LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 899 - நட்பியல்

Next Kural >

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடையே தன் பதம் இழந்து கெடும். '(''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உயர்ந்த கோட்பாட்டை யுடையார் வெகுள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும். இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
ஏந்திய கொள்கையார் சீறின் - உயர்ந்த நோன்புகளைக் கடைப்பிடித்த அருந்தவர் சீற்றங்கொள்ளின்; வேந்தனும் இடை முரிந்து வேந்து கெடும்-தேவருலக அரசனும் இடையே தன் பதவியிழந்து கெடுவான். "வேந்தன் மேய தீம்புன லுலகமும்" என்பது தொல்காப்பியம்(பொருள்.அகம்.5).நல்வினை செய்த இல்லறத்தாருள் பொது மக்கள் தேவராகவும் மூவேந்தரான அரசர் தேவர்க்கரசராகவும், மறுமையில் தேவருலகத்தில் தோன்றுவர் என்பதும் ,விண்ணுலக வேந்தனை நல்வினையால் வென்ற மண்ணுலக வேந்தன் மறுமையில் விண்ணுலக வேந்தனாவனென்பதும் பண்டைத் தமிழர் கொள்கை. போர்க்களத்திற் பின்வாங்காது, மறத்தொடு பொருதிறப்பதும் நல்வினை போன்றே விண்ணுலகத் தகுதியாகக் கொள்ளப்பட்டது. பிராமணர்க்கு விருந்தோம்பல் முதலிய நல்வினைத்தகுதியும் போர் செய்திறக்கும் மறவினைத் தகுதியும் இன்மையால் , வேள்விசெய்தலையே விண்ணுலக வேந்தன் தகுதியாகத் தம் தருமசாத்திரம் என்னும் அல்லற நூல்களில் வரைந்து கொண்டனர். இந்திரன் என்னும் வடசொல்லும் அரசன் என்றே பொருள் படுவதையும், தேவேந்திரன், நரேந்திரன், கவீந்திரன், மிருகேந்திரன், கசேந்திரன் எனப் பொதுச் சொல்லாயும் வழங்குவதையும், கிறித்துவிற்குமுன் தமிழகம் முழுதும் மூவேந்தர் ஆட்சிக்குட்பட்டே யிருந்தமையும், வேந்தனும் இந்திரனும் மழைத் தெய்வமாகவே வணங்கப்பட்டமையையும் வேந்தன் விழாவே இந்திர விழாவென வடநாட்டில் வழங்கியமையையும், ஆரியர் தென்னாடு வந்தபின் அவ்வடநாட்டு வழக்கே தமிழகத்திலும் புகுத்தப்பட்டமையையும், நோக்குக. நகுடன் அகத்தியனால் வெகுளப்பட்டுத் தன் இந்திரப்பதவியை இழந்தானென்று, பரிமேலழகர் கூறியிருக்கும் ஆரியக்கட்டுக் கதை இங்கு எடுத்துக்காட்டாகாது. உம்மை உயர்வு சிறப்பு; இக்குறளால் விண்ணுலக வேந்தனும் முனிவர் வெகுளிக்குத் தப்ப முடியாமை,கூறப்பட்டது.
கலைஞர் உரை:
உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
உயர்ந்த தவக் கொள்கையுள்ள மகான்கள் கோபித்துக் கொள்ள நேர்ந்து விட்டால் கோபிக்கப்பட்டவன் அரசனாக இருந்தாலும் அப்போதே அவன் வலிமை முறிந்து அரசாட்சியையும் இழந்து விடுவான்.
Translation
When blazes forth the wrath of men of lofty fame, Kings even fall from high estate and perish in the flame.
Explanation
If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.
Transliteration
Endhiya Kolkaiyaar Seerin Itaimurindhu Vendhanum Vendhu Ketum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >