நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில் இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், சேர் இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரமாக காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்க வைத்து அமர்வதால் நமக்குப் பல நோய்கள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்க வைத்து அமரும் பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்குக் கீழே இரத்த ஒட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங் கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தி அதிகமாக கிடைக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே தயவு செய்து இனிமேல் காலைத் தொங்க வைத்து அமருவதை தவிருங்கள். குறிப்பாக சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசானத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகி விடும். ஏனென்றால் இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.
ஆனால், இப்பொழுது பல நபர்கள் காலை மடக்கி உட்கார முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால் நாம் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் காலை மடக்கி அமர்கிறோம். அது மலம் கழிக்கும் பொழுது. யாருடைய வீட்டில் பாம்பே கக்கூஸ் என்று அழைக்கப்படும் காலை மடக்கி அமருமாறு கக்கூஸ் இருக்கிறதோ அவர்களுக்கு மூட்டு சம்மந்தப்பட்ட எந்த வலியும் வருவதில்லை. ஆனால் யுரோப்பியன் கக்கூஸ் உள்ள வீடுகளில் உள்ள அனைவருக்கும் மூட்டு முழங்காலில் வலியும் அது சம்பந்தப்பட்ட நோயும் வருகிறது. ஏனென்றால் இவர்கள் ஒரு முறை கூட வாழ்க்கையில் காலை மடக்கி அமர்வதே கிடையாது. முதலில் வயதானவர்களுக்கு மட்டுமே இந்த பிரச்சனை இருந்தது. ஆனால் இப்பொழுது சிறு குழந்தைகள் கூட யுரோப்பியன் கக்கூஸை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக் கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே தயவு செய்து யுரோப்பியன் கக்கூஸைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக பாம்பே கக்கூஸைப் பயன்படுத்துங்கள். இப்படிப் பயன்படுத்தும் பொழுது குறைந்த பட்சம் ஒரு நாளில் இரண்டு முறை மூன்று முறையாவது நாம் யோகாசனம் செய்வதை போல் இருக்கும். எனவே முடிந்த வரை காலை தொங்க வைத்து அமர்வதை தவிருங்கள். கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள். சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும். சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து கொள்ளலாம். ஆனால் அந்தச் சேரில் காலை தொங்கவிடாமல் மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது அனைவருக்கும் வரும் மூட்டு தேய்மானம், மூட்டு வலி இதற்கு அடிப்படைக் காரணம் காலை தொங்கப் போட்டு அமர்வது தான். எனவே இன்று முதல் காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் ஜீரணமும் நன்றாக நடக்கும். உடம்பில் சக்தியும் அதிகரிக்கும். உடம்பில் மூட்டு வலியும் கால் வலியும் வராது. வாழ்வோம் ஆரோக்கியமாக !
- ஹீலர் பாஸ்கர்
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |