நாலு ஏக்கரில் மாப்பிள்ளை சம்பா நடவு நட்டோம், அனைத்தும் அச்சமயம் பெய்த மழையில் மூழ்கி நாற்று கரைந்துவிட்டது, மனசு தளர்ந்தாலும் அடுத்த போகம் பார்த்துக்கலாம்னு விட்டுட்டோம், ஓரிரு மாதங்களுக்குப்பிறகு தொலைபேசி அழைப்பு, யார்னு பார்த்தா வயல் வழியாக வந்துபோகும் நண்பர் ஒருவர், என்னனு நலம் விசாரித்து விசயத்தை கேட்டேன்,
என்ன வயல அப்படியே போட்டுட்டீங்க, பத்து ஆளவிட்டு களையெடுத்து ஊட்டம் கொஞ்சம் கொடுக்கலாமேனு சொன்னவுடன், கொஞ்சம் தடுமாற்றம் எதைப்பற்றி பேசுறார்னு புரியல,
அப்புறம் அவரே சொன்னார் வயல் முழுவதும் அங்கங்கு கொத்துக்கொத்தா நாற்று முழுங்கால் அளவு வளர்ந்திருக்குனு சொல்லிட்டு வந்து பாருங்கனு வச்சிட்டார், என்னடா இதுனுட்டு பக்கத்து வயல்காரரிடம் விசாரித்தால், பராமரித்தால் விதைநெல்லுக்காவது தேறும்னு சொன்னார்,
சரி என்னனுதான் பார்ப்போம்னு மணி, பாலாசி சகோ ஆகியோர் போய் பார்த்துட்டு விதைநெல்லுக்கு தேறும்னு முடிவெடுத்து, அதிலும் குழப்பம் இதைப்பார்த்தால் பச்சைப்பயறு தெளிக்க முடியாதேனு யோசிச்சோம், கடைசியா வரது வரட்டும்னு விட்டுட்டு வந்தாச்சு, ஒருமாதம் கழித்து நாங்க போய் பார்க்கையில் முழங்கால், இடுப்பளவுனு வளர்ந்து தொண்டைக்கதிரா ஆள்மட்டம் உயர்ந்து நின்றிருந்தது,
உள்ளுக்குள்ள கொஞ்சம் மகிழ்ச்சியுடன் பத்து லிட்டர் அமிர்தக்கரைசலை தெளித்துவிட்டு வந்தோம், சனவரி ஏழாம்தேதி பெய்த மழைக்குப் பிறகு அவ்வயலுக்கு அறுவடை வரை தண்ணீர் பாய்ச்சவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது,
ஒரு மாதம் கழித்து அறுவடை,சுற்றிலும் அறுவடை முடிந்திருந்ததால் ஊர் எலிகளெல்லாம் நம்ம வயலலில் கூடாரமிட்டு அதுக தின்னதுபோக 1180 கிலோ மாப்பிள்ளை சம்பா கிடைத்தது, நட்டம் ஏற்பட்டது ஏற்பட்டதுதான், இன்றைய ரசாயன முறையில் விளைவிக்கப்படும் நிலங்கள் நீரில் மூழ்கினால் அத்துடன் அதில் ஒரு சல்லிக்காசுக்கூட கிடைக்காது,
ஆனால் தண்ணீரில் கரைந்துப்போன மாப்பிள்ளை சம்பா நாற்றின் அடிவேர் துளிர்த்து வளர்ந்து குறிப்பிட்ட மகசூலை கொடுத்து விழப்போனவர்களை தடுத்து நிறுத்தியதை பார்த்தவுடன்,
நினைவுக்கு வந்தவர் நம்மாழ்வார் ஐயாவும், அவர் சொன்ன வார்த்தையும், மண்ணுல போடுற எதுவும் வீணாப்போகாது, என்னைக்காவது திருப்பிக்கொடுத்துடும் என்பதே, ஏன் பாராம்பரிய முறையை கையிலெடுக்கனும் என்பதற்கு மேலுள்ளதே சான்று, இவ்வுளவிலும் இன்னுமொரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது அம்மண், மாப்பிள்ளை சம்பாவில் ஒரேயொரு தப்புநெல் கிடந்து, அதுவும் ஒரு கொத்தாக வளர்ந்து சுமார் 500க்கும் மேற்பட்ட நெல்மணிகளை கொடுத்துள்ளது,
விசாரித்ததில் அந்நெல்லின் பெயர் வாலான் சம்பா என தெரிய வந்தது, நெல்மணிகள் பாதுகாக்கப்பட்டது விதைப்பெருக்கம் செய்ய, இதை பரவலாக்க முட்டுக்கட்டை இட்டுள்ளதுதான் கொஞ்சம் நெருக்கடியான விசயமாக உள்ளது.
-இரா.வேல்முருகன்
|