LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

உலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின், தற்போது முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடக்கிறது. தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கவும் நடத்தப்படுவதுதான் உலகத் தமிழ் மாநாடு. தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள், பண்பாடு, தமிழ் மொழி வரலாறு, தொல்லியல் ஆய்வுகள், கலைகள், மொழியியல் பற்றி இம்மாநாட்டில் புதிய உண்மைகள் வெளியாகும் என்பதால் தமிழ் அறிஞர்களிடமும் மாணவர்களிடமும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது நடைபெறும் செம்மொழி மாநாடு, இதற்கு முன் நடந்த மாநாட்டின் தொடர்ச்சி அல்ல. தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் முதல் மாநாடு. உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களை ஒன்றிணைத்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் கடின முயற்சியின் விளைவாக 1964ம் ஆண்டு, டில்லியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் துவக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்த வேண்டும் என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது. முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 ஏப்ரலில், மலேசியத் தலைநர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இந்த மாநாட்டுக்கு தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஏற்பாடு செய்தார். சர்வதேச தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இரண்டாவது மாநாடு, சென்னையில் 1968ல் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை முன்னின்று மாநாட்டை சிறப்பாக நடத்தினார். இந்த மாநாட்டின் முதல் நாளில் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பட்டன. திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தில் நாயகி கண்ணகிக்கும் சிலை எடுக்கப்பட்டது. மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்றது. முதல் மாநாட்டைப் போல் அது ஆய்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது.

நான்காவது தமிழ் மாநாடு, 1974ல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் நடந்தது. இம்மாநாட்டுக்கும் தனிநாயகம் அடிகள்தான் ஏற்பாடுகளை செய்தார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆய்வு அமர்வுகளும், தமிழர் பண்பாட்டு பொருட்காட்சி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி மண்டபடத்திலும் நடைபெற்றன. முதல் மூன்று மாநாடுகளைப் போல் இம்மாநாடு எளிதாக நடைபெறவில்லை. யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா ஒரு தமிழராக இருந்தும், இந்த மாநாட்டு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டது. தமிழ்ப் பகுதியிலிருந்து பொதுமக்கள் மாநாட்டைப் பார்க்க திரண்டு வந்தனர். அப்போது, பருத்தித்துறை வழியாக வந்தவர்கள் சிங்களர்களால் மறிக்கப்பட்டனர். அவர்கள் மண்டபம் வந்தடைந்த பின்னர், யாழ் வீரசிங்கம் மண்டபம் நிறைந்து வழிந்தது. காவல்துறையினர் சென்று வர பாதையில்லை என்றுகூறி, தடியடி கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை வீசினர். இதனால் மக்கள் கலைந்து செல்லும்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள்.

ஐந்தாவது மாநாடு, 1981ல் மதுரையில் நடந்தது. அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தார். மதுரையில் உலகத் தமிழ் சங்கம் துவங்கவும், தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கவும் அப்போது எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். ஆறாவது மாநாடு, 1987ல் கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில் கருணாநிதி துவக்க நாள் சிறப்புரையாற்றினார். ஏழாவது மாநாடு, 1989ல் மொரிஷியசில் நடந்தது. எட்டாது மாநாடு தஞ்சாவூரில் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார். இந்த மாநாட்டில்தான் முத்தமிழ் தவிர அறிவியல் தமிழ் ஒன்றும் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. துவக்கத்தில் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள்தான் முடிவு செய்தனர். அப்போது அரசு வாயிலாக துவங்கப்படவில்லை. காலப்போக்கில் நிதி நெருக்கடி காரணமாக, அரசு உதவியின்றி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் மட்டுமே இம்மாநாடு நடத்துவது கடினமாகிவிட்டது. ஆகவே, தமிழக அரசின் நிதி உதவியை சார்ந்தே இம்மாநாட்டு ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றன.

எம்.ஜி.ஆர்., நடத்திய ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு, மதுரையில், 1981ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமையில், கவர்னர் சாதிக் அலி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் கொண்டாடப்பட்டது. இதற்கு தமிழக அரசும் நிதியுதவி வழங்கியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.மாநாட்டுக்காக மதுரை நகர் முழுவதும் அலங்கார வளைவுகளும், தமிழ் வளர்த்த அறிஞர்களின் சிலைகளும் நிறுவப்பட்டன. மதுரை நகரில் புகும் பகுதியிலேயே, கம்பீர நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. நகர் முழுவதும் அமைக்கப்பட்ட தோரண வளைவுகளுக்கு மட்டும் ஏழு லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. மதுரை மேலூர் சாலையில் அமைக்கப்பட்ட நக்கீரர் தோரண வாயிலை சத்தியவாணி முத்து திறந்து வைத்தார். மதுரை தமிழ்ச்சங்க தலைவர் டி.வி.எம்.பெரியசாமி இதற்கு தலைமை தாங்கினார். சேரன் நுழைவு வாயிலை நெடுஞ்செழியன் முன்னிலையில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சர் முத்தையா செட்டியார் தலைமை வகித்தார். சோழன் நுழைவு வாயில் திறப்பு விழாவுக்கு தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மாநகராட்சி கட்டடங்கள், விருந்தினர் மாளிகைகள் புதுப்பொலிவு பெற்றன. சில விருந்தினர் மாளிகைகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டன.

நகரில் நடமாடிய பிச்சைக்காரர்கள், பிச்சைக்காரர்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர். உலகம் முழுவதிலும் இருந்து வந்த 600க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் பங்கேற்றனர். இலங்கை, மலேசியா நாடுகளில் இருந்து மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், செனகல், இந்தோனேசியா, மொரிஷியஸ், மேற்கு ஜெர்மனி, ஸ்வீடன், செக்கோஸ்லோவாகியா, நெதர்லாந்து, நேபாளம், பின்லாந்து, பிஜி தீவுகளில் இருந்தும் மாநாட்டில் பங்கேற்க பிரதிநிதிகள் வந்தனர். வெளிநாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகளை, தமிழக செய்தி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மற்றும் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.மகாராஜன் ஆகியோர் வரவேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள், பஸ்கள் மூலம் மக்கள் வந்து குவிந்தனர். இதற்காக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் பார்க்க வசதியாக 10 இடங்களில் "டிவி'க்கள் வைக்கப்பட்டன. இதில் 9 கோடி ரூபாய் மதுரை நகரில் நிரந்தர வசதிகளுக்காகவே செலவிடப்பட்டது. மதுரை திருமலை நாயக்கர் மகால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அங்கு திருமலை நாயக்கரின் வரலாற்றை விவரிக்கும் ஒளி-ஒலி காட்சி துவக்கிவைக்கப்பட்டது.சீர்காழி கோவிந்தராஜனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்கியது.

மாநாட்டை துவக்கி வைத்து பேசிய தமிழக கவர்னர் சாதிக் அலி தமிழ் புலவரின் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்ற கூற்றின் அடிப்படையில் மாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டார்.துவக்க விழாவில் தலைமை வகித்து பேசிய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் நிறுவப்படும் என அறிவித்தார். கோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக கொண்டு வர தமிழக அரசு பாடுபடும் என குறிப்பிட்டார். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய விவசாய அமைச்சர் ஆர்.வி.சாமிநாதன் தான் தமிழன் என்ற முறையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார். முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தனது பேச்சின் போது உலகதத் தமிழ் மாநாடு நடைபெற காரணமாக இருந்த தனிநாயகம் அடிகளாருக்கு நன்றி தெரிவித்தார். மதுரை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் கேரள முதல்வர் நாயனார் கலந்து கொண்டார். பொதுமக்கள், அறிஞர்கள், கலைஞர்கள் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில், பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நாள்தோறும் மாநாட்டு திடலில் நடந்தது. இதற்கென பந்தயத்திடலில் முப்பதாயிரம் பேர் அமரக்கூடிய பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கவிதை போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமுக்கம் மைதானத்தில் நடந்த கண்காட்சியில், பண்டை தமிழர்களுடைய கலை, நாகரிகம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் பல்வகை காட்சிகள் அமைக்கப்பட்டன. தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. மாநாட்டின் போது தமிழ் புலவர்கள் 49 பேருக்கு தங்கப்பதக்கங்களை முதல்வர் எம்.ஜி.ஆர்., வழங்கினார்.

இறுதி நாளான ஜனவரி 10ம் தேதி பிரதமர் இந்திரா மாநாட்டில் உரையாற்றினார். "உலக தமிழ் மாநாடு, வணக்கம்' என தமிழில் பேச்சை துவங்கிய பிரதமர் இந்தி மொழி திணிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார். பிரமாண்ட அலங்கார வண்டிகளின் ஊர்வலத்தை பிரதமர் இந்திராவும், முதல்வர் எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் அமர்ந்து பார்த்தனர். இந்த ஊர்வலத்தை காண வழிநெடுகிலும் 25 லட்சம் பேர் கூடியிருந்தனர். இந்த ஊர்வலத்தில் 5 யானைகளில் இசைக்கலைஞர்கள், பெண்கள், போலீஸ் வாத்தியக்குழு, விவசாய காட்சி வாகனம், கொடி பிடித்த மாணவ, மாணவிகள், ஆசிரியைகள், மேளக்கலைஞர்கள், கரகாட்டக்காரர்கள், பொய்க்கால் குதிரை, தமிழ் வளர்த்த அயல்நாட்டு அறிஞர்கள், அவ்வையார், கண்ணகி, ஆண்டாள், கம்பர், தமிழன்னை வேடமிட்டவர்கள் கலந்து கொண்டனர்.விழா மேடைக்கு அருகே அமைக்கப்பட்ட தமிழன்னை சிலையை எம்.ஜி.ஆர்., திறந்து வைத்தார்.

***ஆறாவது உலக தமிழ் மாநாடுமலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஆறாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. உலகில் தமிழர்கள் அதிக எண்ணிக்கை வசிக்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியா இருப்பதால் இங்கு ஆறாவது உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. முதல் உலகத்தமிழ் மாநாடும் கோலாலம்பூரில் தான் நடைபெற்றது.1987ம் ஆண்டு நவ. 15ல் தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டை மலேசிய பிரதமர் மகாகிர் முகமது தொடங்கி வைத்தார். இதில் 14 நாடுகளை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், மொழி வல்லுனர்கள் பங்கேற்றனர்.

இதில் மகாதிர் முகமது பேசியது: கடந்த கால நினைவுச்சின்னங்களை கண்டுபிடித்து, அடையாளம் காட்டுவதுடன் மட்டும் திருப்தி பட்டுவிடக்கூடாது. சமூகம்,மொழி, கலாசாரம், மதம், கலை போன்றவற்றில் பழங்கால சிறப்புக்களை புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும், வரலாற்று அறிஞர்களும் கண்டுபிடிக்கின்றனர். அவற்றை தற்போதைய காலத்துக்கு பொருத்தமானதாக மாற்றக்கூடியவர்களாகவும் அவர்கள் விளங்க வேண்டும்.

தமிழ் மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. உலகின் மிகச்சிறந்த இனிமையான மொழி என நிபுணர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். புராதன காலம் முதல் இன்றுவரை பல வல்லுனர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்களால் தமிழ் மொழி வளர்க்கப்பட்டு இந்த பெயரை பெற்றுள்ளது.இப்போது தமிழ்மொழி, தமிழகத்தில் மட்டுமல்லாது, கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்கா, பர்மா, பிஜி, இந்தோனேசியா, இலங்கை, டிரினிடாட், மலேசியா நாடுகளிலும் பேசப்பட்டு வருகிறது. சிறப்பான இந்த மொழி மேலும் வளர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்து மலேசிய அமைச்சரும், மாநாட்டு அமைப்பாளர்களில் ஒருவருமான சாமிவேலு பேசினார். அவர் பேசியது: தமிழ்மொழியை சர்வதேச மொழியாக மாற்ற வேண்டும். தமிழை உலகம் முழுவதும் பரப்ப நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ராஜீவுக்கு கடிதம் எழுதப்போகிறேன். தமிழகத்தில் உள்ள முக்கியமான தமிழ் அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு சாமிவேலு பேசினர். இந்த மாநாட்டில் தி.மு.க., தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார்.ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மொரிஷியஸ், நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் கோலாலம்பூருக்கு வந்தனர்.இவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. கருத்தரங்கு சிறப்புரை ஆகியவையும் நடந்தது. மாநாட்டை ஒட்டி தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர்களின் கலை, கலாசாரம் குறித்த கண்காட்சியும் துவக்கப்பட்டது.

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.