LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

இன்றைய குடும்பச் சிக்கல்களும் வள்ளுவர் தரும் தீர்வுகளும் - வீ.பாலமுருகன்

சமுதாயத்தின் அடிப்படையாய்க் குடும்பம் விளங்குகிறது ஆணும் பெண்ணும் திருமணத்தால் இணைந்து கணவன் மனைவியாகி வாழ்வது குடும்ப வாழ்வின் தனிச் சிறப்பாகும். குடும்பம் செவ்வனே அமைவதற்குத் தலைவன், தலைவியரான தந்தை, தாய்க்குப் பல பொறுப்புகள் உள்ளன. இரு மாடுகள் சேர்ந்து வண்டியை இழுப்பது போல் கணவனும் மனைவியும் இணைந்து இல்வாழ்க்கைத் தேரை இழுக்க வேண்டியுள்ளது. இதனால் தாய், தந்தையரை மையமிட்டே ஒரு குடும்பத்தின் சிறப்பு அமைகிறது எனலாம்.


குடும்பம்


கணவனும் மனைவியும் ஒரு வீட்டில் இல்லத்தில் அன்பால் இணைந்து, பிள்ளைகளைப் பெற்று, பெருஞ் செல்வத்தையும், மக்களையும் உருவாக்க உறைந்து வாழும் இடமே குடும்பமெனலாம்.


''குடும்பம்'' என்ற சொல்லுக்கு உறவு; ஓர் இல்லத்தில் உள்ளோர்; வீடு, மனை, குலம், குடி இனத்தார்; ஒரு குடிசையில் உள்ளோர் என்று அகராதிகள் பொருள் விளம்புகின்றன.


மனித சமுதாயத்தின் அடிப்படை ''குடும்பம்'' என்று சமூக இயலார் குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது. குடும்பம் என்ற பெயரைக் குறிக்கும் ''பேமிலி'' என்ற ஆங்கிலச்சொல் ''பேமுலஸ்'' என்ற இலத்தின் மொழியிலிருந்து தோன்றியது என்றும், அதற்கு வேலைக்காரர்கள் என்று பொருள்படும் என்றும் சமூகவியல் கூறும்.


கணவன், மனைவி, பிள்ளை - கணவனைப் பெற்ற மாமன், மாமியார், கணவனோடு உடன் பிறந்தவர்கள் - இவர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு, பாசம், தியாகம், விட்டுக் கொடுக்கும் தன்மை ஆகிய நற்பண்புகள் நிறைந்த ஓரிடமே குடும்பம் என்று சொல்வது மிகவும் பொருத்தமானதாகும்.


குடும்பம் உருவாகும் விதம்


சமுதாயத்தின் ஓர் அங்கமாக விளங்குவது குடும்பம். ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நிகழ்ந்து அன்பால் இணைந்து வாழ்க்கை நலம் மேற்கொண்ட பிள்ளைகள் பெற்று ஒரு குடும்பத்தில் முதியோர்கள் கணவன், மனைவி, உடன் பிறந்தவர்கள் சேர்ந்து ஒரு தலைமையின் கீழ் வாழ்வது கூட்டுக் குடும்பமாகும். முன்பு கூட்டுக் குடும்ப நிலை போற்றப்பட்டது. இன்று வளர்ந்து வரும் நாகரிகத்தின் காரணமாகவும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வேறுபாடுகள் காரணமாகவும் கூட்டுக் குடும்ப நிலை சிதைவுற்றுத் தனிக்குடும்பமாக மாறி வருகின்றது. கூட்டுக்குடும்பங்களில் சிக்கல்கள், பிரச்சினைகள், காரணமாகத் தனிக்குடும்பமாவதும் உண்டு. தனிக்குடும்பம் நடத்துவதில் சிக்கல்கள் பல தோன்றுகின்றன. பெரியோர் சொல் கேளாமை, குடும்ப வாழ்க்கை புரியாமை ஆகிய காரணங்களின் அடிப்படையில் தனிக்குடும்பங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்கான தீர்வுகளை வள்ளுவர்,


பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்


பேரா இடும்பை தரும்


- - - (குறள் 892)


என்ற குறள் மூலம் அறிவு ஆற்றல் மிக்க பெரியாரைப் பெற்ற பிள்ளைகள், மதித்து நடக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் மதித்து வாழ்ந்தால் குடும்பங்களில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கலாம் எனத் தீர்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார்.


திருக்குறளில் குடும்பம்


திருக்குறளில் குடும்பம் (1029) என்ற சொல் ஓர் இடத்திலும், ''குடி'' என்ற சொல் (171, 502, 601, 602, 604, 608, 609, 632, 681, 793, 794, 887, 888, 992, 952, 953, 954, 955, 957, 1022, 1023, 1024, 1025, 1027, 1030) என்று 26 இடங்களிலும், ''குலம்'' என்ற சொல் (956, 958, 959, 960) என்ற நான்கு இடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன.


மேலும் வீட்டை, குடும்பத்தைக் குறிக்கின்ற ''இல்'' என்ற சொல்லும் (1021-1044), இல்லாண்மை என்ற சொல்லும், (1026) இவை போன்றே தலைவனையும், தலைவியையும் குறிக்கின்ற சொற்களும் குடும்பம் சார்ந்தவையாக அமைந்துள்ளன.


தலைவன்: ஆண்மகன். வீட்டின், அதாவது குடும்பத்தின் தலைமகன் ஆவான். அவனை வள்ளுவர் தற்கொண்டான், கிழவன், இல்வாழ்வான், காதலர், நயந்தவர், கொண்கன், கண்ணன், கேளிர், கொழுநன், காதலன் என்று பல பெயர்களால் சுட்டுகிறார்.


தலைவி: இல்லத்தை ஆளும் தலைவியை இல்லாள், இல்லவள், மாண்புடையாள், வாழ்க்கைத் துணை, பெண், பெண்டிர், மகளிர், கண்ணிறைந்த காரிகை, வளத்தக்காள், மனையாள், மனை என்று அழைக்கிறார்.


குடும்பத்தில் இரு பாலினராலும், சிக்கல்கள் வருவதுண்டு. இச்சிக்கல்களுக்கு வள்ளுவர் ஆங்காங்கே தீர்வுகளையும் சுட்டிக் காட்டுகின்றார்.


ஆண்களால் ஏற்படும் சிக்கல்கள்


இன்றைய காலக்கட்டச் சூழ்நிலையில் குடும்பம் என்று எடுத்துக் கொண்டாலே பல பிரச்சினைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு குடும்பத்தில் பொறுப்புள்ள தலைவன் தீய பழக்க வழக்கங்களில் செல்வதாலும், போதைப் பொருள்கள், பரத்தையரிடம் செல்லல் போன்ற தவறான பாதைகளில் செல்வதாலும் (வாழ்க்கையில்) குடும்பத்தில் சிக்கல்கள் உருவாகும்.


தீய பழக்கங்களினால் அடையும் கேடுகளைச் சுட்டிக்காட்டி (937, 939) அச்சிக்கல்களுக்குத் தீர்வு தருகிறார் வள்ளுவர்.


அடுத்துக் கள்ளினால் விளையும் இடர்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார். அது போன்றே வரைவின் மகளிரால் உண்டாகும் தீமைகள், துன்பங்கள் போன்றவற்றை விலக்கி (914, 917) அறிவைச் சரி செய்து கொள்ளுமாறு தீர்வுகளை அடுக்கிக் காட்டுகிறார்.


பெண்களால் ஏற்படும் சிக்கல்கள்


காலங்காலமாகவே பெண்கள் என்றாலே பிரச்சினை தான். காரணம் ஆணாதிக்க நிலை. சங்ககாலம் தொட்டே பெண்களை அடக்கி ஆள்வதையும், அவர்களுக்குப் படிப்புரிமை தடுக்கப்படுவதையும் காண்கிறோம். ஆனால் இன்றைய சமுதாயத்தில் கல்வியறிவு பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கிச் சம அந்தஸ்தை நல்கினாலும் கீழ்த் தட்டு மக்கள் அந்த உயர்வைத் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்


பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்


எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்


இளைப்பில்லை காணென்று கும்மியடி


என்று பாரதியின் வாக்கின்படி பெண்கள் வாழ்ந்தாலும், சில பெண்கள் இல்லறம் என்ற நல்லறத்தைத் துறந்து வாழ்கின்ற நிலையினையும் அதனால் வீதிக்கு ஒரு தங்கும் விடுதி செயலாற்றப்படுவதையும் காணுகின்றோம்.


இன்றைக்கும் சில பெண்கள் திருமணம் என்றாலே வெறுத்து ஒதுங்கும் நிலை காணப்படுகிறது. காரணம் வறுமை, தன்னைத் திருமணம் புரியவரும் மாப்பிள்ளைமார் கேட்கும் வரதட்சணையைக் கண்டு தற்கொலைக்கு ஆளாகின்றனர். சில பெண்களின் திருமணமே நின்று விடுகிறது.


இளமையில் திருமணம் அழகானது. திருமணமல்லாத வாழ்வு முழுமையுறாது. வள்ளுவர் இச்சிக்கலுக்குத் தீர்வாக (1007, 1010) நமக்கு எடுத்துச் சொல்லியிருப்பதாக எண்ணுவதும் நன்றாம்.


நல்ல அழகான பெண்ணொருத்தி திருமணம் செய்து கொள்ளாது முதுமை அடைவது வள்ளுவருக்கு உடன்பாடல்ல என்பதனை,


அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்


பெற்றாள் தமியள்மூத் தற்று


- - - (குறள் 1007)


என்ற குறட்பாவால் உணர்த்துகிறார்.


மகப்பேற்றுச் சிக்கல்


குழந்தையின்மை என்பது இன்றைய சூழலுக்கு மிகப்பெரிய பிரச்சினையாகவே கருதப்படுகிறது. திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டாலே போதும். அவனுக்கு குழந்தையில்லை என்று சமுதாயம் அவர்களை அவலநிலைக்குத் தள்ளுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஒரு புறம் குழந்தை வரம் கிடைப்பதே மிகப் பெரிய வரப்பிரசாதம். இதில் ஆண் குழந்தை என்றால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறார்கள். பெண் குழந்தை என்றால் கள்ளிப்பாலை ஊற்றிக் கொன்று விடுகின்றனர். இல்லையெனில் குப்பையில் வீசுகின்றனர். காரணம் ஆணாதிக்க நிலை என்று கூறலாம். குடும்ப உறவுகளில் பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்ற சிக்கலுக்கு,


குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்


மழலைச் சொல்கேளா தவர்


என்ற குறட்பாவின் மூலம் வள்ளுவர் குழந்தைகள் பேசும் மொழியைக் கேட்பதே மிகப்பெரிய மகிழ்ச்சி; இவற்றில் ஆணா, பெண்ணா, என்ற விவாதம் நமக்குத் தேவையில்லை என்று தீர்வு சொல்கிறார்.


குடும்ப உறவுகளில் சிக்கல்கள்


குடும்ப உறவுகளில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாழ்க்கை இன்பத்தைப் புரிந்து வாழாமையால் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன.


ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்


கூடலில் காணப் படும்


- - - (குறள் 1327)


என்ற குறட்பாவின் மூலம் ஊடலில் தோற்றுப் போனவனே வென்றவனுக்குச் சமம் என்கிறார் வள்ளுவர். இச்சிக்கலுக்குத் தீர்வுகாண விழைபவர்கள் காமத்துப்பாலைச் சரியான முறையில் படிப்பின், சிக்கலில்லா குடும்பத்தை மட்டுமல்ல; நல்லதோர் அறிவு நிறைந்த சமுதாயத்தையும் உருவாக்க இயலும்.


பேராசையால் எழும் பெருஞ்சிக்கல்


ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். பேராசை பெரும் நஷ்டம் என்ற பழமொழியையும் நாம் அறிவோம். இன்றைய குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் இன்பத்தை முழுமையாக அடைகின்றனரா என்பது பெரும் கேள்வியாக அமைந்து குடும்பத்தில் பெருஞ்சிக்கலாக அமைகிறது.


''பாலொடு......... நீர்'' (1121), ''கண்டு .......உள'' (1101) என ஐம்புலன்களாலும் இன்பம் நுகர வேண்டிய இருவர் திருமணம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே செல்வத்தை நாடி அயல்நாடு சென்று விடுகின்றனர்.


குடும்ப வாழ்வில் பாலுணர்ச்சிக்கும் முக்கிய இடமுண்டு. இந்த உணர்வினால் இருவருக்கும் இடையே அன்பார்ந்த வாழ்வு அமையும். இவ்வுணர்வுகளை ஊடல், கூடல் எனும் வெளிப்படுத்தும் வாயில்கள் அமையாது. குடும்பச் சிதைவுகள் நடைமுறையில் அமைவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.


எனவே அன்பிற்கு முதன்மை தந்து ''உப்பமைந்தற்றால்..... விடல்'' (1302) ''ஊடுதல்..... பெறின்'' (1330) என்ற குறட்பாக்கள் வழி நடந்தால் பாலுணர்வால் வரும் இச்சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு காணமுடியும்.


காமத்துப்பாலில் வரும் தலைவனும் தலைவியும் அடையும் இன்பம், துன்பம் அனைத்தையும் ஆழ்ந்து நோக்கின் பேராசை கொண்ட உள்ள பேரன்பில் மூழ்கிக் குடும்பம் சிதைவுறாது தடுக்க வழியுண்டாகும்.


தனிமனித ஒழுக்கம்


குடும்பத்தில் பெற்றோர் உருவாக்கும் தனிமனித ஒழுக்கமே சமுதாயம் žர்மையாக இருக்க உதவுமெனலாம். கண்டதே காட்சி, கொண்டதே கோலம், என்று குடும்பத்தில் உள்ள ஒருவன் வாழும்போது குடும்பத்திற்குப் பழியுண்டாக வழியாகிறது. ''பொருளில்லா......... யாங்கு'' (247) என்று கூறினும் குடும்பத்தலைவன் அறமுறையில் பொருளீட்ட வேண்டும் என்று வற்புறுத்துவதை இங்கு எண்ண வேண்டும். இதனை,


பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை


வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்


- - - (குறள் 44)


என்ற குறட்பாவால் அறியலாம்.


பொருளாதாரச் சிக்கல்


குடும்பத்தில் வேலையின்மையால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுச் சிக்கல் ஏற்படுகிறது. அதற்கு மாணவர்களைப் பார்த்து, மக்களைப் பார்த்து,


வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்


யானையால் யானையாத் தற்று


- - - (குறள் 678)


என்கிறார் வள்ளுவர். ஒருவன் தொழிலைச் செய்கின்ற போது அதனோடு தொடர்புடைய இன்னொரு தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இக்குறட்பாவும் இச்சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் (676)


சமூகம் என்ற கட்டமைப்பில் குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கி இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டாயத் தேவையின் அடிப்படையில் வாழ்வதே நலமாகும். அப்படி வாழ்பவனே சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதனாக மதிக்கப்படுகின்றான்.


இன்றைய குடும்பங்களில் ஆண்மகனால் ஏற்படும் சிக்கல், பெண்மகளால் ஏற்படும் சிக்கல், குடும்பச் சிக்கல், கணவன்- மனைவி உறவுநிலைச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், மகப்பேற்றுச் சிக்கல், பேராசையால் ஏற்படும் சிக்கல், தனிமனித ஒழுக்கம் ஆகிய சிக்கல்களுக்கு வள்ளுவர் தம் குறட்பாவின் மூலம் விரிவான முறையில் தீர்வுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்பதை நாம் அறியமுடிகிறது.


by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.