LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

அறிவழகியின் அறிவுக்கூர்மை

     சோலையூர் என்ற செழிப்பான ஊர், அங்கே அருகில் இருந்த மலையில் இருந்து ஓடிய சிற்றாறு உதவியால் மக்கள் விவசாயம் செய்து பிழைத்து வந்தார்கள். அதே ஊரில் விரைவில் பணம் சம்பாதிக்க நினைத்த சிலர், காட்டில் இருந்த மரங்களை தொடர்ந்து வெட்டியதால் சில ஆண்டுகளில் மழை பெய்யவே இல்லை, அதனால் சிற்றாறு வரண்டு போய் விட்டது, விவசாயம் செய்தவர்கள் எல்லாம் கஷ்டப்படத் தொடங்கினார்கள். மக்கள் பிழைப்பு தேடி வெளியூர்களுக்குச் செல்லத் தொடங்கினார்கள்.


     அதே ஊரில் அறிவழகி என்ற பெண் இருந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவரது கணவர் ஊரில் விவசாயம் செய்ய முடியவில்லை, எனவே இருக்கும் பணத்தைக் கொண்டு வணிகம் செய்வதாக கூறி வெளியூர் சென்றிருந்தார்.


     பல நாட்களுக்குப் பிறகு அறிவழகிக்கு அவரது கணவரிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள். நாம் வளமாக வாழலாம், என்று அதில் எழுதியிருந்தது.


     உடனே அறிவழகி தன் வீட்டை பூட்டி அண்டை வீட்டாரிடம் சாவியை கொடுத்து விட்டு, வெளியூரில் வசிக்கும் கணவன் அழைத்திருப்பதாகவும், அங்கே செல்வதாகும், பணம் நிறைய சம்பாதித்ததும், மீண்டும் சோலையூர் வருவோம் என்று சொல்லிவிட்டு, குழந்தைகளுடன் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும் வணிகர்களின் ஒரு மாட்டு வண்டியில் ஏறினார்.


     அடர்ந்த காட்டில் இரவு நேரத்தில் தங்கி காலையில் செல்லலாம் என்று முடிவு செய்தார்கள். விடியற்காலையில் குழந்தைகள் அழ, அறிவழகி தன் குழந்தைகளுக்கு அங்கே இருந்த குரங்குக்கூட்டத்தை வேடிக்கை காட்ட, குரங்குகள் அங்கேயும் இங்கேயும் ஓட, அவரும் அவற்றை தொடர்ந்து போய் விட்டார். அதற்குள் புறப்பட தயார் ஆகி, அறிவழகியை வியாபாரிகள் மறந்து போய் காட்டிலேயே விட்டு விட்டு, சென்று விட்டார்கள்.


     குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தப் பின்னர் அமைதியாகிவிட, அறிவழகி, இரவில் தங்கிய இடத்திற்கு வந்தார், அங்கே யாரையும் காணவில்லை, எல்லோரும் சென்று விட்டார்கள்.


     ஐயோ! என்ன செய்வேன்? நடுக் காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டேனே! இங்கே புலி பலரை அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டுள்ளேனே, என்று நடுங்கினார் அவர். சிறிது நேரம் யோசித்த அவர், பின்னர் அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்தார். எப்படியும் இன்று மாலையில் மீண்டும் ஒரு வியாபாரிகள் கூட்டம் வெளியூர் செல்லும், அல்லது வெளியூர் கூட்டம் வரும், அவர்களோடு சென்று விடலாம். அதுவரை இந்த மரத்தின் மேல் இருப்பது தான் கொடிய மிருகங்களிடமிருந்து தப்பிக்க வழி என்று நினைத்தார்.


     சிறிது நேரத்தில் மனித வாசனையை அறிந்த பயங்கரமான புலி ஒன்று அவர்கள் ஏறி இருந்த மரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அறிவழகி அதனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தார். எப்படியும் அந்த புலியிடமிருந்து தப்பிக்க வேண்டும், அதற்கு அறிவை உபயோகித்தால் தான் முடியும் என்று யோசித்ததில் நல்ல வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.


     இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளினார். இருவருடம் காடே அலறும் படி அழத் தொடங்கினார்கள்.குழந்தைகளே! அழாதீர்கள், நான் என்ன செய்வேன். இப்படி நீங்கள் அடம் பிடிப்பது சிறிதும் நல்லது அல்ல. நேற்றுத்தான் நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக் கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலியை நான் எங்கே தேடுவேன்? எப்படியும் இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் புலிக்கு கேட்கும் வகையில் சொன்னார்.


     இதைக் கேட்ட புலி நடுங்கியது, இந்த பெண் ஒரு வேளை ராட்சசியாக இருப்பாளோ, நல்ல வேளை! அருகில் செல்லாமல் இருந்தேன். இந்நேரம் நம்மைப் பிடித்துக் கொன்றிருப்பார், இனி இங்கே இருப்பது நல்லதல்ல, எங்காவது ஓடிவிடுவோம், என்று நினைத்தது அது. ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அது.தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தார் அறிவழகி.


     பயந்து ஓடும் புலியை வழியில் சந்தித்தது நரி. காட்டுக்கு அரசே! ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள்? உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது? சொல்லுங்கள், என்று கேட்டது அது.


     நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். இப்படி அவளே சொல்வதை என் காதால் கேட்டேன். அதனால் தான் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தேன், என்றது புலி.


     இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புலியாரே! கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர்? அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள். நாம் அங்கே செல்வோம். அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம், என்றது அது.


     அந்தக் குழந்தைகளின் கத்தலை நீ கேட்டிருந்தால் இப்படிப் பேச மாட்டாய். அந்த அரக்கியின் குரல் இன்னும் என் காதில் கேட்கிறது. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.


     அவள் சாதாரண பெண்தான். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி.


     ஒரு பக்கம் பயம், ஒரு பக்கம் பசி, ஆகையால் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டது புலி.இருவர் வாலும் சேர்த்து இறுகக் கட்டப்பட்டன. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.மரத்தில் இருந்த அறிவழகி நரியும் புலியும் வருவதைப் பார்த்தாள். இரண்டின் வாலும் ஒன்றாகக் கட்டப்பட்டு இருந்தது. அவரின் கண்களுக்குத் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தார் அவர்.


     மீண்டும் தன் புத்திசாலித்தனத்தை உபயோகித்தார், கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என்ன சொன்னேன்? என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாய் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய்? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினார்.


     இதை கேட்ட புலி நடுங்கியது, இந்த நரிக்குத்தான் எவ்வளவு தந்திரம்? நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது? ஓட்டம் பிடிப்பது தான் ஒரே வழி, என்று நினைத்தது அது.


     அவ்வளவுதான். வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள். ஓடாதீர்கள், என்று கத்தியது.


     உன் சூழ்ச்சி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கொல்லத் திட்டம் போட்டாய். இனி உன் பேச்சை கேட்டு ஏமாற மாட்டேன், என்று வேகமாக ஓடத் தொடங்கியது புலி.


     வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதியது. படுகாயம் அடைந்தது அது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக் கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்தது. மயக்கம் அடைந்த நரி அங்கேயே விழுந்தது. புலி அந்த காட்டையே விட்டு எங்கோ ஓடி மறைந்தது.


     ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு வெளியூர் செல்லும் வியாபாரிகள் வண்டிகள் வர, அவர்களிடம் பேசி, நடந்ததைக்கூறிய அறிவழகி தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவன் இருந்த ஊரை அடைந்தார்.தொழிலில் நல்ல நிலையில் இருந்த கணவரோடு இணைந்து, குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினார்.

by parthi   on 09 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தந்தையை திருத்தும் மகன் தந்தையை திருத்தும் மகன்
புதிய நண்பர்கள் புதிய நண்பர்கள்
தப்பி வந்த முதலை தப்பி வந்த முதலை
ஒரு நீண்ட பயணம் ஒரு நீண்ட பயணம்
நாணயஸ்தன் நாணயஸ்தன்
வகுப்புக்கு தாமதம் வகுப்புக்கு தாமதம்
பரிசும் ஊக்கமும் பரிசும் ஊக்கமும்
முட்டாள் வேலைக்காரன்! முட்டாள் வேலைக்காரன்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.