LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- பழமொழி

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

பழமொழி: ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

 

தற்போதைய பொருள்: ஒரு ஊரைச் சேர்ந்த மக்கள் இரண்டு பிரிவானால் கூத்தாடிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவர்.

தவறு:
முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இந்த தொடர் ஒரு பழமொழியே அல்ல; ஒரு விடுமொழி என்னும் உண்மையை. விடுமொழி என்றால் என்ன என்று காணும் முன்னர் இத்தொடருக்கு கூறப்படும் தற்போதைய பொருள் எவ்வாறு தவறாகும் என்று பார்ப்போம். பொதுவாக ஒரு ஊர் என்றாலே

 அங்கே பலதரப்பட்ட மக்களும் வாழ்வார்கள். ஒரே ஊரில் வாழ்ந்தாலும் இம் மக்கள் சாதி, மதம், பொருளாதாரம் மற்றும் மொழி போன்றவற்றால் மற்றவர்களிடமிருந்து பிரிந்தே வாழ்கின்றனர். மனிதர்களுடைய இந்தப் பிரிவினை எண்ணங்களை தனக்குச் சாதகமாக இன்றுவரையில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது யாரென்றால் அது அரசியல்வாதியாகத் தான் இருக்கும். இந்த அரசியல்வாதிகளின் வேலை மக்களைப் பிரிப்பது அல்ல; ஏற்கெனவே பிரிந்திருக்கும் மக்களை எக்காரணம் கொண்டும் ஒன்றுசேர விடாமல் தடுப்பதே ஆகும். ஏனென்றால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் அது மிகப் பெரிய ஆற்றலாகிவிடும். அந்த ஆற்றலை எதிர்த்து நிற்க எந்த அரசியல்வாதியாலும் முடியாது. இறுதியில் அரசியல்வாதிகள் மண்ணைக் கவ்வ நேரிடும். அதனால் தான் அரசியல்வாதிகள் அனைவரும் மக்கள் ஒற்றுமையாகக் கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இது நாம் அனைவரும் நன்கு அறிந்த நடைமுறை உண்மை.
இப்போது பழமொழிக்கு வருவோம். ஒரு ஊர் எப்போது ஏன் இரண்டு படும்?. மேலே நாம் கண்ட சாதி, மதம், பொருளாதாரம், மொழி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு/பல காரணத்தின்/ காரணங்களின் அடிப்படையில் ஊர்மக்கள் இரண்டாகலாம்; மூன்றாகலாம்; நான்காகலாம்; இன்னும் எவ்வளவோ பிரிவுகளாகலாம். இதை யாரும் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. சாதி மத அடிப்படையிலான பிரிவினை எண்ணம் என்பது மக்களின் குருதியில் வேரூன்றிப் போய்விட்டது. நமது முன்னோர்கள் எவ்வளவோ முயன்றும் பிரிவினை எண்ணத்தை அகற்றுவதில் முழுவெற்றி அடைய முடியவில்லை. திருமணம் தொடங்கி அரசாங்க வேலை வரையிலும் இன்று சாதி மதப் பேய்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இப்படி ஏற்கெனவே சாதி மதப் பாகுபாட்டால் பலவாறாகப் பிளவுபட்டுக் கிடக்கும் மக்களை ஏன் இரண்டாக்க வேண்டும்?. அதுமட்டுமின்றி இது சாத்தியமும் அல்ல; ஏனென்றால் ஒற்றுமையாக இருப்பவர்களைத் தானே பிரிக்க முடியும்?. எனவே 'ஊர்மக்கள் இரண்டு பிரிவானால்' என்ற விளக்கமே தவறு என்பதை உணரலாம்.
இனி 'கூத்தாடிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி' என்பது எவ்வாறு தவறு என்பதை ஆராயலாம். அதற்குமுன் இங்கே ஒரு உண்மைக் கதையினையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு ஊரில் ஒரு சாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்துவந்த படியால் இவ் ஊரில் ஒரே ஒரு அம்மன் கோவில் மட்டுமே இருந்து வந்தது. ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இக் கோவிலுக்குத் திருவிழா நடத்தி கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து வந்தனர். ஒருமுறை ஊர்த்தலைவரின் மகன்களுக்குள் நிகழ்ந்த பிணக்கு காரணமாக அவ் ஊர்மக்கள் இரண்டு பிரிவானார்கள். இந் நிலையில் அவ் ஊரில் திருவிழாவும் வந்தது. அப்போது இந்த இரண்டு பிரிவினருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு பல மண்டைகள் உடைய கலைநிகழ்ச்சிகள் நடத்த வந்திருந்த கூத்தாடிகள் உயிர் பயத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர். இப்போது சொல்லுங்கள் இந்த ஊர் இரண்டு பட்டதால் கூத்தாடிகள் திண்டாடினார்களா இல்லை கொண்டாடினார்களா என்று. பெரும்பாலான சிற்றூர்களில் இப்படித் தான் நடக்கிறது. சில சிற்றூர்களில் ஒரு பிரிவினர் அமைதியுடன் விட்டுக் கொடுக்க ஆண்டுதோறும் அங்கே எப்போதும்போல திருவிழாக்கள் நடக்கிறது. இதில் கூத்தாடிக்கு எங்கே இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கிறது?. அதுமட்டுமின்றி பழமொழியில் ' கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்று தான் சொல்லப்பட்டுள்ளது. கொண்டாட்டம் என்றால் 'இரட்டிப்பு மகிழ்ச்சி' என்று வலிந்து பொருள் கொள்வது தவறே ஆகும். இதிலிருந்து இப் பழமொழிக்குக் கூறப்படும் மேற்காணும் பொருளானது முற்றிலும் தவறானது என்பது தெரிய வருகிறது.

திருத்தம்:
மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். அது என்ன? ' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் 'பல்லும் நாக்கும்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

நிறுவுதல்:
விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான 'அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?' போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே 'விடுமொழிகள்' என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன.

'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.'
'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.'
'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'

இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு 'பல்லையும் நாக்கையும்' குறிக்கும் என்று பார்ப்போம். மனிதரின் வாய்க்குள் பற்கள் இரண்டு வரிசைகளாக (மேல், கீழ்) 32 எண்ணிக்கையில் அமைந்தவை என்பதை நாம் அறிவோம். பொதுவாக நாம் வாய் மூடி இருக்கும்போது இந்த இரண்டு வரிசைப் பற்களும் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டு ஒரு குழுமமாக இருக்கும். அப்போது இந்தப் பற்களுக்குப் பின்னால் உள்ள நாக்கோ மிக அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும். இங்கே இந்த நாக்கு தான் கூத்தாடி ஆகும். இரண்டு வரிசைகளிலும் உள்ள 32 பற்களின் ஒருங்கிணைந்த குழுமம் தான் ஊர் ஆகும். இந்த ஊர் இரண்டாகும்போது அதாவது மேல்வரிசையும் கீழ்வரிசையும் பிரிந்து வாய் திறக்கும்போது இந்த நாக்கு ஆகிய கூத்தாடி ஆடத் துவங்கிவிடும். அதன் ஆட்டம் பேசுவதற்காகவோ உணவைச் சுவைப்பதற்காகவோ வேறு எதற்காகவோ இருக்கலாம். ஆக மொத்தம் பற்குழுமம் ஆகிய ஊர் இரண்டு பட்டால்தான் நாக்கு ஆகிய கூத்தாடிக்குக் கொண்டாட்டமாக இருக்கும். இந்த நடைமுறை உண்மையினை உருவகமாக்கி அழகான ஒரு விடுகதையாகப் புனைந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இந்த விடுகதையே நாளடைவில் தனது 'அது என்ன?' என்ற கேள்வித்தொடரினை இழந்து பழமொழியாகி விட்டது.
by Swathi   on 05 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை. தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை.
தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா? தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா?
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.