இலக்கியம் என்பது மனிதர்கள் தங்களுக்கு நிகழும் வாழ்க்கைக்கு மேலதிகமாக விரிந்த வாழ்க்கையை மொழியினூடாக கற்பனை செய்து அறிவது. ஒருவரின் வாழ்க்கை அளிக்கும் அனுபவங்கள் எல்லைக்குட்பட்டவை, இலக்கியம் பல்லாயிரம் பேரின் அனுபவங்களை ஒருவர் அடைய வழிவகுக்கிறது. காலத்தால் கடந்துபோன வாழ்க்கையை நாம் வாழவும் நாளை நிகழவிருக்கும் வாழ்க்கையை சென்றடைந்துவிடவும் உதவுகிறது.
எல்லா பால்நிலைகளிலும் எல்லா நிலங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லாவகை இக்கட்டுகளிலும் எல்லா வகை பரவசங்களிலும் நாம் சென்று வாழ்வதற்கான வழியே இலக்கியம் என்பது. வாழ்க்கை அளிக்கும் அனைத்தையும் இலக்கியமும் அளிக்கும். இலக்கியவாசகன் வாழும் வாழ்க்கை பிறவாழ்க்கைகளில் இருந்து பலமடங்கு பிரம்மாண்டமானது என்பதனால்தான் சற்றேனும் இலக்கியவாசிப்பு தேவை எனப்படுகிறது.
புறவாழ்க்கைக்கு அர்த்தமும் மையமும் கிடையாது. ஆகவே அதற்கென பொருளும் இல்லை. இலக்கியம் வாழ்க்கைக்கு அர்த்தமும் மையமும் அளித்து பொருளுள்ளதாக்குகிறது. இலக்கியமே வாசிக்காதவர்களயினும் வாழ்க்கைக்கு அவர்கள் அளிக்கும் அர்த்தமென்பது இலக்கியத்தால் உருவாக்கப்பட்டதாகவே இருக்கும்.
இதற்கப்பால் இலக்கியம் ஒரு மெய்யறிதல்வழி. மெய்யைச் சென்றடைய மூன்றுவழிகள். தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு. இலக்கியம் கற்பனையை முதன்மையாகக்கொண்ட அறிவுப்பாதை. உள்ளுணர்வும் தர்க்கமும் அதற்கு உடன்வருபவை. பல்லாயிரமாண்டுகளாக மானுடன் அடைந்த மெய்மைகள் அனைத்தும் இலக்கியமாகவே சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றை அறியாதவனால் எதையும் உணர்ந்துகொள்ளமுடியாது
கடைசியாக, நாம் அன்றாடவாழ்க்கையால் சூழப்பட்டுள்ளோம். கடந்தவை மறைந்துகொண்டே இருக்கின்றன. நேற்றுக்கும் நமக்கும் எந்த இயல்பான தொடர்பும் இல்லை. இலக்கியம் நேற்றின் ஆழம் முதல் இன்றுவரை வந்து நாளைக்கும் நீளக்கூடிய ஒரு பெருக்காக வாழ்க்கையை உருவகிக்கிறது. மூன்றுகாலங்களையும் தொடர்புபடுத்துகிறது. இலக்கியம் மானுடம் தன் வாழ்க்கையை நினைவில் நிறுத்திக்கொள்ளும் ஒரு வழிமுறை.
- ஜெயமோகன்
|