|
|||||
தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கம் ஏன்? அன்பழகன் விளக்கம் !! |
|||||
![]() தி.மு.கவில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராய பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில்; தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்தும், திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச் சச்சரவுகள்;
இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு.கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி இனியும் தொடர்ந்து
கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும், அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் - அவர், தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தினை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று, ஒற்றுமை யோடும், கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். |
|||||
by Swathi on 24 Jan 2014 0 Comments | |||||
Tags: DMK Alagiri Alagiri Suspended DMK Party Anbalagan Anbalagan DMK அன்பழகன் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|