LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 268 - துறவறவியல்

Next Kural >

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தன் உயிர் தான் அறப்பெற்றானை - தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும். (தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.)
மணக்குடவர் உரை:
தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவனை, ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும். உயிரென்றது சலிப்பற்ற அறிவை; தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்கார மறுதல்.
தேவநேயப் பாவாணர் உரை:
தன் உயிர் தான் அறப் பெற்றானை-தன்னுயிரைத் தனக்கு முற்றுரிமையாகப் பெற்றவனை; ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - அங்ஙனம் பெறாத மற்ற மக்களெல்லாம் கைகூப்பி வணங்குவர். முற்றுரிமையாகப் பெறுதலாவது தவத்தால் தன் ஐம்புல வாயை முற்றும் அடக்குதல். அறப் பெறுதல் முற்றும் பெறுதல். "மன்னுயிர்க் கெல்லா மினிது" ( 68) என்னுங் குறளடியிற் போன்றே, இங்கு மன் என்பது மாந்தனைக் குறித்தது. 'உயிர்' என்னும் அஃறிணை வடிவிற்கேற்பத் தொழும் என்னும் பலவின்பாற் படர்க்கை வந்தது. உயிர் வகுப் பொருமை. தொழுதல் தூய்மையும் ஆக்க வழிப்பாற்றலும் பற்றி. இரு வகைப் பற்றுந் துறத்தல் துறவதிகாரத்திற் கூறப்படுதலால், தானற என்பதற்குத் 'தான் என்னும் முனைப்பற' என்று இங்குப் பொருளுரைக்கத் தேவையில்லை.
கலைஞர் உரை:
"தனது உயிர்" என்கிற பற்றும், "தான்" என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தன்னுயிர் பெரிது என்ற ஆசையும், தான் பெரியவன் என்ற அகங்காரமும் முற்றும் அற்றுப் போன தவசி உலகத்திலுள்ள எல்லாராலும் வணங்கத் தக்கவன்.
Translation
Who gains himself in utter self-control, Him worships every other living soul.
Explanation
All other creatures will worship him who has attained the control of his own soul.
Transliteration
Thannuyir Thaanarap Petraanai Enaiya Mannuyi Rellaan Thozhum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >