LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

திருக்குறள் உரைகள் - முனைவர் தெ.ஞானசுந்தரம்

தமிழிலக்கியங்களில் மிகுதியாக உரை வரையப்பட்ட பெருமைக்குரிய நூல் திருக்குறள். அதற்குத்

தருமர்
மணக்குடவர்
தாமத்தர்
நச்சர்
பரிமேலழகர்
பரிதி
திருமலையர்
மல்லர்
பரிப்பெருமாள்
காளிங்கர்
ஆகிய பத்துபேர் உரையெழுதினர் என்று பழைய வெண்பா ஒன்று தெரிவிக்கிறது.

அவற்றுள்;
பரிமேலழகர்
மணக்குடவர்
பரிப்பெருமாள்
பரிதியார்
காளிங்கர்
ஆகிய ஐவர் உரைகள் கிடைத்துள்ளன.

மணக்குடவர் உரை இயல்பாகவும் எளிமையாகவும் அமைந்துள்ளது.
பரிப்பெருமாள் உரை பெரிதும் மணக்குடவரைச் சொல்லிலும் பொருளிலும் தழுவிச் செல்வது.
பரிதியார் உரை பல இடங்களில் நூலறுந்த காற்றாடிபோல் மூலத்தோடு தொடர்பில்லாமல் தனித்து நிற்பது.
காளிங்கர் உரை நல்ல நடையழகோடு அமைந்திருப்பது.
பரிமேலழகர் உரை செறிவும் நுண்மையும் இலக்கணத் திட்பமும் உடையதாய் இருப்பது.
இப்பழைய உரைகளில் பரிமேலழகர் உரையே தனிச்சிறப்போடு திகழ்கிறது. அதனை மூலநூலுக்கு இணையாகப் போற்றுவோரும் உண்டு.

சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் திருக்குறளுக்கு வந்துள்ள உரைகள்தாம் எத்தனை! எத்தனை!
நாகை தண்டபாணிப்பிள்ளை
தேவநேயப்பாவாணர்
போன்றோர் புலமையுரை கண்டனர்.
கா.சு.பிள்ளை
மு.வரதராசனார்
இரா.சாரங்கபாணி
போன்றோர் எளியவுரை படைத்தனர்.

வ.உ.சி.
நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை
போன்றோர் காந்தியப் பார்வையில் உரை வடித்தனர்.
கலைஞர் கருணாநிதி
நாவலர் நெடுஞ்செழியன்
போன்றோர் பகுத்தறிவுப் பார்வையில் உரை தந்தனர். பொதுவுடைமைப் போக்கிலும் சமயநோக்கிலும் எழுதப்பட்ட உரைகளும் உண்டு. இவ்வுரைகளில் பலவற்றுள் திருவள்ளுவரின் முகம் தெரியவில்லை. உரையாசிரியர்களின் முகங்களே தெளிவாகத் தெரிகின்றன.

கோ.வடிவேலுச்செட்டியார்
வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்
போன்றோர் தாம் பதிப்பித்த பரிமேலழகர் உரையில் இலக்கண இலக்கிய நுட்பங்காட்டும் அரிய குறிப்புரை படைத்தனர்.

டாக்டர் மு.வ அவர்களின் கையடக்க உரைப்பதிப்பினையொட்டி வெளிவந்துள்ள அவ்வகைப் பதிப்புக்குக் கணக்கில்லை. இன்னும் வந்துகொண்டே இருக்கிறது.
பன்மொழிப்புலவர் அப்பாதுரையார்
திரு.வி.க
போன்றோர் விரிவாக எழுதியுள்ள உரைகள் தொடங்கிக் குறளினும் சுருக்கமாக வந்துள்ள திரு.வெற்றிவேலின் ஒரு வரி உரை ஈறாக அமைந்துள்ள உரைகள் கற்பாரை வியப்பில் ஆழ்த்துகின்றன.

இவை தவிரக் திருக்குறள் குறித்துப் பல்வேறு நோக்கில் வந்துள்ள நூல்களுக்கு அளவில்லை. அவற்றுள்;
திருமணம் செல்வக்கேசவராய முதலியாரின் திருவள்ளுவர்
அறிஞர் வ.சு.ப.மாணிக்கனாரின் வள்ளுவம்
மு.வரதராசனாரின் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்
கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் திருக்குறள் புதைபொருள்
அறிஞர் வா.செ.குழந்தைசாமியின் வாழும் வள்ளுவம்
போன்றவை புதிய ஒளி வழங்கும் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் எந்த வகையிலேனும் திருக்குறள் தொடர்பான நூல் படைப்பதில் தணியாத ஆர்வம் உடையவர்களாக விளங்குகிறார்கள். இப்போக்கு மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், பெரும்பாலான உரைகள் முன் வந்த உரைகளையே பெரிதும் சார்ந்து உரையாசிரியர்களின் பங்களிப்பு ஏதுமின்றி காணப்படுகின்றன.

எந்தப் போக்கில் அமைந்த உரையாக இருந்த போதிலும் அதில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் பரிமேலழகரின் உரை பின்பற்றப்பட்டிருத்தல் காணலாம். ஒரு சிலவற்றிலேயே புதிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பரிமேலழகரை நச்சுக்கருத்துகளை விதைத்தவர் என்று குற்றஞ் சுமத்தும் அறிஞர் தேவநேயபாவாணர்கூட அவருடைய பதசாரங்களையும் நுட்பவுரைகளையும் அங்கங்கே அப்படியே ஏற்றுத் தனித்தமிழ்ப்படுத்திப் போற்றிக்கொள்வது காணலாம்.

ஒரு குறளுக்குப் பல பொருள் சொல்லப்படும்போது எது சரியான பொருள் என்பதைத் தெளிய வேண்டிய அவசியம் நேரிடுகிறது. இந்த முயற்சியில் ஈடுபட்டுப் பண்டைய உரைகளோடு பின் வந்த உரைகள் பலவற்றையும் ஒப்பநோக்கி, அவற்றில் நிலவும் உரை வேற்றுமைகளை ஆய்ந்து தம்முடிபினைத் தந்து "திருக்குறள் உரை வேற்றுமை" என்னும் நூலை முனைவர் இரா. சாரங்கபாணி உருவாக்கியுள்ளார். பல தெளிவுகளைத் தருவது அந்நூல். இத்தனை முயற்சிக்குப் பின்னும் சில குறட்பாக்கள் பெரும்பாலோர் தெரிவிக்கும் விளக்கத்துக்கு வேறான புதிய விளக்கம் காண்பதற்கு இடம் அளிக்கின்றன.

பண்டைய உரையாசிரியர்களையும் இன்றைய அறிஞர்களையும் மயங்கச் செய்யும் குறள்களில் ஒன்றாக அமைச்சு அதிகாரத்தின் இரண்டாவது குறள் அமைந்துள்ளது. அமைச்சர்க்கு இருத்தற்குரிய இயல்புகளைத் தெரிவிக்கும் அக்குறள்:


"வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்ட தமைச்சு." (632)

என்பதாகும்.

இதில் முதலடியில் நான்கு பண்புகளே குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இரண்டாம் அடியில் ஐந்து என்னும் தொகைச்சொல் இடம்பெற்றிருக்கிறது. இந்த வேறுபாடு பொருள் காண்பதில் இடரைத் தோற்றுவித்துள்ளது.
இக்குறளில் ஐந்து தன்மைகள் குறிக்கப்படுவதாகக் கொண்டு பண்டைய உரையாசிரியர்கள் உரைகண்டுள்ளனர். மணக்குடவர் குடிகாத்தல் என்பதைக் குடி என்றும், காத்தல் என்றும் இரண்டாகப் பிரித்து, ஏனையவற்றோடு சேர்த்து, "அஞ்சாமையும் குடிகாத்தலும் இந்திரியங்களைக் காத்தலும் நூன்முகத்தான் அறிதலும் முயற்சியும் என்னும் ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சன் ஆவான்," என்று உரையிட்டுள்ளார். பரிப்பெருமாளும் காளிங்கரும் இக்கருத்தையே கொண்டுள்ளனர்.

பரிதியார் குடிகாத்தல் என்பதைப் பிரிக்காமல், கற்றறிதல் என்பதைக் "கற்று" என்றும் "அறிதல்" என்றும் இரண்டாகப் பிரித்து, ஏனையவற்றோடு கூட்டி, "தருகணாண்மை, குடிகாத்தல், கல்வி, அறிவுடைமை, உத்தியோகம் என்னும் அஞ்சு குணமுள்ளவன் மந்திரி என்றவாறு," என்று உரைகண்டுள்ளார். தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியரும் இவ்வாறே இக்குறளுக்குப் பொருள் கண்டுள்ளார் என்பது தொல்காப்பியப் பொருளதிகார 273ம் நூற்பாவுக்கு அவர் வரைந்துள்ள உரைப்பகுதியில் தெரிகிறது.


இப்படிப் பிரித்துப் பொருள் காண்பது இலக்கண நெறிக்குப் பொருந்துவதன்று. "குடிகாத்தல்" என்பதனை இருசொல்லாகப் பிரித்துக் "குடி" என்பதற்குக் குடிகாத்தல் என்று பொருள் கூறுவது பிரித்ததைப் பின்னும் கூட்டுவதாக அமைகிறது. "காத்தல்" என்பதற்கு இந்திரியங்களைக் காத்தல் என்று பொருள் கொள்ளும்போது எதைக் காத்தல் என்பது குறளில் தெளிவாகச் சுட்டப்படவில்லை என்று ஆகிறது. உரை வரைவோர் தாமாக இந்திரியங்களை என்று செயப்படுபொருள் தேடவேண்டி நேரிடுகிறது. எனவே குடிகாத்தல் என்பதனைப் பிரித்து இரண்டாக்குவது ஏற்குமாறு இல்லை.

"கற்றறிதல்" என்பதை இருசொற்களாகப் பிரித்தலும் பொருத்தமாக அமையவில்லை. "கற்று" என்பது வினையெச்சமும், "அறிதல்" என்பது தொழிற்பெயரும் ஆகும். "ஓடி ஆடிப் பாடி மகிழ்ந்தான்" என்று வினையெச்சம் அடுக்கி வந்தால், ஓடியும் ஆடியும் பாடியும் மகிழ்ந்தான் என்று எண்ணும்மை விரிக்கலாம். "ஓடுதல் ஆடுதல் பாடுதல் மகிழ்ச்சியின் அடையாளம்" என்று அமைந்திருந்தாலும் உம்மை விரிக்கலாம். அவ்வாறன்றி ஒன்று (கற்று) வினையெச்சமும் பிறிதொன்று (அறிதல்) தொழிற்பெயருமாகத் தொடரும் தொடரை உம்மை விரித்துக் கற்றலும் அறிதலும் என்று பொருள் கொள்வது இலக்கண நெறிக்குப் பொருந்தாது. அறிதல் காரியமாகவும் அதற்குக் கற்றல் காரணமாகவும் இருக்கும் தொடரினைக் காட்டுவதாகவே கற்றறிதல் என்பது அமைந்துள்ளது. இலக்கண நெறி மாறாமல் நுட்பமாக உரைகண்ட பரிமேலழகர் அதனால்தான் இவ்விரு வகைப் பிரிப்பையும் ஏற்காமல் வேறுவகையாக உரைகண்டுள்ளார்.
இனிப் பரிமேலழகர் கண்ட உரையினைக் காணலாம். அவர் இக்குறளோடு இதற்கு முன்னுள்ள குறளை இணைத்து உரை வரைந்துள்ளார். இதற்கு முன்னுள்ள குறள்,

"கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு." (631)

இரண்டாம் குறளில் இடம்பெற்றுள்ள ஐந்து என்பது அதற்கு முன்னுள்ள குறளில் இடம் பெற்றுள்ளவற்றைச் சுட்டுவதாகக் காட்டினார். ஆனால் அதிலும் ஐந்து பொருள்கள் இல்லை.

கருவி
காலம்
செய்கை
அருவினை
என்னும் நான்கே உள்ளன. அதனால் கருவியைத்
தானை
பொருள்
என்று இரண்டாகப் பிரித்து ஐந்தாக்கிக் கொண்டார். அதனை இக்குறளோடு தொடர்புபடுத்தி, "வினை செய்தற்கண் அசைவின்மையும், குடிகளைக் காத்தலும், நீதிநூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும், முயற்சியும் மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான்," என்று விளக்கம் தந்துள்ளார்.

பரிமேலழகர் இரண்டாவது குறளில் நான்கு பண்புகளே சுட்டப்படுகின்றன என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. ஆனால் இக்குறளை மேற்குறளோடு இணைத்து உரை கண்டிருப்பது இயல்பாக இல்லை.

திருக்குறள் நூல் முழுவதிலும் ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு தனிக்கருத்தைத் தெரிவிக்கும் தனித்தனி அலகாகவே அமைந்திருக்கிறது. அதனால்தான் பண்டைய உரையாசிரியர்கள் அதிகாரக் குறள்வரிசையினைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர். எனவே பரிமேலழகர் தரும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.


இக்குறள் அமைப்பினைக் கூர்ந்து நோக்கினால்,
வன்கண்
குடிகாத்தல்
கற்றறிதல்
ஆள்வினை
ஆகிய நான்கும் ஒரு பகுதியாகவும், ஐந்து என்பது மற்றொரு பகுதியாகவும் சுட்டப்பெறுதல் காணலாம். ஓடு (ஆள்வினையோடு) என்னும் உருபும், உடன் (ஐந்துடன்) என்னும் சொல்லுருபும் இப்பிரிவினைக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.

திருக்குறளில் சில இடங்களில் "ஐந்து" என்னும் தொகைச்சொல் இடம்பெற்றுள்ளது. அங்கெல்லாம் அஃது எப்பொருளைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வது இங்கு அஃது உணர்த்தும் பொருளை அறுதியிடத் துணைபுரியும்.

திருவள்ளுவர் ஐந்து என்னும் தொகைச்சொல்லால் சுட்டப்படுவன புதியனவாக இருந்தால் அவற்றை விரித்துக் கூறி ஐந்து என்று தொகைச்சொல் கொடுத்து முடிக்கிறார். ஐந்து என்னும் தொகைச் சொல்லால் சுட்டப்படுவன பலருக்கும் எளிதில் அறியக் கூடிய பொருள்களாக இருந்தால் ஐந்து என்று மட்டும் குறித்துச் செல்கிறார். இது திருவள்ளுவர் மேற்கொண்ட நெறியாக அமைந்துள்ளது.


பொருள், கருவி, காலம், வினை இடனோடு ஐந்தும் (675)
பிணியின்மை, செல்வம், கல்வி, விளைவு, இன்பம், ஏமம் அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து (738)
உடை, செல்வம், ஊண், ஒளி, கல்வி என்று ஐந்தும் (939)
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்து (983)
என்னும் இடங்களில் ஐந்து என்பதால் குறிக்கப்படுவனவற்றை முன்னே கூறிப் பின்னர் ஐந்து என்னும் தொகைச்சொல் குறிக்கப்படுதல் காணலாம். இவ்வாறு விரித்துக் கூறாவிட்டால் அவை யாவை என்பது விளங்காமல் போய்விடும்.

உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் (24)
ஐந்து அவித்தான் ஆற்றல் (25)
ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் (126)
என்னும் இடங்களில் ஐம்பொறிகளைக் கிளந்து கூறாமல் தொகைச் சொல்லால் குறித்துச் செல்வது காணலாம்.

இதனால் ஐம்பொறிகளை விளக்கிக் கூறாமல் ஐந்து என்று குறித்துச் செல்வது திருவள்ளுவரிடம் காணப்படுவதோர் இயல்பு என்பது தேற்றம்.

இதனை மனதில் கொண்டு "வன்கண்" என்று தொடங்கும் குறட்பாவினை நோக்கினால், "வன்கண்மையும் (தளரா முயற்சியும்) குடிகாத்தலும், கற்றறிதலும் ஆள்வினையும் ஆகிய நான்கும் பொறிகள் ஐந்துடனே செம்மையாக உடையவனே அமைச்சனாவான்," என்பதே இதன் பொருள் என்பது விளங்கும்.

அமைச்சன் குறையில்லா ஐம்பொறிகளையும் அவற்றை அடக்கிக் காக்கும் திறனும் உடையவனாக இருப்பதே அவனுக்கு மாட்சியாகும். அரசியல் தலைமை ஏற்போர்க்குப் பொறிகளில் குறை இருத்தல் கூடாது என்பதனால்தான் திருதராட்டிரன் அரசாள முடியவில்லை என்பது பாரதத்தால் விளங்குகிறது. பொறிகளில் குறைபாடுடைய அமைச்சனின் செயற்பாட்டில் இடர்பாடு நேரிடும். பொறிகளின் ஆசைக்கு இடம் கொடுக்கும் அமைச்சன் இடறி விழுந்து தான் அழிவதோடு, தன் அரசனுக்கும் அழிவினை ஏற்படுத்துவான். பெண்ணிடம் கொண்ட காமத்தால் நெறி தவறிய அமைச்சர் சிலரை வரலாறு கண்டிருக்கிறது. இக்கருத்துக்கு ஏலாதி எனும் நூலும் வலிமை சேர்க்கிறது. "நாற்றம் சுவைவெஃகி நல்லார் இனம்சேர்தல் தேற்றானேல் தேறும் அமைச்சு" (17) என்கிறது ஏலாதி.

இவ்வாறு இக்குறளுக்குப் பொருள் கண்டவர் யாரேனும் உண்டோ என்று தேடியபோது, பின்னாளைய உரையாசிரியர்களுள் கடவுள் மறுப்புக் கொள்கை என்னும் தளத்தில் நின்று தம் போக்கில் உரைகண்ட புலவர் குழந்தை ஒருவர் மட்டும் பொருள் கண்டுள்ளார் என்பது தெரிய வருகிறது. "வன்கண் முதலிய நான்கும், ஐம்பொறித் தூய்மையும் திருந்த உடையவனே அமைச்சனாவான். ஐந்து - தொகைக்குறிப்புச் சொல். வன்கண் முதலிய நான்கோடு ஐம்பொறித் தூய்மையும் உடையவனென்க," என்பது அவரது உரை.

திருக்குறளில் எழும் ஐயங்களுக்குத் திருக்குறளின் துணைகொண்டு தெளிவு தேடினால் தகுந்த விளக்கம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

முனைவர் தெ.ஞானசுந்தரம்,
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
பச்சையப்பன் கல்லூரி
சென்னை

நன்றி: தமிழ்மணி (தினமணி)

by Swathi   on 21 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.