LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

அகவாழ்வில் தோழி

முன்னுரை

அக இலக்கியங்களில் தலைவியின் உணர்வுகளைப் பெற்றோரைவிட, மற்றோரை விட மிகச் சிறப்பாகத் புரிந்து கொள்ளும் பாத்திரமாகத் தோழி விளங்குகிறாள். அக இலக்கியங்களில் தோழி பெறும் சிறப்பிடம் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.

தோழி ஓர் அறிமுகம்

தோழி என்பவள் செவிலியின் மகள் இது குறித்துத் தொல்காப்பியர்,

தோழி தானே செவிலி மகளே (தொல்.பொருள்-123)

என்று செவிலியின் மகளாகத் தோழியைக்காட்டுகிறார்.

தோழி அக இலக்கிய முக்கோண வடிவத்தின் மேல் முனையாக விளங்குகிறாள். அவள் தலைவன் தலைவி என்ற இரு கரைகளை இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறாள்.

1. தோழியின் பின்னணி 2. தோழியின் இலக்கணம் 3. தோழியின் பாத்திரச் சிறப்பு 4. தோழிக்குரிய மரபு

என்று பகுக்கப்பட்டு விளக்கப்படுகின்றன.

தோழியின் பின்னணி

தோழியின் வாழ்வு பற்றிய செய்திகள் சங்கப்பாடலில் காணப்படவில்லை. ஆயினும் அவளுக்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பு முந்தைய தலைமுறையிலே ஏற்பட்டதாகும் என்பது மட்டும் தெரிகிறது. தோழியின் தாயாகிய செவிலியும், தலைவியின் தாயாகிய நற்றாயும் நெருங்கிய தோழியராய் விளங்கியவர்கள் என்பது குறிப்பாகத் தோன்றுகிறது.

தோழியர் பலர் இருந்தனர் என்பதை இளம்பூரணரும் புலவர் குழந்தையும் கூறுகின்றனர். தோழியர் பலர் இருப்பினும் தலைவிக்கு உயிர்த்தோழிதான் தோழியாக சிறப்பிக்கப்படுவாள் என்பதை நாம் உணர வேண்டும்.

கண்ணகிக்குத் தேவந்தி என்ற தோழியும்
மணிமேகலைக்குச் சுதமதி என்ற தோழியிம்
மாதவிக்கு வசந்தமாலை என்ற தோழியும்

இருந்தனர் என்னும் செய்தி ஈண்டு எண்ணிப் பார்க்கத்தக்கது. உலகியலில் உயிர்த்தோழன், உயிர்த்தோழி என ஒருவரையே சுட்டும் முறை தற்காலத்தும் வழங்கக் காணலாம்.

தோழியின் இலக்கணம்

தோழி தலைவியோடு ஒத்த வயதுடையவள் உடன் வளர்ந்து விளையாடிப் பழகி அவளை விட்டுப் பிரியாதவள் உணர்வாலும், ஒத்தவள் ஒன்றித் தோன்றுந்தோழி எனத் தொல்காப்பியர் கூறுகிறார். இதன்மூலம் தோழியும், தலைவியும் தொட்டில் தொட்ட இப்பிணைப்புக் கருதி இவ்வாறு கூறியுள்ளதாக நாம் உணர முடியும். மேலும் தோழி, தானே ஆராயும் அறிவு மிக்கவள். தலைவிக்கு உயிர்போன்று இன்றியமையாதவள் தவைவிக்கு தீங்கு நேராமல் பாதுகாப்பவள், தலைவிக்கு வருத்தம் நேர்ந்த போது ஆறதல் கூறுபவள். களவுக்காலத்திலும் தலைவியின் துணையாக இருப்பவள். தலைவனுக்கும், தலைவிக்கும் ஏற்றவிடத்தில் தன் தகுதிக்கு உட்பட்டு அறநெறி கூறுபவள். தலைவன் தலைவிக்கு இடைளேய ஏற்படும் ஊடலைத் தீர்க்கும் வாயிலாகவும் இருப்பவள்.

தலைவியின் இன்னொரு கண்ணாக அமைந்திருக்கிறாள். நேர்மை, கண்டிப்பு, கனிவு, அமைதி ஆகிய குணங்கள் தோழிக்கு இயல்பாக அமைந்துள்ளன.

தோழியின் பாத்திரச் சிறப்பு

காதலர்கள் உணர்ச்சி, மாந்தர்கள் உணர்ச்சியில் விளையும் அகப்போராட்டங்களையும், மோதல்களையும் உள்ளவாறு அறியும் அறிவுப் பாத்திரம் தோழியாவாள்.

வரம்பு கடந்து செல்லும் தலைவனை இடித்துரைத்தும் தனிமை தாங்காத தலைவியை ஆற்றியிருக்க அறிவுறுத்தலும் செய்பும் ஒளிவீசும் ஆசான் பாத்திரமாகத் தோழி விளங்குகிறாள்.

தலைவிக்கு மனக்கசப்பு தோன்றும் வேளையில் ஏற்ற அறிவுரையாகிய ஊட்டச்சத்தளித்து மன நோய்களைக் களைந்திடும் மருத்துவப் பாத்திரமாகவும் தோழி தொண்டாற்றுகிறாள்.

அறிவுத்திறன் மிக்க பாத்திரமாக விளங்குகிறாள். அகப்பொருள் பற்றிய பாடல்களில் வரும் அகமாந்தருள் பெரும் பொறுப்பு உடையவள் தோழி. அவள் அறிவும், பண்பும், திறனும் மிக்கவளாக இருந்தால் தான் தலைவனுக்கும், தலைவிக்கும் தக்க வழிகாட்டி அவர்களை நன்னெறிப்படுத்துதல் இயலும். உலகியல் தெளிவும் இருந்தால்தான் காதல் நெறியில் நேரும் இடர்ப்பாடுகளை அறிந்து உற்ற துணையாக இருந்து வர இயலும். இத்தகையவள் தோழி என்பதை சங்கப்பாடல்களில் வழி அறிய முடிகிறது.

தோழிக்குரிய மரபு

புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்துஞ்
சொலத்தகு கிளவி தோழிக்குரிய (தொல்.பொருள்-155)

இதற்கு ஒப்பாக,

அலந்தாரை யல்லல் நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். (குறள் 1303)

என்ற வள்ளுவரின் இக்குறளை ஒப்பிடலாம். அதாவது தம்மோடு வருத்தம் கொண்டு பிணங்கிய வரை ஊடலுக்குணர்த்தி தழுவாமல் விடுதல் துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வருவது போன்றதாகும். அதுபோல் தலைவன், தலைவி இருவரும் ஊடலின் காரணமாகப் பேசாமல் இருந்தால் நன்மை விளையாது இருவருக்கும் இடையில் ஊடல் தீர்க்க அழும் பொருட்டுத் தோழி செயல்படுகிறாள் என்பதை இந்நூற்பாவின் மூலம் அறியலாம்.

தோழியின் திறன்

தலைவியின் காதல் வாழ்வு வெற்றி பெறவும் அதை நிலை நிறுத்தவும் தன் அறிவையும் செயலாற்றலையும் கருவியாகக் கொள்கிறாள் தோழி. அதனால் தொல்காப்பியரும் அவளை அறிவுடையவளாகக் காட்டுகிறார். அவளுடைய சொல்லாற்றலால் தலைவன், தலைவி தாயார் முதலியவர்களைத் தன் சொல்வழி ஒழுகச்செய்யும் திறன் பெற்றவளாகிறாள். அவள் பேசும் சொற்களில் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையும், வருந்தாமல் திருத்தும் பண்பும் புலப்படும்.

உள்ளுறை வைத்துத் தோழி திறம்படச் செயலாற்றுபவள் என்பதனைச் சங்கப்பாடல்களில் தோழி கூற்றுக்கள் வழி அறியலாம். இதில் இடம் பெறும் செய்திகளை

1. பேச்சுத்திறம் 2. தோழியின் அறக்கருத்துக்கள் என்று பகுக்கலாம்.

பேச்சுத்திறம்:

தலைவனின் செயல்கள் அனைத்தும் தோழியால் ஐயக்கண் கொண்டே பார்க்கப்படுகிறது. தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோழியிடம் உறுதியளிப்பதும் பின் திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டு செல்வதும் ஐயத்தை உறுதியளிப்பதாக உள்ளது. இதனால் தோழி தலைவியின் இரங்கத்தக்க நிலையை எண்ணி வருந்துகிறாள்.

மனதில் களிப்புட.ன் சொல்லில் கடுமையை வெளியிடும் சொற்களைத் செங்கடுமொழி என்பர். தலைவியின் மனத்தை நல்ல நினைவுகளில் திருப்புவதற்குத் தோழி கையாண்ட அரிய உளவியல் முறை இயற்பழித்து மொழிதலாகும். தலைவனின் இயல்புகளைப் பழித்தாலே இயற்பழித்தலாகும்.

சொன்ன சொல்லில் மாறுபட்டுத் தலைவன் பிரிந்தான் அதனால் தலைவி மயங்கி நிலை கலங்கினாள்.

நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும்
செல்வமன்று தன் செய்வினைப் பயனெனச்
சொல்லுப என்ப சான்றோர் நேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே (நற்.பா.210)

என்ற பாடலில் தலைவன் தலைவியோடு அன்போடு வாழ்வதே பெரிய செல்வமாகும். என்று தலைவனைப் பழிப்பது தலைவனுக்கு அறிவுரை கூறுவதாக உள்ளது.

முடிவுரை:

தோழி சங்க அகவாழ்வில் நுண்மாண் நுழைபுலம் மிக்க அறிவாற்றலோடு தலைவி களவு வாழ்வை இல்லற வாழ்வாக மாற்றுவதில் பேரிடம் பெறுகிறாள். தலைவி நாணம் மீதுரத் தன் காதலுணர்வை வெளிப்படுத்தும் திறன் இல்லாதவள் அவளது காதலைக் குறிப்பால் அறிந்து தலைவனோடு சேர்த்து வைக்கும் தோழியின் வாழ்விற்குப் பெருந்துணை புரியும் கருவிகளாக அமைகின்றன.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.