மாறனும் அவனுடைய இரு நண்பர்களும், இணைப்பாட வகுப்பு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். திடீரென்று, ஒரு பெரிய கூட்டம் அவர்களை வழிமறித்து நின்றது. திடுக்கிட்ட சிறுவர்கள், ஒன்றும் புரியாமல் சற்று நேரம் விழித்தனர். பின்னர், கூட்டத்தில் இருந்த ஓர் ஆடவர், “ரயில், திடீரென்று தண்டவாளத்தில் நின்றுவிட்டது. அதைப் பழுது பார்க்கப் பல மணி நேரம் ஆகும். பயணிகளை நாங்கள் வேறு போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கூறியிருக்கிறோம்,” என்றார். அதைக் கேட்டவுடன் இரு நண்பர்கள் தாங்கள் எப்படி வீட்டுக்குச் செல்வது என்று சிந்திக்க ஆரம்பித்தனர். ஆனால், மாறன் மட்டும் திகைத்து நின்றான்.
மாறனின் வாடிய முகத்தைக் கவனித்த நண்பர்கள் அதன் காரணத்தை வினவினார்கள். மாறன் அன்று குடும்பத்தாருடன் வெளிநாட்டுக்குச் செல்லவிருந்தான். காலையில் அவன் அம்மா அவனிடம் அன்று இணைப்பாடத்துக்குப் போகவேண்டாம் என்று கூறியிருந்தார். அவன் வருவதற்குத் தாமதமாகினால், எல்லோரும் கிளம்பச் சிரமமாக இருக்கும் என்றும் அவர் அவனிடம் கூறியிருந்தார். ஆனால், மாறன் பிடிவாதமாக இணைப்பாடத்துக்குச் செல்லவேண்டும் என்று கூறியதோடு அன்று இணைப்பாடம் விரைவாக முடிந்துவிடும் என்றான். அதனால் அம்மா அவனைச் சற்றுச் சீக்கிரமாக வீடு திரும்பும்படிக் கூறினார். ஆனால், ரயில் இப்படிப் பழுதாகிவிடும் என்று மாறன் எதிர்பார்க்கவில்லை.
மாறனின் நண்பர்கள் மாறனிடம் பேருந்தில் போகலாமே என்று கூறினர். மூவரும் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தனர். ஆனால், பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற எண்ணமும் சுக்குநூறாக உடைந்தது. ரயில் பழுந்தடைந்ததால், பேருந்து நிறுத்தத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவனுக்கு விரைவில் பேருந்திலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போது, கூட்டத்தில் தெரிந்த முகம் ஒன்றை நண்பர்கள் மூவரும் பார்த்தனர். அவர்களுடைய பள்ளி ஆசிரியர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். மூவரும் ஆசிரியரை நோக்கி ஓடினர். மாறன் தன்னுடைய சிக்கலான சூழ்நிலையை அவரிடம் ஒன்றுவிடாமல் ஒப்பித்தான். அதைக் கேட்ட ஆசிரியர், அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, உடனே ஒரு வாடகை உந்துவண்டியோடு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். வாடகை உந்துவண்டி வந்ததும், மாறன் விரைவாக அதில் ஏறினான். ஆசிரியர் அவனுடன் சென்று, வாடகை உந்துவண்டிக்கான கட்டணத்தையும் செலுத்தினார். மாறன், வண்டியிலிருந்து இறங்கி ஆசிரியரிடம் நன்றி கூறிவிட்டு வீட்டை நோக்கி விரைந்தான். நல்ல வேளை! அன்று குடும்பத்துடன் செல்லவேண்டிய பயணம் தடைபடவில்லை.
|