LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 851 - நட்பியல்

Next Kural >

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர்.(மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்றுவிளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும்கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று.இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர். இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
இகல்-மாறுபாடு; எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய்- இயங்குதிணைப்பட்ட எல்லாவுயிர்கட்கும் இனத்தொடு கூடி வாழாமைக்கு ஏதுவான, பிரிவினை யென்னும் தீய குணத்தை வளர்க்கும் மனநோய்; என்ப- என்று கூறுவர் அறநூலார். சேக்கையும் உணவும் இணைவிழைச்சும் பற்றி அஃறிணையுயிரினங்கட்குள்ளும் இகல் விளைதலின், 'எல்லாவுயிர்க்கும்' என்றும், ஒன்றுபட்டிருக்க வேண்டிய இனத்தைப் பல்வேறு பிரிவாகப் பகுத்தலால் 'பகல்' என்றும், கூறினார். சேக்கை தங்குமிடம். இகலென்னுந் தீக்குணமுடைய மாந்தர் உயர்திணையாகாது அஃறிணைப்பாற்படுவர் என்பது தோன்றப் 'பண்பின்மை பாரிக்கு நோய்' என்றார்.
கலைஞர் உரை:
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இகல் என்பது வெளியில் பகைமை காட்டாமல் மனத்தில் வைத்திருக்கிற மனத்தாபமாகிய பகைமைக் குணம்.) குரோதம் என்பது எல்லா மனிதர்களுக்கும் 'விரோதம்' என்கிற அன்பின்மையை உண்டாக்கி அதை வளரச் செய்கிற ஒரு வியாதி.
Translation
Hostility disunion's plague will bring, That evil quality, to every living thing.
Explanation
The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.
Transliteration
Ikalenpa Ellaa Uyirkkum Pakalennum Panpinmai Paarikkum Noi

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >