|
||||||||||||||||||
மேகத்தேரேறி… |
||||||||||||||||||
மழை தேவன் மேகத் தேர் ஏறி பவனி வரப் புறப்பட்டான். தேவனின் பரிவாரங்களும் கூடவே புறப்பட்டன. அவர்கள் யார் யார் என்று தெரியுமா?
இடி , மின்னல், காற்று, இவர்கள் தாம். வான வீதியில் மேகத் தேர் வேகம் கொண்டு ஓடியது. அதைக் கண்டு சூரியன் பயந்து ஒளிந்துகொண்டான். தேரின் வருகையைத் தெரிவிப்பது போல் குளிர்காற்று ஊரெங்கும் வேகமாக வீசியது.
தேருக்கு வழிகாட்டுவது போல் வானில் மின்னல் ஒளிக்கோலம் போட்டது. ஓடும் குதிரைகளின் குளம்படிச் சத்தம் போல் பட பட வென இடி இடித்தது.
தேரில் கம்பீரமாக அமர்ந்து பயணம் செய்த மழை தேவன் எங்கு மழை பெய்விக்கலாம் என்று யோசித்தபடி கீழே பார்த்துக் கொண்டே வந்தான்.
அதோ ஓர் மலைப்பகுதி. அங்கு பெய்வோமே என்று நினைத்து தேரைக் கீழாகச் செலுத்தினான். ஆனால் தேவனின் கண்ணில் விழுந்த காட்சி அந்த எண்ணத்தை மாற்றியது. ஐந்தாறு வேலையாட்கள் கோடாலியால் மரங்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் கரைவேட்டி கட்டிய ஒர் பணக்காரர் நின்று கொண்டிருந்தார்.
" ஓ! ஆவர்தான் இதற்குக் காரணமோ!'' மழை தேவனின் முகம் கோபத்தால் சிவந்தது. மழை தேவன் அங்கிருந்து வேகமாகத் தன் தேரை ஒட்டிச் சென்றான்.
சிறிது தொலைவு கூட செல்லவில்லை. அதற்குள் மழை தேவனுக்கு வேர்த்துக் கொட்டியது. உடலெங்கும் வேர்வை ஆறாக ஓடியது. மூச்சு முட்டியது மேகத் தேரும் தன் சக்தி இழந்து வெளிரத் தொடங்கியது.
அது தொழிற்சாலைகளின் புகைக்குழாய்கள் செய்த வேலை. அப்பகுதி ஆலைகள் நிறைந்த பகுதி. வானை இடித்துவிடுவன போல உயர்ந்து நின்ற புகைக்குழல்கள் தேவனின் உடலுக்கு நேரே கரும்புகையைக் கக்கியது. தான் பாவம் மழை தேவன் அத்தனை துன்பப்படக் காரணம். கடும் விசையில் தன் மேகத்தேரைச் செலுத்தி அங்கிருந்து அகன்றான். இனி இந்த வழியே வரவே கூடாது என மனதில் உறுதி செய்துகொண்டான்.
மேலும் சிறிது தொலைவு சென்றான். ஓர் ஆறு தென்பட்டது. '"ஆகா மழை பெய்ய இதுதான் சரியான இடம்'' என்று நினைத்துத் தேரைக் கீழாகச் செலுத்தினான். ஆறு கிடந்த கோலத்தைக் கண்டதும் மழை தேவனின் முகம் வாடியது. அவன் முகத்தில் சொல்ல முடித்தா துயரம் ஓட்டிக்கொண்டது.
அவ்வூரிலுள்ள சாக்கடைகள் எல்லாம் ஆற்றில் வந்து கலந்துகொண்டிருந்தன. அது மட்டுமல்ல ஊர்க் குப்பைகளும் கழிவுகளும் ஆற்றை அலங்கோலப்படுத்தின. தான் சுமந்து வந்த வானின் அமுதம் பூமிக்குத் தேவையில்லையா? திரும்பப் போய் விடலாமா? என்றெல்லாம் பலவாறு எண்ணினான். என்னை நேசிக்கும் எவரும் இந்தப் பூமியில் இல்லையா? அவன் உள்ளம் ஏங்கத் தொடங்கியது.
மிகுந்த சோகத்துடன் தேரை மெதுவாகச் செலுத்தினான். கீழே ஒரு பச்சைப் புள்ளியாய் ஒரு காட்சி... மழை தேவனின் மனதில் ஓர் எதிர்பார்ப்பு... தேரைக் கீழாகச் செலுத்தி அக்காட்சியை நன்கு பார்த்த மழைதேவனின் கண்களில் புத்தொளி தெரிந்தது. அவன் தேரை மேலும் தாழ்வாகச் செலுத்தினான். அந்தக் காட்சியைத் தெளிவாகக் கண்ட மழை தேவனின் உள்ளத்தில் குளிர் மழை பொழிந்தது.
அக்குளிர்ச்சி பூமியிலும் படர்ந்தது.
ஓர் எட்டு வயதுச் சிறுமி ஒரு மரக்கன்றை ஊன்றிக்கொண்டிருந்தாள். கையால் குழி பறித்து மரக்கன்றை அக்குழியில் வைத்தவளின் உடலில் குளிர் பரவியிருக்க வேண்டும்.
அவள் தலை உயர்த்தி அண்ணாந்து பார்த்தாள். அவள் முகமும் மழை தேவனின் முகம் போல மலர்ந்தது. அந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தபடி பாடத் தொடங்கினாள் அச்சிறுமி.
மழையே மழையே வா வா மரக்கன்று நனைய வா வா மழையே மழையே வா வா மரத்துக்கு நீர் தா தா இக்காட்சியைக் கண்ட மழை தேவனின் மனதில் நற்றமிழ் மூதாட்டி ஒளவையாரின் மூதுரை மின்னி மறைந்தது.
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை
பிறகென்ன மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது . நான் அழைத்ததும் மழை வந்துவிட்டதே என்று வியந்த சிறுமியும் புதுமழையில் நனைந்து குதியாட்டம் போடத் தொடங்கினாள். மரக்கன்றும் நனைந்தது. அவளும் நனைந்தாள். அவள் பொருட்டு ஊரும் நனைந்தது. |
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|