சிகாகோ நகரில் ஐந்தாவது உலகத்திருக்குறள் மாநாடு

  • Venue
    • சிகாகோ
    • சிகாகோ
    • Illinois
    • USA
  • Organizer

    சிகாகோ தமிழ்ச்சங்கம், ஆசியவியல் நிறுவனம் (சென்னை) மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்

    • malar@thirukkuralconference.org
Events Schedule
DATE TIMINGS
05 Apr 2024 09.00am
06 Apr 2024 09.00am
07 Apr 2024 09.00am

பேரன்புடையீர்,

வணக்கம். சிகாகோ நகரில் ஐந்தாவது உலகத்திருக்குறள் மாநாடு வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5,6,7 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என்ற இனிய செய்தியை உங்களுக்குத் தெரிவிப்பதிலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் உங்களைக் கலந்து கொள்ள அழைப்பதிலும் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

மனித வாழ்வியல் சார்ந்த உலகப் பொது அறம் பேசும் உலகளாவிய நூல் திருக்குறள் என்பதைத் தக்க ஆதாரங்களின் அடிப்படையில் பிறநாட்டு நல்லறிஞர்களோடு இணைந்து ஆய்வு பூர்வமாக உலகுக்குப் பறை சாற்றுவதே இந்த உலகத் திருக்குறள் மாநாடுகளின் குறிக்கோளாகும்.

முக்கடலும் சங்கமிக்கும் குமரிக்கடலில் ஓங்கி உயர்ந்து பெருமிதத்துடன் நிற்கும் திருவள்ளுவரின் திருவுருவத்தைப் பெற்ற குமரி மாவட்டம் சார்ந்த நாகர்கோவிலிலும், இயற்கை எழில் கொஞ்சும் இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் மாநகரிலும், எழில்மிக்க ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும், இந்தியத் திருநாட்டின் தலைநகரான புதுதில்லியின் யுனொஸ்கோ அரங்கிலும் நான்கு உலகளாவிய மாநாடுகளைக் கண்ட தமிழ்ச் சமுதாயத்தின் ஒப்பற்ற பேரிலக்கியமான திருக்குறள் அதன் அறக்கருத்துக்களின் மாண்பை உலகளாவிய நிலையில் நிலை நிறுத்தும் வண்ணமாகத் தன் ஐந்தாவது மாநாட்டினை சிகாகோ நகரத்தில் நடத்தும் நல்வாய்ப்பினை இப்போது பெற்றுள்ளது.

திருக்குறளை உலகப் பொது நூலாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிப்பதற்குரிய முயற்சிகள் 2016 வாக்கில் ஆசியவியல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டன. 2016-ஆம் ஆண்டு மொரிசியசு நாட்டில் இத்திட்டம் திருக்குறள் குறித்த ஒரு தேசியக் கருத்தரங்கு வடிவில் தொடங்கப்பட்டது. திருக்குறள் உலகப் பொதுவறம் பேசும் உலகு தழுவிய பொது நூலாக அமைவது குறித்து இக்கருத்தரங்கில் விரிவாக ஆராயப்பட்டது. இதனை மேலும் பன்னாட்டு அறிஞர்களோடு இணைந்து ஆராய்ந்து நிலைநாட்டும் குறிக்கோளுடன் முதல் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நாகர்கோவிலில் 2017-ஆம் ஆண்டு நடத்தப் பெற்றது.

தமிழக எல்லைகளைத் தாண்டி, உலகம் முழுவதும் திருக்குறள் பயணம் செய்த வியத்தகு செயலைப் பல்வேறு நாட்டறிஞர்களின் துணையோடு ஆராய்ந்து வெளிக் கொணர தமிழக எல்லைகளுக்கு அப்பால் திருக்குறள் (Thirukkural beyond the frontiers of Tamil India) என்ற தலைப்பில் 2018-இல் இங்கிலாந்து நாட்டிலுள்ள லிவர்பூல் மாநகரில் இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடத்தப் பெற்று, 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்தோர் தத்தம் மொழிகளில் திருக்குறள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஆராய்ந்தனர்.

உலக அமைதி, சமுதாய நல்லிணக்கம் ஆகியன தொடர்பான கோட்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபை, யுனெஸ்கோ நிறுவனம் ஆகியவற்றின் உயிர் மூச்சாக அமைவன. இத்தகையப் பொருண்மை திருக்குறளின் அடிப்படைக் கோட்பாடாகவும் இயக்கு சக்தியாகவும் அமைவதை ஆய்ந்து நிறுவ இரண்டு அனைத்துலக மாநாடுகள் ஆஸ்திரேலியா நாட்டிலும் இந்திய நாட்டின் தலைநகரான தில்லியிலும் நடத்தப்பட்டன. தில்லியில் நடந்த மாநாடு யுனொஸ்கோ கலையரங்கில் யுனொஸ்கோ இயக்குநரின் முன்னிலையில் நடந்தது. உலக அமைதி குறித்து உயராய்வு மேற்கொள்ளும் பாலஸ்தீன நாட்டைச் சார்ந்த பேராசிரியர் அபுகெடன், சீன நாட்டு உலக அமைதி மற்றும் நல்லிணக்க நிறுவனத் தலைவர் பேராசிரியர் டென்னிஸ் போன்ற ஏறத்தாழ 70 பேர் வழங்கிய ஆய்வுரைகள் இம்மாநாட்டில் அரங்கேறின.

இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் 5, 6, 7 ஆகிய நாட்களில் வட அமெரிக்காவிலுள்ள சிகாகோ தமிழ்ச் சங்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் அமெரிக்கப் பிரிவு, சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனம் ஆகியவற்றின் இணைந்த முயற்சியாக ஐந்தாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் திருக்குறளோடு பிறமொழிகளில் தோன்றிய பல்வேறு அறநூல்கள் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களால் பல்வேறு கோணங்களில் ஒப்பிட்டு ஆராயப்படும். இத்தகைய ஒப்பீட்டு ஆய்வின் மூலம் திருக்குறளின் தனித்தன்மை தக்க தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து நிலைநாட்டப்படுவதோடு திருக்குறளின் உலகளாவிய பரந்த தகுதிப்பாடும் அனைத்துலக அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் நிலைநாட்டப் பெறும்.

ஆய்வுத் தலைப்புக்கள் / களங்கள்
1. திருக்குறளும் பகவத் கீதையும்
2. திருக்குறளும் அர்த்த சாஸ்திரமும்
3. திருக்குறளும் காமசூத்திரமும்
4. திருக்குறளும் மனுஸ்மிருகுதியும்
5. திருக்குறளும் தம்மபதமும்
6. திருக்குறளும் பௌத்தமும்
7. திருக்குறளும் சமண அறக்கோட்பாடுகளும்
8. திருக்குறளும் ஆசீவகமும்
9. திருக்குறளும் திருவிவிலியமும்
10. திருக்குறளும் கிறித்தவமும்
11. திருகுறளும் திருக்குரானும்.
12. திருக்குறளும் சைவமும்
13. திருக்குறளும் வைணவமும்
14. திருக்குறளும் பிளேட்டோவும்
15. திருக்குறளும் அரிஸ்டாட்டிலும்
16. திருக்குறளும் ஸ்டாயிக் தத்துவமும்
17. திருக்குறளும் லுக்ரீசியசும்
18. திருக்குறளும் ஷேக்ஸ்பியரும்
19. திருக்குறளும் லியோ டால்ஸ்டாயும்
20. திருக்குறளும் செனேகாவும்
21. திருக்குறளும் மாக்கியவல்கியும்
22. திருக்குறளும் கன்பியூசியசும்
23. திருக்குறளும் லாசியசும்
24. திருக்குறளும் மென்சியசும்
25. திருக்குறளும் ஹீசியாடும்
26. திருக்குறளும் பாபிலோனிய அறக்கோட்பாடுகளும்
27. திருக்குறளும் எகிப்திய அறக்கோட்பாடுகளும்
28. திருக்குறளும் பர்சிய அறக்கோட்பாடுகளும்
29. திருக்குறளும் மார்கஸ் அருலியசும்
30. திருக்குறளும் ஐரோப்பிய இறைத் தொண்டர்களும்
31. திருக்குறளும் ஆல்பர்ட் சுவைசரும்
32. திருக்குறளும் இம்மானுவேல் காண்டும்
33. திருக்குறளும் ஸ்பினோசாவும்
34. திருக்குறளும் பிரான்சிஸ் பேகனும்
35. திருக்குறளும் மகாத்மா காந்தி உள்ளிட்ட அரசியல் ஆளுமைகளும்
36. திருக்குறளும் உருசிய நாட்டு அறிஞர்களும்
37. திருக்குறள் குறித்து ஜப்பானிய கொரிய நாட்டு அறிஞர்கள்
38. திருக்குறள் குறித்து ஏனைய பிற பன்னாட்டு அறிஞர்கள்
39. திருக்குறளும் ஜப்பானிய டெட் சுகுகாக்குவும்
40. திருக்குறளும் தற்கால எழுத்தாளர்களும்
41. திருக்குறளும் அயலகத் தமிழர்களும்
42. திருக்குறளில் ஒப்பாய்வு
43. உலகுதழுவிய அன்பு (Cosmic love) குறித்து திருக்குறளும் மேலைநாட்டு இலக்கியங்களும்
44. திருக்குறள் கண்ட சான்றோனும் இலட்சியமாந்தர் குறித்த பிற செவ்வியல் இலக்கியப் படைப்புக்களும்

மாநாட்டில் ஆய்வுரை வழங்க விழைவோர் மேற்கூறிய தலைப்புக்களோடு அல்லது ஆய்வுக்களங்களோடு தொடர்புடைய அல்லது மாநாட்டுப் பொருண்மைக்கு வலு சேர்க்கும் பிற தலைப்புக்களிலும் ஆய்வுரை வழங்கலாம். ஆய்வுரைகள் கீழ்க்கண்ட அணுகுமுறைகளைத் தழுவி பன்முக நோக்கில் ஒப்பியல் பார்வையுடன் அமைய வேண்டும்.

1. சமயக் கோட்பாடுகளின் வளர்ச்சி நிலை குறித்த நோக்கு
2. இலக்கிய நோக்கு
3. பொருளியல் பின்னணி குறித்த பார்வை
4. அரசியல் நோக்கு
5. ஆண் பெண் பாகுபாடு குறித்த சமூக நோக்கு
6. சமுதாய வளர்ச்சி குறித்த பன்முக நோக்கு
7. தத்துவ நோக்கு
8. அறக்கோட்பாடுகளின் வளர்ச்சி தொடர்பான பார்வை
9. வரலாற்று நோக்கு
10. உளவியல் நோக்கு

கட்டுரைத் தலைப்போடு கட்டுரைச் சுருக்கத்தினை அனுப்ப வேண்டிய இறுதி நாள் 15 டிசம்பர் 2023.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் 31 ஜனவரி 2024.


சிகாகோ நகரில் ஐந்தாவது உலகத்திருக்குறள் மாநாடு