LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- நீல.பத்மநாபன்

பொருத்தம்

மூர்த்தி அந்த வீட்டுக்குள் நுழையும் போது, வீடு அமைதியில் ஆழ்ந்து கிடந்தது. வெளி முற்றத்தைக் கடந்து படியின் அருகில் நின்று கொண்டு செருப்பைக் கழற்றிப் போட்டவாறே, வராந்தாவின் இடப்பக்கம் ஜோஸியர் அருணகிரி வழக்கமாக உட்கார்ந்திருக்கும் அறையை எட்டிப் பார்த்தபோது அங்கே அவர் இல்லையென்பது தெரிந்தது.

வீட்டினுள் பாத்திரப் பண்டங்கள் உராயும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஓரிரு முறை கனைத்துப் பார்த்தும் யாரும் வெளியில் வரவில்லை.

வழக்கத்திற்கு மாறாகக் காலையில் இரண்டு மைல் தூரம் வேகமாய் நடந்ததால் அவனுக்கு மூச்சு வாங்கியது. படி ஏறி, வராந்தாவில் கிடந்த பெஞ்சியில் உட்காரக் கால்கள் கெஞ்சியும், யாரும் சொல்லாமல் அப்படி உரிமையுடன் ஏறி உட்காருவது முறையல்ல என்ற ஒரு கூச்ச உணர்வுடன் அவன் நின்று கொண்டிருந்தான்.



திடாரென்று, கீழே வீட்டின் பின் வாசல் வழியில் ஓரிரு மண்பானைகளுடன் ஒரு நடுந்தரப்பிராயம் வரும் பெண் எதிர்பட்டாள். வேஷ்டியும், ஜம்பறும் மட்டும் அணிந்திருந்ததினால் தானோ என்னவோ, அவள் மிகவும் தடிமகனாக அவனுக்குத் தோன்றினாள்.

'அவர் இல்லையா ? '

'இங்கே பூஜையில் இருக்கார்-- ' என்று, வீட்டை விட்டு நீங்கித் தனியாகக் கோவில் போல், சிறிசாய், புதிதாய் கட்டப்பட்டிருந்த ஒரு அறையை அவள் சுட்டிக் காட்டினாள். அவன் திரும்பி நடந்து அங்கே சென்று பார்த்தபோது, இடுப்பில் ஒரு காவித் துண்டு மட்டும் உடுத்தியபடி, பீடத்தில் பிரதிஷ்டைப் பண்ணியிருந்த ஒரு தங்கநிற வேலில், அருணகிரி பூஜை நிகழ்த்திக் கொண்டிருப்பது தெரிகிறது. இவனும் பயபக்தி விசுவாசத்துடன் விழிகளை மூடிக் கரங்களைக் கூப்பி, வேலைத் தாழ்ந்து தொழுது விட்டு, தொழுகையுடனேயே அவரைப் பார்த்துச் சிரிப்பதாய்க் காட்டியபோது, 'அங்கே இருக்கலாம், இப்போ வந்து விடுகிறேன். ' என்றார் அவர்.

அவனுக்கு மிகவும் ஆசுவாசமாக இருந்தது. திரும்பி வந்து, படிகள் ஏறி, வராந்தாவில் நுழைந்து பெஞ்சியில் உட்கார்ந்தான்.

சமீபத்தில் தரை பழுது பார்க்கப்பட்டிருந்ததை அங்கங்கே நிறம் மாறிக் காணப்பட்ட புதிய சிமிண்டு காரை சொல்லிக் கொண்டிருந்தது. இருந்தும், தரையிலும், சுவரிலும் இனியும் பழுதுப் பார்க்கத் தகுந்த வெடிப்புகள் தென்பட்டன. சுவர் முழுதும் சாமி ' சினிமா நடிகர்கள், கட்சித்தலைவர்கள் படக்காலண்டர்கள் இனவேற்றுமையின்றித் தொங்கிக் கொண்டிருந்தன.

பூஜை அறையில் மணிச்சத்தம் கேட்கிறது. உரத்த குரலில் அவர் மந்திரோச்சாடனம் செய்வது கேட்டுக் கொண்டிருக்கிறது. இவன் கையில் வைத்திருந்த பத்திரிகையைத் திறந்து நோக்கி ஜாதகங்கள் பத்திரமாக இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்த்துக் கொண்டான். பிறகு நேர் எதிர் சுவரில் 'யாமிருக்க பயமேன் ? ' என்று கேட்டுக் கொண்டிருந்த முருகனை உற்றுப் பார்த்தான். கைகடிகாரத்தைப் பார்த்தபோது மணி ஒன்பதரையை நெருங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. உம்...அப்பா இருந்திருந்தால் இம்மாதிரி பொறுப்புக்கள் எதுவும் தனக்கில்லை.

கையிலிருந்த பத்திரிகையைப் புரட்டியபோது ஒரு ஆஸாமீயக் கதையின் மொழி பெயர்ப்புத் தென்பட்டது. அதைப் படிக்கலானான்.

பொருத்தம் இருக்காமலிருக்க வழியில்லை. பெண் வீட்டுக்காரர்கள் இரண்டு புகழ்பெற்ற ஜோஸியர்களிடம்--ஒருவர் உள்ளூர் ஜோஸியர், இன்னொருவர் வெளியூர் வாசி, ஏற்கனவே ஜாதகங்களைக் காட்டிவிட்டிருந்தார்கள், இருவராலும் 'நல்ல பொருத்தம், இதுதான் நடக்கும் ' என்று ஒரு முகமாய் அடித்துச் சொல்லப்பட்டு விட்ட சமாசாரம். ஆனாலும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பொருத்தம் பார்க்காமல், சம்மதம் வழங்கலாகாது என்று வெறும் ஒரு மாமூலுக்குத் தான் இப்போ இங்கோ வந்திருக்கிறோம்...இவர் மட்டும் வேறொன்றும் மாறிச் சொல்லிவிடப் போவதில்லை.

அவன் வாசித்துக் கொண்டிருந்த கதையில் மனசை ஒரு முகப்படுத்தச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஜோஸியரைப் பார்க்கத்தானோ என்னவோ, இரண்டு பெண்கள் வருவது தெரிகிறது, அவர்கள் எங்கே தனக்கு முந்தி விடுவார்களோ என்று பயந்து பத்திரிகையை மூடிவிட்டு அவன் எழுந்து நின்றான்.

அருணகிரி, பூஜையை முடித்துவிட்டு வெளியில் இறங்கி, நடையைத் தொட்டு கண்ணில் வைத்துவிட்டு வராந்தா படி ஏறி அவனைப் பார்த்து விட்டு உள்ளே சென்றார்.

உடுத்தியிருந்த காவித்துண்டை மாற்றி வெள்ளை வேஷ்டி அணிந்துவிட்டு, பலகையை எடுத்துப்போட்டார். சோவிகளைப் பரப்பினார். ஒரு தடுக்கைக் கீழே விரித்துக் கொண்டிருந்தபோது, முற்றத்தில் நின்று கொண்டிருந்த பெண்டுகள் ரெண்டு பேர்களும் மெல்ல மேலே ஏறி வருவதைக் கண்டு, இவன் அவசரம் அவசரமாக அருணகிரியின் அருகில் சென்றான். அவர் உட்காரச் சொல்லும் முன் தடுக்கில் உட்கார்ந்தான். அவரும் உட்கார்ந்தார்.

'உம் என்ன ' என்ற கேள்வி தொனிக்க அவனை அவர் பார்த்தார்.

'ஜாதகப் பொருத்தம் பார்க்கணும் ' என்றவாறு மெல்லக் கையிலிருந்த பத்திரிகையைத் திறந்து இரண்டு ஜாதகங்களையும் எடுத்து, கடவுளை வேண்டியவாறு அவர் கையில் கொடுத்தான்.

'என் தம்பியின் ஜாதகம். நீங்க எழுதியதுதான்... ' என்றும் மட்டும் அவன் சொன்னான். அவர் ஒன்றும் பேசாமல் ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கோடிட்டு, முதலில் பெண்ஜாதகத்தையும், அதன் பக்கத்தில் ஆண் ஜாதகத்தையும் பார்த்து எழுதினார்.

பிறகு அதன் கீழ் என்னவோ எழுதலானார். தலைகீழ் தெரியும் அந்த எழுத்துக்களைக்கூட்டி வாசிக்க வியர்த்தமாக முயற்சி செய்தவாறு மெளனமாய் அவன் உட்கார்ந்திருந்தான்.

அந்தப் பெண்டுகள் இரண்டு பேர்களும், இப்போது, சற்றுமுன் அவன் உட்கார்ந்திருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு இங்கேயே பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. இவன் பேன்ட்ஸ் அணிந்து இருந்ததால், இப்படி கீழே கால்களைச் சம்மணம் கட்டிக்கொண்டு இருப்பதினால் இடுப்பின் கீழ் ஒன்றும் அணியாததைப் போன்ற ஒரு கூச்ச உணர்வு தாக்க, அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அருணகிரி பக்கத்திலிருந்த பஞ்சாங்கங்களை எடுத்துப் புரட்டுவதும், எழுதுவதுமாக இருந்தார். பக்கவாட்டில் சுவர் அருகில் சேர்த்துப் போட்டிருந்த கட்டில் இவன் கண்களை உறுத்தியது.

அவர் வாய் திறந்தார்.

'இந்த ஜாதகங்களில் ஷஷாஷ்டி தோஷம் இருக்கு....அதாவது பெண்ணின் ராசியிலிருந்து ஆறாவது ராசி, மாப்பிள்ளையின் ராசி (விரல்கள் ஒவ்வொன்றாய் மடக்கியவாறு) மீனம், மேடம், இடவம் மிதுனம், கர்க்கடகம், சிம்மம்...அதனால்க் இந்த ஜாதகங்கள் பொருந்தவில்லை.....

அவனுக்குப் பகீரென்றிருந்தது.

'பெண் வீட்டுக்காரங்க இங்கே செங்காட்டில் ஒரு ஜோஸியனிடமும், அயினாளக்குறிச்சியில் ஒரு ஜோஸியன் கிட்டேயும் கேட்டிருக்காங்க.....ரெண்டு பேரும் நல்லா பொருத்தம் இருப்பதாக சொன்னாங்களாமே.... '

'அதெல்லாம் நான் இதில் விளக்கமா எழுதியிருக்கேன்....ராசி பொருத்தம் இல்லாவிட்டாலும், ரெண்டு ஜாதகங்களும் பாவம் கூடி ஜாதகங்கள்.....அதோடு வேறெ அஞ்சு பொருத்தங்களும் இருக்கும். மொத்தத்தில் உத்தமம் இல்லை, மத்திய பொருத்தம். '

அப்போ கல்யாணம் பண்ணி வைக்கலாமா கூடாதா ?

'கூடாது....கல்யாணம் பண்ணி வைத்தால் தம்பதிகளுக்குள் எப்போதும் மனஸ்தாபங்களும், சண்டை சச்சரவுகளும் வரக்கூடும்...... '

அவரிடம் வேறெதையுமே கேட்க அவனுக்குப் பயமாக இருந்தது. தட்சிணையைக் கொடுத்துவிட்டு வெளியில் இறங்கினான். என்னவோ, கையில் கிடைத்தது நழுவிப் போய்விட்டது போல் ஒரு ஏமாற்ற உணர்வு.....பெண் பார்க்கச் சுமாராகத்தான் இருப்பாள் என்று தெரிய வந்திருந்தது. ஆனாலும், நல்ல பணச் செழிப்பும், படிப்பும், பண்பும் உள்ள குடும்பம்....இது நடந்தால் தம்பிக்கு எப்படியும் நன்மையே ' ஆனால் இந்த அருணகிரி ஜோஸியர் இப்படி சொல்கிறாரே.... ' வேறு இரண்டு பிரபல ஜோஸியர்கள் அனுமதிக்கிறார்களே...... ' 'இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கை, தைரியமாகத் தாலி கட்டுடா... 'என்று தன் தம்பியிடம் அடித்துச் சொல்ல இயலாத தன் பலவீனத்தை உள்ளுக்குள் சபித்தவாறு அவன் நடந்து கொண்டிருந்தான்.

வெயில் சுள்ளென்று உறைத்தது. மணி ஒன்பதே முக்கால் ஆகிவிட்டிருந்தது. நேராக பஸ் நிலையத்தில் போய் பஸ் ஏறி ஆபீஸ்உக்குப் போய் விடலாமென்றால் மாலையில், தான் காரியாலயத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிச் சென்ற பிறகுதான் அம்மாவிடம் விஷயம் தெரிவிக்க முடியும்...அதுவரை அவளுக்கு அனாவசிய சஸ்பென்ஸ், எதிர்பார்ப்பு '

அவன் வீட்டில் சென்று ஜாதகங்களையும், ஜோஸியர் எழுதித்தந்த காகிதத்தையும் அம்மாவிடம் கொடுத்து விட்டு, 'பொருத்தமில்லை ' என்றபோது, அவள் 'என்ன ? ' என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டு நிற்கையில், மேலும் விவரங்களை சவிஸ்தாரமாய் சொல்லிக் கொண்டிருக்க அவகாசம் இல்லாததால்--இப்போது மணி பத்து ஆகிவிட்டிருந்தது. அவன் அவசரம் அவசரமாக இறங்கி நடந்தான்.

by Swathi   on 26 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.