|
||||||||
1974 -ல் கச்சத்தீவுக்காக நடந்த தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது? |
||||||||
தமிழ்நாடு சட்டப் பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்றைய (ஏப்ரல் 2) விவாதத்தின் இடையே தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். கடும் விவாதத்துக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த விவாதத்தின்போது, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதி காத்ததாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டினார்கள்.
1974-ம் ஆண்டு கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு வழங்கியபோது தமிழகத்தில் என்ன நடந்தது?
அந்தக் காலக்கட்டத்தில் தினத்தந்தி இதழில் வெளிவந்த செய்திகளை அறியத் தருகிறோம்.
தேதி: 28.06.1974
சென்னை, தமிழ்நாட்டுக் கடற்கரையிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை, இலங்கைக்குக் கொடுக்க டெல்லி சர்க்கார் முடிவு செய்துள்ளது. இந்தத் தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்றும், இலங்கைக்குக் கொடுக்கக்கூடாது தமிழக அரசு வற்புறுத்தி வந்தது. அதற்குமாறாக, இலங்கைக்குக் கச்சத்தீவை டெல்லி கொடுக்கிறது.
இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் கடந்த ஜனவரி மாதம் டெல்லி வந்திருந்தபோது பிரதமர் இந்திரா காந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார்.கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று, அப்போது தீர்மானிக்கப்பட்டது.
"கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்குத் தரக்கூடாது" என்று, தமிழக அரசு வற்புறுத்தி வந்தது.முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தபோது, இதை வலியுறுத்தினார். முதல்-அமைச்சர் கருணாநிதியை நிருபர்கள் நேற்று மாலை பேட்டி கண்டு, "கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதற்கு முன்னால், மாநில அரசின் கருத்து கேட்கப்பட்டதா?" என்று கேட்டனர்.
அதற்குப் பதில் அளித்து அவர் கூறியதாவது:-"இரண்டு வாரங்களுக்கு முன்னால், வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல் சிங் இங்கு வந்தபோது, என்னிடம் அதுபற்றி சில விவரங்களை விவாதித்தார். கச்சத்தீவு விஷயத்தில் தமிழ் மக்களுடைய உணர்ச்சியை நான் அவரிடத்தில் விளக்கி இருக்கிறேன்."இவ்வாறு கருணாநிதி கூறினார்.
தேதி 29-06-1974
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி நேற்று பிற்பகல் கையெழுத்திட்டார்.அதே நேரத்தில், இலங்கையிலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது. ஒப்பந்தத்தில் இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் கையெழுத்திட்டார்.
கச்சத்தீவு பற்றிய ஒப்பந்தத்தை இலங்கையிலிருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி ஜெய சிங்கே டெல்லிக்கு நேற்று விமானத்தில் கொண்டு வந்தார். அதில் இந்திரா கையெழுத்திட்டார்.அதே போல, டெல்லியிலிருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி கேவல் சிங், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கைக்குக் கொண்டு போனார். அதில், இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் கையெழுத்திட்டார். இரண்டு பிரதமர்களும் ஒரே நேரத்தில் கையெழுத்து போடுவதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
தேதி: 30.06.1974
கச்சத் தீவை இலங்கைக்கு டெல்லி சர்க்கார் தானம் செய்தது பற்றி, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார். "கச்சத்தீவை இலங்கைக்குத் தரக்கூடாது. இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும்" என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு வந்திருந்த அ. தி. மு. க. பிரதிநிதி, தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் வெளிநடப்பு செய்தார்.தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள கச்சத்தீவை,இலங்கைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டது தெரிந்ததே.இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்காக, சட்டசபை, மேல்சபை ஆகியவற்றில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டினார்.
இந்தக் கூட்டம், சென்னை கோட்டையில் நேற்று காலை நடந்தது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார்.கூட்டத்தில், அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வருமாறு:-
1. பொன்னப்ப நாடார் (ப. காங்கிரஸ்)
2. ஏ. ஆர். மாரிமுத்து (இ. காங்கிரஸ்)
3. திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்)
4. அரங்க நாயகம் (அ. தி. மு. க.)
5. வெங்கடசாமி (சுதந்திரா)
6. ஈ. எஸ். தியாகராசன் (தமிழரசு கழகம்)
7. ஏ. ஆர். பெருமாள் (பார்வர்டு பிளாக்)
8. மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்யூனிஸ்ட்)
மேல் சபை
9. ம. பொ. சிவஞானம் (தமிழரசு)
10. ஜி. சாமிநாதன் (சுதந்திரா)
11. அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்)
12. ஆறுமுகசாமி (இ. காங்.)
13. சக்தி மோகன் (பா. பிளாக்)
14. ஏ. ஆர். தாமோதரன் (ஐக்கியக் கட்சி)
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது: "இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்து, தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது." மேற்கண்டவாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன், அ. தி. மு. க. பிரதிநிதி வெளிநடப்பு செய்தார். இந்தக் கூட்டத்தில் வலது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த யாரும் கலந்துகொள்ளவில்லை. தலைவர்களோ, அல்லது அவர்களது பிரதிநிதிகளோ கலந்து கொள்ளலாம் என்று அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.எஸ். எஸ். ராமசாமி படையாச்சி (உழைப்பாளர் கட்சி) வாகனம் வழியில் "ரிப்பேர்" ஆகிவிட்டதால், வரமுடியவில்லை.
ஆயினும், கூட்டத்தின் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்து இருந்தார்.ராஜாராம் நாயுடுவுக்கு வீட்டில் திருமண வேலைகள் இருந்ததால் வரமுடியவில்லை.பிரதமருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம், பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார்
அவர் மேலும் சொன்னதாவது:- "கூட்டத்துக்கு வந்திருந்த எல்லாக் கட்சித் தலைவர்களும், தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள்.
அ. தி. மு. க. பிரதிநிதி, தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டுப் போய்விட்டார்.கச்சத் தீவு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடும்படி அவர் சொன்னார். அது ஏற்றுக் கொள்ளப்படாததால் வெளியேறினார்.இ. காங்கிரஸ் உள்பட எல்லாக் கட்சிக்காரர்களும் கொடுத்த திருத்தங்களை ஏற்றுத்தான், இந்தத் தீர்மானம் முடிவு பெற்று இருக்கிறது."இவ்வாறு கருணாநிதி கூறினார்.
நன்றி : https://www.dailythanthi.com/News/State/kachchathivu-issue-what-happened-1974-full-details-1101228
|
||||||||
by hemavathi on 02 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|