பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். 12 வருடங்களுக்கு ஒருமுறை தைல காப்பு மூலவர் பெருமாளுக்கு பூசப்படுகிறது.ஒருசமயம் மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் பெருமாள் பாம்பணையில் படுத்து நித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க வருகின்றனர்.
அது கண்டு அஞ்சி பூதேவி பெருமாளின் திருவடிக்கருகிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளிந்து கொள்கின்றனர்.பெருமாளின் நித்திரையை கலைக்க மனமில்லாது ஐந்து தலை நாகமான ஆதிஷேசன் தன் வாயிலிருந்து விஷம் கக்கி விரட்டி விடுகிறான்.பெருமாளின் அனுமதியின்றி அவ்வாறு செய்ததற்காக பயந்து இருக்கையில் பெருமாள் என் அனுமதியின்றி செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய் பாராட்டுக்குரிய செயல் என்று கூறியதாக வரலாறு.
இதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தலத்தில் ஆதிசேஷன் தன் தலையை அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சத்தியமூர்த்தி எனும் திருநாமத்துனம் நின்ற திருக்கோலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், ஒரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் மற்றொரு கரத்தில் சங்குடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சத்தியமூர்த்தி பெருமாள் பெயரால் தலம் சத்ய சேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. |