LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- தி.ஜானகிராமன்

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்

 

‘மணியார்டரா ‘ எனக்கா ‘ ‘
‘ஆமா ஸ்வாமி ‘ உங்களுக்கேதான் ‘ ‘
‘உத்ராபதி, உனக்கு வயசு நாப்பதாயிருக்கும், சாளேசரம் போட்டுக்கற வயசு ‘ நல்லா பாத்துச் சொல்லு. நான் வாணா கண்ணாடி தரட்டுமா ? ‘ என்று துருப்பிடித்த வினோலியா ரோஸ் சோப் பெட்டியைத் திறந்து, வெற்றிலைக்கும் வெட்டுப் பாக்குக்கும் மேல் படுத்துக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியைத் தொட்டார் முத்து.
‘கண்ணாடியும் வாணாம், சீப்பும் வாணாம். உங்களுக்குத்தான் வந்திருக்கு. நீங்களே அந்தக் கண்ணாடியை மாட்டிக்கிட்டுப் பாருங்க…எம். சாம்பமூர்த்தி யாரு ? ‘
‘அக்கணாக்குட்டியா ? நம்ம புள்ளையா ? இப்ப மெட்ராஸிலேயா இருக்கு அது ? ‘
முத்து அவசர அவசரமாக மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டி, இடது காதில் நூலைச் சுற்றிக் கொண்டார்.
‘ஆமா, வேலைக்குப் போயிட்டானே அக்கணாக்குட்டி ஒரு மாசத்துக்கு முன்னால, உனக்குத் தெரியாது ? ‘
‘தெரியாதே. எங்க வேலையோ ? ‘ என்று மணியார்டர் பாரத்தில் இரண்டு இடத்தில் இண்ட்டு போட்டுக் கொடுத்தார் உத்ராபதி. கையெழுத்தானதும் அடிக் கடிதத்தைக் கிழித்து முப்பதொன்பது ரூபாய்க்கு நோட்டும் ஒரு ரூபாய்க்கு சில்லறையுமாகப் பையிலிருந்து எடுத்து நீட்டினார்.
‘சில்லறையும் மாத்திப்ட்டு நாற்பது ரூபாயைக் கொடுப்பானேன் ? அரை ருபாயைக் குறைச்சுண்டு கொடுக்கப் படாதோ ? ‘ என்று அரை ரூபாயை நீட்டினார் முத்து.
‘நாலணாப் போதும் சாமி. உங்ககிட்ட அதுக்கு மேலே வாங்கறது பாவம் ‘ என்று பாதியைத் திரும்பிக் கொடுத்து விட்டார் உத்ராபதி.
‘முதல் சம்பளம் வாங்கி அனுப்பிச்சிருக்கான் அக்கணாக்குட்டி. எட்டணாவாத்தான் இருக்கட்டுமேன்னு நினைச்சேன் ‘ என்று நாலணாவைத் திரும்பி வாங்கிக் கொண்டார் முத்து.
‘பிறத்தியார் பணம் அனுப்பிச்சா, ரண்டுகையாலும் வீசி வீசி தருமம் பண்ணுவாங்க சாமி ‘ என்று சொல்லிக் கொண்டே குறட்டில் இறங்கி வந்தாள் அவர் மனைவி.
‘ஏழைக்குதாம்மா தெரியும் ஏழை கஷ்டம். நீங்க சொல்றீங்களே, மாசம் நானூறு ரூபா அனுப்பறாரு ரட்டைத் தெரு மகாலிங்கய்யரு மகன், மிலிட்டரியிலே கர்னலா இருக்குறாராமே. மகாலிங்கய்யரு அப்படியே வாங்கிட்டு குந்தினாப்பல உள்ளே போயிடுவாரு. ஒரு பத்துகாசு டாத்தண்ணிக்கு ? மூச்சுப் பிரியப்படாது… முகத்தைப் பார்த்தாத்தானே ?… அக்கணாக்குட்டி என்ன வேலையாயிருக்கு ? ‘
‘என்ன வேலையோ ? நம்ம எம். கே. ஆர். கிட்ட போய் புலம்பினேன் ஒரு நாளைக்கு, நம்ம பையனுக்கு ஒரு வழி பண்ணப்படாதா செட்டியார்வாள் ‘ இப்படி உதவாக்கரையாத் திரியறானேன்னு நின்னேன். ஒரு மாசம் கழிச்சு சொல்லியனுப்பிச்சார். போனேன். உம்ம பையனை அனுப்புரீராய்யா மெட்ராஸஉக்கு ? ஒரு பெரியமனுஷன் வீட்டிலே கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம். ஒரு பையன் இருந்தாத் தேவலைன்னு சொல்றாங்க. பெரிய இடம், புள்ளீங்க பள்ளிக்கூடத்துக்குப் போகும். கொண்டு விடணும், கடை கண்ணிக்குப் போகணும். இப்படி சில்லரை வேலையா இருக்கும் போலிருக்கு. நல்லா கவனிச்சிப்பாங்க. வீட்டோடு சாப்பாடு போட்டு வைச்சிப்பாங்கன்னார் எம். கே. ஆர்.
‘அனுப்புறீமான்னு கேக்கணுமா ? நான்தான் கஞ்சிவரதப்பான்னு தவிச்சுண்டு கிடக்கேன். இன்னிக்கே அனுப்பிக்கறேன்னேன். நாலு நாக்கழிச்சு அவர் காரியஸ்தர் மெட்ராஸ் போனார். அக்கணாக்குட்டியை அழச்சிண்டு போயிட்டார். சரியா ஒண்ணரை மாசம் ஆச்சு. பணம் வந்திருக்கு. ‘
‘என்னமோ சாமி கண்ணைத் திறந்தாரு. நீங்க முன்னாலே, இந்த மூக்கு கண்ணாடிக்கு அந்த நூலை எடுத்திட்டு ஒரு காது வாங்கிப் போடுங்க. அப்புறம் ஒரு உறையிலே போட்டு வச்சுக்குங்க. இப்படியே சீவல் மேலேயும் பாங்கு மேலேயும் வச்சிட்டிருந்தா பழங்கோலி மாதிரி கீறல் விளாம என்ன பண்ணுமாம் ‘ ‘ என்று சொல்லிக்கொண்டே உத்திராபதி நகர்ந்தார்.
சம்சாரம் முத்துவைப் பார்த்தாள்.
‘இப்படிக் கொடுத்திட்டு நேரே உள்ள வரட்டும். பற மோளம் மாதிரி ஊரெல்லாம் போய் தம்பட்டம் கொட்டிண்டு நிக்கவேண்டாம் ‘ என்று பல்லோடு பல்லாகச் சொல்லி வெற்றிலைப் பெட்டி மேலிருந்த நோட்டுகளை பெட்டிக்குள் போட்டு மூடி, பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்.
வெற்றிலைப் பெட்டி கையை விட்டுப் போனதும் கூடவே விரைந்தார் முத்து. அவர் உள்ளே வந்ததும் கதவைத் தாழிட்டாள் சம்சாரம்.
முத்து தோளிலிருந்த மூன்று முழம் ஈரிழையை இடுப்பில் கட்டி, அவள் கையிலிருந்த பெட்டியை வாங்கித் திறந்து நோட்டுகளை எடுத்து, பறையிலிருந்த பரமேச்வரனின் படத்தின் அடியில் வைத்து, நெடுங்கிடையாக விழுந்து மூன்று தடவை நமஸ்காரம் செய்தார்.
‘ஏன் நிக்கறே ‘ நீயும் பண்ணேன் ‘ ‘
‘எல்லாம் பண்றேன் ‘ என்றுதான் அவள் வழக்கமாகச் சொல்லிவிட்டு நின்றிருப்பாள். ஆனால் மனசு பாகாகிக் கிடந்ததால் அவரே சம்பாதித்து விட்டாற்போல, பதில் பேசாமல் கீழே குனிந்து மூன்று முறை வணங்கி எழுந்தாள். அவளுக்கு, அந்தக் காலத்து முத்துவின் ஞாபகம் வந்தது. ஏழு வருடங்களுக்கு முன்னால் முத்து இப்படிக் கிழம் சென்று போகவில்லை. மயிர் கருகருவென்றிருக்கும், அள்ளிக்கட்ட வேண்டிய கூந்தலாக இருக்கும். மூக்கிலிருந்து இரண்டு கோடுகள் இந்த மாதிரி விழவில்லை. மார்பும் இரு பிளவாக அடித்தென்னை மட்டை மாதிரி வைரமாக இருக்கும். இப்படிச் சரியவில்லை. தோள்பட்டை இப்படிச் சூம்பவும் இல்லை. ஆடு சதை, துடைச் சதை எல்லாம் இப்படி கழளவுமில்லை. அப்போது வெற்றிலைப் பெட்டி பித்தளைப் பெட்டி. இப்பொழுது குப்பைத் தொட்டிபோல ஒரு வயதானத் தகரப் பெட்டி. அப்பொழுது வெள்ளிச் சுண்ணாம்புக் கரண்டான். இப்பொழுது பிரம்மோத்சவத்தில் தெருவோரக் கடைப்பரப்பில் வாங்கின தகரக் குழாய். அதுவும் துரு. கழுத்துக் குழியை தங்க ருத்ராட்சக் கொட்டை மறைத்ததுபோய், இப்பொழுது குழிதான் தெரிகிறது. மேனிபோய், தெம்பு போய் கங்காளி மாதிரி நிற்கறதைப் பார்த்துதான் ‘ரண்டாம் தாரமாம்மா ‘ ‘ என்று போன வருஷம் அமர்த்தின புதுத் தயிர்க்காரி கேட்டாள் போலிருக்கிறது. இப்படியா விசுக்கென்று இந்த பிராமணன் கிழண்டு போகும் ‘ மருந்துக்குக்கூட மயிரில் கறுப்பில்லாமல், கூந்தல் கொட்டைப் பாக்காகி….பல் விழவில்லை, ஆனால் கோணவும் பழுப்பேறவும் ஆரம்பித்து விட்டது.
ஆனால் இது ஒன்றும் அவள் கண்ணை இந்தக் கணம் உறுத்தவில்லை. ‘என்ன இருந்தாலும் இதுக்கு இருக்கிற சாமர்த்தியம் சாமர்த்தியம்தான் ‘ என்று உவந்தாள்.
அவளுக்குச் சற்று சிரிப்பாகக்கூட இருந்தது. நம் பிள்ளையைப் பார்த்து நாற்பது ரூபாய் சம்பளம் போட்டு சாப்பாடும் போடத் தோன்றிற்றே ஒருவனுக்கு ‘ இந்த உலகத்தில் எத்தனை அசடுகள் இருக்கமுடியும் ‘
இல்லை….அண்ணாக்குட்டி நிஜமாகவே சமர்த்துதானோ ‘ நமக்கு ஒரு பிள்ளை. செல்லப்பிள்ளை. அசட்டுத்தனமேதான் கண்ணில்பட்டது. வெளியே போனதும் மறைந்திருந்த சமர்த்து வெளி வந்துவிட்டதோ என்னவோ.
….இல்லை….பணத்தையே தின்று, பணத்தையே உடுத்தி, பணத்திலேயே படுத்துப் புரளுகிற கொழுப்பு ஜன்மங்களால் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து நாற்பது ரூபாய் கொடுக்கவாவது ‘…கொழுப்போ டம்பமோ, மனது நல்ல மனது. இந்தப் பாச்சைக்கு, பேச்சைக்காலும் பேச்சைக்கையும் கொன்னல் பேச்சுமாக இது கிடக்கிற லட்சணத்துக்கு இப்படி ஆதரிக்க வேண்டும் என்று தோன்றிற்றே.
‘தட்சிணாமூர்த்தே, வைதீச்வரா, லோகமாதா ‘ நீங்கள்ளாம்தான் காப்பாத்தணும் ‘ என்று பயந்துபோய் நின்றாள் அவள்.
‘சரி, காவேரியிலே போய் ஸானம் பண்ணிட்டு வந்துடறேன்…சில்லறை ஏதாவது கொடேன். கீரைத்தண்டு பாற்காய்னு ஏதாவது வாய்ண்டுவரேன் ‘ என்று முடுக்கினார் முத்து. ‘இன்னிக்கு கூடவா வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும் ? ‘, என்று சொல்லாமல் பிணங்குகிற முறுக்கு அது. நாலணாவை எடுத்துக் கொடுத்தாள். கன்னத்தில் அவளை செல்லமாக நிமிண்டிவிட்டு அவர் வெளியே போகிறார். பணம் வந்தால் இந்த நிமிண்டல், குழையல் எல்லாம் இரண்டு பேருக்கும் சகஜம்.
அவர் குளிக்கப் போனது நடந்து போகிற மாதிரி இல்லை. குதி போடுகிறது போலிருந்தது. அவனை — அதை, ரூபாய் அனுப்பும்படி யாரும் சொல்லவில்லை. அது அது வேலை என்று போனால் போதும் என்றிருந்தது. அது போய் நாற்பது ரூபாய் அனுப்பவாவது ‘ ‘நீ உருப்படமாட்டே, நீ உருப்படவே மாட்டே ‘ என்று அவனைச் சபித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது, வயிற்றில் பிறந்த பிள்ளையை இப்படியா சபிப்பார்கள் ‘ நம்ம புத்தி இவ்வளவு கட்டையாக ஏன் போயிற்று ? இப்பொழுது பணத்தை அனுப்பி நம்ம புத்தியில் கரியை பூசிவிட்டதே ‘ இந்தப் பிள்ளை ‘ அக்கணாக்குட்டி, இனி மேல் உன்னை அதட்டக் கூடமாட்டேண்டா என்று தன்னைத் திட்டிக்கொண்டு நடந்தார் முத்து ஒரு பிள்ளை ‘
பிள்ளைகளெல்லாம் தாயையும் தகப்பனையும் கொள்ளாமல் பாட்டனையும் பாட்டியையும் கொள்ளுமாமே, –அதுபோல் அக்கணாக்குட்டியைப் பற்றிய வரையில் மெய்தான். அவன் முத்துவின் மாமாவைக் கொண்டு விட்டான். முத்துவைக் கொண்டிருந்தால் அண்டா, தவலைகளை அலட்சியமாக உருட்டுகிற வலுவு வந்திருக்கும். ஆயிரம் பேருக்கானாலும் ஒரு கல் உப்போ, புளியோ ஏறாமல் குறையாமல் சமைத்துப் போடுகிற நளபாகம் கை வந்திருக்கும். முத்துவின் சம்சாரத்தைக் கொண்டிருந்தால் பார்க்கவாவது லட்சணமாக வளர்ந்திருக்கலாம்.
மீனாட்சி லட்சணம் தான். சமையற்கார முத்து பெண்டாட்டி என்று யார் சொல்ல முடியும் ? நூத்தம்பது வேலி பண்ணைவீட்டு எஜமானி எண்ணெய் ஸ்நானத்துக்காக நகைநட்டுகளைக் கழற்றி வைத்தாற் போலிருக்கும் …..ஸ்நானம் செய்துவிட்டுத் திரும்பி உள்ளே நுழைந்த கையோடு ஈர வேட்டியோடேயே அவளை அப்படியே அம்மென்று திணறத் திணறக் கட்டிக் கொள்ள வேண்டும். ம்க்கும்…ம்க்கும் இதுவேறயாக்கும் என்று சொன்னாலும் சொல்லுவாள். கட்டிண்டு தொலை என்று சொல்வது போல மரம் மாதிரி நின்றாலும் நிற்பாள். அவளுக்குப் பிறந்த பிள்ளை அந்த மாதிரி மூக்கும் முழியுமா இருக்கக் கூடாதோ ? மூக்கில் வற்றாத ஜலதோஷம். ஹ் ஹ் என்று நிமிஷத்துக்கு ஒரு உறிஞ்சல். முட்டிக்கால், முட்டிக் கை. குதிகால் கீழே படாமல் இரண்டு குதியிலும் முள்குத்தினாற் போன்ற விந்து நடை, வாயைச் சற்று திறந்தாலே ஓட்டுக் கூரை மாதிரி பல் வரிசை — வரிசை இல்லை கோணல் — ஓடு மாற்றி நாலு வருடமானாற் போல. அந்த பல்லுக்கு ஏற்ற சொல், எச்சிலில் குளித்துக் குளித்து வரும் ஒவ்வொரு பேச்சும். எப்ப வந்தேல் மாமா சேக்யமா ? நாலானன் சேக்யமார்க்கானா, (நாலானன் என்றால் நாராயணன்) செலுப்பு பிஞ்சு போச்சுப்பா இன்னிக்கி காவேரி ரண்டால் ஆலம்…. வயசு பதினைந்து முடிந்தும் இதே பேச்சுதான். படிப்பு வரவில்லை. எலிமெண்டரிக்கு மேல் ஏறவில்லை. ஐந்து வருஷம் வீட்டோடு கிடந்ததும் போன வருஷம் ஒரு மளிகைக் கடையில் இழுத்துவிட்டார். அங்கே ஒரு நாள் எண்ணெயைக் கொட்டி ரகளை. வேலை போய்விட்டது. சைக்கிள் பழுது பார்க்கிற கடையில் கொண்டுவிட்டார். நாலு நாளைக்குப் போய்விட்டு வந்து ஜஉரமாகப் படுத்துக் கொண்டு விட்டது. நான் மாட்டேன்; சைக்கிலுக்குப் பம்பு அடிக்கச் சொல்றான். கண்டு கண்டா மார் வலிக்குது. நான் மாட்டேன் போ என்று திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டது. முத்து அலையாத இடமில்லை. பையனை அழைத்துக் கொண்டு வர்ச் சொல்லுவார்கள். போவார், பையனைப் பார்த்ததும் சொல்லியனுப்புகிறேன் என்று அனுப்பி விடுவார்கள். விறகு கடையில்கூட வேலைக்கு வைத்துப் பார்த்தாயிற்று. ஒரு கட்டையைத் தூக்க நூறு முக்கல். தினமும் நகத்திலும் விரல் இடுக்கிலும் சிலாம்பு. வீட்டுக்கு வந்து போகமாட்டேன் என்று அடம். நீ உருப்படவே மாட்டே என்று அப்பா அம்மா பாட்டு ‘ ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டான் அவன். பேசாமல் போய் திண்ணையில் உட்கார்ந்து வாசலில் போகிற வெள்ளாட்டையும் குட்டியையும் முக்கை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்துக் கொண்டிருப்பான். இல்லாவிட்டால் வீட்டுக்கார வாத்தியார் பெண்ணோடு ‘நேத்திக்கி ரிசவாகனம் பாக்கலியே நீ தூங்கிப் போயிட்டியே ‘ என்று திருநாள் சேதிகளைப் பேசிக் கொண்டிருப்பான்.
ஸ்வாமி நினைத்தால் என்ன செய்யமாட்டார் ‘ ஊமைக்கும் அசடுகளுக்கும் அவர் தானே கண். என்னப்பா ‘ வைத்தீச்சுவரா ‘ இந்த மட்டுமாவது பாதை காட்டினியே ‘
முதல் தடவை பணம் வந்து ஆச்சரியத்தில் கழிந்தது. இரண்டாம் தடவைகூட அந்த ஆச்சரியம் குறையவில்லை. மூன்றாம் தடவை இரண்டு மூன்று நாள் தாமதமாயிற்று. வேதனையாயிருந்தது. பயமாக இருந்தது. ஐந்தாவது தடவை ஒரு வாரம் தாமதம். கோபம் வந்தது. கோபத்தை சமாளித்துக்கொண்டு என்ன கஷ்டமோ இடைஞ்சலோ என்று சமாதானம் செய்து கொண்டு சாந்தமான சமயத்தில் பணம் வந்து குதித்துவிட்டது. ‘இது சம்பாதிச்சு நான் சாப்பிடணுங்கறது இல்லை ஸ்வாமி. என்னமோ முன்ன மாதிரி கண் சரியாகத் தெரியலை. கை நடுங்கறது. என்னமோ குழப்பம். மொளகாப் புளியெல்லாம் முன்ன மாதிரி திட்டமா விழமாட்டேங்கிறது. இல்லாட்டா என்ன விட்டுட்டு ஆனந்தம் பயலைக் கூப்பிடுவாளோ ஏலாவூர் பண்ணையிலே ‘ எத்தனை கலியாணத்துக்கு அங்கே டின்னரும் டிபனுமா பண்ணிப்போட்டிருக்கேன் ? இந்தப் பய இப்படி பிள்ளையா பிறந்து இப்படி நிக்கறதேங்கிற கவலையிலே எனக்கு கையி, தீர்மானம், தைரியம் எல்லாம் ஆடிப்போச்சு ஸ்வாமி. இப்ப அது நிமிர்ந்துட்டுது. என் குழப்பம் நிமிரலே, என்ன பண்றது ‘ இல்லாட்டா இது சம்பாரிச்சா நான் சாப்பிடணும் தலையெழுத்து ‘ என்று மணியார்டர் வாங்கும்போது வந்து, விசாரிக்கிற பார்வையாகப் பார்த்த வீட்டுக்கார வாத்தியாரிடம் உருகினார் முத்து.
அந்தச் சமயத்தில்தான் வண்டிக்காரத் தெருவிலிருந்து வக்கீல் குமாஸ்தாவின் காரியஸ்தன் வைத்தியநாதய்யன் வந்து செய்தி சொல்லிவிட்டுப் போனான். மத்தியானம் முடிந்தால் வீட்டுப்பக்கம் வந்துவிட்டுப் போகச் சொன்னாராம் அண்ணாவையர்.
வக்கீலுக்குக் குமாஸ்தா. அந்த குமாஸ்தாவுக்கு ஒரு காரியஸ்தனா ? இது உலகத்தில் இல்லாத ஆச்சரியம் இல்லையோ ? ஆனால் நடக்கிறதே. அண்ணாவையனுக்கு காரியஸ்தன் ஒருவன் இல்லை, இரண்டு மூன்று பேர் உண்டு. இந்தா என்றால் ஏன் எங்கேயென்று ஓடக் காத்திருக்கிற எடுபிடி ஆட்கள் மூன்று பேர் –அண்ணாவையன் முத்துவுக்குக்கீழ் சமையலாக இருந்தவன்தான். திடாரென்று ஒரு நாளைக்கு வக்கீல் ஜகதுவுக்கு குமாஸ்தாவாக ஆனான். மூன்று வருஷத்தில் ஜகதுவையே உட்கார்த்தி வைத்துவிட்டான். தானே வக்கீல் மாதிரி தொழில் நடத்தத் தொடங்கிவிட்டான். முதலிமார் கேஸ்கள், செட்டி நாட்டுக் கேஸஉகள் –பாகப் பிரிவினைகள் வியாஜ்யங்கள் என்று பிரளயமாடுகிறான். கோர்ட்டு ஏறாமலே எத்தனை மத்தியஸ்தங்கள் ‘ பல மத்தியஸ்தங்கள் வாசல் திண்ணையில் நீட்டின கால்களை முடக்காமலே நடக்கும். மலையாளத்து இரட்டைத் தாழம் பாயில் திண்டுமீது சாய்ந்து….ஏ அப்பா ‘ என்ன கார்வார் ‘ என்ன மோக்ளா ‘
முத்து கீரைத்தண்டு சாம்பார் சாதத்தைச் சாப்பிட்டு வினோலியா டப்பாவுடன் வண்டிக்காரத் தெருவுக்குப் போனார். போகாமல் எப்படி இருக்க முடியும் ‘ விறகு கடையிலும் சைக்கிள் கடையிலும் அக்கணாக் குட்டியை வேலைக்கு வைத்தது அண்ணாவையன் தானே. இது வேலையை விட்டால் அவன் என்ன செய்வான் ?
வழக்கம் போல நீட்டின காலை மடக்காமலே ‘வா முத்து, உட்காரு ‘ என்று அண்ணாவையன் திண்ணையில் தாழம் பாயில் சாய்ந்தவாறே அழைத்தான்.
‘வைத்தா வந்து சொன்னான், அய்யர்வாள் கூப்பிட்டார்னு ‘
‘ஆமா. முத்து ‘ என்று எழுந்து புகையிலையை உமிழ்ந்துவிட்டு வந்து, ‘ராத்திரி மெட்ராஸ் போறேன். இந்த தடவை யாராவது கூட இருந்தா தேவலை போலிருக்கு. ஒரு வாரமா ஜஉரம். முந்தாநாத்தான் ஜலம் விட்டுண்டேன். நாளைக்கு அர்ஜண்டா கேஸஉ ஹைக்கோர்ட்டிலே. பத்தியச் சாப்பாடு. ஹோட்டல்ல தங்கப்போறதில்லெ. தம்முடு கலியாண மண்டபத்திலே தங்கப் போறேன். நீகூட வந்து ஒரு ரசம் சாதமோ தொகையலோ பண்ணிப் போட்டா தேவலைன்னு தோணறது. அதான் கூப்பிட்டனுப்பிச்சேன் ‘
‘அதுக்கென்ன செஞ்சுபிடறது. ‘
‘நீ தீர்க்காயுசா இருக்கணும், நாலாநாள் திரும்பி விடலாம். நீ போறதுக்கு ரெடி பண்ணிக்கோ. நாளை நாளன்னிக்கி ஒண்ணும் அச்சாரம் வாங்கலியே ‘
‘இப்ப என்ன ஆடி மாசத்திலே அச்சாரம் ? ‘
‘ரொம்ப நல்லது போ. அப்ப ரண்டு நாள் கூடத் தங்கினாலும் பாதமில்லேன்னு சொல்லு. ‘
‘ஒரு மாசமாத்தான் இருக்கட்டுமே. நீங்க கூப்பிடறச்சே நான் வெட்டி முறிக்கப் போறேனோன்னேன். என்ன பேச்சு இது ? ‘
‘சரி, இந்தா–இதோ இருவது ரூவா இருக்கு. மீனாட்சி கிட்ட கொடு. செலவுக்கு வேணுமே அவளுக்கு… ‘ ராத்திரி ஏழு மணிக்கு வந்துடு. இங்கேயே சாப்பிட்டுப் புறப்படலாம்.
‘சாப்பிடறேன். இது என்னத்துக்கு ? ‘ என்று உபசாரமாக பணத்தை மறுத்தார் முத்து.
‘எது என்னத்துக்கு ? –கொடுத்தா பேசாம வாங்கிவச்சுக்கோயேன். நீதான் மகாப் பிரபுன்னு தெரியுமே எனக்கு. ‘
‘சரி ‘ என்று புன்சிரிப்புடன் இரண்டு நோட்டையும் வினோலியாப் பெட்டிக்குள் வைத்து மூடி ‘நானே போகணும் போகணும்னு நெனச்சிண்டிருந்தேன். நீங்க கூப்பிட்டுது பால்லெ பழம் விழுந்தாப்பல ஆயிட்டுது ‘ என்றார் முத்து.
‘என்ன ? ‘
‘நம்ம அண்ணாக்குட்டி அங்கதானே இருக்கான்… போறபோது அவனையும் ஒரு நடை பார்த்துட்டு வந்துடலாமே ‘
‘ஒஹோஹொ. ரண்டு மாசம் முன்னாலேயே சொன்னியே– யாராத்திலெயோ இருக்கான்னு. எனக்கு மறந்தே போயிடுத்து பாரேன். பலசரக்குக் கடைக்காரனுக்கு பைத்தியம் புடிச்சாப்பல ஆயிடுத்து என் புத்தி… பேஷ்– ‘
பட்டணத்துக்கு வந்த நாலாம் நாள்தான் முத்துவுக்கு ஒழிந்தது. அண்ணாவையருக்கு சமைத்துப்போட்டு விட்டு அவரோடும் சுற்ற வேண்டியிருந்தது. மூன்று நாளுக்குப் பிறகுதான் அண்ணாவையருக்குத் தைரியம் வந்தது. தனியாக நடமாடலாம் என்று. அன்று சனிக்கிழமை. வேங்கடாசலபதி பெயரைச் சொல்லி ஒரு சர்க்கரைப் பொங்கல் பண்ணச் சொன்னார் அண்ணாவையர். அவருக்குச் சாப்பாடு போடுவதற்கு முன்னமே சொல்லி விட்டார் அவர். ‘முத்து, நான் சாப்பிட்டுக் கோர்ட்டுக்குப் போறேன். நீ அக்கணாக் குட்டியைப் பார்த்துட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துரு. ராத்திரி வண்டிக்கே கிளம்பும்படியா இருக்கும். முடிஞ்சா அந்தப் பயலையும் அழச்சிண்டு வா. நானும் பார்க்கறேன் ‘ என்ரு அவர் சொன்னதும் அவிழ்த்துவிட்ட கழுதை மாதிரி ஓட வேண்டும் போலிருந்தது முத்துவுக்கு. நெஞ்சுக்குள் குதியாகக் குதித்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவருக்குச் சாதத்தைப் போட்டார். டாக்சி பிடித்துக் கொண்டு அவரை ஏற்றி வழியனுப்பி விட்டு, ஒரு எவர்சில்வர் டப்பாவில் சர்க்கரைப் பொங்கலைப் போட்டுக்கொண்டு மாம்பலம் பஸ்ஸில் ஏறினார்.
வீடு கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை. வீடா அது பங்களா. பங்களாகூட இல்லை. சின்ன அரண்மனை. ஒரு மாஞ்சோலைக்கு நடுவில் இருந்தது. கேட்டைக் கடந்து நுழைந்ததும் நடுவில் ஒரு நாகலிங்க மரம். இப்பாலும் அப்பாலும் இரண்டிரண்டு மாமரங்கள். ஒரே நிழலாக இருந்தது. தள்ளிப்போனால் கார் நிற்கும் முகப்பு. காரும் இருந்தது. நாகலிங்க மரத்துக்குப் பக்கத்தில் சிமண்டு சோபா இரண்டு திண்ணைபோல கட்டியிருந்தன, அங்கே நான்கு பையன்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘அம்பி ‘ ‘ என்று இரண்டு தடவை கூப்பிட்டார் முத்து. அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. மாமரத்தில் ஒரு குயில் கத்திற்று. கீழே நாகணவாய் இரண்டு மஞ்சள் மூக்கும் குழைந்த கூவலுமாக ஆடி ஆடி நடந்து கொண்டிருந்தன.
‘நான் டபிள்ஸ் எத்தனையோ தடவை போயிருக்கேண்டா இதே சைக்கிள்ளே என்ன செஞ்சிடுவாங்க ? எங்க தாத்தா ஹைகோர்ட் ஜட்ஜஉ கான்ஸ்டபிள் என்னைப் பிடிச்சிடுவானா ? ‘
‘ம்க்ம்…நீ யார் க்ராண்ட்ஸன்னாயிருந்தா போலீஸ்காரனுக்கு என்னடா ? அவன் டூட்டி செய்யத்தான் செய்வான். ‘
‘பெட்டு ? –நான் டபுள்ஸ் போறேன், மணியோட….. பிடிக்கிறானா பார்ப்பமா ? அஞ்சு ரூபா பெட்டு ‘ இந்தா ‘ என்று சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து வைத்தான் அந்தப் பையன்.
பன்னிரண்டு வயதுக் குழந்தையின் பையிலிருந்து ‘பெட்டு ‘க் கட்ட ஐந்து ரூபாய் பணம் வருவதைப் பார்த்து முத்து பயந்து போய்விட்டார். இந்தப் பையன்களைத்தான் அக்கணாக்குட்டி பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு விடுகிறானா ‘ அவருக்குப் பயமாகவும் இருந்தது. பெருமையாகவும் இருந்தது.
‘அம்பி ‘ ‘ என்று மறுபடியும் கூப்பிட்டார். பதிலில்லை. அன்று சனிக்கிழமை, பள்ளிக்கூடம் இல்லை போலிருக்கிறது.
மறுபடியும் கூப்பிட்டார்.
‘யாரு ? ‘
‘சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் கும்மாணத்திலிருந்து வந்திருக்கானே அவன் இஞ்சதானே இருக்கான். ‘
‘தெரியாது ‘
‘இதுதானே குப்புசாமி அய்யர் பங்களா ‘ ‘
‘யார்றா குப்புசாமி அய்யர் ? ‘
‘போடா ‘ நம்ம மோகன் தாத்தா தாண்டா. அவர் வீடுதான் ‘
‘நீங்க இந்த வீடு இல்லையா ? ‘
‘இல்லை. நாங்க எங்க ப்ரண்டு மோகனைப் பார்க்க வந்திருக்கோம். மோகன் உள்ளே சாப்பிடப் போயிருக்கான். ‘
முத்து மெதுவாக நகர்ந்து வீட்டின் முகப்புக்குப் போனார். அங்கு யாருமில்லை. உள்ளே ஹாலுக்குப் போனார். பாதி இருட்டு. அங்கே பெரிய மைசூர் மகாராஜா ராணியோடு நிற்கிறபடம், கொம்பு, மான்தலைகள், யாரோ தலைப்பாகை நீளக்கோட்டு கால்சட்டை போட்ட மனிதரின் படம் எல்லாம் மாட்டியிருந்தன. அங்கும் யாருமில்லை. அதையும் தாண்டினார். ஒரு கிழவன் அந்தண்டை நடையில் ஒரு ஸ்டூல்மீது உட்கார்ந்திருந்தான்.
‘யாரு ? ‘
‘ஏம்பா சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் இங்க இருக்கானே தெரியுமோ ? ‘
‘பையன்னா ? எந்தப் பையன் ? ‘
‘இங்கே வேலைக்கிருக்கான்பா ஒரு பையன் — கும்மாணத்திலிருந்து வந்திருக்கான். ‘
‘அப்படிச் சொன்னால் தெரியும் ? சாம்புவைத்தானே கேக்கறீங்க —பெரிய அய்யரோட இருக்கே அந்தப் பையன்தானே ? ‘
‘அது என்னமோ, இங்க வேலையா யிருக்கான் அந்தப் பையன் ? ‘
‘கும்பகோணத்துப் பையன்தானே ? ‘
‘ஆமாம். ‘
‘அப்ப இப்படி இறங்கி அதோ அங்கே போங்க — காட்டேஜஉக்கு, அங்கதான் இருப்பான் பையன், இப்பதான் அய்யரோட வெளியே போய் வந்தான். ‘
‘இங்கே ? ‘ என்று நடை முடிவில் இருந்த வாசற் படியைக் காட்டினார் முத்து.
‘இங்க சின்ன ஐயா ரண்டுபேரும் இருக்குறாங்க… பெரியய்யா இருக்கிற இடம் அதுதான். அங்கதான் அந்தப் பையன் இருக்கான்… நீங்க யாரு ? ‘
‘நான் அந்தப் பையனோட தோப்பனார். ‘
‘அப்படியா ‘ சரி சரி, போங்க. ‘
முத்து நடையிலிருந்து இறங்கி தோட்டத்தோடு போனார். ஏ அப்பா எத்தனை பெரிய வீடு ‘ எத்தனை மரங்கள் ஒரு ஆளைக் காணவில்லை. வாசலை இப்படி ஹோவென்று போட்டுவிட்டு உள்ளே எங்கேயோ இருக்கிறார்களாம். ஒரு ஈ காக்கையைக் காணோம் ‘ முந்நெற்றி மயிரைப் பிடித்தாலும் தெரியாது போலிருக்கிறது.
ஒரே நிசப்தமாக இருந்தது. தோட்டப் பாதையில் நடந்து அங்கே காட்டேஜின்படி ஏறினார் முத்து.
தாழ்வாரத்தில் வந்து ‘சார் ‘ என்றார்.
‘யாரு ? ‘
‘நான்தான் ‘ என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
அங்கே ஒரு பெரிய மேஜை, அதன்மேல் தடிதடியாகக் கணக்குப் புத்தகங்கள். அதன் பின்னால் நாற்காலியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் கறுப்பாக மூக்குக் கண்ணாடி, மேஜையில் ஒரு நீலக்கடுதாசி. அதன் மேல் வரைபடம். அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் பக்கத்தில் நின்று அவருடைய தலையை, கிராப்புத் தலையை வரக்கு வரக்கு என்று சொரிந்து கொண்டிருக்கிறான்.
கறுப்பு கண்ணாடியின் உடலும் லேசாகக் கறுப்புத்தான். முத்து உள்ளே நுழைந்ததும் அவர் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றாமலே நிமிர்ந்து பார்க்கிறார்.
‘யப்பா ‘ என்று ஒரு குரல்.
அக்கணாக்குட்டியின் குரல்தான், மேஜை மீதிருந்த மங்கிய விளக்கின் கறுப்பு மறைவுக்குப் பின்னால் அக்கணாக்குட்டியின் முகம் தெரிந்தது.
‘எப்பப்பா வந்தே ? ‘ என்று ஹ் என்று உறிஞ்சிக் கொண்டே சிரிக்கிறான் அவன்.
‘யார்றா சாம்பு ? ‘
‘எங்கப்பா மாமா ‘ என்று அவர் தலையைச் சொறிந்து கொண்டே அக்கணாக்குட்டி ‘எப்பப்பா வந்தே ? ‘ என்று சிரித்தான்.
‘நமஸ்காரம் ‘ என்றார் முத்து.
‘நமஸ்காரம். சாம்பு அப்பாவா — வாங்கோ ‘ ‘
‘வந்தேன் ‘
‘உட்காருங்கோ ‘
ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் முத்து. வெய்யிலிருந்து உள்ளே வந்ததும் கண்ணை மறைத்த இருள் மெதுவாக விலகிற்று. கண் நன்றாகத் தெரியத் தொடங்கிற்று.
‘செளக்கியமா ? ‘ என்றார் கறுப்புக் கண்ணாடி.
‘செளக்யம் ‘
முகத்தை நன்றாகப் பார்த்தார் முத்து. உதடு அறுந்தது மாதிரி அதைத்துத் தொங்கிற்று. கன்ன எலும்பில் இரண்டு அதைப்பு. காது வளையமெல்லாம் அதைப்பு. மேஜை மீது படிந்திருந்த கைகளை பார்த்தார். கைகள் படியவில்லை. கட்டைவிரல் மற்ற விரல்களெல்லாம் மடங்கியிருந்தன. நீட்ட முடியாத விரல்கள் என்று பார்த்தாலே தெரிந்தது.
‘எப்பப்பா வந்தே…ஹ் ? ‘ என்று பல் வரிசையைக் காட்டிக் கொண்டே கேட்டான். அக்கணாக்குட்டி. அவருடைய தலையைச் சொறிவதை மட்டும் நிறுத்தவில்லை.
‘இப்ப தாண்டா வரேன் ‘
‘இப்ப ஏதுப்பா வண்டி….ஹ் ? ‘
‘வண்டி முன்னூறு நிமிஷம் லேட்டு. தெரிஞ்சவா வீட்டிலே வந்து இறங்கினேன். சாப்பிட்டேன், உடனே புறப்பட்டு வரேன் ‘ என்று தன்னறியாமல் பொய் சொன்னார் முத்து.
அப்பொழுது கறுப்புக் கண்ணாடிப் பெரியவர் கன்னத்தை சொரிந்து கொண்டார். எல்லாரும் விரல் நுனியால் நகத்தால் சொறிந்துகொள்வார்கள். அவர் மடக்கின விரலின் பின்பக்கத்தால் சொறிந்து கொண்டார். முத்துவுக்கு பகீர் என்றது. இரண்டு மூன்று விரலில் நகமே இல்லை.
முத்துவுக்கு உட்கார முடியவில்லை. மேலெல்லாம் அரிப்பது போலிருந்தது. அந்த அறையில் காலைப்பாவவிட்டாலே உள்ளங்கால் அரிக்கும்போலிருந்தது. முள்மேல் உட்கார்வது போல குறுகிக்கொண்டார்.
பெரியவர் என்னென்னமோ வெல்லாம் கேட்டார். தப்பும் தவறுமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் முத்து. காதில் ஒன்றையும் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளே பூஞ்சதை நரம்பெல்லாம் அழுவதுபோல் ஒரு கசிவு.
‘போரும்டா சாம்பு ‘ என்றார் பெரியவர்.
அக்கணாக்குட்டி சொறிவதை நிறுத்தினான்.
‘பையன் ரொம்ப சமர்த்தாயிருக்கான். அவன் இருக்கிறது எனக்கு ஆயிரம் பேர்கூட நிற்கிறாப்போல இருக்கு ‘ என்றார் பெரியவர். சொல்லிவிட்டு ‘சித்தே இருங்கோ, இதோ வந்துடறேன் —சாம்பு இப்படி வாயேன் ‘ என்றார்.
அக்கணாக்குட்டி அருகில் வந்து நின்றான். பெரியவர் எழுந்து அவன் தோளில் கையைப் போட்டுக்கொண்டார். அக்கணா நடந்தான். அவரும் விந்தி விந்தி துணி பூட்ஸ் காலால் நடந்தார். அவரை ஹாலின் ஒரு கோடியில் உள்ள கதவைத் திறந்து உள்ளே விட்டு வெளியே காத்து நின்றான்.
‘உங்க மாதிரி யார் இருப்பா ? விளக்கேத்தி வச்சேளே என் குடும்பத்துக்கு. நிஜமாகச் சொல்றேன். அக்கணாக்குட்டி அனுப்பிக்கிறானே மாசாமாசம் அதிலே தான் வயிறு ரொம்பறது. யார் செய்வா இந்த மாதிரி இந்தக் காலத்திலே ? அவனையும் ஒரு ஆளாக்கி….அவன் ஒரு கால் காசைக் கண்ணாலே காணப்போறானோன்னு ஒடிஞ்சு போய்விட்டேன். ஸ்வாமிதான் உங்க ரூபத்திலே வந்து அவன் கண்ணைத் திறந்துவிட்டார்…. ‘ அக்கணாக்குட்டியைப் பார்க்கபோகும் போது அவனுடைய எஜமானரைப் பார்த்தால் இப்படி என்னென்னவெல்லாமோ சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்திருந்தார் முத்து.
இப்போது வாயைத் திறக்கவில்லை. முடியவில்லை அந்த நினைவெல்லாம் தோன்றிய சுவடே இல்லை. மனதில் ஒரு பீதி. ஒரு குமைச்சல். குமட்டல். ஒரு கோபம். ‘பாவி ‘ நீ நன்னாயிருப்பியா ? ‘ என்று அடிவயிற்றிலிருந்து கதற வேண்டும் போலிருந்தது. அக்கணாக்குட்டி ஹால் ஓரத்தில் பெரியவர் வருவதற்காகக் காத்து நின்றவன் அப்பாவைப் பார்த்துப் புன்சிரிப்பு சிரித்தான். ஹ் என்று உறிஞ்சினான்.
முத்துவுக்கு நெஞ்சில் கட்டி புறப்பட்டாற்போல் வலித்தது. இவனையும் தாண்டி கதவைப் பார்த்தது அவர் கண். வெளியே நெளியப் போகும் நல்ல பாம்பைப் பார்ப்பது போல் ஒரு கிலி வேறு சூழ்ந்துகொண்டது.
‘இந்தண்ட வாடா ‘ என்று வாயால் தலையை அசைத்தார் — அவசரமாக, சுளிப்பாக.
அவன் புரிந்து கொள்ளவில்லை. புன்சிரிப்புடனேயே சாத்தியிருந்த கதவைக் கையால் காண்பித்து சைகை காட்டினான்.
பெரியவர் காவி பூட்ஸஉம் காலுமாக வந்தார். சுவரில் பதிந்த ஒரு பளபள கம்பியிலிருந்த ஒரு துண்டை எடுத்து அவரிடம் நீட்டினான் அக்கணா. அவர் கையைத் துடைத்துக் கொண்டதும், தோளைக் கொடுத்தான். பிடித்துக் கொண்டு வாத்து நடை நடந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.
முத்து ஆரம்பித்தார். ‘சம்சாரத்துக்கு ஊரிலே உடம்பு ரொம்ப மோசமாயிருக்கு. பதினஞ்சு நாளா படுத்த படுக்கையாயிருக்கா. பிள்ளையைப் பார்க்கணும் பார்க்கணும்னு புலம்பறா, ஜஉரம் இறங்கவே இல்லை…. ‘
‘அடடா….நீங்க ஒரு வார்த்தை எழுதப்படாதோ ? ‘
என்னமோ சாதாரண ஜஉரம்னு நெனச்சிண்டிருந்தேன். அது என்னடான்னா இறங்கற வழியாயில்லெ. அப்புறம் அவ தங்கைக்கு லெட்டர் போட்டு வரவழச்சேன், கிராமத்திலேர்ந்து. இவளானா புலம்பறா. உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லி பயலை அழச்சிண்டு போகலாம்னு வந்திருக்கேன் ‘ என்று அடுக்கிக் கொண்டே போனார் முத்து.
பெரியவர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். கறுப்புத்தான் கண்ணை மறைத்திருக்கிறதே என்ன தெரியும் ? அந்த முகத்தில்தான் என்ன தெரியும் ? தடிப்புத்தான் தெரிந்தது.
முத்துவுக்கு மட்டும் தான் சொன்னதை அவர் நம்பவில்லையோ என்று வயிற்றில் கனத்தது.
பெரியவர் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்.
‘ஊர்லெ சிநேகிதர் ஒருத்தர் காரிலே வந்திருக்கார். சேர்ந்து போயிடுவமேன்னார். ரயில்காரனுக்கு கொடுக்கறதையாவது மிச்சம் பண்ணலாம்னு நினைச்சேன். ‘
பெரியவர் வாய்தடிப்பு ஒரு புன்னகையாக மலர்ந்தது. சிரித்தால் அழகாகத்தான் இருக்கிறது. யார் சிரித்தால் என்ன என்று தோன்றிற்று முத்துவுக்கு.
‘பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும் ‘ என்றார் முத்து.
‘பாதகமில்லை ‘ என்று ஒரு புத்தானை அழுத்தினார் பெரியவர்.
‘சாம்பு, அப்பா கூப்பிடறாரேடா போறியா ? ‘ என்று கேட்டார்.
‘அம்மா ரொம்ப ஜஉரமாக கிடக்காடா. உன்னைப் பார்க்கணும்னு பேத்திண்டேயிருக்கா– ராவில்லே பகலில்லே ‘ என்றார் முத்து.
‘சரிடா சாம்பு. வேட்டி சட்டையெல்லாம் எடுத்து வச்சுக்கோ ‘ என்றார் பெரியவர். ‘பையன் ரொம்ப ஒத்தாசையாயிருந்தான் ஸ்வாமி. சுருக்கக் கொண்டு விட்டு விடுங்கோ. ‘
‘ம் ‘ உடம்பு சரியாயிருந்தா, அங்கே என்ன வேலை ? ‘ என்றார் முத்து.
அக்கணா பின்னாலிருந்த இன்னொரு அறைக்குப் போனான்.
வாசலிலிருந்து ஒரு தட்டில் டிபன் காபி எல்லாம் பரிசாகரன் கொண்டு வந்தான். அதற்குத்தான் புத்தானை அழுத்தினார் போலிருக்கிறது பெரியவர்.
‘சாபிடுங்கோ. ‘
‘நான் இப்பத்தானே சாப்பிட்டேன். ‘
‘இங்கே வந்து வெறும் வயத்தோட போகலாமா ? ‘
முத்துவுக்குச் சொல்ல மெல்ல முடியவில்லை. ‘பாலாம்பிகேச வைத்யேச ‘ என்று மனத்துக்குள் சுலோகம் சொல்லிக் கொண்டே காபியை மட்டும் எடுத்து கண்ணை மூடி மளமளவென்று விழுங்கினார். பரிசாரகன் பாத்திரங்களை எடுத்துப் போனான்.
அக்கணாக்குட்டி பையும் கையுமாக வந்தான். வெளிச்சத்தில் நன்றாகப் பார்க்கும்போது அவன் எவ்வளவு மாறிவிட்டிருக்கிறான் என்று தெரிந்தது. தலையை வழவழவென்று சீவி விட்டிருந்தான், வெள்ளை வெளெரென்ற சட்டை, வெள்ளை வேட்டி, முகத்தில் ஊட்டத்தின் பொலிவு, சட்டைக்கு வெளியே தெரிந்த முன்னங்கைகூட பளபளவென்று நிறம் ஏறியிருந்தது.
‘என்னை ரொம்ப மன்னிச்சிக்கணும் ‘ என்று எழுந்து கும்பிட்டார் முத்து.
‘எதுக்காக ? ரொம்ப நன்னாருக்கே. ‘
‘நமஸ்காரம் பண்ணிட்டு போய்ட்டு வரேன்னு சொல்லிக்கோடா ‘ என்றார் முத்து.
அக்கணா விழுந்து வணங்கி எழுந்து ‘போய்ட்ரேன் மாமா ‘ என்றான்.
‘போய்ட்டுவா. போய் லெட்டர் போடு, அம்மாவுக்கு உடம்பு எப்படியிருக்குன்னு. எப்ப வரேன்னும் எழுதணும். ‘
‘சரி மாமா. ‘
இருவரும் வெளியே நடந்தார்கள்.
இவ்வளவு சீக்கிரம் காரியம் நடக்கும் என்று நினைக்கவில்லை, சிங்கத்தின் குகையிலிருந்து வருவது போல, திரும்பிப் பார்க்காமல் வேகமாக வெளியே வந்து தோட்டத்தை தாண்டி தெருவுக்கு வந்து சாலைக்கு வந்தார் முத்து. ‘மெதுவாப் போப்பா ‘ என்று கூடவே விரலால் நடந்து சிறு ஓட்டமாக ஓடிவந்தான்.
சாலைக்கு வந்து பஸ் ஏறினதும்தான் வாயைத் திறந்தார் முத்து.
‘ஏண்டா மக்கு ‘ இந்த மாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு நீ சொல்லவே இல்லியே ‘ என்றார்.
‘என்ன உடம்பு ? ‘
‘உனக்குத் தெரியலியா ? ரொம்ப கரிசனமா தலையைச் சொறிஞ்சு விட்டியே, புத்திதான் இல்லை, கண்ணுகூடவா அவிஞ்சு போச்சு ? ‘
‘அது ஒட்டிக்காதாம்பா ? ‘
‘ஒட்டிக்காதா ‘ யார் சொன்னா ? ‘
‘அவாத்து மாமி, மாமா, மோகன் எல்லோரும் சொல்வாலே. ‘
‘பின்னே அந்த மோகன், மாமி, மாமா எல்லோரும் வந்து அவர் தலையைச் சொறியப்படாதோ ? ‘
‘அவாலுக்கெல்லாம் வேலையில்லியாக்கும் ? மோகன் பல்லிக்கூடம் போறான். மாமா என்ஜீனியர், மாமி பூ நூல்லே பை பனியன்லாம் போடறா. அவாலுக்கு டயம் ஏது ? அவா சொறியப்படாதோங்கிறீயே. ‘
‘உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும், அசட்டுப் பொணமே ‘
‘ஒண்ணும் இல்லே. இத பாரு பேப்பர்லேயே போட்டிருக்கு ‘ என்று பையின் பிடியை அகட்டி உள்ளேயிருந்து நாலு சினிமாப் பாட்டு புத்தகங்களை எடுத்தான் அக்கணா. ஒரு புத்தகத்தைப் பிரித்து அதிலிருந்துஒரு தினசரிதாள் பக்கம் ஒன்றை எடுத்தான். அதிலெ ஒரு வெள்ளைக்காரப் பெண் யாரோ ஒரு ஆணின் கையைப் பிடித்துத் தடவிக் கொண்டு நிற்கிறாள். கருப்புக் கண்ணாடிகாரருக்கு இருந்த மாதிரியே கை, மூக்கு எல்லாம்…. ‘இது யாரு தெரியுமா ? வெல்லைக்கார தேசத்திலே ரானி. போன மாசம் மெட்ராசுக்கு வந்தா — ராஜாவோட. இந்த ஊருக்கு வந்து சினிமா, டிராமால்லாம் பார்க்கலியாம், காரை எடுத்துண்டு ஒரு கிராமத்துக்குப் போனாலாம். மாமா மாதிரி அங்கே முப்பது நாப்பதுபேர் இருக்கலாம். மருந்து சாப்பிடறாலாம். அவால்லாரையும் பார்த்து, கையெல்லாம் தடவிக் கொடுத்தா வெல்லைக்கார ரானி, போட்டோ போட்டிருக்கா பாரு தடவிக் கொடுக்கறாப்பல, ஒட்டிக்கும்னா ரானி தடவிக்கொடுப்பாலா, பேத்தியம் மாதிரி பேசறியே ? ‘
‘பேத்யம் மாதிரியா ? நானா பைத்தியம் ? ‘ என்று படத்தைப் பார்க்க ஆரம்பித்தார் முத்து.
‘படத்தை மட்டும் பாக்கறியே. கீலே எலுதியிருக்கு பாரு. ‘ என்று விரலை அந்த வரிகள் மீது ஒட்டிக் காண்பித்தான் அக்கணா.
‘பாலாம்பிகேச வைத்யேச ‘ என்று சுலோகம் சொல்லிக் கொண்டே வினோலியா பெட்டியைத் திறந்து கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார் முத்து.

         ‘மணியார்டரா ‘ எனக்கா ‘ ‘‘ஆமா ஸ்வாமி ‘ உங்களுக்கேதான் ‘ ‘‘உத்ராபதி, உனக்கு வயசு நாப்பதாயிருக்கும், சாளேசரம் போட்டுக்கற வயசு ‘ நல்லா பாத்துச் சொல்லு. நான் வாணா கண்ணாடி தரட்டுமா ? ‘ என்று துருப்பிடித்த வினோலியா ரோஸ் சோப் பெட்டியைத் திறந்து, வெற்றிலைக்கும் வெட்டுப் பாக்குக்கும் மேல் படுத்துக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியைத் தொட்டார் முத்து.‘கண்ணாடியும் வாணாம், சீப்பும் வாணாம். உங்களுக்குத்தான் வந்திருக்கு. நீங்களே அந்தக் கண்ணாடியை மாட்டிக்கிட்டுப் பாருங்க…எம். சாம்பமூர்த்தி யாரு ? ‘‘அக்கணாக்குட்டியா ? நம்ம புள்ளையா ? இப்ப மெட்ராஸிலேயா இருக்கு அது ? ‘முத்து அவசர அவசரமாக மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டி, இடது காதில் நூலைச் சுற்றிக் கொண்டார்.‘ஆமா, வேலைக்குப் போயிட்டானே அக்கணாக்குட்டி ஒரு மாசத்துக்கு முன்னால, உனக்குத் தெரியாது ? ‘‘தெரியாதே. எங்க வேலையோ ? ‘ என்று மணியார்டர் பாரத்தில் இரண்டு இடத்தில் இண்ட்டு போட்டுக் கொடுத்தார் உத்ராபதி. கையெழுத்தானதும் அடிக் கடிதத்தைக் கிழித்து முப்பதொன்பது ரூபாய்க்கு நோட்டும் ஒரு ரூபாய்க்கு சில்லறையுமாகப் பையிலிருந்து எடுத்து நீட்டினார்.‘

 

      சில்லறையும் மாத்திப்ட்டு நாற்பது ரூபாயைக் கொடுப்பானேன் ? அரை ருபாயைக் குறைச்சுண்டு கொடுக்கப் படாதோ ? ‘ என்று அரை ரூபாயை நீட்டினார் முத்து.‘நாலணாப் போதும் சாமி. உங்ககிட்ட அதுக்கு மேலே வாங்கறது பாவம் ‘ என்று பாதியைத் திரும்பிக் கொடுத்து விட்டார் உத்ராபதி.‘முதல் சம்பளம் வாங்கி அனுப்பிச்சிருக்கான் அக்கணாக்குட்டி. எட்டணாவாத்தான் இருக்கட்டுமேன்னு நினைச்சேன் ‘ என்று நாலணாவைத் திரும்பி வாங்கிக் கொண்டார் முத்து.‘பிறத்தியார் பணம் அனுப்பிச்சா, ரண்டுகையாலும் வீசி வீசி தருமம் பண்ணுவாங்க சாமி ‘ என்று சொல்லிக் கொண்டே குறட்டில் இறங்கி வந்தாள் அவர் மனைவி.‘ஏழைக்குதாம்மா தெரியும் ஏழை கஷ்டம். நீங்க சொல்றீங்களே, மாசம் நானூறு ரூபா அனுப்பறாரு ரட்டைத் தெரு மகாலிங்கய்யரு மகன், மிலிட்டரியிலே கர்னலா இருக்குறாராமே. மகாலிங்கய்யரு அப்படியே வாங்கிட்டு குந்தினாப்பல உள்ளே போயிடுவாரு. ஒரு பத்துகாசு டாத்தண்ணிக்கு ? மூச்சுப் பிரியப்படாது… முகத்தைப் பார்த்தாத்தானே ?… அக்கணாக்குட்டி என்ன வேலையாயிருக்கு ? ‘‘என்ன வேலையோ ? நம்ம எம். கே. ஆர். கிட்ட போய் புலம்பினேன் ஒரு நாளைக்கு, நம்ம பையனுக்கு ஒரு வழி பண்ணப்படாதா செட்டியார்வாள் ‘ இப்படி உதவாக்கரையாத் திரியறானேன்னு நின்னேன். ஒரு மாசம் கழிச்சு சொல்லியனுப்பிச்சார். போனேன். உம்ம பையனை அனுப்புரீராய்யா மெட்ராஸஉக்கு ? ஒரு பெரியமனுஷன் வீட்டிலே கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம். ஒரு பையன் இருந்தாத் தேவலைன்னு சொல்றாங்க.

 

      பெரிய இடம், புள்ளீங்க பள்ளிக்கூடத்துக்குப் போகும். கொண்டு விடணும், கடை கண்ணிக்குப் போகணும். இப்படி சில்லரை வேலையா இருக்கும் போலிருக்கு. நல்லா கவனிச்சிப்பாங்க. வீட்டோடு சாப்பாடு போட்டு வைச்சிப்பாங்கன்னார் எம். கே. ஆர்.‘அனுப்புறீமான்னு கேக்கணுமா ? நான்தான் கஞ்சிவரதப்பான்னு தவிச்சுண்டு கிடக்கேன். இன்னிக்கே அனுப்பிக்கறேன்னேன். நாலு நாக்கழிச்சு அவர் காரியஸ்தர் மெட்ராஸ் போனார். அக்கணாக்குட்டியை அழச்சிண்டு போயிட்டார். சரியா ஒண்ணரை மாசம் ஆச்சு. பணம் வந்திருக்கு. ‘‘என்னமோ சாமி கண்ணைத் திறந்தாரு. நீங்க முன்னாலே, இந்த மூக்கு கண்ணாடிக்கு அந்த நூலை எடுத்திட்டு ஒரு காது வாங்கிப் போடுங்க. அப்புறம் ஒரு உறையிலே போட்டு வச்சுக்குங்க. இப்படியே சீவல் மேலேயும் பாங்கு மேலேயும் வச்சிட்டிருந்தா பழங்கோலி மாதிரி கீறல் விளாம என்ன பண்ணுமாம் ‘ ‘ என்று சொல்லிக்கொண்டே உத்திராபதி நகர்ந்தார்.சம்சாரம் முத்துவைப் பார்த்தாள்.‘இப்படிக் கொடுத்திட்டு நேரே உள்ள வரட்டும். பற மோளம் மாதிரி ஊரெல்லாம் போய் தம்பட்டம் கொட்டிண்டு நிக்கவேண்டாம் ‘ என்று பல்லோடு பல்லாகச் சொல்லி வெற்றிலைப் பெட்டி மேலிருந்த நோட்டுகளை பெட்டிக்குள் போட்டு மூடி, பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்.வெற்றிலைப் பெட்டி கையை விட்டுப் போனதும் கூடவே விரைந்தார் முத்து. அவர் உள்ளே வந்ததும் கதவைத் தாழிட்டாள் சம்சாரம்.முத்து தோளிலிருந்த மூன்று முழம் ஈரிழையை இடுப்பில் கட்டி, அவள் கையிலிருந்த பெட்டியை வாங்கித் திறந்து நோட்டுகளை எடுத்து, பறையிலிருந்த பரமேச்வரனின் படத்தின் அடியில் வைத்து, நெடுங்கிடையாக விழுந்து மூன்று தடவை நமஸ்காரம் செய்தார்.‘ஏன் நிக்கறே ‘ நீயும் பண்ணேன் ‘ ‘‘எல்லாம் பண்றேன் ‘ என்றுதான் அவள் வழக்கமாகச் சொல்லிவிட்டு நின்றிருப்பாள். ஆனால் மனசு பாகாகிக் கிடந்ததால் அவரே சம்பாதித்து விட்டாற்போல, பதில் பேசாமல் கீழே குனிந்து மூன்று முறை வணங்கி எழுந்தாள்.

 

         அவளுக்கு, அந்தக் காலத்து முத்துவின் ஞாபகம் வந்தது. ஏழு வருடங்களுக்கு முன்னால் முத்து இப்படிக் கிழம் சென்று போகவில்லை. மயிர் கருகருவென்றிருக்கும், அள்ளிக்கட்ட வேண்டிய கூந்தலாக இருக்கும். மூக்கிலிருந்து இரண்டு கோடுகள் இந்த மாதிரி விழவில்லை. மார்பும் இரு பிளவாக அடித்தென்னை மட்டை மாதிரி வைரமாக இருக்கும். இப்படிச் சரியவில்லை. தோள்பட்டை இப்படிச் சூம்பவும் இல்லை. ஆடு சதை, துடைச் சதை எல்லாம் இப்படி கழளவுமில்லை. அப்போது வெற்றிலைப் பெட்டி பித்தளைப் பெட்டி. இப்பொழுது குப்பைத் தொட்டிபோல ஒரு வயதானத் தகரப் பெட்டி. அப்பொழுது வெள்ளிச் சுண்ணாம்புக் கரண்டான். இப்பொழுது பிரம்மோத்சவத்தில் தெருவோரக் கடைப்பரப்பில் வாங்கின தகரக் குழாய். அதுவும் துரு. கழுத்துக் குழியை தங்க ருத்ராட்சக் கொட்டை மறைத்ததுபோய், இப்பொழுது குழிதான் தெரிகிறது. மேனிபோய், தெம்பு போய் கங்காளி மாதிரி நிற்கறதைப் பார்த்துதான் ‘ரண்டாம் தாரமாம்மா ‘ ‘ என்று போன வருஷம் அமர்த்தின புதுத் தயிர்க்காரி கேட்டாள் போலிருக்கிறது. இப்படியா விசுக்கென்று இந்த பிராமணன் கிழண்டு போகும் ‘ மருந்துக்குக்கூட மயிரில் கறுப்பில்லாமல், கூந்தல் கொட்டைப் பாக்காகி….பல் விழவில்லை, ஆனால் கோணவும் பழுப்பேறவும் ஆரம்பித்து விட்டது.ஆனால் இது ஒன்றும் அவள் கண்ணை இந்தக் கணம் உறுத்தவில்லை.

 

       ‘என்ன இருந்தாலும் இதுக்கு இருக்கிற சாமர்த்தியம் சாமர்த்தியம்தான் ‘ என்று உவந்தாள்.அவளுக்குச் சற்று சிரிப்பாகக்கூட இருந்தது. நம் பிள்ளையைப் பார்த்து நாற்பது ரூபாய் சம்பளம் போட்டு சாப்பாடும் போடத் தோன்றிற்றே ஒருவனுக்கு ‘ இந்த உலகத்தில் எத்தனை அசடுகள் இருக்கமுடியும் ‘இல்லை….அண்ணாக்குட்டி நிஜமாகவே சமர்த்துதானோ ‘ நமக்கு ஒரு பிள்ளை. செல்லப்பிள்ளை. அசட்டுத்தனமேதான் கண்ணில்பட்டது. வெளியே போனதும் மறைந்திருந்த சமர்த்து வெளி வந்துவிட்டதோ என்னவோ.….இல்லை….பணத்தையே தின்று, பணத்தையே உடுத்தி, பணத்திலேயே படுத்துப் புரளுகிற கொழுப்பு ஜன்மங்களால் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து நாற்பது ரூபாய் கொடுக்கவாவது ‘…கொழுப்போ டம்பமோ, மனது நல்ல மனது. இந்தப் பாச்சைக்கு, பேச்சைக்காலும் பேச்சைக்கையும் கொன்னல் பேச்சுமாக இது கிடக்கிற லட்சணத்துக்கு இப்படி ஆதரிக்க வேண்டும் என்று தோன்றிற்றே.‘தட்சிணாமூர்த்தே, வைதீச்வரா, லோகமாதா ‘ நீங்கள்ளாம்தான் காப்பாத்தணும் ‘ என்று பயந்துபோய் நின்றாள் அவள்.‘சரி, காவேரியிலே போய் ஸானம் பண்ணிட்டு வந்துடறேன்…சில்லறை ஏதாவது கொடேன். கீரைத்தண்டு பாற்காய்னு ஏதாவது வாய்ண்டுவரேன் ‘ என்று முடுக்கினார் முத்து. ‘இன்னிக்கு கூடவா வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும் ? ‘, என்று சொல்லாமல் பிணங்குகிற முறுக்கு அது. நாலணாவை எடுத்துக் கொடுத்தாள். கன்னத்தில் அவளை செல்லமாக நிமிண்டிவிட்டு அவர் வெளியே போகிறார்.

 

        பணம் வந்தால் இந்த நிமிண்டல், குழையல் எல்லாம் இரண்டு பேருக்கும் சகஜம்.அவர் குளிக்கப் போனது நடந்து போகிற மாதிரி இல்லை. குதி போடுகிறது போலிருந்தது. அவனை — அதை, ரூபாய் அனுப்பும்படி யாரும் சொல்லவில்லை. அது அது வேலை என்று போனால் போதும் என்றிருந்தது. அது போய் நாற்பது ரூபாய் அனுப்பவாவது ‘ ‘நீ உருப்படமாட்டே, நீ உருப்படவே மாட்டே ‘ என்று அவனைச் சபித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது, வயிற்றில் பிறந்த பிள்ளையை இப்படியா சபிப்பார்கள் ‘ நம்ம புத்தி இவ்வளவு கட்டையாக ஏன் போயிற்று ? இப்பொழுது பணத்தை அனுப்பி நம்ம புத்தியில் கரியை பூசிவிட்டதே ‘ இந்தப் பிள்ளை ‘ அக்கணாக்குட்டி, இனி மேல் உன்னை அதட்டக் கூடமாட்டேண்டா என்று தன்னைத் திட்டிக்கொண்டு நடந்தார் முத்து ஒரு பிள்ளை ‘பிள்ளைகளெல்லாம் தாயையும் தகப்பனையும் கொள்ளாமல் பாட்டனையும் பாட்டியையும் கொள்ளுமாமே, –அதுபோல் அக்கணாக்குட்டியைப் பற்றிய வரையில் மெய்தான். அவன் முத்துவின் மாமாவைக் கொண்டு விட்டான். முத்துவைக் கொண்டிருந்தால் அண்டா, தவலைகளை அலட்சியமாக உருட்டுகிற வலுவு வந்திருக்கும். ஆயிரம் பேருக்கானாலும் ஒரு கல் உப்போ, புளியோ ஏறாமல் குறையாமல் சமைத்துப் போடுகிற நளபாகம் கை வந்திருக்கும். முத்துவின் சம்சாரத்தைக் கொண்டிருந்தால் பார்க்கவாவது லட்சணமாக வளர்ந்திருக்கலாம்.

 

         மீனாட்சி லட்சணம் தான். சமையற்கார முத்து பெண்டாட்டி என்று யார் சொல்ல முடியும் ? நூத்தம்பது வேலி பண்ணைவீட்டு எஜமானி எண்ணெய் ஸ்நானத்துக்காக நகைநட்டுகளைக் கழற்றி வைத்தாற் போலிருக்கும் …..ஸ்நானம் செய்துவிட்டுத் திரும்பி உள்ளே நுழைந்த கையோடு ஈர வேட்டியோடேயே அவளை அப்படியே அம்மென்று திணறத் திணறக் கட்டிக் கொள்ள வேண்டும். ம்க்கும்…ம்க்கும் இதுவேறயாக்கும் என்று சொன்னாலும் சொல்லுவாள். கட்டிண்டு தொலை என்று சொல்வது போல மரம் மாதிரி நின்றாலும் நிற்பாள். அவளுக்குப் பிறந்த பிள்ளை அந்த மாதிரி மூக்கும் முழியுமா இருக்கக் கூடாதோ ? மூக்கில் வற்றாத ஜலதோஷம். ஹ் ஹ் என்று நிமிஷத்துக்கு ஒரு உறிஞ்சல். முட்டிக்கால், முட்டிக் கை. குதிகால் கீழே படாமல் இரண்டு குதியிலும் முள்குத்தினாற் போன்ற விந்து நடை, வாயைச் சற்று திறந்தாலே ஓட்டுக் கூரை மாதிரி பல் வரிசை — வரிசை இல்லை கோணல் — ஓடு மாற்றி நாலு வருடமானாற் போல. அந்த பல்லுக்கு ஏற்ற சொல், எச்சிலில் குளித்துக் குளித்து வரும் ஒவ்வொரு பேச்சும். எப்ப வந்தேல் மாமா சேக்யமா ? நாலானன் சேக்யமார்க்கானா, (நாலானன் என்றால் நாராயணன்) செலுப்பு பிஞ்சு போச்சுப்பா இன்னிக்கி காவேரி ரண்டால் ஆலம்…. வயசு பதினைந்து முடிந்தும் இதே பேச்சுதான். படிப்பு வரவில்லை. எலிமெண்டரிக்கு மேல் ஏறவில்லை. ஐந்து வருஷம் வீட்டோடு கிடந்ததும் போன வருஷம் ஒரு மளிகைக் கடையில் இழுத்துவிட்டார். அங்கே ஒரு நாள் எண்ணெயைக் கொட்டி ரகளை. வேலை போய்விட்டது.

 

         சைக்கிள் பழுது பார்க்கிற கடையில் கொண்டுவிட்டார். நாலு நாளைக்குப் போய்விட்டு வந்து ஜஉரமாகப் படுத்துக் கொண்டு விட்டது. நான் மாட்டேன்; சைக்கிலுக்குப் பம்பு அடிக்கச் சொல்றான். கண்டு கண்டா மார் வலிக்குது. நான் மாட்டேன் போ என்று திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டது. முத்து அலையாத இடமில்லை. பையனை அழைத்துக் கொண்டு வர்ச் சொல்லுவார்கள். போவார், பையனைப் பார்த்ததும் சொல்லியனுப்புகிறேன் என்று அனுப்பி விடுவார்கள். விறகு கடையில்கூட வேலைக்கு வைத்துப் பார்த்தாயிற்று. ஒரு கட்டையைத் தூக்க நூறு முக்கல். தினமும் நகத்திலும் விரல் இடுக்கிலும் சிலாம்பு. வீட்டுக்கு வந்து போகமாட்டேன் என்று அடம். நீ உருப்படவே மாட்டே என்று அப்பா அம்மா பாட்டு ‘ ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டான் அவன். பேசாமல் போய் திண்ணையில் உட்கார்ந்து வாசலில் போகிற வெள்ளாட்டையும் குட்டியையும் முக்கை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்துக் கொண்டிருப்பான். இல்லாவிட்டால் வீட்டுக்கார வாத்தியார் பெண்ணோடு ‘நேத்திக்கி ரிசவாகனம் பாக்கலியே நீ தூங்கிப் போயிட்டியே ‘ என்று திருநாள் சேதிகளைப் பேசிக் கொண்டிருப்பான்.ஸ்வாமி நினைத்தால் என்ன செய்யமாட்டார் ‘ ஊமைக்கும் அசடுகளுக்கும் அவர் தானே கண். என்னப்பா ‘ வைத்தீச்சுவரா ‘ இந்த மட்டுமாவது பாதை காட்டினியே ‘முதல் தடவை பணம் வந்து ஆச்சரியத்தில் கழிந்தது.

 

        இரண்டாம் தடவைகூட அந்த ஆச்சரியம் குறையவில்லை. மூன்றாம் தடவை இரண்டு மூன்று நாள் தாமதமாயிற்று. வேதனையாயிருந்தது. பயமாக இருந்தது. ஐந்தாவது தடவை ஒரு வாரம் தாமதம். கோபம் வந்தது. கோபத்தை சமாளித்துக்கொண்டு என்ன கஷ்டமோ இடைஞ்சலோ என்று சமாதானம் செய்து கொண்டு சாந்தமான சமயத்தில் பணம் வந்து குதித்துவிட்டது. ‘இது சம்பாதிச்சு நான் சாப்பிடணுங்கறது இல்லை ஸ்வாமி. என்னமோ முன்ன மாதிரி கண் சரியாகத் தெரியலை. கை நடுங்கறது. என்னமோ குழப்பம். மொளகாப் புளியெல்லாம் முன்ன மாதிரி திட்டமா விழமாட்டேங்கிறது. இல்லாட்டா என்ன விட்டுட்டு ஆனந்தம் பயலைக் கூப்பிடுவாளோ ஏலாவூர் பண்ணையிலே ‘ எத்தனை கலியாணத்துக்கு அங்கே டின்னரும் டிபனுமா பண்ணிப்போட்டிருக்கேன் ? இந்தப் பய இப்படி பிள்ளையா பிறந்து இப்படி நிக்கறதேங்கிற கவலையிலே எனக்கு கையி, தீர்மானம், தைரியம் எல்லாம் ஆடிப்போச்சு ஸ்வாமி. இப்ப அது நிமிர்ந்துட்டுது. என் குழப்பம் நிமிரலே, என்ன பண்றது ‘ இல்லாட்டா இது சம்பாரிச்சா நான் சாப்பிடணும் தலையெழுத்து ‘ என்று மணியார்டர் வாங்கும்போது வந்து, விசாரிக்கிற பார்வையாகப் பார்த்த வீட்டுக்கார வாத்தியாரிடம் உருகினார் முத்து.அந்தச் சமயத்தில்தான் வண்டிக்காரத் தெருவிலிருந்து வக்கீல் குமாஸ்தாவின் காரியஸ்தன் வைத்தியநாதய்யன் வந்து செய்தி சொல்லிவிட்டுப் போனான். மத்தியானம் முடிந்தால் வீட்டுப்பக்கம் வந்துவிட்டுப் போகச் சொன்னாராம் அண்ணாவையர்.

 

        வக்கீலுக்குக் குமாஸ்தா. அந்த குமாஸ்தாவுக்கு ஒரு காரியஸ்தனா ? இது உலகத்தில் இல்லாத ஆச்சரியம் இல்லையோ ? ஆனால் நடக்கிறதே. அண்ணாவையனுக்கு காரியஸ்தன் ஒருவன் இல்லை, இரண்டு மூன்று பேர் உண்டு. இந்தா என்றால் ஏன் எங்கேயென்று ஓடக் காத்திருக்கிற எடுபிடி ஆட்கள் மூன்று பேர் –அண்ணாவையன் முத்துவுக்குக்கீழ் சமையலாக இருந்தவன்தான். திடாரென்று ஒரு நாளைக்கு வக்கீல் ஜகதுவுக்கு குமாஸ்தாவாக ஆனான். மூன்று வருஷத்தில் ஜகதுவையே உட்கார்த்தி வைத்துவிட்டான். தானே வக்கீல் மாதிரி தொழில் நடத்தத் தொடங்கிவிட்டான். முதலிமார் கேஸ்கள், செட்டி நாட்டுக் கேஸஉகள் –பாகப் பிரிவினைகள் வியாஜ்யங்கள் என்று பிரளயமாடுகிறான். கோர்ட்டு ஏறாமலே எத்தனை மத்தியஸ்தங்கள் ‘ பல மத்தியஸ்தங்கள் வாசல் திண்ணையில் நீட்டின கால்களை முடக்காமலே நடக்கும். மலையாளத்து இரட்டைத் தாழம் பாயில் திண்டுமீது சாய்ந்து….ஏ அப்பா ‘ என்ன கார்வார் ‘ என்ன மோக்ளா ‘முத்து கீரைத்தண்டு சாம்பார் சாதத்தைச் சாப்பிட்டு வினோலியா டப்பாவுடன் வண்டிக்காரத் தெருவுக்குப் போனார். போகாமல் எப்படி இருக்க முடியும் ‘ விறகு கடையிலும் சைக்கிள் கடையிலும் அக்கணாக் குட்டியை வேலைக்கு வைத்தது அண்ணாவையன் தானே. இது வேலையை விட்டால் அவன் என்ன செய்வான் ?வழக்கம் போல நீட்டின காலை மடக்காமலே ‘வா முத்து, உட்காரு ‘ என்று அண்ணாவையன் திண்ணையில் தாழம் பாயில் சாய்ந்தவாறே அழைத்தான்.‘வைத்தா வந்து சொன்னான், அய்யர்வாள் கூப்பிட்டார்னு ‘‘ஆமா.

 

          முத்து ‘ என்று எழுந்து புகையிலையை உமிழ்ந்துவிட்டு வந்து, ‘ராத்திரி மெட்ராஸ் போறேன். இந்த தடவை யாராவது கூட இருந்தா தேவலை போலிருக்கு. ஒரு வாரமா ஜஉரம். முந்தாநாத்தான் ஜலம் விட்டுண்டேன். நாளைக்கு அர்ஜண்டா கேஸஉ ஹைக்கோர்ட்டிலே. பத்தியச் சாப்பாடு. ஹோட்டல்ல தங்கப்போறதில்லெ. தம்முடு கலியாண மண்டபத்திலே தங்கப் போறேன். நீகூட வந்து ஒரு ரசம் சாதமோ தொகையலோ பண்ணிப் போட்டா தேவலைன்னு தோணறது. அதான் கூப்பிட்டனுப்பிச்சேன் ‘‘அதுக்கென்ன செஞ்சுபிடறது. ‘‘நீ தீர்க்காயுசா இருக்கணும், நாலாநாள் திரும்பி விடலாம். நீ போறதுக்கு ரெடி பண்ணிக்கோ. நாளை நாளன்னிக்கி ஒண்ணும் அச்சாரம் வாங்கலியே ‘‘இப்ப என்ன ஆடி மாசத்திலே அச்சாரம் ? ‘‘ரொம்ப நல்லது போ. அப்ப ரண்டு நாள் கூடத் தங்கினாலும் பாதமில்லேன்னு சொல்லு. ‘‘ஒரு மாசமாத்தான் இருக்கட்டுமே. நீங்க கூப்பிடறச்சே நான் வெட்டி முறிக்கப் போறேனோன்னேன். என்ன பேச்சு இது ? ‘‘சரி, இந்தா–இதோ இருவது ரூவா இருக்கு. மீனாட்சி கிட்ட கொடு. செலவுக்கு வேணுமே அவளுக்கு… ‘ ராத்திரி ஏழு மணிக்கு வந்துடு. இங்கேயே சாப்பிட்டுப் புறப்படலாம்.‘சாப்பிடறேன். இது என்னத்துக்கு ? ‘ என்று உபசாரமாக பணத்தை மறுத்தார் முத்து.‘எது என்னத்துக்கு ? –கொடுத்தா பேசாம வாங்கிவச்சுக்கோயேன். நீதான் மகாப் பிரபுன்னு தெரியுமே எனக்கு.

 

         ‘‘சரி ‘ என்று புன்சிரிப்புடன் இரண்டு நோட்டையும் வினோலியாப் பெட்டிக்குள் வைத்து மூடி ‘நானே போகணும் போகணும்னு நெனச்சிண்டிருந்தேன். நீங்க கூப்பிட்டுது பால்லெ பழம் விழுந்தாப்பல ஆயிட்டுது ‘ என்றார் முத்து.‘என்ன ? ‘‘நம்ம அண்ணாக்குட்டி அங்கதானே இருக்கான்… போறபோது அவனையும் ஒரு நடை பார்த்துட்டு வந்துடலாமே ‘‘ஒஹோஹொ. ரண்டு மாசம் முன்னாலேயே சொன்னியே– யாராத்திலெயோ இருக்கான்னு. எனக்கு மறந்தே போயிடுத்து பாரேன். பலசரக்குக் கடைக்காரனுக்கு பைத்தியம் புடிச்சாப்பல ஆயிடுத்து என் புத்தி… பேஷ்– ‘பட்டணத்துக்கு வந்த நாலாம் நாள்தான் முத்துவுக்கு ஒழிந்தது. அண்ணாவையருக்கு சமைத்துப்போட்டு விட்டு அவரோடும் சுற்ற வேண்டியிருந்தது. மூன்று நாளுக்குப் பிறகுதான் அண்ணாவையருக்குத் தைரியம் வந்தது. தனியாக நடமாடலாம் என்று. அன்று சனிக்கிழமை. வேங்கடாசலபதி பெயரைச் சொல்லி ஒரு சர்க்கரைப் பொங்கல் பண்ணச் சொன்னார் அண்ணாவையர். அவருக்குச் சாப்பாடு போடுவதற்கு முன்னமே சொல்லி விட்டார் அவர். ‘முத்து, நான் சாப்பிட்டுக் கோர்ட்டுக்குப் போறேன். நீ அக்கணாக் குட்டியைப் பார்த்துட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துரு. ராத்திரி வண்டிக்கே கிளம்பும்படியா இருக்கும். முடிஞ்சா அந்தப் பயலையும் அழச்சிண்டு வா. நானும் பார்க்கறேன் ‘ என்ரு அவர் சொன்னதும் அவிழ்த்துவிட்ட கழுதை மாதிரி ஓட வேண்டும் போலிருந்தது முத்துவுக்கு. நெஞ்சுக்குள் குதியாகக் குதித்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவருக்குச் சாதத்தைப் போட்டார். டாக்சி பிடித்துக் கொண்டு அவரை ஏற்றி வழியனுப்பி விட்டு, ஒரு எவர்சில்வர் டப்பாவில் சர்க்கரைப் பொங்கலைப் போட்டுக்கொண்டு மாம்பலம் பஸ்ஸில் ஏறினார்.வீடு கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை.

 

         வீடா அது பங்களா. பங்களாகூட இல்லை. சின்ன அரண்மனை. ஒரு மாஞ்சோலைக்கு நடுவில் இருந்தது. கேட்டைக் கடந்து நுழைந்ததும் நடுவில் ஒரு நாகலிங்க மரம். இப்பாலும் அப்பாலும் இரண்டிரண்டு மாமரங்கள். ஒரே நிழலாக இருந்தது. தள்ளிப்போனால் கார் நிற்கும் முகப்பு. காரும் இருந்தது. நாகலிங்க மரத்துக்குப் பக்கத்தில் சிமண்டு சோபா இரண்டு திண்ணைபோல கட்டியிருந்தன, அங்கே நான்கு பையன்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.‘அம்பி ‘ ‘ என்று இரண்டு தடவை கூப்பிட்டார் முத்து. அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. மாமரத்தில் ஒரு குயில் கத்திற்று. கீழே நாகணவாய் இரண்டு மஞ்சள் மூக்கும் குழைந்த கூவலுமாக ஆடி ஆடி நடந்து கொண்டிருந்தன.‘நான் டபிள்ஸ் எத்தனையோ தடவை போயிருக்கேண்டா இதே சைக்கிள்ளே என்ன செஞ்சிடுவாங்க ? எங்க தாத்தா ஹைகோர்ட் ஜட்ஜஉ கான்ஸ்டபிள் என்னைப் பிடிச்சிடுவானா ? ‘‘ம்க்ம்…நீ யார் க்ராண்ட்ஸன்னாயிருந்தா போலீஸ்காரனுக்கு என்னடா ? அவன் டூட்டி செய்யத்தான் செய்வான். ‘‘பெட்டு ? –நான் டபுள்ஸ் போறேன், மணியோட….. பிடிக்கிறானா பார்ப்பமா ? அஞ்சு ரூபா பெட்டு ‘ இந்தா ‘ என்று சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து வைத்தான் அந்தப் பையன்.பன்னிரண்டு வயதுக் குழந்தையின் பையிலிருந்து ‘பெட்டு ‘க் கட்ட ஐந்து ரூபாய் பணம் வருவதைப் பார்த்து முத்து பயந்து போய்விட்டார். இந்தப் பையன்களைத்தான் அக்கணாக்குட்டி பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு விடுகிறானா ‘ அவருக்குப் பயமாகவும் இருந்தது. பெருமையாகவும் இருந்தது.

 

       ‘அம்பி ‘ ‘ என்று மறுபடியும் கூப்பிட்டார். பதிலில்லை. அன்று சனிக்கிழமை, பள்ளிக்கூடம் இல்லை போலிருக்கிறது.மறுபடியும் கூப்பிட்டார்.‘யாரு ? ‘‘சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் கும்மாணத்திலிருந்து வந்திருக்கானே அவன் இஞ்சதானே இருக்கான். ‘‘தெரியாது ‘‘இதுதானே குப்புசாமி அய்யர் பங்களா ‘ ‘‘யார்றா குப்புசாமி அய்யர் ? ‘‘போடா ‘ நம்ம மோகன் தாத்தா தாண்டா. அவர் வீடுதான் ‘‘நீங்க இந்த வீடு இல்லையா ? ‘‘இல்லை. நாங்க எங்க ப்ரண்டு மோகனைப் பார்க்க வந்திருக்கோம். மோகன் உள்ளே சாப்பிடப் போயிருக்கான். ‘முத்து மெதுவாக நகர்ந்து வீட்டின் முகப்புக்குப் போனார். அங்கு யாருமில்லை. உள்ளே ஹாலுக்குப் போனார். பாதி இருட்டு. அங்கே பெரிய மைசூர் மகாராஜா ராணியோடு நிற்கிறபடம், கொம்பு, மான்தலைகள், யாரோ தலைப்பாகை நீளக்கோட்டு கால்சட்டை போட்ட மனிதரின் படம் எல்லாம் மாட்டியிருந்தன. அங்கும் யாருமில்லை. அதையும் தாண்டினார். ஒரு கிழவன் அந்தண்டை நடையில் ஒரு ஸ்டூல்மீது உட்கார்ந்திருந்தான்.‘யாரு ? ‘‘ஏம்பா சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் இங்க இருக்கானே தெரியுமோ ? ‘‘பையன்னா ? எந்தப் பையன் ? ‘‘இங்கே வேலைக்கிருக்கான்பா ஒரு பையன் — கும்மாணத்திலிருந்து வந்திருக்கான். ‘‘அப்படிச் சொன்னால் தெரியும் ? சாம்புவைத்தானே கேக்கறீங்க —பெரிய அய்யரோட இருக்கே அந்தப் பையன்தானே ? ‘‘அது என்னமோ, இங்க வேலையா யிருக்கான் அந்தப் பையன் ? ‘‘கும்பகோணத்துப் பையன்தானே ? ‘‘ஆமாம். ‘‘அப்ப இப்படி இறங்கி அதோ அங்கே போங்க — காட்டேஜஉக்கு, அங்கதான் இருப்பான் பையன், இப்பதான் அய்யரோட வெளியே போய் வந்தான். ‘‘இங்கே ? ‘ என்று நடை முடிவில் இருந்த வாசற் படியைக் காட்டினார் முத்து.

 

         ‘இங்க சின்ன ஐயா ரண்டுபேரும் இருக்குறாங்க… பெரியய்யா இருக்கிற இடம் அதுதான். அங்கதான் அந்தப் பையன் இருக்கான்… நீங்க யாரு ? ‘‘நான் அந்தப் பையனோட தோப்பனார். ‘‘அப்படியா ‘ சரி சரி, போங்க. ‘முத்து நடையிலிருந்து இறங்கி தோட்டத்தோடு போனார். ஏ அப்பா எத்தனை பெரிய வீடு ‘ எத்தனை மரங்கள் ஒரு ஆளைக் காணவில்லை. வாசலை இப்படி ஹோவென்று போட்டுவிட்டு உள்ளே எங்கேயோ இருக்கிறார்களாம். ஒரு ஈ காக்கையைக் காணோம் ‘ முந்நெற்றி மயிரைப் பிடித்தாலும் தெரியாது போலிருக்கிறது.ஒரே நிசப்தமாக இருந்தது. தோட்டப் பாதையில் நடந்து அங்கே காட்டேஜின்படி ஏறினார் முத்து.தாழ்வாரத்தில் வந்து ‘சார் ‘ என்றார்.‘யாரு ? ‘‘நான்தான் ‘ என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.அங்கே ஒரு பெரிய மேஜை, அதன்மேல் தடிதடியாகக் கணக்குப் புத்தகங்கள். அதன் பின்னால் நாற்காலியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் கறுப்பாக மூக்குக் கண்ணாடி, மேஜையில் ஒரு நீலக்கடுதாசி. அதன் மேல் வரைபடம். அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் பக்கத்தில் நின்று அவருடைய தலையை, கிராப்புத் தலையை வரக்கு வரக்கு என்று சொரிந்து கொண்டிருக்கிறான்.கறுப்பு கண்ணாடியின் உடலும் லேசாகக் கறுப்புத்தான். முத்து உள்ளே நுழைந்ததும் அவர் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றாமலே நிமிர்ந்து பார்க்கிறார்.‘யப்பா ‘ என்று ஒரு குரல்.அக்கணாக்குட்டியின் குரல்தான், மேஜை மீதிருந்த மங்கிய விளக்கின் கறுப்பு மறைவுக்குப் பின்னால் அக்கணாக்குட்டியின் முகம் தெரிந்தது.‘எப்பப்பா வந்தே ? ‘ என்று ஹ் என்று உறிஞ்சிக் கொண்டே சிரிக்கிறான் அவன்.

 

           ‘யார்றா சாம்பு ? ‘‘எங்கப்பா மாமா ‘ என்று அவர் தலையைச் சொறிந்து கொண்டே அக்கணாக்குட்டி ‘எப்பப்பா வந்தே ? ‘ என்று சிரித்தான்.‘நமஸ்காரம் ‘ என்றார் முத்து.‘நமஸ்காரம். சாம்பு அப்பாவா — வாங்கோ ‘ ‘‘வந்தேன் ‘‘உட்காருங்கோ ‘ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் முத்து. வெய்யிலிருந்து உள்ளே வந்ததும் கண்ணை மறைத்த இருள் மெதுவாக விலகிற்று. கண் நன்றாகத் தெரியத் தொடங்கிற்று.‘செளக்கியமா ? ‘ என்றார் கறுப்புக் கண்ணாடி.‘செளக்யம் ‘முகத்தை நன்றாகப் பார்த்தார் முத்து. உதடு அறுந்தது மாதிரி அதைத்துத் தொங்கிற்று. கன்ன எலும்பில் இரண்டு அதைப்பு. காது வளையமெல்லாம் அதைப்பு. மேஜை மீது படிந்திருந்த கைகளை பார்த்தார். கைகள் படியவில்லை. கட்டைவிரல் மற்ற விரல்களெல்லாம் மடங்கியிருந்தன. நீட்ட முடியாத விரல்கள் என்று பார்த்தாலே தெரிந்தது.‘எப்பப்பா வந்தே…ஹ் ? ‘ என்று பல் வரிசையைக் காட்டிக் கொண்டே கேட்டான். அக்கணாக்குட்டி. அவருடைய தலையைச் சொறிவதை மட்டும் நிறுத்தவில்லை.‘இப்ப தாண்டா வரேன் ‘‘இப்ப ஏதுப்பா வண்டி….ஹ் ? ‘‘வண்டி முன்னூறு நிமிஷம் லேட்டு. தெரிஞ்சவா வீட்டிலே வந்து இறங்கினேன். சாப்பிட்டேன், உடனே புறப்பட்டு வரேன் ‘ என்று தன்னறியாமல் பொய் சொன்னார் முத்து.அப்பொழுது கறுப்புக் கண்ணாடிப் பெரியவர் கன்னத்தை சொரிந்து கொண்டார். எல்லாரும் விரல் நுனியால் நகத்தால் சொறிந்துகொள்வார்கள். அவர் மடக்கின விரலின் பின்பக்கத்தால் சொறிந்து கொண்டார். முத்துவுக்கு பகீர் என்றது. இரண்டு மூன்று விரலில் நகமே இல்லை.

 

         முத்துவுக்கு உட்கார முடியவில்லை. மேலெல்லாம் அரிப்பது போலிருந்தது. அந்த அறையில் காலைப்பாவவிட்டாலே உள்ளங்கால் அரிக்கும்போலிருந்தது. முள்மேல் உட்கார்வது போல குறுகிக்கொண்டார்.பெரியவர் என்னென்னமோ வெல்லாம் கேட்டார். தப்பும் தவறுமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் முத்து. காதில் ஒன்றையும் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளே பூஞ்சதை நரம்பெல்லாம் அழுவதுபோல் ஒரு கசிவு.‘போரும்டா சாம்பு ‘ என்றார் பெரியவர்.அக்கணாக்குட்டி சொறிவதை நிறுத்தினான்.‘பையன் ரொம்ப சமர்த்தாயிருக்கான். அவன் இருக்கிறது எனக்கு ஆயிரம் பேர்கூட நிற்கிறாப்போல இருக்கு ‘ என்றார் பெரியவர். சொல்லிவிட்டு ‘சித்தே இருங்கோ, இதோ வந்துடறேன் —சாம்பு இப்படி வாயேன் ‘ என்றார்.அக்கணாக்குட்டி அருகில் வந்து நின்றான். பெரியவர் எழுந்து அவன் தோளில் கையைப் போட்டுக்கொண்டார். அக்கணா நடந்தான். அவரும் விந்தி விந்தி துணி பூட்ஸ் காலால் நடந்தார். அவரை ஹாலின் ஒரு கோடியில் உள்ள கதவைத் திறந்து உள்ளே விட்டு வெளியே காத்து நின்றான்.‘உங்க மாதிரி யார் இருப்பா ? விளக்கேத்தி வச்சேளே என் குடும்பத்துக்கு. நிஜமாகச் சொல்றேன். அக்கணாக்குட்டி அனுப்பிக்கிறானே மாசாமாசம் அதிலே தான் வயிறு ரொம்பறது. யார் செய்வா இந்த மாதிரி இந்தக் காலத்திலே ? அவனையும் ஒரு ஆளாக்கி….அவன் ஒரு கால் காசைக் கண்ணாலே காணப்போறானோன்னு ஒடிஞ்சு போய்விட்டேன். ஸ்வாமிதான் உங்க ரூபத்திலே வந்து அவன் கண்ணைத் திறந்துவிட்டார்…. ‘ அக்கணாக்குட்டியைப் பார்க்கபோகும் போது அவனுடைய எஜமானரைப் பார்த்தால் இப்படி என்னென்னவெல்லாமோ சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்திருந்தார் முத்து.இப்போது வாயைத் திறக்கவில்லை. முடியவில்லை அந்த நினைவெல்லாம் தோன்றிய சுவடே இல்லை.

 

        மனதில் ஒரு பீதி. ஒரு குமைச்சல். குமட்டல். ஒரு கோபம். ‘பாவி ‘ நீ நன்னாயிருப்பியா ? ‘ என்று அடிவயிற்றிலிருந்து கதற வேண்டும் போலிருந்தது. அக்கணாக்குட்டி ஹால் ஓரத்தில் பெரியவர் வருவதற்காகக் காத்து நின்றவன் அப்பாவைப் பார்த்துப் புன்சிரிப்பு சிரித்தான். ஹ் என்று உறிஞ்சினான்.முத்துவுக்கு நெஞ்சில் கட்டி புறப்பட்டாற்போல் வலித்தது. இவனையும் தாண்டி கதவைப் பார்த்தது அவர் கண். வெளியே நெளியப் போகும் நல்ல பாம்பைப் பார்ப்பது போல் ஒரு கிலி வேறு சூழ்ந்துகொண்டது.‘இந்தண்ட வாடா ‘ என்று வாயால் தலையை அசைத்தார் — அவசரமாக, சுளிப்பாக.அவன் புரிந்து கொள்ளவில்லை. புன்சிரிப்புடனேயே சாத்தியிருந்த கதவைக் கையால் காண்பித்து சைகை காட்டினான்.பெரியவர் காவி பூட்ஸஉம் காலுமாக வந்தார். சுவரில் பதிந்த ஒரு பளபள கம்பியிலிருந்த ஒரு துண்டை எடுத்து அவரிடம் நீட்டினான் அக்கணா. அவர் கையைத் துடைத்துக் கொண்டதும், தோளைக் கொடுத்தான். பிடித்துக் கொண்டு வாத்து நடை நடந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.முத்து ஆரம்பித்தார். ‘சம்சாரத்துக்கு ஊரிலே உடம்பு ரொம்ப மோசமாயிருக்கு. பதினஞ்சு நாளா படுத்த படுக்கையாயிருக்கா. பிள்ளையைப் பார்க்கணும் பார்க்கணும்னு புலம்பறா, ஜஉரம் இறங்கவே இல்லை…. ‘‘அடடா….நீங்க ஒரு வார்த்தை எழுதப்படாதோ ? ‘என்னமோ சாதாரண ஜஉரம்னு நெனச்சிண்டிருந்தேன். அது என்னடான்னா இறங்கற வழியாயில்லெ. அப்புறம் அவ தங்கைக்கு லெட்டர் போட்டு வரவழச்சேன், கிராமத்திலேர்ந்து. இவளானா புலம்பறா. உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லி பயலை அழச்சிண்டு போகலாம்னு வந்திருக்கேன் ‘ என்று அடுக்கிக் கொண்டே போனார் முத்து

 

         பெரியவர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். கறுப்புத்தான் கண்ணை மறைத்திருக்கிறதே என்ன தெரியும் ? அந்த முகத்தில்தான் என்ன தெரியும் ? தடிப்புத்தான் தெரிந்தது.முத்துவுக்கு மட்டும் தான் சொன்னதை அவர் நம்பவில்லையோ என்று வயிற்றில் கனத்தது.பெரியவர் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்.‘ஊர்லெ சிநேகிதர் ஒருத்தர் காரிலே வந்திருக்கார். சேர்ந்து போயிடுவமேன்னார். ரயில்காரனுக்கு கொடுக்கறதையாவது மிச்சம் பண்ணலாம்னு நினைச்சேன். ‘பெரியவர் வாய்தடிப்பு ஒரு புன்னகையாக மலர்ந்தது. சிரித்தால் அழகாகத்தான் இருக்கிறது. யார் சிரித்தால் என்ன என்று தோன்றிற்று முத்துவுக்கு.‘பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும் ‘ என்றார் முத்து.‘பாதகமில்லை ‘ என்று ஒரு புத்தானை அழுத்தினார் பெரியவர்.‘சாம்பு, அப்பா கூப்பிடறாரேடா போறியா ? ‘ என்று கேட்டார்.‘அம்மா ரொம்ப ஜஉரமாக கிடக்காடா. உன்னைப் பார்க்கணும்னு பேத்திண்டேயிருக்கா– ராவில்லே பகலில்லே ‘ என்றார் முத்து.‘சரிடா சாம்பு. வேட்டி சட்டையெல்லாம் எடுத்து வச்சுக்கோ ‘ என்றார் பெரியவர். ‘பையன் ரொம்ப ஒத்தாசையாயிருந்தான் ஸ்வாமி. சுருக்கக் கொண்டு விட்டு விடுங்கோ. ‘‘ம் ‘ உடம்பு சரியாயிருந்தா, அங்கே என்ன வேலை ? ‘ என்றார் முத்து.அக்கணா பின்னாலிருந்த இன்னொரு அறைக்குப் போனான்.வாசலிலிருந்து ஒரு தட்டில் டிபன் காபி எல்லாம் பரிசாகரன் கொண்டு வந்தான். அதற்குத்தான் புத்தானை அழுத்தினார் போலிருக்கிறது பெரியவர்.‘சாபிடுங்கோ. ‘‘நான் இப்பத்தானே சாப்பிட்டேன். ‘‘இங்கே வந்து வெறும் வயத்தோட போகலாமா ? ‘முத்துவுக்குச் சொல்ல மெல்ல முடியவில்லை. ‘பாலாம்பிகேச வைத்யேச ‘ என்று மனத்துக்குள் சுலோகம் சொல்லிக் கொண்டே காபியை மட்டும் எடுத்து கண்ணை மூடி மளமளவென்று விழுங்கினார்.

 

          பரிசாரகன் பாத்திரங்களை எடுத்துப் போனான்.அக்கணாக்குட்டி பையும் கையுமாக வந்தான். வெளிச்சத்தில் நன்றாகப் பார்க்கும்போது அவன் எவ்வளவு மாறிவிட்டிருக்கிறான் என்று தெரிந்தது. தலையை வழவழவென்று சீவி விட்டிருந்தான், வெள்ளை வெளெரென்ற சட்டை, வெள்ளை வேட்டி, முகத்தில் ஊட்டத்தின் பொலிவு, சட்டைக்கு வெளியே தெரிந்த முன்னங்கைகூட பளபளவென்று நிறம் ஏறியிருந்தது.‘என்னை ரொம்ப மன்னிச்சிக்கணும் ‘ என்று எழுந்து கும்பிட்டார் முத்து.‘எதுக்காக ? ரொம்ப நன்னாருக்கே. ‘‘நமஸ்காரம் பண்ணிட்டு போய்ட்டு வரேன்னு சொல்லிக்கோடா ‘ என்றார் முத்து.அக்கணா விழுந்து வணங்கி எழுந்து ‘போய்ட்ரேன் மாமா ‘ என்றான்.‘போய்ட்டுவா. போய் லெட்டர் போடு, அம்மாவுக்கு உடம்பு எப்படியிருக்குன்னு. எப்ப வரேன்னும் எழுதணும். ‘‘சரி மாமா. ‘இருவரும் வெளியே நடந்தார்கள்.இவ்வளவு சீக்கிரம் காரியம் நடக்கும் என்று நினைக்கவில்லை, சிங்கத்தின் குகையிலிருந்து வருவது போல, திரும்பிப் பார்க்காமல் வேகமாக வெளியே வந்து தோட்டத்தை தாண்டி தெருவுக்கு வந்து சாலைக்கு வந்தார் முத்து. ‘மெதுவாப் போப்பா ‘ என்று கூடவே விரலால் நடந்து சிறு ஓட்டமாக ஓடிவந்தான்.சாலைக்கு வந்து பஸ் ஏறினதும்தான் வாயைத் திறந்தார் முத்து.

 

           ‘ஏண்டா மக்கு ‘ இந்த மாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு நீ சொல்லவே இல்லியே ‘ என்றார்.‘என்ன உடம்பு ? ‘‘உனக்குத் தெரியலியா ? ரொம்ப கரிசனமா தலையைச் சொறிஞ்சு விட்டியே, புத்திதான் இல்லை, கண்ணுகூடவா அவிஞ்சு போச்சு ? ‘‘அது ஒட்டிக்காதாம்பா ? ‘‘ஒட்டிக்காதா ‘ யார் சொன்னா ? ‘‘அவாத்து மாமி, மாமா, மோகன் எல்லோரும் சொல்வாலே. ‘‘பின்னே அந்த மோகன், மாமி, மாமா எல்லோரும் வந்து அவர் தலையைச் சொறியப்படாதோ ? ‘‘அவாலுக்கெல்லாம் வேலையில்லியாக்கும் ? மோகன் பல்லிக்கூடம் போறான். மாமா என்ஜீனியர், மாமி பூ நூல்லே பை பனியன்லாம் போடறா. அவாலுக்கு டயம் ஏது ? அவா சொறியப்படாதோங்கிறீயே. ‘‘உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும், அசட்டுப் பொணமே ‘‘ஒண்ணும் இல்லே. இத பாரு பேப்பர்லேயே போட்டிருக்கு ‘ என்று பையின் பிடியை அகட்டி உள்ளேயிருந்து நாலு சினிமாப் பாட்டு புத்தகங்களை எடுத்தான் அக்கணா. ஒரு புத்தகத்தைப் பிரித்து அதிலிருந்துஒரு தினசரிதாள் பக்கம் ஒன்றை எடுத்தான். அதிலெ ஒரு வெள்ளைக்காரப் பெண் யாரோ ஒரு ஆணின் கையைப் பிடித்துத் தடவிக் கொண்டு நிற்கிறாள். கருப்புக் கண்ணாடிகாரருக்கு இருந்த மாதிரியே கை, மூக்கு எல்லாம்…. ‘இது யாரு தெரியுமா ? வெல்லைக்கார தேசத்திலே ரானி. போன மாசம் மெட்ராசுக்கு வந்தா — ராஜாவோட. இந்த ஊருக்கு வந்து சினிமா, டிராமால்லாம் பார்க்கலியாம், காரை எடுத்துண்டு ஒரு கிராமத்துக்குப் போனாலாம்.

 

             மாமா மாதிரி அங்கே முப்பது நாப்பதுபேர் இருக்கலாம். மருந்து சாப்பிடறாலாம். அவால்லாரையும் பார்த்து, கையெல்லாம் தடவிக் கொடுத்தா வெல்லைக்கார ரானி, போட்டோ போட்டிருக்கா பாரு தடவிக் கொடுக்கறாப்பல, ஒட்டிக்கும்னா ரானி தடவிக்கொடுப்பாலா, பேத்தியம் மாதிரி பேசறியே ? ‘‘பேத்யம் மாதிரியா ? நானா பைத்தியம் ? ‘ என்று படத்தைப் பார்க்க ஆரம்பித்தார் முத்து.‘படத்தை மட்டும் பாக்கறியே. கீலே எலுதியிருக்கு பாரு. ‘ என்று விரலை அந்த வரிகள் மீது ஒட்டிக் காண்பித்தான் அக்கணா.‘பாலாம்பிகேச வைத்யேச ‘ என்று சுலோகம் சொல்லிக் கொண்டே வினோலியா பெட்டியைத் திறந்து கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார் முத்து.

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.