என்பது அவ்வளவு எளிதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.  அது ஒரு மாயை. யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்பது ஒரு சூதாட்டம் போன்றது. ஒவ்வொரு இந்தியனும் என்ன நினைக்கிறான் என்பதைப் பொறுத்தது. நடிப்பில் சாதித்த நடிகர் திலகம் அடைந்த அரசியல் அனுபவம் பல பகல்கனவு அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது.
  • அன்னா ஒரு நல்லவராக மட்டும் இருந்து, ஒரு அரசியல் பண்ண முடியாது. அவரின் அருகில் இருப்போர், அவரின் ஆதரவாளராக இருப்போர், அவரின் ஆதரவாளராக போர்வை போர்த்தியுள்ள கட்சிகளின் ஆதரவாளர்கள், அவரின் பெயரை கெடுத்து அவரை அப்புறப்படுத்த வியூகம் வகுப்பார்கள்.  அதை சமாளிக்கும் வியூகம் அன்னா குழுவினரிடம் இருக்கிறதா என்பதை சுயசோதனை செய்து பார்க்கவேண்டும்.  அரசியல் என்பது சூப்பர் மேன் வேலை இல்லை, அது ஒரு தில்லாலங்கடி வித்தை என்பதை அவர்கள் உணரவேண்டும்.
  • இன்றுவரை ரஜினி போன்றோர் புகழுடன் இருப்பதற்கு அவரின் ஆதரவாளர்கள் குரலுக்கு செவிசாய்க்காமல், அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதால்தான். காரணம், ஒரே நாளில் அவர் ஒரு கன்னடர், மராட்டியர் என்று முத்திரை குத்தி எம் ஜி ஆர் –யை கூறியதுபோல் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடிவிடுவார்கள். இதையும் தாண்டி அதை முறியடித்து நிற்கும் திறம் எம் ஜி ஆரிடம் இருந்தது. ரஜினி அப்படி போராடி ஒன்றும் ஆவதற்க்கில்லை என்ற விஷயத்தை அவரின் ஆன்மிகம் சொல்லிகொடுத்திருக்கும் அல்லது இன்று களத்தில் உள்ள அரசியல் வா(வி)யாதிகளின் வித்தைகளை அவர் அறிந்திருப்பார் என்றே கருதத்தோன்றுகிறது.
  • இறுதியாக அன்னா அரசியலுக்கு நேரடியாகவோ, அல்லது ஒரு கட்சியை உருவாக்கி அதை வெளியில் இருந்து வழிநடத்துபவராகவோ இருப்பதைத் தவிர புத்திசாலித் தனமான முடிவு ஒன்று இருப்பாதாக தெரியவில்லை. அதைப் பயன்படுத்தி அவரின் கரத்தை வலுப்படுத்தி, ஊழலுக்கு எதிராக மக்கள் அணிதிரல்வதைத் தவிர ஒரு சிறந்தவழி இருபாதாகத் தெரியவில்லை. காரணம் இன்று ஊழலினால் ஒன்று இரண்டு பிரச்சினை இல்லை, இந்தியாவின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் ஒரே நிவாரணி உழலை ஒழிப்பதும், சுயநல, வாரிசு, ராஜபரம்பரை அரசியலை அப்புறப்படுத்துவதும், உண்மையான ஜனநாயகத்தை தக்கவைப்பதும்தான். 
  • அன்னாவின் அரசியல் புதிதாக பூஜியத்தில் இருந்து தொடங்கவேண்டுமென்பது இல்லை. தற்போது களத்தில் உள்ள நல்ல அரசியல் அமைப்புகளை, தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து அல்லது உள்ளடக்கி ஒரு மாற்று அரசியலை முயற்சிக்கலாம். உதாரணத்திற்கு டாக்டர் ஜெயப்ரகாஷ் நாராயணன் போன்ற களத்தில் உள்ளோர்களை ஒருங்கிணைத்து அவர்களின் கள அனுபவங்களை, படிப்பினைகளைக் கொண்டு மக்களை அடையும் இலக்கை இன்னும் துரிதமாக்கlலாம். 
by Swathi   on 05 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.