LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day)

நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையை நன்றியறிதல் நாளாக (Thanksgiving Day) அமெரிக்கர்கள் கொண்டாடுவது வழக்கம். அமெரிக்க உள்நாட்டுப்போர் (American Civil War) நடந்துகொண்டிருந்த காலகட்டமான 1863-ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அவ்வாண்டின் நவம்பர் 26-ஆம் நாள், நன்றியறிதல் நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன்பின்னர் அந்நடைமுறை இன்றுவரைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது அமெரிக்காவில்!
 
நன்றியறிதல் நாள் தற்போது கனடா உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருவது இவ்விழாவின்மீது உலகமக்களுக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுகின்றது. இந்நன்றியறிதல் நாள் விழாவில் மக்களின் விருந்துணவில் முக்கிய இடம்பிடிப்பது வான்கோழி இறைச்சி.
 
வான்கோழி என்றதும் கானமயிலும் உடனே நம் நினைவுக்கு வந்துவிடுகின்றது. 🙄மயிலோடு போட்டியிடும் வான்கோழி குறித்து அறிவுசால் நங்கையாம் ஔவை மொழிந்திருக்கும் மூதுரை இது!👇
 
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத்–தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.
 
எதனையும் முறையாகக் கல்லாத ஒருவன், கசடறக்கற்றவன் ஒருவன் கவிபாடுதல் கண்டு தானும் கவிபாடுதல், கானமயில் தன் அழகிய தோகையை விரித்தாடுதல் கண்ட வான்கோழி, தானும் தன் அழகில்லாச் சிறகை விரித்தாடுதல் போன்று நகைப்புக்கிடமானது” என்கிறார் ஔவை.
அழகுக்குப் போட்டிவைத்தால் பெரும்பான்மையோரின் ஓட்டு மயிலுக்குத்தான் விழும்; வான்கோழி ’டெபாசிட்’ இழக்கும். ஆனால் இறைச்சிச்சுவை என்று வரும்போது வான்கோழியைக் குறைத்து மதிப்பிட இயலாது; சுவையில் அது மயிலை வென்றுவிடும் தகுதி படைத்தது என்கிறார்கள் அசைவப் பிரியர்கள்!  
 
பெரிய உருவமும் விசிறிபோன்ற இறகுகளும் கொண்ட வான்கோழி, அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பறவையாயிருந்தும், அதற்கு Turkey என்ற ஆங்கிலப்பெயர் வந்தது எப்படி என்ற குழப்பம் பலருக்கும் எழுவதுண்டு. அந்த அமெரிக்கப் பறவை துருக்கியப் பறவையாக ஆனதெப்படி என்பதற்குக் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் மரியோ பை (Mario pei), பின்வருமாறு விளக்கமளிக்கிறார்:
 
ஐரோப்பியர்கள் முதன்முதலில் வான்கோழியைக் கண்டதென்னவோ அமெரிக்காவில்தான்; எனினும், அப்பறவையை மேற்கு ஆப்பிரிக்காவின் கினி பகுதியைச் சேர்ந்த கோழி (Guinea fowl) என்று அவர்கள் தவறாக எண்ணிக்கொண்டார்கள். அது, துருக்கிய வணிகர்களால் கான்ஸ்டாண்டிநோபில் (Constantinople – Now it’s Istanbul) நகரின் வழியாக ஐரோப்பாவுக்கு அதிக எண்ணிக்கையில் இறக்குமதி செய்யப்பட்டதைக் கண்ட அவர்கள் அப்பறவைக்குத் துருக்கியக் கோழி (turkey fowl) என்று பெயர்சூட்டியிருக்கிறார்கள். இதுவே பின்னாளில் Turkey என்று சுருங்கிவிட்டது என்கிறார் அப்பேராசிரியர்.
 
வான்கோழி விருந்து நன்றியறிதல் நாளில் நுழைந்தது எப்படி?
இங்கிலாந்து நாட்டுக் கிறித்தவம் தந்த நெருக்கடிகளையும் கடுமையான சட்டதிட்டங்களையும் விடமென வெறுத்த சுதந்தரச் சிந்தனைகொண்ட வெள்ளையர்கள் சிலர் (they are popularly known as pilgrims) அங்கிருந்து கிளம்பி, மே மலர் (Mayflower) எனும் சிறிய படகில் புறப்பட்டு, புயலிலும் கடுங்குளிரிலும் 65 நாட்கள் நெடும் கடற்பயணம் மேற்கொண்டு அமெரிக்காவின் மசாசுசெட்ஸிலுள்ள (Massachusetts) ஒரு துறைமுகப்பகுதியை 1620-இல் வந்தடைந்திருக்கின்றனர். அவர்கள் அப்பகுதிக்கு இட்டபெயர் பிளைமவுத் (Plymouth) என்பதாகும். பசிக்கொடுமையாலும் குளிரின் கடுமையாலும் வந்தர்களில் பாதிப்பேர் பரிதாபமாக இறந்துபோயினர்.
 
எஞ்சியிருந்த வெள்ளையருக்கு பிளைமவுத் பகுதியை ஒட்டிய காடுகளில் வசித்துவந்த அமெரிக்கப் பழங்குடியினரோடு பழக்கம் ஏற்பட்டது. கள்ளமற்ற உள்ளம் படைத்த அந்தப் பழங்குடிமக்கள், புதிதாக வந்தவர்களுக்கு உணவு தந்து உபசரித்ததோடு, குடியிருப்புக்களை உருவாக்கிக்கொள்ளவும், சோளம், பரங்கி முதலியவற்றைப் பயிரிடவும், நன்னீரில் மீன்பிடித்தலையும் புதியவர்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றனர். அதன்பயனாக, அடுத்த ஆண்டே, அதாவது 1621-இல், தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சலைக் கண்ட வெள்ளையர்கள் அதற்காக இறைவனுக்கு நன்றிதெரிவிக்கும் முகமாக நன்றியறிதல் நாளைக் கொண்டாடியிருக்கின்றனர். உணவுப்பொருள்களை விளைவிக்கக் கற்றுத்தந்த இப்பழங்குடியினருக்கும் அந்நன்னாளில் விருந்தளித்து உபசரித்திருக்கின்றனர்.
 
அந்த நன்றியறிதல் நாள் விருந்தில் என்னென்ன உணவுகள் பரிமாறப்பட்டன என்ற தகவலை அவ்விருந்தைத் தயாரித்த சமையற்காரர்கள் பதிவுசெய்யாததால், அதில் வான்கோழி இடம்பிடித்திருந்ததா இல்லையா எனும் கேள்விக்கு நம்மால் துல்லியமாகப் பதில்சொல்ல இயலவில்லை.
 
ஆயினும் வான்கோழிகளின் தொடக்க காலப் பயன்பாடுகளை ஆராய்ந்தவர்கள் அவை ஆரம்பத்தில் உணவுக்காகப் பயன்படுத்தப்படவில்லையென்றும், அவற்றின் சிறகுகள் மட்டுமே கால்மிதிகள், போர்வைகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன என்றும் கூறுகிறார்கள். பின்னர், அவற்றின் இறைச்சியையும் ருசிபார்த்த மக்கள் அதன்சுவையில் ஈடுபட்டிருக்கவேண்டும். அந்த இறைச்சியைத் தங்களுடைய நன்றியறிதல்நாள் விழாவின் சிறப்புணவாக அவர்கள் சேர்த்துக் கொண்டிருக்கவேண்டும்.
 
வான்கோழி இவ்விழாவில் இடம்பிடித்ததற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகின்றது. இங்கிலாந்துக்கு எதிரான போரில் ஸ்பெயின் ஈடுபட்டபோது ஸ்பெயினின் கப்பலொன்று விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கிவிட்டதாம். அதனையறிந்த இங்கிலாந்து மகாராணியார் முதலாம் எலிசபெத், வான்கோழிக்கறியை உண்டு அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினாராம். அந்த அடிப்படையில்தான் மகிழ்ச்சித் திருநாளான நன்றியதல் நாளையும் அவ்வாறே வான்கோழியோடு கொண்டாடுவது எனும் வழக்கம் ஏற்பட்டதாம்.
 
அறுவடைத் திருநாளே நன்றியறிதல் நாளாக மலர்ந்திருக்கின்றது எனும்போது, அவற்றைக் கொண்டாடும் நாடுகள், அங்கே புதிதாக அறுவடையான உணவுப்பொருள்களையும், தானியங்களையும் கொண்டு உணவு சமைத்து உண்பதே பொருத்தமுடையதாக இருக்கும். அதைவிடுத்து, வான்கோழிகளைக் கணக்கில்லாமல் கொன்றுகுவித்து இந்நாளில் புசிப்பது எதற்காக?
 
எத்தனை வான்கோழிகள் மக்களின் அற்ப மகிழ்ச்சிக்காகவும் பாரம்பரிய வழக்கத்துக்காகவும் இந்நன்னாளில் தம் இன்னுயிரைத் தியாகம் செய்கின்றன! 😔
 
நன்றியறிதல் நாள் என்றும் அறுவடைத் திருநாள் என்றும் சம்பிரதாயமாக இந்நாளை அழைப்பதைக் காட்டிலும் ’வான்கோழிகளின் தியாகத் திருநாள்’ என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமோ? 🤔
 
-திருமதி.மேகலா இராமமூர்த்தி , பிளோரிடா, அமெரிக்கா 
by Swathi   on 26 Nov 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சியாட்டிலில் பட்டிப்பொங்கல் விழா - 2023 சியாட்டிலில் பட்டிப்பொங்கல் விழா - 2023
மூன்று இலட்சம் அமெரிக்க வெள்ளிகள் கொடுத்து ஹூஸ்டனில் தமிழ் இருக்கை அமைய பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது தமிழ்நாடு அரசு மூன்று இலட்சம் அமெரிக்க வெள்ளிகள் கொடுத்து ஹூஸ்டனில் தமிழ் இருக்கை அமைய பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது தமிழ்நாடு அரசு
வட அமெரிக்காவில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி வட அமெரிக்காவில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி
செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கி கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு  6 நாட்கள் நடக்கிறது செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கி கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு 6 நாட்கள் நடக்கிறது
மலேசிய மக்களின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை துன்  சாமிவேலு  அவர்களுக்குப் புகழ்வணக்கம்! மலேசிய மக்களின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை துன் சாமிவேலு அவர்களுக்குப் புகழ்வணக்கம்!
சாலையின் பெயர் வள்ளுவர் வழி சாலையின் பெயர் வள்ளுவர் வழி
TNF 48 தேசிய மாநாட்டு விழா TNF 48 தேசிய மாநாட்டு விழா
"வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 1" - நேரலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.