LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

சிறு துளி

    நல்ல வெயில், லாரிகளும் பேருந்துகளும் சென்றும், வந்தும் கொண்டிருந்த அந்த தார் சாலையில் வயதான மனிதர் ஒருவர் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார். தாகம் வாட்டியது, நா வறட்சியால் தண்ணீர் எங்காவது கிடைக்குமா என்று கண்கள் அலை பாய தேடிக்கொண்டிருந்தார். சற்று தூரத்தில் ஒரு பழக்கடை கண்ணில் பட அங்கு சென்றவர் கொஞ்சம் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டார். தண்ணீர் இல்லை, காசு இருந்தால் ஜூஸ் தருகிறேன் என்று கடைக்காரர் சொன்னார். ஐயா என்னிடம் ஜூஸ் வாங்கும் அளவுக்கு பணம் இல்லை, கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் போதும் நான் போய் விடுகிறேன்.

     அன்று கடைக்காரருக்கு சரியாக வியாபாரம் ஆகவில்லையோ என்னவோ, அந்த கோபத்தில் இருந்திருப்பார் போலிருக்கிறது, அதெல்லாம் கிடையாது, போங்கள் இங்கிருந்து என்று விரட்டி விட்டார். பெரியவர் தம்பி தாகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறாய், எதையும் வியாபாரமாய் நினைக்காதே. இது ஒரு புண்ணிய காரியமல்லவா? தண்ணீர் கிடையாது போங்கள் இங்கிருந்து, மீண்டும் விரட்டி விட்டார்.அப்பொழுது கிழிந்த ஆடையுடன் ஒரு சிறுவன் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான், ஐயா, என் வீட்டிற்கு வாருங்கள், தண்ணீர் தருகிறேன்,என்று சொல்லி அவரை அழைத்து சென்றான்.

      அவன் வீடு என்று சொன்னது சாலையோரத்தில் போடப்பட்டிருந்த ஒரு பந்தல், அவ்வளவுதான். அது கித்தான் பையால் மூடப்பட்டு அதற்குள் ஒரு பெண் இருந்தாள்.

இந்த சிறுவன் அந்த பெண்ணிடம் அம்மா இவருக்கு ரொம்ப தாகமாய் இருக்கிறது, கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்றான். அந்த பெண் நாமோ இங்கு பிச்சை எடுப்பவர்கள், நம்மிடம் தண்ணீர் வாங்கி குடிப்பாரா என்று கேட்டாள். ஏன் அம்மா அப்படி கேட்கிறீர்கள்? அந்த பெரியவர் கேட்டார். ஐயா நாங்கள் இந்த ரோட்டோரம் தங்கியிருப்பவர்கள். நன்றாக இருந்தவர்கள்தான், இவன் அப்பா இறந்து விட்டதால் கிராமத்தை விட்டு பிழைப்பதற்கு இங்கு வந்தோம், இவனோ சிறுவன், எனக்கோ உடல் நிலை சரியில்லாத நிலைமை. அதனால், வறுமையின் காரணமாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களிடம் ஒரு உடைந்த அலுமினிய குவளை மட்டுமே இருக்கிறது, அது போக ஒரு பிளாஸ்டிக் குடம் இருக்கிறது. அதற்குள்தான் தண்ணீர் இருக்கிறது. அந்த குவளையில் கொடுத்தால் குடிப்பீர்களா? .

      அம்மா தாராளமாய் கொடு குடிக்கிறேன், சொன்னவர் அந்த பெண் கொடுத்த குவளை தண்ணீரை பிடித்து குடித்தவர், மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அம்மா மிக்க நன்றி, இந்த உதவிக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் என்னிடம் ஏதாவது இருக்கிறதா பார்க்கிறேன், தனது சட்டை பை, உடைகள் எல்லாவற்றையும் தடவி பார்த்தார். ஒரு ரூபாய் நாணயம் இருந்தது, அதை எடுத்தவர் தம்பி என்னிடம் ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்த ஒரு ரூபாய்

பிச்சை காசு என்று நினைத்து விடாதே. இந்த காசு மூலம் உன் வாழ்க்கையே மாறிவிட வாய்ப்பு உண்டு. சொன்னவர் அந்த காசை பையனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து நடந்தார்.

      அந்த பெண்ணும், பையனும் யோசித்து நின்றனர். இது வரை அவர்களுக்கு நிறைய பேர் சில்லறை காசுகளை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதை பிச்சையாகத்தான் நினைத்து கொடுத்திருக்கிறார்கள் இவர் மட்டும் காசை கொடுத்து உன் வாழ்க்கையை மாற்றிவிடும் என்று சொல்லி செல்கிறாரே. யோசனையிலேயே அன்று நாள் முழுவது இருந்தனர்.

      மறு நாள் அந்த பையன் ஒரு முடிவு செய்து அந்த பழக்கடைக்கு சென்று எலுமிச்சம்பழம் ஒரு ரூபாய்க்கு எவ்வளவு கிடைக்கும் என்று கேட்டான். அவர் ஐம்பது பைசா வீதம் இரண்டு கிடைக்கும் என்றார். ஒரு ரூபாய்க்கு இரண்டு பழம் வாங்கி வந்தான். அடுத்து இவர்கள் வைத்திருந்த குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் பிடித்து வந்தான். பின் இவர்கள் வைத்திருந்த உப்பு கொஞ்சம் எடுத்து தண்ணீரில் கலக்கி அதற்குள் இரண்டு எலுமிச்சம்பழங்களை பிழிந்தான்.

      அந்த குடத்தை வெளியில் கொண்டு வந்து வைத்து, ஒரு தாளில்  “தாகம் எடுப்பவர்கள் குடிக்கலாம்” எழுதி அந்த குடத்தில் ஒட்டி வைத்து ஒரு அட்டையும் மூடி வைத்து அதன் மேல் அந்த நசுங்கிய அலுமினிய குவளையும் வைத்தான்.

அந்த பகுதியில் கூலி வேலை செய்பவர்களும் நிறைய இருந்தனர். அவர்களுக்கு அந்த ஜூஸ் கடை என்பது எட்டாக்கனிதான்.இந்த குடத்தை பார்த்தவுடன் தன் கையில் வைத்திருந்த சில்லறை காசுகளை போட்டு விட்டு குடித்து விட்டு சென்றனர். மதியம் மேல் அந்த சிறுவன் குடத்தை வந்து பார்த்த பொழுது

அதில் சில்லறை காசுகள் இருந்தன. எடுத்து எண்ணி பார்க்க மூன்று ரூபாய்க்கு மேல் இருந்தது. மீண்டும் பழக்கடைக்கு வந்தவன் எலுமிச்சம்பழங்களை வாங்கி பிழிந்து  குடத்தில் தண்ணீர் பிடித்து உப்பை போட்டு கலக்கி வைத்தான்.

      மாலை அந்த குடத்தருகே மேலும் சில்லறை காசுகள் கிடந்தன. எண்ணி பார்க்க கிட்டத்தட்ட ஐந்து ரூபாய்க்கு மேல் இருந்தது.

      மறு நாள் பழக்கடைக்கு சென்றான். பழக்கடைக்காரர், நேற்று இவன் செய்ததை பார்த்துக்கொண்டிருந்தார். இந்தாப்பா நேற்று நிறைய கூலி ஆளுங்க உன் குடத்துல வச்சிருக்கற தண்ணிய குடிக்கறதை பார்த்தேன்.நமக்குள்ள சின்ன வியாபாரம் பண்ணிக்கலாம். நான் கொஞ்சம் சாமான் தாரேன், நீ எனக்கு அந்த பொருளுக்கான வாடைகையை கொடுதுடணும் சரியா? அவரை பொருத்தவரை வியாபாரம் அது போதும். வியாபாரம் எங்கு ஆனால் என்ன?

      அந்த சிறுவன் யோசித்து சரி என்றான். அவர் ஒரு பெஞ்சும், இரண்டு புது குடங்களும், கொஞ்சம் டம்ளர்களும் கொடுத்தார். அது போக ஐந்து ரூபாய்க்கு எலுமிச்சம்பழங்களையும் கொடுத்தார்.இப்பொழுது ஒரு குடத்தில் உப்பு கலந்தும், மற்றொன்றில் சர்க்கரை கலந்தும் வைத்தான். அன்றும் ஏழை மக்கள் அவனுக்கு சில்லறைகளை நிறைய போட்டிருந்தனர். அவன் அதை எடுத்து கொண்டு பழக்கடைக்காரருக்கு, எலுமிச்சை பழத்துக்குண்டான தொகையும், குடம், பெஞ்சுக்குண்டான வாடைகையும் கொடுத்தான். அது போக கையில் பத்து ரூபாய்க்கு மேல் இருந்தது.

      அவன் அம்மாவிடம் சொல்லி விட்டான் இனி பிச்சை எடுப்பது கூடாது, இது நமக்கு பிழைப்பதற்கு ஒரு வழி. அதனால், இதனையே செய்யலாம்.

      நாளடைவில் நல்ல வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்தான் அந்த சிறுவன். இப்பொழுது இவனே புதிய குடங்களும், மற்ற பொருட்களும் வாங்கி விட்டான். ஒன்றே ஒன்று மட்டும் உறுதி எடுத்து கொண்டான். ஏழைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதால், அவர்களிடம் அதிக தொகை கேட்கவில்லை. அதனால் அதிகமான வாடிக்கையாளர்கள் அவனது இடத்துக்கு வர தொடங்கினர். அவனும் தன் தாயுடன் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி கொண்டான்.

      காலங்கள் உருண்டன. அன்று பார்த்த அந்த சிறுவன் இப்பொழுது நகரில் நான்கைந்து பழக்கடைகளுக்கு சொந்தக்காரன். நகரில் அவனுக்கும், அவன் அம்மாவுக்கும் சொந்தமாக ஒரு வீடு கட்டிக்கொண்டான். என்றாலும், இந்த கடை எப்பொழுதும் போல் ஏழைகளுக்காகவே இப்பொழுதும் சேவையாக செய்து கொண்டிருக்கிறான். அவனும் இளைஞனாய் ஆகியிருந்தான்.

 

      குட்டீஸ் வளர்ச்சி என்பது எப்படி வரும் என்று சொல்ல முடியாது. முடிந்தவரை இல்லை, முடியாது என்பது போன்ற வார்த்தைகளை கையாளாதீர்கள்.

Drop of water
by Dhamotharan.S   on 25 May 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
20-Jun-2018 04:03:36 Subasan said : Report Abuse
இவற்றை எமது வலைப்பக்கத்தில் பகிர முடியுமா?
 
01-Jun-2018 09:27:51 ஸ் வெண்ணிலா said : Report Abuse
good story
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.