LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[351 -400]

பாடல் 351 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - ..........
தாந்தத்தன தானன தானன
     தாந்தத்தன தானன தானன
          தாந்தத்தன தானன தானன ...... தனதானா
வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய
     நீந்திப்பது மாதியை மீதினி
          லூர்ந்துற்பல வோடையில் நீடிய ...... உகள்சேலை 
வார்ந்துப்பக ழீயெதி ராகிமை
     கூர்ந்துப்பரி யாவரி சேரவை
          சேர்ந்துக்குழை யோடுச லாடிய ...... விழியாலே 
சாய்ந்துப்பனை யூணவ ரானபொ
     லாய்ந்துப்பணி னாரிரு தாளினில்
          வீழ்ந்திப்படி மீதினி லேசிறி ...... தறிவாலே 
சாந்தப்பிய மாமலை நேர்முலை
     சேர்ந்துப்படி வீணினி லேயுயிர்
          மாய்ந்திப்படி போகினு மோர்மொழி ...... மறவேனே 
சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ
     பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ
          காந்தப்பெரு நாதனு மாகிய ...... மதராலே 
தாந்தக்கிட தாகிட தாகிட
     தோந்திக்கிட தோதிமி தோதிமி
          சேஞ்செக்கண சேகெண சேகெண ...... வெனதாளம் 
காந்தப்பத மாறியு லாவுய
     ராந்தற்குரு நாதனு மாகியெ
          போந்தப்பெரு மான்முரு காவொரு ...... பெரியோனே 
காந்தக்கலு மூசியு மேயென
     ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
          காஞ்சிப்பதி மாநகர் மேவிய ...... பெருமாளே.
நீரில் நிலை நின்று நீண்ட நாள் விளங்கிய தாமரையாகிய முதன்மையான பொருளை, (தனது அழகால்) கடந்து விளங்கும் நீலோற்பல மலர் உள்ள ஓடையில் நெடுந்தூரம் பாய வல்ல சேல் மீனை நேர் ஒத்து, அம்புக்குப் போட்டியாக எதிர்த்து, அஞ்சனம் மிகவும் பூசப்பட்டு, அந்த மையைத் தாங்குவதாகி, ரேகைகள் பொருந்த, கூர்மை கொண்டு, (காதில் உள்ள) குண்டலத்தோடு ஊஞ்சலாடிய கண்களால், (என் ஒழுக்கம்) தளர்ந்து, பழைய பனங் கள்ளை உண்டவர் மயக்கம் கொண்டது போல் மயங்கிச் சிறிது ஓய்ந்து, இசை பாடும் பொதுமகளிருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து கிடந்து, இந்தப் பூமியின் மீது அற்ப அறிவு காரணமாக, சந்தனம் பூசப்பட்ட பெரிய மலை போன்ற மார்பைச் சேர்ந்துப் படிந்து, வீணாகக் காலம் கழித்து, உயிர் அழிந்து இவ்வாறு கெட்டுப் போனாலும், (நீ சொன்ன) ஒப்பற்ற உபதேச மொழியை மறக்க மாட்டேன். பெருகிவந்த நீர் வெள்ளமாகவே பாய்ந்து பரக்கும் அந்த வேளையில் (ஊழிக் காலத்தில்), ஓர் உயிரும் இல்லாமல் ஒளி வீசும் பெரிய கால மூர்த்தியாகிய சிவபெருமான் களிப்பினால், தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண என்று இவ்வாறு தாளங்கள் ஒலிக்க, அழகிய திருவடிகளை மாற்றி மாற்றி நடன உலாவை மிகச் செய்யும் (எல்லாவற்றுக்கும்) முடிவானவனாகிய சம்ஹார மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு குரு நாதனாக வந்துள்ள பெருமானாகிய முருகனே, ஒப்பற்ற பெரியோனே, காந்தக் கல்லும் ஊசியும் போல, ஆசிரியரும் மாணவருமாக ஒருமித்து தமிழை ஓதுகின்ற* மேன்மை பொருந்திய காஞ்சி என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* காஞ்சி குமரக் கோட்டத்து அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார் தாம் பாடிய கந்தப் புராணப் பகுதி ஏட்டை தினம் இரவில் முருகன் திருவடியின் கீழ் வைக்க, மறுநாள் காலையில் அதில் திருத்தங்கள் காணப்படுமாம். இது குருவான முருகனையும் சீடரான கச்சியப்பரையும் பற்றிய குறிப்பு எனக் கருதலாம்.
பாடல் 352 - காஞ்சீபுரம் 
ராகம் - சாரங்கா; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த
     தனதனாத் தந்த தந்த ...... தனதான
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
     அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத 
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து
     அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச் 
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
     தெரிவைமார்க் குச்சொ ரிந்து ...... அவமேயான் 
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
     தெளியமோ க்ஷத்தை யென்று ...... அருள்வாயே 
இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
     இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன் 
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
     இறைவர்கேட் கத்த குஞ்சொ ...... லுடையோனே 
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
     குருவியோட் டித்தி ரிந்த ...... தவமானைக் 
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
     குமரகோட் டத்த மர்ந்த ...... பெருமாளே.
அறிவு இல்லாத பித்தர், உன் திருவடியைத் தொழாத கெட்ட வஞ்சகர், மூடர்கள், பேய்த்தன்மை கொண்ட செய்கையர், நன்றி இல்லாத பயனற்றவர் .. ஆகியோர் மீது வார்த்தைகளால் பாடல்கள் புனைந்து அவர்களைப் புகழ்ந்தும், அவர்களை வாழ்த்தியும், அதன் பொருட்டு அலைந்து திரிந்து பொருள் சம்பாதித்தும், சிறிதளவு சேகரித்த பொருளைக் கொண்டுவந்து, பொது மகளிர் வாழும் தெருக்களில் உலாவித் திரிந்து, அப் பெண்களுக்கே அந்தப் பொருளை நிரம்பவும் வாரிக் கொடுத்து இப்படி காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் எனக்கு வருகின்ற அபவாதத்தை அகற்றி, அன்பு கூர்ந்து, நான் தெளிவு பெறுவதற்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்? சிவ பெருமானது மாற்றறியாத செம்பொன் வடிவம் வேறாகும்படி பிரிந்து ரிஷப வாகனத்தில் ஏறி காஞ்சீபுரத்துக்கு வந்த உமையவள் தன் அஞ்ஞான இருள் நீங்குவதற்காகத் தவம் செய்து விளங்க அந்தத் தவத்தைப் பார்த்து அருளோடு மனம் குழைந்த இறைவர் கேட்டு மகிழத்தக்கதான உபதேசச் சொல்லை உடையவனே, குறவர்களின் கூட்டத்துக்கு இடையில் வந்து, ஒரு கிழவன் வேடத்தைக் காட்டிப் புகுந்து நின்று, தினைப்புனத்தில் குருவிகளை ஓட்டித் திரிந்த தவம் நிறைந்த மானாம் வள்ளியை தன் வசப்படுத்தி, உன் சிறந்த தெய்வ வடிவம் காட்டி, அவளை மணந்தவனே, குமரக்கோட்டம்* என்ற காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பிரமனைச் சிறைப்பிடித்த குற்றம் நீங்க, சிவபிரானின் ஆணையால், முருகன் குமரக் கோட்டத்தில் தவக்கோலம் பூண்டு லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான் - காஞ்சிப் புராணம்.
பாடல் 353 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - .......
தந்தன தானன தத்ததத்தன
     தந்தன தானன தத்ததத்தன
          தந்தன தானன தத்ததத்தன ...... தனதான
அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு
     மிங்கித மாகந கைத்துருக்கவு
          மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் ...... நகரேகை 
அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
     மந்தர மாமுலை சற்றசைக்கவு
          மம்பரம் வீணில விழ்த்துடுக்கவு ...... மிளைஞோர்கள் 
நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்
     வம்புரை கூறிவ ளைத்திணக்கவு
          மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு ...... மெவரேனும் 
நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு
     மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற
          நின்பத சேவைய நுக்ரகிப்பது ...... மொருநாளே 
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
     அங்குச பாசக ரப்ரசித்தனொர்
          கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம ...... கணராஜன் 
கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்
     எங்கள்வி நாயக னக்கர்பெற்றருள்
          குன்றைய ரூபக கற்பகப்பிளை ...... யிளையோனே 
துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
     பந்தச டானன துஷ்டநிக்ரக
          தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய ...... பரிபாலா 
துங்கக ஜாரணி யத்திலுத்தம
     சம்புத டாகம டுத்ததக்ஷிண
          சுந்தர மாறன்ம திட்புறத்துறை ...... பெருமாளே.
மை தீட்டிய வேல் போன்ற கண்ணைக் கொண்டு அழைக்கவும், இன்பகரமாக சிரித்து மனதை உருக்கவும், மேகம் போன்ற கூந்தலைக் கலைத்து அவிழ்க்கவும், நகக் குறி இட்டு அழகிய கைகளால் தங்கள் காம எண்ணங்களை வெளியிடவும், மந்தர மலையைப் போன்ற மார்பகத்தைச் சிறிது அசைக்கவும், சேலையை அனாவசியமாக நெகிழ்த்தி, பின்பு உடுக்கவும், வாலிபர்கள் மனதில் காமத் தீயை எழுப்பவும், வீண் வார்த்தைகளைப் பேசி அவர்களை வளைத்து வசப்படுத்தவும், சபையில் நடனம் ஆடி காம மயக்கத்தைக் கொடுக்கவும், யாராயிருந்த போதிலும் இகழ்ச்சி இன்றி அவர்களிடமிருந்து பொருளை அபகரிக்கவும், இங்கு வல்லவர்களாகிய (பொது மகளிரின்) கையில் அகப்பட்டுக் கொண்ட கட்டு நீங்க, உன்னுடைய திருவடி சேவையை நீ தந்து அருளுவது கூடும் ஒரு நாள் உண்டாகுமோ? யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும் பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம் இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன், பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன், வலிமை வாய்ந்தவன், கணபதி, துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும் தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான் பெற்றருளிய மலை போன்ற உருவத்தை உடையவன், ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே, அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின் பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே, துஷ்டர்களை அழிப்பவனே, (மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட) கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல், இசை, நாடகம் என்ற) முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே*, உயர்வு பெற்ற திருவானைக்காவில் வீற்றிருக்கும் உத்தமனே, சம்பு தீர்த்தத்துக்கு அடுத்துத் தெற்கே உள்ள சுந்தர (உக்கர) பாண்டியன் மதிலின் வெளிப்புறத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* மதுரையில் முருகன் உக்கிர பாண்டியனாய் தோன்றி, தமிழைப் பரிபாலித்தார்.
பாடல் 354 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - ......
தந்தன தானத் தானன தந்தன தானத் தானன
     தந்தன தானத் தானன ...... தனதான
அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
     ஐந்தலை நாகப் பூஷண ...... ரருள்பாலா 
அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
     மங்கையி னானிற் பூசையு ...... மணியாமல் 
வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்
     வண்டுழ லோதித் தாழலி ...... லிருகாதில் 
மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச் சேர்வையில்
     மங்கியெ யேழைப் பாவியெ ...... னழிவேனோ 
கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
     குண்டலி யாலப் போசனி ...... யபிராமி 
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
     குன்றது வார்பொற் காரிகை ...... யருள்பாலா 
செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
     திண்புய மாரப் பூரண ...... மருள்வோனே 
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
     தென்திரு வானைக் காவுறை ...... பெருமாளே.
நிலவையும் கங்கையையும் தரித்துள்ள செஞ்சடை மேல் தாவி நிற்கும் ஐந்து தலை நாகத்தை ஆபரணமாக அணிந்துள்ள சிவ பெருமான் அருளிய குழந்தையே, அன்புடனே நாவார பாடல்களால் எப்பொழுதும் உனது பாதத்தை ஓதி, உள்ளங்கை கொண்டு உன்னைப் பூஜிக்கும் ஒழுக்கத்தை மேற் கொள்ளாமல், கச்சு அணிந்ததும் ஆபரணம் பூண்டதும் ஆகிய மார்பினை உடைய வஞ்சிக் கொடி போன்ற விலைமாதர்களின் மாய அழகிலும், வண்டுகள் திரியும் கூந்தலின் சரிவிலும், இரண்டு காதுகளிலும், நெருங்கிய கரு நிற மை பூசிய கண்களின் பார்வையிலும், வெண்ணிறத்து ஆடையின் சேர்க்கையிலும், அறிவு மயங்கிப் போய் ஏழைப் பாவியேனாகிய அடியேன் அழிந்து போவேனோ? கொம்பை ஒத்த மெல்லிய நீல நிற அழகி, தாமரை மலர் மாலையை அணியாக அணிந்தவள், சுத்த மாயையாம் சக்தி, விஷத்தை உண்டவள், பேரழகி, குலவி மகிழும் ஆகாச கங்கை போலத் தூய்மை நிறைந்தவள், சங்கரி, வேதங்கள் போற்றும் பார்வதி, இமயத்தின் நெடிய தவத்தின் பயனாக வந்த அழகிய மாது ஈன்றளித்த மகனே, சிவந்த பவள நிறமான மெல்லிய வாயிதழ்களை உடையவளும், ஒளி பொருந்தியவளும் ஆகிய குறப் பெண்ணான வள்ளியின் ஆபரணம் அணிந்த மார்பகங்களை உனது திண்ணிய புயங்களால் நன்கு அணைக்க, பூரணமான திருவருளை அவளுக்குப் பாலித்தருளியவனே, செந்தமிழ் ஞானம் உள்ள பாணர்குலப் பாவலர் (திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் திருஞான சம்பந்தர் பாடலுக்கு ஏற்ப) இசையுடன் யாழை வாசித்த* அழகிய திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* முன்பு, திருவானைக்காவில், சைவக் குரவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் தேவார இசை பாட, திருநீலகண்டர் அதற்கேற்ப யாழை மீட்டினார் - பெரிய புராணம்.
பாடல் 355 - திருவானைக்கா 
ராகம் - பூபாளம் ; தாளம் - சதுஸ்ர ஏகம் - திஸ்ரநடை - 6 
எடுப்பு - அதீதம்
தனத்த தான தானான தனத்த தான தானான
     தனத்த தான தானான ...... தனதான
அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
     யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித் 
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
     அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை 
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
     சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு 
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
     சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய் 
தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
     சுதற்கு நேச மாறாத ...... மருகோனே 
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
     தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா 
மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
     மகப்ர வாக பானீய ...... மலைமோதும் 
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
     மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே.
அழியக் கூடிய இந்த உடல் என்றும் நிலைத்து இருக்கச் செய்ய, மூக்கை அடைத்து மூச்சு ஓடாத வகையை அப்யசித்து, வீணாக நிரம்ப மூலிகைகளை உண்டு, வாடுகின்ற, அலுப்பும் மூடத்தனமும் உள்ள யோகியாக ஆகாமல், மும்மலங்களினாலும் மாயையினாலும் தோன்றுகின்ற காரியங்களையும் வேதனைகளையும் ஒழித்து, அறிவும், ஆசாரமும், முயற்சியும் உடையவனாக ஆகி, யான் வேறு, எனது உடல் வேறு, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள யாவுமே வேறு என்ற பற்றற்ற நிலையினால் அடையக் கூடியதும், நிகழ்ச்சிகளைக் காட்டும் இந்த மனதுக்கு எட்டாததாய் விளங்குவதும் ஆன சிவ ஸ்வரூப மஹா யோகி என யான் ஆகுமாறு என்னை ஆண்டருள்வாயாக. ஒலி தரும் இசையுடன் கூடிய புல்லாங்குழலை ஊதுபவனும், ஆயிரம் நாமங்கள் கொண்டவனும், நந்தகோபனின் மகனுமான திருமாலின் அன்பு மாறுபடாத மருமகனே, தேவர் உலகம் என்ற கப்பலைக் காப்பாற்றிய மாலுமியே, சகல லோகங்களையும் பாலித்து அருளும் அரசனே, அப்பொழுதுதான் தொடுக்கப் பெற்ற கடப்ப மலர்மாலையனே, வேல் வீரனே, வயலூரானே, மனிதர்கள் முதல் சகல ஜீவராசிகளும் உள்ள சோழநாடு தழைத்திட வரும் காவேரியின் பெரும் வெள்ள நீர் அலைகள் மோதும், நறுமணம் கமழும் சோலைகள் சூழும் திருவானைக்காவை மேவியவனே, சகல லோகங்களை ஆள்பவர்களும் மதித்திடும் தெய்வமே, எல்லாத் தேவர்களுக்கும் பெருமாளே. 
பாடல் 356 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - ....
தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தனதான
ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
     டாடவர்கள் வாடத் ...... துறவோரை 
ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்
     பாளித படீரத் ...... தனமானார் 
காரளக நீழற் காதளவு மோடிக்
     காதுமபி ராமக் ...... கயல்போலக் 
காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
     காலைமற வாமற் ...... புகல்வேனோ 
பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
     சாமளக லாபப் ...... பரியேறிப் 
பாய்மதக போலத் தானொடிக லாமுற்
     பாடிவரு மேழைச் ...... சிறியோனே 
சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
     காரஇள வேனற் ...... புனமேவுந் 
தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
     சோதிவளர் காவைப் ...... பெருமாளே.
மணி வடம் அணிந்துள்ள மார்க்கச்சைக் கிழித்துக் கொண்டு, மிகவும் வெளித் தோன்றி ஆண்களை வாட்டியும், துறவிகளையும் காமத்தில் ஆழ்த்தி, மடல் ஏறும்படிச்* செய்து ஆள வல்லதாய், அதிக கனம் கொண்டதாய், பச்சைக் கற்பூரமும் சந்தனமும் அணிந்ததான மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கருமேகம் போன்ற கூந்தலின் நிழலிலே, செவி வரைக்கும் ஓடி, கொல்லும் தொழிலை மேற்கொண்ட அழகிய கயல் மீன் போன்ற கண்கள் போலக் (கொலைத் தொழிலைக் கொண்ட) யமன் உடலை விட்டு என் உயிரைப் பிரிப்பதற்காகத் தேடி வருகின்ற தினத்தில், உன் திருவடிகளை மறக்காமல் சொல்லும் பாக்கியத்தைப் பெறுவேனோ? உலகம் முழுவதும் வாழ்விக்கும் சர்ப்பராஜன் ஆதிசேஷனையும் தன் கால்களில் கட்டவல்ல பசுந் தோகை வாகனமான மயிலாகிய குதிரை மேல் ஏறி, முன்பொரு காலத்தில் மதம் கொண்ட மத்தகத்தை உடைய விநாயகரோடு மாறுபட்டு, வளைந்தோடி வருகின்ற பாடி ஓட்டம் ஆகிய விளையாட்டை ஆடிய ஏழை இளையவனே, சூரர்களுடைய ஊர்களைச் சூறையாடி அழித்தவனே, தேவர்களுக்குக் காவற்காரனாய் விளங்குபவனே, பசுமையான தினைப் புனத்தில் இருந்த மயில் போன்ற அழகிய வள்ளியுடன் பொழுது போக்கிக் காவல் இருப்பவனே, தமிழ் மறையாகிய தேவாரத்தை (திருஞானசம்பந்தராகத் தோன்றி) அருளிய ஜோதி மூர்த்தியே, வளரும் திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம் உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
பாடல் 357 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - .........
தான தத்தன தத்தன தத்தன
     தான தத்தன தத்தன தத்தன
          தான தத்தன தத்தன தத்தன ...... தனதான
ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச
     னாக மக்கலை கற்றச மர்த்திக
          ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் ...... தெருவூடே 
ஆர வட்டமு லைக்குவி லைப்பண
     மாயி ரக்கல மொட்டிய ளப்பினு
          மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ ...... ருடன்மாலாய் 
மேலி ளைப்புமு சிப்பும வத்தையு
     மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு
          மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி ...... யதனாலே 
மேதி னிக்குள பத்தனெ னப்பல
     பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை
          வீடு கட்டியி ருக்குமெ னக்குநி ...... னருள்தாராய் 
பீலி மிக்கம யிற்றுர கத்தினி
     லேறி முட்டவ ளைத்துவ குத்துடல்
          பீற லுற்றவு யுத்தக ளத்திடை ...... மடியாத 
பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை
     பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்
          பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு ...... குடனாட 
ஏலம் வைத்தபு யத்தில ணைத்தருள்
     வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர்
          ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை ...... யருள்வோனே 
ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ
     ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம
          ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் ...... பெருமாளே.
ஆலகால விஷத்தைக் கொண்ட கண்களை உடையவர், மன்மதனுடைய காமசாஸ்திர நூல்களைப் படித்துள்ள சாமர்த்தியர்கள், எப்படிப்பட்டவருடைய மனத்தையும் வஞ்சனை செய்து தம் சப்படுத்துபவர்கள், தெருமுனையில் நின்று, முத்து மாலை அணிந்த, வட்ட வடிவுள்ள மார்பகங்களுக்கு விலையாகப் பணம் ஆயிரக்கலம் கணக்காகத் துணிந்து அளந்து கொடுத்தாலும், தங்களுடைய ஆசையை அந்த பொருளின் அளவுக்குத் தகுந்தவாறு கொடுத்து நடித்து ஒழுகுவார்கள், இத்தகைய விலைமாதருடன் நான் ஆசை பூண்டவனாய், அதன் பின்னர் வாட்டமும், மெலிவும், வேதனையும் அடைந்து, உடலெங்கும் நடுக்கத்துடன் பித்தமும் அதிகமாக ஏற்பட்டு, தலையில் எழுதியுள்ள விதியின்படி, அதன் காரணமாக பூமியில் பொய்யன் என்று பெயர் பெற்று, பல துன்பங்களுக்கு ஆளாகி, புழுக்கள் வாழும் மலப் பிண்டமாகிய, இந்த உடலை (பிறவியை) பேணி வளர்க்கும் எனக்கு உனது திருவருளைத் தந்து அருள வேண்டும். தோகை நிரம்ப உள்ள மயிலாகிய குதிரையின் மீது ஏறி, (எதிரிகளை) ஒரு சேர ஒன்றாக வளைத்து கூறுபடுத்தி உடல்கள் கிழிபட்ட அந்த போர்க் களத்தில் இறவாது எஞ்சி நின்ற பெரிய அரக்கர்கள் எதிர்த்து வந்த அத்தனை பேரையும் கொடுமையான போரில் மடிவித்துக் கொன்று, பெரிய பேய்கள் கை கொட்டி நடனமிடவும், கருமையான கழுகுகள் உடன் சேர்ந்து ஆடவும், ஏலத்தின் நறுமணம் வீசும் தோளில் அணைத்து வைத்துள்ள சிறப்பு வாய்ந்த வேலாயுதத்தை எடுத்துச் செலுத்திய ஆற்றலைப் புகழ்வோர்கள் யாவருக்கும் அவரவர் மனதில் நினைக்கும் விருப்பங்களைக் கொடுத்து அருள்பவனே, ஏழிசைத் தமிழில் தேவாரப் பாக்களின் பயனைக் கொண்ட, வெண் நாவல் மரத்தின் கீழ் (திருவானைக்காவில்) விளங்குகின்ற உத்தமராகிய ஈசர், மூன்று கண்களை உடையவர், ஊழிக் கூத்து நடனம் ஆடுபவராகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே. 
பாடல் 358 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - ........
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
     தனத்தா தனத்தான ...... தந்ததான
உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
     ருனக்கோ மடற்கோவை ...... யொன்றுபாட 
உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே
     டுனைப்பா ரிலொப்பார்கள் ...... கண்டிலேன்யான் 
குரைக்கா னவித்யா கவிப்பூ பருக்கே
     குடிக்காண் முடிப்போடு ...... கொண்டுவாபொன் 
குலப்பூ ணிரத்நா திபொற்றூ செடுப்பா
     யெனக்கூ றிடர்ப்பாடின் ...... மங்குவேனோ 
அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய்
     அனற்கே புனற்கேவ ...... ரைந்தஏடிட் 
டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
     லறப்பாய் வயற்கீழ ...... மர்ந்தவேளே 
திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
     சிவத்யா னமுற்றோர்சி ...... லந்திநூல்செய் 
திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்
     திருச்சால கச்சோதி ...... தம்பிரானே.
சொல்லப்டுகின்ற காரிகை என்னும் யாப்பிலக்கண நூலில் (நிபுணர் என்னும்) முதலான பேர் எனக்குத் தான். உன் பேரில் (96 சிற்றிலக்கிய பிரபந்த வகைகளில்) ஒன்றான மடல் கோவையில் கவி ஒன்று பாடுவதற்கு, காலம் தாமதிக்காமல், யானையின் தந்தப் பிடி அமைந்த எழுத்தாணியைத் தேடி எடுத்து, உலகத்தில் உன்னை நிகரானவர்கள் யாரையும் நான் கண்டதில்லை, பெருமைக்கு உரிய வித்தை வல்ல கவி அரசர்களுக்கு நீ ஒரு புகலிடமாக விளங்குகிறாய், பண முடிச்சோடு பொற் காசுகளைக் கொண்டு வா, சிறந்த ஆபரணங்களையும் ரத்தினம் முதலியவற்றையும் அழகிய ஆடைகளையும் எடுத்துக் கொண்டு வா, என்றெல்லாம் சொல்லிப் புகழும் துன்பத்தில் நான் அகப்பட்டு, மதிப்பு குன்றி வாழ்வேனோ? இடுப்பில் ஆடையைச் சுற்றாது (கோரைப்புல்லைச் சுற்றும்) சமணர்கள் வாழ்ந்த, தமிழ் வளர்ந்த மதுரைத் தலத்துக்கு (திருஞான சம்பந்தராகச்) சென்று, அங்கே (அவர்களை வாதில் வெல்ல) நெருப்பிலும், நீரிலும் (தேவாரங்கள்) எழுதப்பட்ட ஏட்டினை இட்டு, அறச் செல்வன் என்னும் புகழைக் கொண்டாய். நீரில் சேல் மீன்கள் நிரம்பப் பாய்கின்ற வயல்களின் கீழ்ப்புறத்தில் வீற்றிருக்கும் செவ்வேளே, அலைகள் வீசும் காவிரியின் கரையில் இருந்த காட்டில் சிவத் தியானம் நிறைந்திருந்த சிலந்திப் பூச்சியின் நூலால் அமைக்கப் பெற்ற (திருவானைக்காவின்) அழகிய பந்தலின் கீழ் இருந்து வரும், அருள் மிக்க அழகிய சிலந்தி வலைக் கீழ் விளங்குபவரான ஜோதி சொரூபமான சிவபிரானின் தலைவனே. 
பாடல் 359 - திருவானைக்கா 
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2
தான தனன தனதந்த தந்தன
     தான தனன தனதந்த தந்தன
          தான தனன தனதந்த தந்தன ...... தனதான
ஓல மறைக ளறைகின்ற வொன்றது
     மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
          ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும் 
ஓத வரிய துரியங் கடந்தது
     போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
          ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம் 
சால வுடைய தவர்கண்டு கொண்டது
     மூல நிறைவு குறைவின்றி நின்றது
          சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ் 
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
     வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
          தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ 
வால குமர குககந்த குன்றெறி
     வேல மயில எனவந்து கும்பிடு
          வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே 
வாச களப வரதுங்க மங்கல
     வீர கடக புயசிங்க சுந்தர
          வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா 
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
     நீலி கவுரி பரைமங்கை குண்டலி
          நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி 
நாத வடிவி யகிலம் பரந்தவ
     ளாலி னுதர முளபைங் கரும்புவெ
          ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
ஓம் என்று ஒலிக்கும் வேதங்களால் பேசப்பெறும் ஒப்பற்ற ஒன்று அது. பிரம்மாந்தரத்திற்கும் அப்பாலுள்ள மேலைப் பெருவெளியில் ஒளிர்கின்ற அருட்பெருஞ் ஜோதி அது. நூல்களில் சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம்* என்ற மூன்று வழிகளை அநுசரித்தவர்களாலும் சொல்லுதற்கு அரியதாகிய துரிய நிலையைக் கடந்தது அது. உணர்வு மயமாகிய அருவம், உருவம் என்ற இரண்டு நிலையிலும், உலகம், உயிர், உடம்பு இவற்றோடு முழுவதாகக் கலந்தது அது. சிவஞானம் மிகுத்த தவசீலர்கள் கண்டுகொண்டது அது. மூலப்பொருளாக நிறைந்துள்ளதாய், குறைவேயின்றி நிற்பது அது. சாதி, குலம் முதலியன இல்லாதது அது. மேலும், அன்புள்ள அடியார்கள் கூறும் ஞான ஆகாயத்தைச் சார்ந்துள்ள அநுபவம் கொண்ட பெரியோர்கள் மனம் ஒடுங்கிப் பொருந்தியுள்ள உண்மையான மோக்ஷ வீட்டு இன்பமும் பரம ஆனந்தக்கடலும் போன்றது அது. (இத்தனை பெருமை வாய்ந்தது நின் கழல்). ஐந்து இந்திரியங்களினால் ஏற்படுகின்ற தாக ஆசைகள், மெலிவுகள் ஒழிய அருகில் வந்து அத்தகைய கழலினை நான் பெறும் பாக்கியம் உடையவனோ? பால குமாரா, குகனே, கந்தனே, கிரெளஞ்சமலையைப் பிளந்த வேலாயுதனே, மயில் வாகனனே, என்று சொல்லித் துதித்துக் கொண்டு வந்த வானத்து அமரர்களின் தலைவன் இந்திரனின் கொடும் துயரத்தைப் போக்கியவனே, வாசம் மிகுந்த சந்தனத்தையும், சிறந்த தூய்மையான மங்கலத்தையும், வீரத்திற்கு அறிகுறியான கடகத்தையும் அணிந்த புயங்களை உடையவனே, சிங்க ஏறு போன்ற அழகியவனே, வெற்றி மாலை சூடும், போர்க்களத்தில் சிறந்த வீர சிகாமணியே, வயலூரில் வாழ்பவனே, உலகங்களுக்குத் தலைவியும், இமவான் பெற்ற மின்னொளி போன்றவளும், நீல நிறமுடையவளும், பொன்னிறமுடன் கெளரி எனப்படுபவளும், பராசக்தியும், மங்கைப் பருவத்தாளும், குண்டலினி சக்தியாக விளங்குபவளும், என்றும் இனிய கனி போன்றவளும், எங்களுக்கு அருள் புரியும் அன்னையும், மூன்று உலகங்களையும் பெற்றெடுத்தவளும், நாத வடிவாக விளங்குபவளும், உலகெங்கும் பரவி நின்றவளும், ஆலிலை போன்று வயிறை உடையவளும், பசிய கரும்பு அனையவளும், வெள்ளை நாவல் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் அரசன் ஜம்புநாதனின் மனைவியும் ஆன வஞ்சிக்கொடி போன்ற உமாதேவி பெற்றருளிய பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
** அகிலம் பரந்தவள் - அகிலாண்ட நாயகி, திருவானைக்கா தேவியின் பெயர்.
பாடல் 360 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - ........
தனதனதன தானத் தானன
     தனதனதன தானத் தானன
          தனதனதன தானத் தானன ...... தனதான
கருமுகில்திர ளாகக் கூடிய
     இருளெனமரு ளேறித் தேறிய
          கடிகமழள காயக் காரிகள் ...... புவிமீதே 
கனவியவிலை யோலைக் காதிகள்
     முழுமதிவத னேரப் பாவைகள்
          களவியமுழு மோசக் காரிகள் ...... மயலாலே 
பரநெறியுண ராவக் காமுகர்
     உயிர்பலிகொளு மோகக் காரிகள்
          பகழியைவிழி யாகத் தேடிகள் ...... முகமாயப் 
பகடிகள்பொரு ளாசைப் பாடிக
     ளுருவியதன பாரக் கோடுகள்
          படவுளமழி வேனுக் கோரருள் ...... புரிவாயே 
மரகதவித நேர்முத் தார்நகை
     குறமகளதி பாரப் பூண்முலை
          மருவியமண வாளக் கோலமு ...... முடையோனே 
வளைதருபெரு ஞாலத் தாழ்கடல்
     முறையிடநடு வாகப் போயிரு
          வரைதொளைபட வேல்விட் டேவிய ...... அதிதீரா 
அரவணைதனி லேறிச் சீருடன்
     விழிதுயில்திரு மால்சக் ராயுதன்
          அடியிணைமுடி தேடிக் காணவும் ...... அரிதாய 
அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும்
     உடையதொர்மயில் வாசிச் சேவக
          அழகியதிரு வானைக் காவுறை ...... பெருமாளே.
கரிய மேகங்கள் திரண்டு கூடிய இருள் என்று சொல்லும்படியான வியப்பு நிறைந்து விளக்கமுற்றதும், நறு மணம் வீசுவதுமான கூந்தலை உடைய அழகை உடையவர்கள், இந்த உலகிலேயே மிகுந்த விலை கொண்ட காதணியை அணிந்தவர்கள், பூரண சந்திரனை ஒத்த முகத்தை உடைய அந்தப் பதுமையைப் போன்றவர்கள், கள்ளத்தனத்துடன் கூடிய முழு மோசம் செய்பவர்கள் (ஆகிய இத்தகைய வேசியர்கள்) மீதுள்ள ஆசையால் மேலான மார்க்கத்தை அறியாத அந்தக் காமாந்தகர் உயிரையே பலி கொள்ளுகின்ற ஆசைக்காரிகள், அம்பையே கண்ணாகத் தேடி வைத்துள்ளவர்கள், முகம் காட்டிப் பாசாங்கு செய்கின்ற வெளி வேஷதாரிகள், பொருள் மேலேயே ஆசை கொண்டுள்ளவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) வடிவழகு கொண்டுள்ள மார்பகங்களான சிகர முனைகள் என் நெஞ்சில் தைக்க உள்ளம் அழிகின்ற எனக்கு ஒப்பற்ற அருளைப் புரிந்திடுக. மரகதப் பச்சை நிறம் கொண்டவளும், முத்துக்கள் போன்ற பற்களை உடையவளுமான குறப் பெண்ணான வள்ளியின் அதிக பாரமுள்ள ஆபரணம் அணிந்த மார்பினைப் பொருந்திய மணவாளக் கோலம் உடையவனே, பெரிய பூமியை வளைந்துள்ள ஆழமான கடல் முறையிட, அக்கடலின் நடுவில் சென்று பெரிய மலையாகிய கிரவுஞ்சத்தை பிளவுபடும்படி வேலைச் செலுத்திய மிக்க வல்லவனே, (ஆதிசேஷனாம்) பாம்பணையின் மேல் ஏறி, சீராகக் கண் துயிலும் திருமால், சக்ராயுதத்தை ஏந்தியவன், (சிவனுடைய) இரண்டு திருவடியின் என்லையைத் தேடிப் பார்ப்பதற்கும் கிடையாதிருந்தவரும், அலைகளைக் கொண்ட கங்கையைச் சடையில் தரித்தவருமாகிய சிவ பெருமான் மெச்சுகின்ற ஆண்மையை உடைய ஒப்பற்ற மயில் என்னும் குதிரையை வாகனமாகக் கொண்டவனே, அழகிய திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 361 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - .....
தானத் தான தான தனதன
     தானத் தான தான தனதன
          தானத் தான தான தனதன ...... தனதான
காவிப் பூவை யேவை யிகல்கவன
     நீலத் தால கால நிகர்வன
          காதிப் போக மோக மருள்வன ...... இருதோடார் 
காதிற் காதி மோதி யுழல்கண
     மாயத் தார்கள் தேக பரிசன
          காமக் ரோத லோப மதமிவை ...... சிதையாத 
பாவிக் காயு வாயு வலம்வர
     லாலிப் பார்கள் போத கருமவு
          பாயத் தான ஞான நெறிதனை ...... யினிமேலன் 
பாலெக் காக யோக ஜெபதப
     நேசித் தார வார பரிபுர
          பாதத் தாளு மாறு திருவுள ...... நினையாதோ 
கூவிக் கோழி வாழி யெனமயி
     லாலித் தால கால மெனவுயர்
     கூளிச் சேனை வான மிசைதனில் ...... விளையாடக் 
கோரத் தீர சூர னுடைவினை
          பாறச் சீற லேன பதிதனை
          கோலக் கால மாக அமர்செய்த ...... வடிவேலா 
ஆவிச் சேல்கள் பூக மடலிள
     பாளைத் தாறு கூறு படவுய
          ராலைச் சோலை மேலை வயலியி ...... லுறைவோனே 
ஆசைத் தோகை மார்க ளிசையுட
     னாடிப் பாடி நாடி வருதிரு
          ஆனைக் காவில் மேவி யருளிய ...... பெருமாளே.
கருங்குவளைப் பூவுடனும், அம்புடனும் ஒத்திருந்தும் மாறுபடுவன. கருநீல ஆலகால விஷத்தை ஒப்பன. கொல்லும் தன்மையதாய் இன்பத்தையும் காம மயக்கத்தையும் கொடுப்பன. இரண்டு தோடுகளை அணிந்துள்ள காதுகளை வெட்டுவன போலப் போய் மோதித் திரியும் கண்களைக் கொண்டு, மாயக்காரிகள் (ஆகிய வேசையர்களின்) தேகத்தைத் தொடுதற்குள்ள ஆசை, கோபம், ஈயாமை, செருக்கு இவை அழியாத பாவியாகிய எனக்கு, ஆயுளும், பிராணவாயுவும் வலிமை வரும்படி அன்பு வைத்தவர்களுடைய அறிவோடு கூடிய தொழில்களின் உபாயத்தைக் காட்டும் ஞான வழியை, இனி மேல் என் மீது அன்பு வைத்து, (அந்த வழியே) குறியாக வைத்துக் கொண்டு, ஜெப தபம் இவைகளில் அன்பு வரும்படிச் செய்து, பேரொலி செய்யும் சிலம்பு அணிந்த உன் திருவடியில் என்னை ஆண்டு கொண்டு ஆளுமாறு நினைந்து அருளக் கூடாதோ? கோழியானது கூவி வாழிய என்று வாழ்த்தி, மயில் ஆரவாரம் செய்து விஷம் போல உயர்ந்து விளங்க, சிவ கணங்களாகிய பூதகணச் சேனைகள் வானில் விளையாட, அச்சம் தருபவனும் தீரனுமான சூரனுடைய முயற்சி சிந்தி அழிய, சீறிப் பெருங் கோபத்துடன் வந்த ஆதிவராகத்தை* கூச்சலிட்டு அடங்க போர் செய்த கூரிய வேலனே, குளத்தில் உள்ள சேல் மீன்கள் கமுக மரத்தின் ஏடுகளாகிய இளம் பாளைகளின் குலைகள் பிளவுபடும்படி, உயர்ந்து பாயும் கரும்புகள் நிறைந்த சோலையைக் கொண்ட, மேலை வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, ஆசை நிரம்பிய பெண்கள் இசைபாடிக் கொண்டு விரும்பி வந்து வணங்குகின்ற திருவானைக்கா என்னும் ஊரில் விருப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஏனபதி = ஆதிவராகம். இரணியாக்ஷன் என்பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலின் கீழ் ஒளித்தான். பூமி தேவி முறையிட, திருமால் வராக ரூபம் எடுத்து, இரணியாக்ஷனைக் கொன்று பூமியை நிலை நிறுத்தினார். அரக்கன் ரத்தத்தைக் குடித்த வராகம் மதம் கொள்ள, சிவபெருமான் முருகனை அனுப்பினார். போரில் வராகத்தை முருகன் அடக்கி அதன் கொம்பைப் பிடுங்கிச் சிவனிடம் சேர்ப்பித்தார்.
பாடல் 362 - திருவானைக்கா 
ராகம் - ரஞ்சனி; தாளம் - அங்கதாளம் - 8 - புத்தகத்தில் -6 ?? 
தகதிமி-2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தானந்த தான தந்தன
     தனதன தானந்த தான தந்தன
          தனதன தானந்த தான தந்தன ...... தனதான
குருதிபு லாலென்பு தோன ரம்புகள்
     கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
          குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன ...... பொதிகாயக் 
குடிலிடை யோரைந்து வேட ரைம்புல
     அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்
          கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய ...... அதனாலே 
சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
     சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை
          துதியொடு நாடுந்தி யான மொன்றையு ...... முயலாதே 
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
     திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
          துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே 
ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
     நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
          உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா 
உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்
     அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்
          உளமதில் நாளுங்க லாவி யின்புற ...... வுறைவோனே 
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
     அரிகரி கோவிந்த கேச வென்றிரு
          கழல்தொழு சீரங்க ராச னண்புறு ...... மருகோனே 
கமலனு மாகண்ட லாதி யண்டரு
     மெமது பிரானென்று தாள்வ ணங்கிய
          கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் ...... பெருமாளே.
இரத்தம், ஊன், எலும்புகள், தோல், நரம்புகள், கிருமிகள், காற்று, நீர், மாமிசம், நெருங்கிய குடல்கள், கொழுப்பு, மயிர்கள், மூளை முதலியன நிறைந்த உடல் என்னும் குடிசையுள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாகிய வேடர்கள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலக் காட்டிலே ஓடுகின்ற, கெட்ட ஆசை கொண்ட வஞ்சகர்கள், மகா பொல்லாதவர்கள், பஞ்சமா* பாதகச் செயல்களை செய்ய, அதன் காரணமாக, வேதங்கள், புராணங்கள், ஆகம நூல்களில் சொல்லப் படுகின்ற சரியை, கிரியை, தேவ பூஜை, வழிபாடு தோத்திரம், நாடிச் செய்யும் தியானம் முதலியவற்றில்** ஒன்றையேனும் முயற்சித்து அநுஷ்டிக்காமல் அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள ஆணவக்காரர்களுடன் கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டுகொள்வதற்கும் நீ அருள்வாயாக. ஓர் ஒப்பற்ற வேலைக் கொண்டு, நெடிய கிரெளஞ்சமலையையும், அசுரர்களையும், மாமரமாய் நின்ற சூரனையும், ஆரவாரிக்கும் கடலையும் உடைபட்டுப் போகுமாறு போர் புரிந்த குமாரனே, தாமரையொத்த கரங்களை உடைய வீரனே, சிறந்த தவ முநிவர்கள், மேலுலகவாசிகளான தேவர்கள், உனது திருவடிகளைத் தொழுது நன்கு துதிக்கும் அடியார்கள், இவர்களது உள்ளத்தில் தினமும் விளையாடி இன்பமுற வீற்றிருப்போனே, ஆய்ந்து அறிந்த வேதத்தின் ஆறு அங்கங்களிலும்*** வல்ல, வேள்வி செய்யும் வேதியர்கள் ஹரி ஹரி, கோவிந்தா, கேசவா என்று துதிசெய்து, இரு திருவடிகளையும் வணங்கப்பெற்ற ஸ்ரீரங்கநாதரின் அன்புமிக்க மருமகனே, பிரம தேவனும், இந்திரன் முதலான மற்ற தேவர்களும் எங்கள் தலைவன் எனக் கூறி அடிபணிந்திடப் பெற்ற திருவானைக்காவில் வாழ்கின்ற ஜம்புநாதர் தந்தருளிய பெருமாளே. 
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
** 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். *** வேதத்தின் ஆறு அங்கங்கள் பின்வருமாறு: நிருத்தம், ஜோதிடம், சி¨க்ஷ, வியாகரணம், கற்பம், சந்தஸ்.
பாடல் 363 - திருவானைக்கா 
ராகம் - சுத்த ஸாவேரி; தாளம் - அங்கதாளம் - 6 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தானத் தானத் ...... தனதான
     தானத் தானத் ...... தனதான
நாடித் தேடித் ...... தொழுவார்பால்
     நானத் தாகத் ...... திரிவேனோ 
மாடக் கூடற் ...... பதிஞான
     வாழ்வைச் சேரத் ...... தருவாயே 
பாடற் காதற் ...... புரிவோனே
     பாலைத் தேனொத் ...... தருள்வோனே 
ஆடற் றோகைக் ...... கினியோனே
     ஆனைக் காவிற் ...... பெருமாளே.
உன்னை விரும்பித் தேடித் தொழும் அடியார்களிடம் நான்விருப்பம் உள்ளவனாகத் திரியமாட்டேனோ? நான்மாடற்கூடல் என்ற மதுரையம்பதியில் உள்ள (துவாதசாந்த நிலையில்* கூடும்) ஞானவாழ்வை அடையும்படி அருள் புரிவாயாக. தமிழிசையில் பாடினால் ஆசையோடு கேட்பவனே, பாலையும் தேனையும் போல் இனிமையாக அருள்பவனே, நடனமாடும் மயிலுக்கு இன்பம் அளிப்பவனே, திருவானைக்கா தலத்தின் பெருமாளே. 
* மதுரை ஜீவன்முக்தி தலம் மட்டுமின்றி துவாதசாந்தத் தலமுமாய் உள்ளது.துவாதசாந்தம் என்பது சிரசின் உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கும் யோக ஸ்தானம்.இந்த ஞானம் மதுரையில் கிடைத்தற்கு உரியது.
பாடல் 364 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - .....
தனந்த தத்தன தானான தானன
     தனந்த தத்தன தானான தானன
          தனந்த தத்தன தானான தானன ...... தந்ததான
நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
     மறந்த ரித்தக ணாலால நேரென
          நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென ...... நெஞ்சின்மேலே 
நெருங்கு பொற்றன மாமேரு நேரென
     மருங்கு நிட்கள ஆகாச நேரென
          நிதம்ப முக்கணர் பூணார நேரென ...... நைந்துசீவன் 
குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
     வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
          குமண்டை யிட்டுடை சோராவி டாயில ...... மைந்துநாபி 
குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்
     மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
          குரங்கை யொத்துழல் வேனோம னோலய ...... மென்றுசேர்வேன் 
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
     லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
          மனங்க ளித்திட லாமோது ரோகித ...... முன்புவாலி 
வதஞ்செய் விக்ரம சீராம னானில
     மறிந்த திச்சர மோகோகெ டாதினி
          வரும்ப டிக்குரை யாய்பார்ப லாகவ ...... மென்றுபேசி 
அறந்த ழைத்தநு மானோடு மாகடல்
     வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
          னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் ...... மைந்தனான 
அநங்கன் மைத்துன வேளேக லாபியின்
     விளங்கு செய்ப்பதி வேலாயு தாவிய
          னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.
நிறைந்த பவளம் போன்ற வாயிதழ் தேனை ஒக்கும் என்றும், வீரம் கொண்ட கண் ஆலகால விஷத்தை ஒக்கும் என்றும், நீண்டதும் சுருள் உடையதுமான கூந்தல் நீருண்ட மேகத்தை ஒக்கும் என்றும், மார்பின் மேல் நெருங்கியுள்ள அழகிய தனங்கள் பெரிய மேரு மலைக்கு ஒப்பானது என்றும், இடுப்பு உருவம் இல்லாத வெளிக்கு ஒப்பானது என்றும், அவர்களது பெண்குறி மூன்று கண்களை உடைய சிவபெருமான் அணிந்துள்ள மாலையாகிய பாம்புக்கு ஒப்பானது என்றும் கூறி உள்ளம் சோர்வடைந்து, சீவன் மங்கலுற்று, இன்பம் அழிய வாயால் பாடி, அன்பு இல்லாமல் அழைத்து படுக்கையின் மேல் விழும் ஆசையுடன் களித்துக் கூத்தாடி, ஆடை நெகிழவும், காம தாகத்தில் பொருந்தி, அந்த மாதர்களின் தொப்புளில் மூழ்கித் தொளைத்து அனுபவித்து, களைப்பைத் தருகின்ற பெரிய மாயை வாழ்க்கையைத் தருகின்ற விலைமாதர்கள் பால் ஒரு பைத்தியக்காரக் குரங்கைப் போன்று திரிவேனோ? மன ஒடுக்கம் என்று அடைவேன்? (தான் சொன்ன சொல்லை) மறந்த சுக்¡£வன் என்னும் பெரிய இழிந்த குரங்கரசன் வாசலில் நின்று, "உலுத்தனே நீ தெளிவு அடையாததற்கும் உணர்ச்சி பெறாததற்கும் என்ன காரணம்? மனம் களிப்புறுதல் நியாயமா? உன் செய்கை துரோகமாகும். முன்பு வாலியை வதம் செய்த வீரம் உள்ள ஸ்ரீராமன் நான் என்பதை உலகம் எல்லாம் அறியும். இந்த அம்பை கெட்டுப் போக விடவேண்டாம். இனியேனும் தாமதிக்காது வரும்படிப் போய்ச் சொல்லிப் பல பேர்களின் விளைவைப் பார்ப்பாயாக" என்று (இலக்குமணர் மூலமாகச் சுக்¡£வனுக்குச்) சொல்லி அனுப்ப, தரும நெறி விளங்கும் அனுமானுடன் பெரிய கடலில் அணையைக் கட்டி அந்த அணையின் மீது போய் ராவணனுடைய கோட்டைகளை அழித்து எதிர்த்துப் போராடிய (ராமனாகிய) திருமாலின் மைந்தன் மன்மதனுக்கு மைத்துனனான* தலைவனே, மயில் மீது விளங்கும், வயலூர் வேலாயுதப் பெருமாளே, சிறப்பும் நலமும் கொண்ட திருஆனைக்கா என்னும் பதியில் வாழ்வு கொண்டவனே, தேவர்கள் தம்பிரானே. 
* திருமாலின் மகள் வள்ளி. மகன் மன்மதன். எனவே, வள்ளியின் கணவன் முருகனுக்கு மன்மதன் மைத்துனன்.
பாடல் 365 - திருவானைக்கா 
ராகம் - தேஷ்; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகிடதகதிமி-3 1/2 
- எடுப்பு -1/2 இடம்
தனதன தனதன தாந்த தானன
     தனதன தனதன தாந்த தானன
          தனதன தனதன தாந்த தானன ...... தனதான
பரிமள மிகவுள சாந்து மாமத
     முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
          பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு ...... முகில்போலே 
பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
     பரிபுர மலரடி வேண்டி யேவிய
          பணிவிடை களிலிறு மாந்த கூளனை ...... நெறிபேணா 
விரகனை யசடனை வீம்பு பேசிய
     விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
          வெகுளியை யறிவது போங்க பாடனை ...... மலமாறா 
வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
     விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
          வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது ...... மொருநாளே 
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
     மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
          கழலணி மலைமகள் காஞ்சி மாநக ...... ருறைபேதை 
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
     கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
          கரிவன முறையகி லாண்ட நாயகி ...... யருள்பாலா 
முரணிய சமரினில் மூண்ட ராவண
     னிடியென அலறிமு னேங்கி வாய்விட
          முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே 
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
     யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
          முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
நறுமணம் மிக்க கலவைச் சாந்து, கஸ்தூரி, வாசனை வீசும் நல்ல பூக்கள் இவைகளில் பொருந்திக் கூடியதும், பல ரேகைகளைக் கொண்ட வண்டுகளின் துயில் கொண்டதும், ஆகாயத்தில் உள்ள கருமேகம் போன்றதும், பரந்துள்ள இருளைப் போல் கரியதுமான கூந்தலை உடைய மாதர்களின் சிலம்பு அணிந்த மலர் போன்ற அடிகளை விரும்பி, அவர்கள் இட்ட வேலைகளை பணியாளாகச் செய்வதில் பெருமைகொள்ளும் பயனற்ற என்னை, ஒழுக்க முறையை அனுஷ்டிக்காத வீணனை, மூடனை, கர்வப் பேச்சு பேசும் உதவாக் கரையை, உரிய கலை நூல்களை ஆய்ந்து அறியாத முழு வெறுப்பு மிக்கவனை, அறிவு நீங்கிய வஞ்சகனை, குற்றங்கள் நீங்காத வினை நிரம்பியவனை, சொல்லும் சொல் தவறிய பாவியை, இறந்தபின் சேரும் நரகத்தில் இப்போதே விழுந்துள்ள மூடனை, எனக்கு என்ன ஆயிற்று என்று கவனித்துக் கேட்டு, திருவருள் பாலித்து, நன்கு ஆண்டருளுவதாகிய காலமும் ஒன்று உண்டா? பகைவர்களின் முப்புரங்களை அழித்துத் தூளாக்க மேரு மலையை ஒரு கையில் வில்லாக வளைத்த நாராயணி (விஷ்ணுவின் தங்கை), சிலம்பணிந்த மலை மகள், காஞ்சி நகரில் விளங்கும் தேவி காமாக்ஷி, இன்பமாய் ஆடும் மயில் போன்றவள், சிவபெருமானுடன் வாழும் அழகி, கடலை ஆடையாகக்கொண்ட உலகத்தை ஈன்ற தாயாகிய உமா தேவி, திருவானைக்காவில் வீற்றிருக்கும் அகிலாண்ட நாயகி அருளிய குழந்தையே, மாறுபட்ட போரில் முற்பட்டெழுந்த இராவணன் (வலியினால்) இடி ஒலியுடன் அலறியும், அதற்கு முன் கலங்கி வாய்விட்டு அழவும், (அவனுடைய) பல தலைகளை அரிந்துத் தள்ளிய இராமனும், விஸ்வரூபம் எடுத்தவனுமாகிய திருமாலின் மருகனே, முன்பு, ஒப்பற்ற குற மகள் வள்ளியின் நுண்ணிய நூல்போன்ற இடை மீதும், இரண்டு மார்புகளின் மீதும் தோய்ந்த காதலனே, மிகப் பழையதான வேதங்களை ஆய்ந்துள்ள தேவர்களின் பெருமாளே. 
பாடல் 366 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - ......
தானத் தானன தத்தன தத்தன
     தானத் தானன தத்தன தத்தன
          தானத் தானன தத்தன தத்தன ...... தனதான
வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
     காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்
          வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் ...... முலையானை 
மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்
     மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்
          வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் ...... களிகூருஞ் 
சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
     காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்
          தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் ...... எவரேனும் 
தோயப் பாயல ழைக்கும வத்திகள்
     மோகப் போகமு யக்கிம யக்கிகள்
          சூறைக் காரிகள் துக்கவ லைப்பட ...... லொழிவேனோ 
காலைக் கேமுழு கிக்குண திக்கினில்
     ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண
          காயத் ¡£செப மர்ச்சனை யைச்செயு ...... முநிவோர்கள் 
கானத் தாசிர மத்தினி லுத்தம
     வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
          காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் ...... மருகோனே 
ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை
     பாயச் சாலித ழைத்திர தித்தமு
          தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... யுறைவேலா 
ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
     நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு
          ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு ...... பெருமாளே.
வேலைப் போன்று கூர்மையான கண் கொண்டு மயக்குபவர்கள், காமம், கோபம் இவைகளை உண்டு பண்ணும் துஷ்டப் பெண்கள், தெருக்களில் திரியும் பயனிலிகள், யானையைப் போல விளங்கும் மார்பகத்தை மேலே எதிர்த்துப் போர் செய்ய விடுகின்ற தந்திரவாதிகள், மார்பையும், தோளையும் அசைத்து நடப்பவர்கள், மன்மதனுக்கே ஆண்மைச் சக்தியைத் தருகின்ற சாமர்த்தியசாலிகள், மகிழ்ச்சி பொங்கும் சோலைக் குயில்கள் போன்ற பேச்சை உடையவர்கள், பொருள் இல்லாதவர்களைப் பக்குவமாக நீக்குபவர்கள், உடலின் தோலைப் பொடியால் பூசி மினுக்கி (கண்டோர்) மனதை உருக்குபவர்கள், யாரோடும் சிற்றின்ப சுகத்துக்காக படுக்கைக்கு அழைக்கும் கேடு கெட்டவர்கள், மோகானுபவத்தைத் தந்து இணைந்து மயங்க வைப்பவர்கள், இத்தகைய கொள்ளைக்காரிகளான விலைமாதருடைய துன்பம் தருவதான வலைக்குள் மாட்டிக்கொள்ளுதலை நீங்கேனோ? காலை நேரத்தில் குளித்து, கிழக்கு திசையை நோக்கி சூரிய பகவானே என்று துதிக்கும் நீர்க் கடன், காயத்திரி மந்திரம், அர்ச்சனை முதலியன செய்யும் முனிவர்கள் (வாழும்) காட்டில் ஆசிரமத்தில் மேன்மை வாய்ந்த யாக சாலையை (இடையூறின்றிக்) காக்கும் பொருட்டு, எதிர்த்து வந்த கொடியவளாகிய தாடகி என்னும் அரக்கியைக் கொன்ற கருணைக் கடலான திருமாலின் மருகனே, கரும்பாலைகளின் சாறு கொதித்து, வயலிடத்தே பாய்வதால், நெற் பயிர் செழுமையாக வளர்ந்து சுவை தருவதான அமுதம் ஆகின்ற, தேவர்கள் போற்றும் வயலூரில் வீற்றிருக்கும் வேலனே, சக்கரங்கள் கொண்ட தேர் வீதியில் வருகின்ற, உண்மை விளங்கும் திருநீறிட்டான் மதிள்* சுற்றிலும் உள்ள, அழகிய திருவானைக்கா என்னும் தலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் விரும்பும் பெருமாளே. 
* திருவானைக்காவில் ஐந்து மதில்கள் உள்ளன. நான்காவது மதில், திருநீறிட்டான் மதில், மிகப் பெரியது. இதைக் கட்டும் போது சிவபெருமான் ஒரு சித்தாளாகக் கூலிக்கு வேலை செய்தார். கூலியாக திருநீற்றையே கொடுக்க, அந்தத் திருநீறு பொற்காசு ஆயிற்று என்பது புராண வரலாறு - திரு ஆனைக்கா புராணம்.
பாடல் 367 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - .........
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
குமர குருபர குணதர நிசிசர
     திமிர தினகர சரவண பவகிரி
          குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங் 
குறவர் சிறுமியு மருவிய திரள்புய
     முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
          கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக் 
கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
     களவி னொடுபொரு ளளவள வருளிய
          கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக் 
கருணை யடியரொ டருணையி லொருவிசை
     சுருதி புடைதர வருமிரு பரிபுர
          கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே 
தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
     மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
          சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச் 
சகல வுலகமு நிலைபெற நிறுவிய
     கனக கிரிதிரி தரவெகு கரமலர்
          தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின் 
றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
     அகில புவனமு மளவிடு குறியவன்
          அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே 
அரவு புனைதரு புநிதரும் வழிபட
     மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
          அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே.
குமரனே, குருமூர்த்தியே, நற்குணங்கள் நிறைந்தவனே, அசுரர்கள் என்னும் இருளை நீக்கும் சூரியனே, சரவணபவனே, இமயமலையின் மகளுக்கு மகனே, பகீரதியின் (கங்கையின்) மகனே, தேவர்களுக்குத் தலைவனான இந்திரனின் சிறந்த மகளான மான் போன்ற தேவயானையையும், வேடர் குலப் பெண்ணான வள்ளியையும் தழுவும் வலிமை வாய்ந்த தோள்களை உடைய முருகனே, அடைக்கலம் என்று கூறி மனம் உருகுதல் கொஞ்சமும் இல்லாத கொடுமையான வினைக்கு ஈடானவனை, வீணனை, முட்டாளை, மிகுந்த காமம் என்னும் நிலப் பிளப்பில் விழும்படித் தள்ளுகின்ற அழகு வாய்ந்த விலைமாதர்கள், வஞ்சகமாக, (வருபவருடைய) கைப் பொருள் கொடுத்த அளவுக்குத் தகுந்தபடி இன்பம் கொடுக்கின்ற சேர்க்கை என்னும் சேற்றில் சோர்வுறும் அறிவிலியாகிய என்னை, (என் குறைகளைக் கருதாது,) அன்புடன் ஆண்டருள, கருணைக்குப் பாத்திரமான அடியார் கூட்டத்துடன் திருவண்ணாமலையில் ஒரு முறை வேதங்கள் பக்கங்களில் முழங்க நடந்து வந்த, இரண்டு சிலம்பணிந்த தாமரை போன்ற திருவடிகளை, கனவிலும், விழித்துக் கொண்டிருக்கும் போதும் மறவேனே. ஒலி மிக்க அலைகளை வீசும் வளைந்த கடலின் உட்பாகங்கள் கலங்க அலைச்சல் உறவும், விஷத்தை ஆறு போலக் கக்கி உமிழும், விளக்கமான தோற்றத்தைக் கொண்ட கூட்டமான படங்களை உடைய, பாம்பு அரசனாகிய வாசுகி (கடலைக் கடையும்) நீண்ட கயிறாகவும், எல்லா உலகங்களும் நிலைபெறும்படி நிறுத்தி வைக்கப்பட்ட பொன்மயமான மேரு மலை (மத்தாகச்) சுழலவும், (கடைபவர்களின்) அனேக பல திருக்கர மலர்களும் தளர்ச்சி அடைய, இனியதான அமுதத்தை ஒப்பற்ற தனி முதல்வனாக நின்று கடைந்து, தேவர்கள் பசி நீங்க உதவி செய்த கருணை வாய்ந்த மேக வண்ணன், எல்லா உலகங்களையும் பாதத்தால் அளக்க வல்ல குட்டை வடிவுடைய வாமனன், அளந்த போது நீண்ட (திரிவிக்கிரம) உருவம் கொண்டவன், மதித்து எண்ணுதற்கு அரியவன் (ஆகிய அத்தகைய திருமாலுக்கு) மருகனே, பாம்பை அணிகலனாகக் கொண்ட தூய்மையான சிவபெருமானும் துதிக்கும்படி, உனது குதலைச் சொல்லால் அவர் தெளிவு பெறும்படி, ஒளி மயமான அறிவை அறிவது தான் பொருள் ஆகும் என்று அவருக்கு உணர்த்தி அருளிய பெருமாளே. 
பாடல் 368 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ......
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
அருவ மிடையென வருபவர் துவரிதழ்
     அமுது பருகியு முருகியு ம்ருகமத
          அளக மலையவு மணிதுகி லகலவு ...... மதிபார 
அசல முலைபுள கிதமெழ அமளியில்
     அமளி படஅந வரதமு மவசமொ
          டணையு மழகிய கலவியு மலமல ...... முலகோரைத் 
தருவை நிகரிடு புலமையு மலமல
     முருவு மிளமையு மலமலம் விபரித
          சமய கலைகளு மலமல மலமரும் ...... வினைவாழ்வுஞ் 
சலில லிபியன சனனமு மலமல
     மினியு னடியரொ டொருவழி படஇரு
          தமர பரிபுர சரணமு மவுனமு ...... மருள்வாயே 
உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
     யிருகு தையுமுடி தமனிய தநுவுட
          னுருளை யிருசுடர் வலவனு மயனென ...... மறைபூணும் 
உறுதி படுசுர ரதமிசை யடியிட
     நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்
          உடைய வொருவரு மிருவரு மருள்பெற ...... வொருகோடி 
தெருவு நகரியு நிசிசரர் முடியொடு
     சடச டெனவெடி படுவன புகைவன
          திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு ......முனிவார்தஞ் 
சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய
     பெரும அருணையி லெழுநிலை திகழ்வன
          சிகரி மிசையொரு கலபியி லுலவிய ...... பெருமாளே.
உருவமே இல்லாத நுண்ணிய இடை என்று கூறும்படி வந்துள்ள பெண்களின் பவளம் போன்ற வாயிதழின் ஊறலாகிய அமுதைப் பருகியும், அந்த நிலையில் உருகியும், கஸ்தூரி வாசனை உடைய கூந்தல் அசையவும், அணிந்த ஆடை விலகவும், மிகக் கனத்த மலை போன்ற மார்பு புளகிதம் கொள்ள, படுக்கையில் கோலாகலமாக எப்போதும் காம மயக்கத்தோடு தன் வசம் இழந்து சேர்கின்ற அழகிய புணர்ச்சி இன்பம் போதும் போதும். உலகில் உள்ளவர்களை கற்பக மரத்துக்கு ஒப்பீர்கள் எனப் பாடும் கவித் திறமும் போதும் போதும். ஒன்றுக்கொன்று மாறுபடுகின்ற சமயக் கொள்கைகளும் போதும் போதும். அழகிய தோற்றமும், இந்த இளமையும் போதும் போதும். வேதனையும் அஞ்சுதலும் உண்டாக்கும் வினைக்கு ஈடான வாழ்வும் நீர் மேல் எழுதிய எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும் போதும். இனியேனும் உன் அடியாரோடு நானும் ஒரு வழிப்பட்டு (உன்னுடைய) இரண்டு ஒலி செய்யும் சிலம்புகள் அணிந்த திருவடியையும், மவுன உபதேசத்தையும் அருள்வாயாக. உருவம் கரியவனாகிய திருமாலை ஒப்பற்ற அம்பாகவும், பாம்பு அரசனான வாசுகியை (வில்லின் முனைகளில்) முடியப்படும் கயிறாகவும், பொன்னுருவ மேரு மலையை வில்லாகவும் கொண்டு, சக்கரங்கள் சூரிய சந்திரர் எனப்படும் சுடர்களாகவும், தேர்ப்பாகன் பிரமன் ஆகவும், வேதங்களாகின குதிரைகள் பூட்டப்பட்ட திண்ணிய தேவர்களே தேர் ஆகவும் வைத்துக்கொண்டு, (சிவபெருமான்) தேரில் அடி எடுத்து வைத்தவுடனே, நெறு நெறு என்று அந்தத் தேர் முறி படவும், அசைவு உறாத தவ நிலையைக் கொண்ட திரிபுரத்தில் இருந்த மூன்று சிவபக்தர்கள் * (தீயில் மாளாது உய்ந்து) அருள் பெறவும், (திரிபுரத்திலிருந்த) ஒரு கோடிக் கணக்கான வீதிகளும் ஊர்களும் அசுரர்கள் தலையுடன் சட சட என வெடி பட்டும், புகை விட்டும், திகுதிகு என்று எரியவிட்டும் தீ எழுப்பிய சிரிப்பைக் கொண்டு கோபித்தவரான சிவபெருமானது குழந்தையே, வேடர்கள் மகளைக் கண்டு உருக்கம் கொண்ட பெருமை வாய்ந்தவனே, திருவண்ணாமலையில் ஏழு** நிலைகள் விளங்கும் மலை உச்சியில் ஒப்பற்ற மயிலின் மேல் அமர்ந்து உலவி விளக்கம் தரும் பெருமாளே. 
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாது என உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கர் ஆகவும் போந்து, அசுரர்களை மயக்கிச் சிவபூஜையை கைவிடச் செய்தனர். ஆனால் மூன்று அசுரர்கள் மட்டும் சிவ நெறியிலேயே இருந்து ஒழுகி இறக்காமல் தப்பினர்.
** ஏழு நிலைகள் (குண்டலினி) - மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராக்ஷம்.
பாடல் 369 - திருவருணை 
ராகம் - ஹம்ஸா நந்தி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்
     பிசித அசனம றவரிவர் முதலிய
          கலக விபரித வெகுபர சமயிகள் ...... பலர்கூடிக் 
கலக லெனநெறி கெடமுறை முறைமுறை
     கதறி வதறிய குதறிய கலைகொடு
          கருத அரியதை விழிபுனல் வரமொழி ...... குழறாவன் 
புருகி யுனதருள் பரவுகை வரில்விர
     கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய
          லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள ...... றதுபோக 
உதறி லெனதெனு மலமறி லறிவினி
     லெளிது பெறலென மறைபறை யறைவதொ
          ருதய மரணமில் பொருளினை யருளுவ ...... தொருநாளே 
தருண சததள பரிமள பரிபுர
     சரணி தமனிய தநுதரி திரிபுர
          தகனி கவுரிப வதிபக வதிபயி ...... ரவிசூலி 
சடில தரியநு பவையுமை திரிபுரை
     சகல புவனமு முதவிய பதிவ்ருதை
          சமய முதல்வித னயபகி ரதிசுத ...... சதகோடி 
அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு
     கருணை வருணித தனுபர குருபர
          அருணை நகருறை சரவண குரவணி ...... புயவேளே 
அடவி சரர்குல மரகத வனிதையு
     மமரர் குமரியு மனவர தமுமரு
          கழகு பெறநிலை பெறவர மருளிய ...... பெருமாளே.
கருணை என்பதே சிறிதும் இல்லாது, தலை மயிர் பறிப்பவரும், அரக்கர்களுக்கு ஒப்பானவரும், புலால் உண்ணும் வேடர்களை ஒத்தவரும் ஆகிய சமணர் முதலிய வெகுவான பர சமய வாதிகள் பலரும் கலகங்கள் செய்தும், விபா£த உணர்ச்சியால் மாறுபட்டும், ஒன்று சேர்ந்து, ஆரவாரம் செய்து நீதி முறை கெட்டு, அவரவர் முறை வரும் போதெல்லாம் பெருங் கூச்சலிட்டுக் கதறி, வாயாடி, திட்டி, பண்பு தவறிப் பேசுகின்ற ஒன்றை, கலை நூல்களால் கருதவும் அரிதான மெய்ப் பொருளை, கண்களில் நீர் வர, பேச்சுக் குழறி, அன்புடன் மனம் உருகி உன் திருவருளைப் போற்றும் மன நிலை வந்தால், தந்திர புத்தி ஒழிந்தால், உலக சம்பந்தமான கட்டுக்கள் விட்டால், மனம், வாக்கு, காயம் இம் மூன்றின் தொழிலும் அழிந்தால், உயிரைச் சார்ந்து ஆட்டுவிக்கும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி உதறி விலக்கினால், எனது என்னும் ஆசையாகிய குற்றம் அற்றுப் போனால், அறிவில் எளிதாகப் பெறுதல் முடியும் என்று வேதங்கள் பறையறைந்து சொல்லுவதான அதனை, ஒப்பற்ற, தோற்றமும் முடிவும் இல்லாத பொருளை அடியேனுக்கு நீ அருள் செய்யும் ஒரு நாள் கிட்டுமா? என்றும் இளமையோடு கூடியதாய், தாமரை போன்றதாய், நறு மணம் வீசுவதாய், சிலம்பு அணிந்ததாயுள்ள திருவடிகளை உடையவள், பொன் மயமான மேருவை வில்லாக ஏந்தியவள், திரி புரத்தை எரித்தவள், கெளரி, பார்வதி, பகவதி, பயிரவி, சூலத்தைக் கையில் ஏந்தியவள், சடை தரித்தவள், போகங்களை நுகர்பவள், உமா தேவி, திரிபுரை, எல்லா உலகங்களையும் ஈன்றருளிய பதிவிரதை, எல்லா சமயங்களுக்கும் தலைவியும் ஆன பார்வதியின் மகனே, பாகீரதியின் (கங்கையின்) மகனே, நூறு கோடி சிவந்த சூரியர்களை விட அழகான ஒளியை வீசும் கருணையே, அலங்கார உருவான உடலை உடையவனே, குருபரனே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சரவணனே, குரா மலரை அணிந்த புயங்களை உடைய தலைவனே, காட்டில் சஞ்சரிக்கும் வேடர் குலத்து, பச்சை நிறம் உள்ள பெண்ணான வள்ளியும், தேவர் குமரியான தேவயானையும் எப்போதும் இரு பக்கத்திலும் அழகு விளங்க நிலை பெற்றிருக்க, அவர்களுக்கு வரம் தந்தருளிய பெருமாளே. 
பாடல் 370 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ......
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
துகிலு ம்ருகமத பரிமள அளகமு
     நெகிழ இருதன கிரியசை தரஇடை
          துவள மனிதரு மமரரு முநிவரு ...... முடனோடித் 
தொடர வனமணி மகரமி லகுகுழை
     யடரு வனவிட மிளிர்வன ரதிபதி
          சுருதி மொழிவன கயல்விழி புரள்தர ...... நடுவாக 
வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர
     வனச பதயுக பரிபுர மொலிபட
          மறுகு தொறுமுல வியினிய கலவியை ...... விலைகூறும் 
வரைவி லரிவையர் தருசுக சலதியி
     லலையு மெனதுயி ரநுதின நெறிதரு
          மவுன சிவசுக சலதியில் முழுகுவ ...... தொருநாளே 
முகிலு மதியமும் ரவியெழு புரவியு
     நெடிய குலைமிட றிடறமு துககன
          முகடு கிழிபட வளர்வன கமுகின ...... மிசைவாளை 
முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்
     தடமு முளரிய அகழியு மதிள்களு
          முழுது முடையதொ ரருணையி லுறைதரு ...... மிளையோனே 
அகிலு மருதமு முகுளித வகுளமு
     மமுத கதலியும் அருணமும் வருடையு
          மபரி மிதமத கரிகளு மரிகளு ...... முடனேகொண் 
டருவி யிழிதரு மருவரை தனிலொரு
     சவர வனிதையை முநிதரு புனிதையை
          அவச முடன்மல ரடிதொழு துருகிய ...... பெருமாளே.
ஆடையும், கஸ்தூரி ஆகிய நறு மணம் கமழும் கூந்தலும் நெகிழ்ந்து குலையவும், இரண்டு மலை போன்ற மார்பகங்கள் அசையவும், இடுப்பு துவளவும், மனிதரும், தேவர்களும், முனிவர்களும் கூடவே ஓடி வந்து தொடரவும், அழகு மணியால் ஆகிய மகர மீன் போல் விளங்கும் குண்டலங்களை தாக்குவனவாய், விஷம் பொலிவனவாய், ரதியின் கணவனான மன்மதனுடைய காம சூத்திரத்தை எடுத்துக் கூறுவனவாய், கயல் மீனை ஒத்த கண்கள் புரளவும், மத்தியில் கீறு பட்ட நிலவை ஒத்த, வில்லைப் போன்ற நெற்றி வியர்வுத் துளிகளைத் துளிக்கவும், தாமரை போன்ற இரண்டு திருவடிகளிலும் சிலம்பு ஒலிக்கவும், தெருக்கள் தோறும் உலாவி புணர்ச்சி இன்பத்தை விலை கூறுகின்ற அளவில்லாத பொது மகளிர் கொடுக்கும் கலவி இன்பக் கடலில் அலைகின்ற என்னுடைய உயிர், நாள் தோறும் நன்னெறியில் செலுத்தும் மெளன சிவ சுகக் கடலில் திளைத்து முழுகும்படியான பாக்கியம் கொண்டதாகிய நாள் ஒன்று வருமோ? மேகமும், நிலவும், சூரியனின் ஏழு குதிரைகளும் தமது நீண்ட குலைகளின் கழுத்து பாகத்தில் இடறுண்ணவும், பழைய ஆகாய உச்சி கிழி படவும், உயர்ந்து வளர்ந்துள்ள கமுகு மரங்கள் கூட்டத்தின் மேல் பாயும் வாளை மீன்களும் (அவைகளால்) விரட்டப்படும் கயல் மீன்களும் ஓடித் திரியும் வயல்களும், நறு மணம் வீசும் குளங்களும் தாமரை மலர்கள் விளங்கும் அகழிகளும், மதில்களும் இவை எல்லாம் உடையதான ஒப்பற்ற திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற இளையவனே, அகில், மருதம், மலர் விடும் மகிழ மரம், அமுதம் போல் இனிக்கும் வாழை மரம் ஆகியவைகளும், செம்மறி ஆடும், மலை ஆடும், கணக்கற்ற மத யானைகளும், குரங்குகளும், உடனே இழுபட்டுவரப் பாயும் அருவிகள் இறங்கி வரும் அருமையான (வள்ளி) மலையில், ஒப்பற்ற வேடுவப் பெண்ணும், சிவ முனிவர் தவத்தே வந்த பரிசுத்தமான நங்கையுமாகிய வள்ளியை தன்வசமிழந்த ஆசையுடன் திருவடிகளைத் தொழுது மனமுருகும் பெருமாளே. 
பாடல் 371 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .........
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
மகர மெறிகடல் விழியினு மொழியினு
     மதுப முரல்குழல் வகையினு நகையினும்
          வளமை யினுமுக நிலவினு மிலவினு ...... நிறமூசும் 
மதுர இதழினு மிடையினு நடையினு
     மகளிர் முகுளித முலையினு நிலையினும்
          வனச பரிபுர மலரினு முலரினு ...... மவர்நாமம் 
பகரு கினுமவர் பணிவிடை திரிகினு
     முருகி நெறிமுறை தவறினு மவரொடு
          பகடி யிடுகினு மமளியி லவர்தரு ...... மநுராகப் 
பரவை படியினும் வசமழி யினுமுத
     லருணை நகர்மிசை கருணையொ டருளிய
          பரம வொருவச னமுமிரு சரணமு ...... மறவேனே 
ககன சுரபதி வழிபட எழுகிரி
     கடக கிரியொடு மிதிபட வடகுல
          கனக கனகுவ டடியொடு முறிபட ...... முதுசூதங் 
கதறு சுழிகட லிடைகிழி படமிகு
     கலக நிசிசரர் பொடிபட நடவிய
          கலப மதகத துரகத ந்ருபகிரி ...... மயில்வாழ்வே 
தகன கரதல சிவசுத கணபதி
     சகச சரவண பரிமள சததள
          சயன வனசரர் கதிபெற முனிபெறு ...... புனமானின் 
தரள முகபட நெறிபட நிமிர்வன
     தருண புளகித ம்ருகமத தனகிரி
          தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய ...... பெருமாளே.
மகர மீன்களை வீசி எறியும் கடல் போன்ற கண்ணிலும், அவர்களது பேச்சிலும், வண்டுகள் ஒலி செய்யும் கூந்தல் வகைகளிலும், சிரிப்பிலும், வளப்பத்திலும், சந்திரன் போன்ற முகத்திலும், இலவ மலரைக் காட்டிலும் செந்நிற ஒளி விளங்கும் இனிமை தரும் வாயிதழிலும், இடையிலும் நடையிலும், மாதர்களின் அரும்பிய மார்பிலும், (அவர்கள்) நிற்கும் நிலையிலும், தாமரை போன்றதும், சிலம்பு அணிந்ததுமான மலர் போன்ற அடிகளிலும், அந்த மாதர்களின் பெயர்களைச் சொல்லிச் செபித்தாலும், அவர்கள் இட்ட வேலைகளைச் செய்வதிலேயே ஈடுபட்டுத் திரிந்தாலும், (அவர் பொருட்டு) மனம் உருகி நீதி முறை தவறி நடந்தாலும், அவர்களோடு விகட மொழிகள் பேசினாலும், படுக்கையில அவர்கள் கொடுக்கும் காமப் பற்றாகிய கடலில் முழுகினாலும், என் வசம் அழிந்தாலும், முதன் முதலில், திருவண்ணாமலைப் பதியில் நீ கருணையோடு அளித்து அருளிய மேலான ஒப்பற்ற உபதேச மொழியையும், உனது இரண்டு திருவடிகளையும் மறக்க மாட்டேன். விண்ணுலகத்துத் தேவர் தலைவனாகிய இந்திரன் துதிக்க, (சூரனுக்குத் துணையாயிருந்த) ஏழு மலைகளும் வட்டமான சக்ரவாள கிரியுடன் மிதிபட, வடக்கே உள்ள சிறந்த பொன்மயமான பருத்த (மேரு) மலை அடியோடு பொடிபட, பழைய மாமரத்து உருவில் இருந்த சூரன் அலறி, சுழி எறியும் கடலில் கிழிந்து அறுபட, மிக்க கலக்கத்தைச் செய்து வந்த அசுரர்கள் பொடிபட நடத்திய, தோகை நிரம்பிய பச்சை நிறமான குதிரையாகிய மயில் ஏறும் அரசனே, இமய மலை மயிலாகிய பார்வதியின் செல்வக் குமரனே, நெருப்பை ஏந்திய திருக் கரத்தனாகிய சிவபெருமானுடைய மகனே, கணபதியின் சகோதரனே, சரவணனே, நறு மணம் கொண்ட நூற்றிதழ்த் தாமரையில் பள்ளி கொண்டவனே, வேடர்கள் நற் கதி அடைய, சிவ முனிவர் பெற்ற, தினைப் புனம் காத்த மான் போன்ற வள்ளி நாயகியின் முத்தாலாகிய மேலாடை வளைவுபட நிமிர்ந்து எழுவனவும், இளமை வாய்ந்தனவும், புளகாங்கிதம் கொண்டனவும், கஸ்தூரி அணிந்துள்ளனவுமான மார்பகங்களாகிய மலைகளைத் தழுவ மோகம் கொண்டு ஒப்பற்ற மடல்* எழுதிய பெருமாளே. 
* மடல் எழுதுதல் - தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
பாடல் 372 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .......
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென
     முதிய மதியது முகமென நுதலிணை
          முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி ...... யெனமூவா 
முளரி தனின்முகு ளிதமலர் முலையென
     முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை
          மொழிய வரியதொர் தெரிவையர் வினையென ...... மொழிகூறிப் 
பகலு மிரவினு மிகமன மருள்கொடு
     பதியி லவர்வடி வுளதழ கெனவொரு
          பழுது மறஅவர் பரிவுற இதமது ...... பகராதே 
பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட
     விகட முடனடை பயில்மயில் மிசைவரு
          பவனி தனையநு தினநினை யெனஅருள் ...... பகர்வாயே 
புகல வரியது பொருளிது எனவொரு
     புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு
          பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள் ...... புடைசூழப் 
புரமு மெரியெழ நகையது புரிபவர்
     புனலும் வளர்மதி புனைசடை யினரவர்
          புடவி வழிபட புதை பொருள் விரகொடு ...... புகல்வோனே 
அகில கலைகளு மறநெறி முறைமையு
     மகில மொழிதரு புலவரு முலகினி
          லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை ...... யதனாலே 
அறுவர் முலையுணு மறுமுக னிவனென
     அரிய நடமிடு மடியவ ரடிதொழ
          அருணை நகர்தனி லழகுடன் மருவிய ...... பெருமாளே.
மேகத்தைப் பகைத்துப் போராடும் முற்றின இருளுமே கூந்தல் என்றும், பூரண சந்திரனே முகம் என்றும், புருவம் இரண்டும் பகைவர்களால் கட்டப்பட்ட வில் என்றும், விரைந்து பாயும் அம்பு கண் என்றும், மூப்பில்லாத தாமரையின் அரும்பு நிலை மலர் மார்பு எனவும், பற்களையும் இரண்டு குண்டலங்களையும் பேச்சையும் உவமை சொல்லுதற்கு அரிதானதோர் மாதர்களின் செயலாற்றும் கருவிகள் எனவும் வர்ணித்துக் கூறி, பகலும் இரவும் மிக்க மன மருட்சியுடன் பொது மகளிரின் வடிவில் அழகு இருப்பிடம் கொண்டிருக்கின்றது என்று, சற்றும் குறைவிலா வகையில் அவர்கள் அன்பு கொள்ளுமாறு இன்ப வார்த்தைகளை அவர்களிடம் சொல்லித் திரியாமல், பகையுடன் வந்து எதிர்த்துப் போர் செய்யும் அசுரர்கள் துகைக்கப்பட்டு அழிய, நீ நடனம் செய்யும் மயிலின் மேல் உலவி வரும் காட்சியை தினமும் நினைப்பாயாக என்று வரம் தர வேண்டும். எடுத்துச் சொல்லுவதற்கு முடியாததான பொருள் இதுதான் என்றும், ஒரு புதிய வகையில் கற்பனை செய்ய முடியாததான முதன்மையானது என்றும், ஒப்பற்ற பொதுவாம் தன்மை கொண்டது இது என்றும் தவ நிலையில் உள்ள முனிவர்கள் பக்கத்தில் சூழ்ந்து கூறிவர, திரி புரம் எரியுண்ணச் சிரித்தவர், கங்கையையும் பிறையையும் அணிந்துள்ள சடையினர் ஆகிய சிவபெருமான் பூமியில் (சுவாமி மலையில்) உன்னை வழிபட்டு நிற்க, அவருக்கு ரகசியப் பொருளை ஆர்வத்துடன உபதேசித்தவனே, எல்லா கலைகளும் தரும நெறியைக் கூறும் நூல்கள் எல்லாவற்றையும் மொழிய வல்ல புலவர்களும், உலகிலுள்ள அறிஞர்களும், தவ நிலையைச் சார்ந்து முயல்பவர்களும், இயற்றமிழாலும், இசைத் தமிழாலும், ஆறு கார்த்திகை மாதர்களின் முலைப் பாலை உண்ணும் ஆறுமுக சுவாமி இவன்தான் என்று தியானித்துக் கூறி அருமையான நடனம் இடும் அடியவர்கள் உனது திருவடியைத் தொழுது நிற்க, திருவண்ணாமலை என்னும் ஊரில் அழகுடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 373 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ..........
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்
     முலைக ளளவிடு முகபட பகடிகள்
          முதலு முயிர்களு மளவிடு களவியர் ...... முழுநீல 
முழுகு புழுககில் குழைவடி வழகியர்
     முதிர வளர்கனி யதுகவ ரிதழியர்
          முனைகொ ளயிலென விழியெறி கடைசிய ...... ரநுராகம் 
மருவி யமளியி னலமிடு கலவியர்
     மனது திரவிய மளவள வளவியர்
          வசன மொருநொடி நிலைமையில் கபடியர் ...... வழியேநான் 
மருளு மறிவின னடிமுடி யறிகிலன்
     அருணை நகர்மிசை கருணையொ டருளிய
          மவுன வசனமு மிருபெரு சரணமு ...... மறவேனே 
கருதி யிருபது கரமுடி யொருபது
     கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது
          கடிய வியனகர் புகவரு கனபதி ...... கனல்மூழ்கக் 
கவச அநுமனொ டெழுபது கவிவிழ
     அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு
          களரி தனிலொரு கணைவிடு மடலரி ...... மருகோனே 
சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி
     யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து
          தரும னவர்பதி குடிவிடு பதனிசை ...... மயில்வீரா 
தருண மணியவை பலபல செருகிய
     தலையள் துகிலிடை யழகிய குறமகள்
          தனது தனமது பரிவொடு தழுவிய ...... பெருமாளே.
நறுமணம் நிறைந்த கூந்தலை முடித்துள்ள தந்திரசாலிகள். மார்பகங்களை அளவிட்டுக் காட்டும் மேலாடை அணிந்த வெளி வேஷதாரிகள். அவரவர்களின் மூல தனத்தையும் குணாதிசயங்களையும் அளந்திடவல்ல திருடிகள். முழுமையும் நீல நிறம் கொண்ட புனுகு சட்டம், அகில் இவையிரண்டும் குழைக்கப்பட்ட மணம் கொண்ட உருவ அழகியர். நன்கு பழுத்த (கொவ்வைக்) கனியின் தன்மையைப் பெற்றுள்ள வாயிதழை உடையவர்கள். கூர்மை கொண்ட வேலைப் போன்ற கண் பார்வையை வீசும் இழிந்தவர்கள். காமப் பற்று பொருந்த படுக்கையில் உடலுக்கு இன்பம் தரும் புணர்ச்சியினர் தங்கள் மனதை தாம் பெற்ற பொருளின் அளவுக்கு ஏற்ப அளந்து கொடுப்பவர்கள். பேசும் பேச்சில ஒரு நொடிப் பொழுதில் வஞ்சனை புகுத்துபவர். இத்தகைய பொது மகளிரின் வழியில் நான் மருள் கொண்ட அறிவில்லாதவன். தலை கால் தெரியாதவன். அத்தகைய எனக்கு திருவண்ணாமலையில்* கருணையுடன் நீ அருள் செய்த மெளன உபதேசத்தையும் நின் இரண்டு பெருமை மிக்க திருவடிகளையும் நான் மறக்க மாட்டேன். நன்கு ஆராய்ந்து பார்த்து, இருபது கரங்களும், ஒரு பத்து தலைகளும் பொன்னாலான கி¡£டங்களை அணிந்த ராவணன் ஆட்சி செய்ததும், பழமையானதும், காவல் கொண்டதுமான அற்புத நகரமாம் இலங்கை தீப்பிடிக்க, கவசம் போல் விளங்கிய அனுமனோடு எழுபது ஆயிரம் குரங்குகள் (மலைகளைப்) போட்டுக் கட்டிய அணையின் வழியாக அலைகடலை அடக்கிக் கடந்து, எதிர்த்துப் போர்செய்த போர்க்களத்தில் ஒப்பற்ற அம்பைச் செலுத்தும் வலிமை வாய்ந்த ராமனாம் திருமாலின் மருகனே, போராடிய அசுரர்கள் தங்கள் படையுடன் தமது வலிமை எல்லாம் தொலைந்தழிய, நிலை பெற்றிருந்த கிரவுஞ்ச மலையையும் இடித்துத் தள்ளி, யமதர்ம லோகத்துக்கு அனைவரையும் குடியேறும்படி உதவிய அழகு பொருந்திய மயில் வீரனே, புதிய மணிகளைப் பலவாறு செருகியுள்ள தலையை உடையவள், ஆடை இடையில் அழகாக அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பினை அன்புடன் தழுவிய பெருமாளே. 
* இது அருணகிரியார் திருஅருணையில் முருகனால் ஆட்கொள்ளப்பட்டதைக் குறிக்கும்.
பாடல் 374 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .........
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
விடமு மமுதமு மிளிர்வன இணைவிழி
     வனச மலதழல் முழுகிய சரமென
          விரைசெய் ம்ருகமத அளகமு முகிலல ...... வொருஞான 
விழியின் வழிகெட இருள்வதொ ரிருளென
     மொழியு மமுதல வுயிர்கவர் வலையென
          விழையு மிளநகை தளவல களவென ...... வியனாபித் 
தடமு மடுவல படுகுழி யெனஇடை
     துடியு மலமத னுருவென வனமுலை
          சயில மலகொலை யமனென முலைமிசை ...... புரள்கோவை 
தரள மணியல யமன்விடு கயிறென
     மகளிர் மகளிரு மலபல வினைகொடு
          சமையு முருவென வுணர்வொடு புணர்வது ...... மொருநாளே 
அடவி வனிதையர் தனதிரு பரிபுர
     சரண மலரடி மலர்கொடு வழிபட
          அசல மிசைவிளை புனமதி லினிதுறை ...... தனிமானும் 
அமர ரரிவையு மிருபுடை யினும்வர
     முகர முகபட கவளத வளகர
          அசல மிசைவரு மபிநவ கலவியும் ...... விளையாடுங் 
கடக புளகித புயகிரி சமுகவி
     கடக கசரத துரகத நிசிசரர்
          கடக பயிரவ கயிரவ மலர்களும் ...... எரிதீயுங் 
கருக வொளிவிடு தனுபர கவுதம
     புநித முநிதொழ அருணையி லறம்வளர்
          கருணை யுமைதரு சரவண சுரபதி ...... பெருமாளே.
விஷமும் அமுதமும் ஒன்று சேர்ந்து விளங்குகின்ற இரண்டு கண்களும் தாமரைகள் அல்ல, நெருப்பில் தோய்த்த அம்புகளாம் என்றும், நறு மணம் கமழும் கஸ்தூரி வாசனை கொண்ட கூந்தல் கரு மேகம் அல்ல, ஒப்பற்ற ஞான விழி நாடும் வழியை மறைக்கும் சூனியத்தைத் தரும் தனி இருளாம் என்றும், பேச்சும் அமுதம் அன்று, உயிரையே கவரும் வலை என்றும், விரும்பும் காமத்தை ஊட்டும் பற்கள் முல்லை அரும்பு அன்று, திருட்டுத்தனத்தைத் தம்மிடம் ஒளித்து வைத்துள்ளவை என்றும், வியப்பைத் தரும் தொப்புள் என்னும் இடமும் ஆற்றிடைப் பள்ளம் அன்று, (யானைகளைப் பிடிக்க அமைந்த) பெருங்குழியாம் என்றும், இடை உடுக்கை அன்று, மன்மதனின் உருவமாம் என்றும் (அதாவது அருவமானது), அழகிய மார்பகம் மலை அன்று, கொலை செய்யும் யமனே என்றும், மார்பிலே புரளுகின்ற கோத்த வடம் முத்து மாலை அன்று, யமன் விட்ட பாசக் கயிறே ஆகும் என்றும், இந்த விலைமாதர்கள் மாதர்களே அல்ல, பல வினைகள் சேர்ந்து அமைந்த உருவமே என்றும் காண வல்ல ஞான உணர்ச்சியோடு கலப்பதாகிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? வன தேவதைகள் உன்னுடைய இரண்டு சிலம்பணிந்த, அடைக்கலம் புகத் தக்க, தாமரைத் திருவடிகளை மலர் கொண்டு வழிபட, வள்ளிமலைக்கு அருகிலே விளைந்துள்ள தினைப் புனத்தில் இனிது அமர்ந்திருந்த ஒப்பற்ற மான் போன்ற வள்ளியும், தேவர்கள் வளர்த்த மகளாகிய தேவயானையும் இரண்டு பக்கங்களிலும் வர, பிளிறுவதும், முகத்தில் தொங்கும் அலங்காரத் துணி கொண்டதும், உணவு உண்டைகளை உட்கொள்வதும், வெண்ணிறம் கொண்டதும், துதிக்கை உடையதுமான மலை போன்ற யானையின்* மீது எழுந்தருளும் புதுமை வாய்ந்தவனே, (வள்ளி, தேவயானையுடன்) சேர்க்கை இன்பத்தில் விளையாடுகின்றனவும், கங்கணம் அணிந்தனவும், புளகிதம் கொண்டுள்ளனவுமாகிய புய மலைக் கூட்டத்தை உடைய அழகு வாய்ந்த உள்ளத்தவனே, அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகியவைகளுக்கு பயங்கரத்தை ஊட்டுபவனே, செவ்வாம்பல் மலர்களும், எரிகின்ற தீயும் கருகும்படி சிவந்த ஒளியை வீசுகின்ற உடலை உடையவனே, மேலான கெளதமர் என்னும் பரிசுத்தமான முனிவர் தொழுது பூசிக்க, திருவண்ணாமலையில் அற நெறியை வளர்த்த கருணை நிறைந்த உமா தேவி பெற்றருளிய சரவண பவனே, தேவர்கள் தலைவனாகிய இந்திரனுக்குப் பெருமாளே. 
* இது முருகவேளுக்கு உரிய பிணிமுகம் என்னும் யானை. பல தலங்களில் முருகனுக்கு பிணிமுக யானை வாகனமாக உள்ளது.
பாடல் 375 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ........
தனன தனதன தனன தனதன
     தனன தனதன தனன தனதன
          தனன தனதன தனன தனதன ...... தனதான
கமரி மலர்குழல் சரிய புளகித
     கனக தனகிரி யசைய பொருவிழி
          கணைக ளெனநுதல் புரள துகிலதை ...... நெகிழ்மாதர் 
கரிய மணிபுர ளரிய கதிரொளி
     பரவ இணைகுழை யசைய நகைகதிர்
          கனக வளைகல நடைகள் பழகிகள் ...... மயில்போலத் 
திமிரு மதபுழு கொழுக தெருவினி
     லலைய விலைமுலை தெரிய மயல்கொடு
          திலத மணிமுக அழகு சுழலிக ...... ளிதழூறல் 
திரையி லமுதென கழைகள் பலசுளை
     யெனவு மவர்மயல் தழுவு மசடனை
          திருகு புலைகொலை கலிகள் சிதறிட ...... அருள்தாராய் 
குமர குருபர குமர குருபர
     குமர குருபர குமர குருபர
          குமர குருபர குமர குருபர ...... எனதாளங் 
குரைசெய் முரசமொ டரிய விருதொலி
     டமட டமடம டமட டமவென
          குமுற திமிலைச லரிகி னரிமுத ...... லிவைபாட 
அமரர் முநிவரு மயனு மனைவரு
     மதுகை மலர்கொடு தொழுது பதமுற
          அசுரர் பரிகரி யிரத முடைபட ...... விடும்வேலா 
அகில புவனமொ டடைய வொளிபெற
     அழகு சரண்மயில் புறம தருளியொ
          ரருண கிரிகுற மகளை மருவிய ...... பெருமாளே.
நிறைந்த வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அவிழ்ந்து சரிய, புளகிதம் கொண்ட பொன் மயமான மலையைப் போன்ற மார்பகங்கள் அசைய, போரிடுவது போன்ற கண்கள் அம்புகள் என்னும்படியாக விளங்க, நெற்றி புரள, ஆடையை நெகிழ விடுகின்ற விலைமாதர்கள், கழுத்தில் கரிய மணி மாலை புரள்வதால் அருமையான ஜோதி ஒளி பரவ, இரண்டு குண்டலங்களும் அசைய, ஒளி விளக்கமுள்ள பொன்னாலாகிய வளையல்கள் கலகல என ஒலிக்க, மயில் போல நடை பயிற்றுபவர்கள், பூசப்பட்ட சாரமான புனுகு சட்டம் ஒழுகும்படி வீதியில் அலைய, விற்கப்படும் மார்பு வெளித்தோன்ற காமப் பற்றுடன் நெற்றிப் பொட்டு அணிந்துள்ள முக அழகுடன் அங்குமிங்கும் திரிபவர்களாகிய விலைமாதர்களின் வாயிதழ் ஊறலை பாற்கடலில் எடுத்த அமுதே இது என்றும், கரும்புச் சாறு இது என்றும், பலாப்பழத்தின் சுளை இது என்றும் கருதி, அந்த விலைமாதர்களை மோகத்தில் தழுவுகின்ற முட்டாளாகிய எனது குற்றங்கள், இழிவான குணங்கள், கொலைக்கு ஈடான நீசபுத்தி முதலியவைகள் சிதறி விலக அருள் புரிவாயாக. குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என்னும் ஓசையுடன் தாளங்கள் ஒலி செய்கின்ற முரசு போன்ற போர்ப் பறையுடன் அருமையான வெற்றி ஒலிகள் டமடம டமட டம டமட இவ்வாறு பலத்து ஒலிக்க, திமிலைப் பறை, சல்லரி என்னும் ஜாலரா வகை, கின்னரி என்னும் யாழ்வகை முதலிய வாத்தியங்கள் இசைக்க, தேவர்களும், முனிவர்களும் பிரமனும் மற்றும் எல்லாரும் தேன் நிறைந்த பூக்களோடு வணங்கி தத்தம் பதவிகளைப் பெற, அசுரர்களின் குதிரை, யானை, தேர்ப்படைகள் உடைபட்டு ஒழியவும் வேலாயுதத்தைச் செலுத்தியவனே, எல்லா உலகங்களும் எங்கும் ஒளி பெறவும் அழகிய பாதங்களை மயிலின் மேல் இருத்தி, ஒப்பற்ற திருவண்ணாமலையில் குறப் பெண்ணாகிய வள்ளியைச் சேர்ந்த பெருமாளே. 
பாடல் 376 - திருவருணை 
ராகம் - சிவரஞ்சனி ; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்
தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான
கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்
     கணவகெட் டேனெனப் ...... பெறுமாது 
கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்
     கதறிடப் பாடையிற் ...... றலைமீதே 
பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்
     பறைகள்கொட் டாவரச் ...... சமனாரும் 
பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்
     பரிகரித் தாவியைத் ...... தரவேணும் 
அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்
     றருணையிற் கோபுரத் ...... துறைவோனே 
அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்
     தரியசொற் பாவலர்க் ...... கெளியோனே 
புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்
     புனமறப் பாவையைப் ...... புணர்வோனே 
பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்
     பொருமுழுச் சேவகப் ...... பெருமாளே.
கண்விழித்து உனக்கு எத்தனை நாள் பணிவிடைகள் செய்தேன், என்னை செயலற்றுப் போகச் செய்துவிட்டாயே என்றும், கணவனே, உன்னை இழந்து நான் அழிந்து போனேனே என்றும் மனைவி அழவும், என் கருத்திலேயே நிலைத்து நிற்கும் மகனே என்று தாயார் அழவும், புதல்வர் அப்பா எனக் கதறி அழவும், பிணத்தை வைத்த பாடையின் தலைமாட்டில் நின்று பழகிய சுற்றத்தார் அழவும், பழமையான நட்பினர்கள் அழவும், பறைகளை முழக்கிக் கொண்டு பலர் வரவும், யமனும் பருத்த கையிலுள்ள பாசக் கயிற்றை என்மீது விட்டெறியும் அந்தத் தருணத்தில் என்னைக் காப்பாற்றி உயிரைத் தந்தருள்க. வேலும், தர்ம நெறி வழுவாத சேவற்கொடியும் கைகளில் இனிது விளங்க, மயில் மீது விளங்கி, திருவண்ணாமலைக் கோபுரத்து வாயிலில் வீற்றிருப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, அவர்களிடை வளர்ந்த சிறிய குமரி தேவயானையை முத்தமிட்டு மகிழ்வோனே, சிவபிரானை அருமையான சொற்களால் பாடும் புலவர்களுக்கு எளியவனே, மேகங்கள் தங்கி இளைப்பாறும் அழகிய மலையாம் வள்ளிமலையின் நெருங்கிய மலைச்சாரலில் தினைப்புனம் காத்த வேடர்குலப் பெண் வள்ளியைக் கூடியவனே, தூளாகும்படியாக கிரெளஞ்ச மலையோடும், கடலில் மாமரமாக நின்ற சூரனோடும் போர் புரிந்த, பரிபூரண பராக்கிரமத்தை உடைய பெருமாளே. 
பாடல் 377 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ........
தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான
கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்
     திலகுகட் சேல்களிப் ...... புடனாடக் 
கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்
     களவினிற் காசினுக் ...... குறவாலுற் 
றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்
     றுயர்பொருட் கோதியுட் ...... படுமாதர் 
ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்
     புணையிணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ 
மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்
     செறிதிருக் கோலமுற் ...... றணைவானும் 
மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்
     றிடஅடற் சூரனைப் ...... பொரும்வேலா 
அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்
     றருணையிற் கோபுரத் ...... துறைவோனே 
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
     றயருமச் சேவகப் ...... பெருமாளே.
கோபம் மிகுந்து உயிரைக் குலையச் செய்யும் அந்த யமனைப் போன்று, விளங்கும் சேல் மீன் போன்ற கண் மகிழ்ச்சியுடன் விரும்பிப் பார்க்க, யோசனை செய்து முன்னதாகவே உடலுக்கு அளவான பொருள் இவ்வளவு என்று பேசி, உள்ளத்தில் வைத்த கள்ளத்தனத்தால் பொருளுக்குத் தக்க உறவு பூண்டு, பொருந்திய மலர்ப் படுக்கையில் துயரத்தை உண்டு பண்ணியும், பிணக்கு உற்றும், அதிகப் பொருள் தர வேண்டும் என்று கூறி உட்படுகின்ற விலைமாதர்கள் கடிந்து கூறும் துன்பத்துக்கு என் உள்ளத்து அறிவை இழந்தவன் நான். என் உயிருக்குப் பிறவிக் கடலைக் கடக்கத் தெப்பம் போல உதவும் உனது இரு திருவடிகளையும் தொழ மாட்டேனோ? வேதங்களை எடுத்து ஓதுபவனாகிய பிரமனும், வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனும், மேகம் போலக் கருமை நிறம் நிறைந்த அழகிய கோலத்தைக்கொண்டு சேரும் திருமாலும், (சூரனுக்குப் பயந்து) மறைவிடம் தேடி (தன்னிடம்) அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என்ற காரணத்தால், மலைகளைக் கொண்ட நெடிய கடல் வற்றிப்போக, வலிமை வாய்ந்த சூரனோடு போர் செய்யும் வேலனே, அறிவு வாய்ந்த பெரியோர்களும் என்னுடன் கூடி (யான் பாடும் சந்தப் பாக்களால்) உன்னைப் பாட திருவண்ணாமலையில் கோபுரத்தில் மகிழ்ச்சியுடன் வீற்றிருப்பவனே, வள்ளி மலைக் காட்டில் மயில் போன்று உலாவும் வள்ளியின் அழகிய பெரிய மார்பகங்களுக்கு ஆசை அடைந்து சோர்வு கொண்ட வலிமை வாய்ந்த பெருமாளே. 
பாடல் 378 - திருவருணை 
ராகம் - ஸாரமதி ; தாளம் - கண்டசாபு
தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான
பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
     பயனுயிர்ப் போயகப் ...... படமோகப் 
படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்
     படரெரிக் கூடுவிட் ...... டலைநீரிற் 
பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்
     பிணிகளுக் கேயிளைத் ...... துழல்நாயேன் 
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்
     பிரியமுற் றோதிடப் ...... பெறுவேனோ 
கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்
     கமைவபற் றாசையக் ...... கழலோர்முன் 
கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்
     கடவுள்செச் சேவல்கைக் ...... கொடியோனென் 
றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்
     கருணையிற் கோபுரத் ...... துறைவோனே 
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
     றயருமச் சேவகப் ...... பெருமாளே.
பருத்ததான கைக்கயிறாகிய பாசக்கயிறை விட்டு வீசும் அந்த யமனிடத்தே இந்தப் பயனுள்ள உயிர் போய் அகப்பட்டுக் கொள்ள ஆசை வைத்து, பூமியில் சுற்றத்தார் எனப்படும் பலரும் என் உடலைப் பற்றிக் கொண்டு பலமாகப் படர்ந்து எரியும் நெருப்பில் இந்த உடலைக் கிடத்திவிட்டு, தாங்கள் அலை வீசும் நீரில் குளித்துவிட்டுப் பிரிந்து போகும், பாவத்துக்கு இடம் தருகின்ற இந்தப் பிறவியை அடைந்தே, மிகுந்த நோய்களால் இளைத்துத் திரிகின்ற நாயினும் கீழான எனது குற்றங்களைப் பொறுத்தவனே என்றும், என் பிழைகளைக் களைந்து ஆண்டருள்வாய் என்றும், அன்பு கொண்டு நான் உன்னை ஓதிப் புகழும் பாக்கியத்தைப் பெறுவேனோ? கரிய உடலின் நிறம் கொண்ட திருமாலின் நல்ல தாமரையை ஒத்த கண்ணையே மலராகக் கொள்வதற்கு* ஆசை கொண்ட அந்தத் திருவடியை உடையவராம் சிவபிரானின் முன்பு கலைகளின் சாரமாம் பிரணவப் பொருளை எடுத்து உபதேசித்தவன், கிரெளஞ்ச மலையைத் தொளை செய்தவன், தகுதி வாய்ந்த கடவுள், சிவந்த சேவற் கொடியைக் கையிலே கொண்டவன் என்றெல்லாம் அருமையான நல்ல பாடல்களைத் தெரிந்து கூறும் அடியார்களின் கூட்டத்துக்காக திருவண்ணாமலையில் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, காட்டில் வசித்த மயில் போன்ற வள்ளியின் பெரு மார்பைத் தழுவ ஆசை கொண்டு, தளர்ச்சி அடைந்த அந்தப் பராக்ரமப் பெருமாளே. 
பாடல் 379 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .........
தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான
தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
     தழலமளி மீதெ றிக்கு ...... நிலவாலே 
தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த
     தறுகண்மத வேள்தொ டுத்த ...... கணையாலே 
வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று
     மருவுமென தாவி சற்று ...... மழியாதே 
மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
     மயிலின்மிசை யேறி நித்தம் ...... வரவேணும் 
கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி
     கலவிதொலை யாம றத்தி ...... மணவாளா 
கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
     கடியமல ராத ரித்த ...... கழல்வீரா 
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
     அருணைநகர் கோபு ரத்தி ...... லுறைவோனே 
அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
     அமரர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.
தக்க சமயம் பார்த்து ஒளிகொண்ட ஆகாயத்தில் நின்று, செம்மணி நிறத்தினதாய், விஷத்தைக் கலந்த நெருப்பை எனது படுக்கையின் மேல் வீசுகின்ற சந்திரனாலும், தலைவன் இடத்தினின்றும் நீங்காத என் மனதின் நிலைமையை அறியாது என்னை எதிர்த்த கொடியவனான மன்மதன் செலுத்திய மலர்ப் பாணங்களாலும், பல இனங்களைச் சேர்ந்த அறியாமை கொண்ட பெண்கள் தெரிந்து பேசும் வசை மொழிகளின் மிகுதியான வம்புப் பேச்சாலும், உன்னிடம் முழுமையும் ஈடுபட்டிருந்த என்னுடைய ஆவி கொஞ்சமும் அழியாமல், உச்சிக் கொண்டையும், நேர்த்தியான கடிவாள வாரும் கட்டியுள்ள, ஒய்யாரமாய் உலாவுகின்ற அழகிய மயிலின் மீது ஏறி நாள்தோறும் நீ வர வேண்டுகின்றேன். கருணை நீங்காத கண்களை உடையவள், சந்தனக் கலவை அழியாத மார்பகத்தை உடையவள், சேர்க்கை இன்பம் நீங்காத மறக்குலத்தவளாகிய வள்ளியின் கணவனே, விஷம் உடைய பாம்புகளின் வரிசையை ஜடா மகுடத்தின் மேல் வைத்த, சிறிது மாசும் இல்லாத குணத்தவரான, சிவபெருமான் போற்றி வணங்கிய திருப்பாதங்களை உடைய வீரனே, சிவந்த ரத்தினங்களில் அமைக்கப்பட்டது போன்ற ஒளி பொருந்திய சூரியன் வலம் வரும் வெற்றி விளங்குவதான திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே அசுரர்களுடைய குலத்தை வேருடன் அறுத்து, (யுகமுடிவில் வடதுருவத்தினின்று வரும் பெரும் நெருப்பாகிய) வடவாக்கினி போன்ற தீயை அவர்கள் மீது செலுத்தி தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.நிலவு, மன்மதன், மலர்க்கணை, ஊர்ப் பெண்களின் வசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 380 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ....
தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான
முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
     முழுமதிநி லாவி னுக்கும் ...... வசையாலும் 
மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு
     முதியமத ராஜ னுக்கு ...... மழியாதே 
புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த
     புதுமையினி லாறி ரட்டி ...... புயமீதே 
புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர
     பொருமயிலி லேறி நித்தம் ...... வரவேணும் 
எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு
     ளெழுதரிய கோபு ரத்தி ...... லுறைவோனே 
இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த
     இளமுலைவி டாத சித்ர ...... மணிமார்பா 
செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
     சிவனைமுத லோது வித்த ...... குருநாதா 
திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற
     சிறையடைய மீள விட்ட ...... பெருமாளே.
வடவாமுக அக்கினியில் முழுகி அங்கு பெற்ற சூட்டுடன் தோன்றும் பூரண சந்திரனுடைய ஒளிக் கிரணங்களுக்கும், நிந்தனைப் பேச்சு பேசும் மடமையுடைய மாதர்களுக்கும், இனிமை வாய்ந்த ஒப்பற்ற புல்லாங்குழலின் இசை ஒலிக்கும், பழையவனாகிய மன்மத ராஜனுடைய சேட்டைகளுக்கும் உட்பட்டு (நான்) அழிந்து போகாமல், புனுகு சட்டத்திலும், (மணம்) விளங்கும் கடம்பிலும், அழகிய குரா மலரிலும் வரிசையாக அமைந்த (மாலைகளின்) புதுமைத் தோற்றம் கொண்ட (உனது) பன்னிரு புயங்களின் மேல் தழுவிச் சேரும் வழியையே (நான்) நினைத்துள்ள உண்மையை உலகோர் தெரியும்படி, நீல நிறம் கொண்ட, அழகிய, சண்டை செய்ய வல்ல மயிலில் ஏறி நாள் தோறும் வர வேண்டும். மகர மீன்கள் துள்ளி எழும் தடாகங்கள் சுற்றிலும் உள்ள சோலைகள் சூழ்ந்த திருவண்ணாமலை என்னும் நகரில் எழுந்தருளிய, எழுதுவற்கு முடியாத அழகுடைய கோபுரத்தில் வீற்றிருப்பவனே, இடை துவள வேடப்பெண் வள்ளியின் ஆடை அசையவும், பருத்த இளமை வாய்ந்த அவளுடைய மார்பினை விடாத அழகிய மார்பனே, செழுமை கொண்ட பணாமுடி உடைய பாம்பு, நெருக்கமாக ஒழுகி விழும் கங்கை நீர் இவற்றைச் சடையில் தாங்கிய சிவபெருமானுக்கு முன்பு பிரணவத்தை உபதேசம் செய்த குரு நாதனே, பிரமன், திருமால் பின்னும் பல அருமையான தேவர்களும் அடைக்கப்பட்டிருந்த (சூரனின்) சிறையினின்றும், அவர்கள் மீளும்படி வெளிக்கொண்டு வந்த பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவி பாடியது போல் அமைந்தது.சந்திரன், மகளிரின் வசைச் சொற்கள், புல்லாங்குழல் இசை, மன்மதன் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 381 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ......
தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான
வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு
     மதுரமொழி யாழி சைக்கு ...... மிருநாலு 
வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு
     மடியருவ வேள்க ணைக்கு ...... மறவாடி 
நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு
     நிறையுமிகு காத லுற்ற ...... மயல்தீர 
நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர
     நிலவுமயி லேறி யுற்று ...... வரவேணும் 
மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து
     மவுலியற வாளி தொட்ட ...... அரிராமன் 
மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க
     மவுனமறை யோது வித்த ...... குருநாதா 
இடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு
     ளினியகுண கோபு ரத்தி ...... லுறைவோனே 
எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு
     மிடையுருவ வேலை விட்ட ...... பெருமாளே.
(யுக முடிவில் வட துருவத்திலிருந்து வெளிப்பட்டு வரும் நெருப்புக் கோளமான) வடவா முகாக்கினியின் உள்ளே நுழைந்து முழுகி (வானில்) எழுகின்ற சிறந்த சந்திரனுக்கும், மங்கையரின் இனிய மொழி போலச் சுவைக்கும் யாழின் இசை ஒலிக்கும், எட்டு மலைகளும், எட்டுத் திசைகளும் விடாமல் சுற்றி வளைத்து பேரொலி செய்யும் அலைகளை உடைய கடலுக்கும், இறந்து போய் உருவம் இழந்து அருவமாயுள்ள மன்மதனுடைய (மலர்ப்) பாணங்களுக்கும் மிகவும் வாடி, பொன் மயமான மேரு மலையைப் போன்றதும், புளகம் கொண்டதுமான மார்பை உடைய இந்தப் பெண் அருமை நிறைந்துள்ள மிக்க காதல் கொண்ட மயக்கம் தீர, (இவள் நிலைமையை) ஞாபகம் வைத்து, பீலிக் கண்களைக் கொண்ட, வெற்றி வாய்ந்த, பச்சை நிறம் கொண்ட, தோகையின் அழகு பொலியும் மயிலின் மேல் ஏறி அமர்ந்து நீ இவளிடம் வர வேண்டும். இதழ்கள் விரிந்த மலர் மாலைகள் சுற்றி அணிந்துள்ள இருபது தோள்களுடன், (ராவணனுடைய) பத்துத் தலைகளும் அற்று விழும்படியாக அம்பைச் செலுத்திய ஹரியாகிய ராமனின் மருகனே, பல தேவர்களுக்கும் அரியவராக நிற்கும் சிவபெருமான் கற்கும்படி மவுன ரகசிய வேதப்பொருளை உபதேசித்த குருநாதனே, வழியில் பாம்புகள் உலவுகின்ற பயங்கரமான திருவண்ணாமலை என்னும் சிறந்த நகரில் இனிமையான கிழக்கு கோபுரத்தில் உறைபவனே, ஏழு உலகளவும் அளாவி நிற்கும் (மேரு) மலையுடன் மாறுபட்டுப் பொருது*, பெரிய மலைகள் (கிரெளஞ்ச மலை, ஏழு குலகிரிகள்) எட்டையும் ஊடுருவும்படியாக வேலைச் செலுத்திய பெருமாளே. 
* முருகன் பாண்டியன் உக்கிரவழுதியாக மதுரையில் அவதரித்தபோது கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேருவிடம் பொற்குவியலைக் கேட்க, அது தராமையால் சினந்து செண்டால் மேருவின்மீது எறிந்து பொன் பெற்றார். இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் தலைவியின் செவிலித்தாய் பாடுவது போல அமைந்தது.நிலவொளி, யாழிசை, கடல் ஒலி, மன்மதன், மலர்க் கணை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 382 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .......
தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தந்ததான
ஆலவிழி நீலத் தாலதர பானத்
     தாலளக பாரக் ...... கொண்டலாலே 
ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்
     தாரநடை யால்நற் ...... கொங்கையாலே 
சாலமய லாகிக் காலதிரி சூலத்
     தாலிறுகு பாசத் ...... துன்பமூழ்கித் 
தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்
     சாவதன்மு னேவற் ...... கொண்டிடாயோ 
சோலைதரு கானிற் கோலமற மானைத்
     தோளிலுற வாகக் ...... கொண்டவாழ்வே 
சோதிமுரு காநித் தாபழய ஞானச்
     சோணகிரி வீதிக் ...... கந்தவேளே 
பாலகக லாபக் கோமளம யூரப்
     பாகவுமை பாகத் ...... தன்குமாரா 
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
     பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.
விஷம் போன்ற கண்களாகிய நீலோற்பல மலராலும், வாயிதழ் ஊறல் பருகுவதாலும், கூந்தல் பாரமாகிய மேகத்தாலும், முத்துப்போன்ற பற்களாலும், வில்லைப் போன்ற நெற்றியாலும், விரிந்து அசைந்த நடையாலும், நல்ல மார்பகங்களாலும், மிகவும் மோகம் கொண்டவனாகி, யமனுடைய முத்தலைச் சூலத்தைக் கண்டு, அவன் கட்டும் பாசக் கயிற்றினால் துன்பத்தில் ஆழ்ந்து, அந்த மனச் சோர்வில் உயிர் வீழுதல் அடைந்து, ஊழ்வினை என்னை விடாது தொடர்ந்து, இறப்பதற்கு முன்னே என்னை ஆட்கொள்ள மாட்டாயோ? சோலைகளைக் கொண்ட காட்டில் அழகிய வேடர் பெண்ணாகிய வள்ளியை தோளில் உறவு பூண்டு அணைந்து கொண்ட செல்வமே, ஜோதி வடிவமான முருகனே, என்றும் அழியாமல் இருப்பவனே, ஞான பூமியாகிய திருவண்ணாமலையின் தெருவில் வீற்றிருக்கும் கந்த வேளே, குழந்தையே, தோகை நிறைந்த அழகிய மயிலை நடத்துபவனே, உமை பங்கனான சிவ குமாரனே, பாதத் தாமரையில் ஞான மலரை* இட்டுப் பாடும் அடியார்களின் தோழனே, தம்பிரானே. 
* ஞான பூஜை செய்வார்க்கு உரிய எட்டு புஷ்பங்கள்:மனத்தூய்மை, கொல்லாமை, ஐம்புலன் அடக்கம், பொறை, அருள், வாய்மை, தவம், அன்பு.
பாடல் 383 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .......
தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தந்ததான
பேதகவி ரோதத் தோதகவி நோதப்
     பேதையர்கு லாவைக் ...... கண்டுமாலின் 
பேதைமையு றாமற் றேதமக லாமற்
     பேதவுடல் பேணித் ...... தென்படாதே 
சாதகவி காரச் சாதலவை போகத்
     தாழ்விலுயி ராகச் ...... சிந்தையாலுன் 
தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
     சாரல்மற மானைச் ...... சிந்தியேனோ 
போதகம யூரப் போதகக டாமற்
     போதருணை வீதிக் ...... கந்தவேளே 
போதகக லாபக் கோதைமுது வானிற்
     போனசிறை மீளச் ...... சென்றவேலா 
பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்
     பாருலகு வாழக் ...... கண்டகோவே 
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
     பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.
மனம் வேறுபட்ட, பகைமை வஞ்சகம் இவைகளைக் கொண்ட விசித்திரமான மங்கையர்கள் மகிழ்ச்சியுடன் உறவாடுதலைக் கண்டு மோகித்து, அறியாமை உற்று, அதனால் குற்றம் குறைகள் என்னைவிட்டு நீங்காமல், மாறுதலை அடையும் உடலை விரும்பிப் பாதுகாத்து வெளியே தென்படாமல், பிறப்பும், (பாலன், குமரன், கிழவன் என்ற) மாற்றங்களும், இறப்பும் ஆகிய இவையாவும் தொலைய, குறைவில்லாத ஒன்றாக என் உயிர் விளங்க, மனத்தால் உனது புகழ் பெற்ற வேலாயுதத்தை, சேவல் கொடியை, தினைப்புனச் சாரலில் இருந்த வேடர்களின் மான் போன்ற வள்ளியை தியானிக்கமாட்டேனோ? யானை*, மயில் இவற்றின் மீது மலர் ஆசனம் இட்ட நடு இருப்பிடத்தில் எழுந்தருளி உலா வருகின்ற திருஅண்ணாமலை வீதியில் உள்ள கந்தப் பெருமாளே, யானையாகிய ஐராவதம் வளர்த்த மயில் போன்ற தேவயானை வாழும் பழைய விண்ணுலகத்தார் சென்றிருந்த (சூரனின்) சிறையினின்றும் அவர்கள் மீண்டு வருவதற்காக (சூரனுடன்) போருக்குச் சென்ற வேலனே, பெரிய பாபச் செயல்களைச் செய்தவனும், காலாட்படைகள் உடையவனுமான சூரன் முதலிய அரக்கர்கள் அனைவரும் விழுந்து மடிய, மண்ணுலகும் விண்ணுலகும் வாழும் பொருட்டு கருணை புரிந்த தலைவனே, உன் திருவடி மலர்களை நினைந்து, ஞான பூஜை செய்து பாடுகின்ற அடியார்களின் தோழனான தனிப் பெரும் தலைவனே. 
* முருகன் மயில் வாகனன் ஆகினும், அருள் செய்வதற்கும் போர் புரிவதற்குப் புறப்படும்போதும் பிணிமுகம் என்ற யானை வாகனத்தில் செல்வான் என்பர்.
பாடல் 384 - திருவருணை 
ராகம் - செஞ்சுருட்டி ; தாளம் - அங்தாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான
அமுத மூறுசோ லாகிய தோகையர்
     பொருளு ளாரையெ னாணையு னாணையெ
          னருகு வீடிது தானதில் வாருமெ ...... னுரைகூறும் 
அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
     தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
          அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி ...... னருள்தாராய் 
குமரி காளிவ ராகிம கேசுரி
     கவுரி மோடிசு ராரிநி ராபரி
          கொடிய சூலிசு டாரணி யாமளி ...... மகமாயி 
குறளு ரூபமு ராரிச கோதரி
     யுலக தாரிஉதாரிப ராபரி
          குருப ராரிவி காரிந மோகரி ...... அபிராமி 
சமர நீலிபு ராரித னாயகி
     மலைகு மாரிக பாலிந னாரணி
          சலில மாரிசி வாயம னோகரி ...... பரையோகி 
சவுரி வீரிமு நீர்விட போஜனி
     திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
          சகல வேதமு மாயின தாயுமை ...... யருள்பாலா 
திமித மாடுசு ராரிநி சாசரர்
     முடிக டோறுக டாவியி டேயொரு
          சிலப சாசுகு ணாலிநி ணாமுண ...... விடும்வேலா 
திருவு லாவுசொ ணேசர ணாமலை
     முகிலு லாவுவி மானந வோநிலை
          சிகர மீதுகு லாவியு லாவிய ...... பெருமாளே.
அமுதம் ஊறி வருவது போல் இனிக்கும் சொற்களைக் கொண்ட மயில் போன்ற பெண்கள் பொருள் உள்ள செல்வர்களை "என் மேல் ஆணை உன் மேல் ஆணை என் வீடு சமீபத்தில் தான் இருக்கிறது, அங்கே வாரும்" என்று பேசுகின்ற மூட விலைமாதர், குதர்க்கம் பேசும் கேடுறுவோர், தெருவில் சரசமாக குலவி உலவுபவர்கள், அத்தகையோரது மாயை என் மீது தாக்காமலும், நான் கெடாமலும் இருக்க உனது திருவருளைத் தந்து அருளுக. குமரி, காளி, வராகி, மகேஸ்வரி, கெளரி, மோடி, முதலிய பெயர்களை உடையவள், தேவர்களுக்குக் கண் போன்றவள், பொய்யிலி, உக்ரமான சூலத்தை ஏந்தியவள், ஒளி மயத்தவள், சியாமளப் பச்சை நிறம் உடையவள், மகமாயி, வாமன உருவம் கொண்ட திருமாலின் சகோதரி, உலகத்தைத் தரித்துப் புரப்பவள், தயாள குணம் உடையவள், முதன்மை பூண்டவள், குருவாகிய சிவனுக்குக் கண் போன்றவள், வேறுபாடுகளைப் பூண்டவள், வணங்கப்படுபவள், அழகுள்ளவள், போர் வல்ல துர்க்கை, திரிபுரம் எரித்த சிவபெருமானின் பத்தினி, இமயவன் புதல்வி, கபாலம் ஏந்தியவள், நல்ல குணம் வாய்ந்த நாராயணி, நீர் பொழியும் மேகம் போன்றவள், சிவ சம்பந்தப்பட்டு விரும்பத்தக்கவள், பரா சக்தி, யோகி, வலிமை உள்ளவள், வீரம் உள்ளவள், பாற்கடலில் எழுந்த ஆலஹால விஷத்தை உண்டவள், சக்கரம் ஏந்திய திருக்கரத்தை உடையவள், இலக்குமி, ஒப்பற்ற எல்லா வேதமுமாய் நிறைந்த தாய் உமா தேவி (ஆகிய பார்வதி) ஈன்றருளிய பாலனே, பேரொலி செய்து போராடிய தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களுடைய தலைகளில் எல்லாம் ஆயுதங்கள் படும்படி செலுத்தி வைத்து, அங்கு கூடிய சில பேய்கள் குணலை என்ற ஆரவாரத்துடன் கூத்தாடி மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தியவனே, லக்ஷ்மீகரம் நிறைந்த சோணாசலேஸ்வரது திருவண்ணாமலையில் மேகம் உலவும் கோபுரத்தின் ஒன்பது நிலைகளைக் கடந்து கோபுர உச்சியில் விளக்கமுற்று உலாவிய பெருமாளே. 
பாடல் 385 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ........
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான
உருகு மாமெழு காகவு மேமயல்
     பெருகு மாசையு ளாகிய பேர்வரி
          லுரிய மேடையில் வார்குழல் நீவிய ...... வொளிமானார் 
உடைகொள் மேகலை யால்முலை மூடியும்
     நெகிழ நாடிய தோதக மாடியு
          முவமை மாமயில் போல்நிற மேனிய ...... ருரையாடுங் 
கரவ தாமன மாதர்கள் நீள்வலை
     கலக வாரியில் வீழடி யேநெறி
          கருதொ ணாவதி பாதக னேசம ...... தறியாத 
கசட மூடனை யாளவு மேயருள்
     கருணை வாரிதி யேயிரு நாயகி
          கணவ னேயுன தாளிணை மாமலர் ...... தருவாயே 
சுருதி மாமொழி வேதியன் வானவர்
     பரவு கேசனை யாயுத பாணிநல்
          துளப மாலையை மார்பணி மாயவன் ...... மருகோனே 
தொலைவி லாவசு ரேசர்க ளானவர்
     துகள தாகவு மேயெதி ராடிடு
          சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் ...... வருவோனே 
அருணர் கோடியி னாரொளி வீசிய
     தருண வாண்முக மேனிய னேயர
          னணையு நாயகி பாலக னேநிறை ...... கலையோனே 
அணிபொன் மேருயர் கோபுர மாமதி
     லதிரு மாரண வாரண வீதியு
          ளருணை மாநகர் மேவியு லாவிய ...... பெருமாளே.
உருகி ஒழுகும் பெரிய மெழுகு போல மோகம் அதிகமாகி காமத்தில் வசப்பட்ட பேர்வழிகள் (பொது மகளிர் இல்லம்) வந்தால், நல்ல மெத்தை மேடையில் இருந்து தமது நீண்ட கூந்தலை விரித்து வேகமாக வாரிக் கொள்ளும் அழகிய விலைமாதர்கள், உடையாகக் கொண்டுள்ள மேல் ஆடையால் மார்பகங்களை மூடியும், அந்த ஆடை நெகிழும்படியாக வேண்டுமென்றே வஞ்சனையான ஆடல்களை ஆடியும் உவமை கூறப்படும் சிறந்த மயில் போன்ற நிறம் கொண்ட உடலை உடையவர்களும், பேசுவதிலேயே மறைமுகமாக கருத்தை அமைக்கும் மனத்தை உடையவர்களுமான விலைமாதர்களின் பெரிய வலையாகிய சச்சரவுக் கடலில் வீழ்கின்ற அடியேனாகிய நான் நன்னெறியைக் கருதமாட்டாத அதி பாதகச் செயல் புரிபவன். அன்பு என்பதையே அறியாத குற்றமுள்ள முட்டாளாகிய என்னையும் ஆட்கொண்டு அருளிய கருணைக் கடலே, வள்ளி, தேவயானை என்ற இரண்டு நாயகிகளின் கணவனே, உனது இரு தாமரைத் திருவடிகளைத் தந்து அருளுக. வேதங்களின் சிறந்த மொழிகளை ஓதும் அந்தணனாகிய பிரமன், தேவர்கள் ஆகியோர் போற்றும் கேசவன், ஐந்து வகையான ஆயுதங்களை* ஏந்தியவன், நல்ல துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள மாயவனாகிய திருமாலின் மருகனே, அழிவில்லாததாக தம்மை எண்ணிக்கொண்ட அசுரர்கள் தலைவர்களான சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகியவர் பொடிபடும்படி எதிர்த்துப் போர் புரிந்த ஒளி வீசும் வேலாயுதனே, ஏழு உலகங்களையும் (மயில் மேல் ஏறி) வலம் வருபவனே, கோடிக் கணக்கான சூரியர்களின் சுடர் வீசும் இளமை பொருந்திய ஒளி விளங்கும் முகங்கள் கொண்ட மேனியனே, சிவபெருமான் அணையும் உமா தேவியின் குழந்தையே, நிறைந்த கலைப் புலவனே, அழகிய பொன் மலை போல் உயர்ந்த கோபுரம், பெரிய மதில், ஒலி பெருகும் வேதங்கள் முழங்கும் வீதி, யானைகள் செல்லும் தெருக்கள் இவைகள் உள்ள திருவண்ணாமலையாகிய சிறந்த நகரில் விரும்பி உலவும் பெருமாளே. 
* திருமாலின் பஞ்ச ஆயுதங்கள்: சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், வாள் (கட்கம்) ஆகியவை.
பாடல் 386 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ..........
தனதன தனன தனந்த தானன
     தனதன தனன தனந்த தானன
          தனதன தனன தனந்த தானன ...... தனதான
கரியுரி அரவ மணிந்த மேனியர்
     கலைமதி சலமு நிறைந்த வேணியர்
          கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் ...... கஞ்சமாதின் 
கனமுலை பருகி வளர்ந்த காமனை
     முனிபவர் கயிலை யமர்ந்த காரணர்
          கதிர்விரி மணிபொ னிறைந்த தோளினர் ...... கண்டகாள 
விரிவென வுனது ளுகந்த வேலென
     மிகவிரு குழையு டர்ந்து வேளினை
          யனையவ ருயிரை விழுங்கி மேலும்வெ ...... குண்டுநாடும் 
வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற
     விதமிகு கலவி பொருந்தி மேனியு
          மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ ...... ழிந்திடாதோ 
எரிசொரி விழியு மிரண்டு வாளெயி
     றிருபிறை சயில மிரண்டு தோள்முகி
          லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ ...... டிந்துவீழ்வ 
தெனவிழ முதுகு பிளந்து காளிக
     ளிடுபலி யெனவு நடந்து தாள்தொழ
          எதிர்பொரு துதிர முகந்த வேகமு ...... கைந்தவேலா 
அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலை
     அருணையி லறவு முயர்ந்த கோபுர
          மதினுறை குமர அநந்த வேதமொ ...... ழிந்துவாழும் 
அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள்
     அடவியி லரிவை குயங்கள் தோய்புய
          அரியர பிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே.
யானையின் உரித்த தோலையும் பாம்பையும் அணிந்த உடலைக் கொண்டவர், ஒளிகள் கொண்ட திங்களும், கங்கையும் நிறைந்த சடையினர், நெருப்பையும், மானையும், பரசையும் ஏந்திய கையினர், தாமரையில் வாழும் லக்ஷ்மியின் பருத்த மார்பகங்களின் பாலைப் பருகி வளர்ந்த மன்மதனைக்* கோபித்து அழித்தவர், கயிலாயத்தில் அமர்ந்துள்ள மூலப் பொருளானவர், ஒளி பரப்பும் ரத்தின மணிகளும் பொன்னும் நிறைந்த தோளை உடையவராகிய இத்தகைய சிவபெருமானின் கழுத்தில் உள்ள ஆலகால நஞ்சின் விரிவோ (இந்த விலைமாதரின் கண்கள்) என்று எண்ணும்படியும், (கூர்மையில்) உன்னுடைய மனத்துக்கு விருப்பமான வேலாயுதமோ இது என்று எண்ணும் படியும், மிகவும் இரண்டு காதணி குண்டலங்களையும் நெருங்கியும், மன்மதனை ஒத்த ஆடவர்களின் உயிரையே விழுங்கியும், (இத்தனையும் செய்து) பின்னும் கோபித்து நாடுகின்ற செயலினைச் செய்யும் கண்களை உடைய விலைமாதர்களின் மார்போடு மார்பாக அணைந்தும், பலவிதமான காம லீலைகளில் பொருந்தி உடலும் அழகை இழக்கவும், நினைவும் அழிந்து இறந்து போகும் விதி என்னை விட்டு நீங்காதோ? நெருப்பை வீசும் கண்கள் இரண்டுடன், இரண்டு பிறை போன்ற ஒளி வீசும் பற்களுடனும், மலை போன்ற இரு தோள்களுடனும், கரிய மேகம் போல் வரும் அசுரர்களுடைய தலைகள் மேரு மலையே இடிந்து வீழ்வது போல் கீழே விழுந்து முதுகு பிளவுபட, காளிகள் (அப் பிணங்கள்) தமக்கு இட்ட பலி உணவு என நடந்து உனது திருவடிகளைத் தொழ, எதிர்த்துப் போர் செய்து, அசுரர்களின் ரத்தத்தை விரும்பிய வேகத்துடன் சென்ற வேலை உடையவனே, சிங்கம், யானை, புலி இவைகள் நெருங்கி வாழும் ஒளி வீசும் மலையாகிய திருவண்ணாமலையில் மிகவும் உயர்ந்த கோபுரத்தில் வீற்றிருக்கும் குமரனே, அளவில்லாத வேதங்கள் போற்றி வாழும் (உன் இயல்பான) ஆறு முக வடிவை விட்டு விட்டு, வேடர்கள் வாழும் காட்டில் இருந்த பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்களைச் சேரும் புயங்களை உடையவனே, திருமால், சிவன், பிரமன், இந்திரன் முதலான தேவர்கள் ஆகியவரின் தம்பிரானே. 
* மன்மதன் திருமாலுக்கும், லக்ஷ்மிக்கும் பிறந்த மகன்.
பாடல் 387 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ..........
தனதன தனதன தந்த தானன
     தனதன தனதன தந்த தானன
          தனதன தனதன தந்த தானன ...... தநததான
கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட
     வடதம னியகிரி கம்ப மாய்நட
          கணபண விபரித கந்த காளபு ...... யங்கராஜன் 
கயிறென அமரர நந்த கோடியு
     முறைமுறை யமுதுக டைந்த நாளொரு
          கதியற வுலகைவி ழுங்கு மேகவொ ...... ழுங்குபோல 
வினைமத கரிகளு மெண்டி சாமுக
     கிரிகளு முறுகிட அண்ட கோளகை
          வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு ...... நஞ்சுபோல 
விடுகுழை யளவும ளந்து காமுக
     ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக
          விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ ...... ழிந்திடாதோ 
முனைபெற வளையஅ ணைந்த மோகர
     நிசிசரர் கடகமு றிந்து தூளெழ
          முகிலென வுருவமி ருண்ட தாருக ...... னஞ்சமீன 
முழுகிய திமிரத ரங்க சாகர
     முறையிட இமையவர் தங்க ளூர்புக
          முதுகிரி யுருவமு னிந்த சேவக ...... செம்பொன்மேரு 
அனையன கனவித சண்ட கோபுர
     அருணையி லுறையும ருந்து ணாமுலை
          அபிநவ வனிதைத ருங்கு மாரநெ ...... ருங்குமால்கொண் 
டடவியில் வடிவுக ரந்து போயொரு
     குறமகள் பிறகுதி ரிந்த காமுக
          அரியர பிரமபு ரந்த ராதியர் ...... தம்பிரானே.
ஒலிக்கின்ற பாற்கடலின் உட்புறம் எல்லாம் கலக்கிக் கொண்டு வெளிப்பட, வடக்கே உள்ள பொன் மலையாகிய மேருவை மத்தாக நட்டு, விபா£தமான நாற்றமுள்ள விஷத்தைக் கொண்ட நாகராஜனாகிய வாசுகியை கடையும் கயிறாகக் கொண்டு, பல கோடி தேவர்களும் வரிசை வரிசையாக அமுதம் கடைந்த அந்த நாளில், உய்யும் வழி ஒன்றும் இல்லாத வகையில் உலகையே விழுங்க வந்த கரிய மேகத்தின் வரிசை போல எழுந்து, செயலாற்றும் மத யானைகளும், எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும் சூடேறி வெந்து போக, அண்ட உருண்டைகள் யாவும் வெடிபட்டுப் போக, யாவரையும் மேலிட்டு வேல் போலப் பரந்து வரும் ஆலகால விஷம் போல, தொங்கும் குண்டலம் உள்ள செவிவரையிலும் பாய்ந்து காமம் கொண்டவர்களுடைய உயிரைக் கவர்வனவும், ஐந்து பாதகங்களுக்கும்* இடம் தருவனவுமான கண்கள் என்னும் வலையைக் கொண்ட விலைமாதர்கள் மீது காதல் மிகுவது என்னை விட்டு விலகாதோ? போர் முனையில் இடம் பெற்று வளைவாகச் சூழ்ந்து போர் ஆரவாரம் செய்யும் அசுரர்களின் சேனை முறிபட்டுப் பொடியாக, மேகம் போலக் கறுத்த உருவம் கொண்ட தாரகாசுரன் பயப்படும்படி, மீன்கள் வசிக்கின்றதும், அலை வீசுவதுமான கடல் ஓலம் இட, தேவர்கள் தங்கள் ஊர் போய்ச் சேர, பழைய (கிரவுஞ்ச) மலையில் வேல் ஊடுருவிச் செல்லும்படியாகக் கோபித்த வல்லவனே, செம் பொன் மேருமலைக்குச் சமமான பெருமை கொண்ட வலிய கோபுரங்களை உடைய திருவண்ணாமலையில் வீற்றிருக்கும், பிடித்துப் பருகுதல் இல்லாத உண்ணாமுலை அம்மை, புதியவளாகிய தேவி பார்வதி ஈன்ற குமரனே, அளவு கடந்த ஆசை கொண்டு காட்டில் உனது உண்மை வடிவத்தை மறைத்துச் சென்று, ஒப்பற்ற குறப் பெண்ணான வள்ளியின் பின்பே திரிந்த காமுகனே, திருமால், ருத்திரன், பிரமன், இந்திரன் ஆகிய தேவர்களுக்குத் தலைவனே. 
விலைமாதரின் விழிகளுக்கு ஆலகால விஷத்தை உவமை சொல்லவந்த கவிஞர், முதல் ஒன்பது அடிகளில் பாற்கடலைக் கடைந்த வரலாற்றைக் கூறுகிறார்.* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
பாடல் 388 - திருவருணை 
ராகம் - குந்தலவராளி; தாளம் - மிஸ்ர சாபு 
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான
இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
     புவிதனி லினமொன் ...... றிடுமாதும் 
எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
     மிடர்கொடு நடலம் ...... பலகூறக் 
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
     டுயிரினை நமனுங் ...... கருதாமுன் 
கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
     கழலிணை கருதும் ...... படிபாராய் 
திருமரு வியதிண் புயனயன் விரியெண்
     டிசைகிடு கிடவந் ...... திடுசூரன் 
திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
     சிடவலி யொடுகன் ...... றிடும்வேலா 
அருமறை யவரந் தரமுறை பவரன்
     புடையவ ருயஅன் ...... றறமேவும் 
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
     கருணையி லுறையும் ...... பெருமாளே.
சூரியனும், சந்திரனும் தெரியும்படி விளங்கும் இப்பூமியில் சுற்றம் என்று பொருந்திவரும் மனைவியும் அழகிய மக்களும் உடன் நின்று அழுது, உள்ளம் உருகும்படியான வருத்தத்துடன் துன்ப மொழிகள் பல சொல்ல, கறுத்த உருவமும் நெருப்பு வீசும் கண்களுடனும் உள்ள யமனும் என் உயிரைக் கவர்ந்து செல்லக் கருதி வருவதற்கு முன்பாக, யான்கற்ற பல கலைகளும், என் துயரங்களும் ஒருங்கே நீங்கிட உன் திருவடிகளையே யான் தியானிக்கும்படி கண்பார்த்தருள்வாயாக. திருமகளை மார்பில் வைத்த திண்ணிய தோளினன் திருமாலும், பிரமனும், பரந்த எண்திசையிலுள்ள யாவரும் நடுநடுங்க வந்த சூரனுடைய வலிய புயங்கள் அறுபட்டு விழ, அலை வீசும் கடல் பயப்படுமாறு வலிமையோடு கோபித்த வேலனே, அரிய வேதங்களில் வல்லவரும், வானில் உறையும் தேவர்களும், உன்னிடம் அன்பு மிகுந்த அடியார்களும் பிழைக்கும் வண்ணம், அன்று முப்பத்திரண்டு* அறங்களையும் விரும்பிச் செய்த தேவி பார்வதியை தம் ஒரு பாகத்தில் இடப்பக்கமாகக் கொண்டவரான சிவபிரான் தங்கும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
பாடல் 389 - திருவருணை 
ராகம் - முகாரி; தாளம் - மிஸ்ர சாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான
விரகொடு வளைசங் கடமது தருவெம்
     பிணிகொடு விழிவெங் ...... கனல்போல 
வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்
     றெனவிதி வழிவந் ...... திடுபோதிற் 
கரவட மதுபொங் கிடுமன மொடுமங்
     கையருற வினர்கண் ...... புனல்பாயுங் 
கலகமும் வருமுன் குலவினை களையுங்
     கழல்தொழு மியல்தந் ...... தருள்வாயே 
பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்
     படவர வணைகண் ...... டுயில்மாலம் 
பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்
     பயமற விடமுண் ...... டெருதேறி 
அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்
     கையுமுற அனலங் ...... கையில்மேவ 
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
     கருணையில் மருவும் ...... பெருமாளே.
சாமர்த்தியத்துடன் சூழ்ந்து துன்பத்தைத் தருகின்ற கொடிய பாசக் கயிற்றைக் கொண்டு, கண்கள் தீய நெருப்புப்போல கோபத்துடன் யமன் வந்து வாயிலில் நின்று, உயிரைக் கொள்ள வேண்டிய முறை நாள் இது என்று தெரிந்து, விதியின் ஏற்பாட்டின்படி நெருங்குகின்ற அச்சமயத்தில், வஞ்சகம் மிகுந்த மனத்துடன் மாதர்கள், சுற்றத்தார்கள் ஆகியோரின் கண்களில் நீர் பாய்கின்ற குழப்பம் வருவதற்கு முன்பாக, முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும் திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக. தன்னைத் துதிப்பவர்களுடைய மனத்தில் உறைபவரும், நஞ்சைக் கக்கும் பல பணாமுடிகளை உடைய பாம்பு (ஆதிசேஷன்) என்ற படுக்கையில் உறங்குபவரும் ஆகிய திருமால், அழகிய பழைய வேதத்தை ஓதுபவனும், தாமரையில் வீற்றிருப்பவனும் ஆகிய பிரமன், அங்கிருந்த தேவர்கள் அனைவரின் பயம் நீங்க ஆலகால விஷத்தை உட்கொண்டு, (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறி, பாம்புடன், சந்திரனையும் தரித்த ஜடையின் மேல் கங்கையையும் பொருத்தி, நெருப்பு அழகிய கையில் விளங்க, பார்வதி தேவியை தம் உடலின் இடது பாகத்தில் அமைத்துக் கொண்டவராகிய சிவ பெருமான் (ஆகிய மும்மூர்த்திகளும்) வீற்றிருக்கும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 
பாடல் 390 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .......
தனதன தனன தனதன தனன
     தனதன தனதன ...... தந்ததான
இடமடு சுறவை முடுகிய மகர
     மெறிகட லிடையெழு ...... திங்களாலே 
இருவினை மகளிர் மருவிய தெருவி
     லெரியென வருசிறு ...... தென்றலாலே 
தடநடு வுடைய கடிபடு கொடிய
     சரம்விடு தறுகண ...... நங்கனாலே 
சரிவளை கழல மயல்கொளு மரிவை
     தனிமல ரணையின ...... லங்கலாமோ 
வடகுல சயில நெடுவுட லசுரர்
     மணிமுடி சிதறஎ ...... றிந்தவேலா 
மறமக ளமுத புளகித களப
     வளரிள முலையைம ...... ணந்தமார்பா 
அடலணி விகட மரகத மயிலி
     லழகுட னருணையி ...... னின்றகோவே 
அருமறை விததி முறைமுறை பகரு
     மரியர பிரமர்கள் ...... தம்பிரானே.
இருக்கும் இடத்திலிருந்தே வருத்தும் சுறா மீனை விரட்டி அடிக்கும் மகர மீன்கள் வாழ்வதும் அலைகளை வீசுவதுமான கடலில் எழுகின்ற சந்திரனாலும், நல் வினை தீ வினை இரண்டுக்கும் காரணமான மாதர்கள் வாழும் தெருவில் நெருப்பைப் போல வீசுகின்ற சிறிய தென்றல் காற்றினாலும், தடாகத்தின் நடுவே உள்ள நறு மணம் வீசுகின்ற கொடியதான தாமரை, நீலோத்பலம் ஆகிய மலர்ப் பாணங்களைச் செலுத்தும் இரக்கமற்ற மன்மதனாலும், சரிகின்ற வளையல்கள் கழன்று விழுமாறு காம மோகம் கொள்ளும் இந்தப் பெண் தனியாக மலர்ப் படுக்கையில் நொந்து போவது தகுமோ? வடக்கே உள்ள சிறந்த மேரு மலை போன்ற பெரிய உடலைக் கொண்ட அசுரர்களின் மணி முடிகள் சிதறிப் போகும்படி செலுத்திய வேலனே, வேடர் மகளான வள்ளியை, அமுதமும் புளகிதம் கொண்ட சந்தனக் கலவை பூசப்பட்ட வளர்ந்த இளமை வாய்ந்த மார்பினளான வள்ளியை, மணம் கொண்ட திருமார்பனே, வலிமையும், அலங்காரமும், வசீகரமும், பச்சை நிறமும் உள்ள மயிலில் அழகுடன் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அரசே, அரிய வேதங்களின் கூட்டம் முறைப்படி ஓதும் திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவர்க்கும் தம்பிரானே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில், முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், தென்றல், மன்மதன், மலர்க் கணைகள், இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 391 - திருவருணை 
ராகம் - ......; தாளம் - ......
தனதன தனனா தனதன தனனா
     தனதன தனனா ...... தனதான
கெஜநடை மடவார் வசமதி லுருகா
     கிலெசம துறுபாழ் ...... வினையாலே 
கெதிபெற நினையா துதிதனை யறியா
     கெடுசுக மதிலாழ் ...... மதியாலே 
தசையது மருவீ வசையுட லுடனே
     தரணியில் மிகவே ...... யுலைவேனோ 
சததள மலர்வார் புணைநின கழலார்
     தருநிழல் புகவே ...... தருவாயே 
திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்
     திருநெடு கருமால் ...... மருகோனே 
திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்
     திரிபுரை யருள்சீர் ...... முருகோனே 
நிசிசர ருறைமா கிரியிரு பிளவா
     நிறையயில் முடுகா ...... விடுவோனே 
நிலமிசை புகழார் தலமெனு மருணா
     நெடுமதில் வடசார் ...... பெருமாளே.
(பெண்) யானையின் நடையைக் கொண்ட பொது மகளிருக்கு மனம் வசப்பட்டு, வருத்தம் தருகின்ற பாழான வினைப் பயனால், நல்ல கதியை அடைவதற்கு நினையாமலும், உன்னைத் துதிப்பதை அறியாமலும், அழிவைத் தரும் சிற்றின்பத்தில் ஆழ்ந்து போகின்ற புத்தியினால், சதையைக் கொண்டதும், பழிப்புக்கு இடமானதுமான உடலுடன் பூமியில் மிகவும் அலைவேனோ? நூறு இதழ்களை உடைய தாமரை போன்றதும், பிறவிக் கடலைத் தாண்டத் தெப்பம் போன்றதுமான உனது திருவடி நிரம்பத் தருகின்ற நிழலில் வந்தடைய அருள்வாயாக. நான்முகனான பிரமனை பெரிய சிறைக்குள் புக வைத்தவனே, அழகிய பெரிய கரிய நிறம் கொண்ட திருமாலின் மருகனே, திரிபுரங்களையும் நெருப்பிட்டு அழித்த சிவபெருமானுடைய இடது பாகத்தில் மகிழ்ந்திருக்கும் திரிபுரையாகிய பார்வதி ஈன்ற சிறப்பான குழந்தையே, அசுரர்கள் இருந்த பெரிய கிரெளஞ்ச மலை இரண்டு பிளவாகும்படி வீரம் நிறைந்த வேலை வேகத்துடன் செலுத்தியவனே, பூமியில் புகழ் நிறைந்த தலம் என்னும் பேர் பெற்ற திருவண்ணாமலையில் பெரிய மதிலின் வடப் புறத்தே வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 392 - திருவருணை 
ராகம் - .....; தாளம் -
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
     தனத்தா தனத்தத் ...... தனதான
அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
     கடுத்தாசை பற்றித் ...... தளராதே 
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
     டறப்பே தகப்பட் ...... டழியாதே 
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
     கலிச்சா கரத்திற் ...... பிறவாதே 
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
     கலைப்போ தகத்தைப் ...... புகல்வாயே 
ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்
     டுரைப்பார்கள் சித்தத் ...... துறைவோனே 
உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
     டொளித்தோடும் வெற்றிக் ...... குமரேசா 
செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
     செருச்சூர் மரிக்கப் ...... பொரும்வேலா 
திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்
     றிருக்கோ புரத்திற் ...... பெருமாளே.
அருமை வாய்ந்த (உடல்) நலத்தைக் கெடுப்பவர்களான விலைமாதர்களுடைய மனத்துக்கு இயைந்த ஆசை கொண்டு சோர்வு அடையாமல், வலிமை வாய்ந்த யமனுக்கு என் அந்திம காலத்தில் (உயிரைக் கொள்வதற்கு வேண்டிய) உரிமையை மிதித்திட்டு, மிகவும் மனம் வேறு பாடு அடைந்து நான் அழியாமலும், பிறவிக்கு காரணமான செய்கையோரது நட்பை மிகக் கொண்டாடிக் கைக்கொண்டு, துன்பக் கடலில் நான் பிறவாமலும், நீ என் மீது அன்பு வைத்து உனது திருவடியைத் தந்து, கலை ஞானத்தை எனக்கு உபதேசிப்பாயாக. ஒரு முறை உன்னைத் தியானித்து (உனது) இரண்டு திருவடிகளையும் வெகுவாகப் புகழ்ந்து உரைப்பவர்களுடைய மனதில் உறைபவனே, வலிமையான தோளில் தேன்போல் இனிய குறப்பெண்ணான வள்ளியை வைத்து, மறைந்து ஓடின வெற்றி பொருந்திய குமரேசனே, ஆணவம் கொண்டு, கர்வம் மிகுந்து, தெய்வத் தன்மை உடைய தேவர்களை ஒடுக்கிய போருக்கு வந்த அந்தச் சூரன் இறக்க சண்டை செய்த வேலனே, நிலை பெற்ற பூமியில் திரண்ட திரு அண்ணாமலையில் அழகிய கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 393 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனனா தனனத் தனனா தனனத்
     தனனதா தனனத் ...... தனதான
அருமா மதனைப் பிரியா தசரக்
     கயலார் நயனக் ...... கொடியார்தம் 
அழகார் புளகப் புழுகார் சயிலத்
     தணையா வலிகெட் ...... டுடல்தாழ 
இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்
     றிளையா வுளமுக் ...... குயிர்சோர 
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
     கிருபா தமெனக் ...... கருள்வாயே 
ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்
     டுரமோ டெறிபொற் ...... கதிர்வேலா 
உறைமா னடவிக் குறமா மகளுக்
     குருகா றிருபொற் ...... புயவீரா 
திருமால் கமலப் பிரமா விழியிற்
     றெரியா வரனுக் ...... கரியோனே 
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்
     றிருவீ தியினிற் ...... பெருமாளே.
அரியவனும் அழகனுமான மன்மதனை விட்டு அகலாத பாணங்கள் போன்றதும், கயல் மீன்போன்றதும் ஆகிய கண்களை உடைய பொல்லாதவர்களான விலைமாதர்களின் அழகிய, புளகாங்கிதம் கொண்ட, புனுகுசட்ட வாசனை பூண்ட, மலைகள் போன்ற மார்பகங்களை அணைந்து, வலிமை இழந்து உடல் நலிய, இருமலில் வீழும் தன்மை வந்து சேர, பேச்சு அற்று, உணர்வும் போய், இளைத்து, உள்ளம் மெலிந்து, உயிர் சோர்வுற்று, நெருப்பு கொளுத்தும் (கும்பிபாக)* நரகத்தில் புகாத வண்ணம், உனது இரு திருவடிகளை எனக்குத் தந்து அருளுக. ஒப்பற்ற பெரிய கிரெளஞ்ச மலையை சிறு தூளாகும்படிச் செய்து, பலத்துடன் செலுத்திய, அழகிய ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே, மான்கள் வாழும் காட்டில் பெருமை வாய்ந்த குற மகளான வள்ளிக்கு உருகின பன்னிரண்டு திரண்ட தோள்களை உடைய வீரனே, திருமால், தாமரையில் வீற்றீருக்கும் பிரமன் ஆகிய இருவருக்கும் காணப் பெறாத சிவனுக்கும் அருமை வாய்ந்தவனே, செழுமை வாய்ந்த நீர் வயல்கள் சூழ்ந்துள்ள திரு அண்ணாமலையில் அகன்ற வீதிகளில் மகிழ்ச்சியுடன் உலாவரும் பெருமாளே. 
* எரிவாய் நரகம்: கும்பி பாகம் எனப்படும். இது ஏழு நரகங்களில் ஒன்று.பாவம் செய்தவரைக் குயச் சூளையில் சுடுவது போல் வாட்டும் நரகம்.ஏழு நரகங்கள் பின்வருமாறு:கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).
பாடல் 394 - திருவருணை 
ராகம் - .....; தாளம் -
தனதனா தானனத் தனதனா தானனத்
     தனதனா தானனத் ...... தனதான
அழுதுமா வாவெனத் தொழுதமூ டூடுநெக்
     கவசமா யாதரக் ...... கடலூடுற் 
றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்
     கறியொணா மோனமுத் ...... திரைநாடிப் 
பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்
     பெரியஆ தேசபுற் ...... புதமாய 
பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்
     பெறுவதோ நானினிப் ...... புகல்வாயே 
பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
     படியுமா றாயினத் ...... தனசாரம் 
பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்
     பரமமா யூரவித் ...... தகவேளே 
பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்
     பொடிபடா வோடமுத் ...... தெறிமீனப் 
புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்
     பொருதவே லாயுதப் ...... பெருமாளே.
அழுதும், ஆ ஆ என இரங்கித் தொழுதும், அவ்வப்போது பக்தியால் நெகிழ்ந்தும், தன் வசமற்று, ஆதாரம் என்ற அன்புக் கடலில் திளைத்தும், அமைதியற்ற ஆடம்பரமான சமய வாதப் பாதகர்களுக்கு அறிவதற்கு முடியாத மெளனக்குறியைத் தேடியும், தவறுதல் இல்லாத ஞான மெய்ப் பொருளை நான் அடையாமல், வினைக்கு ஈடான பெரிய மாறுபட்ட வடிவங்களை அடையும் நீர்க்குமிழி போன்ற நிலையற்ற பிறவி என்ற கடல் நீர்ச்சுழியிலே, நான் இனி மேல் போய் விழக் கடவேனோ? சொல்லி அருளுக. பழைய கங்கை என்னும் நீர் நிலையின் சரவணப் படுகையின்மேல் செல்வக் குமரர்களாய்த் தோன்றி, கார்த்திகைப் பெண்களாகிய ஆறு தாய்மார்களின் முலைப்பாலை உண்ட ஆறு திரு முகங்களை உடைய குழந்தையே, திருவண்ணாமலைப் பரமனே, மயில் வாகனனே, ஞான மூர்த்தியே, பொழுது சாயும் மாலை வேளையில் கிரெளஞ்சமலை பொடிபட, பூமி முதலியவை பொடிபட்டுத் தெறிக்க, முத்துக்களை வீசுவதும், மீன்களைக் கொண்டதுமான கடல் கோ கோ என்று கதற, வேதங்கள் கோ கோ என்று கதற போர் செய்த வேலாயுதத்தை ஏந்தும் பெருமாளே. 
பாடல் 395 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
     தானதனத் தானதனத் ...... தனதானா
ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்
     டாடைமறைத் தாடுமலர்க் ...... குழலார்கள் 
ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட்
     டாரையுமெத் தாகமயக் ...... கிடுமோகர் 
சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்
     தூதுவிடுத் தேபொருளைப் ...... பறிமாதர் 
தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்
     சோதியொளிப் பாதமளித் ...... தருள்வாயே 
தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்
     சாயகடற் சூரைவதைத் ...... திடுவோனே 
தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்
     தாபரம்வைத் தாடுபவர்க் ...... கொருசேயே 
தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்
     தேயுருகிச் சேருமணிக் ...... கதிர்வேலா 
சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்
     தேவமகட் கோர்கருணைப் ...... பெருமாளே.
யானையின் கோடுகள் உள்ள தந்தத்தையும், இளநீரையும் ஒத்த கனமான மார்பகங்களைச் சார்ந்து அசைகின்ற பட்டு ஆடையால் மறைத்து ஆடுகின்ற, மலர் அணிந்த கூந்தல் உடையவர்கள், முத்து மாலையும் தோடும் மிக அசையப் பேசியும், இனிதாகச் சிரித்தும், பொன்னைப் பெற வேண்டி எவரையும் வஞ்சனையுடன் மயக்குவிக்கும் காமிகள், பெரும் மழைமேகம் போன்ற அடர்ந்த கூந்தலும், அழகிய விழியும் கொண்ட தோகை மயில் போன்ற சாதியர், தம் இடத்தே உள்ள தூதுவர்களை அனுப்பி, பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின் வஞ்சகத்தில் பட்டு, ஏழு* நரகத்தில் சேருதற்கு உரியவனும், தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய என்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிக. தானதனத்தீ என்று ஒலிக்கும் பறை வகைகள் முழங்க, நன்றாகக் கிரெளஞ்ச மலை அழிய, கடலில் ஒளிந்து நின்ற சூரனை வதைத்தவனே, தாளத்தின் இலக்கண விளக்கமானது ஒளி பொருந்திய தனது திருவடியின் மூலம் உண்டாகும்படி, ஒரு பாதத்தை வளைத்து எடுத்தும், மற்றொரு திருவடியைப் பூமியில் வைத்தும் நடமிடும் சிவபெருமானுடைய ஒப்பற்ற குழந்தையே, தேனின் சாறு போல் இனிக்கும், கொவ்வைப் பழம் போலச் சிவந்தும் உள்ள வாயிதழைக் கொண்ட, நாகணவாய்ப் புள் போன்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்புக்கு மனம் உருகி அவளிடம் சேர்ந்து, அழகிய ஒளி வீசும் வேலை உடையவனே, அழகிய திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருந்து, உன் மனதுக்கு உகந்த தினப் புன மயிலாகிய வள்ளிக்கும், (உன்னிடம்) மெய்யன்பு கொண்டிருக்கும் தேவயானைக்கும் ஒப்பற்ற கருணையைக் காட்டிய பெருமாளே. 
* ஏழு நரகங்கள் பின்வருமாறு:கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).
பாடல் 396 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனனத் தனதானன தனனத் தனதானன
     தனனத் தனதானன ...... தனதான
இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு
     மிறுதிச் சிறுகால்வரு ...... மதனாலே 
இயலைத் தருகானக முயலைத் தருமேனியி
     லெரியைத் தருமாமதி ...... நிலவாலே 
தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
     தொலையத் தனிவீசிய ...... கடலாலே 
துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
     துவளத் தகுமோதுயர் ...... தொலையாதோ 
வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
     மடியச் சுடஏவிய ...... வடிவேலா 
மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
     மகிழப் புனமேவிய ...... மயில்வீரா 
அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய
     லருணைத் திருவீதியி ...... லுறைவோனே 
அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
     அமரர்க் கரசாகிய ...... பெருமாளே.
துன்பத்துக்கு மேல் துன்பம் தருவதான கொடிய (மன்மத) பாணங்களின் மேலே வந்து, அழிவைத் தரக்கூடிய சிறு தென்றல் காற்று வீசி வருகின்ற அந்தக் காரணத்தாலும், தகுதியைக் கொண்டதும், காட்டு முயல் போன்ற களங்கத்தினைக் கொண்டதுமான வடிவத்தில் இருந்துகொண்டு நெருப்பை வீசும் அழகிய சந்திரனுடைய ஒளியாலும், மேல் மேல் தொடர்ந்து வந்து கொடிய வேதனையை நான் அடையும்படி, கரையின் மீது அலைகள் பட்டு அழிய அந்த அலைகளை ஒப்பற்ற விதத்தில் வீசுகின்ற கடலாலும், ஒரு துணையும் இல்லாமல் அலங்கரித்த மலர்ப் படுக்கையில் தனிமையில் எனது உயிர் வாடுதல் தகுமோ? என் விரக வேதனை ஒழியாதோ? பொன் நிறைந்த வடமேரு மலை போல் விரைந்து சென்று சண்டை செய்த சூரனை இறந்து போகுமாறு சுட்டெரிக்கச் செலுத்திய கூரிய வேலனே, வேடர் குலத்தவளாகிய ஒப்பற்ற குறத்தியும், மெய்ம்மை திகழும் லக்ஷ்மியின் சிறந்த மகளுமான வள்ளி மகிழும்படி தினைப் புனத்துக்கு விரும்பிச் சென்ற மயில் வீரனே, நெருக்கமாய் வளர்ந்துள்ள தாழை மடலின் தழைகள் சேர்ந்த வயல்களை உடைய திருவண்ணாமலையின் தெருக்களில் வாழ்பவனே, உலகுக்கும், சிவனுக்கும், உமா தேவிக்கும், இமையாத விழிகளை உடைய தேவர்களுக்கும் அரசனாகிய பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.மன்மதனுடைய பாணங்கள், தென்றல் காற்று, நெருப்பை வீசும் நிலா, அலைகள் வீசும் கடல், மலர்ப் படுக்கை முதலியவை தலைவனின் பிரிவுத் துயரை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 397 - திருவருணை 
ராகம் - ஸரஸ்வதி; தாளம் - மிஸ்ரஜம்பை - 10
தனதாதன தானன தத்தம் ...... தனதான
     தனதாதன தானன தத்தம் ...... தனதான
இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே
     இளவாடையு மூருமொ றுக்கும் ...... படியாலே 
சமராகிய மாரனெ டுக்குங் ...... கணையாலே
     தனிமானுயிர் சோரும தற்கொன் ...... றருள்வாயே 
குமராமுரு காசடி லத்தன் ...... குருநாதா
     குறமாமக ளாசைத ணிக்குந் ...... திருமார்பா 
அமராவதி வாழ்வம ரர்க்கன் ...... றருள்வோனே
     அருணாபுரி வீதியி னிற்கும் ...... பெருமாளே.
பனிக்கு அரசனாகிய சந்திரன் வீசுகின்ற நெருப்புக் கதிர்களாலே, மெல்லிய தென்றல் காற்றும், ஊர்ப் பெண்களின் ஏச்சும் வருத்துகின்ற தன்மையாலே, காமப்போருக்கு என்றே மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலே, உன்னைப் பிரிந்து தனியே தவிக்கும் மான் போன்ற இப்பெண் உயிர் சோர்ந்து போகாமல் இருக்க ஏதேனும் ஒரு வழி கூறி அருள்வாயாக. குமரா, முருகா, சடைமுடிப் பெருமான் சிவனுடைய குருநாதனே, குறமகள் வள்ளியின் ஆசையை அணைத்துத் தணிக்கும் திருமார்பா, தேவலோக வாழ்க்கையை அன்று அமரர்களுக்கு அருளியவனே, திருவண்ணாமலை வீதியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.சந்திரன், தென்றல் காற்று, மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப் பெண்களின் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 398 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
     தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
          தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த ...... தனதனத் தனதான
இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப
     அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க
          இசலி யிசலியுப ரிதலீலை யுற்று இடைநூல் நுடங்க ...... வுளமகிழ்ச் சியினோடே 
இருவ ருடலுமொரு வுருவாய்ந யக்க முகமே லழுந்த
     அளக மவிழவளை களுமேக லிக்க நயனா ரவிந்த
          லகரி பெருகஅத ரமுமேய ருத்தி முறையே யருந்த ...... உரையெழப் பரிவாலே 
புருவ நிமிரஇரு கணவாள்நி மைக்க வுபசா ரமிஞ்ச
     அவச கவசமள வியலேத ரிக்க அதிலே யநந்த
          புதுமை விளையஅது பரமாப ரிக்க இணைதோ ளுமொன்றி ...... அதிசுகக் கலையாலே 
புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க
     மனமு மனமுமுரு கியெயாத ரிக்க வுயிர்போ லுகந்து
          பொருள தளவுமரு வுறுமாய வித்தை விலைமா தர்சிங்கி ...... விடஅருட் புரிவாயே 
பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த
     தமர திமிரபிர பலமோக ரத்ந சலரா சிகொண்ட
          படியை முழுதுமொரு நொடியேம தித்து வலமா கவந்து ...... சிவனிடத் தமர்சேயே 
பழநி மிசையிலிசை யிசையேர கத்தில் திருவா வினன்கு
     டியினில் பிரமபுர மதில்வாழ்தி ருத்த ணிகையூ டுமண்டர்
          பதிய முதியகதி யதுநாயெ னுக்கு முறவா கிநின்று ...... கவிதையைப் புனைவோனே 
அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபா லனன்ப
     ரடையு மிடரைமுடு கியெநூற துட்ட கொலைகா ரரென்ற
          அசுரர் படையையடை யவும்வேர றுத்த அபிரா மசெந்தி ...... லுரகவெற் புடையோனே 
அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த
     இரண கரணமுர ணுறுஞ்ர னுட்க மயிலே றுகந்த
          அருணை யிறையவர்பெ ரியகோபு ரத்தில் வடபா லமர்ந்த ...... அறுமுகப் பெருமாளே.
சுவை கொண்டதும் இன்பம் தருவதுமான தனங்களும் மார்பில் அழுத்த, நெற்றியில் வேர்வை துளிர்க்க, காமம் பெருகும் நிலையிலே விரல்களின் நகக்குறி தைக்க, (அக்குறிகளில் கசியும் ரத்தம்) ரத்தினம் போல் ஒளி பெருக, அடிக்கடி பிணக்கு ஊடல் கொண்டு பிறகு மேல் விழும் கலவி லீலைகளை விளையாடி, நூல் போன்ற மெல்லிய இடை துவள, உள்ளத்தில் களிப்புடன் இருவர் உடலும் ஒன்றுபட்டு ஒருவராகி இன்பம் தர முகத்தின் மேல் முகம் அழுந்த, கூந்தல் அவிழ்ந்து விழ, வளைகள் ஒலிக்க, கண் என்னும் தாமரையில் மயக்கம் பெருக, வாய் இதழ் ஊறலை தக்கபடி உண்ண வேண்டிய முறைப்படி அருந்த, அன்பு காரணத்தால் சில சொற்கள் பேச, புருவம் மேல் எழ, இரு கண்களும் ஒளி வீசி இமைக்க, உபசார வார்த்தைகள் அதிகரிக்க, தன்வசம் அழிதலானது மேற் போர்வை போன்ற அளவான தன்மையில் உண்டாக, அப்போது கணக்கற்ற புதிய உணர்ச்சிகள் தோன்ற, அவ்வுணர்ச்சியை நன்றாக அனுபவிக்க இரண்டு தோள்களும் ஒன்றிக் கலந்து, அதிக சுகமாகிய பகுதியால் புளகாங்கிதம் நிறைய, காமம் என்கின்ற கடல் ததும்பிப் பரவ, இடுப்பில் கட்டியுள்ள கயிறும் அரைஞாணும் ஒளி குறைந்து அறுபட, மனத்தோடு மனம் உருகி அன்பு மேற்கொள்ள உயிர் போல மகிழ்ந்து பாவித்து, பொருள் கிட்டும் வரையில் கலந்து களிக்கும் மாயவித்தை வல்ல பொது மகளிரின் விஷச் சூழலை விட்டொழிக்க அருள் புரிவாயாக. போற்றப்படும் மகர மீனும் சங்கும் கொண்டுள்ளதாய், சகரரால் உண்டானதால் சாகரம் என்ற பெயர் கொண்டதாய், பேரொலி உடையதாய், இருள் நிறைந்ததாய், பிரசித்தி பெற்றதாய், கவர்ச்சி உள்ளதாய், ரத்தினங்களும் மணிகளும் கொண்டதாய் உள்ள கடல் சூழ்ந்த உலகை, முழுதும் ஒரு நொடிப் பொழுதில் அளவிட்டு வலம் வந்து (தந்தையாகிய) சிவபெருமானிடத்து அமர்ந்த குழந்தையே, பழநி மலை மீதும், புகழோடு கூடிய சுவாமி மலையிலும், திருவாவினன்குடியிலும், சீகாழியிலும், நீ என்றும் மங்கலமாய் வாழ்கின்ற திருத்தணிகையிலும் உறைவிடம் கொண்டவனே, தேவர்கள் உன்னைத் தரிசிக்க வருகின்ற அத்தலங்களில் எல்லாம் உறைபவனே, பழம் பொருளாகிய வீட்டின்பமானது இந்த அடிமைக்கும் கிட்டும்படியாக நின்று என் பாமாலையை அணிந்து கொள்பவனே, திருமாலும் பிரமனும் தேவர்களும் ஆகிய மேலோர்களைக் காத்து அருள்பவனே, உன் அடியார்கள் அடையும் துயரத்தை ஓட்டித் தூளாக்க, துஷ்டர்களான கொலைகாரர்கள் எனப்படும் அசுரர்களின் சேனையை முழுமையும் வேரறுத்த அழகனே, திருச்செந்தூர், நாகமலை என்ற திருச்செங்கோடு என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, செவ்விய ஒளி வீசுவதும் உனது கருணை பூரணமாக நிறைந்ததுமான திருவடியைப் பகைத்து மேலெழுந்த போர்க்குணம் கொண்டவனாய் மாறுபட்டு எழுந்த சூரன் அஞ்சும்படி மயிலின் மேல் ஏறிவரும் கந்தனே, திருவண்ணாமலையில் வாழும் சிவபெருமானுடைய திருக்கோயிலின் பெரிய கோபுரத்திற்கு வடதிசையில் எழுந்தருளியிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 
இந்தப் பாட்டின் முதல் 12 வரிகள் புணர்ச்சியை விவரிக்கும்.
பாடல் 399 - திருவருணை 
ராகம் - ஸாமா; தாளம் - கண்டசாபு - 2 1/2 - எடுப்பு 1/2 தள்ளி
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
     தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
     திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே 
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா
     அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.
இரவும், பகலும், பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி, நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. மேலான கருணையுடன் விளங்கும் பெருவாழ்வே, உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப் பொருளே, சிவபிரான் அருளிய நற்குணப் பிள்ளையே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 400 - திருவருணை 
ராகம் - ஸாவேரி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட தகதிமி-3 1/2
தனன தனனா தனன தனனா
     தனன தனனா ...... தனதான
இருவர் மயலோ அமளி விதமோ
     எனென செயலோ ...... அணுகாத 
இருடி அயன்மா லமர ரடியா
     ரிசையு மொலிதா ...... னிவைகேளா 
தொருவ னடியே னலறு மொழிதா
     னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ 
உனது பததூள் புவன கிரிதா
     னுனது கிருபா ...... கரமேதோ 
பரம குருவா யணுவி லசைவாய்
     பவன முதலா ...... கியபூதப் 
படையு முடையாய் சகல வடிவாய்
     பழைய வடிவா ...... கியவேலா 
அரியு மயனோ டபய மெனவே
     அயிலை யிருள்மேல் ...... விடுவோனே 
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
     அருண கிரிவாழ் ...... பெருமாளே.
வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவியர் மீது நீ கொண்ட ஆசையோ? அல்லது உன் திருக்கோயில்களில் விதவிதமாக நடக்கும் ஆரவாரங்களோ? வேறு என்னென்ன நிகழ்ச்சிகளோ? (எனக்குத் தெரியாது) உன்னை அணுகமுடியாத முநிவர், பிரமன், மால், தேவர், அடியார் இத்தனை பேரும் முறையிடும் ஒலிகள் என் செவியில் விழாதபோது, யான் ஒருவன் மட்டும் தனியாக இங்கே அலறும் மொழிகளைப் பற்றி யாரேனும் ஒருவர் அன்போடு வந்து உன்னிடம் தெரிவிப்பார்களோ? உன் பாதத்தில் உள்ள தூசானது பூமியிலுள்ள மலைகளுக்குச் சமம். அப்படியென்றால் உன் திருவருள் எவ்வளவு பெரியதோ? (யான் அறியேன்). மேலான குருமூர்த்தியாய், அணுவிலும் அசைவு ஏற்படுத்துபவனாய், காற்று முதலிய ஐம்பெரும் பூதங்களை ஆயுதமாக உடையவனே, எல்லா உருவமாயும், பழமையான உருவத்திலும் அமைந்த வேலனே, திருமாலும், பிரம்மனும் உன்னிடம் அடைக்கலம் புக, உன் வேலாயுதத்தை இருள் வடிவம் எடுத்த சூரன்மேல் செலுத்தியவனே, இவ்வடியேனுக்கு ஏற்பட்ட தொழுநோயைத் தூளாக்கிய* திருவண்ணாமலையில் வாழ்கின்ற பெருமாளே. 
* அருணகிரிநாதர் வாழ்க்கையில் அவருக்கு உற்ற தொழுநோயை முருகனது அருள் முற்றிலும் குணப்படுத்திய நிகழ்ச்சி இங்கு பேசப்படுகிறது.

பாடல் 351 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - ..........

தாந்தத்தன தானன தானன     தாந்தத்தன தானன தானன          தாந்தத்தன தானன தானன ...... தனதானா

வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய     நீந்திப்பது மாதியை மீதினி          லூர்ந்துற்பல வோடையில் நீடிய ...... உகள்சேலை 
வார்ந்துப்பக ழீயெதி ராகிமை     கூர்ந்துப்பரி யாவரி சேரவை          சேர்ந்துக்குழை யோடுச லாடிய ...... விழியாலே 
சாய்ந்துப்பனை யூணவ ரானபொ     லாய்ந்துப்பணி னாரிரு தாளினில்          வீழ்ந்திப்படி மீதினி லேசிறி ...... தறிவாலே 
சாந்தப்பிய மாமலை நேர்முலை     சேர்ந்துப்படி வீணினி லேயுயிர்          மாய்ந்திப்படி போகினு மோர்மொழி ...... மறவேனே 
சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ     பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ          காந்தப்பெரு நாதனு மாகிய ...... மதராலே 
தாந்தக்கிட தாகிட தாகிட     தோந்திக்கிட தோதிமி தோதிமி          சேஞ்செக்கண சேகெண சேகெண ...... வெனதாளம் 
காந்தப்பத மாறியு லாவுய     ராந்தற்குரு நாதனு மாகியெ          போந்தப்பெரு மான்முரு காவொரு ...... பெரியோனே 
காந்தக்கலு மூசியு மேயென     ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு          காஞ்சிப்பதி மாநகர் மேவிய ...... பெருமாளே.

நீரில் நிலை நின்று நீண்ட நாள் விளங்கிய தாமரையாகிய முதன்மையான பொருளை, (தனது அழகால்) கடந்து விளங்கும் நீலோற்பல மலர் உள்ள ஓடையில் நெடுந்தூரம் பாய வல்ல சேல் மீனை நேர் ஒத்து, அம்புக்குப் போட்டியாக எதிர்த்து, அஞ்சனம் மிகவும் பூசப்பட்டு, அந்த மையைத் தாங்குவதாகி, ரேகைகள் பொருந்த, கூர்மை கொண்டு, (காதில் உள்ள) குண்டலத்தோடு ஊஞ்சலாடிய கண்களால், (என் ஒழுக்கம்) தளர்ந்து, பழைய பனங் கள்ளை உண்டவர் மயக்கம் கொண்டது போல் மயங்கிச் சிறிது ஓய்ந்து, இசை பாடும் பொதுமகளிருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து கிடந்து, இந்தப் பூமியின் மீது அற்ப அறிவு காரணமாக, சந்தனம் பூசப்பட்ட பெரிய மலை போன்ற மார்பைச் சேர்ந்துப் படிந்து, வீணாகக் காலம் கழித்து, உயிர் அழிந்து இவ்வாறு கெட்டுப் போனாலும், (நீ சொன்ன) ஒப்பற்ற உபதேச மொழியை மறக்க மாட்டேன். பெருகிவந்த நீர் வெள்ளமாகவே பாய்ந்து பரக்கும் அந்த வேளையில் (ஊழிக் காலத்தில்), ஓர் உயிரும் இல்லாமல் ஒளி வீசும் பெரிய கால மூர்த்தியாகிய சிவபெருமான் களிப்பினால், தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண என்று இவ்வாறு தாளங்கள் ஒலிக்க, அழகிய திருவடிகளை மாற்றி மாற்றி நடன உலாவை மிகச் செய்யும் (எல்லாவற்றுக்கும்) முடிவானவனாகிய சம்ஹார மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு குரு நாதனாக வந்துள்ள பெருமானாகிய முருகனே, ஒப்பற்ற பெரியோனே, காந்தக் கல்லும் ஊசியும் போல, ஆசிரியரும் மாணவருமாக ஒருமித்து தமிழை ஓதுகின்ற* மேன்மை பொருந்திய காஞ்சி என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* காஞ்சி குமரக் கோட்டத்து அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார் தாம் பாடிய கந்தப் புராணப் பகுதி ஏட்டை தினம் இரவில் முருகன் திருவடியின் கீழ் வைக்க, மறுநாள் காலையில் அதில் திருத்தங்கள் காணப்படுமாம். இது குருவான முருகனையும் சீடரான கச்சியப்பரையும் பற்றிய குறிப்பு எனக் கருதலாம்.

பாடல் 352 - காஞ்சீபுரம் 
ராகம் - சாரங்கா; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த     தனதனாத் தந்த தந்த ...... தனதான

அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்     அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத 
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து     அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச் 
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து     தெரிவைமார்க் குச்சொ ரிந்து ...... அவமேயான் 
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து     தெளியமோ க்ஷத்தை யென்று ...... அருள்வாயே 
இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து     இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன் 
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த     இறைவர்கேட் கத்த குஞ்சொ ...... லுடையோனே 
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று     குருவியோட் டித்தி ரிந்த ...... தவமானைக் 
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த     குமரகோட் டத்த மர்ந்த ...... பெருமாளே.

அறிவு இல்லாத பித்தர், உன் திருவடியைத் தொழாத கெட்ட வஞ்சகர், மூடர்கள், பேய்த்தன்மை கொண்ட செய்கையர், நன்றி இல்லாத பயனற்றவர் .. ஆகியோர் மீது வார்த்தைகளால் பாடல்கள் புனைந்து அவர்களைப் புகழ்ந்தும், அவர்களை வாழ்த்தியும், அதன் பொருட்டு அலைந்து திரிந்து பொருள் சம்பாதித்தும், சிறிதளவு சேகரித்த பொருளைக் கொண்டுவந்து, பொது மகளிர் வாழும் தெருக்களில் உலாவித் திரிந்து, அப் பெண்களுக்கே அந்தப் பொருளை நிரம்பவும் வாரிக் கொடுத்து இப்படி காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் எனக்கு வருகின்ற அபவாதத்தை அகற்றி, அன்பு கூர்ந்து, நான் தெளிவு பெறுவதற்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்? சிவ பெருமானது மாற்றறியாத செம்பொன் வடிவம் வேறாகும்படி பிரிந்து ரிஷப வாகனத்தில் ஏறி காஞ்சீபுரத்துக்கு வந்த உமையவள் தன் அஞ்ஞான இருள் நீங்குவதற்காகத் தவம் செய்து விளங்க அந்தத் தவத்தைப் பார்த்து அருளோடு மனம் குழைந்த இறைவர் கேட்டு மகிழத்தக்கதான உபதேசச் சொல்லை உடையவனே, குறவர்களின் கூட்டத்துக்கு இடையில் வந்து, ஒரு கிழவன் வேடத்தைக் காட்டிப் புகுந்து நின்று, தினைப்புனத்தில் குருவிகளை ஓட்டித் திரிந்த தவம் நிறைந்த மானாம் வள்ளியை தன் வசப்படுத்தி, உன் சிறந்த தெய்வ வடிவம் காட்டி, அவளை மணந்தவனே, குமரக்கோட்டம்* என்ற காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பிரமனைச் சிறைப்பிடித்த குற்றம் நீங்க, சிவபிரானின் ஆணையால், முருகன் குமரக் கோட்டத்தில் தவக்கோலம் பூண்டு லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான் - காஞ்சிப் புராணம்.

பாடல் 353 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - .......

தந்தன தானன தத்ததத்தன     தந்தன தானன தத்ததத்தன          தந்தன தானன தத்ததத்தன ...... தனதான

அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு     மிங்கித மாகந கைத்துருக்கவு          மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் ...... நகரேகை 
அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு     மந்தர மாமுலை சற்றசைக்கவு          மம்பரம் வீணில விழ்த்துடுக்கவு ...... மிளைஞோர்கள் 
நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்     வம்புரை கூறிவ ளைத்திணக்கவு          மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு ...... மெவரேனும் 
நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு     மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற          நின்பத சேவைய நுக்ரகிப்பது ...... மொருநாளே 
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு     அங்குச பாசக ரப்ரசித்தனொர்          கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம ...... கணராஜன் 
கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்     எங்கள்வி நாயக னக்கர்பெற்றருள்          குன்றைய ரூபக கற்பகப்பிளை ...... யிளையோனே 
துஞ்சலி லாதச டக்ஷரப்பிர     பந்தச டானன துஷ்டநிக்ரக          தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய ...... பரிபாலா 
துங்கக ஜாரணி யத்திலுத்தம     சம்புத டாகம டுத்ததக்ஷிண          சுந்தர மாறன்ம திட்புறத்துறை ...... பெருமாளே.

மை தீட்டிய வேல் போன்ற கண்ணைக் கொண்டு அழைக்கவும், இன்பகரமாக சிரித்து மனதை உருக்கவும், மேகம் போன்ற கூந்தலைக் கலைத்து அவிழ்க்கவும், நகக் குறி இட்டு அழகிய கைகளால் தங்கள் காம எண்ணங்களை வெளியிடவும், மந்தர மலையைப் போன்ற மார்பகத்தைச் சிறிது அசைக்கவும், சேலையை அனாவசியமாக நெகிழ்த்தி, பின்பு உடுக்கவும், வாலிபர்கள் மனதில் காமத் தீயை எழுப்பவும், வீண் வார்த்தைகளைப் பேசி அவர்களை வளைத்து வசப்படுத்தவும், சபையில் நடனம் ஆடி காம மயக்கத்தைக் கொடுக்கவும், யாராயிருந்த போதிலும் இகழ்ச்சி இன்றி அவர்களிடமிருந்து பொருளை அபகரிக்கவும், இங்கு வல்லவர்களாகிய (பொது மகளிரின்) கையில் அகப்பட்டுக் கொண்ட கட்டு நீங்க, உன்னுடைய திருவடி சேவையை நீ தந்து அருளுவது கூடும் ஒரு நாள் உண்டாகுமோ? யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும் பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம் இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன், பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன், வலிமை வாய்ந்தவன், கணபதி, துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும் தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான் பெற்றருளிய மலை போன்ற உருவத்தை உடையவன், ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே, அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின் பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே, துஷ்டர்களை அழிப்பவனே, (மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட) கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல், இசை, நாடகம் என்ற) முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே*, உயர்வு பெற்ற திருவானைக்காவில் வீற்றிருக்கும் உத்தமனே, சம்பு தீர்த்தத்துக்கு அடுத்துத் தெற்கே உள்ள சுந்தர (உக்கர) பாண்டியன் மதிலின் வெளிப்புறத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* மதுரையில் முருகன் உக்கிர பாண்டியனாய் தோன்றி, தமிழைப் பரிபாலித்தார்.

பாடல் 354 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - ......

தந்தன தானத் தானன தந்தன தானத் தானன     தந்தன தானத் தானன ...... தனதான

அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய     ஐந்தலை நாகப் பூஷண ...... ரருள்பாலா 
அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு     மங்கையி னானிற் பூசையு ...... மணியாமல் 
வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்     வண்டுழ லோதித் தாழலி ...... லிருகாதில் 
மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச் சேர்வையில்     மங்கியெ யேழைப் பாவியெ ...... னழிவேனோ 
கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி     குண்டலி யாலப் போசனி ...... யபிராமி 
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி     குன்றது வார்பொற் காரிகை ...... யருள்பாலா 
செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை     திண்புய மாரப் பூரண ...... மருள்வோனே 
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய     தென்திரு வானைக் காவுறை ...... பெருமாளே.

நிலவையும் கங்கையையும் தரித்துள்ள செஞ்சடை மேல் தாவி நிற்கும் ஐந்து தலை நாகத்தை ஆபரணமாக அணிந்துள்ள சிவ பெருமான் அருளிய குழந்தையே, அன்புடனே நாவார பாடல்களால் எப்பொழுதும் உனது பாதத்தை ஓதி, உள்ளங்கை கொண்டு உன்னைப் பூஜிக்கும் ஒழுக்கத்தை மேற் கொள்ளாமல், கச்சு அணிந்ததும் ஆபரணம் பூண்டதும் ஆகிய மார்பினை உடைய வஞ்சிக் கொடி போன்ற விலைமாதர்களின் மாய அழகிலும், வண்டுகள் திரியும் கூந்தலின் சரிவிலும், இரண்டு காதுகளிலும், நெருங்கிய கரு நிற மை பூசிய கண்களின் பார்வையிலும், வெண்ணிறத்து ஆடையின் சேர்க்கையிலும், அறிவு மயங்கிப் போய் ஏழைப் பாவியேனாகிய அடியேன் அழிந்து போவேனோ? கொம்பை ஒத்த மெல்லிய நீல நிற அழகி, தாமரை மலர் மாலையை அணியாக அணிந்தவள், சுத்த மாயையாம் சக்தி, விஷத்தை உண்டவள், பேரழகி, குலவி மகிழும் ஆகாச கங்கை போலத் தூய்மை நிறைந்தவள், சங்கரி, வேதங்கள் போற்றும் பார்வதி, இமயத்தின் நெடிய தவத்தின் பயனாக வந்த அழகிய மாது ஈன்றளித்த மகனே, சிவந்த பவள நிறமான மெல்லிய வாயிதழ்களை உடையவளும், ஒளி பொருந்தியவளும் ஆகிய குறப் பெண்ணான வள்ளியின் ஆபரணம் அணிந்த மார்பகங்களை உனது திண்ணிய புயங்களால் நன்கு அணைக்க, பூரணமான திருவருளை அவளுக்குப் பாலித்தருளியவனே, செந்தமிழ் ஞானம் உள்ள பாணர்குலப் பாவலர் (திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் திருஞான சம்பந்தர் பாடலுக்கு ஏற்ப) இசையுடன் யாழை வாசித்த* அழகிய திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* முன்பு, திருவானைக்காவில், சைவக் குரவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் தேவார இசை பாட, திருநீலகண்டர் அதற்கேற்ப யாழை மீட்டினார் - பெரிய புராணம்.

பாடல் 355 - திருவானைக்கா 
ராகம் - பூபாளம் ; தாளம் - சதுஸ்ர ஏகம் - திஸ்ரநடை - 6 எடுப்பு - அதீதம்

தனத்த தான தானான தனத்த தான தானான     தனத்த தான தானான ...... தனதான

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி     யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித் 
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச     அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை 
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார     சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு 
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத     சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய் 
தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால     சுதற்கு நேச மாறாத ...... மருகோனே 
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால     தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா 
மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி     மகப்ர வாக பானீய ...... மலைமோதும் 
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு     மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே.

அழியக் கூடிய இந்த உடல் என்றும் நிலைத்து இருக்கச் செய்ய, மூக்கை அடைத்து மூச்சு ஓடாத வகையை அப்யசித்து, வீணாக நிரம்ப மூலிகைகளை உண்டு, வாடுகின்ற, அலுப்பும் மூடத்தனமும் உள்ள யோகியாக ஆகாமல், மும்மலங்களினாலும் மாயையினாலும் தோன்றுகின்ற காரியங்களையும் வேதனைகளையும் ஒழித்து, அறிவும், ஆசாரமும், முயற்சியும் உடையவனாக ஆகி, யான் வேறு, எனது உடல் வேறு, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள யாவுமே வேறு என்ற பற்றற்ற நிலையினால் அடையக் கூடியதும், நிகழ்ச்சிகளைக் காட்டும் இந்த மனதுக்கு எட்டாததாய் விளங்குவதும் ஆன சிவ ஸ்வரூப மஹா யோகி என யான் ஆகுமாறு என்னை ஆண்டருள்வாயாக. ஒலி தரும் இசையுடன் கூடிய புல்லாங்குழலை ஊதுபவனும், ஆயிரம் நாமங்கள் கொண்டவனும், நந்தகோபனின் மகனுமான திருமாலின் அன்பு மாறுபடாத மருமகனே, தேவர் உலகம் என்ற கப்பலைக் காப்பாற்றிய மாலுமியே, சகல லோகங்களையும் பாலித்து அருளும் அரசனே, அப்பொழுதுதான் தொடுக்கப் பெற்ற கடப்ப மலர்மாலையனே, வேல் வீரனே, வயலூரானே, மனிதர்கள் முதல் சகல ஜீவராசிகளும் உள்ள சோழநாடு தழைத்திட வரும் காவேரியின் பெரும் வெள்ள நீர் அலைகள் மோதும், நறுமணம் கமழும் சோலைகள் சூழும் திருவானைக்காவை மேவியவனே, சகல லோகங்களை ஆள்பவர்களும் மதித்திடும் தெய்வமே, எல்லாத் தேவர்களுக்கும் பெருமாளே. 

பாடல் 356 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - ....

தானதன தானத் தானதன தானத்     தானதன தானத் ...... தனதான

ஆரமணி வாரைப் பீறியற மேலிட்     டாடவர்கள் வாடத் ...... துறவோரை 
ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்     பாளித படீரத் ...... தனமானார் 
காரளக நீழற் காதளவு மோடிக்     காதுமபி ராமக் ...... கயல்போலக் 
காலனுடல் போடத் தேடிவரு நாளிற்     காலைமற வாமற் ...... புகல்வேனோ 
பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்     சாமளக லாபப் ...... பரியேறிப் 
பாய்மதக போலத் தானொடிக லாமுற்     பாடிவரு மேழைச் ...... சிறியோனே 
சூரர்புர சூறைக் காரசுரர் காவற்     காரஇள வேனற் ...... புனமேவுந் 
தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்     சோதிவளர் காவைப் ...... பெருமாளே.

மணி வடம் அணிந்துள்ள மார்க்கச்சைக் கிழித்துக் கொண்டு, மிகவும் வெளித் தோன்றி ஆண்களை வாட்டியும், துறவிகளையும் காமத்தில் ஆழ்த்தி, மடல் ஏறும்படிச்* செய்து ஆள வல்லதாய், அதிக கனம் கொண்டதாய், பச்சைக் கற்பூரமும் சந்தனமும் அணிந்ததான மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கருமேகம் போன்ற கூந்தலின் நிழலிலே, செவி வரைக்கும் ஓடி, கொல்லும் தொழிலை மேற்கொண்ட அழகிய கயல் மீன் போன்ற கண்கள் போலக் (கொலைத் தொழிலைக் கொண்ட) யமன் உடலை விட்டு என் உயிரைப் பிரிப்பதற்காகத் தேடி வருகின்ற தினத்தில், உன் திருவடிகளை மறக்காமல் சொல்லும் பாக்கியத்தைப் பெறுவேனோ? உலகம் முழுவதும் வாழ்விக்கும் சர்ப்பராஜன் ஆதிசேஷனையும் தன் கால்களில் கட்டவல்ல பசுந் தோகை வாகனமான மயிலாகிய குதிரை மேல் ஏறி, முன்பொரு காலத்தில் மதம் கொண்ட மத்தகத்தை உடைய விநாயகரோடு மாறுபட்டு, வளைந்தோடி வருகின்ற பாடி ஓட்டம் ஆகிய விளையாட்டை ஆடிய ஏழை இளையவனே, சூரர்களுடைய ஊர்களைச் சூறையாடி அழித்தவனே, தேவர்களுக்குக் காவற்காரனாய் விளங்குபவனே, பசுமையான தினைப் புனத்தில் இருந்த மயில் போன்ற அழகிய வள்ளியுடன் பொழுது போக்கிக் காவல் இருப்பவனே, தமிழ் மறையாகிய தேவாரத்தை (திருஞானசம்பந்தராகத் தோன்றி) அருளிய ஜோதி மூர்த்தியே, வளரும் திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம் உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.

பாடல் 357 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - .........

தான தத்தன தத்தன தத்தன     தான தத்தன தத்தன தத்தன          தான தத்தன தத்தன தத்தன ...... தனதான

ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச     னாக மக்கலை கற்றச மர்த்திக          ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் ...... தெருவூடே 
ஆர வட்டமு லைக்குவி லைப்பண     மாயி ரக்கல மொட்டிய ளப்பினு          மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ ...... ருடன்மாலாய் 
மேலி ளைப்புமு சிப்பும வத்தையு     மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு          மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி ...... யதனாலே 
மேதி னிக்குள பத்தனெ னப்பல     பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை          வீடு கட்டியி ருக்குமெ னக்குநி ...... னருள்தாராய் 
பீலி மிக்கம யிற்றுர கத்தினி     லேறி முட்டவ ளைத்துவ குத்துடல்          பீற லுற்றவு யுத்தக ளத்திடை ...... மடியாத 
பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை     பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்          பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு ...... குடனாட 
ஏலம் வைத்தபு யத்தில ணைத்தருள்     வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர்          ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை ...... யருள்வோனே 
ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ     ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம          ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் ...... பெருமாளே.

ஆலகால விஷத்தைக் கொண்ட கண்களை உடையவர், மன்மதனுடைய காமசாஸ்திர நூல்களைப் படித்துள்ள சாமர்த்தியர்கள், எப்படிப்பட்டவருடைய மனத்தையும் வஞ்சனை செய்து தம் சப்படுத்துபவர்கள், தெருமுனையில் நின்று, முத்து மாலை அணிந்த, வட்ட வடிவுள்ள மார்பகங்களுக்கு விலையாகப் பணம் ஆயிரக்கலம் கணக்காகத் துணிந்து அளந்து கொடுத்தாலும், தங்களுடைய ஆசையை அந்த பொருளின் அளவுக்குத் தகுந்தவாறு கொடுத்து நடித்து ஒழுகுவார்கள், இத்தகைய விலைமாதருடன் நான் ஆசை பூண்டவனாய், அதன் பின்னர் வாட்டமும், மெலிவும், வேதனையும் அடைந்து, உடலெங்கும் நடுக்கத்துடன் பித்தமும் அதிகமாக ஏற்பட்டு, தலையில் எழுதியுள்ள விதியின்படி, அதன் காரணமாக பூமியில் பொய்யன் என்று பெயர் பெற்று, பல துன்பங்களுக்கு ஆளாகி, புழுக்கள் வாழும் மலப் பிண்டமாகிய, இந்த உடலை (பிறவியை) பேணி வளர்க்கும் எனக்கு உனது திருவருளைத் தந்து அருள வேண்டும். தோகை நிரம்ப உள்ள மயிலாகிய குதிரையின் மீது ஏறி, (எதிரிகளை) ஒரு சேர ஒன்றாக வளைத்து கூறுபடுத்தி உடல்கள் கிழிபட்ட அந்த போர்க் களத்தில் இறவாது எஞ்சி நின்ற பெரிய அரக்கர்கள் எதிர்த்து வந்த அத்தனை பேரையும் கொடுமையான போரில் மடிவித்துக் கொன்று, பெரிய பேய்கள் கை கொட்டி நடனமிடவும், கருமையான கழுகுகள் உடன் சேர்ந்து ஆடவும், ஏலத்தின் நறுமணம் வீசும் தோளில் அணைத்து வைத்துள்ள சிறப்பு வாய்ந்த வேலாயுதத்தை எடுத்துச் செலுத்திய ஆற்றலைப் புகழ்வோர்கள் யாவருக்கும் அவரவர் மனதில் நினைக்கும் விருப்பங்களைக் கொடுத்து அருள்பவனே, ஏழிசைத் தமிழில் தேவாரப் பாக்களின் பயனைக் கொண்ட, வெண் நாவல் மரத்தின் கீழ் (திருவானைக்காவில்) விளங்குகின்ற உத்தமராகிய ஈசர், மூன்று கண்களை உடையவர், ஊழிக் கூத்து நடனம் ஆடுபவராகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே. 

பாடல் 358 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - ........

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா     தனத்தா தனத்தான ...... தந்ததான

உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே     ருனக்கோ மடற்கோவை ...... யொன்றுபாட 
உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே     டுனைப்பா ரிலொப்பார்கள் ...... கண்டிலேன்யான் 
குரைக்கா னவித்யா கவிப்பூ பருக்கே     குடிக்காண் முடிப்போடு ...... கொண்டுவாபொன் 
குலப்பூ ணிரத்நா திபொற்றூ செடுப்பா     யெனக்கூ றிடர்ப்பாடின் ...... மங்குவேனோ 
அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய்     அனற்கே புனற்கேவ ...... ரைந்தஏடிட் 
டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே     லறப்பாய் வயற்கீழ ...... மர்ந்தவேளே 
திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே     சிவத்யா னமுற்றோர்சி ...... லந்திநூல்செய் 
திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்     திருச்சால கச்சோதி ...... தம்பிரானே.

சொல்லப்டுகின்ற காரிகை என்னும் யாப்பிலக்கண நூலில் (நிபுணர் என்னும்) முதலான பேர் எனக்குத் தான். உன் பேரில் (96 சிற்றிலக்கிய பிரபந்த வகைகளில்) ஒன்றான மடல் கோவையில் கவி ஒன்று பாடுவதற்கு, காலம் தாமதிக்காமல், யானையின் தந்தப் பிடி அமைந்த எழுத்தாணியைத் தேடி எடுத்து, உலகத்தில் உன்னை நிகரானவர்கள் யாரையும் நான் கண்டதில்லை, பெருமைக்கு உரிய வித்தை வல்ல கவி அரசர்களுக்கு நீ ஒரு புகலிடமாக விளங்குகிறாய், பண முடிச்சோடு பொற் காசுகளைக் கொண்டு வா, சிறந்த ஆபரணங்களையும் ரத்தினம் முதலியவற்றையும் அழகிய ஆடைகளையும் எடுத்துக் கொண்டு வா, என்றெல்லாம் சொல்லிப் புகழும் துன்பத்தில் நான் அகப்பட்டு, மதிப்பு குன்றி வாழ்வேனோ? இடுப்பில் ஆடையைச் சுற்றாது (கோரைப்புல்லைச் சுற்றும்) சமணர்கள் வாழ்ந்த, தமிழ் வளர்ந்த மதுரைத் தலத்துக்கு (திருஞான சம்பந்தராகச்) சென்று, அங்கே (அவர்களை வாதில் வெல்ல) நெருப்பிலும், நீரிலும் (தேவாரங்கள்) எழுதப்பட்ட ஏட்டினை இட்டு, அறச் செல்வன் என்னும் புகழைக் கொண்டாய். நீரில் சேல் மீன்கள் நிரம்பப் பாய்கின்ற வயல்களின் கீழ்ப்புறத்தில் வீற்றிருக்கும் செவ்வேளே, அலைகள் வீசும் காவிரியின் கரையில் இருந்த காட்டில் சிவத் தியானம் நிறைந்திருந்த சிலந்திப் பூச்சியின் நூலால் அமைக்கப் பெற்ற (திருவானைக்காவின்) அழகிய பந்தலின் கீழ் இருந்து வரும், அருள் மிக்க அழகிய சிலந்தி வலைக் கீழ் விளங்குபவரான ஜோதி சொரூபமான சிவபிரானின் தலைவனே. 

பாடல் 359 - திருவானைக்கா 
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2

தான தனன தனதந்த தந்தன     தான தனன தனதந்த தந்தன          தான தனன தனதந்த தந்தன ...... தனதான

ஓல மறைக ளறைகின்ற வொன்றது     மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்          ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும் 
ஓத வரிய துரியங் கடந்தது     போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்          ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம் 
சால வுடைய தவர்கண்டு கொண்டது     மூல நிறைவு குறைவின்றி நின்றது          சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ் 
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்     வீடு பரம சுகசிந்து இந்த்ரிய          தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ 
வால குமர குககந்த குன்றெறி     வேல மயில எனவந்து கும்பிடு          வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே 
வாச களப வரதுங்க மங்கல     வீர கடக புயசிங்க சுந்தர          வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா 
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்     நீலி கவுரி பரைமங்கை குண்டலி          நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி 
நாத வடிவி யகிலம் பரந்தவ     ளாலி னுதர முளபைங் கரும்புவெ          ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.

ஓம் என்று ஒலிக்கும் வேதங்களால் பேசப்பெறும் ஒப்பற்ற ஒன்று அது. பிரம்மாந்தரத்திற்கும் அப்பாலுள்ள மேலைப் பெருவெளியில் ஒளிர்கின்ற அருட்பெருஞ் ஜோதி அது. நூல்களில் சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம்* என்ற மூன்று வழிகளை அநுசரித்தவர்களாலும் சொல்லுதற்கு அரியதாகிய துரிய நிலையைக் கடந்தது அது. உணர்வு மயமாகிய அருவம், உருவம் என்ற இரண்டு நிலையிலும், உலகம், உயிர், உடம்பு இவற்றோடு முழுவதாகக் கலந்தது அது. சிவஞானம் மிகுத்த தவசீலர்கள் கண்டுகொண்டது அது. மூலப்பொருளாக நிறைந்துள்ளதாய், குறைவேயின்றி நிற்பது அது. சாதி, குலம் முதலியன இல்லாதது அது. மேலும், அன்புள்ள அடியார்கள் கூறும் ஞான ஆகாயத்தைச் சார்ந்துள்ள அநுபவம் கொண்ட பெரியோர்கள் மனம் ஒடுங்கிப் பொருந்தியுள்ள உண்மையான மோக்ஷ வீட்டு இன்பமும் பரம ஆனந்தக்கடலும் போன்றது அது. (இத்தனை பெருமை வாய்ந்தது நின் கழல்). ஐந்து இந்திரியங்களினால் ஏற்படுகின்ற தாக ஆசைகள், மெலிவுகள் ஒழிய அருகில் வந்து அத்தகைய கழலினை நான் பெறும் பாக்கியம் உடையவனோ? பால குமாரா, குகனே, கந்தனே, கிரெளஞ்சமலையைப் பிளந்த வேலாயுதனே, மயில் வாகனனே, என்று சொல்லித் துதித்துக் கொண்டு வந்த வானத்து அமரர்களின் தலைவன் இந்திரனின் கொடும் துயரத்தைப் போக்கியவனே, வாசம் மிகுந்த சந்தனத்தையும், சிறந்த தூய்மையான மங்கலத்தையும், வீரத்திற்கு அறிகுறியான கடகத்தையும் அணிந்த புயங்களை உடையவனே, சிங்க ஏறு போன்ற அழகியவனே, வெற்றி மாலை சூடும், போர்க்களத்தில் சிறந்த வீர சிகாமணியே, வயலூரில் வாழ்பவனே, உலகங்களுக்குத் தலைவியும், இமவான் பெற்ற மின்னொளி போன்றவளும், நீல நிறமுடையவளும், பொன்னிறமுடன் கெளரி எனப்படுபவளும், பராசக்தியும், மங்கைப் பருவத்தாளும், குண்டலினி சக்தியாக விளங்குபவளும், என்றும் இனிய கனி போன்றவளும், எங்களுக்கு அருள் புரியும் அன்னையும், மூன்று உலகங்களையும் பெற்றெடுத்தவளும், நாத வடிவாக விளங்குபவளும், உலகெங்கும் பரவி நின்றவளும், ஆலிலை போன்று வயிறை உடையவளும், பசிய கரும்பு அனையவளும், வெள்ளை நாவல் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் அரசன் ஜம்புநாதனின் மனைவியும் ஆன வஞ்சிக்கொடி போன்ற உமாதேவி பெற்றருளிய பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
** அகிலம் பரந்தவள் - அகிலாண்ட நாயகி, திருவானைக்கா தேவியின் பெயர்.

பாடல் 360 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - ........

தனதனதன தானத் தானன     தனதனதன தானத் தானன          தனதனதன தானத் தானன ...... தனதான

கருமுகில்திர ளாகக் கூடிய     இருளெனமரு ளேறித் தேறிய          கடிகமழள காயக் காரிகள் ...... புவிமீதே 
கனவியவிலை யோலைக் காதிகள்     முழுமதிவத னேரப் பாவைகள்          களவியமுழு மோசக் காரிகள் ...... மயலாலே 
பரநெறியுண ராவக் காமுகர்     உயிர்பலிகொளு மோகக் காரிகள்          பகழியைவிழி யாகத் தேடிகள் ...... முகமாயப் 
பகடிகள்பொரு ளாசைப் பாடிக     ளுருவியதன பாரக் கோடுகள்          படவுளமழி வேனுக் கோரருள் ...... புரிவாயே 
மரகதவித நேர்முத் தார்நகை     குறமகளதி பாரப் பூண்முலை          மருவியமண வாளக் கோலமு ...... முடையோனே 
வளைதருபெரு ஞாலத் தாழ்கடல்     முறையிடநடு வாகப் போயிரு          வரைதொளைபட வேல்விட் டேவிய ...... அதிதீரா 
அரவணைதனி லேறிச் சீருடன்     விழிதுயில்திரு மால்சக் ராயுதன்          அடியிணைமுடி தேடிக் காணவும் ...... அரிதாய 
அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும்     உடையதொர்மயில் வாசிச் சேவக          அழகியதிரு வானைக் காவுறை ...... பெருமாளே.

கரிய மேகங்கள் திரண்டு கூடிய இருள் என்று சொல்லும்படியான வியப்பு நிறைந்து விளக்கமுற்றதும், நறு மணம் வீசுவதுமான கூந்தலை உடைய அழகை உடையவர்கள், இந்த உலகிலேயே மிகுந்த விலை கொண்ட காதணியை அணிந்தவர்கள், பூரண சந்திரனை ஒத்த முகத்தை உடைய அந்தப் பதுமையைப் போன்றவர்கள், கள்ளத்தனத்துடன் கூடிய முழு மோசம் செய்பவர்கள் (ஆகிய இத்தகைய வேசியர்கள்) மீதுள்ள ஆசையால் மேலான மார்க்கத்தை அறியாத அந்தக் காமாந்தகர் உயிரையே பலி கொள்ளுகின்ற ஆசைக்காரிகள், அம்பையே கண்ணாகத் தேடி வைத்துள்ளவர்கள், முகம் காட்டிப் பாசாங்கு செய்கின்ற வெளி வேஷதாரிகள், பொருள் மேலேயே ஆசை கொண்டுள்ளவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) வடிவழகு கொண்டுள்ள மார்பகங்களான சிகர முனைகள் என் நெஞ்சில் தைக்க உள்ளம் அழிகின்ற எனக்கு ஒப்பற்ற அருளைப் புரிந்திடுக. மரகதப் பச்சை நிறம் கொண்டவளும், முத்துக்கள் போன்ற பற்களை உடையவளுமான குறப் பெண்ணான வள்ளியின் அதிக பாரமுள்ள ஆபரணம் அணிந்த மார்பினைப் பொருந்திய மணவாளக் கோலம் உடையவனே, பெரிய பூமியை வளைந்துள்ள ஆழமான கடல் முறையிட, அக்கடலின் நடுவில் சென்று பெரிய மலையாகிய கிரவுஞ்சத்தை பிளவுபடும்படி வேலைச் செலுத்திய மிக்க வல்லவனே, (ஆதிசேஷனாம்) பாம்பணையின் மேல் ஏறி, சீராகக் கண் துயிலும் திருமால், சக்ராயுதத்தை ஏந்தியவன், (சிவனுடைய) இரண்டு திருவடியின் என்லையைத் தேடிப் பார்ப்பதற்கும் கிடையாதிருந்தவரும், அலைகளைக் கொண்ட கங்கையைச் சடையில் தரித்தவருமாகிய சிவ பெருமான் மெச்சுகின்ற ஆண்மையை உடைய ஒப்பற்ற மயில் என்னும் குதிரையை வாகனமாகக் கொண்டவனே, அழகிய திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 361 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - .....

தானத் தான தான தனதன     தானத் தான தான தனதன          தானத் தான தான தனதன ...... தனதான

காவிப் பூவை யேவை யிகல்கவன     நீலத் தால கால நிகர்வன          காதிப் போக மோக மருள்வன ...... இருதோடார் 
காதிற் காதி மோதி யுழல்கண     மாயத் தார்கள் தேக பரிசன          காமக் ரோத லோப மதமிவை ...... சிதையாத 
பாவிக் காயு வாயு வலம்வர     லாலிப் பார்கள் போத கருமவு          பாயத் தான ஞான நெறிதனை ...... யினிமேலன் 
பாலெக் காக யோக ஜெபதப     நேசித் தார வார பரிபுர          பாதத் தாளு மாறு திருவுள ...... நினையாதோ 
கூவிக் கோழி வாழி யெனமயி     லாலித் தால கால மெனவுயர்     கூளிச் சேனை வான மிசைதனில் ...... விளையாடக் 
கோரத் தீர சூர னுடைவினை          பாறச் சீற லேன பதிதனை          கோலக் கால மாக அமர்செய்த ...... வடிவேலா 
ஆவிச் சேல்கள் பூக மடலிள     பாளைத் தாறு கூறு படவுய          ராலைச் சோலை மேலை வயலியி ...... லுறைவோனே 
ஆசைத் தோகை மார்க ளிசையுட     னாடிப் பாடி நாடி வருதிரு          ஆனைக் காவில் மேவி யருளிய ...... பெருமாளே.

கருங்குவளைப் பூவுடனும், அம்புடனும் ஒத்திருந்தும் மாறுபடுவன. கருநீல ஆலகால விஷத்தை ஒப்பன. கொல்லும் தன்மையதாய் இன்பத்தையும் காம மயக்கத்தையும் கொடுப்பன. இரண்டு தோடுகளை அணிந்துள்ள காதுகளை வெட்டுவன போலப் போய் மோதித் திரியும் கண்களைக் கொண்டு, மாயக்காரிகள் (ஆகிய வேசையர்களின்) தேகத்தைத் தொடுதற்குள்ள ஆசை, கோபம், ஈயாமை, செருக்கு இவை அழியாத பாவியாகிய எனக்கு, ஆயுளும், பிராணவாயுவும் வலிமை வரும்படி அன்பு வைத்தவர்களுடைய அறிவோடு கூடிய தொழில்களின் உபாயத்தைக் காட்டும் ஞான வழியை, இனி மேல் என் மீது அன்பு வைத்து, (அந்த வழியே) குறியாக வைத்துக் கொண்டு, ஜெப தபம் இவைகளில் அன்பு வரும்படிச் செய்து, பேரொலி செய்யும் சிலம்பு அணிந்த உன் திருவடியில் என்னை ஆண்டு கொண்டு ஆளுமாறு நினைந்து அருளக் கூடாதோ? கோழியானது கூவி வாழிய என்று வாழ்த்தி, மயில் ஆரவாரம் செய்து விஷம் போல உயர்ந்து விளங்க, சிவ கணங்களாகிய பூதகணச் சேனைகள் வானில் விளையாட, அச்சம் தருபவனும் தீரனுமான சூரனுடைய முயற்சி சிந்தி அழிய, சீறிப் பெருங் கோபத்துடன் வந்த ஆதிவராகத்தை* கூச்சலிட்டு அடங்க போர் செய்த கூரிய வேலனே, குளத்தில் உள்ள சேல் மீன்கள் கமுக மரத்தின் ஏடுகளாகிய இளம் பாளைகளின் குலைகள் பிளவுபடும்படி, உயர்ந்து பாயும் கரும்புகள் நிறைந்த சோலையைக் கொண்ட, மேலை வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, ஆசை நிரம்பிய பெண்கள் இசைபாடிக் கொண்டு விரும்பி வந்து வணங்குகின்ற திருவானைக்கா என்னும் ஊரில் விருப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஏனபதி = ஆதிவராகம். இரணியாக்ஷன் என்பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலின் கீழ் ஒளித்தான். பூமி தேவி முறையிட, திருமால் வராக ரூபம் எடுத்து, இரணியாக்ஷனைக் கொன்று பூமியை நிலை நிறுத்தினார். அரக்கன் ரத்தத்தைக் குடித்த வராகம் மதம் கொள்ள, சிவபெருமான் முருகனை அனுப்பினார். போரில் வராகத்தை முருகன் அடக்கி அதன் கொம்பைப் பிடுங்கிச் சிவனிடம் சேர்ப்பித்தார்.

பாடல் 362 - திருவானைக்கா 
ராகம் - ரஞ்சனி; தாளம் - அங்கதாளம் - 8 - புத்தகத்தில் -6 ?? தகதிமி-2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2

தனதன தானந்த தான தந்தன     தனதன தானந்த தான தந்தன          தனதன தானந்த தான தந்தன ...... தனதான

குருதிபு லாலென்பு தோன ரம்புகள்     கிருமிகள் மாலம்பி சீத மண்டிய          குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன ...... பொதிகாயக் 
குடிலிடை யோரைந்து வேட ரைம்புல     அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்          கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய ...... அதனாலே 
சுருதிபு ராணங்க ளாக மம்பகர்     சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை          துதியொடு நாடுந்தி யான மொன்றையு ...... முயலாதே 
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய     திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய          துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே 
ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்     நிருதரு மாவுங்க லோல சிந்துவும்          உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா 
உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்     அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்          உளமதில் நாளுங்க லாவி யின்புற ...... வுறைவோனே 
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்     அரிகரி கோவிந்த கேச வென்றிரு          கழல்தொழு சீரங்க ராச னண்புறு ...... மருகோனே 
கமலனு மாகண்ட லாதி யண்டரு     மெமது பிரானென்று தாள்வ ணங்கிய          கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் ...... பெருமாளே.

இரத்தம், ஊன், எலும்புகள், தோல், நரம்புகள், கிருமிகள், காற்று, நீர், மாமிசம், நெருங்கிய குடல்கள், கொழுப்பு, மயிர்கள், மூளை முதலியன நிறைந்த உடல் என்னும் குடிசையுள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாகிய வேடர்கள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலக் காட்டிலே ஓடுகின்ற, கெட்ட ஆசை கொண்ட வஞ்சகர்கள், மகா பொல்லாதவர்கள், பஞ்சமா* பாதகச் செயல்களை செய்ய, அதன் காரணமாக, வேதங்கள், புராணங்கள், ஆகம நூல்களில் சொல்லப் படுகின்ற சரியை, கிரியை, தேவ பூஜை, வழிபாடு தோத்திரம், நாடிச் செய்யும் தியானம் முதலியவற்றில்** ஒன்றையேனும் முயற்சித்து அநுஷ்டிக்காமல் அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள ஆணவக்காரர்களுடன் கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டுகொள்வதற்கும் நீ அருள்வாயாக. ஓர் ஒப்பற்ற வேலைக் கொண்டு, நெடிய கிரெளஞ்சமலையையும், அசுரர்களையும், மாமரமாய் நின்ற சூரனையும், ஆரவாரிக்கும் கடலையும் உடைபட்டுப் போகுமாறு போர் புரிந்த குமாரனே, தாமரையொத்த கரங்களை உடைய வீரனே, சிறந்த தவ முநிவர்கள், மேலுலகவாசிகளான தேவர்கள், உனது திருவடிகளைத் தொழுது நன்கு துதிக்கும் அடியார்கள், இவர்களது உள்ளத்தில் தினமும் விளையாடி இன்பமுற வீற்றிருப்போனே, ஆய்ந்து அறிந்த வேதத்தின் ஆறு அங்கங்களிலும்*** வல்ல, வேள்வி செய்யும் வேதியர்கள் ஹரி ஹரி, கோவிந்தா, கேசவா என்று துதிசெய்து, இரு திருவடிகளையும் வணங்கப்பெற்ற ஸ்ரீரங்கநாதரின் அன்புமிக்க மருமகனே, பிரம தேவனும், இந்திரன் முதலான மற்ற தேவர்களும் எங்கள் தலைவன் எனக் கூறி அடிபணிந்திடப் பெற்ற திருவானைக்காவில் வாழ்கின்ற ஜம்புநாதர் தந்தருளிய பெருமாளே. 
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
** 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். *** வேதத்தின் ஆறு அங்கங்கள் பின்வருமாறு: நிருத்தம், ஜோதிடம், சி¨க்ஷ, வியாகரணம், கற்பம், சந்தஸ்.

பாடல் 363 - திருவானைக்கா 
ராகம் - சுத்த ஸாவேரி; தாளம் - அங்கதாளம் - 6 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தானத் தானத் ...... தனதான     தானத் தானத் ...... தனதான

நாடித் தேடித் ...... தொழுவார்பால்     நானத் தாகத் ...... திரிவேனோ 
மாடக் கூடற் ...... பதிஞான     வாழ்வைச் சேரத் ...... தருவாயே 
பாடற் காதற் ...... புரிவோனே     பாலைத் தேனொத் ...... தருள்வோனே 
ஆடற் றோகைக் ...... கினியோனே     ஆனைக் காவிற் ...... பெருமாளே.

உன்னை விரும்பித் தேடித் தொழும் அடியார்களிடம் நான்விருப்பம் உள்ளவனாகத் திரியமாட்டேனோ? நான்மாடற்கூடல் என்ற மதுரையம்பதியில் உள்ள (துவாதசாந்த நிலையில்* கூடும்) ஞானவாழ்வை அடையும்படி அருள் புரிவாயாக. தமிழிசையில் பாடினால் ஆசையோடு கேட்பவனே, பாலையும் தேனையும் போல் இனிமையாக அருள்பவனே, நடனமாடும் மயிலுக்கு இன்பம் அளிப்பவனே, திருவானைக்கா தலத்தின் பெருமாளே. 
* மதுரை ஜீவன்முக்தி தலம் மட்டுமின்றி துவாதசாந்தத் தலமுமாய் உள்ளது.துவாதசாந்தம் என்பது சிரசின் உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கும் யோக ஸ்தானம்.இந்த ஞானம் மதுரையில் கிடைத்தற்கு உரியது.

பாடல் 364 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - .....

தனந்த தத்தன தானான தானன     தனந்த தத்தன தானான தானன          தனந்த தத்தன தானான தானன ...... தந்ததான

நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென     மறந்த ரித்தக ணாலால நேரென          நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென ...... நெஞ்சின்மேலே 
நெருங்கு பொற்றன மாமேரு நேரென     மருங்கு நிட்கள ஆகாச நேரென          நிதம்ப முக்கணர் பூணார நேரென ...... நைந்துசீவன் 
குறைந்தி தப்பட வாய்பாடி யாதர     வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு          குமண்டை யிட்டுடை சோராவி டாயில ...... மைந்துநாபி 
குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்     மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய          குரங்கை யொத்துழல் வேனோம னோலய ...... மென்றுசேர்வேன் 
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி     லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்          மனங்க ளித்திட லாமோது ரோகித ...... முன்புவாலி 
வதஞ்செய் விக்ரம சீராம னானில     மறிந்த திச்சர மோகோகெ டாதினி          வரும்ப டிக்குரை யாய்பார்ப லாகவ ...... மென்றுபேசி 
அறந்த ழைத்தநு மானோடு மாகடல்     வரம்ப டைத்ததின் மேலேறி ராவண          னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் ...... மைந்தனான 
அநங்கன் மைத்துன வேளேக லாபியின்     விளங்கு செய்ப்பதி வேலாயு தாவிய          னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.

நிறைந்த பவளம் போன்ற வாயிதழ் தேனை ஒக்கும் என்றும், வீரம் கொண்ட கண் ஆலகால விஷத்தை ஒக்கும் என்றும், நீண்டதும் சுருள் உடையதுமான கூந்தல் நீருண்ட மேகத்தை ஒக்கும் என்றும், மார்பின் மேல் நெருங்கியுள்ள அழகிய தனங்கள் பெரிய மேரு மலைக்கு ஒப்பானது என்றும், இடுப்பு உருவம் இல்லாத வெளிக்கு ஒப்பானது என்றும், அவர்களது பெண்குறி மூன்று கண்களை உடைய சிவபெருமான் அணிந்துள்ள மாலையாகிய பாம்புக்கு ஒப்பானது என்றும் கூறி உள்ளம் சோர்வடைந்து, சீவன் மங்கலுற்று, இன்பம் அழிய வாயால் பாடி, அன்பு இல்லாமல் அழைத்து படுக்கையின் மேல் விழும் ஆசையுடன் களித்துக் கூத்தாடி, ஆடை நெகிழவும், காம தாகத்தில் பொருந்தி, அந்த மாதர்களின் தொப்புளில் மூழ்கித் தொளைத்து அனுபவித்து, களைப்பைத் தருகின்ற பெரிய மாயை வாழ்க்கையைத் தருகின்ற விலைமாதர்கள் பால் ஒரு பைத்தியக்காரக் குரங்கைப் போன்று திரிவேனோ? மன ஒடுக்கம் என்று அடைவேன்? (தான் சொன்ன சொல்லை) மறந்த சுக்¡£வன் என்னும் பெரிய இழிந்த குரங்கரசன் வாசலில் நின்று, "உலுத்தனே நீ தெளிவு அடையாததற்கும் உணர்ச்சி பெறாததற்கும் என்ன காரணம்? மனம் களிப்புறுதல் நியாயமா? உன் செய்கை துரோகமாகும். முன்பு வாலியை வதம் செய்த வீரம் உள்ள ஸ்ரீராமன் நான் என்பதை உலகம் எல்லாம் அறியும். இந்த அம்பை கெட்டுப் போக விடவேண்டாம். இனியேனும் தாமதிக்காது வரும்படிப் போய்ச் சொல்லிப் பல பேர்களின் விளைவைப் பார்ப்பாயாக" என்று (இலக்குமணர் மூலமாகச் சுக்¡£வனுக்குச்) சொல்லி அனுப்ப, தரும நெறி விளங்கும் அனுமானுடன் பெரிய கடலில் அணையைக் கட்டி அந்த அணையின் மீது போய் ராவணனுடைய கோட்டைகளை அழித்து எதிர்த்துப் போராடிய (ராமனாகிய) திருமாலின் மைந்தன் மன்மதனுக்கு மைத்துனனான* தலைவனே, மயில் மீது விளங்கும், வயலூர் வேலாயுதப் பெருமாளே, சிறப்பும் நலமும் கொண்ட திருஆனைக்கா என்னும் பதியில் வாழ்வு கொண்டவனே, தேவர்கள் தம்பிரானே. 
* திருமாலின் மகள் வள்ளி. மகன் மன்மதன். எனவே, வள்ளியின் கணவன் முருகனுக்கு மன்மதன் மைத்துனன்.

பாடல் 365 - திருவானைக்கா 
ராகம் - தேஷ்; தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகதிமி-2, தகதிமி-2, தகிடதகதிமி-3 1/2 - எடுப்பு -1/2 இடம்

தனதன தனதன தாந்த தானன     தனதன தனதன தாந்த தானன          தனதன தனதன தாந்த தானன ...... தனதான

பரிமள மிகவுள சாந்து மாமத     முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய          பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு ...... முகில்போலே 
பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்     பரிபுர மலரடி வேண்டி யேவிய          பணிவிடை களிலிறு மாந்த கூளனை ...... நெறிபேணா 
விரகனை யசடனை வீம்பு பேசிய     விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு          வெகுளியை யறிவது போங்க பாடனை ...... மலமாறா 
வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை     விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை          வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது ...... மொருநாளே 
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ     மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி          கழலணி மலைமகள் காஞ்சி மாநக ...... ருறைபேதை 
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி     கடலுடை யுலகினை யீன்ற தாயுமை          கரிவன முறையகி லாண்ட நாயகி ...... யருள்பாலா 
முரணிய சமரினில் மூண்ட ராவண     னிடியென அலறிமு னேங்கி வாய்விட          முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே 
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை     யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக          முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.

நறுமணம் மிக்க கலவைச் சாந்து, கஸ்தூரி, வாசனை வீசும் நல்ல பூக்கள் இவைகளில் பொருந்திக் கூடியதும், பல ரேகைகளைக் கொண்ட வண்டுகளின் துயில் கொண்டதும், ஆகாயத்தில் உள்ள கருமேகம் போன்றதும், பரந்துள்ள இருளைப் போல் கரியதுமான கூந்தலை உடைய மாதர்களின் சிலம்பு அணிந்த மலர் போன்ற அடிகளை விரும்பி, அவர்கள் இட்ட வேலைகளை பணியாளாகச் செய்வதில் பெருமைகொள்ளும் பயனற்ற என்னை, ஒழுக்க முறையை அனுஷ்டிக்காத வீணனை, மூடனை, கர்வப் பேச்சு பேசும் உதவாக் கரையை, உரிய கலை நூல்களை ஆய்ந்து அறியாத முழு வெறுப்பு மிக்கவனை, அறிவு நீங்கிய வஞ்சகனை, குற்றங்கள் நீங்காத வினை நிரம்பியவனை, சொல்லும் சொல் தவறிய பாவியை, இறந்தபின் சேரும் நரகத்தில் இப்போதே விழுந்துள்ள மூடனை, எனக்கு என்ன ஆயிற்று என்று கவனித்துக் கேட்டு, திருவருள் பாலித்து, நன்கு ஆண்டருளுவதாகிய காலமும் ஒன்று உண்டா? பகைவர்களின் முப்புரங்களை அழித்துத் தூளாக்க மேரு மலையை ஒரு கையில் வில்லாக வளைத்த நாராயணி (விஷ்ணுவின் தங்கை), சிலம்பணிந்த மலை மகள், காஞ்சி நகரில் விளங்கும் தேவி காமாக்ஷி, இன்பமாய் ஆடும் மயில் போன்றவள், சிவபெருமானுடன் வாழும் அழகி, கடலை ஆடையாகக்கொண்ட உலகத்தை ஈன்ற தாயாகிய உமா தேவி, திருவானைக்காவில் வீற்றிருக்கும் அகிலாண்ட நாயகி அருளிய குழந்தையே, மாறுபட்ட போரில் முற்பட்டெழுந்த இராவணன் (வலியினால்) இடி ஒலியுடன் அலறியும், அதற்கு முன் கலங்கி வாய்விட்டு அழவும், (அவனுடைய) பல தலைகளை அரிந்துத் தள்ளிய இராமனும், விஸ்வரூபம் எடுத்தவனுமாகிய திருமாலின் மருகனே, முன்பு, ஒப்பற்ற குற மகள் வள்ளியின் நுண்ணிய நூல்போன்ற இடை மீதும், இரண்டு மார்புகளின் மீதும் தோய்ந்த காதலனே, மிகப் பழையதான வேதங்களை ஆய்ந்துள்ள தேவர்களின் பெருமாளே. 

பாடல் 366 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - ......

தானத் தானன தத்தன தத்தன     தானத் தானன தத்தன தத்தன          தானத் தானன தத்தன தத்தன ...... தனதான

வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்     காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்          வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் ...... முலையானை 
மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்     மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்          வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் ...... களிகூருஞ் 
சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்     காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்          தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் ...... எவரேனும் 
தோயப் பாயல ழைக்கும வத்திகள்     மோகப் போகமு யக்கிம யக்கிகள்          சூறைக் காரிகள் துக்கவ லைப்பட ...... லொழிவேனோ 
காலைக் கேமுழு கிக்குண திக்கினில்     ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண          காயத் ¡£செப மர்ச்சனை யைச்செயு ...... முநிவோர்கள் 
கானத் தாசிர மத்தினி லுத்தம     வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்          காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் ...... மருகோனே 
ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை     பாயச் சாலித ழைத்திர தித்தமு          தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... யுறைவேலா 
ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு     நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு          ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு ...... பெருமாளே.

வேலைப் போன்று கூர்மையான கண் கொண்டு மயக்குபவர்கள், காமம், கோபம் இவைகளை உண்டு பண்ணும் துஷ்டப் பெண்கள், தெருக்களில் திரியும் பயனிலிகள், யானையைப் போல விளங்கும் மார்பகத்தை மேலே எதிர்த்துப் போர் செய்ய விடுகின்ற தந்திரவாதிகள், மார்பையும், தோளையும் அசைத்து நடப்பவர்கள், மன்மதனுக்கே ஆண்மைச் சக்தியைத் தருகின்ற சாமர்த்தியசாலிகள், மகிழ்ச்சி பொங்கும் சோலைக் குயில்கள் போன்ற பேச்சை உடையவர்கள், பொருள் இல்லாதவர்களைப் பக்குவமாக நீக்குபவர்கள், உடலின் தோலைப் பொடியால் பூசி மினுக்கி (கண்டோர்) மனதை உருக்குபவர்கள், யாரோடும் சிற்றின்ப சுகத்துக்காக படுக்கைக்கு அழைக்கும் கேடு கெட்டவர்கள், மோகானுபவத்தைத் தந்து இணைந்து மயங்க வைப்பவர்கள், இத்தகைய கொள்ளைக்காரிகளான விலைமாதருடைய துன்பம் தருவதான வலைக்குள் மாட்டிக்கொள்ளுதலை நீங்கேனோ? காலை நேரத்தில் குளித்து, கிழக்கு திசையை நோக்கி சூரிய பகவானே என்று துதிக்கும் நீர்க் கடன், காயத்திரி மந்திரம், அர்ச்சனை முதலியன செய்யும் முனிவர்கள் (வாழும்) காட்டில் ஆசிரமத்தில் மேன்மை வாய்ந்த யாக சாலையை (இடையூறின்றிக்) காக்கும் பொருட்டு, எதிர்த்து வந்த கொடியவளாகிய தாடகி என்னும் அரக்கியைக் கொன்ற கருணைக் கடலான திருமாலின் மருகனே, கரும்பாலைகளின் சாறு கொதித்து, வயலிடத்தே பாய்வதால், நெற் பயிர் செழுமையாக வளர்ந்து சுவை தருவதான அமுதம் ஆகின்ற, தேவர்கள் போற்றும் வயலூரில் வீற்றிருக்கும் வேலனே, சக்கரங்கள் கொண்ட தேர் வீதியில் வருகின்ற, உண்மை விளங்கும் திருநீறிட்டான் மதிள்* சுற்றிலும் உள்ள, அழகிய திருவானைக்கா என்னும் தலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் விரும்பும் பெருமாளே. 
* திருவானைக்காவில் ஐந்து மதில்கள் உள்ளன. நான்காவது மதில், திருநீறிட்டான் மதில், மிகப் பெரியது. இதைக் கட்டும் போது சிவபெருமான் ஒரு சித்தாளாகக் கூலிக்கு வேலை செய்தார். கூலியாக திருநீற்றையே கொடுக்க, அந்தத் திருநீறு பொற்காசு ஆயிற்று என்பது புராண வரலாறு - திரு ஆனைக்கா புராணம்.

பாடல் 367 - திருவானைக்கா 
ராகம் - .....; தாளம் - .........

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

குமர குருபர குணதர நிசிசர     திமிர தினகர சரவண பவகிரி          குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங் 
குறவர் சிறுமியு மருவிய திரள்புய     முருக சரணென வுருகுதல் சிறிதுமில்          கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக் 
கமரில் விழவிடு மழகுடை யரிவையர்     களவி னொடுபொரு ளளவள வருளிய          கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக் 
கருணை யடியரொ டருணையி லொருவிசை     சுருதி புடைதர வருமிரு பரிபுர          கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே 
தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்     மறுகி யலைபட விடநதி யுமிழ்வன          சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச் 
சகல வுலகமு நிலைபெற நிறுவிய     கனக கிரிதிரி தரவெகு கரமலர்          தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின் 
றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்     அகில புவனமு மளவிடு குறியவன்          அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே 
அரவு புனைதரு புநிதரும் வழிபட     மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்          அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே.

குமரனே, குருமூர்த்தியே, நற்குணங்கள் நிறைந்தவனே, அசுரர்கள் என்னும் இருளை நீக்கும் சூரியனே, சரவணபவனே, இமயமலையின் மகளுக்கு மகனே, பகீரதியின் (கங்கையின்) மகனே, தேவர்களுக்குத் தலைவனான இந்திரனின் சிறந்த மகளான மான் போன்ற தேவயானையையும், வேடர் குலப் பெண்ணான வள்ளியையும் தழுவும் வலிமை வாய்ந்த தோள்களை உடைய முருகனே, அடைக்கலம் என்று கூறி மனம் உருகுதல் கொஞ்சமும் இல்லாத கொடுமையான வினைக்கு ஈடானவனை, வீணனை, முட்டாளை, மிகுந்த காமம் என்னும் நிலப் பிளப்பில் விழும்படித் தள்ளுகின்ற அழகு வாய்ந்த விலைமாதர்கள், வஞ்சகமாக, (வருபவருடைய) கைப் பொருள் கொடுத்த அளவுக்குத் தகுந்தபடி இன்பம் கொடுக்கின்ற சேர்க்கை என்னும் சேற்றில் சோர்வுறும் அறிவிலியாகிய என்னை, (என் குறைகளைக் கருதாது,) அன்புடன் ஆண்டருள, கருணைக்குப் பாத்திரமான அடியார் கூட்டத்துடன் திருவண்ணாமலையில் ஒரு முறை வேதங்கள் பக்கங்களில் முழங்க நடந்து வந்த, இரண்டு சிலம்பணிந்த தாமரை போன்ற திருவடிகளை, கனவிலும், விழித்துக் கொண்டிருக்கும் போதும் மறவேனே. ஒலி மிக்க அலைகளை வீசும் வளைந்த கடலின் உட்பாகங்கள் கலங்க அலைச்சல் உறவும், விஷத்தை ஆறு போலக் கக்கி உமிழும், விளக்கமான தோற்றத்தைக் கொண்ட கூட்டமான படங்களை உடைய, பாம்பு அரசனாகிய வாசுகி (கடலைக் கடையும்) நீண்ட கயிறாகவும், எல்லா உலகங்களும் நிலைபெறும்படி நிறுத்தி வைக்கப்பட்ட பொன்மயமான மேரு மலை (மத்தாகச்) சுழலவும், (கடைபவர்களின்) அனேக பல திருக்கர மலர்களும் தளர்ச்சி அடைய, இனியதான அமுதத்தை ஒப்பற்ற தனி முதல்வனாக நின்று கடைந்து, தேவர்கள் பசி நீங்க உதவி செய்த கருணை வாய்ந்த மேக வண்ணன், எல்லா உலகங்களையும் பாதத்தால் அளக்க வல்ல குட்டை வடிவுடைய வாமனன், அளந்த போது நீண்ட (திரிவிக்கிரம) உருவம் கொண்டவன், மதித்து எண்ணுதற்கு அரியவன் (ஆகிய அத்தகைய திருமாலுக்கு) மருகனே, பாம்பை அணிகலனாகக் கொண்ட தூய்மையான சிவபெருமானும் துதிக்கும்படி, உனது குதலைச் சொல்லால் அவர் தெளிவு பெறும்படி, ஒளி மயமான அறிவை அறிவது தான் பொருள் ஆகும் என்று அவருக்கு உணர்த்தி அருளிய பெருமாளே. 

பாடல் 368 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ......

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

அருவ மிடையென வருபவர் துவரிதழ்     அமுது பருகியு முருகியு ம்ருகமத          அளக மலையவு மணிதுகி லகலவு ...... மதிபார 
அசல முலைபுள கிதமெழ அமளியில்     அமளி படஅந வரதமு மவசமொ          டணையு மழகிய கலவியு மலமல ...... முலகோரைத் 
தருவை நிகரிடு புலமையு மலமல     முருவு மிளமையு மலமலம் விபரித          சமய கலைகளு மலமல மலமரும் ...... வினைவாழ்வுஞ் 
சலில லிபியன சனனமு மலமல     மினியு னடியரொ டொருவழி படஇரு          தமர பரிபுர சரணமு மவுனமு ...... மருள்வாயே 
உருவு கரியதொர் கணைகொடு பணிபதி     யிருகு தையுமுடி தமனிய தநுவுட          னுருளை யிருசுடர் வலவனு மயனென ...... மறைபூணும் 
உறுதி படுசுர ரதமிசை யடியிட     நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்          உடைய வொருவரு மிருவரு மருள்பெற ...... வொருகோடி 
தெருவு நகரியு நிசிசரர் முடியொடு     சடச டெனவெடி படுவன புகைவன          திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு ......முனிவார்தஞ் 
சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய     பெரும அருணையி லெழுநிலை திகழ்வன          சிகரி மிசையொரு கலபியி லுலவிய ...... பெருமாளே.

உருவமே இல்லாத நுண்ணிய இடை என்று கூறும்படி வந்துள்ள பெண்களின் பவளம் போன்ற வாயிதழின் ஊறலாகிய அமுதைப் பருகியும், அந்த நிலையில் உருகியும், கஸ்தூரி வாசனை உடைய கூந்தல் அசையவும், அணிந்த ஆடை விலகவும், மிகக் கனத்த மலை போன்ற மார்பு புளகிதம் கொள்ள, படுக்கையில் கோலாகலமாக எப்போதும் காம மயக்கத்தோடு தன் வசம் இழந்து சேர்கின்ற அழகிய புணர்ச்சி இன்பம் போதும் போதும். உலகில் உள்ளவர்களை கற்பக மரத்துக்கு ஒப்பீர்கள் எனப் பாடும் கவித் திறமும் போதும் போதும். ஒன்றுக்கொன்று மாறுபடுகின்ற சமயக் கொள்கைகளும் போதும் போதும். அழகிய தோற்றமும், இந்த இளமையும் போதும் போதும். வேதனையும் அஞ்சுதலும் உண்டாக்கும் வினைக்கு ஈடான வாழ்வும் நீர் மேல் எழுதிய எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும் போதும். இனியேனும் உன் அடியாரோடு நானும் ஒரு வழிப்பட்டு (உன்னுடைய) இரண்டு ஒலி செய்யும் சிலம்புகள் அணிந்த திருவடியையும், மவுன உபதேசத்தையும் அருள்வாயாக. உருவம் கரியவனாகிய திருமாலை ஒப்பற்ற அம்பாகவும், பாம்பு அரசனான வாசுகியை (வில்லின் முனைகளில்) முடியப்படும் கயிறாகவும், பொன்னுருவ மேரு மலையை வில்லாகவும் கொண்டு, சக்கரங்கள் சூரிய சந்திரர் எனப்படும் சுடர்களாகவும், தேர்ப்பாகன் பிரமன் ஆகவும், வேதங்களாகின குதிரைகள் பூட்டப்பட்ட திண்ணிய தேவர்களே தேர் ஆகவும் வைத்துக்கொண்டு, (சிவபெருமான்) தேரில் அடி எடுத்து வைத்தவுடனே, நெறு நெறு என்று அந்தத் தேர் முறி படவும், அசைவு உறாத தவ நிலையைக் கொண்ட திரிபுரத்தில் இருந்த மூன்று சிவபக்தர்கள் * (தீயில் மாளாது உய்ந்து) அருள் பெறவும், (திரிபுரத்திலிருந்த) ஒரு கோடிக் கணக்கான வீதிகளும் ஊர்களும் அசுரர்கள் தலையுடன் சட சட என வெடி பட்டும், புகை விட்டும், திகுதிகு என்று எரியவிட்டும் தீ எழுப்பிய சிரிப்பைக் கொண்டு கோபித்தவரான சிவபெருமானது குழந்தையே, வேடர்கள் மகளைக் கண்டு உருக்கம் கொண்ட பெருமை வாய்ந்தவனே, திருவண்ணாமலையில் ஏழு** நிலைகள் விளங்கும் மலை உச்சியில் ஒப்பற்ற மயிலின் மேல் அமர்ந்து உலவி விளக்கம் தரும் பெருமாளே. 
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாது என உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கர் ஆகவும் போந்து, அசுரர்களை மயக்கிச் சிவபூஜையை கைவிடச் செய்தனர். ஆனால் மூன்று அசுரர்கள் மட்டும் சிவ நெறியிலேயே இருந்து ஒழுகி இறக்காமல் தப்பினர்.
** ஏழு நிலைகள் (குண்டலினி) - மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராக்ஷம்.

பாடல் 369 - திருவருணை 
ராகம் - ஹம்ஸா நந்தி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்     பிசித அசனம றவரிவர் முதலிய          கலக விபரித வெகுபர சமயிகள் ...... பலர்கூடிக் 
கலக லெனநெறி கெடமுறை முறைமுறை     கதறி வதறிய குதறிய கலைகொடு          கருத அரியதை விழிபுனல் வரமொழி ...... குழறாவன் 
புருகி யுனதருள் பரவுகை வரில்விர     கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய          லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள ...... றதுபோக 
உதறி லெனதெனு மலமறி லறிவினி     லெளிது பெறலென மறைபறை யறைவதொ          ருதய மரணமில் பொருளினை யருளுவ ...... தொருநாளே 
தருண சததள பரிமள பரிபுர     சரணி தமனிய தநுதரி திரிபுர          தகனி கவுரிப வதிபக வதிபயி ...... ரவிசூலி 
சடில தரியநு பவையுமை திரிபுரை     சகல புவனமு முதவிய பதிவ்ருதை          சமய முதல்வித னயபகி ரதிசுத ...... சதகோடி 
அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு     கருணை வருணித தனுபர குருபர          அருணை நகருறை சரவண குரவணி ...... புயவேளே 
அடவி சரர்குல மரகத வனிதையு     மமரர் குமரியு மனவர தமுமரு          கழகு பெறநிலை பெறவர மருளிய ...... பெருமாளே.

கருணை என்பதே சிறிதும் இல்லாது, தலை மயிர் பறிப்பவரும், அரக்கர்களுக்கு ஒப்பானவரும், புலால் உண்ணும் வேடர்களை ஒத்தவரும் ஆகிய சமணர் முதலிய வெகுவான பர சமய வாதிகள் பலரும் கலகங்கள் செய்தும், விபா£த உணர்ச்சியால் மாறுபட்டும், ஒன்று சேர்ந்து, ஆரவாரம் செய்து நீதி முறை கெட்டு, அவரவர் முறை வரும் போதெல்லாம் பெருங் கூச்சலிட்டுக் கதறி, வாயாடி, திட்டி, பண்பு தவறிப் பேசுகின்ற ஒன்றை, கலை நூல்களால் கருதவும் அரிதான மெய்ப் பொருளை, கண்களில் நீர் வர, பேச்சுக் குழறி, அன்புடன் மனம் உருகி உன் திருவருளைப் போற்றும் மன நிலை வந்தால், தந்திர புத்தி ஒழிந்தால், உலக சம்பந்தமான கட்டுக்கள் விட்டால், மனம், வாக்கு, காயம் இம் மூன்றின் தொழிலும் அழிந்தால், உயிரைச் சார்ந்து ஆட்டுவிக்கும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி உதறி விலக்கினால், எனது என்னும் ஆசையாகிய குற்றம் அற்றுப் போனால், அறிவில் எளிதாகப் பெறுதல் முடியும் என்று வேதங்கள் பறையறைந்து சொல்லுவதான அதனை, ஒப்பற்ற, தோற்றமும் முடிவும் இல்லாத பொருளை அடியேனுக்கு நீ அருள் செய்யும் ஒரு நாள் கிட்டுமா? என்றும் இளமையோடு கூடியதாய், தாமரை போன்றதாய், நறு மணம் வீசுவதாய், சிலம்பு அணிந்ததாயுள்ள திருவடிகளை உடையவள், பொன் மயமான மேருவை வில்லாக ஏந்தியவள், திரி புரத்தை எரித்தவள், கெளரி, பார்வதி, பகவதி, பயிரவி, சூலத்தைக் கையில் ஏந்தியவள், சடை தரித்தவள், போகங்களை நுகர்பவள், உமா தேவி, திரிபுரை, எல்லா உலகங்களையும் ஈன்றருளிய பதிவிரதை, எல்லா சமயங்களுக்கும் தலைவியும் ஆன பார்வதியின் மகனே, பாகீரதியின் (கங்கையின்) மகனே, நூறு கோடி சிவந்த சூரியர்களை விட அழகான ஒளியை வீசும் கருணையே, அலங்கார உருவான உடலை உடையவனே, குருபரனே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சரவணனே, குரா மலரை அணிந்த புயங்களை உடைய தலைவனே, காட்டில் சஞ்சரிக்கும் வேடர் குலத்து, பச்சை நிறம் உள்ள பெண்ணான வள்ளியும், தேவர் குமரியான தேவயானையும் எப்போதும் இரு பக்கத்திலும் அழகு விளங்க நிலை பெற்றிருக்க, அவர்களுக்கு வரம் தந்தருளிய பெருமாளே. 

பாடல் 370 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ......

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

துகிலு ம்ருகமத பரிமள அளகமு     நெகிழ இருதன கிரியசை தரஇடை          துவள மனிதரு மமரரு முநிவரு ...... முடனோடித் 
தொடர வனமணி மகரமி லகுகுழை     யடரு வனவிட மிளிர்வன ரதிபதி          சுருதி மொழிவன கயல்விழி புரள்தர ...... நடுவாக 
வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர     வனச பதயுக பரிபுர மொலிபட          மறுகு தொறுமுல வியினிய கலவியை ...... விலைகூறும் 
வரைவி லரிவையர் தருசுக சலதியி     லலையு மெனதுயி ரநுதின நெறிதரு          மவுன சிவசுக சலதியில் முழுகுவ ...... தொருநாளே 
முகிலு மதியமும் ரவியெழு புரவியு     நெடிய குலைமிட றிடறமு துககன          முகடு கிழிபட வளர்வன கமுகின ...... மிசைவாளை 
முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்     தடமு முளரிய அகழியு மதிள்களு          முழுது முடையதொ ரருணையி லுறைதரு ...... மிளையோனே 
அகிலு மருதமு முகுளித வகுளமு     மமுத கதலியும் அருணமும் வருடையு          மபரி மிதமத கரிகளு மரிகளு ...... முடனேகொண் 
டருவி யிழிதரு மருவரை தனிலொரு     சவர வனிதையை முநிதரு புனிதையை          அவச முடன்மல ரடிதொழு துருகிய ...... பெருமாளே.

ஆடையும், கஸ்தூரி ஆகிய நறு மணம் கமழும் கூந்தலும் நெகிழ்ந்து குலையவும், இரண்டு மலை போன்ற மார்பகங்கள் அசையவும், இடுப்பு துவளவும், மனிதரும், தேவர்களும், முனிவர்களும் கூடவே ஓடி வந்து தொடரவும், அழகு மணியால் ஆகிய மகர மீன் போல் விளங்கும் குண்டலங்களை தாக்குவனவாய், விஷம் பொலிவனவாய், ரதியின் கணவனான மன்மதனுடைய காம சூத்திரத்தை எடுத்துக் கூறுவனவாய், கயல் மீனை ஒத்த கண்கள் புரளவும், மத்தியில் கீறு பட்ட நிலவை ஒத்த, வில்லைப் போன்ற நெற்றி வியர்வுத் துளிகளைத் துளிக்கவும், தாமரை போன்ற இரண்டு திருவடிகளிலும் சிலம்பு ஒலிக்கவும், தெருக்கள் தோறும் உலாவி புணர்ச்சி இன்பத்தை விலை கூறுகின்ற அளவில்லாத பொது மகளிர் கொடுக்கும் கலவி இன்பக் கடலில் அலைகின்ற என்னுடைய உயிர், நாள் தோறும் நன்னெறியில் செலுத்தும் மெளன சிவ சுகக் கடலில் திளைத்து முழுகும்படியான பாக்கியம் கொண்டதாகிய நாள் ஒன்று வருமோ? மேகமும், நிலவும், சூரியனின் ஏழு குதிரைகளும் தமது நீண்ட குலைகளின் கழுத்து பாகத்தில் இடறுண்ணவும், பழைய ஆகாய உச்சி கிழி படவும், உயர்ந்து வளர்ந்துள்ள கமுகு மரங்கள் கூட்டத்தின் மேல் பாயும் வாளை மீன்களும் (அவைகளால்) விரட்டப்படும் கயல் மீன்களும் ஓடித் திரியும் வயல்களும், நறு மணம் வீசும் குளங்களும் தாமரை மலர்கள் விளங்கும் அகழிகளும், மதில்களும் இவை எல்லாம் உடையதான ஒப்பற்ற திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற இளையவனே, அகில், மருதம், மலர் விடும் மகிழ மரம், அமுதம் போல் இனிக்கும் வாழை மரம் ஆகியவைகளும், செம்மறி ஆடும், மலை ஆடும், கணக்கற்ற மத யானைகளும், குரங்குகளும், உடனே இழுபட்டுவரப் பாயும் அருவிகள் இறங்கி வரும் அருமையான (வள்ளி) மலையில், ஒப்பற்ற வேடுவப் பெண்ணும், சிவ முனிவர் தவத்தே வந்த பரிசுத்தமான நங்கையுமாகிய வள்ளியை தன்வசமிழந்த ஆசையுடன் திருவடிகளைத் தொழுது மனமுருகும் பெருமாளே. 

பாடல் 371 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .........

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

மகர மெறிகடல் விழியினு மொழியினு     மதுப முரல்குழல் வகையினு நகையினும்          வளமை யினுமுக நிலவினு மிலவினு ...... நிறமூசும் 
மதுர இதழினு மிடையினு நடையினு     மகளிர் முகுளித முலையினு நிலையினும்          வனச பரிபுர மலரினு முலரினு ...... மவர்நாமம் 
பகரு கினுமவர் பணிவிடை திரிகினு     முருகி நெறிமுறை தவறினு மவரொடு          பகடி யிடுகினு மமளியி லவர்தரு ...... மநுராகப் 
பரவை படியினும் வசமழி யினுமுத     லருணை நகர்மிசை கருணையொ டருளிய          பரம வொருவச னமுமிரு சரணமு ...... மறவேனே 
ககன சுரபதி வழிபட எழுகிரி     கடக கிரியொடு மிதிபட வடகுல          கனக கனகுவ டடியொடு முறிபட ...... முதுசூதங் 
கதறு சுழிகட லிடைகிழி படமிகு     கலக நிசிசரர் பொடிபட நடவிய          கலப மதகத துரகத ந்ருபகிரி ...... மயில்வாழ்வே 
தகன கரதல சிவசுத கணபதி     சகச சரவண பரிமள சததள          சயன வனசரர் கதிபெற முனிபெறு ...... புனமானின் 
தரள முகபட நெறிபட நிமிர்வன     தருண புளகித ம்ருகமத தனகிரி          தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய ...... பெருமாளே.

மகர மீன்களை வீசி எறியும் கடல் போன்ற கண்ணிலும், அவர்களது பேச்சிலும், வண்டுகள் ஒலி செய்யும் கூந்தல் வகைகளிலும், சிரிப்பிலும், வளப்பத்திலும், சந்திரன் போன்ற முகத்திலும், இலவ மலரைக் காட்டிலும் செந்நிற ஒளி விளங்கும் இனிமை தரும் வாயிதழிலும், இடையிலும் நடையிலும், மாதர்களின் அரும்பிய மார்பிலும், (அவர்கள்) நிற்கும் நிலையிலும், தாமரை போன்றதும், சிலம்பு அணிந்ததுமான மலர் போன்ற அடிகளிலும், அந்த மாதர்களின் பெயர்களைச் சொல்லிச் செபித்தாலும், அவர்கள் இட்ட வேலைகளைச் செய்வதிலேயே ஈடுபட்டுத் திரிந்தாலும், (அவர் பொருட்டு) மனம் உருகி நீதி முறை தவறி நடந்தாலும், அவர்களோடு விகட மொழிகள் பேசினாலும், படுக்கையில அவர்கள் கொடுக்கும் காமப் பற்றாகிய கடலில் முழுகினாலும், என் வசம் அழிந்தாலும், முதன் முதலில், திருவண்ணாமலைப் பதியில் நீ கருணையோடு அளித்து அருளிய மேலான ஒப்பற்ற உபதேச மொழியையும், உனது இரண்டு திருவடிகளையும் மறக்க மாட்டேன். விண்ணுலகத்துத் தேவர் தலைவனாகிய இந்திரன் துதிக்க, (சூரனுக்குத் துணையாயிருந்த) ஏழு மலைகளும் வட்டமான சக்ரவாள கிரியுடன் மிதிபட, வடக்கே உள்ள சிறந்த பொன்மயமான பருத்த (மேரு) மலை அடியோடு பொடிபட, பழைய மாமரத்து உருவில் இருந்த சூரன் அலறி, சுழி எறியும் கடலில் கிழிந்து அறுபட, மிக்க கலக்கத்தைச் செய்து வந்த அசுரர்கள் பொடிபட நடத்திய, தோகை நிரம்பிய பச்சை நிறமான குதிரையாகிய மயில் ஏறும் அரசனே, இமய மலை மயிலாகிய பார்வதியின் செல்வக் குமரனே, நெருப்பை ஏந்திய திருக் கரத்தனாகிய சிவபெருமானுடைய மகனே, கணபதியின் சகோதரனே, சரவணனே, நறு மணம் கொண்ட நூற்றிதழ்த் தாமரையில் பள்ளி கொண்டவனே, வேடர்கள் நற் கதி அடைய, சிவ முனிவர் பெற்ற, தினைப் புனம் காத்த மான் போன்ற வள்ளி நாயகியின் முத்தாலாகிய மேலாடை வளைவுபட நிமிர்ந்து எழுவனவும், இளமை வாய்ந்தனவும், புளகாங்கிதம் கொண்டனவும், கஸ்தூரி அணிந்துள்ளனவுமான மார்பகங்களாகிய மலைகளைத் தழுவ மோகம் கொண்டு ஒப்பற்ற மடல்* எழுதிய பெருமாளே. 
* மடல் எழுதுதல் - தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.

பாடல் 372 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .......

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென     முதிய மதியது முகமென நுதலிணை          முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி ...... யெனமூவா 
முளரி தனின்முகு ளிதமலர் முலையென     முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை          மொழிய வரியதொர் தெரிவையர் வினையென ...... மொழிகூறிப் 
பகலு மிரவினு மிகமன மருள்கொடு     பதியி லவர்வடி வுளதழ கெனவொரு          பழுது மறஅவர் பரிவுற இதமது ...... பகராதே 
பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட     விகட முடனடை பயில்மயில் மிசைவரு          பவனி தனையநு தினநினை யெனஅருள் ...... பகர்வாயே 
புகல வரியது பொருளிது எனவொரு     புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு          பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள் ...... புடைசூழப் 
புரமு மெரியெழ நகையது புரிபவர்     புனலும் வளர்மதி புனைசடை யினரவர்          புடவி வழிபட புதை பொருள் விரகொடு ...... புகல்வோனே 
அகில கலைகளு மறநெறி முறைமையு     மகில மொழிதரு புலவரு முலகினி          லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை ...... யதனாலே 
அறுவர் முலையுணு மறுமுக னிவனென     அரிய நடமிடு மடியவ ரடிதொழ          அருணை நகர்தனி லழகுடன் மருவிய ...... பெருமாளே.

மேகத்தைப் பகைத்துப் போராடும் முற்றின இருளுமே கூந்தல் என்றும், பூரண சந்திரனே முகம் என்றும், புருவம் இரண்டும் பகைவர்களால் கட்டப்பட்ட வில் என்றும், விரைந்து பாயும் அம்பு கண் என்றும், மூப்பில்லாத தாமரையின் அரும்பு நிலை மலர் மார்பு எனவும், பற்களையும் இரண்டு குண்டலங்களையும் பேச்சையும் உவமை சொல்லுதற்கு அரிதானதோர் மாதர்களின் செயலாற்றும் கருவிகள் எனவும் வர்ணித்துக் கூறி, பகலும் இரவும் மிக்க மன மருட்சியுடன் பொது மகளிரின் வடிவில் அழகு இருப்பிடம் கொண்டிருக்கின்றது என்று, சற்றும் குறைவிலா வகையில் அவர்கள் அன்பு கொள்ளுமாறு இன்ப வார்த்தைகளை அவர்களிடம் சொல்லித் திரியாமல், பகையுடன் வந்து எதிர்த்துப் போர் செய்யும் அசுரர்கள் துகைக்கப்பட்டு அழிய, நீ நடனம் செய்யும் மயிலின் மேல் உலவி வரும் காட்சியை தினமும் நினைப்பாயாக என்று வரம் தர வேண்டும். எடுத்துச் சொல்லுவதற்கு முடியாததான பொருள் இதுதான் என்றும், ஒரு புதிய வகையில் கற்பனை செய்ய முடியாததான முதன்மையானது என்றும், ஒப்பற்ற பொதுவாம் தன்மை கொண்டது இது என்றும் தவ நிலையில் உள்ள முனிவர்கள் பக்கத்தில் சூழ்ந்து கூறிவர, திரி புரம் எரியுண்ணச் சிரித்தவர், கங்கையையும் பிறையையும் அணிந்துள்ள சடையினர் ஆகிய சிவபெருமான் பூமியில் (சுவாமி மலையில்) உன்னை வழிபட்டு நிற்க, அவருக்கு ரகசியப் பொருளை ஆர்வத்துடன உபதேசித்தவனே, எல்லா கலைகளும் தரும நெறியைக் கூறும் நூல்கள் எல்லாவற்றையும் மொழிய வல்ல புலவர்களும், உலகிலுள்ள அறிஞர்களும், தவ நிலையைச் சார்ந்து முயல்பவர்களும், இயற்றமிழாலும், இசைத் தமிழாலும், ஆறு கார்த்திகை மாதர்களின் முலைப் பாலை உண்ணும் ஆறுமுக சுவாமி இவன்தான் என்று தியானித்துக் கூறி அருமையான நடனம் இடும் அடியவர்கள் உனது திருவடியைத் தொழுது நிற்க, திருவண்ணாமலை என்னும் ஊரில் அழகுடன் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 373 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ..........

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்     முலைக ளளவிடு முகபட பகடிகள்          முதலு முயிர்களு மளவிடு களவியர் ...... முழுநீல 
முழுகு புழுககில் குழைவடி வழகியர்     முதிர வளர்கனி யதுகவ ரிதழியர்          முனைகொ ளயிலென விழியெறி கடைசிய ...... ரநுராகம் 
மருவி யமளியி னலமிடு கலவியர்     மனது திரவிய மளவள வளவியர்          வசன மொருநொடி நிலைமையில் கபடியர் ...... வழியேநான் 
மருளு மறிவின னடிமுடி யறிகிலன்     அருணை நகர்மிசை கருணையொ டருளிய          மவுன வசனமு மிருபெரு சரணமு ...... மறவேனே 
கருதி யிருபது கரமுடி யொருபது     கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது          கடிய வியனகர் புகவரு கனபதி ...... கனல்மூழ்கக் 
கவச அநுமனொ டெழுபது கவிவிழ     அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு          களரி தனிலொரு கணைவிடு மடலரி ...... மருகோனே 
சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி     யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து          தரும னவர்பதி குடிவிடு பதனிசை ...... மயில்வீரா 
தருண மணியவை பலபல செருகிய     தலையள் துகிலிடை யழகிய குறமகள்          தனது தனமது பரிவொடு தழுவிய ...... பெருமாளே.

நறுமணம் நிறைந்த கூந்தலை முடித்துள்ள தந்திரசாலிகள். மார்பகங்களை அளவிட்டுக் காட்டும் மேலாடை அணிந்த வெளி வேஷதாரிகள். அவரவர்களின் மூல தனத்தையும் குணாதிசயங்களையும் அளந்திடவல்ல திருடிகள். முழுமையும் நீல நிறம் கொண்ட புனுகு சட்டம், அகில் இவையிரண்டும் குழைக்கப்பட்ட மணம் கொண்ட உருவ அழகியர். நன்கு பழுத்த (கொவ்வைக்) கனியின் தன்மையைப் பெற்றுள்ள வாயிதழை உடையவர்கள். கூர்மை கொண்ட வேலைப் போன்ற கண் பார்வையை வீசும் இழிந்தவர்கள். காமப் பற்று பொருந்த படுக்கையில் உடலுக்கு இன்பம் தரும் புணர்ச்சியினர் தங்கள் மனதை தாம் பெற்ற பொருளின் அளவுக்கு ஏற்ப அளந்து கொடுப்பவர்கள். பேசும் பேச்சில ஒரு நொடிப் பொழுதில் வஞ்சனை புகுத்துபவர். இத்தகைய பொது மகளிரின் வழியில் நான் மருள் கொண்ட அறிவில்லாதவன். தலை கால் தெரியாதவன். அத்தகைய எனக்கு திருவண்ணாமலையில்* கருணையுடன் நீ அருள் செய்த மெளன உபதேசத்தையும் நின் இரண்டு பெருமை மிக்க திருவடிகளையும் நான் மறக்க மாட்டேன். நன்கு ஆராய்ந்து பார்த்து, இருபது கரங்களும், ஒரு பத்து தலைகளும் பொன்னாலான கி¡£டங்களை அணிந்த ராவணன் ஆட்சி செய்ததும், பழமையானதும், காவல் கொண்டதுமான அற்புத நகரமாம் இலங்கை தீப்பிடிக்க, கவசம் போல் விளங்கிய அனுமனோடு எழுபது ஆயிரம் குரங்குகள் (மலைகளைப்) போட்டுக் கட்டிய அணையின் வழியாக அலைகடலை அடக்கிக் கடந்து, எதிர்த்துப் போர்செய்த போர்க்களத்தில் ஒப்பற்ற அம்பைச் செலுத்தும் வலிமை வாய்ந்த ராமனாம் திருமாலின் மருகனே, போராடிய அசுரர்கள் தங்கள் படையுடன் தமது வலிமை எல்லாம் தொலைந்தழிய, நிலை பெற்றிருந்த கிரவுஞ்ச மலையையும் இடித்துத் தள்ளி, யமதர்ம லோகத்துக்கு அனைவரையும் குடியேறும்படி உதவிய அழகு பொருந்திய மயில் வீரனே, புதிய மணிகளைப் பலவாறு செருகியுள்ள தலையை உடையவள், ஆடை இடையில் அழகாக அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பினை அன்புடன் தழுவிய பெருமாளே. 
* இது அருணகிரியார் திருஅருணையில் முருகனால் ஆட்கொள்ளப்பட்டதைக் குறிக்கும்.

பாடல் 374 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .........

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

விடமு மமுதமு மிளிர்வன இணைவிழி     வனச மலதழல் முழுகிய சரமென          விரைசெய் ம்ருகமத அளகமு முகிலல ...... வொருஞான 
விழியின் வழிகெட இருள்வதொ ரிருளென     மொழியு மமுதல வுயிர்கவர் வலையென          விழையு மிளநகை தளவல களவென ...... வியனாபித் 
தடமு மடுவல படுகுழி யெனஇடை     துடியு மலமத னுருவென வனமுலை          சயில மலகொலை யமனென முலைமிசை ...... புரள்கோவை 
தரள மணியல யமன்விடு கயிறென     மகளிர் மகளிரு மலபல வினைகொடு          சமையு முருவென வுணர்வொடு புணர்வது ...... மொருநாளே 
அடவி வனிதையர் தனதிரு பரிபுர     சரண மலரடி மலர்கொடு வழிபட          அசல மிசைவிளை புனமதி லினிதுறை ...... தனிமானும் 
அமர ரரிவையு மிருபுடை யினும்வர     முகர முகபட கவளத வளகர          அசல மிசைவரு மபிநவ கலவியும் ...... விளையாடுங் 
கடக புளகித புயகிரி சமுகவி     கடக கசரத துரகத நிசிசரர்          கடக பயிரவ கயிரவ மலர்களும் ...... எரிதீயுங் 
கருக வொளிவிடு தனுபர கவுதம     புநித முநிதொழ அருணையி லறம்வளர்          கருணை யுமைதரு சரவண சுரபதி ...... பெருமாளே.

விஷமும் அமுதமும் ஒன்று சேர்ந்து விளங்குகின்ற இரண்டு கண்களும் தாமரைகள் அல்ல, நெருப்பில் தோய்த்த அம்புகளாம் என்றும், நறு மணம் கமழும் கஸ்தூரி வாசனை கொண்ட கூந்தல் கரு மேகம் அல்ல, ஒப்பற்ற ஞான விழி நாடும் வழியை மறைக்கும் சூனியத்தைத் தரும் தனி இருளாம் என்றும், பேச்சும் அமுதம் அன்று, உயிரையே கவரும் வலை என்றும், விரும்பும் காமத்தை ஊட்டும் பற்கள் முல்லை அரும்பு அன்று, திருட்டுத்தனத்தைத் தம்மிடம் ஒளித்து வைத்துள்ளவை என்றும், வியப்பைத் தரும் தொப்புள் என்னும் இடமும் ஆற்றிடைப் பள்ளம் அன்று, (யானைகளைப் பிடிக்க அமைந்த) பெருங்குழியாம் என்றும், இடை உடுக்கை அன்று, மன்மதனின் உருவமாம் என்றும் (அதாவது அருவமானது), அழகிய மார்பகம் மலை அன்று, கொலை செய்யும் யமனே என்றும், மார்பிலே புரளுகின்ற கோத்த வடம் முத்து மாலை அன்று, யமன் விட்ட பாசக் கயிறே ஆகும் என்றும், இந்த விலைமாதர்கள் மாதர்களே அல்ல, பல வினைகள் சேர்ந்து அமைந்த உருவமே என்றும் காண வல்ல ஞான உணர்ச்சியோடு கலப்பதாகிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? வன தேவதைகள் உன்னுடைய இரண்டு சிலம்பணிந்த, அடைக்கலம் புகத் தக்க, தாமரைத் திருவடிகளை மலர் கொண்டு வழிபட, வள்ளிமலைக்கு அருகிலே விளைந்துள்ள தினைப் புனத்தில் இனிது அமர்ந்திருந்த ஒப்பற்ற மான் போன்ற வள்ளியும், தேவர்கள் வளர்த்த மகளாகிய தேவயானையும் இரண்டு பக்கங்களிலும் வர, பிளிறுவதும், முகத்தில் தொங்கும் அலங்காரத் துணி கொண்டதும், உணவு உண்டைகளை உட்கொள்வதும், வெண்ணிறம் கொண்டதும், துதிக்கை உடையதுமான மலை போன்ற யானையின்* மீது எழுந்தருளும் புதுமை வாய்ந்தவனே, (வள்ளி, தேவயானையுடன்) சேர்க்கை இன்பத்தில் விளையாடுகின்றனவும், கங்கணம் அணிந்தனவும், புளகிதம் கொண்டுள்ளனவுமாகிய புய மலைக் கூட்டத்தை உடைய அழகு வாய்ந்த உள்ளத்தவனே, அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகியவைகளுக்கு பயங்கரத்தை ஊட்டுபவனே, செவ்வாம்பல் மலர்களும், எரிகின்ற தீயும் கருகும்படி சிவந்த ஒளியை வீசுகின்ற உடலை உடையவனே, மேலான கெளதமர் என்னும் பரிசுத்தமான முனிவர் தொழுது பூசிக்க, திருவண்ணாமலையில் அற நெறியை வளர்த்த கருணை நிறைந்த உமா தேவி பெற்றருளிய சரவண பவனே, தேவர்கள் தலைவனாகிய இந்திரனுக்குப் பெருமாளே. 
* இது முருகவேளுக்கு உரிய பிணிமுகம் என்னும் யானை. பல தலங்களில் முருகனுக்கு பிணிமுக யானை வாகனமாக உள்ளது.

பாடல் 375 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ........

தனன தனதன தனன தனதன     தனன தனதன தனன தனதன          தனன தனதன தனன தனதன ...... தனதான

கமரி மலர்குழல் சரிய புளகித     கனக தனகிரி யசைய பொருவிழி          கணைக ளெனநுதல் புரள துகிலதை ...... நெகிழ்மாதர் 
கரிய மணிபுர ளரிய கதிரொளி     பரவ இணைகுழை யசைய நகைகதிர்          கனக வளைகல நடைகள் பழகிகள் ...... மயில்போலத் 
திமிரு மதபுழு கொழுக தெருவினி     லலைய விலைமுலை தெரிய மயல்கொடு          திலத மணிமுக அழகு சுழலிக ...... ளிதழூறல் 
திரையி லமுதென கழைகள் பலசுளை     யெனவு மவர்மயல் தழுவு மசடனை          திருகு புலைகொலை கலிகள் சிதறிட ...... அருள்தாராய் 
குமர குருபர குமர குருபர     குமர குருபர குமர குருபர          குமர குருபர குமர குருபர ...... எனதாளங் 
குரைசெய் முரசமொ டரிய விருதொலி     டமட டமடம டமட டமவென          குமுற திமிலைச லரிகி னரிமுத ...... லிவைபாட 
அமரர் முநிவரு மயனு மனைவரு     மதுகை மலர்கொடு தொழுது பதமுற          அசுரர் பரிகரி யிரத முடைபட ...... விடும்வேலா 
அகில புவனமொ டடைய வொளிபெற     அழகு சரண்மயில் புறம தருளியொ          ரருண கிரிகுற மகளை மருவிய ...... பெருமாளே.

நிறைந்த வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அவிழ்ந்து சரிய, புளகிதம் கொண்ட பொன் மயமான மலையைப் போன்ற மார்பகங்கள் அசைய, போரிடுவது போன்ற கண்கள் அம்புகள் என்னும்படியாக விளங்க, நெற்றி புரள, ஆடையை நெகிழ விடுகின்ற விலைமாதர்கள், கழுத்தில் கரிய மணி மாலை புரள்வதால் அருமையான ஜோதி ஒளி பரவ, இரண்டு குண்டலங்களும் அசைய, ஒளி விளக்கமுள்ள பொன்னாலாகிய வளையல்கள் கலகல என ஒலிக்க, மயில் போல நடை பயிற்றுபவர்கள், பூசப்பட்ட சாரமான புனுகு சட்டம் ஒழுகும்படி வீதியில் அலைய, விற்கப்படும் மார்பு வெளித்தோன்ற காமப் பற்றுடன் நெற்றிப் பொட்டு அணிந்துள்ள முக அழகுடன் அங்குமிங்கும் திரிபவர்களாகிய விலைமாதர்களின் வாயிதழ் ஊறலை பாற்கடலில் எடுத்த அமுதே இது என்றும், கரும்புச் சாறு இது என்றும், பலாப்பழத்தின் சுளை இது என்றும் கருதி, அந்த விலைமாதர்களை மோகத்தில் தழுவுகின்ற முட்டாளாகிய எனது குற்றங்கள், இழிவான குணங்கள், கொலைக்கு ஈடான நீசபுத்தி முதலியவைகள் சிதறி விலக அருள் புரிவாயாக. குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என்னும் ஓசையுடன் தாளங்கள் ஒலி செய்கின்ற முரசு போன்ற போர்ப் பறையுடன் அருமையான வெற்றி ஒலிகள் டமடம டமட டம டமட இவ்வாறு பலத்து ஒலிக்க, திமிலைப் பறை, சல்லரி என்னும் ஜாலரா வகை, கின்னரி என்னும் யாழ்வகை முதலிய வாத்தியங்கள் இசைக்க, தேவர்களும், முனிவர்களும் பிரமனும் மற்றும் எல்லாரும் தேன் நிறைந்த பூக்களோடு வணங்கி தத்தம் பதவிகளைப் பெற, அசுரர்களின் குதிரை, யானை, தேர்ப்படைகள் உடைபட்டு ஒழியவும் வேலாயுதத்தைச் செலுத்தியவனே, எல்லா உலகங்களும் எங்கும் ஒளி பெறவும் அழகிய பாதங்களை மயிலின் மேல் இருத்தி, ஒப்பற்ற திருவண்ணாமலையில் குறப் பெண்ணாகிய வள்ளியைச் சேர்ந்த பெருமாளே. 

பாடல் 376 - திருவருணை 
ராகம் - சிவரஞ்சனி ; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனதனத் தானனத் தனதனத் தானனத்     தனதனத் தானனத் ...... தனதான

கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்     கணவகெட் டேனெனப் ...... பெறுமாது 
கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்     கதறிடப் பாடையிற் ...... றலைமீதே 
பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்     பறைகள்கொட் டாவரச் ...... சமனாரும் 
பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்     பரிகரித் தாவியைத் ...... தரவேணும் 
அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்     றருணையிற் கோபுரத் ...... துறைவோனே 
அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்     தரியசொற் பாவலர்க் ...... கெளியோனே 
புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்     புனமறப் பாவையைப் ...... புணர்வோனே 
பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்     பொருமுழுச் சேவகப் ...... பெருமாளே.

கண்விழித்து உனக்கு எத்தனை நாள் பணிவிடைகள் செய்தேன், என்னை செயலற்றுப் போகச் செய்துவிட்டாயே என்றும், கணவனே, உன்னை இழந்து நான் அழிந்து போனேனே என்றும் மனைவி அழவும், என் கருத்திலேயே நிலைத்து நிற்கும் மகனே என்று தாயார் அழவும், புதல்வர் அப்பா எனக் கதறி அழவும், பிணத்தை வைத்த பாடையின் தலைமாட்டில் நின்று பழகிய சுற்றத்தார் அழவும், பழமையான நட்பினர்கள் அழவும், பறைகளை முழக்கிக் கொண்டு பலர் வரவும், யமனும் பருத்த கையிலுள்ள பாசக் கயிற்றை என்மீது விட்டெறியும் அந்தத் தருணத்தில் என்னைக் காப்பாற்றி உயிரைத் தந்தருள்க. வேலும், தர்ம நெறி வழுவாத சேவற்கொடியும் கைகளில் இனிது விளங்க, மயில் மீது விளங்கி, திருவண்ணாமலைக் கோபுரத்து வாயிலில் வீற்றிருப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, அவர்களிடை வளர்ந்த சிறிய குமரி தேவயானையை முத்தமிட்டு மகிழ்வோனே, சிவபிரானை அருமையான சொற்களால் பாடும் புலவர்களுக்கு எளியவனே, மேகங்கள் தங்கி இளைப்பாறும் அழகிய மலையாம் வள்ளிமலையின் நெருங்கிய மலைச்சாரலில் தினைப்புனம் காத்த வேடர்குலப் பெண் வள்ளியைக் கூடியவனே, தூளாகும்படியாக கிரெளஞ்ச மலையோடும், கடலில் மாமரமாக நின்ற சூரனோடும் போர் புரிந்த, பரிபூரண பராக்கிரமத்தை உடைய பெருமாளே. 

பாடல் 377 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ........

தனதனத் தானனத் தனதனத் தானனத்     தனதனத் தானனத் ...... தனதான

கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்     திலகுகட் சேல்களிப் ...... புடனாடக் 
கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்     களவினிற் காசினுக் ...... குறவாலுற் 
றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்     றுயர்பொருட் கோதியுட் ...... படுமாதர் 
ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்     புணையிணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ 
மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்     செறிதிருக் கோலமுற் ...... றணைவானும் 
மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்     றிடஅடற் சூரனைப் ...... பொரும்வேலா 
அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்     றருணையிற் கோபுரத் ...... துறைவோனே 
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்     றயருமச் சேவகப் ...... பெருமாளே.

கோபம் மிகுந்து உயிரைக் குலையச் செய்யும் அந்த யமனைப் போன்று, விளங்கும் சேல் மீன் போன்ற கண் மகிழ்ச்சியுடன் விரும்பிப் பார்க்க, யோசனை செய்து முன்னதாகவே உடலுக்கு அளவான பொருள் இவ்வளவு என்று பேசி, உள்ளத்தில் வைத்த கள்ளத்தனத்தால் பொருளுக்குத் தக்க உறவு பூண்டு, பொருந்திய மலர்ப் படுக்கையில் துயரத்தை உண்டு பண்ணியும், பிணக்கு உற்றும், அதிகப் பொருள் தர வேண்டும் என்று கூறி உட்படுகின்ற விலைமாதர்கள் கடிந்து கூறும் துன்பத்துக்கு என் உள்ளத்து அறிவை இழந்தவன் நான். என் உயிருக்குப் பிறவிக் கடலைக் கடக்கத் தெப்பம் போல உதவும் உனது இரு திருவடிகளையும் தொழ மாட்டேனோ? வேதங்களை எடுத்து ஓதுபவனாகிய பிரமனும், வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனும், மேகம் போலக் கருமை நிறம் நிறைந்த அழகிய கோலத்தைக்கொண்டு சேரும் திருமாலும், (சூரனுக்குப் பயந்து) மறைவிடம் தேடி (தன்னிடம்) அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என்ற காரணத்தால், மலைகளைக் கொண்ட நெடிய கடல் வற்றிப்போக, வலிமை வாய்ந்த சூரனோடு போர் செய்யும் வேலனே, அறிவு வாய்ந்த பெரியோர்களும் என்னுடன் கூடி (யான் பாடும் சந்தப் பாக்களால்) உன்னைப் பாட திருவண்ணாமலையில் கோபுரத்தில் மகிழ்ச்சியுடன் வீற்றிருப்பவனே, வள்ளி மலைக் காட்டில் மயில் போன்று உலாவும் வள்ளியின் அழகிய பெரிய மார்பகங்களுக்கு ஆசை அடைந்து சோர்வு கொண்ட வலிமை வாய்ந்த பெருமாளே. 

பாடல் 378 - திருவருணை 
ராகம் - ஸாரமதி ; தாளம் - கண்டசாபு

தனதனத் தானனத் தனதனத் தானனத்     தனதனத் தானனத் ...... தனதான

பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்     பயனுயிர்ப் போயகப் ...... படமோகப் 
படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்     படரெரிக் கூடுவிட் ...... டலைநீரிற் 
பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்     பிணிகளுக் கேயிளைத் ...... துழல்நாயேன் 
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்     பிரியமுற் றோதிடப் ...... பெறுவேனோ 
கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்     கமைவபற் றாசையக் ...... கழலோர்முன் 
கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்     கடவுள்செச் சேவல்கைக் ...... கொடியோனென் 
றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்     கருணையிற் கோபுரத் ...... துறைவோனே 
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்     றயருமச் சேவகப் ...... பெருமாளே.

பருத்ததான கைக்கயிறாகிய பாசக்கயிறை விட்டு வீசும் அந்த யமனிடத்தே இந்தப் பயனுள்ள உயிர் போய் அகப்பட்டுக் கொள்ள ஆசை வைத்து, பூமியில் சுற்றத்தார் எனப்படும் பலரும் என் உடலைப் பற்றிக் கொண்டு பலமாகப் படர்ந்து எரியும் நெருப்பில் இந்த உடலைக் கிடத்திவிட்டு, தாங்கள் அலை வீசும் நீரில் குளித்துவிட்டுப் பிரிந்து போகும், பாவத்துக்கு இடம் தருகின்ற இந்தப் பிறவியை அடைந்தே, மிகுந்த நோய்களால் இளைத்துத் திரிகின்ற நாயினும் கீழான எனது குற்றங்களைப் பொறுத்தவனே என்றும், என் பிழைகளைக் களைந்து ஆண்டருள்வாய் என்றும், அன்பு கொண்டு நான் உன்னை ஓதிப் புகழும் பாக்கியத்தைப் பெறுவேனோ? கரிய உடலின் நிறம் கொண்ட திருமாலின் நல்ல தாமரையை ஒத்த கண்ணையே மலராகக் கொள்வதற்கு* ஆசை கொண்ட அந்தத் திருவடியை உடையவராம் சிவபிரானின் முன்பு கலைகளின் சாரமாம் பிரணவப் பொருளை எடுத்து உபதேசித்தவன், கிரெளஞ்ச மலையைத் தொளை செய்தவன், தகுதி வாய்ந்த கடவுள், சிவந்த சேவற் கொடியைக் கையிலே கொண்டவன் என்றெல்லாம் அருமையான நல்ல பாடல்களைத் தெரிந்து கூறும் அடியார்களின் கூட்டத்துக்காக திருவண்ணாமலையில் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, காட்டில் வசித்த மயில் போன்ற வள்ளியின் பெரு மார்பைத் தழுவ ஆசை கொண்டு, தளர்ச்சி அடைந்த அந்தப் பராக்ரமப் பெருமாளே. 

பாடல் 379 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .........

தனதனன தான தத்த தனதனன தான தத்த     தனதனன தான தத்த ...... தனதான

தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட     தழலமளி மீதெ றிக்கு ...... நிலவாலே 
தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த     தறுகண்மத வேள்தொ டுத்த ...... கணையாலே 
வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று     மருவுமென தாவி சற்று ...... மழியாதே 
மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர     மயிலின்மிசை யேறி நித்தம் ...... வரவேணும் 
கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி     கலவிதொலை யாம றத்தி ...... மணவாளா 
கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த     கடியமல ராத ரித்த ...... கழல்வீரா 
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி     அருணைநகர் கோபு ரத்தி ...... லுறைவோனே 
அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி     அமரர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.

தக்க சமயம் பார்த்து ஒளிகொண்ட ஆகாயத்தில் நின்று, செம்மணி நிறத்தினதாய், விஷத்தைக் கலந்த நெருப்பை எனது படுக்கையின் மேல் வீசுகின்ற சந்திரனாலும், தலைவன் இடத்தினின்றும் நீங்காத என் மனதின் நிலைமையை அறியாது என்னை எதிர்த்த கொடியவனான மன்மதன் செலுத்திய மலர்ப் பாணங்களாலும், பல இனங்களைச் சேர்ந்த அறியாமை கொண்ட பெண்கள் தெரிந்து பேசும் வசை மொழிகளின் மிகுதியான வம்புப் பேச்சாலும், உன்னிடம் முழுமையும் ஈடுபட்டிருந்த என்னுடைய ஆவி கொஞ்சமும் அழியாமல், உச்சிக் கொண்டையும், நேர்த்தியான கடிவாள வாரும் கட்டியுள்ள, ஒய்யாரமாய் உலாவுகின்ற அழகிய மயிலின் மீது ஏறி நாள்தோறும் நீ வர வேண்டுகின்றேன். கருணை நீங்காத கண்களை உடையவள், சந்தனக் கலவை அழியாத மார்பகத்தை உடையவள், சேர்க்கை இன்பம் நீங்காத மறக்குலத்தவளாகிய வள்ளியின் கணவனே, விஷம் உடைய பாம்புகளின் வரிசையை ஜடா மகுடத்தின் மேல் வைத்த, சிறிது மாசும் இல்லாத குணத்தவரான, சிவபெருமான் போற்றி வணங்கிய திருப்பாதங்களை உடைய வீரனே, சிவந்த ரத்தினங்களில் அமைக்கப்பட்டது போன்ற ஒளி பொருந்திய சூரியன் வலம் வரும் வெற்றி விளங்குவதான திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே அசுரர்களுடைய குலத்தை வேருடன் அறுத்து, (யுகமுடிவில் வடதுருவத்தினின்று வரும் பெரும் நெருப்பாகிய) வடவாக்கினி போன்ற தீயை அவர்கள் மீது செலுத்தி தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.நிலவு, மன்மதன், மலர்க்கணை, ஊர்ப் பெண்களின் வசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 380 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ....

தனதனன தான தத்த தனதனன தான தத்த     தனதனன தான தத்த ...... தனதான

முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு     முழுமதிநி லாவி னுக்கும் ...... வசையாலும் 
மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு     முதியமத ராஜ னுக்கு ...... மழியாதே 
புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த     புதுமையினி லாறி ரட்டி ...... புயமீதே 
புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர     பொருமயிலி லேறி நித்தம் ...... வரவேணும் 
எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு     ளெழுதரிய கோபு ரத்தி ...... லுறைவோனே 
இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த     இளமுலைவி டாத சித்ர ...... மணிமார்பா 
செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த     சிவனைமுத லோது வித்த ...... குருநாதா 
திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற     சிறையடைய மீள விட்ட ...... பெருமாளே.

வடவாமுக அக்கினியில் முழுகி அங்கு பெற்ற சூட்டுடன் தோன்றும் பூரண சந்திரனுடைய ஒளிக் கிரணங்களுக்கும், நிந்தனைப் பேச்சு பேசும் மடமையுடைய மாதர்களுக்கும், இனிமை வாய்ந்த ஒப்பற்ற புல்லாங்குழலின் இசை ஒலிக்கும், பழையவனாகிய மன்மத ராஜனுடைய சேட்டைகளுக்கும் உட்பட்டு (நான்) அழிந்து போகாமல், புனுகு சட்டத்திலும், (மணம்) விளங்கும் கடம்பிலும், அழகிய குரா மலரிலும் வரிசையாக அமைந்த (மாலைகளின்) புதுமைத் தோற்றம் கொண்ட (உனது) பன்னிரு புயங்களின் மேல் தழுவிச் சேரும் வழியையே (நான்) நினைத்துள்ள உண்மையை உலகோர் தெரியும்படி, நீல நிறம் கொண்ட, அழகிய, சண்டை செய்ய வல்ல மயிலில் ஏறி நாள் தோறும் வர வேண்டும். மகர மீன்கள் துள்ளி எழும் தடாகங்கள் சுற்றிலும் உள்ள சோலைகள் சூழ்ந்த திருவண்ணாமலை என்னும் நகரில் எழுந்தருளிய, எழுதுவற்கு முடியாத அழகுடைய கோபுரத்தில் வீற்றிருப்பவனே, இடை துவள வேடப்பெண் வள்ளியின் ஆடை அசையவும், பருத்த இளமை வாய்ந்த அவளுடைய மார்பினை விடாத அழகிய மார்பனே, செழுமை கொண்ட பணாமுடி உடைய பாம்பு, நெருக்கமாக ஒழுகி விழும் கங்கை நீர் இவற்றைச் சடையில் தாங்கிய சிவபெருமானுக்கு முன்பு பிரணவத்தை உபதேசம் செய்த குரு நாதனே, பிரமன், திருமால் பின்னும் பல அருமையான தேவர்களும் அடைக்கப்பட்டிருந்த (சூரனின்) சிறையினின்றும், அவர்கள் மீளும்படி வெளிக்கொண்டு வந்த பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவி பாடியது போல் அமைந்தது.சந்திரன், மகளிரின் வசைச் சொற்கள், புல்லாங்குழல் இசை, மன்மதன் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 381 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ......

தனதனன தான தத்த தனதனன தான தத்த     தனதனன தான தத்த ...... தனதான

வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு     மதுரமொழி யாழி சைக்கு ...... மிருநாலு 
வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு     மடியருவ வேள்க ணைக்கு ...... மறவாடி 
நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு     நிறையுமிகு காத லுற்ற ...... மயல்தீர 
நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர     நிலவுமயி லேறி யுற்று ...... வரவேணும் 
மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து     மவுலியற வாளி தொட்ட ...... அரிராமன் 
மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க     மவுனமறை யோது வித்த ...... குருநாதா 
இடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு     ளினியகுண கோபு ரத்தி ...... லுறைவோனே 
எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு     மிடையுருவ வேலை விட்ட ...... பெருமாளே.

(யுக முடிவில் வட துருவத்திலிருந்து வெளிப்பட்டு வரும் நெருப்புக் கோளமான) வடவா முகாக்கினியின் உள்ளே நுழைந்து முழுகி (வானில்) எழுகின்ற சிறந்த சந்திரனுக்கும், மங்கையரின் இனிய மொழி போலச் சுவைக்கும் யாழின் இசை ஒலிக்கும், எட்டு மலைகளும், எட்டுத் திசைகளும் விடாமல் சுற்றி வளைத்து பேரொலி செய்யும் அலைகளை உடைய கடலுக்கும், இறந்து போய் உருவம் இழந்து அருவமாயுள்ள மன்மதனுடைய (மலர்ப்) பாணங்களுக்கும் மிகவும் வாடி, பொன் மயமான மேரு மலையைப் போன்றதும், புளகம் கொண்டதுமான மார்பை உடைய இந்தப் பெண் அருமை நிறைந்துள்ள மிக்க காதல் கொண்ட மயக்கம் தீர, (இவள் நிலைமையை) ஞாபகம் வைத்து, பீலிக் கண்களைக் கொண்ட, வெற்றி வாய்ந்த, பச்சை நிறம் கொண்ட, தோகையின் அழகு பொலியும் மயிலின் மேல் ஏறி அமர்ந்து நீ இவளிடம் வர வேண்டும். இதழ்கள் விரிந்த மலர் மாலைகள் சுற்றி அணிந்துள்ள இருபது தோள்களுடன், (ராவணனுடைய) பத்துத் தலைகளும் அற்று விழும்படியாக அம்பைச் செலுத்திய ஹரியாகிய ராமனின் மருகனே, பல தேவர்களுக்கும் அரியவராக நிற்கும் சிவபெருமான் கற்கும்படி மவுன ரகசிய வேதப்பொருளை உபதேசித்த குருநாதனே, வழியில் பாம்புகள் உலவுகின்ற பயங்கரமான திருவண்ணாமலை என்னும் சிறந்த நகரில் இனிமையான கிழக்கு கோபுரத்தில் உறைபவனே, ஏழு உலகளவும் அளாவி நிற்கும் (மேரு) மலையுடன் மாறுபட்டுப் பொருது*, பெரிய மலைகள் (கிரெளஞ்ச மலை, ஏழு குலகிரிகள்) எட்டையும் ஊடுருவும்படியாக வேலைச் செலுத்திய பெருமாளே. 
* முருகன் பாண்டியன் உக்கிரவழுதியாக மதுரையில் அவதரித்தபோது கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேருவிடம் பொற்குவியலைக் கேட்க, அது தராமையால் சினந்து செண்டால் மேருவின்மீது எறிந்து பொன் பெற்றார். இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் தலைவியின் செவிலித்தாய் பாடுவது போல அமைந்தது.நிலவொளி, யாழிசை, கடல் ஒலி, மன்மதன், மலர்க் கணை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 382 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .......

தானதன தானத் தானதன தானத்     தானதன தானத் ...... தந்ததான

ஆலவிழி நீலத் தாலதர பானத்     தாலளக பாரக் ...... கொண்டலாலே 
ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்     தாரநடை யால்நற் ...... கொங்கையாலே 
சாலமய லாகிக் காலதிரி சூலத்     தாலிறுகு பாசத் ...... துன்பமூழ்கித் 
தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்     சாவதன்மு னேவற் ...... கொண்டிடாயோ 
சோலைதரு கானிற் கோலமற மானைத்     தோளிலுற வாகக் ...... கொண்டவாழ்வே 
சோதிமுரு காநித் தாபழய ஞானச்     சோணகிரி வீதிக் ...... கந்தவேளே 
பாலகக லாபக் கோமளம யூரப்     பாகவுமை பாகத் ...... தன்குமாரா 
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்     பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.

விஷம் போன்ற கண்களாகிய நீலோற்பல மலராலும், வாயிதழ் ஊறல் பருகுவதாலும், கூந்தல் பாரமாகிய மேகத்தாலும், முத்துப்போன்ற பற்களாலும், வில்லைப் போன்ற நெற்றியாலும், விரிந்து அசைந்த நடையாலும், நல்ல மார்பகங்களாலும், மிகவும் மோகம் கொண்டவனாகி, யமனுடைய முத்தலைச் சூலத்தைக் கண்டு, அவன் கட்டும் பாசக் கயிற்றினால் துன்பத்தில் ஆழ்ந்து, அந்த மனச் சோர்வில் உயிர் வீழுதல் அடைந்து, ஊழ்வினை என்னை விடாது தொடர்ந்து, இறப்பதற்கு முன்னே என்னை ஆட்கொள்ள மாட்டாயோ? சோலைகளைக் கொண்ட காட்டில் அழகிய வேடர் பெண்ணாகிய வள்ளியை தோளில் உறவு பூண்டு அணைந்து கொண்ட செல்வமே, ஜோதி வடிவமான முருகனே, என்றும் அழியாமல் இருப்பவனே, ஞான பூமியாகிய திருவண்ணாமலையின் தெருவில் வீற்றிருக்கும் கந்த வேளே, குழந்தையே, தோகை நிறைந்த அழகிய மயிலை நடத்துபவனே, உமை பங்கனான சிவ குமாரனே, பாதத் தாமரையில் ஞான மலரை* இட்டுப் பாடும் அடியார்களின் தோழனே, தம்பிரானே. 
* ஞான பூஜை செய்வார்க்கு உரிய எட்டு புஷ்பங்கள்:மனத்தூய்மை, கொல்லாமை, ஐம்புலன் அடக்கம், பொறை, அருள், வாய்மை, தவம், அன்பு.

பாடல் 383 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .......

தானதன தானத் தானதன தானத்     தானதன தானத் ...... தந்ததான

பேதகவி ரோதத் தோதகவி நோதப்     பேதையர்கு லாவைக் ...... கண்டுமாலின் 
பேதைமையு றாமற் றேதமக லாமற்     பேதவுடல் பேணித் ...... தென்படாதே 
சாதகவி காரச் சாதலவை போகத்     தாழ்விலுயி ராகச் ...... சிந்தையாலுன் 
தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்     சாரல்மற மானைச் ...... சிந்தியேனோ 
போதகம யூரப் போதகக டாமற்     போதருணை வீதிக் ...... கந்தவேளே 
போதகக லாபக் கோதைமுது வானிற்     போனசிறை மீளச் ...... சென்றவேலா 
பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்     பாருலகு வாழக் ...... கண்டகோவே 
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்     பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.

மனம் வேறுபட்ட, பகைமை வஞ்சகம் இவைகளைக் கொண்ட விசித்திரமான மங்கையர்கள் மகிழ்ச்சியுடன் உறவாடுதலைக் கண்டு மோகித்து, அறியாமை உற்று, அதனால் குற்றம் குறைகள் என்னைவிட்டு நீங்காமல், மாறுதலை அடையும் உடலை விரும்பிப் பாதுகாத்து வெளியே தென்படாமல், பிறப்பும், (பாலன், குமரன், கிழவன் என்ற) மாற்றங்களும், இறப்பும் ஆகிய இவையாவும் தொலைய, குறைவில்லாத ஒன்றாக என் உயிர் விளங்க, மனத்தால் உனது புகழ் பெற்ற வேலாயுதத்தை, சேவல் கொடியை, தினைப்புனச் சாரலில் இருந்த வேடர்களின் மான் போன்ற வள்ளியை தியானிக்கமாட்டேனோ? யானை*, மயில் இவற்றின் மீது மலர் ஆசனம் இட்ட நடு இருப்பிடத்தில் எழுந்தருளி உலா வருகின்ற திருஅண்ணாமலை வீதியில் உள்ள கந்தப் பெருமாளே, யானையாகிய ஐராவதம் வளர்த்த மயில் போன்ற தேவயானை வாழும் பழைய விண்ணுலகத்தார் சென்றிருந்த (சூரனின்) சிறையினின்றும் அவர்கள் மீண்டு வருவதற்காக (சூரனுடன்) போருக்குச் சென்ற வேலனே, பெரிய பாபச் செயல்களைச் செய்தவனும், காலாட்படைகள் உடையவனுமான சூரன் முதலிய அரக்கர்கள் அனைவரும் விழுந்து மடிய, மண்ணுலகும் விண்ணுலகும் வாழும் பொருட்டு கருணை புரிந்த தலைவனே, உன் திருவடி மலர்களை நினைந்து, ஞான பூஜை செய்து பாடுகின்ற அடியார்களின் தோழனான தனிப் பெரும் தலைவனே. 
* முருகன் மயில் வாகனன் ஆகினும், அருள் செய்வதற்கும் போர் புரிவதற்குப் புறப்படும்போதும் பிணிமுகம் என்ற யானை வாகனத்தில் செல்வான் என்பர்.

பாடல் 384 - திருவருணை 
ராகம் - செஞ்சுருட்டி ; தாளம் - அங்தாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 - எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி

தனன தானன தானன தானன     தனன தானன தானன தானன          தனன தானன தானன தானன ...... தனதான

அமுத மூறுசோ லாகிய தோகையர்     பொருளு ளாரையெ னாணையு னாணையெ          னருகு வீடிது தானதில் வாருமெ ...... னுரைகூறும் 
அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்     தெருவின் மீதுகு லாவியு லாவிகள்          அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி ...... னருள்தாராய் 
குமரி காளிவ ராகிம கேசுரி     கவுரி மோடிசு ராரிநி ராபரி          கொடிய சூலிசு டாரணி யாமளி ...... மகமாயி 
குறளு ரூபமு ராரிச கோதரி     யுலக தாரிஉதாரிப ராபரி          குருப ராரிவி காரிந மோகரி ...... அபிராமி 
சமர நீலிபு ராரித னாயகி     மலைகு மாரிக பாலிந னாரணி          சலில மாரிசி வாயம னோகரி ...... பரையோகி 
சவுரி வீரிமு நீர்விட போஜனி     திகிரி மேவுகை யாளிசெ யாளொரு          சகல வேதமு மாயின தாயுமை ...... யருள்பாலா 
திமித மாடுசு ராரிநி சாசரர்     முடிக டோறுக டாவியி டேயொரு          சிலப சாசுகு ணாலிநி ணாமுண ...... விடும்வேலா 
திருவு லாவுசொ ணேசர ணாமலை     முகிலு லாவுவி மானந வோநிலை          சிகர மீதுகு லாவியு லாவிய ...... பெருமாளே.

அமுதம் ஊறி வருவது போல் இனிக்கும் சொற்களைக் கொண்ட மயில் போன்ற பெண்கள் பொருள் உள்ள செல்வர்களை "என் மேல் ஆணை உன் மேல் ஆணை என் வீடு சமீபத்தில் தான் இருக்கிறது, அங்கே வாரும்" என்று பேசுகின்ற மூட விலைமாதர், குதர்க்கம் பேசும் கேடுறுவோர், தெருவில் சரசமாக குலவி உலவுபவர்கள், அத்தகையோரது மாயை என் மீது தாக்காமலும், நான் கெடாமலும் இருக்க உனது திருவருளைத் தந்து அருளுக. குமரி, காளி, வராகி, மகேஸ்வரி, கெளரி, மோடி, முதலிய பெயர்களை உடையவள், தேவர்களுக்குக் கண் போன்றவள், பொய்யிலி, உக்ரமான சூலத்தை ஏந்தியவள், ஒளி மயத்தவள், சியாமளப் பச்சை நிறம் உடையவள், மகமாயி, வாமன உருவம் கொண்ட திருமாலின் சகோதரி, உலகத்தைத் தரித்துப் புரப்பவள், தயாள குணம் உடையவள், முதன்மை பூண்டவள், குருவாகிய சிவனுக்குக் கண் போன்றவள், வேறுபாடுகளைப் பூண்டவள், வணங்கப்படுபவள், அழகுள்ளவள், போர் வல்ல துர்க்கை, திரிபுரம் எரித்த சிவபெருமானின் பத்தினி, இமயவன் புதல்வி, கபாலம் ஏந்தியவள், நல்ல குணம் வாய்ந்த நாராயணி, நீர் பொழியும் மேகம் போன்றவள், சிவ சம்பந்தப்பட்டு விரும்பத்தக்கவள், பரா சக்தி, யோகி, வலிமை உள்ளவள், வீரம் உள்ளவள், பாற்கடலில் எழுந்த ஆலஹால விஷத்தை உண்டவள், சக்கரம் ஏந்திய திருக்கரத்தை உடையவள், இலக்குமி, ஒப்பற்ற எல்லா வேதமுமாய் நிறைந்த தாய் உமா தேவி (ஆகிய பார்வதி) ஈன்றருளிய பாலனே, பேரொலி செய்து போராடிய தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களுடைய தலைகளில் எல்லாம் ஆயுதங்கள் படும்படி செலுத்தி வைத்து, அங்கு கூடிய சில பேய்கள் குணலை என்ற ஆரவாரத்துடன் கூத்தாடி மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தியவனே, லக்ஷ்மீகரம் நிறைந்த சோணாசலேஸ்வரது திருவண்ணாமலையில் மேகம் உலவும் கோபுரத்தின் ஒன்பது நிலைகளைக் கடந்து கோபுர உச்சியில் விளக்கமுற்று உலாவிய பெருமாளே. 

பாடல் 385 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ........

தனன தானன தானன தானன     தனன தானன தானன தானன          தனன தானன தானன தானன ...... தனதான

உருகு மாமெழு காகவு மேமயல்     பெருகு மாசையு ளாகிய பேர்வரி          லுரிய மேடையில் வார்குழல் நீவிய ...... வொளிமானார் 
உடைகொள் மேகலை யால்முலை மூடியும்     நெகிழ நாடிய தோதக மாடியு          முவமை மாமயில் போல்நிற மேனிய ...... ருரையாடுங் 
கரவ தாமன மாதர்கள் நீள்வலை     கலக வாரியில் வீழடி யேநெறி          கருதொ ணாவதி பாதக னேசம ...... தறியாத 
கசட மூடனை யாளவு மேயருள்     கருணை வாரிதி யேயிரு நாயகி          கணவ னேயுன தாளிணை மாமலர் ...... தருவாயே 
சுருதி மாமொழி வேதியன் வானவர்     பரவு கேசனை யாயுத பாணிநல்          துளப மாலையை மார்பணி மாயவன் ...... மருகோனே 
தொலைவி லாவசு ரேசர்க ளானவர்     துகள தாகவு மேயெதி ராடிடு          சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் ...... வருவோனே 
அருணர் கோடியி னாரொளி வீசிய     தருண வாண்முக மேனிய னேயர          னணையு நாயகி பாலக னேநிறை ...... கலையோனே 
அணிபொன் மேருயர் கோபுர மாமதி     லதிரு மாரண வாரண வீதியு          ளருணை மாநகர் மேவியு லாவிய ...... பெருமாளே.

உருகி ஒழுகும் பெரிய மெழுகு போல மோகம் அதிகமாகி காமத்தில் வசப்பட்ட பேர்வழிகள் (பொது மகளிர் இல்லம்) வந்தால், நல்ல மெத்தை மேடையில் இருந்து தமது நீண்ட கூந்தலை விரித்து வேகமாக வாரிக் கொள்ளும் அழகிய விலைமாதர்கள், உடையாகக் கொண்டுள்ள மேல் ஆடையால் மார்பகங்களை மூடியும், அந்த ஆடை நெகிழும்படியாக வேண்டுமென்றே வஞ்சனையான ஆடல்களை ஆடியும் உவமை கூறப்படும் சிறந்த மயில் போன்ற நிறம் கொண்ட உடலை உடையவர்களும், பேசுவதிலேயே மறைமுகமாக கருத்தை அமைக்கும் மனத்தை உடையவர்களுமான விலைமாதர்களின் பெரிய வலையாகிய சச்சரவுக் கடலில் வீழ்கின்ற அடியேனாகிய நான் நன்னெறியைக் கருதமாட்டாத அதி பாதகச் செயல் புரிபவன். அன்பு என்பதையே அறியாத குற்றமுள்ள முட்டாளாகிய என்னையும் ஆட்கொண்டு அருளிய கருணைக் கடலே, வள்ளி, தேவயானை என்ற இரண்டு நாயகிகளின் கணவனே, உனது இரு தாமரைத் திருவடிகளைத் தந்து அருளுக. வேதங்களின் சிறந்த மொழிகளை ஓதும் அந்தணனாகிய பிரமன், தேவர்கள் ஆகியோர் போற்றும் கேசவன், ஐந்து வகையான ஆயுதங்களை* ஏந்தியவன், நல்ல துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள மாயவனாகிய திருமாலின் மருகனே, அழிவில்லாததாக தம்மை எண்ணிக்கொண்ட அசுரர்கள் தலைவர்களான சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகியவர் பொடிபடும்படி எதிர்த்துப் போர் புரிந்த ஒளி வீசும் வேலாயுதனே, ஏழு உலகங்களையும் (மயில் மேல் ஏறி) வலம் வருபவனே, கோடிக் கணக்கான சூரியர்களின் சுடர் வீசும் இளமை பொருந்திய ஒளி விளங்கும் முகங்கள் கொண்ட மேனியனே, சிவபெருமான் அணையும் உமா தேவியின் குழந்தையே, நிறைந்த கலைப் புலவனே, அழகிய பொன் மலை போல் உயர்ந்த கோபுரம், பெரிய மதில், ஒலி பெருகும் வேதங்கள் முழங்கும் வீதி, யானைகள் செல்லும் தெருக்கள் இவைகள் உள்ள திருவண்ணாமலையாகிய சிறந்த நகரில் விரும்பி உலவும் பெருமாளே. 
* திருமாலின் பஞ்ச ஆயுதங்கள்: சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், வாள் (கட்கம்) ஆகியவை.

பாடல் 386 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ..........

தனதன தனன தனந்த தானன     தனதன தனன தனந்த தானன          தனதன தனன தனந்த தானன ...... தனதான

கரியுரி அரவ மணிந்த மேனியர்     கலைமதி சலமு நிறைந்த வேணியர்          கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் ...... கஞ்சமாதின் 
கனமுலை பருகி வளர்ந்த காமனை     முனிபவர் கயிலை யமர்ந்த காரணர்          கதிர்விரி மணிபொ னிறைந்த தோளினர் ...... கண்டகாள 
விரிவென வுனது ளுகந்த வேலென     மிகவிரு குழையு டர்ந்து வேளினை          யனையவ ருயிரை விழுங்கி மேலும்வெ ...... குண்டுநாடும் 
வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற     விதமிகு கலவி பொருந்தி மேனியு          மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ ...... ழிந்திடாதோ 
எரிசொரி விழியு மிரண்டு வாளெயி     றிருபிறை சயில மிரண்டு தோள்முகி          லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ ...... டிந்துவீழ்வ 
தெனவிழ முதுகு பிளந்து காளிக     ளிடுபலி யெனவு நடந்து தாள்தொழ          எதிர்பொரு துதிர முகந்த வேகமு ...... கைந்தவேலா 
அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலை     அருணையி லறவு முயர்ந்த கோபுர          மதினுறை குமர அநந்த வேதமொ ...... ழிந்துவாழும் 
அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள்     அடவியி லரிவை குயங்கள் தோய்புய          அரியர பிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே.

யானையின் உரித்த தோலையும் பாம்பையும் அணிந்த உடலைக் கொண்டவர், ஒளிகள் கொண்ட திங்களும், கங்கையும் நிறைந்த சடையினர், நெருப்பையும், மானையும், பரசையும் ஏந்திய கையினர், தாமரையில் வாழும் லக்ஷ்மியின் பருத்த மார்பகங்களின் பாலைப் பருகி வளர்ந்த மன்மதனைக்* கோபித்து அழித்தவர், கயிலாயத்தில் அமர்ந்துள்ள மூலப் பொருளானவர், ஒளி பரப்பும் ரத்தின மணிகளும் பொன்னும் நிறைந்த தோளை உடையவராகிய இத்தகைய சிவபெருமானின் கழுத்தில் உள்ள ஆலகால நஞ்சின் விரிவோ (இந்த விலைமாதரின் கண்கள்) என்று எண்ணும்படியும், (கூர்மையில்) உன்னுடைய மனத்துக்கு விருப்பமான வேலாயுதமோ இது என்று எண்ணும் படியும், மிகவும் இரண்டு காதணி குண்டலங்களையும் நெருங்கியும், மன்மதனை ஒத்த ஆடவர்களின் உயிரையே விழுங்கியும், (இத்தனையும் செய்து) பின்னும் கோபித்து நாடுகின்ற செயலினைச் செய்யும் கண்களை உடைய விலைமாதர்களின் மார்போடு மார்பாக அணைந்தும், பலவிதமான காம லீலைகளில் பொருந்தி உடலும் அழகை இழக்கவும், நினைவும் அழிந்து இறந்து போகும் விதி என்னை விட்டு நீங்காதோ? நெருப்பை வீசும் கண்கள் இரண்டுடன், இரண்டு பிறை போன்ற ஒளி வீசும் பற்களுடனும், மலை போன்ற இரு தோள்களுடனும், கரிய மேகம் போல் வரும் அசுரர்களுடைய தலைகள் மேரு மலையே இடிந்து வீழ்வது போல் கீழே விழுந்து முதுகு பிளவுபட, காளிகள் (அப் பிணங்கள்) தமக்கு இட்ட பலி உணவு என நடந்து உனது திருவடிகளைத் தொழ, எதிர்த்துப் போர் செய்து, அசுரர்களின் ரத்தத்தை விரும்பிய வேகத்துடன் சென்ற வேலை உடையவனே, சிங்கம், யானை, புலி இவைகள் நெருங்கி வாழும் ஒளி வீசும் மலையாகிய திருவண்ணாமலையில் மிகவும் உயர்ந்த கோபுரத்தில் வீற்றிருக்கும் குமரனே, அளவில்லாத வேதங்கள் போற்றி வாழும் (உன் இயல்பான) ஆறு முக வடிவை விட்டு விட்டு, வேடர்கள் வாழும் காட்டில் இருந்த பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்களைச் சேரும் புயங்களை உடையவனே, திருமால், சிவன், பிரமன், இந்திரன் முதலான தேவர்கள் ஆகியவரின் தம்பிரானே. 
* மன்மதன் திருமாலுக்கும், லக்ஷ்மிக்கும் பிறந்த மகன்.

பாடல் 387 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - ..........

தனதன தனதன தந்த தானன     தனதன தனதன தந்த தானன          தனதன தனதன தந்த தானன ...... தநததான

கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட     வடதம னியகிரி கம்ப மாய்நட          கணபண விபரித கந்த காளபு ...... யங்கராஜன் 
கயிறென அமரர நந்த கோடியு     முறைமுறை யமுதுக டைந்த நாளொரு          கதியற வுலகைவி ழுங்கு மேகவொ ...... ழுங்குபோல 
வினைமத கரிகளு மெண்டி சாமுக     கிரிகளு முறுகிட அண்ட கோளகை          வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு ...... நஞ்சுபோல 
விடுகுழை யளவும ளந்து காமுக     ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக          விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ ...... ழிந்திடாதோ 
முனைபெற வளையஅ ணைந்த மோகர     நிசிசரர் கடகமு றிந்து தூளெழ          முகிலென வுருவமி ருண்ட தாருக ...... னஞ்சமீன 
முழுகிய திமிரத ரங்க சாகர     முறையிட இமையவர் தங்க ளூர்புக          முதுகிரி யுருவமு னிந்த சேவக ...... செம்பொன்மேரு 
அனையன கனவித சண்ட கோபுர     அருணையி லுறையும ருந்து ணாமுலை          அபிநவ வனிதைத ருங்கு மாரநெ ...... ருங்குமால்கொண் 
டடவியில் வடிவுக ரந்து போயொரு     குறமகள் பிறகுதி ரிந்த காமுக          அரியர பிரமபு ரந்த ராதியர் ...... தம்பிரானே.

ஒலிக்கின்ற பாற்கடலின் உட்புறம் எல்லாம் கலக்கிக் கொண்டு வெளிப்பட, வடக்கே உள்ள பொன் மலையாகிய மேருவை மத்தாக நட்டு, விபா£தமான நாற்றமுள்ள விஷத்தைக் கொண்ட நாகராஜனாகிய வாசுகியை கடையும் கயிறாகக் கொண்டு, பல கோடி தேவர்களும் வரிசை வரிசையாக அமுதம் கடைந்த அந்த நாளில், உய்யும் வழி ஒன்றும் இல்லாத வகையில் உலகையே விழுங்க வந்த கரிய மேகத்தின் வரிசை போல எழுந்து, செயலாற்றும் மத யானைகளும், எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும் சூடேறி வெந்து போக, அண்ட உருண்டைகள் யாவும் வெடிபட்டுப் போக, யாவரையும் மேலிட்டு வேல் போலப் பரந்து வரும் ஆலகால விஷம் போல, தொங்கும் குண்டலம் உள்ள செவிவரையிலும் பாய்ந்து காமம் கொண்டவர்களுடைய உயிரைக் கவர்வனவும், ஐந்து பாதகங்களுக்கும்* இடம் தருவனவுமான கண்கள் என்னும் வலையைக் கொண்ட விலைமாதர்கள் மீது காதல் மிகுவது என்னை விட்டு விலகாதோ? போர் முனையில் இடம் பெற்று வளைவாகச் சூழ்ந்து போர் ஆரவாரம் செய்யும் அசுரர்களின் சேனை முறிபட்டுப் பொடியாக, மேகம் போலக் கறுத்த உருவம் கொண்ட தாரகாசுரன் பயப்படும்படி, மீன்கள் வசிக்கின்றதும், அலை வீசுவதுமான கடல் ஓலம் இட, தேவர்கள் தங்கள் ஊர் போய்ச் சேர, பழைய (கிரவுஞ்ச) மலையில் வேல் ஊடுருவிச் செல்லும்படியாகக் கோபித்த வல்லவனே, செம் பொன் மேருமலைக்குச் சமமான பெருமை கொண்ட வலிய கோபுரங்களை உடைய திருவண்ணாமலையில் வீற்றிருக்கும், பிடித்துப் பருகுதல் இல்லாத உண்ணாமுலை அம்மை, புதியவளாகிய தேவி பார்வதி ஈன்ற குமரனே, அளவு கடந்த ஆசை கொண்டு காட்டில் உனது உண்மை வடிவத்தை மறைத்துச் சென்று, ஒப்பற்ற குறப் பெண்ணான வள்ளியின் பின்பே திரிந்த காமுகனே, திருமால், ருத்திரன், பிரமன், இந்திரன் ஆகிய தேவர்களுக்குத் தலைவனே. 
விலைமாதரின் விழிகளுக்கு ஆலகால விஷத்தை உவமை சொல்லவந்த கவிஞர், முதல் ஒன்பது அடிகளில் பாற்கடலைக் கடைந்த வரலாற்றைக் கூறுகிறார்.* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.

பாடல் 388 - திருவருணை 
ராகம் - குந்தலவராளி; தாளம் - மிஸ்ர சாபு தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தனனம் தனதன தனனம்     தனதன தனனம் ...... தனதான

இரவியு மதியுந் தெரிவுற எழுமம்     புவிதனி லினமொன் ...... றிடுமாதும் 
எழில்புதல் வருநின் றழுதுள முருகும்     மிடர்கொடு நடலம் ...... பலகூறக் 
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்     டுயிரினை நமனுங் ...... கருதாமுன் 
கலைகொடு பலதுன் பமுமக லிடநின்     கழலிணை கருதும் ...... படிபாராய் 
திருமரு வியதிண் புயனயன் விரியெண்     டிசைகிடு கிடவந் ...... திடுசூரன் 
திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்     சிடவலி யொடுகன் ...... றிடும்வேலா 
அருமறை யவரந் தரமுறை பவரன்     புடையவ ருயஅன் ...... றறமேவும் 
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்     கருணையி லுறையும் ...... பெருமாளே.

சூரியனும், சந்திரனும் தெரியும்படி விளங்கும் இப்பூமியில் சுற்றம் என்று பொருந்திவரும் மனைவியும் அழகிய மக்களும் உடன் நின்று அழுது, உள்ளம் உருகும்படியான வருத்தத்துடன் துன்ப மொழிகள் பல சொல்ல, கறுத்த உருவமும் நெருப்பு வீசும் கண்களுடனும் உள்ள யமனும் என் உயிரைக் கவர்ந்து செல்லக் கருதி வருவதற்கு முன்பாக, யான்கற்ற பல கலைகளும், என் துயரங்களும் ஒருங்கே நீங்கிட உன் திருவடிகளையே யான் தியானிக்கும்படி கண்பார்த்தருள்வாயாக. திருமகளை மார்பில் வைத்த திண்ணிய தோளினன் திருமாலும், பிரமனும், பரந்த எண்திசையிலுள்ள யாவரும் நடுநடுங்க வந்த சூரனுடைய வலிய புயங்கள் அறுபட்டு விழ, அலை வீசும் கடல் பயப்படுமாறு வலிமையோடு கோபித்த வேலனே, அரிய வேதங்களில் வல்லவரும், வானில் உறையும் தேவர்களும், உன்னிடம் அன்பு மிகுந்த அடியார்களும் பிழைக்கும் வண்ணம், அன்று முப்பத்திரண்டு* அறங்களையும் விரும்பிச் செய்த தேவி பார்வதியை தம் ஒரு பாகத்தில் இடப்பக்கமாகக் கொண்டவரான சிவபிரான் தங்கும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.

பாடல் 389 - திருவருணை 
ராகம் - முகாரி; தாளம் - மிஸ்ர சாபு - 3 1/2 தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தனனம் தனதன தனனம்     தனதன தனனம் ...... தனதான

விரகொடு வளைசங் கடமது தருவெம்     பிணிகொடு விழிவெங் ...... கனல்போல 
வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்     றெனவிதி வழிவந் ...... திடுபோதிற் 
கரவட மதுபொங் கிடுமன மொடுமங்     கையருற வினர்கண் ...... புனல்பாயுங் 
கலகமும் வருமுன் குலவினை களையுங்     கழல்தொழு மியல்தந் ...... தருள்வாயே 
பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்     படவர வணைகண் ...... டுயில்மாலம் 
பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்     பயமற விடமுண் ...... டெருதேறி 
அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்     கையுமுற அனலங் ...... கையில்மேவ 
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்     கருணையில் மருவும் ...... பெருமாளே.

சாமர்த்தியத்துடன் சூழ்ந்து துன்பத்தைத் தருகின்ற கொடிய பாசக் கயிற்றைக் கொண்டு, கண்கள் தீய நெருப்புப்போல கோபத்துடன் யமன் வந்து வாயிலில் நின்று, உயிரைக் கொள்ள வேண்டிய முறை நாள் இது என்று தெரிந்து, விதியின் ஏற்பாட்டின்படி நெருங்குகின்ற அச்சமயத்தில், வஞ்சகம் மிகுந்த மனத்துடன் மாதர்கள், சுற்றத்தார்கள் ஆகியோரின் கண்களில் நீர் பாய்கின்ற குழப்பம் வருவதற்கு முன்பாக, முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும் திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக. தன்னைத் துதிப்பவர்களுடைய மனத்தில் உறைபவரும், நஞ்சைக் கக்கும் பல பணாமுடிகளை உடைய பாம்பு (ஆதிசேஷன்) என்ற படுக்கையில் உறங்குபவரும் ஆகிய திருமால், அழகிய பழைய வேதத்தை ஓதுபவனும், தாமரையில் வீற்றிருப்பவனும் ஆகிய பிரமன், அங்கிருந்த தேவர்கள் அனைவரின் பயம் நீங்க ஆலகால விஷத்தை உட்கொண்டு, (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறி, பாம்புடன், சந்திரனையும் தரித்த ஜடையின் மேல் கங்கையையும் பொருத்தி, நெருப்பு அழகிய கையில் விளங்க, பார்வதி தேவியை தம் உடலின் இடது பாகத்தில் அமைத்துக் கொண்டவராகிய சிவ பெருமான் (ஆகிய மும்மூர்த்திகளும்) வீற்றிருக்கும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 

பாடல் 390 - திருவருணை 
ராகம் - .....; தாளம் - .......

தனதன தனன தனதன தனன     தனதன தனதன ...... தந்ததான

இடமடு சுறவை முடுகிய மகர     மெறிகட லிடையெழு ...... திங்களாலே 
இருவினை மகளிர் மருவிய தெருவி     லெரியென வருசிறு ...... தென்றலாலே 
தடநடு வுடைய கடிபடு கொடிய     சரம்விடு தறுகண ...... நங்கனாலே 
சரிவளை கழல மயல்கொளு மரிவை     தனிமல ரணையின ...... லங்கலாமோ 
வடகுல சயில நெடுவுட லசுரர்     மணிமுடி சிதறஎ ...... றிந்தவேலா 
மறமக ளமுத புளகித களப     வளரிள முலையைம ...... ணந்தமார்பா 
அடலணி விகட மரகத மயிலி     லழகுட னருணையி ...... னின்றகோவே 
அருமறை விததி முறைமுறை பகரு     மரியர பிரமர்கள் ...... தம்பிரானே.

இருக்கும் இடத்திலிருந்தே வருத்தும் சுறா மீனை விரட்டி அடிக்கும் மகர மீன்கள் வாழ்வதும் அலைகளை வீசுவதுமான கடலில் எழுகின்ற சந்திரனாலும், நல் வினை தீ வினை இரண்டுக்கும் காரணமான மாதர்கள் வாழும் தெருவில் நெருப்பைப் போல வீசுகின்ற சிறிய தென்றல் காற்றினாலும், தடாகத்தின் நடுவே உள்ள நறு மணம் வீசுகின்ற கொடியதான தாமரை, நீலோத்பலம் ஆகிய மலர்ப் பாணங்களைச் செலுத்தும் இரக்கமற்ற மன்மதனாலும், சரிகின்ற வளையல்கள் கழன்று விழுமாறு காம மோகம் கொள்ளும் இந்தப் பெண் தனியாக மலர்ப் படுக்கையில் நொந்து போவது தகுமோ? வடக்கே உள்ள சிறந்த மேரு மலை போன்ற பெரிய உடலைக் கொண்ட அசுரர்களின் மணி முடிகள் சிதறிப் போகும்படி செலுத்திய வேலனே, வேடர் மகளான வள்ளியை, அமுதமும் புளகிதம் கொண்ட சந்தனக் கலவை பூசப்பட்ட வளர்ந்த இளமை வாய்ந்த மார்பினளான வள்ளியை, மணம் கொண்ட திருமார்பனே, வலிமையும், அலங்காரமும், வசீகரமும், பச்சை நிறமும் உள்ள மயிலில் அழகுடன் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அரசே, அரிய வேதங்களின் கூட்டம் முறைப்படி ஓதும் திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவர்க்கும் தம்பிரானே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில், முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், தென்றல், மன்மதன், மலர்க் கணைகள், இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 391 - திருவருணை 
ராகம் - ......; தாளம் - ......

தனதன தனனா தனதன தனனா     தனதன தனனா ...... தனதான

கெஜநடை மடவார் வசமதி லுருகா     கிலெசம துறுபாழ் ...... வினையாலே 
கெதிபெற நினையா துதிதனை யறியா     கெடுசுக மதிலாழ் ...... மதியாலே 
தசையது மருவீ வசையுட லுடனே     தரணியில் மிகவே ...... யுலைவேனோ 
சததள மலர்வார் புணைநின கழலார்     தருநிழல் புகவே ...... தருவாயே 
திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்     திருநெடு கருமால் ...... மருகோனே 
திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்     திரிபுரை யருள்சீர் ...... முருகோனே 
நிசிசர ருறைமா கிரியிரு பிளவா     நிறையயில் முடுகா ...... விடுவோனே 
நிலமிசை புகழார் தலமெனு மருணா     நெடுமதில் வடசார் ...... பெருமாளே.

(பெண்) யானையின் நடையைக் கொண்ட பொது மகளிருக்கு மனம் வசப்பட்டு, வருத்தம் தருகின்ற பாழான வினைப் பயனால், நல்ல கதியை அடைவதற்கு நினையாமலும், உன்னைத் துதிப்பதை அறியாமலும், அழிவைத் தரும் சிற்றின்பத்தில் ஆழ்ந்து போகின்ற புத்தியினால், சதையைக் கொண்டதும், பழிப்புக்கு இடமானதுமான உடலுடன் பூமியில் மிகவும் அலைவேனோ? நூறு இதழ்களை உடைய தாமரை போன்றதும், பிறவிக் கடலைத் தாண்டத் தெப்பம் போன்றதுமான உனது திருவடி நிரம்பத் தருகின்ற நிழலில் வந்தடைய அருள்வாயாக. நான்முகனான பிரமனை பெரிய சிறைக்குள் புக வைத்தவனே, அழகிய பெரிய கரிய நிறம் கொண்ட திருமாலின் மருகனே, திரிபுரங்களையும் நெருப்பிட்டு அழித்த சிவபெருமானுடைய இடது பாகத்தில் மகிழ்ந்திருக்கும் திரிபுரையாகிய பார்வதி ஈன்ற சிறப்பான குழந்தையே, அசுரர்கள் இருந்த பெரிய கிரெளஞ்ச மலை இரண்டு பிளவாகும்படி வீரம் நிறைந்த வேலை வேகத்துடன் செலுத்தியவனே, பூமியில் புகழ் நிறைந்த தலம் என்னும் பேர் பெற்ற திருவண்ணாமலையில் பெரிய மதிலின் வடப் புறத்தே வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 392 - திருவருணை 
ராகம் - .....; தாளம் -

தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்     தனத்தா தனத்தத் ...... தனதான

அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்     கடுத்தாசை பற்றித் ...... தளராதே 
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்     டறப்பே தகப்பட் ...... டழியாதே 
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்     கலிச்சா கரத்திற் ...... பிறவாதே 
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்     கலைப்போ தகத்தைப் ...... புகல்வாயே 
ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்     டுரைப்பார்கள் சித்தத் ...... துறைவோனே 
உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்     டொளித்தோடும் வெற்றிக் ...... குமரேசா 
செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்     செருச்சூர் மரிக்கப் ...... பொரும்வேலா 
திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்     றிருக்கோ புரத்திற் ...... பெருமாளே.

அருமை வாய்ந்த (உடல்) நலத்தைக் கெடுப்பவர்களான விலைமாதர்களுடைய மனத்துக்கு இயைந்த ஆசை கொண்டு சோர்வு அடையாமல், வலிமை வாய்ந்த யமனுக்கு என் அந்திம காலத்தில் (உயிரைக் கொள்வதற்கு வேண்டிய) உரிமையை மிதித்திட்டு, மிகவும் மனம் வேறு பாடு அடைந்து நான் அழியாமலும், பிறவிக்கு காரணமான செய்கையோரது நட்பை மிகக் கொண்டாடிக் கைக்கொண்டு, துன்பக் கடலில் நான் பிறவாமலும், நீ என் மீது அன்பு வைத்து உனது திருவடியைத் தந்து, கலை ஞானத்தை எனக்கு உபதேசிப்பாயாக. ஒரு முறை உன்னைத் தியானித்து (உனது) இரண்டு திருவடிகளையும் வெகுவாகப் புகழ்ந்து உரைப்பவர்களுடைய மனதில் உறைபவனே, வலிமையான தோளில் தேன்போல் இனிய குறப்பெண்ணான வள்ளியை வைத்து, மறைந்து ஓடின வெற்றி பொருந்திய குமரேசனே, ஆணவம் கொண்டு, கர்வம் மிகுந்து, தெய்வத் தன்மை உடைய தேவர்களை ஒடுக்கிய போருக்கு வந்த அந்தச் சூரன் இறக்க சண்டை செய்த வேலனே, நிலை பெற்ற பூமியில் திரண்ட திரு அண்ணாமலையில் அழகிய கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 393 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனனா தனனத் தனனா தனனத்     தனனதா தனனத் ...... தனதான

அருமா மதனைப் பிரியா தசரக்     கயலார் நயனக் ...... கொடியார்தம் 
அழகார் புளகப் புழுகார் சயிலத்     தணையா வலிகெட் ...... டுடல்தாழ 
இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்     றிளையா வுளமுக் ...... குயிர்சோர 
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்     கிருபா தமெனக் ...... கருள்வாயே 
ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்     டுரமோ டெறிபொற் ...... கதிர்வேலா 
உறைமா னடவிக் குறமா மகளுக்     குருகா றிருபொற் ...... புயவீரா 
திருமால் கமலப் பிரமா விழியிற்     றெரியா வரனுக் ...... கரியோனே 
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்     றிருவீ தியினிற் ...... பெருமாளே.

அரியவனும் அழகனுமான மன்மதனை விட்டு அகலாத பாணங்கள் போன்றதும், கயல் மீன்போன்றதும் ஆகிய கண்களை உடைய பொல்லாதவர்களான விலைமாதர்களின் அழகிய, புளகாங்கிதம் கொண்ட, புனுகுசட்ட வாசனை பூண்ட, மலைகள் போன்ற மார்பகங்களை அணைந்து, வலிமை இழந்து உடல் நலிய, இருமலில் வீழும் தன்மை வந்து சேர, பேச்சு அற்று, உணர்வும் போய், இளைத்து, உள்ளம் மெலிந்து, உயிர் சோர்வுற்று, நெருப்பு கொளுத்தும் (கும்பிபாக)* நரகத்தில் புகாத வண்ணம், உனது இரு திருவடிகளை எனக்குத் தந்து அருளுக. ஒப்பற்ற பெரிய கிரெளஞ்ச மலையை சிறு தூளாகும்படிச் செய்து, பலத்துடன் செலுத்திய, அழகிய ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே, மான்கள் வாழும் காட்டில் பெருமை வாய்ந்த குற மகளான வள்ளிக்கு உருகின பன்னிரண்டு திரண்ட தோள்களை உடைய வீரனே, திருமால், தாமரையில் வீற்றீருக்கும் பிரமன் ஆகிய இருவருக்கும் காணப் பெறாத சிவனுக்கும் அருமை வாய்ந்தவனே, செழுமை வாய்ந்த நீர் வயல்கள் சூழ்ந்துள்ள திரு அண்ணாமலையில் அகன்ற வீதிகளில் மகிழ்ச்சியுடன் உலாவரும் பெருமாளே. 
* எரிவாய் நரகம்: கும்பி பாகம் எனப்படும். இது ஏழு நரகங்களில் ஒன்று.பாவம் செய்தவரைக் குயச் சூளையில் சுடுவது போல் வாட்டும் நரகம்.ஏழு நரகங்கள் பின்வருமாறு:கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).

பாடல் 394 - திருவருணை 
ராகம் - .....; தாளம் -

தனதனா தானனத் தனதனா தானனத்     தனதனா தானனத் ...... தனதான

அழுதுமா வாவெனத் தொழுதமூ டூடுநெக்     கவசமா யாதரக் ...... கடலூடுற் 
றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்     கறியொணா மோனமுத் ...... திரைநாடிப் 
பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்     பெரியஆ தேசபுற் ...... புதமாய 
பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்     பெறுவதோ நானினிப் ...... புகல்வாயே 
பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்     படியுமா றாயினத் ...... தனசாரம் 
பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்     பரமமா யூரவித் ...... தகவேளே 
பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்     பொடிபடா வோடமுத் ...... தெறிமீனப் 
புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்     பொருதவே லாயுதப் ...... பெருமாளே.

அழுதும், ஆ ஆ என இரங்கித் தொழுதும், அவ்வப்போது பக்தியால் நெகிழ்ந்தும், தன் வசமற்று, ஆதாரம் என்ற அன்புக் கடலில் திளைத்தும், அமைதியற்ற ஆடம்பரமான சமய வாதப் பாதகர்களுக்கு அறிவதற்கு முடியாத மெளனக்குறியைத் தேடியும், தவறுதல் இல்லாத ஞான மெய்ப் பொருளை நான் அடையாமல், வினைக்கு ஈடான பெரிய மாறுபட்ட வடிவங்களை அடையும் நீர்க்குமிழி போன்ற நிலையற்ற பிறவி என்ற கடல் நீர்ச்சுழியிலே, நான் இனி மேல் போய் விழக் கடவேனோ? சொல்லி அருளுக. பழைய கங்கை என்னும் நீர் நிலையின் சரவணப் படுகையின்மேல் செல்வக் குமரர்களாய்த் தோன்றி, கார்த்திகைப் பெண்களாகிய ஆறு தாய்மார்களின் முலைப்பாலை உண்ட ஆறு திரு முகங்களை உடைய குழந்தையே, திருவண்ணாமலைப் பரமனே, மயில் வாகனனே, ஞான மூர்த்தியே, பொழுது சாயும் மாலை வேளையில் கிரெளஞ்சமலை பொடிபட, பூமி முதலியவை பொடிபட்டுத் தெறிக்க, முத்துக்களை வீசுவதும், மீன்களைக் கொண்டதுமான கடல் கோ கோ என்று கதற, வேதங்கள் கோ கோ என்று கதற போர் செய்த வேலாயுதத்தை ஏந்தும் பெருமாளே. 

பாடல் 395 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தானதனத் தானதனத் தானதனத் தானதனத்     தானதனத் தானதனத் ...... தனதானா

ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்     டாடைமறைத் தாடுமலர்க் ...... குழலார்கள் 
ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட்     டாரையுமெத் தாகமயக் ...... கிடுமோகர் 
சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்     தூதுவிடுத் தேபொருளைப் ...... பறிமாதர் 
தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்     சோதியொளிப் பாதமளித் ...... தருள்வாயே 
தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்     சாயகடற் சூரைவதைத் ...... திடுவோனே 
தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்     தாபரம்வைத் தாடுபவர்க் ...... கொருசேயே 
தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்     தேயுருகிச் சேருமணிக் ...... கதிர்வேலா 
சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்     தேவமகட் கோர்கருணைப் ...... பெருமாளே.

யானையின் கோடுகள் உள்ள தந்தத்தையும், இளநீரையும் ஒத்த கனமான மார்பகங்களைச் சார்ந்து அசைகின்ற பட்டு ஆடையால் மறைத்து ஆடுகின்ற, மலர் அணிந்த கூந்தல் உடையவர்கள், முத்து மாலையும் தோடும் மிக அசையப் பேசியும், இனிதாகச் சிரித்தும், பொன்னைப் பெற வேண்டி எவரையும் வஞ்சனையுடன் மயக்குவிக்கும் காமிகள், பெரும் மழைமேகம் போன்ற அடர்ந்த கூந்தலும், அழகிய விழியும் கொண்ட தோகை மயில் போன்ற சாதியர், தம் இடத்தே உள்ள தூதுவர்களை அனுப்பி, பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின் வஞ்சகத்தில் பட்டு, ஏழு* நரகத்தில் சேருதற்கு உரியவனும், தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய என்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிக. தானதனத்தீ என்று ஒலிக்கும் பறை வகைகள் முழங்க, நன்றாகக் கிரெளஞ்ச மலை அழிய, கடலில் ஒளிந்து நின்ற சூரனை வதைத்தவனே, தாளத்தின் இலக்கண விளக்கமானது ஒளி பொருந்திய தனது திருவடியின் மூலம் உண்டாகும்படி, ஒரு பாதத்தை வளைத்து எடுத்தும், மற்றொரு திருவடியைப் பூமியில் வைத்தும் நடமிடும் சிவபெருமானுடைய ஒப்பற்ற குழந்தையே, தேனின் சாறு போல் இனிக்கும், கொவ்வைப் பழம் போலச் சிவந்தும் உள்ள வாயிதழைக் கொண்ட, நாகணவாய்ப் புள் போன்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்புக்கு மனம் உருகி அவளிடம் சேர்ந்து, அழகிய ஒளி வீசும் வேலை உடையவனே, அழகிய திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருந்து, உன் மனதுக்கு உகந்த தினப் புன மயிலாகிய வள்ளிக்கும், (உன்னிடம்) மெய்யன்பு கொண்டிருக்கும் தேவயானைக்கும் ஒப்பற்ற கருணையைக் காட்டிய பெருமாளே. 
* ஏழு நரகங்கள் பின்வருமாறு:கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).

பாடல் 396 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனனத் தனதானன தனனத் தனதானன     தனனத் தனதானன ...... தனதான

இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு     மிறுதிச் சிறுகால்வரு ...... மதனாலே 
இயலைத் தருகானக முயலைத் தருமேனியி     லெரியைத் தருமாமதி ...... நிலவாலே 
தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை     தொலையத் தனிவீசிய ...... கடலாலே 
துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்     துவளத் தகுமோதுயர் ...... தொலையாதோ 
வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை     மடியச் சுடஏவிய ...... வடிவேலா 
மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்     மகிழப் புனமேவிய ...... மயில்வீரா 
அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய     லருணைத் திருவீதியி ...... லுறைவோனே 
அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி     அமரர்க் கரசாகிய ...... பெருமாளே.

துன்பத்துக்கு மேல் துன்பம் தருவதான கொடிய (மன்மத) பாணங்களின் மேலே வந்து, அழிவைத் தரக்கூடிய சிறு தென்றல் காற்று வீசி வருகின்ற அந்தக் காரணத்தாலும், தகுதியைக் கொண்டதும், காட்டு முயல் போன்ற களங்கத்தினைக் கொண்டதுமான வடிவத்தில் இருந்துகொண்டு நெருப்பை வீசும் அழகிய சந்திரனுடைய ஒளியாலும், மேல் மேல் தொடர்ந்து வந்து கொடிய வேதனையை நான் அடையும்படி, கரையின் மீது அலைகள் பட்டு அழிய அந்த அலைகளை ஒப்பற்ற விதத்தில் வீசுகின்ற கடலாலும், ஒரு துணையும் இல்லாமல் அலங்கரித்த மலர்ப் படுக்கையில் தனிமையில் எனது உயிர் வாடுதல் தகுமோ? என் விரக வேதனை ஒழியாதோ? பொன் நிறைந்த வடமேரு மலை போல் விரைந்து சென்று சண்டை செய்த சூரனை இறந்து போகுமாறு சுட்டெரிக்கச் செலுத்திய கூரிய வேலனே, வேடர் குலத்தவளாகிய ஒப்பற்ற குறத்தியும், மெய்ம்மை திகழும் லக்ஷ்மியின் சிறந்த மகளுமான வள்ளி மகிழும்படி தினைப் புனத்துக்கு விரும்பிச் சென்ற மயில் வீரனே, நெருக்கமாய் வளர்ந்துள்ள தாழை மடலின் தழைகள் சேர்ந்த வயல்களை உடைய திருவண்ணாமலையின் தெருக்களில் வாழ்பவனே, உலகுக்கும், சிவனுக்கும், உமா தேவிக்கும், இமையாத விழிகளை உடைய தேவர்களுக்கும் அரசனாகிய பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.மன்மதனுடைய பாணங்கள், தென்றல் காற்று, நெருப்பை வீசும் நிலா, அலைகள் வீசும் கடல், மலர்ப் படுக்கை முதலியவை தலைவனின் பிரிவுத் துயரை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 397 - திருவருணை 
ராகம் - ஸரஸ்வதி; தாளம் - மிஸ்ரஜம்பை - 10

தனதாதன தானன தத்தம் ...... தனதான     தனதாதன தானன தத்தம் ...... தனதான

இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே     இளவாடையு மூருமொ றுக்கும் ...... படியாலே 
சமராகிய மாரனெ டுக்குங் ...... கணையாலே     தனிமானுயிர் சோரும தற்கொன் ...... றருள்வாயே 
குமராமுரு காசடி லத்தன் ...... குருநாதா     குறமாமக ளாசைத ணிக்குந் ...... திருமார்பா 
அமராவதி வாழ்வம ரர்க்கன் ...... றருள்வோனே     அருணாபுரி வீதியி னிற்கும் ...... பெருமாளே.

பனிக்கு அரசனாகிய சந்திரன் வீசுகின்ற நெருப்புக் கதிர்களாலே, மெல்லிய தென்றல் காற்றும், ஊர்ப் பெண்களின் ஏச்சும் வருத்துகின்ற தன்மையாலே, காமப்போருக்கு என்றே மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலே, உன்னைப் பிரிந்து தனியே தவிக்கும் மான் போன்ற இப்பெண் உயிர் சோர்ந்து போகாமல் இருக்க ஏதேனும் ஒரு வழி கூறி அருள்வாயாக. குமரா, முருகா, சடைமுடிப் பெருமான் சிவனுடைய குருநாதனே, குறமகள் வள்ளியின் ஆசையை அணைத்துத் தணிக்கும் திருமார்பா, தேவலோக வாழ்க்கையை அன்று அமரர்களுக்கு அருளியவனே, திருவண்ணாமலை வீதியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.சந்திரன், தென்றல் காற்று, மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப் பெண்களின் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 398 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த     தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த          தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த ...... தனதனத் தனதான

இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப     அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க          இசலி யிசலியுப ரிதலீலை யுற்று இடைநூல் நுடங்க ...... வுளமகிழ்ச் சியினோடே 
இருவ ருடலுமொரு வுருவாய்ந யக்க முகமே லழுந்த     அளக மவிழவளை களுமேக லிக்க நயனா ரவிந்த          லகரி பெருகஅத ரமுமேய ருத்தி முறையே யருந்த ...... உரையெழப் பரிவாலே 
புருவ நிமிரஇரு கணவாள்நி மைக்க வுபசா ரமிஞ்ச     அவச கவசமள வியலேத ரிக்க அதிலே யநந்த          புதுமை விளையஅது பரமாப ரிக்க இணைதோ ளுமொன்றி ...... அதிசுகக் கலையாலே 
புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க     மனமு மனமுமுரு கியெயாத ரிக்க வுயிர்போ லுகந்து          பொருள தளவுமரு வுறுமாய வித்தை விலைமா தர்சிங்கி ...... விடஅருட் புரிவாயே 
பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த     தமர திமிரபிர பலமோக ரத்ந சலரா சிகொண்ட          படியை முழுதுமொரு நொடியேம தித்து வலமா கவந்து ...... சிவனிடத் தமர்சேயே 
பழநி மிசையிலிசை யிசையேர கத்தில் திருவா வினன்கு     டியினில் பிரமபுர மதில்வாழ்தி ருத்த ணிகையூ டுமண்டர்          பதிய முதியகதி யதுநாயெ னுக்கு முறவா கிநின்று ...... கவிதையைப் புனைவோனே 
அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபா லனன்ப     ரடையு மிடரைமுடு கியெநூற துட்ட கொலைகா ரரென்ற          அசுரர் படையையடை யவும்வேர றுத்த அபிரா மசெந்தி ...... லுரகவெற் புடையோனே 
அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த     இரண கரணமுர ணுறுஞ்ர னுட்க மயிலே றுகந்த          அருணை யிறையவர்பெ ரியகோபு ரத்தில் வடபா லமர்ந்த ...... அறுமுகப் பெருமாளே.

சுவை கொண்டதும் இன்பம் தருவதுமான தனங்களும் மார்பில் அழுத்த, நெற்றியில் வேர்வை துளிர்க்க, காமம் பெருகும் நிலையிலே விரல்களின் நகக்குறி தைக்க, (அக்குறிகளில் கசியும் ரத்தம்) ரத்தினம் போல் ஒளி பெருக, அடிக்கடி பிணக்கு ஊடல் கொண்டு பிறகு மேல் விழும் கலவி லீலைகளை விளையாடி, நூல் போன்ற மெல்லிய இடை துவள, உள்ளத்தில் களிப்புடன் இருவர் உடலும் ஒன்றுபட்டு ஒருவராகி இன்பம் தர முகத்தின் மேல் முகம் அழுந்த, கூந்தல் அவிழ்ந்து விழ, வளைகள் ஒலிக்க, கண் என்னும் தாமரையில் மயக்கம் பெருக, வாய் இதழ் ஊறலை தக்கபடி உண்ண வேண்டிய முறைப்படி அருந்த, அன்பு காரணத்தால் சில சொற்கள் பேச, புருவம் மேல் எழ, இரு கண்களும் ஒளி வீசி இமைக்க, உபசார வார்த்தைகள் அதிகரிக்க, தன்வசம் அழிதலானது மேற் போர்வை போன்ற அளவான தன்மையில் உண்டாக, அப்போது கணக்கற்ற புதிய உணர்ச்சிகள் தோன்ற, அவ்வுணர்ச்சியை நன்றாக அனுபவிக்க இரண்டு தோள்களும் ஒன்றிக் கலந்து, அதிக சுகமாகிய பகுதியால் புளகாங்கிதம் நிறைய, காமம் என்கின்ற கடல் ததும்பிப் பரவ, இடுப்பில் கட்டியுள்ள கயிறும் அரைஞாணும் ஒளி குறைந்து அறுபட, மனத்தோடு மனம் உருகி அன்பு மேற்கொள்ள உயிர் போல மகிழ்ந்து பாவித்து, பொருள் கிட்டும் வரையில் கலந்து களிக்கும் மாயவித்தை வல்ல பொது மகளிரின் விஷச் சூழலை விட்டொழிக்க அருள் புரிவாயாக. போற்றப்படும் மகர மீனும் சங்கும் கொண்டுள்ளதாய், சகரரால் உண்டானதால் சாகரம் என்ற பெயர் கொண்டதாய், பேரொலி உடையதாய், இருள் நிறைந்ததாய், பிரசித்தி பெற்றதாய், கவர்ச்சி உள்ளதாய், ரத்தினங்களும் மணிகளும் கொண்டதாய் உள்ள கடல் சூழ்ந்த உலகை, முழுதும் ஒரு நொடிப் பொழுதில் அளவிட்டு வலம் வந்து (தந்தையாகிய) சிவபெருமானிடத்து அமர்ந்த குழந்தையே, பழநி மலை மீதும், புகழோடு கூடிய சுவாமி மலையிலும், திருவாவினன்குடியிலும், சீகாழியிலும், நீ என்றும் மங்கலமாய் வாழ்கின்ற திருத்தணிகையிலும் உறைவிடம் கொண்டவனே, தேவர்கள் உன்னைத் தரிசிக்க வருகின்ற அத்தலங்களில் எல்லாம் உறைபவனே, பழம் பொருளாகிய வீட்டின்பமானது இந்த அடிமைக்கும் கிட்டும்படியாக நின்று என் பாமாலையை அணிந்து கொள்பவனே, திருமாலும் பிரமனும் தேவர்களும் ஆகிய மேலோர்களைக் காத்து அருள்பவனே, உன் அடியார்கள் அடையும் துயரத்தை ஓட்டித் தூளாக்க, துஷ்டர்களான கொலைகாரர்கள் எனப்படும் அசுரர்களின் சேனையை முழுமையும் வேரறுத்த அழகனே, திருச்செந்தூர், நாகமலை என்ற திருச்செங்கோடு என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, செவ்விய ஒளி வீசுவதும் உனது கருணை பூரணமாக நிறைந்ததுமான திருவடியைப் பகைத்து மேலெழுந்த போர்க்குணம் கொண்டவனாய் மாறுபட்டு எழுந்த சூரன் அஞ்சும்படி மயிலின் மேல் ஏறிவரும் கந்தனே, திருவண்ணாமலையில் வாழும் சிவபெருமானுடைய திருக்கோயிலின் பெரிய கோபுரத்திற்கு வடதிசையில் எழுந்தருளியிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 
இந்தப் பாட்டின் முதல் 12 வரிகள் புணர்ச்சியை விவரிக்கும்.

பாடல் 399 - திருவருணை 
ராகம் - ஸாமா; தாளம் - கண்டசாபு - 2 1/2 - எடுப்பு 1/2 தள்ளி

தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான     தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான

இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்     திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே 
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா     அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.

இரவும், பகலும், பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி, நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. மேலான கருணையுடன் விளங்கும் பெருவாழ்வே, உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப் பொருளே, சிவபிரான் அருளிய நற்குணப் பிள்ளையே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 400 - திருவருணை 
ராகம் - ஸாவேரி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகிட தகதிமி-3 1/2

தனன தனனா தனன தனனா     தனன தனனா ...... தனதான

இருவர் மயலோ அமளி விதமோ     எனென செயலோ ...... அணுகாத 
இருடி அயன்மா லமர ரடியா     ரிசையு மொலிதா ...... னிவைகேளா 
தொருவ னடியே னலறு மொழிதா     னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ 
உனது பததூள் புவன கிரிதா     னுனது கிருபா ...... கரமேதோ 
பரம குருவா யணுவி லசைவாய்     பவன முதலா ...... கியபூதப் 
படையு முடையாய் சகல வடிவாய்     பழைய வடிவா ...... கியவேலா 
அரியு மயனோ டபய மெனவே     அயிலை யிருள்மேல் ...... விடுவோனே 
அடிமை கொடுநோய் பொடிகள் படவே     அருண கிரிவாழ் ...... பெருமாளே.

வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவியர் மீது நீ கொண்ட ஆசையோ? அல்லது உன் திருக்கோயில்களில் விதவிதமாக நடக்கும் ஆரவாரங்களோ? வேறு என்னென்ன நிகழ்ச்சிகளோ? (எனக்குத் தெரியாது) உன்னை அணுகமுடியாத முநிவர், பிரமன், மால், தேவர், அடியார் இத்தனை பேரும் முறையிடும் ஒலிகள் என் செவியில் விழாதபோது, யான் ஒருவன் மட்டும் தனியாக இங்கே அலறும் மொழிகளைப் பற்றி யாரேனும் ஒருவர் அன்போடு வந்து உன்னிடம் தெரிவிப்பார்களோ? உன் பாதத்தில் உள்ள தூசானது பூமியிலுள்ள மலைகளுக்குச் சமம். அப்படியென்றால் உன் திருவருள் எவ்வளவு பெரியதோ? (யான் அறியேன்). மேலான குருமூர்த்தியாய், அணுவிலும் அசைவு ஏற்படுத்துபவனாய், காற்று முதலிய ஐம்பெரும் பூதங்களை ஆயுதமாக உடையவனே, எல்லா உருவமாயும், பழமையான உருவத்திலும் அமைந்த வேலனே, திருமாலும், பிரம்மனும் உன்னிடம் அடைக்கலம் புக, உன் வேலாயுதத்தை இருள் வடிவம் எடுத்த சூரன்மேல் செலுத்தியவனே, இவ்வடியேனுக்கு ஏற்பட்ட தொழுநோயைத் தூளாக்கிய* திருவண்ணாமலையில் வாழ்கின்ற பெருமாளே. 
* அருணகிரிநாதர் வாழ்க்கையில் அவருக்கு உற்ற தொழுநோயை முருகனது அருள் முற்றிலும் குணப்படுத்திய நிகழ்ச்சி இங்கு பேசப்படுகிறது.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.