|
||||||||
குண்டலினி என்றால் என்ன? |
||||||||
உயிரின் ஆதாரத்தோடு தொடர்பு கொள்ள, குண்டலினி சக்தியை யோகா அணுகும் விதத்தையும், நம் மூலத்தோடு தொடர்பு கொள்வதனால் நமக்கு ஏற்படும் தாக்கத்தையும் அழகுடன் விவரிக்கிறது இக்கட்டுரை. குண்டலினி வெறும் வார்த்தையல்ல, நமக்குள் புதைந்திருக்கும் புதையல்… சத்குரு: குண்டலினியைப் பற்றி உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே நான் விவரிக்கிறேன், ஏனென்றால், இதைப் பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன. உங்கள் வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point) இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை உருவாக்குவதில்லை. எங்கோ ஓரிடத்தில் ஒரு பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம் இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை உருவாக்குகிறது, ஆனால் அது உங்களுக்கு நேரடியாக மின்சாரத்தை வழங்க முடியாது. இந்த பிளக் பாயிண்ட்தான் உங்களுக்கு மின்சாரத்தைக் கொடுக்க முடியும். பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா? அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தாலும், ஒரு மின்சாதனத்தை இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால், அந்த சாதனம் வேலை செய்யும் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக் குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட் போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம் அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக் பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக் பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில் இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக் பாயிண்டைப் போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5 பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும் இருக்கிறது. ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப் (bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக் பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப் பற்றிய அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போது உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க முடியும். இப்படி உங்களுடைய பிளக் அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள் இருபத்தி நான்கு மணி நேரமும் பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. அணைந்துவிடுமோ என்ற பயமின்றி, விளக்கை, வெளிப்படையாக, கவனமின்றி எரிய விடலாம். ஏனென்றால் நீங்கள் இப்போது மின்சாரத்தின் மூலத்துடனேயே தொடர்பில் இருக்கிறீர்கள். இப்போதும் கூட உங்களுக்குள் சக்தி இருக்கிறது. உங்கள் உயிர்சக்திகள் வேலை செய்கின்றன, ஆனால் அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே வேலை செய்வதால் மிகவும் குறைவான அளவே உயிர்சக்தி வெளிப்படுகிறது. ஆனால் அந்த உயிர்சக்தி முழுவதுமாக இயங்கி, பிளக்கும் சரியாக சொருகப்பட்டிருந்தால், அதை வைத்துக் கொண்டு நீங்கள் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு அளவே இல்லை. உங்கள் வீட்டில் உள்ள பிளக் பாயிண்ட்டில் கூட, ஒருமுறை ப்ளக் சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்கை எரிய விடலாம், ஏசி போட்டுக் கொள்ளலாம், ஹீட்டர் போட்டுக் கொள்ளலாம், டிவி ஆன் செய்து கொள்ளலாம், எதை வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம். ஒரே ஒரு சக்தி மையம்தான் இருக்கிறது. ஆனால் அதை வைத்துக் கொண்டு உங்களால் எண்ணற்ற விஷயங்களைச் செய்ய முடியும். ஆனால் நீங்களோ பிளக் பாயிண்டில் பிளக்கை சொருகாமல், சொந்தமாக சக்தியை உருவாக்க முயற்சிக்கிறீர்கள், அதனால் ஒரு நாளைக்கு ஐந்து வேளை சாப்பிடுகிறீர்கள், இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் களைப்பாகவே இருக்கிறீர்கள். இதனால் வாழ்க்கை நடத்துவதே கூட போராட்டமாக இருக்கிறது. சக்தி என்பது வெறும் உடல்சக்தியோ அல்லது ஒரு செயலினால் வரும் சக்தியோ கிடையாது. சக்தி என்பது உயிர்தன்மை இயங்கும் விதத்தைப் பொறுத்தே அமைகிறது. இந்த சக்திதான் பிரபஞ்சமாகவும் இருக்கிறது. எனவே சக்திநிலையின் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டால், உங்களுக்கு படைப்பின் முழு நுட்பமும் புரியும். எனவே, உங்களில், பிளக் சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் எல்லையில்லாத சக்தியின் மூலத்தோடு தொடர்பு கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி. இப்போது, சக்தி எங்கே எப்படி உருவாகிறது என்று உங்களுக்குத் தெரியாவிட்டாலும், சக்தி என்றால் என்ன, அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரியும். ஒரு சாதனத்தின் பிளக்கை பிளக் பாயிண்டில் சொருகும்போது, உங்கள் கைகள் நடுங்கினால், அந்த பிளக்கை சுவற்றில் வைத்து தேய்த்துக் கொண்டிருப்பீர்களே தவிர, அதைச் சரியாக பிளக் பாயிண்டிற்குள் சொருக மாட்டீர்கள். ஆனால் இது பலருக்கும் ஒரு கஷ்டமான விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் உடல், மனம், உணர்ச்சி, சக்திநிலை ஆகியவற்றில் அவர்கள் ஒரு சமநிலையில் இல்லை. யோகா செய்வதன் அடிப்படையே அவர்களுக்குள் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக் பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள். அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது, எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பீர்கள். இதற்காக நீங்கள் அந்த மின்நிலையத்தையே தேடிச் சென்று, அதைப் பற்றி ஒவ்வொன்றும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. நீங்கள் வெறுமனே பிளக்கை சரியாக சொருகினால் போதும், ஒவ்வொன்றும் சரியாக இயங்குகிறது. தடையில்லாத சக்தி மூலத்துடன் அப்படி ஒரு முறை தொடர்பு கொண்டுவிட்டால், இந்த உயிர் எப்படி செல்ல வேண்டுமோ அதே வழியில் நீஙகளும் செல்வீர்கள். இந்த உயிர் எதற்காக ஏங்குகிறதோ, அதை நோக்கியே நீங்களும் இயல்பாக செல்வீர்கள். உங்கள் கவர்ச்சியான கருத்துக்கள், கனவுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், உலகத்தின் சிக்கல்களில் சிக்கி தொலைந்து போக மாட்டீர்கள். நீங்கள் நேரான வழியில்தான் செல்வீர்கள், ஏனென்றால், இப்போது நீங்கள் படைப்பின் ஆதாரமான சக்தியின் மூலத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்கள். |
||||||||
by Swathi on 29 Mar 2014 6 Comments | ||||||||
Tags: Kundalini Yoga Awakening Kundalini Kundalini Meditation La Kundalini Kundalini Energy Reiki Kundalini குண்டலினி | ||||||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|