LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 748 - அரணியல்

Next Kural >

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
முற்று ஆற்றி முற்றியவரையும் - தானைப் பெருமையால் சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும்; பற்றி யார் பற்று ஆற்றி வெல்வது அரண் - தன்னைப்பற்றிய அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வதே அரணாவது. (உம்மை, சிறப்பும்மை. பற்றின் கண்ணே ஆற்றி என விரியும். பற்று - ஆகுபெயர். 'வெல்வது' என, உடையார் தொழில் அரண்மேல் நின்றது. பெரும்படையானைச் சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி, வெல்லும் இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இவை ஏழு பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
சூழவல்லாரைச் சூழ்ந்து நலிந்தவரையும் தன்னகத்து நின்று காக்கவல்லவராய்க் காப்பவர் வெல்வது அரணாவது. பற்றாற்றுதல் -தாம் பற்றின இடம் விடாது வெல்லுதல்.
தேவநேயப் பாவாணர் உரை:
முற்று ஆற்றி முற்றியவரையும்-படைப்பெருமையால் வளைதல் வல்லவராய் வந்து வளைந்த உழிஞையாரையும்; பற்றியார் பற்று ஆற்றி வெல்வது-மதிலரணைப் பற்றிநின்ற நொச்சியார் சிறுபடையினராயினும் தாம் பற்றிய விடத்தைவிட்டு அகலாது நின்று பொருது வெல்வதற்கு இடமானதே; அரண்-சிறந்த கோட்டையரணாம். முற்றியவரையும் என்னும் சிறப்பும்மையால் படைப்பெருமை பெறப்பட்டது. அதனால், அதற்கு மறுதலையாகச் சிறியபடையினராயினும் என்பது வருவித்துரைக்கப்பட்டது. ஒரு மாநகர் முழுவதையும் வளைதற்கு மாபெரும்படை வேண்டும். பற்றாற்றுதல் பற்றிய விடத்தில் நின்று பொருதல்; இடவேற்றுமைத்தொகை. 'பற்று' ஆகுபெயர். அரண்சிறப்பால் சிறுபடையும் பெரும்படையை வெல்லும் என்பது கருத்து. 'நிலனும் பொருளும் காலமும் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட வவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே.' என்னும் தொல்காப்பிய நெறிமொழிப் படியும் (சொல். 37), உலக வழக்குப்படியும், பெயரெச்சம் இடத்தையும் தழுவுமாதலால், "வெல்வ,தென உடையார் தொழில் அரண்மேனின்றது." என்று கொள்ளத் தேவையில்லை. வெல்லும் அது-வெல்லுமது-வெல்லுவது-வெல்வது. இவ்வெழுகுறளாலும் நல்லரணின் இலக்கணங் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
முற்றுகையைத் திறமையுடன் நடத்தி, கோட்டைக்குள் புகுந்து விட்டவர்களையும் உள்ளிருக்கும் வீரர்கள் பிடித்துக் கொள்ளக் கூடிய இரகசிய அமைப்புக்களும் உள்ளதாக இருப்பது கோட்டை.
Translation
Howe'er the circling foe may strive access to win, A fort should give the victory to those who guard within.
Explanation
That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.
Transliteration
Mutraatri Mutri Yavaraiyum Patraatrip Patriyaar Velvadhu Aran

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >