LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- எஸ்.ராமகிருஷ்ணன்

கோணங்கி எனும் மாயக்கதையாளன்

எழுத்தாளன் மண்புழுவைப் போல கிராமத்து மண்ணைத் தின்று ஊர்ந்து திரிய வேண்டும். இருட்டுக்குள் கால் பின்னப்பட்டு நிற்கும் கழுதையின் மௌனம் அவனுக்குப் புரிய வேண்டும். சிம்னி விளக்கை விபூதியால் துடைத்து சுத்தம் செய்வது போல மொழியை அவன் சுத்தம் செய்து ஒளிர வைக்க வேண்டும். அடிவானம்வரை வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு கிராமத்தையும் அவன் சுற்றிவர வேண்டும். நரித்தடத்தில் கால் பதியாதவன் ஒரு போதும் படைப்பாளியாக இருக்க முடியாது. உவர்மண் எடுக்கப் போகும் கழுதைகளோடு சேர்ந்து நாமும் நடந்து போய் வந்தால் மட்டுமே அதை உணர முடியும். கிளியாக இல்லாமல் ஒரு நாளும் மரத்தைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியாது.
இப்படியான கிளர்ச்சியூட்டும் எண்ணங்களை அடுத்தடுத்து சொல்லிக் கொண்டும் இடைவிடாமல் ஊர் சுற்றிக்கொண்டுமிருந்த எழுத்தாளர் கோணங்கியை என் பள்ளியிறுதி வகுப்பின் விடுமுறையில் முதல் முறையாக சாத்தூரில் இருந்த என் தாத்தாவின் வீட்டில் சந்தித்தேன். அவர் என் அண்ணனின் நண்பர். என் மாமாவோடு ஒன்றாக கூட்டுறவு பயிற்சி படித்தவர்.
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து முழுநேரப் பணியாளர் ஆகி மக்களுக்கு சேவை செய்வது என்ற பெருங் கனவுடன் கோணங்கியும் என் அண்ணனும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள்.  அப்போது  கோணங்கியின் பெயர் இளங்கோ. கோணங்கி என்ற அவரது புனைபெயர்  மிக வசீகரமாயிருந்தது. அதைச் சொல்லும் போதே பலர் கிளர்ச்சியடைவதைக் கண்டிருக்கிறேன்.
கோவில்பட்டி அருகில் உள்ள கிராம கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். என் அண்ணன் கல்லூரிப் படிப்பை  முடித்திருந்தார்.  இருவருக்கும்  மக்கள் சேவையின் மீது மிகுந்த அக்கறையும் பிடிப்பும் இருந்தது. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவ புத்தகங்கள் மற்றும் ஜார்ஜ் தாம்சன், மார்க்சிய அழகியல், ஜீலியஸ் பூசிக் என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.
வியப்போடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். புத்தக வாசிப்பில் ஊறிக்கிடந்த எனக்கு அவர்களின் உரையாடலில் கலந்து கொள்ள விருப்பமாக இருக்கும். ஆனாலும் விலகியே இருந்தேன். அந்த நாட்களில் கோணங்கிக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் ஜோதி விநாயகம் மற்றும் தோழர். எஸ்.ஏ.பெருமாள். இருவரையும் அடிக்கடி சந்தித்து தன் திட்டங்களைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். இருவரும் கோணங்கி மீது அளவற்ற அக்கறை கொண்டவர்கள்.
தோழர் எஸ்.ஏ.பெருமாள். ஆங்கில இலக்கியம் படித்தவர் என்பதால்  தீவிர இலக்கியம் அறிந்தவர். தேடித் தேடி உலக இலக்கியங்களை வாசித்தவர். தேர்ந்த பேச்சாளர். கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தார். கோணங்கி அவரைச் சந்திக்க செல்லும்போது கூடவே இருப்பேன். இரவெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ருஷ்யக் கதைகள், அரசியல், வரலாறு எனப் பேச்சு நீளும். அந்தப் பேச்சின் ஆரம்பத்தில் உற்சாகமாகக் கலந்து கொள்ளத் துவங்கிய கோணங்கி சில நிமிசங்களிலே தான் கிராமப் புறங்களில் கண்ட மனிதர்கள் நிகழ்வுகளைப் பற்றி விவரிக்கத் துவங்கிவிடுவார். பேச்சு அப்படியே திசைமாற்றம் கொண்டுவிடும். கோணங்கியின் பேச்சு மிக சுவாரஸ்யமாக இருக்கும். அவர் தன் சொல்லின் வழியே அந்த மனிதர்களைக்  கண்முன்னே உயிருடன் நடமாட விடுவார்.
ஜிப்ஸிகளைப் போல தேர்ந்த நாடோடிக் கதைசொல்லி கோணங்கி என்று எஸ்ஏபெருமாள் மனதாரப் புகழ்வார். ஆனாலும் கோணங்கி தான் ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதைவிட மக்கள் சேவையே முக்கியம் என்று உறுதியாகச் சொல்வார்.
இதற்காகவே சென்னை செல்வது என்று முடிவு செய்து சிலமாதங்கள் சென்னையில் கட்சி ஊழியராகப் பணியாற்றிவிட்டு ஒரு நாள் இரவு கோணங்கி என் அண்ணனைப் பார்க்கத் திரும்பி வந்திருந்தார். தோளில் ஒரு ஜோல்னா பை. அது நிறைய புத்தகங்கள். ஜிப்பா. பேண்ட் அணிந்திருந்தார். 
சென்னை எப்படியிருக்கிறது என்று அண்ணன் ஆர்வமாகக் கேட்டபோது, சென்னைக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் பஸ் வந்து கொண்டிருக்கிறது. எல்லா பஸ் பயணிகளும் நகரின் வெளியே நின்று ஒண்ணுக்கு அடிக்கிறார்கள். ஒரு நாள் யாராவது ஒரு ஆள் ஒண்ணுக்கு அடிக்கும் போது ஒரு சொட்டு மூத்திரம் தரையில் பட்டதும் நகரம் மூழ்கிவிடப்போகிறது பார். சென்னை ஒரு மாபெரும் கழிப்பறை போலிருக்கிறது. அந்த ஊரில் ஆந்தைகளே கிடையாது. காய்ந்து போன நத்தைக் கூடுகள் போலத்தான் வீடுகள் இருக்கின்றன. மனிதர்கள் தூக்கத்திலும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். சுண்ணாம்புக் காளவாசல் போல நகரம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அங்கே போகவே கூடாது என்றார்.
அவர் சொன்னவிதம் யாவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. சென்னையைப் பற்றிய இது போன்ற விவரணை எதையும் நான் முன்கேட்டதேயில்லை. ஆனால் கோணங்கி அராபியக் கதைகளில் வரும் பாக்தாத்தைப் பற்றிச் சொல்வது போல சென்னையைப் பற்றிய வியப்பான கதைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.
சில வாரத்தின் பிறகு ஒரு நாள் வீட்டிற்கு வந்த கோணங்கி சிகரம் இதழில் தனது முதல்சிறுகதை இருட்டு வெளியாகி உள்ளது என்று அண்ணனிடம் படிக்கத் தந்தார். இரவெல்லாம் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அந்தக் கதையைப் படித்து பார்த்தேன். அற்புதமான சிறுகதை அது. நன்றாக இருக்கிறது என்று சொன்னதும் தான் மாயாண்டி கொத்தனின் ரசமட்டம் என்ற ஒரு கதையை எழுதத் திட்டம் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்கும் போது சுவாரஸ்யமாக இருந்தது.
அதன் பிறகு ஒருநாள் மாலையில் சாத்தூரில் உள்ள ஆற்றுப்பாலத்தின் அருகில் நான் நின்று கொண்டிருந்தபோது அருகாமை வீதியில் இருந்து கோணங்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். என்னைப் பார்த்த மாத்திரத்தில் சிரித்தபடியே கையில் ஒரு வெள்ளரிப்பிஞ்சைத் தந்து இந்த வெள்ளரிப்பிஞ்சிற்குள் கொல்ல பட்டி கிராமத்து வெயில் இருக்கிறது. தின்று பார். வெயிலின் ருசி தெரியும் என்றார்.
நானும் அவரும் சாலையில் நின்றபடியே வெள்ளரிப்பிஞ்சைத் தின்றோம். ஒரு டவுன்பஸ் வந்து கொண்டிருந்தது. வா ஏறு என்று சொல்லி அதில் ஏறச்சொன்னார். அதில் ஏறி சாத்தூருக்கு ரெண்டு டிக்கெட் என்று கேட்டார். கண்டக்டர் இதுதானே சாத்தூர் என்றதும் இல்லை இப்படியே சுற்றி சர்ச் பின்னாடி போய் பேருந்து நிலையம் வரை செல்லும் தானே. அதற்கு ஒரு டிக்கெட்  கொடுங்கள் என்றார். அந்தப் பேருந்தில் சாத்தூரில் ஏறி சாத்தூருக்கு டிக்கெட் கேட்ட முதல்ஆட்கள் நாங்கள் தான்.
அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிசங்களில் பேருந்து நிலையம் வந்தது. அவர் எப்படியிருந்தது பார்த்தியா இப்படி வித்யாசமான பயணம் போகவேண்டும் என்றார். அவரது செய்கை  காரணமில்லாமலே எனக்குப் பிடித்திருந்தது.
அதன்பிறகு அவரைப் பார்ப்பதற்காகக் கோவில்பட்டிக்குச் சென்றேன்.  கோணங்கி வீடு  ரயில்வே லைனை ஒட்டிய  இந்திரா  நகரிலிருந்தது. என்னைப்  பார்த்தவுடன்  நீண்ட நாள் பழகியவர் போல அன்போடு கூடவே வைத்துக் கொண்டார்.
மறுநாள் அவர் வேலை செய்யும் கீழஈரால் கிராமக் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குச் சென்றோம். நிறைய வேம்பு அடர்ந்த கிராமம். சிறிய அலுவலகம். அது ஒரு நபர் அலுவலகம் போலும். அதன் வெளியே ஊழியர் இன்று அவசர அலுவல் காரணமாகத் தலைமை அலுவலகம் சென்றிருக்கிறார்  என்ற  பலகை  தொங்கிக் கொண்டிருந்தது. அது எப்பவும் தொங்கிக் கொண்டே தான் இருக்கும். நான் வந்தால் மட்டுமே உள்ளே எடுத்து வைப்பேன் என்றபடியே அந்தப் பல கையை உள்ளே எடுத்து வைத்து விட்டு அருகாமை வீடு ஒன்றிற்குப் போய் ஒரு செம்பில் தண்ணீர் வாங்கி வந்தார்.
தன்னுடைய வேலை கூட்டுறவுக் கடன்களை விவசாயிகளிடம் வசூல் செய்வது என்று சொல்லிவிட்டு என்னையும் அழைத்துக் கொண்டு ஒரு விவசாயி  வீட்டிற்குப்  போனார். அங்கே என்னைக் காட்டி, தலைமை அலுவலகத்தில் இருந்து வசூல் பண்ண வந்திருக்கிறார். ஆகவே வட்டியாவது கட்டிவிடுங்கள் என்று மிரட்டும் குரலில் சொன்னார்.
விவசாயியோ தன் கையில் பணமில்லை என்று சொல்லி, தவணை கொடுக்கும்படியாகச் சொன்னார். அப்போ கோழி அடிச்சி சாப்பாடாவது போடுங்கள் என்றார். அடுத்த சில மணிநேரங்களில் கோழிக் குழம்புடன் சாப்பாடு தயார் ஆனது. எனக்கோ சிரிப்பாக வந்தது. சாப்பிட்டுவிட்டு கயிற்றுக் கட்டிலைப் போட்டு உறங்கினோம். மாலை அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, கோவில்பட்டிக்கு டவுன் பஸ்ஸில் கிளம்பினோம்.
கோணங்கியின் ஆளுமை வியப் பூட்டக்கூடியது. கிராமத்து நினைவுகள் நிரம்பிய மனதும், தீராத புத்தக வேட்கையும் இலக்கற்ற பயணமும் புதிதாக எதையாவது கண்டு அடைய வேண்டும் என்ற ஆதங்கமும் நிரம்பிய படைப்பாளி அவர். தன்னைச் சந்திக்க வருபவர்களுடன் சில  நிமிசங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு விடுபவர். நண்பர்களுக்காக எதையும் செய்யக் கூடியவர். அவரது சட்டை பேனா பை என்று எதை எவர் கேட்டாலும் உடனே தந்துவிடுவார். பருந்தைப் போல அவரும் ஒரு இடத்தில் நில்லாமல் வட்டமடித்துக் கொண்டேயிருப்பார்.
பழைய இசைத்தட்டுகள், புத்தகங்கள்,  கலைப்பொருட்கள்,  புகைப்படங்கள், மைக்கூடு, பேனா, ஹேண்ட் மேட் காகிதங்கள், குதிரையின் கால் எலும்புகள், கூழாங்கற்கள், விதவிதமான ஜோல்னா பைகள் என்று அவர் விசித்திரமான எதைஎதையோ சேகரித்து வந்தபடி இருப்பார்.
அவருக்கு அலுவலக வேலை செய்வதில் விருப்பமேயில்லை. நாடோடியாக அலைவதில்தான் மனம் ஒன்றியிருந்தது. சில வருசங்களில் அந்த வேலையை  விட்டு விலகியும்  விட்டார்.
கோணங்கி வீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தன. எழுத்தாளர் தமிழ் செல்வன் அவரது அண்ணன் என்பதால் அவர் தீபம், கணையாழி, தாமரை என்று இலக்கிய இதழ்களும் சமகால இலக்கிய புத்தகங்களையும் சேகரித்து வைத்திருந்தார்.
கோணங்கியும் தன்பங்கிற்கு தேடித்தேடி புத்தகங்கள் சேகரித்து வருவதாகச் சொன்னார். அப்படிச் சேகரிக்கப்பட்ட புத்தகங்களை தான் யாருக்கும் காட்டுவதில்லை. ரகசியமாக பதுக்கி வைத்திருக்கிறேன் என்று சொல்லி என்னிடம் ஒரு புத்தகத்தைக் காட்டி இது தான் ஆரோக்கி நிகேதனம். மிகச் சிறப்பான வங்காள நாவல் என்றார். 
நான் படிப்பதற்காகச் சில புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டேன். இரு  எடுத்து  வருகிறேன்  என்று வெளியே காத்திருக்க வைத்துவிட்டு அவர் வீட்டின்  உள் அறையில் இருந்த புத்தகச் சுரங்கத்தில் இருந்து மூன்று புத்தகங்களைக் கொண்டுவந்து தந்தார். ஒன்று பிளக்கனோவ் எழுதியது. மற்றது எலியா ஹிரன்பெக் நூல். மூன்றாவது சோசலிச யதார்த்தவாதம்.
கோணங்கி கொடுத்த புத்தகங்கள் ஆயிற்றே என்று அதை மண்டையை உடைத்துக் கொண்டு படித்தேன். ஒரு வரி கூட உள்ளே போகமுடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் குடியிருந்த மல்லாங் கிணறுக்கு கோணங்கி வந்து சேர்ந்தார். இந்தப் புத்தகங்களைப் படிக்கவே முடியவில்லை என்று சொல்லியதும் அவர் சிரித்துவிட்டு நானும் படிச்சதில்லை. யாராவது படிக்கட்டு மேனு வாங்கி வச்சிருக்கேன் என்றார்.
நாங்கள் இருவரும் மல்லாங்கிணற்றின் புறவெளியில் சுற்றியலைந்தோம். வறண்ட கிராமம் அவருக்கு ரொம்பவும் பிடித்திருக்கக்கூடும். அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். உடைந்த பாலத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஆந்தை அருகில் வந்து எங்களைப் பார்த்தபடியே இருந்தது. ஆந்தை பற்றி வியப்போடு பேசினார்.
அவருக்கும் எனக்குமான வயது படிப்பு போன்ற இடைவெளிகளைத் தாண்டி மிகுந்த நெருக்கம் உருவானது. நினைத்த நேரத்தில் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றினோம். கோணங்கியின் அம்மாவும் அக்காவும் போல அன்பைத் தந்தவர்கள் உலகில் இல்லை. எந்த நேரம் வந்தாலும் எங்களுக்குச் சாப்பாடு தந்து சிரித்தபடியே எங்கய்யா போயி ஊரைச் சுத்திவிட்டு வருகிறீர்கள் என்று கேட்பார்கள்.
கோணங்கி வீடுதான் என்னை வளர்த்தது. கோணங்கியின் அப்பாவும் எழுத்தாளர் என்பதால் அவர் எங்களை மிகுந்த அக்கறையுடன் பேசி என்ன எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று கேட்பார். தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்.
கோணங்கியின் தாத்தா மதுரகவி பாஸ்கர தாஸ். அப்பா எழுத்தாளர் சண்முகம். அண்ணன் எழுத்தாளர் தமிழ்செல்வன். தம்பி நாடக இயக்குனர் முருகபூபதி, இப்படிக் குடும்பமே இலக்கியப் பங்களிப்பு நிரம்பியது. இந்தச் சூழல் என்னை மட்டுமில்லை. இன்று வரை பலரையும் படைப்பாளியாக்கியிருக்கிறது. அடர்ந்த ஆலவிருட்சம் போல அவர்கள் வீடு யாவருக்கும் புகலிடமாக இருந்தது.
  
நான் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்த போது என் விடுதி அறையில் கோணங்கி தங்கிக் கொண்டு பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளா இருப்பார். நூலகத்திற்குச் சென்று படித்துவருவார். இரண்டு நாட்களில் அது அலுத்துப் போய்விடும். இருவரும் ஊர்சுற்றக் கிளம்புவோம்.
இருவரிடமும் போதுமான பணம் இருக்காது. ஆனால் அதைப்பற்றிய கவலையின்றிப் பயணம் செய்வோம். எந்தப் பயணமும் முன்திட்டமிட்டதில்லை. எந்த ஊர் பஸ் முதலில் வருகிறதோ அதில் ஏறிக்கொள்வோம்.
ஒருமுறை பேருந்தில் செல்லும்போது வழியில் மயில் தனியே அலைந்து கொண்டிருப்பதைக் கண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மயிலின் பின்னாலே சென்றோம். மயில் ஆடுவதை வேடிக்கை பார்த்தோம். பிறகு வெட்ட வெளியில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பயணம் எங்களுக்கு நிறைய கற்றுத் தந்தது.
குறிப்பாக மனிதர்களின் மீதான நம்பிக்கையையும் அன்பையும் பயணமே வளர்த்து எடுத்தது. முன்பின் அறியாத  மனிதர்களோடு  உறவு கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் அதுவே வழிவகுத்தது.
அதே நேரம் பயணம் எப்போதும் சந்தோஷம் தருவதல்ல. அது தந்த அவமானங்கள், புறக்கணிப்புகள், வெறுப்பு யாவும் கசப்பாக மனதின் ஒருபக்கம் மரப்பிசின் போல ஒட்டிக் கொண்டும் இருக்கிறது.
ஒரு இரவுப் பயணத்தில் வேலூர் அருகே பேருந்து நின்று போனது. மாற்றுப் பேருந்து வரும்வரை அங்கே பேருந்து நின்றது. நானும் கோணங்கியும் யாருமற்று நீண்டு கிடந்த நெடுஞ்சாலையில் படுத்துக் கொண்டோம். எங்களைப் பார்த்து மற்றப் பயணிகள் இறங்கி  வந்து  சாலையில் படுத்துக் கொண்டார்கள். தலைக்கு மேலாக நட்சத்திரம்.  முடிவற்ற ஆகாசம். சீரான காற்று. அந்த இரவு அற்புதமாக இருந்தது.
கோணங்கி எதற்காக நாம் இப்படி அலைகிறோம் என்று கேட்டார். நான் உரத்துச் சொன்னேன்:
“நாம் சனி ஞாயிறு என்று விடுமுறை நாட்களில் கதை எழுதுபவர்கள் அல்ல. தேடி அலைந்து நிலமெல்லாம் சுற்றிக் கதைசொல்பவர்கள். தமிழ்க் கதையுலகினை உலகம் அறிய செய்ய முயற்சிப்பவர்கள். நாடோடிக் கலைஞர்கள்.”
அதைக் கேட்டதும் உற்சாகத்துடன்  எழுந்து  உட்கார்ந்து  கொண்டார். விடியும் வரை இருவரும் கதைகள் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். பைத்திய மனநிலை அது. ஆனால் அதை விரும்பியே நாங்கள் பெற்று வந்தோம்.
கோணங்கிக்கு ரயில் பயணம் மிகவும் பிடித்தமானது. எங்கே கிளம்பினாலும் ரயிலில் போகலாம் என்பார். ரயிலில் அவர் உட்கார்ந்து பயணம் செய்யமாட்டார். ரயிலின் கதவைப் பிடித்தபடியேநின்று கொண்டிருப்பார். கடந்து செல்லும் காட்சிகளின் மீது அத்தனை ஆர்வம். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இறங்கி, கீழே போய் நின்று கொள்வார்.
ஒரு முறை சென்னை செல்வதற்காக இருவரும் வைகை ரயிலில் சென்று கொண்டிருந்தோம். விழுப்புரம் ரயில்நிலையத்தில் வண்டி நின்றது. இறங்கி, தண்ணீர் குடித்துவருவதாகச் சென்றார். ரயில் புறப்படும்வரை வரவேயில்லை. ரயில் கிளம்பி விட்டது. என்னவானார் என்று புரியாமல் திகைத்துப் போனேன். அவர் அந்த ரயிலில் வரவேயில்லை. எங்கே போயிருப்பார் என்று புரியாமல் சென்னையில் சுற்றியலைந்தேன்.
நாலு நாட்கள் பின்பு சென்னையில் ஒரு நண்பர் அறையில் அவரை திரும்ப சந்தித்தேன். எங்கே போனீர்கள் என்றதும் எதிரே வந்த கடலூர் பாசஞ்சர் ரயில் காலியாக இருந்தது. ஆகவே அதில் ஏறிப் போய்விட்டதாகச் சொல்லிச் சிரித்தார். அன்றிரவே நாங்கள் இருவரும் மறுபடி ஒரு திட்டம் போட்டு அடுத்த பயணம் கிளம்பினோம்.
கோணங்கியின் மதினிமார்கள் கதை சிறுகதைத் தொகுதி தமிழின் சிறந்த கதைதொகுதிகளில் ஒன்று. அதில் உள்ள கதைகள் வாழ்வின் ஈரம் நிரம்பியவை. கதை சொல்லும் முறையில் அவர் அற்புதங்கள் நிகழ்த்தியிருப்பார். குறிப்பாக கருப்பு ரயில், கழுதைவியாபாரிகள், மாயாண்டி கொத்தனின் ரசமட்டம் போன்றவை மிகச் சிறப்பான சிறுகதைகள்.
புதுமைப்பித்தனிடம் காணப்படும் நையாண்டி நிறைந்த எழுத்து கோணங்கியிடம் உண்டு. அதுபோலவே கு.அழகிரிசாமியைப் போல கிராமத்து மனிதர்களை உயிரோட்டமாக வார்த்தைகளில் உருவாக்க கோணங்கியால் முடிந்தது. ருஷ்ய இலக்கியம் அவரை ஆழமாக பாதித்திருந்தது. ஆகவே அந்த எழுத்தைப்போல கதாபாத்திரங்களின் தனிமையை, மனவோட்டத்தைத் தன் எழுத்தில் கொண்டு வந்தார் கோணங்கி
இந்தக் கதைகளுக்கு இலக்கியச் சூழலில் மிகுந்த வரவேற்புக் கிடைத்தது. அவரது கொல்லனின் ஆறுபெண் மக்கள் சிறுகதைத் தொகுதியில் உள்ள கைத்தடி கேட்ட நூறு கேள்விகள் தனித்துவமான குறுநாவலாகும். விவசாயக் கடனால் தன் வாழ்வு அழிந்து போன விவசாயி தோளில் குரங்குடன் பிழைக்க வழியில்லாமல் மதுரை டவுன் ஹால் ரோட்டில் அலைவதைப் பற்றிய கதையது. அப்படியொரு விவசாயியை நாங்கள் நேரிலே பார்த்தோம். அது ஆழ்ந்த மனவலி தருவதாயிருந்தது. தன் படைப்பின் வழியே அந்த வலியை வாசகன் உணரும் படியாகச் செய்திருந்தார் கோணங்கி.
தமிழ்நாட்டில் அதிக நண்பர்கள் உள்ள ஒரே எழுத்தாளர் கோணங்கி என்று சொல்வார்கள். அது உண்மை என்பதை நான் அறிந்திருக்கிறேன். வயது வித்தியாசம் பாராமல் பழகக்கூடியவர். அதுபோலவே தான் சந்திக்கச் செல்லும் நபர்களின் வீட்டோடு சிலமணி நேரத்தில் ஒன்றிப் போய்விடக்கூடியவர். இதற்காகவே  அவர் வருகையை எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள்.
அவரது கற்பனையாற்றல் இயல்பாகவே மிகையுணர்வு கொண்டது. ஆகவே அது முடிவற்ற படிமங்களும் உருவகங்களுமாகத் தன்னை வெளிப்படுத்தக் கூடியது. ஆழ்ந்த கவித்துவ நிலைகளை அவரது கதைகளில் காணமுடியும். உரைநடையில் கவித்துவமான தளங்களை உருவாக்கியதில் கோணங்கி ஒரு முன்னோடிக் கலைஞன்.
அதே நேரம் வெகுஜன ஊடகங்களில் தன் படைப்புகள் வெளியாகக்கூடாது என்பதில் அவர் எப்போதுமே கூடுதல் கவனம் கொண்டிருந்தார். ஊடகப் பரபரப்பிற்கு வெளியில் தனித்து இயங்கி தன் அடையாளத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் என்றைக்கும் உள்ளது.
கல்குதிரை என்ற சிற்றிதழை கோணங்கி கொண்டு வந்த போது அதற்காக நானும் அவரும் ஊர் ஊராகச் சென்று படைப்புகள் மொழியாக்கங்கள் பெற்று வந்தோம். குறிப்பாக தஸ்தாயெவ்ஸ்கிக்காக சிறப்பு இதழ் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, தேடித்தேடி படைப்புகள் சேகரம் செய்தோம்.
வெண்ணிற இரவுகள் குறித்த கட்டுரை ஒன்றிற்காக திருச்சியில் பேராசிரியர் ஆல்பர்ட் வீட்டிற்கு ஒருநாள் விடிகாலை நாலு மணிக்குப் போய், கதவைத் தட்டினோம். பின்னிரவின் இருள் படிந்த வீதி. மெலிதான மஞ்சள் வெளிச்சம் கதவின் பின்னால் கசிந்தது. கதவைத் திறந்து ஆல்பர்ட் வெளியே வந்து சிரித்தார்.
நாங்கள் தஸ்தாயெவ்ஸ்கி இதழுக்கான மேட்டர் என்றதும் வாருங்கள் என்று உள்ளே அழைத்துக் கொண்டு போனார். இரவெல்லாம் விழித்து தான் அதை எழுதிக் கொண்டிருப்பதாகவும் இன்னும் இரண்டு மணி நேரம் தந்தால் எழுதி முடித்துவிடுவதாகவும் சொன்னார். நாங்கள் அவரது உழைப்பைக்  கண்டு வியந்தபடியே வெண்ணிற இரவுகள் பற்றி அவர் எழுதியிருந்த கட்டுரையின் முதல் இரு பக்கங்களை வாசித்தோம். மிக நுட்பமாக தஸ்தாயெவ்ஸ்கியை அணுகியிருந்தார்.
அவருக்கு இந்த விடிகாலையில் இலக்கிய வேட்கை கொண்டு வந்திருக்கிறார்களே என்று எங்கள் மீது ஆச்சரியம். அவர் எழுதி முடிக்கட்டும் என்று மறுநாள் வருவதாகக் கிளம்பிப் புதுக்கோட்டைக்குச் சென்றோம். நாங்கள் தேடிச்சென்ற கந்தர்வன் ஊரில் இல்லை. எங்கே தங்குவது என்று தெரியவில்லை. வழியில்லாமல் அன்றிரவு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஒன்றின் வெளியே போஸ்டர்களை எடுத்துப் போட்டுப்படுத்து உறங்கி விடிகாலையில் அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தோம். கையில் காசில்லாமலே ஊர் சுற்ற முடியும் என்ற நம்பிக்கை கோணங்கியிடமிருந்தே நான் பெற்றேன். பசி தூக்கம் போன்றவை பெரிய பிரச்சினைகள் இல்லை என்பதை அவரே கற்றுத் தந்தார்.
சேர்ந்தே பயணம் செய்த போதும் இருவருக்குள்ளும் எந்த நேரமும் பிரிந்து விடுவோம் என்ற மனநிலை இருந்து கொண்டேயிருக்கும். ஒரு  திருமண வீட்டிற்காக இருவரும் இரவுப் பேருந்தில் திருவண்ணாமலை பயணம் மேற்கொண்டோம். வழியில் பேருந்துப் பயணத்தில் மௌனி பற்றிய பேச்சு வந்தது. நான் சில வரிகளைச் சுட்டிக்காட்டி இதற்கெல்லாம் மௌனியைக் கொண்டாட முடியாது என்றேன். அது கோணங்கிக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது.
அடுத்த பேருந்து நிறுத்தத்தில் அவர் இறங்கி தான் சென்னை செல்வதாகக் கிளம்பினார். நான் மதுரை போவதாக வேறு பேருந்தில் ஏறினேன். அந்த இடத்தில் இருவரும் பிரிந்துவிட்டோம்.
கோணங்கியோடு சண்டை போட்டதால் எதற்காக கல்யாண வீட்டிற்குப் போகாமல் இருக்க வேண்டும் என்று நான் தனியே கல்யாண வீட்டினைத் தேடிச் சென்றேன். கல்யாண வீட்டின் வாசலில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தபடியே தேநீர் குடித்துக் கொண்டிருந்தார் கோணங்கி.  என்னைப் பார்த்தவுடன் சிரித்தபடியே உட்காரச் சொன்னார். அவ்வளவு தான் கோபம். மறுபடி  ஒன்றுசேர்ந்து மறுபயணம் என்று சுற்றித் திரிந்தோம்.
இப்படி உறவும் பிரிவுமாக அவருடன் பதினைந்து ஆண்டுக்காலம் சுற்றியிருக்கிறேன். கோணங்கியின் எழுத்து மெல்ல மாறிக்கொண்டிருப்பதை அறியத் துவங்கினேன் பட்டு பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் துவங்கி பாழி, பிதுரா வரையான அவரது எழுத்துகளின் அதீதப் புனை கதையாடல் குறித்து அவரோடு நிறைய விவாதம் செய்திருக்கிறேன்.
அவர் மரபான கதை சொல்லும் முறைக்கு மாற்றாக புதிய கதை சொல்லும் முறையை உருவாக்குகிறார். அது புரியவில்லை என்று தீவிரமாக எதிர்வினை கொள்ளப்படுகிறது. புரியவில்லை என்பதைத் தாண்டி என்ன சொல்ல முயலுகிறது என்று ஆழ்ந்து வாசிக்க முயன்றால் கோணங்கி எவ்வளவு தளங்களை ஒன்றிணைக்கிறார் என்பது புரியக்கூடும்.
சரித்திரம், இசை, தொன்மம், ஓவியம், நுண்கலைகள் பௌத்தம் சமணம், கலோனியல் குறிப்புகள். செவ்வியல் இலக்கியம், என்று அவரது புனைவுகள் பல்தளங்களில் இயங்கக் கூடியது. சிதறுண்ட மனதின் வெளிப்பாடாகவே அவரது கதைகள் உள்ளன. சந்நதம் கொண்ட புராதனக் கதை சொல்லி அவர்.
நவீன ஓவியங்களின் மீது அதிக ஈடுபாடு அவருக்கு உண்டு.  லண்டன் பயணம் மேற்கொண்ட போது அங்குள்ள ம்யூசியம்களை, கண்டதை விரிவாக அவர் பேசிய போது அது அரிய பதிவாக இருந்தது.
அவரது சமீபத்திய சிறுகதைகள் நினைவுகளை சிதறடித்து பல்வேறு சங்கேத சரடுகளால் ஒன்றிணைந்தவை. அதை ஒரு கணிதப்பின்னல் போன்றே கருத வேண்டியிருக்கிறது. கதை சொல்லும் மொழியை பெரிதும் படிமங்களாகவே மாற்றியிருக்கிறார். அது போலவே கதை என்பது குறித்த தனது புரிதல்களையும் கதை மொழியிலே தருகிறார்.
இந்தக் கதைகளை நாம் வழக்கமான கதைகள் போல திரும்பச் சொல்ல முடிவதில்லை. அதனால் பலநேரம் அதை வாசிக்க இயலாமல் போகிறோம். கோணங்கியின் மொழியும் அதில் வெளிப்படும் அற்புதப் பிரயோகங்களும் தமிழ் உலகிற்குப் புதியது. அதன்மீதுள்ள விமர்சனத்தை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு அந்தக் கதையாடலின் ஆழத்தை நாம் கட்டாயம் கவனம் கொள்ளவே வேண்டும்.
கல்குதிரை இதழ்களின் வழியே உலக இலக்கியம் குறித்து தமிழில் ஆழமான பதிவுகளை முன்வைத்த கோணங்கி, தன் படைப்பாற்றல் மட்டுமின்றி, தனித்து இயங்கி ஒரு இலக்கிய இயக்கம் போலவே செயல்பட்டிருக்கிறார்.
அவர் நடத்தும் இலக்கியக் கூட்டங்கள் மாறுபட்டவை. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றின் வெளியீட்டினை அவர் மதுரையில் இருந்து போடி வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் நடத்தினார். வாசகர்கள் அனைவரும் ரயிலின் ஒரு பெட்டியில் ஒன்று சேர்ந்து பயணித்து வழி முழுவதும் இலக்கியம் பேசினோம். அதுபோலவே இன்னொரு கூட்டத்தை பாண்டவர்மலையின் உச்சியில் இரவில் நடத்தினார்.  நவீன இலக்கியம் குறித்து கிராமப்புறங்களில் கூட்டம் நடத்திய முன்னோடி எழுத்தாளர் கோணங்கியே.
நானும் அவரும் ஒன்றாக எழுத்தாளர்களைத் தேடித்தேடிச் சந்தித்தோம். இலக்கில்லாமல் பயணம் மேற்கொண்டோம். பேருந்து நிலைய கழிப்பிடங்களில் குளித்துக் கொண்டு கதர்க்கடைகளில் மாற்றுடை வாங்கி அணிந்தபடியே மாநிலம் மாநிலமாகச் சுற்றியலைந்தோம். நூலகங்களைத் தேடிச்சென்று புத்தகங்களை வாசித்தோம். திருடி வந்தோம். அறிந்தவர் அறியாதவர் என யாவர் வீட்டிலும் தங்கினோம். கால்கள் போன படியே சுற்றியலைந்தோம். அவரவர் மனப்போக்கில் எழுதினோம்.
அவரது தொடர்ந்த உந்துதலே என்னை எழுத்தாளன் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தது. என் கதைகளின் தீவிர விமர்சகர் அவர். அதே நேரம் என் எழுத்தின் மீது எப்போதுமே அக்கறை கொண்டவர். அவரது படைப்புகள் குறித்து விமர்சனம் கொண்ட போதும் அவர் கதை சொல்லும் முறையில் அதிக ஈடுபாடு கொண்டவன் நான். கவித்துமான உரைநடையை கோணங்கி போல யாராலும் எழுதமுடியாது .
சென்னைக்கு நான் இடம்மாறி வந்த பிறகு அவரோடு சேர்ந்து சுற்றுவது குறைந்து போனது. ஆனாலும் சந்தித்த நேரங்களில் இருவரும்  எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு பயணம் கிளம்பிவிடுவது இன்றும் சாத்தியமாகவே உள்ளது.
சமீபத்தில் கோணங்கியின் மொத்த சிறுகதைகள் சலூன் நாற்காலியில் சுழன்றபடி அடையாளம் வெளியீடாக வந்துள்ளது. அதைத் திரும்பப் படித்த போது கோணங்கியும் நானும் சுற்றிய நாட்களின் ஈரம் மாறாமல் அப்படியே இருப்பதை உணர முடிந்தது.
சென்னையில் நாகர்ஜுனன் வீட்டில் கழித்த நீண்ட பகலிரவுகள், திருவண்ணாமலை பவா  செல்லதுரையோடு இலக்கியம் பகிர்ந்து கொண்ட நாட்கள், நகுலன்  வீடு,  பிரமீள் சந்திப்பு, நெய்வேலி ராமலிங்கத்தின் அன்பான நட்பு,  பத்தமடையில் உள்ள  தமிழ்செல்வன் வீட்டில் ஜோதி விநாயகத்துடன் பேசிய பேச்சுகள். மதுரை லோகு பாபு சுந்தர் சுபகுண ராஜனுடன் சுற்றிய வெயிலேறிய பகல்பொழுதுகள். ஏதோ ஊர்களில் எங்களுக்கு அடைக்கலம் தந்து உணவளித்த  நண்பர்களின் வீடுகள்.  சூறைக்காற்றைப் போல நினைவுகள் சுழல்கின்றன. 
புரிகிறது புரியவில்லை என்ற தடுமாற்றங்களைத் தாண்டி கோணங்கி தனக்கெனத் தனியான கதைமொழியும் கதைசொல்லும் திறனும் கொண்டவர். அவர் கையாண்ட விஷயங்களை வேறு எவரும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. அவரது கதைகளை மொத்தமாக வாசிக்கும் போது பெரிதும் வியப்பாக இருக்கிறது. மொழியின்  தீவிர  தளங்களை  அவர்  எவ்வளவு அநாயாசமாகத் தொட்டிருக்கிறார் என்று புரிகிறது..
பிராயத்தில் துவங்கிய கோணங்கியின் நட்பு இன்றும் வலிமையுடையதாக இருக்கிறது. முகமறியாதவர்களுடன்  தன்னைப் பகிர்ந்து கொள்ளப் பேரன்பு வேண்டும். அது கோணங்கியிடம் நிறையவே இருக்கிறது. அது தான் அவரை இன்றும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
கோணங்கி என்ற நித்யபயணி தன் எழுத்தின் வழியிலும் இயல்பிலும் மாயக்கதையாளனாகவே இருக்கிறார். பேக்பைப்பரின் இசைகேட்டு எலிகள் பின்னால் சென்றது போன்ற ஒரு மாயம் அவரிடமிருக்கிறது. அவரது எழுத்து செவ்வியல் இசை போல புராதனமானது. எவரையும் வசீகரம் செய்யக்கூடியது. திருமணம் செய்து கொள்ளாமல் முழுநேரப் படைப்பாளியாக அவர் கொண்ட சமரசமற்ற இலக்கிய ஈடுபாடு இன்றைக்கும் கோணங்கியை நோக்கி இளம்படைப்பாளிகளை வரச்செய்தபடி உள்ளது.
இன்றும் ஏதோ நகரில் யாரோ அறியாத நபரின் தோளில் கைபோட்டபடியே கோணங்கி சென்று கொண்டிருக்கக்கூடும். இன்றோ நாளையோ அவர் உங்களைத் தேடி வந்து ஸ்நேகிக்கக் கூடும். சகமனிதன் மீது அன்பும் அக்கறையும் கொள்வதே கலையின் ஆதார நோக்கம். அதைத் தன் தினசரி நடவடிக்கையாகக் கொண்டிருப்பதே கோணங்கியின் தனிச்சிறப்பு.

by Swathi   on 08 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
யானையும் மூப்பனும் யானையும் மூப்பனும்
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.