|
|||||
வேதசத்தி வற்மக்கலை – அறிமுகம் - முனைவர் ந. சண்முகம் |
|||||
வேதசத்தி வற்மக்கலை – அறிமுகம் - முனைவர் ந. சண்முகம் வேதசத்தி வற்மக்கலை: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும். பண்டைய சேர நாடான இன்றைய கேரளத்தில் கொல்லம் பகுதி வரையிலும் வற்மக்கலை அல்லது மர்மக்கலையான இந்தக் கலை வழங்கப்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக ரகசியமாக வற்மக்கலையானது குருகுலத்தில் கற்பிக்கப்பட்டு வந்தது. ஒரு மாணவன் இந்தக் கலையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் ஒரு குருவை நாடிச் செல்ல வேண்டும். வேதசத்தி வற்மக்கலையானது ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லும் பயிற்சி மட்டுமல்ல. இந்தக் கலைக்கான எழுத்தாதரங்கள் சுவடிகளிலும். தாள்களிலும் எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்தன. அப்படிப்பட்ட ஒரு அரிய ரகசியக்கலையாக வேதசத்தி வற்மக்கலை விளங்கியது. ஆற்றலைப் பற்றிய கல்வி: வேதசத்தி என்பது ஆற்றலைக் குறிக்கின்ற ஒரு சொல் ஆகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருமந்திரம் என்ற நூலைத் தந்த திருமூலர் தன்னுடைய நூலில் ஆற்றல் என்ற ஒரு பொருளைப் பயன்படுத்துவதற்கு ‘வேதசத்தி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த உடலில் வேதசத்தி என்ற ஆற்றல் இருக்கிறது. அது இந்த உடலை அழியாமல் நீண்டநாள் பாதுகாக்கிறது என்ற கருத்தமைப்பில் ஒரு மந்திரத்தைப் படைத்துள்ளார். எனவே இந்த உடலுக்குள் இருக்கக் கூடிய மிகப்பெரிய நுட்பமான ஆற்றலை வேதசத்தி என்ற சொல்லால் திருமந்திரத்தில் திருமூலர் பயன்படுத்தியிருக்கிறார். எனவே ‘வற்மக்கலை’என்பது ஆற்றலைப் பற்றிய ஒரு கல்வி ஆகும். ஆசான்: குரு என்பவரை ‘ஆசான்’ என்பர். ‘ஆசான்’என்பது மிகப்பெரிய கௌரவப்பதவியாகும். இப்பதவிக்கான தகுதி என்னவென்றால் முதலில் பொய் சொல்லக் கூடாது. நான்கு வேதங்களையும் கற்றுத் தெரிந்திருக்க வேண்டும். தொடக்கத்தில் பல துறை சார்ந்து நிபுணத்துவம் பெற்றவர்களை ‘ஆசான்’ என்று சொல்வார்கள். காலம் செல்ல செல்ல ஒரு துறை வல்லுநர்களை ‘ஆசான்’என்று அழைக்கின்ற முறை வந்துவிட்டது. வற்மக்கலையின் ஆசான்கள் அவர்களுடைய தின வேலையைச் செய்வார்கள். அவர்களுடைய அன்றாடத் தொழிலைச் செய்வார்கள். மாலையில் அவர்களைத் தேடி வரும் மாணவர்களுக்குத் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இப்படியாக வற்மக்கலையானது கற்பிக்கப்பட்டது. மருத்துவக் கலையான வற்மக்கலை: வற்மக்கலையை ‘தற்காப்புக் கலை’என்று கூறுவார்கள். இது தற்காப்புக் கலையாகி ‘களரிப்பயிற்சி’என்ற பெயரில் கேரளத்தில் இருக்கிறது. அதில் தெற்கங்களரி. வடக்கங்களரி என்று இரண்டு பெயர்கள் உள்ளன. இதில் பயிற்சி செய்கிற போது பயிற்சி செய்கிற மாணவர்களுக்கு உடலுக்கு வெளியேயோ அல்லது உள்ளேயோ ஏதேனும் அடிபட்டால் அதை உடனே சரிசெய்து விடுவர். சில குருகுலங்கள் மட்டும் வற்மக்கலையை மருத்துவத்திற்காகப் பயன்படுத்தின. ஒரு காலத்தில் வற்மக்கலை குறித்து வெளியே தெரிவது என்னவென்றால் அடி பட்டவர்களைச் சரிசெய்வது ஆகும். நட்சத்திரங்களோடு தொடர்புடைய வற்மம்: ‘வற்மம்’ என்பது காற்று. நாம் சுவாசி்ப்பதன் மூலம் உடலுக்குள் சென்று பல இயக்கங்களைச் செய்யக் கூடிய காற்றைத் தான் ‘வற்மம்’என்ற சொல் குறிக்கின்றது. வற்மக்கலையானது தற்காப்புக் கலையோடு ஒரு புறம் வளர்ந்திருக்கிறது. வானியல் கலையோடு மறுபுறம் வளர்ந்திருக்கிறது. ஒரு குழந்தை பிறந்தது என்றால் அந்தக் குழந்தை என்ன நட்சத்திரத்தில் பிறந்தது என்று ஜோதிடர்கள் குறிப்பு எழுதுகிறார்கள். இதுவும் வேதசத்தி வற்மக்கலையோடு தொடர்புடையதே. எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தால் உடலில் என்னென்ன பலன் ஏற்படும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. சிகிச்சைக்காக வருபவர்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்பதை அறிந்து கொண்டால் குணப்படுத்தும் வற்மக்கலையும் எளிதாக அமையும். மந்திரமும் வற்மமும்: மந்திரம் என்பது நாம் பேசுகிற காற்று.. மந்திரத்திற்கும் வற்மத்திற்கும் தொடர்பு இருக்கிறது. காற்று உள்ளேயும். வெளியேயும் இயங்குவதற்கு எது உதவுகிறதோ அதை மந்திரம் என்பர். ஒருவர் சிகிச்சைக்கு வருகிறாரென்றால் அவரை சிகிச்சை செய்யும் குருவிற்கு. நோயாளி பேசுகிற பேச்சின் ‘தொனி கோட்பாடு’தெரிந்திருக்க வேண்டும். அவர் இயல்பாகப் பேசுகிற உச்சரிப்பு எது. இன்றைக்கு அந்த நோயினால் எந்தெந்த உச்சரிப்பெல்லாம் வரவில்லை எனத் தெரிந்து கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இது ‘தொனி சாஸ்திரம்’ எனப்படும். கற்றுக் கொள்பவனின் தகுதிகள்: உளவியலுக்கும் வற்மத்திற்கும் தொடர்பு இருக்கிறது. வற்மக்கலை என்பது ஒரு பொருள் சார்ந்த விஷயமல்ல. பல்வேறு துறைகள் சார்ந்த விஷயங்களெல்லாம் ஒரு இடத்தில் குவிக்கப்பட்ட விஷயம் தான் வேதசத்தி வற்மக்கலை. வேதசத்தி வற்மக்கலையை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அவன் தமிழ் புலமை பெற்றவனாக இருக்க வேண்டும். வானியல் சாஸ்திரம் சிறிது அறிந்தவனாக இருக்க வேண்டும். அங்க லக்ஷணம் தெரிந்திருக்க வேண்டும். நோயாளி அல்லது சிகிச்சை பெற வரும் நபரின் நடையை வைத்து இவருக்கு எந்த இடத்தில் அடிபட்டிருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். வேதாந்த தத்துவம். சித்தாந்த தத்துவம். சமண தத்துவம். பௌத்த தத்துவம் ஆகியவை அடங்கி இருக்கக் கூடிய தமிழ்நாட்டுப் பண்பாட்டினுடைய கலைக் களஞ்சியமாக வற்மக்கலை உள்ளது. வற்மக்கலையின் காலம்: தொல்காப்பியத்திலிருந்து கி.பி. 16ம் நூற்றாண்டு வரை கிடைக்கக் கூடிய நூல்களில் வேதசத்தி வர்மக்கலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. வற்மக்கலையானது 16 விலா எலும்புகளை உடைய மனிதனிடமிருந்து தரவுகளை எடுத்திருக்கிறது. இன்றைய மனிதனின் விலா எலும்புகள் 12 ஆகும். எனவே 16 விலா எலும்புகள் கொண்ட மனிதன் எப்போது வாழ்ந்தான் எனத் தெரியவந்தால் வேதசத்தி வற்மக்கலையின் காலம் தெரியவரும். பரிபாஷை சொற்கள்: வற்மக்கலையின் நூல்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் 20 முதல் 30 சதவீத சொற்கள் சமஸ்கிருதத்தில் காணப்படுகின்றன. மேலும் மலையாளம். கன்னடம். தெலுங்கு. உருது மொழி சொற்களும் இருக்கின்றன. எனவே வற்ம நூலைப் படிக்க வேண்டுமென்றால் மொழிப் புலமையும் வேண்டும். இன்று ஓலைச்சுவடிகளாகவும். தாள்களாகவும் கிடைக்கக் கூடிய வற்மக்கலை பற்றிய குறிப்புகள் கிட்டத்தட்ட 120 தலைப்புகளில் உள்ளன. அதில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பரிபாஷை சொற்கள் உள்ளன. வாயுக்களின் இயக்கம்: வற்மக்கலை என்பது உடல் கூறுகளை எல்லாம் பேசக்கூடிய மருத்துவக்கலை.. பிராண வாயு சுவாசிப்பதன் வழி உள்ளே சென்று உடலில் செய்யும் வேலைக்கு ஏற்ப 10 விதமான வாயுக்களாகப் பகுக்கப்படுகிறது. ஜீரண சக்தியைக் கொண்டு வருவதற்கு ஒரு வாயு. பேசுவதற்கு ஒரு வாயு. உடல் கழிவுகளை வெளியேற்றுவதற்கு ஒரு வாயு என 10 விதமான வாயுக்களும் தத்தம் வேலைகளுக்கு ஏற்ப பகுக்கப்படுகின்றன. வாயுக்களின் இயக்கம் தடைப்பட்டால் தடுமாறிப் பல நோய்கள் ஏற்படும். காற்று இயக்கம் தடைப்படுகிற போது நாம் அதை ஒழுங்கு செய்ய வேண்டும். வாத நோய். பித்த நோய் போன்ற நோய்களைச் சரிசெய்வது தான் வற்மக்கலை. பல்வேறு காரணங்கள்: உடலில் அடிபட்டால் மட்டும் தான் நோய் ஏற்படும் என்பது அல்ல. அதிகமாக உணவு உட்கொள்வதாலும் நோய் ஏற்படும். உண்ட உணவு ஜீரணமாகவில்லையெனில் நோய் ஏற்படும். அதிகமாகத் தூங்கினாலும் நோய் ஏற்படும். தவறுதலான உடற்பயிற்சியாலும் நோய் ஏற்படும். வற்மத்தின் கிளைகள்: படுவற்மம். தொடு வற்மம் ஆகியவை புள்ளிகள் ஆகும். படு வற்மமானது மூளையோடு நேரடியாகவும். மறைமுகமாகவும் தொடர்புடையது. படு வற்மத்தின் கிளைகளில் இருக்கக்கூடிய வற்மபுள்ளிகள் தொடு வற்மத்தில் அடங்கும். ‘தொடுதல்’என்றால் ஒன்றோடு ஒன்று மாட்டுதல். கட்டுதல் என்று பொருள்படும். இந்தத் தன்மையை உடையதே தொடு வற்மம். ஒரு நோய்க்கு ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு வற்மங்களை இயக்குவது ‘இணை வற்மம்’ஆகும். ஒரு வற்மத்தை சுற்றிப் பல வற்ம புள்ளிகள் இருக்கின்றன. இவை ‘பக்க வறமம்’எனப்படும். எனவே ஒரு வற்மத்தைத் தொடும் போது பாதுகாப்பாகத் தொட வேண்டும். 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி வற்மங்கள் உள்ளன. ராகு. கேது போன்ற கிரகங்களின் அடிப்படையிலேயும் வற்மங்கள் உள்ளன. காற்றினுடைய அளவை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் வற்மபுள்ளிகள் இருக்கின்றன. எனவே மிக நுட்பமான ஆற்றலை உடையது வற்மக்கலை என்பது இதிலிருந்து புலனாகின்றது. சில வற்மங்கள்: கொட்டாவி வற்மம் என்ற ஒன்று உள்ளது. கொட்டாவி விடும் போது சத்தமிடுவதோ. தலையில் கைவைக்கவோ கூடாது. ஏனெனில் கொட்டாவி உடல் இயக்கம் சார்ந்த ஒரு செயல் ஆகும். கரு உறக்கக் காலம் என்ற ஒன்று உள்ளது. நன்கு தூங்குபவர்களை எழுப்பும் போது தட்டி எழுப்பக் கூடாது. உறக்கத்தில் தான் செல்கள் தன்னை புதுப்பித்துக் கொள்ளும். எனவே உறக்கத்தில் உடனே தட்டி எழுப்பும் போது செல்கள் பாதிக்கப்படும். தும்மும் போது மிதமாகத் தும்ம வேண்டும். மூக்கை மறைத்துக் கொண்டு தும்ம வேண்டும். தும்மும் போது உடலைப் பெரிய அளவில் அசைக்கக் கூடாது. வற்மம் என்பது ஒரு புள்ளி சார்ந்த விஷயம் அல்ல. நுட்பமான திசுக்கள் சார்ந்த விஷயம். அறிவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட அற்புதமான கலை வேதசத்தி வற்மக்கலை ஆகும். |
|||||
by on 24 Jul 2020 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|