|
||||||||
ஜப்பான் சென்றுள்ள அரசுப்பள்ளி மாணவர்களும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் |
||||||||
தமிழக பள்ளிக்கல்விதுறையின் முன்னெடுப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து பல்வேறு போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் கல்விச் சுற்றுலாவுக்காக சப்பான் வந்தடைந்தனர். நிகழ்விற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வருகை தந்தார். நிகழ்விற்கு முன்னதாக சப்பானில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அமைச்சர் அவர்கள் சென்று பார்வையிட்டார். நவம்பர் 7 அன்று அரசுப்பள்ளி மாணவர்கள் சப்பானில் வாழும் தமிழர்களை சந்தித்து உரையாடல் நிகழ்த்தும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.பிரசன்னா பார்த்தசாரதி அவர்கள் அரசு பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் வரவேற்றார். "திரைகடல் ஓடியும்" என்ற தலைப்பில் சப்பானில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களின் அறிமுக காணொளி ஒளிபரப்பப்பட்டது. அரசு பள்ளியில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியாக உருவாகி உலகளவில் திறம்பட பணிபுரியும் தமிழர்கள் தற்போது கல்விச்சுற்றுலாவிற்காக வந்திருக்கும் மாணவர்களிடம் தங்களது பணி அனுபவம், மற்றும் சப்பானிற்கு படிக்க அல்லது வேலைக்காக வருவோர்க்கு தேவையான அடிப்படை விசயங்களை பகிர்ந்து கொண்டனர். சப்பானில் உள்ள கல்வி, வேலை வாய்ப்புகளை பற்றி திரு.பிரசன்னா பார்த்தசாரதி, திரு. கணேஷ் பாண்டியன் நமசிவாயம், திரு. குமரவேல் திருமணஞ்சேரி, ஆசிரியை திருமதி.கண்மணி கோவிந்தசாமி, திரு.ராஜேஷ்குமார், திரு.கலைச்செல்வம், திரு.பொன்னி வளவன் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். பின்னர், சப்பான் தமிழர்கள் மூலம் சிறப்பான பறையாட்டம், கும்மியாட்டம் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் தோக்கியோவில் உள்ள மிராய்க்கன் தேசிய அறிவியல் அருங்காட்சியத்திற்கும், சப்பானில் உள்ள பள்ளிகளுக்கும் சென்று வந்தனர். அதனைத் தொடர்ந்து நானோ தொழில்நுட்பத்தில் உலகளவில் சிறந்து விளங்கும் தோயோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மூன்று மணி நேரம் செலவிட்டு அறிவியலின் நேரடி பயன்பாட்டை கற்றறிந்தனர். இதற்கான ஏற்பாட்டை JTPEN அமைப்பினர் செய்து கொடுத்தனர். மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் அவர்கள் இத்திட்டத்தின் சாராம்சம், மற்றும் மாணவர்கள் இதன் மூலம் பெரும் பயன்கள் குறித்தும் தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறையின் முன்னெடுப்புகளை பற்றியும் விவரித்தார். Japan Tamil Professionals & Expats Network (JTPEN) அமைப்பு, ஜப்பானில் கல்லூரி மற்றும் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகளை குறித்து விவரித்தது. மேலும் தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்துடன் இணைந்து பணிபுரிய மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிகழ்வை திரு.கலைச்செல்வன் பழனி அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் சுமார் 250க்கும் மேற்பட்ட சப்பான் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
ஜப்பானிலிருந்து சத்தியசீலன் JTPEN - Japan Tamil Professionals & Expats Network
|
||||||||
by Swathi on 09 Nov 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|