சென்னையில் உள்ள போரூர் பகுதியில் உள்ள மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிட பேரழிவு குறித்துச் சமீபத்தில் வந்த அத்தனை செய்திகளையும் படித்துக் கொண்டே வந்த போது என் மனதில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுபவர்கள் எத்தனை துறைகளிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும்? என்று நினைத்துக் கொண்டே ஒவ்வொரு வார இதழ்களையும் பார்த்துக் கொண்டே வந்தேன்.
இது குறித்த தகவல்களை இந்த வாரம் நக்கீரன் இதழில் கொடுத்துள்ளனர். அந்த விபரங்களைப் படித்தவுடன் தலை சுற்றிப் போனது. இத்தனை துறைகள் தாண்டி ஒரு கோப்பு நகர வேண்டும் என்றால் ஒவ்வொரு கட்டிட முதலாளியும் எப்படிக் கட்டிட தரத்தைப் பற்றி யோசிப்பார்கள்?
இத்தனை முதலைகளைச் சமாளித்து வருவதற்குள் மூச்சே நின்று விடும் அல்லவா? சென்னையில் உள்ள பெரிய கட்டிடங்களைப் பார்க்கும் போதெல்லாம் வெளியே தெரியாத அரசுத்துறை ஊழல்களை நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது.
அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதற்காகச் சி.எம்.டி.ஏ. வின் அப்ரூவலை பெறுவதற்கு ஒருவர் விண்ணப்பிக்கிறார். அந்த விண்ணப்பம் முதலில் பிளானிங் அப்ரூவல் செக்ஷனுக்குப் போகும். அங்கு உதவி திட்ட அமைப்பாளர் அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்வார். அடுக்குமாடி குடியிருப்பு எனில் 60 அடி சாலை இருக்க வேண்டும். வரைபடத்தில் அது சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறதா? எனக் கவனிக்க வேண்டும்.
பிறகு விண்ணப்பத்தோடு கட்டிடம் அமையும் நிலத்தின் பட்டா, கட்டிடத்தின் வரை படம், மண்வளம் ஆதாரத்தை உறுதி செய்யும் ஸ்டக்சுரல் ஸ்டெபிலிட்டி சர்டிஃபிகேட் போக்குவரத்துறையின் என்.ஓ.சி, ஃபயர் சர்வீஸ் டிபார்ட்மெண்டின் என்.ஓ.சி., சென்னை மாநகராட்சியின் என்.ஓ.சி., சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியத்தின் என்.ஓ.சி., சுற்றுப்புறச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை துறையின் என்.ஓ.சி. ஆகியவை அனைத்தும் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
இவைகள் அனைத்தும் இருந்தால், கட்டிடம் அமையும் பகுதிக்கு நேரில் சென்று உதவி திட்ட அமைப்பாளர் ஆய்வு நடத்த வேண்டும். அங்கும் எல்லாம் சரியாக இருந்தால் இந்தக் கோப்புத் துணைத் திட்ட அமைப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அவரும் விண்ணப்பத்தோடு இணைக்கப்பட்டுள்ள பேப்பர்களையும் நேரில் சென்று இடத்தையும் ஆய்வு செய்து விட்டு எல்லாம் சரியாக இருந்தால் தலைமை திட்ட அமைப்பாளருக்கு (சீஃ ப்ளானர்) கோப்பை அனுப்பி வைப்பார்.
இவரும் அதேபோல எல்லா ஆய்வுகளையும் நடத்தி முடித்து விட்டுக் கோப்பை சி.எம்.டி.ஏ. வின் மெம்பர் செகரட்டரியாக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அனுப்புவார். மெம்பர் செகரட்டரியும் இதை முழுமையாகப் பார்த்து விட்டு அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்குவதற்காக இருக்கும் கமிட்டியின் (எம்எஸ்பி கமிட்டி) முன்பு இந்தக் கோப்புச் சமர்மிக்கப்படும்.
இந்தக் கமிட்டிக்குச் சி.எம்.டி.ஏ. மெம்பர் செகரட்டரி தான் சேர்மன். கமிட்டியின் உறுப்பினர்களாகத் தலைமை திட்ட அமைப்பாளர், போக்குவரத்து துறையின் இணை கமிஷனர், தீயணைப்புத்துறை இயக்குநர், மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறையின் நிர்வாக இயக்குநர், மின்வாரிய சேர்மன், சென்னை மாநகராட்சியின் கமிஷனர் ஆகியோர் இருப்பார்கள்.
இத்தனை உயரதிகாரிகள் அடங்கிய கமிட்டியின் ஒப்புதலை அந்தக் கோப்பு பெற வேண்டும். அதன் பின் அந்தக் கோப்பு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்குத் துறையின் டெபுடி செகரட்டரி, செகரட்டரி ஆகியோரின் பார்வைக்குச் சென்ற பிறகு அந்தக் கோப்புத் துறை அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பபடும். அமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு இது தொடரபான அரசாணை வெளியிடப்பட்டுச் சி.எம்.டி.ஏ விற்கு அனுப்பி வைப்பர். அதை வைத்துச் சம்மந்தப்பட்ட கட்டிடத்திற்குத் திட்ட அனுமதியும், கட்டிட அனுமதியும் சி.எம்.டி.ஏ வழங்கும். அதன் பிறகு கட்டிடம் கட்டும் போது வரைபடத்தின் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் கட்டம் கட்டப்படுகிறதா என ஒவ்வொரு நிலையிலும் சி.எம்.டி.ஏ பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
இது தான் நடைமுறை.
-ஜோதிஜி திருப்பூர்
|