LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

வள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும் - சி.அழகர்

திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ஒரு நிலவுடைமைச் சமூகமாகும். அச்சமூகத்தில் பெண்கள் இல்லத்திற்குரியவர்களாக மட்டுமே இருந்துள்ளனர். ஆண்கள் புற உலகில் செல்வாக்குடன் ஆதிக்கம் பெற்றும் இருந்துள்ளனர். அச்சமூகச் சூழலில் அறம் உரைக்கப் பாடிய திருக்குறளில் அக்காலப் பெண்களின் வாழ்வியல் நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள பெண்மைக் குணமான கற்பு, ஒழுக்கம், கணவன் மனைவி உறவு, இல்லத்தைப் பேணும் பண்பு முதலானவற்றை இக்காலப் பெண்ணியப் பார்வையில் இங்குக் காணலாம்.

 

கற்புத்தன்மை

 

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

 

திண்மையுண் டாகப் பெறின்

 

- - - (குறள் 54)

 

இல்வாழ்வில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால் அம் மனைவியை விட வேறு செல்வம் கிடையாது.

 

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

 

சொற்காத்துச் சோர்விலாள் பெண்

 

- - - (குறள் 56)

 

கற்புநெறியில் தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண் எனக் கூறப்பட்டுள்ளது. புராதனப் பொதுவுடைமைச் சமூகத்தில் பாலியல் வேறுபாடு இல்லாமல் உறவு வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். நிலவுடைமை வர்க்கம் தோன்றிய பின் சொத்துக்களைத் தம் வாரிசுக்குத்தான் கொடுக்க வேண்டும் என நினைத்து நிலவுடைமையாளர்கள் தம் குழந்தைதான் என்பதை நிரூபிக்கப் பெண்களைக் கற்பு என்னும் கோட்பாட்டில் நிலை நிறுத்தியுள்ளனர். இங்குதான் ஆணாதிக்கச் சமூகம் தோற்றம் பெறுகிறது. அக் கற்புக் கோட்பாட்டை வள்ளுவரும் தம் குறட்பாக்களில் கூறியிருப்பதால், அதை ஓர் ஆணாதிக்கச் சமூகக் கருத்தியலாகவே காண முடிகிறது. அக் கற்புக் கோட்பாடு இன்று மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. ''கற்பு என்ற கருத்தாக்கம் தேவையான ஒன்று என்பதை 95.5% மக்கள் கற்பு என்பது தேவையில்லாத சமுதாயக் கட்டுப்பாடு என்றும் அது மாயை என்றும், வெற்றுப் பந்தம் என்றும் கணித்துள்ளனர்.'' திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ஓர் ஆணாதிக்கச் சமூகமாகவே இருந்துள்ளதை அறிய முடிகிறது.

 

கணவன் - மனைவி உறவு

 

பண்டைக் காலச் சமூகத்தில் ஆண்கள் மிகுதியாக உழைப்பில் பங்கெடுத்ததால் அவர்களே சமூகத்தில் முதன்மையானவர்களாகக் கருதப்பட்டுள்ளனர். வள்ளுவர் வாழ்ந்த காலக் கட்டத்திலும் அதே நிலை என்பதால் பெண்கள் கணவனின் உழைப்பைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழல் இருந்துள்ளது. அந்நிலையை வள்ளுவர் தன் படைப்பில் பதிவு செய்துள்ளார்.

 

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

 

புத்தேளிர் வாழும் உலகு

 

- - - (குறள் 58)

 

பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால் பெருஞ் சிறப்புடைய மேல் உலக வாழ்வைப் பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது. கணவனை வணங்கி அவனுக்கு ஏவல் பணி செய்யும் ஓர் அடிமைப் பெண்ணாக வற்புறுத்தப்படுவதைக் காண முடிகிறது.

 

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

 

பெய்யெனப் பெய்யும் மழை

 

- - - (குறள் 55)

 

கடவுளை வழிபடாது கணவனைத் தொழும் பெண் பெய் எனக் கூறின் மழை பெய்யும் என்பது கற்பு பற்றிய நடைமுறை விளக்கம். தெய்வத்தை விடக் கணவன் அதீத சக்தி படைத்தவனாகக் காட்டப்பட்டுள்ளான். இது ஆண்களின் சமூக மேன்மையைக் காட்டுகிறது. பெண்கள் கணவனை வணங்கி, ஏவல் பணி செய்வதைத் தவிர சமூகத்தில் பிற பணிகளில் பங்கெடுத்ததாகக் காட்டப்படவில்லை.

 

இல்லமும் பெண்ணும்

 

தந்தை வழிச் சமூகத் தோற்றத்திற்குப் பின் பெண்களின் இயக்கத்தை இல்லறத்தில் நிலை நிறுத்தியுள்ளனர். அவர்களுக்கு ''இல்லாள்'', ''மனையாள்'', ''வீட்டுக்காரி'' என்ற இடம் கொடுத்து அவர்களை இல்லத்தில் அடைத்துள்ளனர். வீட்டில் கணவன், பிள்ளை, விருந்தினர் இவர்களிடம் பரிவுடனும், பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என நீதி போதிக்கப்பட்டுள்ளது.

 

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

 

எனைமாட்சித் தாயினும் இல்

 

- - - (குறள் 52)

 

இல்லறத்திற்குத் தேவையான நற்பண்பு பெண்ணிடம் இல்லாவிட்டால் அவள் எவ்வளவு சிறப்புடையவளாக இருந்தாலும் பயனில்லை.

 

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

 

இல்லவள் மாணாக் கடை

 

- - - (குறள் 53)

 

மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும். ''நற்குணம் பொருந்திய மனைவி அமையாவிட்டால் வாழ்க்கை சூன்யமாகிவிடும். இந்தப் பண்பு மற்றும் நற்குணம் என்பது ஆணின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வரையறுத்துள்ளனர்". ஆண்களிடம் பண்பாட்டை எதிர்நோக்கும் சமூகம் அதை வற்புறுத்தவில்லை. ஆனால் பெண்களிடம் பண்பாட்டையும் மரபையும் வற்புறுத்தியுள்ளனர். பெண்களை இல்லத்திற்குரியவர்களாகக் கூறிவிட்டு இல்லச் சுமைகளிலிருந்து ஆண்கள் விலகிக் கொள்கின்றனர்.

 

பெண்ணை இழிவுபடுத்தல்

 

பெண்கள் இல்லத்தில் அடைபட்டுக் கிடப்பதால் அவர்களுக்கு வெளியுலக அனுபவம் இருப்பது இல்லை என்றும், ஆதலால் அவர்களிடம் சிந்தனைத் திறன் குறைவாக இருக்கும் என்றும், அவர்களின் பேச்சையோ கருத்தையோ கேட்டு நடப்பது கேடு விளையும் என ஆணாதிக்கச் சமூகத்தினர் கருதியுள்ளனர். அக்கருத்து குறளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்

 

வேண்டாப் பொருளும் அது

 

- - - (குறள் 901)

 

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார். கடமையை விரும்பியவர்க்கு வேண்டாத பொருளும் அதுவே எனக் கூறப்பட்டுள்ளது.

 

தையல் சொல் கேளேல்

 

- - - (ஆத்திசூடி 62)

 

எதார்த்தத்திலும், இலக்கியங்களிலும் பெண்களுக்குக் கருத்துரிமை கொடுக்காமல் இல்லப் பொம்மையாகவே வைத்துள்ளனர். சமூகத்தில் பெண்களுக்கு எந்தவகையான மேன்மையும் கொடுக்காமல் அடித்தட்டு நிலைக்கே அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

''வள்ளுவப் பேராசானுக்கு அவன் காலத்து நிலப் பிரபுத்துவக் கருத்தான பெண், ஆண் ஏற்றத் தாழ்வுக் கருத்தைத் தாண்ட முடியவில்லை. அதற்கு முதல்தரமான எடுத்துக்காட்டு பெண் வழிச் சேரல் அதிகாரம்'' எனப் ப. ஜ“வானந்தம் கூறியுள்ளார். ''வள்ளுவர் காலத்தில் அரசு தோன்றிவிட்டது. நிலவுடைமை அமைப்பு நிலைத்து விட்டது. வள்ளுவர் அரசுக்கும் நிலவுடைமை அமைப்புக்கும் சேவை செய்பவராகவே விளங்கினார். நிலவுடைமை அமைப்பை உடைக்க அவர் விரும்பவில்லை. அதை நிலைநாடட அரசனுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் அறிவுரை கூறினார். அதை உடைக்க விடாது காப்பதற்கு அறம் வகுத்தார். இவற்றால் நிலவுடைமைச் சமுதாயத்தைப் பேணுவதற்குத் திருக்குறள் இலக்கண நூலாக விளங்குகிறது. நிலவுடைமையை விரும்பியதால் ஆணாதிக்கக் கருத்தியலும் இடம்பெற்றுள்ளது. பெண்ணை இல்லாள் என்று கூறுகின்றனர். ஆனால் இல்லத்தின் நலனுக்கான ஆலோசனை கூறியதாகக் காட்டப்படவில்லை.

 

நிலவுடைமைச் சமூகத்தில் வாழ்ந்த திருவள்ளுவர் அச்சமூகத்தில் பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட கற்புக்கோட்டைப் பதிவு செய்துள்ளார். நிலவுடைமை வர்க்கத்தினர் அக்கோடபாட்டைச் சுயநலத்திற்காகத் தோற்றுவித்துள்ளனர் என ஆராயப்பட்டுள்ளது. குடும்பத்தில் உழைப்பை ஆண்களுக்குக் கொடுத்து மனைவியைக் கணவனைச் சார்ந்து வாழவைத்து, கணவனையே கடவுளாகவும் வணங்க வைத்துள்ளனர். இல்லத்தில் உள்ள பெண்களுக்கு மரபுகளை வலியுறுத்தி, ஆண்களுக்கு அம் மரபுகள் வலியுறுத்தப் படாமல் உள்ளதைக் குறள்வழிக் காண முடிகிறது. இல்லாள் எனக் கூறப்பட்ட பெண் இல்ல வளர்ச்சிக்கு எந்த ஆலோசனையும் கூறியதாகக் காட்டப்படவில்லை. திருவள்ளுவர் காட்டும் பெண்மை மரபைப் பின்பற்றும் பெண்மையாகவே அமைந்துள்ளது. பெண்ணியப் பார்வையில் இதனை ஆணாதிக்கச் சிந்தனையாகவே அறியமுடிகிறது.

by Swathi   on 11 Apr 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் படம் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் படம்
திருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன் திருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்
திருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன் திருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்
திருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன் திருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்
திருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன் திருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்
பொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன் பொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்
வள்ளுவம் படிப்போமா!! வள்ளுவம் படிப்போமா!!
அனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php அனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php
கருத்துகள்
06-Jun-2013 09:39:16 பா.அம்மையப்பன் said : Report Abuse
தங்களின் முடிவுரை சரியாக இல்லையே ! மீண்டும் சீர்தூக்கி சரியான கருத்தை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.