LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஹார்வர்டை தொடர்ந்து லண்டனில் தமிழ் இருக்கை; மக்களுக்கு என்ன பயன்- முழு விவரம்!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து லண்டன் பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. இதனால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படும் என்கிற விவரம் கிடைத்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே தமிழ் மொழி சார்ந்த எழுச்சி அதிகரித்து உள்ளதாக பரவலாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்த ஒரு விஷயம் என்றால் அது அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்கும் முயற்சியே என்று கருதப்படுகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்க நிதி முழுவதுமாக திரட்டப்பட்டு, அதற்குரிய  விழாவும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. 

இந்த நிலையில், லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை தொடங்குவதற்கான முயற்சிகளை "TamilChairUK" என்ற அமைப்பினரால் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இருந்த போதிலும், தமிழ் இருக்கை என்றால் என்ன? ஒரு துறைக்கும், இருக்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன? தன்னால் தமிழ் இருக்கையில் ஏதாவது செயலாற்ற முடியுமா? இவ்வளவு பணம் திரட்டப்பட்டு என்ன செய்யப்படும்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடையே இருந்த வண்ணம் உள்ளது. 

அதற்கான பதில்களை ஹார்வர்ட் இருக்கை மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இருந்து அறிந்ததைத் தருகிறோம்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான, கனடாவில் வசிக்கும் எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கூறியதாவது:

ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்படுவது தான் தமிழ் இருக்கை.

துறைத்தலைவரையும், அவர்களின் கீழ் பணியாற்றும் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களைக் கொண்டு தமிழில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்பட்டால் அதுவே தமிழ்த் துறையாகும்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான நிதி முழுமையாக பெறப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து, அந்த பல்கலைக்கழகத்துடனான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, இன்னும் 6 முதல் 9 மாதங்களில் ஹார்வர்ட் தமிழ் இருக்கை தனது செயல்பாட்டை தொடங்கும்.  இருக்கைக்கான பேராசிரியரை தேர்ந்தெடுக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

தகுதியும், திறமையும் உள்ள மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். பல்கலைக் கழகத்தின் விதிமுறைக்கு உட்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கனடாவின் மிகப் பெரிய நகரமான டொரொண்டோவில் உள்ள டொரொண்டோ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான நிதி திரட்டும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தமிழ் இருக்கைகள் தமிழ்த் துறைகளாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.

லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் எஸ்ஓஏஎஸ் (SOAS - School of Oriental and African Studies) கல்வி நிறுவனத்தில் 1931 முதல் இயங்கி வந்த தமிழ் படிப்புகள், 1995 களுக்குப் பிறகு மாணவர் சேர்க்கை குறைந்ததாலும், கல்லூரியின் பொருளாதார முதலீடுகள் குறைந்ததாலும் நிறுத்தப்பட்டது. 

உலகளாவிய தமிழர்களின் எழுச்சியாலும், புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழ் ஆர்வத்தாலும், ஐக்கிய ராஜ்ஜியத்தில் தமிழ் படிப்புக்கான தேவைகள் அதிகரித்துள்ளதால், தமிழ் படிப்புகளை மீண்டும் கொண்டு வருவது என்று பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக கூறுகிறார் லண்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் தலைவரான செலின் சார்ச்.

"ஐக்கிய ராஜ்ஜியத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பது தொடர்பாக 10 பேர் கொண்ட ஒரு தன்னார்வக் குழு, எனது தலைமையில், கடந்த வருடம் நவம்பர் முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த தமிழ் இருக்கை அமைப்பு, ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் மற்றும் லண்டன் பல்கலைக் கழகங்களின் தமிழ் வளர்ச்சி சூழலை ஆய்வு செய்தது. 

அப்போது, லண்டன் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சிறப்பாக இயங்கி, தற்போது செயல்படாமல் இருக்கும் தமிழ் இருக்கையைப் புதுப்பிப்பதே சிறந்தது என்று உணர்ந்து, அந்த பல்கலைக்கழகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இரு வாரங்களுக்கு முன்பு தமிழ் இருக்கையை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து கிடைத்துள்ளது" என்கிறார் செலின்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிநாடுவாழ் தமிழர்கள் ஹார்வர்ட் போன்ற உலகமெங்கும் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கை, இலக்கிய, தொழில்நுட்ப கருத்தரங்குகள் போன்ற பல்வேறு மொழி சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கான காரணம் குறித்து செலினிடம் கேட்டபோது, "தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக பார்க்கப்படும் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு தடையேற்பட்டபோது, அதை எதிர்த்து கடந்த ஆண்டு தமிழகம் மட்டும் அல்லாமல் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் முன்னெடுக்கப்பட போராட்டங்கள் மக்களிடையே தமிழ் மொழி, கலாச்சாரம் மீதான உணர்வை அதிகப்படுத்தியது. 

பிரிட்டனில் வசிக்கும் 4 ஆயிரம் தமிழர்கள் லண்டனில் கூடி ஜல்லிக்கட்டை அனுமதிக்கக்கோரி பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தினோம். எனவே, அனைவரின் கூட்டு முயற்சியால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கிடைத்த வெற்றி மக்களிடையே மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும், எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தையும் உண்டாக்கியது. அதுவே, தமிழர்களின் சமீபகால எழுச்சிக்கான காரணமாக நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

பிரிட்டனில் கிட்டத்தட்ட 3 இலட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இரண்டாம் தலைமுறையாக வாழும் அவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறியவர்களாவர்.

2-ம், 3- ம் தலைமுறையை சேர்ந்தவர்களிடையே "எனக்கு தமிழ் தெரியாது. ஆனால், தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறுகிறார் செலின்.

பிரிட்டனில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் நகரங்களில் தமிழ்ப் பள்ளிக்கூடங்களும், பகுதிநேர பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. ஆனால், மேல்நிலைப்பள்ளி கல்வியிலோ, கல்லூரியிலோ தமிழை தொடர்வதற்கான வாய்ப்பில்லை. மேலும், தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தாலும் அது கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களாலும்,  தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளிலும் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

எனவே, தமிழை படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கவும், தமிழுக்கு மகுடமாகவும் இந்த இருக்கையை தொடங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் விவரிக்கிறார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்கு தேவையான நிதியை திரட்டும் பணி இன்னும் சில வாரங்களில் தொடங்கி 2020க்குள் முடித்து 2021ஆம் ஆண்டில் இருக்கையை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

ஒரு தமிழ்த் துறையை போன்றே தமிழில் 3 ஆண்டுகால இளங்கலை பட்டப்படிப்பு, ஓராண்டு முதுகலை பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது.

குறிப்பாக, இந்தியா, பிரிட்டன் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்டவர்களில் 4 பேரை தேர்ந்தெடுத்து, ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது" என்று செலின் கூறினார்.

லண்டன் எஸ்ஓஏஎஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்கு சுமார் 50-60 கோடி இந்தியா ரூபாய் தேவைப்படும் என்று அந்த இருக்கை குழு தெரிவிக்கிறது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைக்கப்படும்போதே அதற்கு ஏன் இவ்வளவு கோடி ரூபாய் தேவைப்படுகிறது? அந்த பணம் என்ன செய்யப்படும்? போன்ற பல கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து, செலினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

"லண்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக அளிக்கப்படும் அனைத்து விதமான நிதியுதவிகளும் நேரடியாக பல்கலைக்கழகத்தின் கணக்கை சென்றடையும். 

போதுமான தொகை கிடைத்த பின்னர் சட்டப்படி அந்த பணம் வங்கியில் செலுத்தப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டியைக் கொண்டே பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இருக்கைக்குத் தேவையான மற்ற நிதித்தேவைகள் பூர்த்தி செய்யப்படும்" 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் போன்று மொத்தம் உள்ள 22 லண்டன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழை ஒரு விருப்பப் பாடமாக எடுத்து படிப்பதற்கான முயற்சியையும், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ள நூற்றுக்கணக்கான பழமையான தமிழ் புத்தகங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை மின்னணு மயமாக்கம் செய்வதற்கும் இந்த நிதியை பயன்படுத்த உள்ளதாக தமிழ் இருக்கை குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

"தமிழகத்தில் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் ஆங்காங்கே 10-20 பேர் பங்கேற்கும் சிறியளவிலான இலக்கிய கூட்டங்கள் தினந்தினமும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை புத்தகக் கண்காட்சிகளும் நடைபெற்று வருகின்றன. 

ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் தமிழுக்காக நடைபெறும் நிகழ்வுகளில் அதிக அளவிலான தமிழர்கள் ஒன்றுகூடுவதை பார்க்க முடிகிறது" என்று கூறுகிறார் லண்டனிலுள்ள பல்கலைக் கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கையான குழு உறுப்பினர்களில் ஒருவரான சிவா சுப்ரமணியம்.

கடந்த 2 ஆண்டுகளாக பணியின் காரணமாக லண்டனில் வசித்து வரும் சிவாவிடம், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் தமிழகத்துக்கும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும்  உள்ள வேறுபாடு குறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மொழி, இலக்கியம் சார்ந்த பணிகள் ஏராளமாக மேற்கொள்ளப்பட்டாலும், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள் அதைவிட பெரிய அளவிலும், நேர்த்தியாகவும் எனக்கு தெரிகிறது. மேலும், தமிழகத்தில் எடுக்கப்படும் ஒரு முன்னெடுப்புக்கு மாநிலம் தழுவிய அளவில் ஒற்றுமை காணப்படுவது இல்லை.

ஆனால், லண்டன் தமிழ் இருக்கையாகட்டும், ஹார்வர்ட் தமிழ் இருக்கையாகட்டும் அந்தந்த நாடுகளில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து செய்யப்படுவது நம்பிக்கை ஊட்டுகிறது." 

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 06 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.