|
||||||||||||||||||
கடலுக்கடியில் மடிக்கணினி |
||||||||||||||||||
![]() அவர் கடலுக்கு மேலே படுத்தபடி மடிக்கணினியிலே வேலை செய்து கொண்டிருந்தார்.
நல்ல இதமான காற்று வீசியது, மேகத்தால் மூடப்பட்டதால் கண்களுக்கு இதமான சூரிய வெளிச்சம் இருந்தது. சின்னச் சின்ன அலைகள் வந்து அவரை தாலாட்டியது. ஆகா நல்ல சுகமா இருந்தது. அதனால் அவர் கடலுக்கு மேலே படுக்க வந்தார். மின்னஞ்சல் திறந்து தனக்கு வந்திருக்கற கடிதங்களைப் படித்தார். முகநூல் பாத்தார், அவர் படுத்திருந்த காற்றடைத்த படுக்கை கடல் அலையிலே தொட்டில் மாதிரி மெல்ல ஆடிட்டிருந்தது. உல்லாசத்துக்கு உல்லாசமானது. அதே நேரத்தில் வேலைக்கு வேலையுமானது.
தன்னை மறந்து முக நூல் பார்த்திட்டிருந்தவர் போதும்படிச்சது என்று நினைத்தார். இந்த சுகமான வேளையில் கொஞ்சம் பாட்டுக் கேட்கலாம் என்று மடிக்கணினியிலிருக்கிற பியானோவை திறந்தார். திரையில் கருப்பு, வெள்ளை கட்டங்கள் தெரிந்தது. அதில் விரலால் மெல்ல மெல்ல தொட்டார். காதுக்கு இதமான மெல்லிசை அதிலிருந்து வெளியே வந்தது. அவருக்குப் பிடித்த ஒரு பாட்டை வாசித்தார். நல்ல தூக்கம் வந்ததும் கணினியை அனைத்து வத்தார்.
கொஞ்ச நேரத்தில் அப்படியே உறங்கிப்போயிட்டார்.
அப்ப ஒரு பெரிய அலை வந்தது. அந்த அலை கடல் மேலே மிதந்திட்டிருந்தவரை அப்படியே புரட்டி போட்டு விட்டது. அவ்வளவுதான் அவரோட மார்பு மேல் இருந்த மடிக்கணினி கடலுக்குள்ளே விழுந்து விட்டது.
ஐய்யோ, நான் சொல்ல மறந்துட்டேன். கடல் அலையில் மிதந்திட்டு வேலை செய்கிற காலத்தில் தண்ணீரில் விழுந்தாலும் கேடு வராத கணினியைக் கண்டுபிடிச்சிருப்பாங்கல்ல. அவருகிட்ட இருந்த மடிக்கணினியும் தண்ணிக்குள்ளே விழுந்தாலும் ஒன்றும் ஆகாது.
இதோ அந்த மடிக்கணினி அப்படியே கீழே கீழே போய்ட்டிருக்கு. ஆடி ஆடி மெதுவா அடியில் அடிப்பகுதியை நோக்கிப் போயிருட்டிருக்கு. அது ஒரு குட்டி மீனு மேல் மோதியது. அவ்வளவுதான் குட்டி மீனுகள் கூட்டம் அப்படியே அதை சுற்றி சுற்றி இது புதுசா இருக்குதே... அப்படின்னு அதை கடித்து தின்னப் பார்த்தது.
"இது மாதிரி ஒன்றை நாம இதுக்கு முன்னாடி பார்த்ததேயில்லை அல்ல'' அப்படீண்ணு அடுத்த மீனுகிட்ட கேட்டது. அந்த நேரத்தில் அங்கே ஒரு சுறா மீன் வரவும் குட்டி மீனுகயெல்லாம் ஓடி ஒளிந்து விட்டது. என்னடா இங்க நடக்குது போய்ப்பார்க்கலாம் ஒரு டோல்பின் அங்க வந்தது.
"இது என்ன என்று உனக்குத் தெரியுமா?'' அப்படீண்ணு சுறா மீனு கேட்டிச்சு.
"சரியாத் தெரியாது. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோ பாட்டுப் பாடறத நான் கேட்டேன். அது இதிலிருந்து வந்திருக்கும்ணு நினைக்கிறேன் என்றது.
"ஆகா அப்படியா, எனக்கும் பாட்டுக் கேட்ககணுமே என்ன பண்ணலாம் அப்படீண்ணு'' கேட்டிச்சு.
"இருங்க நான் முயற்சி செய்து பார்க்கிறேன் மடிக்கணினியை மூடவும் திறக்கவும் செய்தது. ஆனால் அதிலிருந்து சத்தம் எதுவும் வர வில்லை.
அப்போ அங்கே எட்டு கைகொண்ட ஆக்டோபஸ் வந்தது. அதுவிடம் டோல்பின் "இது பாட்டு பாடுகிற கருவி என்று தெரியுது. ஆனா எப்படி இயக்குறது என்று தெரிய வில்லை'' என்று சொல்லியது.
"அப்படியா என்று சொல்லி விட்டு இரண்டு கையால் அதை தூக்கிப்பார்த்துவிட்டு வேற கைகளால் சில பொத்தான்களை அழுத்தி பார்த்தது. ம்ஹூம் அந்த மடிக்கணினி கண்களை திறக்கவில்லை
"அட எல்லோரும் கொஞ்சம் விலகுங்க. நான் இது மாதிரி நிறைய பார்த்திருக்கிறேன். கரையில் நிறயப்பேரு இது வச்சிருக்காங்க'' அப்படீண்ணு உரிமையாக சொலியது அங்க வந்த நண்டு.
"ஆமா, நண்டு சொல்றது சரியாயிருக்கும். ஏனென்றால், நம்ம யாராலேயும் கரைக்குப் போய் அங்க என்ன நடக்குதுண்ணு பார்க்க முடியாதில்ல'' அப்படீண்ணு டோல்பின் சொல்லியது.
நண்டு மடிக்கணினியில் இருக்கிற பொத்தான்களை நல்லா கவனமாப் பார்த்தது. இங்க பாருங்க இந்த வட்டமா இருக்கிற பொத்தானை அழுத்தணும் அப்படீண்ணு தன்னோட கொடுக்கு போல இருக்கிற கையாலே அத அழுத்திச்சு. அவ்வளவுதான்.
திரையெங்கும் வெளிச்சம் பரவியது. அதில் பியானோவோட பொத்தான்கள் தெரிந்தது. நண்டு அதை ஒவ்வொண்ணா அழுத்தியது. அப்ப கணினியிருந்து ஸா... ரீ... அப்படீண்ணு சத்தம் வந்தது.
"ஏய் நண்டு, அதை ஆக்டோபஸ்கிட்டே கொடு அதுக்கு எட்டு கையிருக்கு. அது நல்லா வாசிக்கும், வேகமாகவும் வாசிக்கும்'' சுறா மீனு கொஞ்சம் அதட்டலா சொல்லியது.
"நீ சொல்றது சரிதாண்ணு'' சொல்லிகிட்டே கணினியை ஆக்டோபஸ்கிட்டே கொடுத்தது.
ஆக்டோபஸ் இரண்டு கையால் கணினியைப் புடிச்சுகிட்டு மீதியிருக்கிற ஆறு கையால் கருப்பு வெள்ளையா தெரிகிற பொத்தான்கள அழுத்தச் தொடங்கிச்சு.
அவ்வளவுதான் அதிலிருந்து பாட்டு ஒழுகி வந்தது. அதை கேட்டதும் டோல்பின் தலை ஆட்டத் தொடங்கிச்சு. சின்னச் சிறகுகளை அசைச்சுகிட்டே சர்ணு மேல போயி, சர்ணு கீழே வந்து, கணினியை சுத்தி சுத்தி வந்து விளையாடத் தொடங்கிச்சு.
சுறா மீனு வாயைப் பொளந்துகிட்டு மூணு அண்டா தண்ணியை ஒண்ணா குடிச்சுகிட்டு வாயை மூடிகிட்டே இரண்டு பக்கம் வழியாகவும் பீச்சியடித்தது.
நண்டு தண்ணீரில் மல்லாந்து நீந்தி அப்படி தலைக்கு மேலே இருக்கிற கண்ணாலே கணினியைப் பார்த்துகிட்டே காலை இரண்டையும் ஆட்டிச்சு.
பயந்து விலகின குட்டிமீனுகள் மேகம்போல் அங்க வந்து ஒரு சுத்து சுத்திட்டு தங்களோட மகிழ்ச்சியைத் தெரிவித்தது.
அதையெல்லாம் பாத்த ஆக்டோபஸ் நல்ல வேகமாக பொத்தான்கள அழுத்தச் தொடங்கிச்சு. ஆகா கடலுக்கு அடியில் நடக்கிற பாட்டுக்கச்சேரி நீங்க பாத்திருந்தீங்கண்ணா நீங்களும் தண்ணில குதிச்சு கும்மாளம் போடத் தொடங்கியிருப்பீங்க. |
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|