|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 |
||||||||
![]() இருமல் என்பது மூச்சுப்பாதையில் இருந்து கோழை (சளி), தூசுகள் (foreign bodies), நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்கள் (microbes), போன்றவற்றை வெளியேற்றும் பொருட்டு ஏற்படுகின்ற ஓர் அனிச்சை (Involuntary) செயலாகும்.
இந்த அனிச்சை செயல் மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது.
1. காற்று வேகமாக நுரையீரலுக்குள் இழுக்கப் படுதல்.
2. மூச்சுக் குழலின் மேல் வாயில் (Glottis) மூடிய நிலையில் நுரையீரலிலிருந்து காற்று வேகமாக மூச்சுக் குழலினுள் செலுத்தப் படுதல். இந்த நிலையில் மூச்சுக் குழலுக்குள் காற்று அதிக அழுத்தத்துடன் இருக்கும்.
3. மூச்சுக் குழலின் மேல் வாயில் (Glottis) திறக்கப் படுதல். இந்த நிலையில் காற்று, அழுத்தம் அதிகமுள்ள மூச்சுப் பாதையாகிய மூச்சுக் குழலிருந்து அழுத்தம் குறைவாக உள்ள வெளிப்பகுதிக்கு வேகமாக வெளித் தள்ளப் படுகின்றது.
இவ்வாறு காற்று வேகமாக வெளித் தள்ளப் படுவதால் கோழை (சளி), தூசுகள், நுண்ணுயிர்கள் (microbes) போன்றவை வேகமாக வெளியேறுகின்றன.
மூச்சுப் பாதையில் தவறுதலாகச் செல்லும் தூசுகள், புகை, நீர்த் திவலைகள், உணவுத் துணுக்குகள் போன்றவையும் இருமலின் போது வெளித் தள்ளப்படும். மூச்சுப் பாதையில் உள்ள நுட்பமான உணர் ஏற்பிகள் (Pulmonary irritant receptors) இருமல் உருவாக முதன்மைக் காரணிகளாக உள்ளன.
இயல்பான நிலையில் இருமல் இவ்வாறு உருவானாலும் பலவிதமான நோய் நிலைகளும் இருமல் உருவாக காரணங்களாகின்றன.
மூச்சுப் பாதையில் ஏற்படும் தொற்று நோய்கள் (Respiratory tract infection), தடிமன் (Common cold), மூச்சுக் குழல் அழற்சி (Bronchitis), நுரையீரல் அழற்சி (Pneumonia), காச நோய் (Tuberculosis) போன்ற நோய்கள் இருமலை உண்டாக்குகின்றன. மூச்சப் பாதையில் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் (Respiratory allergies), உணவுக் குழாய் பின்னோட்டம் (வயிற்றுக்குள் சென்ற உணவு உணவுக் குழாய்க்கு தள்ளப்படுதல் – Gastro Oesophageal reflux), மாசுபட்ட காற்றினை சுவாசித்தல் (air pollution) போன்றவையும் இருமலை உண்டாக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன.
இது போன்ற நிலைகளில் இருமலின் மூலம் நோய் உண்டாக்கும் காரணிகள் உடலிலிருந்து வெளியேற்றப் படுகின்றன. அதாவது இருமல் என்பது உடலின் நோய் எதிர்ப்பாற்றாலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. (Innate immunity)
இப்படி வரும் இருமலை அடக்கினால் நோய் உண்டாக்கும் காரணிகள் உடலிலேயே தங்கி பெரும் கேடுகள் உண்டாகக் காரணமாகி விடும். இருமலை அடக்கினால் உண்டாகும் கேடுகளைக் கீழ்கண்ட சித்தர் பாடல் மூலம் அறிய முடியும்.
“காசத்தை அடக்கினாலோ
கதித்திடும் இருமல் மெத்த
வாசமாஞ் சுவாச முண்டாம்
மருவிடும் இருந்து நோயும்”
காசம் என்றால் இங்கே இருமல் என்று பொருள். இருமலை அடக்கினால் அதனை உண்டாக்கும் அடிப்படை நோய் நிலை மேலும் முதிரும். இதனால் தொடர் இருமல் உண்டாகும். அது பல உடல் நோய்கள் உருவாகக் காரணமாகும். முக்கியமாக இதய நோயினை உண்டாக்கும் என்று பாடல் தெரிவிக்கின்றது.
இருமலை அடக்குதல் என்பது நாமே முயற்சி செய்து அடக்குதல் என்பதும் இருமலை கட்டுப்படுத்தும் மருந்துகளை உட்கொண்டு இருமல் ஏற்படாமல் செய்வதும் அடங்கும்.
இருமலை கட்டுப்படுத்தும் (Cough suppressants) மருந்துகள் சில நோய் நிலைகளில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படும். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. இருமலை உண்டாக்கும் காரணனங்களைக் கண்டறிந்து அதனை நீக்குதல் வேண்டும். இருமலின் காரணிகள் உடலை விட்டு நீங்காமல் மருந்துகள் மூலம் மட்டும் கட்டுப்படுத்துவதால் நோய் முற்றி பல பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
இருமல் உண்டாகும் போது நாமாகவும் அடக்கக் கூடாது. மருத்துவப் பரிந்துரையின்றி (Medical prescription) இருமல் மருந்துகளை (Cough suppressants) பயன்படுத்துவும் கூடாது.
நலப்பயணம் தொடரும்........... |
||||||||
by Swathi on 14 Jul 2015 1 Comments | ||||||||
Tags: Coughing இருமல் சித்த மருத்துவம் இருமல் சித்த மருத்துவம் சித்த மருத்துவம் இருமல் | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|