|
||||||||
அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா |
||||||||
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அதிக அளவில் தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு தேவைகளுக்காகக் குடிபெயர்ந்து வருகிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்தும் , இலங்கை , சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் தமிழ்மக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். குடிபெயர்ந்தவர்கள் பெரும்பாலோர் வேலைவாய்ப்பு, தொழில் , கல்வி, ஆராய்ச்சி , போர் சூழல் என்று பல்வேறு காரணங்களால் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாராகக் குடிபெயர்ந்த மக்களின் முதல் தலைமுறை தங்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதில் கவனம் செலுத்தினார்கள். தமிழ்க்கல்வி மேல் அதிகம் அக்கறை செலுத்தவில்லை. அதிக தமிழ்ப்பள்ளிகளோ , பாடத்திட்டங்களோ உருவாகவில்லை எனலாம். புலம்பெயர்ந்த மக்களில் தமிழ்க்கல்வி மேல் முதலில் கவனம் செலுத்தியது சிங்கப்பூர் என்று சொல்லலாம். அங்குள்ள பாடத்திட்டங்களை, தமிழ்ப்பள்ளிகளும், தமிழாசிரியர்களும், அரசின் ஊக்கமும், தமிழர்களின் அரசியல் பங்களிப்பும் தமிழ்க்கல்வியைத் தக்கவைக்க முக்கிய காரணமாக விளங்குகிறது. இன்றும் உலக அளவில் எளிமையான தமிழ் இலக்கணம் மற்றும் எளிமையான பாடத்திட்டம் உள்ளிட்டவற்றுக்கு முன்னோடி சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் தமிழ்ப்பணியாகும். வட அமெரிக்காவில் தமிழ்க்கல்வி : அமெரிக்காவில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடுகளில் பெற்றோர்கள் இணைந்து தமிழ் சொல்லிக்கொடுத்துவந்தனர். அவை பெரும்பாலும் திண்ணைப் பள்ளிகளாக நடந்துவந்தது. அதில் முறையான பாடத்திட்டமோ, ஆசிரியர்களோ, நேர ஒழுங்கோ, தேர்வு முறையோ பெரிதாக இல்லாமல், நண்பர்களின் சந்திப்பு, தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்தல் என்ற நோக்கிலேயே நடந்துவந்தது. இருபது, முப்பது குழந்தைகள் ஓர் இடத்தில் வாரம் ஓரிரு முறை கூடி தமிழ் கற்று வந்தனர். பெற்றோர்கள் தமிழ்நாட்டிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் தமிழ்ப்பாடல்களை வரவழைத்து அவற்றைக்கொண்டும், தங்கள் தமிழ் அனுபவத்தைக் கொண்டும் சொல்லிக்கொடுத்தனர். இது முறைப்படியாக இல்லாத காரணத்தாலும், ஒரு பள்ளியாக முறையாக நடைபெறாத காரணத்தாலும் பெரும் அளவில் விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதைக் காண்கிறோம். பத்து-பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்பருவத்திலிருந்த தமிழ்க்குழந்தைகள் இன்று தமிழில் அதிகம் பேசவோ, எழுதவோ முடியவில்லை என்பதைக் கண்கூடாகக் காணமுடியும். பல பெற்றோர்கள் அதுகுறித்த வருத்தம் தெரிவித்து இன்றைய காலகட்டத்தில் தமிழ்க் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் எங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்று குறைபட்டுக்கொள்வார்கள்..
கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளில் தமிழ்க்கல்வி என்பது மிகப்பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்குத் தமிழ்ச்சங்கங்களும், உலகளாவிய தமிழ் எழுச்சியும் , ஆர்வமும், சுய அடையாளம் தேடும் தமிழர்களின் ஆர்வமும், முக்கிய காரணமாக விளங்குகிறது. குறிப்பாகத் திரைப்படம் , கோவில் சந்திப்புகள், ஆன்மீகம், கூட்டாஞ்சோறு சந்திப்பு , ஆண்டுக்கு சில கலை , இலக்கிய நிகழ்ச்சிகள் என்று இருந்த நிலை மாறி இன்று அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களின் கலை , கலாச்சாரம், மரபு, பல்வேறு தேவைகள் , மொழி வளர்ச்சி ஆகியவற்றில் தமிழ்ச்சங்கங்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திவருகின்றன. அந்த வகையில் பல மாநிலங்களில் தமிழ்ப்பள்ளிகளை உருவாக்குதல், ஒருங்கிணைத்தல், ஊக்கப்படுத்துதல் என்று பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. ஆங்காங்கே பெற்றோர்களும் தங்கள் அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல தமிழ்ச் சூழலை உருவாக்கும் நோக்கில் தன்னார்வ அமைப்புகளாக தமிழ்ப்பள்ளிகளை அமெரிக்கா முழுதும் உருவாக்கி நடத்தி வருகிறார்கள். இவ்வாறு அமெரிக்காவில் உருவான 245 க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் மிகச்செம்மையாகத் தமிழை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணியை செல்வனே செய்துவருகிறது. ஒவ்வொரு பள்ளியும் கலை - கலாச்சாரக் குழுக்களை உருவாக்கி தமிழ்க்கல்வி , வாழிவியலை ஒட்டிய போட்டிகளை நடத்தி மேடை வாய்ப்புகளை உருவாக்கி பரிசுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறார்கள். அதில், நம் தமிழ்க் கலாச்சாரம் , பண்பாடு , மொழியின் சிறப்புகளை நம் குழந்தைகளுக்கு கற்பிக்கும் நோக்கிலும், முத்தமிழையும் உள்ளடக்கிய சித்திரம் (Art ) , விளம்பரவேளை (ad zap ), தமிழ் முழக்கம் (Speech) குறளமுது (Thirukkural), தமிழ் இசை (Music) , எழுத்தோவியம் (Katturai) ,தமிழ்த் தேனீ (Tamil Bee) போன்ற பல்வேறு தமிழ்க்கல்வி சார்ந்த போட்டிகளை நடத்தி பரிசுகொடுத்து பாராட்டுகிறார்கள். பாடத்திட்டங்கள்: தமிழ்க்கல்வி பாடத்திட்டங்களைப் பொறுத்தவரைச் சிங்கப்பூர் முன்னோடியாகத் திகழ்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை உலகத் தமிழ்க்கல்விக் கழகம் (International Tamil Academy - ITA ), அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகம் (American Tamil Academy - ATA ஆகிய இரு பாடத்திட்டங்களைப் பின்பற்றி பாடங்கள் நடத்தப்படுகின்றன. பிரிட்டன் ,டென்மார்க், கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளிலும் தமிழ்ப்பள்ளிகள் அந்தந்த நாட்டின் சூழலை உள்வாங்கிப் பாடத்திட்டங்களை அமைத்துக்கொண்டு தமிழ்ப்பள்ளிகளை நடத்துகிறார்கள். தமிழ்நாட்டுப் பாட நூல்களையும் , பிற நாட்டு பாடநூல்களையும் உள்வாங்கி தங்கள் நாட்டிற்கு உகந்த பாடத்திட்டங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். பெரும்பாலான பள்ளிகள் தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy ) பல்கலைக்கழகத்துடன் இணைந்து தேர்வுகளை ஆர்வமாக எடுத்துவருகின்றன. பல நாடுகளின் தனித்துவ வழக்கு சொற்களும் கல்வியும்: தமிழ்நாட்டுத் தமிழ் உச்சரிப்பிற்கும், இலங்கை தமிழ் உச்சரிப்பிற்கும் வேறுபாடுகள் உள்ளன. உதாரணத்திக்கிற்கு கதைத்தல் போன்ற வார்த்தைகள் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பயன்பாட்டில் இல்லை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் நடத்தும் தமிழ்ப்பள்ளிகள் தனித்தனியே இருப்பதையே அறியமுடிகிறது. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரியர்களின் உச்சரிப்பு, மாணவர்கள் கற்கவேண்டிய வழக்குச் சொற்கள், மக்களின் கூட்டு வாழ்வியல் உள்ளிட்டவை இதற்குக் காரணமாக இருக்கிறது. தமிழ்க்கல்விக்கு அங்கீகாரம்: வெளிநாடுகளில் குழந்தை மருத்துவர்கள் குழந்தைகள் பேசத்துவங்கும் காலகட்டத்தில் பெற்றோர்கள் பேசும் தாய்மொழியிலேயே குழந்தையிடம் பேச வலியுறுத்துகிறார்கள். மேலும் ஆங்கிலம் அல்லது பிறமொழிகளைப் பள்ளி செல்லும் காலகட்டத்தில் அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்றும் அறிவுறுத்துகிறார்கள். அந்த வகையில் இன்று படித்த பெற்றோர்கள், விழிப்புணர்வு உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளின் சிந்தனைத்திறன் மேம்படத் தாய்மொழி தமிழில் பேசுவதை கடைபிடிக்கிறார்கள். மேலும் பல்வேறு நாடுகளிலும் பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் , தமிழ்ச்சங்கங்கள், தமிழ்ப்பள்ளிகளின் முன்னெடுப்பில் அந்தந்த நாட்டின், மாநிலத்தின் கல்வித்துறையின் ஒத்துழைப்புடன் தமிழ் மொழி தேர்வு எழுதும் திறனுடைய, அல்லது குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மேற்படிப்பு செல்லும்போது சலுகைகள் வழங்கப்படுகிறது. இது சமீபத்தைய தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக விளங்குகிறது. குறிப்பாக அமெரிக்காவில் High school Credit என்ற சலுகை தமிழ்ப்படித்து என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை உள்ள பெற்றோர்களையும் தமிழ்ப்பள்ளிகள் பக்கம் திருப்பியுள்ளது என்று கூறலாம். இணையவழி தமிழ்க்கல்வி: இந்தியாவிலிருந்து ஒரு சில இணைய வழி தமிழ்க்கல்வி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் வாழும் நாடுகளின் சூழல் உள்ளிட்டவற்றை நன்கு அறிந்து, வெளிநாட்டு வாழ் குழந்தைகள், பெரியவர்களின் ஆங்கில உச்சரிப்பை உணர்ந்து, தமிழ் சொல்லிக்கொடுப்பவருக்கு உள்ள ஆங்கில அறிவு , ஆழமான இலக்கிய வாசிப்பு , நடத்தும் முறை ஆகிய பலவற்றைச் சார்ந்து இணைய வழி தமிழ்க்கல்வியின் வெற்றி அமைகிறது. குறிப்பாகத் தமிழக மாணவர்களுக்கு நடத்தி அனுபவம் பெற்றவர்கள் அதே வழியில், மொழியில், சொல்லிக்கொடுக்கும் விதத்தில், பாடத்திட்டத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்குத் தமிழைச் சொல்லிக்கொடுக்கமுடியாது. வெளிநாட்டு வாழ் சூழலில், அவர்கள் ஆசிரியரைக் கண்டு பயப்பட மாட்டார்கள், பெரிய அளவில் மரியாதை கொடுப்பது இல்லை, ஆசிரியரை பெயரை சொல்லி அழைக்கும் பழக்கம் சில நாடுகளில் உண்டு, அதிகம் கேள்வி கேட்பார்கள், இந்த மொழியை உயிரெழுத்து , மெய்யெழுத்து என்று சொல்லிக்கொடுப்பதற்குபதில் மொழியின் பன்முகத்திறன், கணக்கதிகாரம், விளையாட்டு, புதிர், அறிவியல், மருத்துவம், இசை, இலக்கியச்செழுமை என்று அவர்களை ஒவ்வொரு நாளும் பாடத்திட்டத்திற்கு வெளியே அவர்கள் சிந்தனை செல்லும் திரைக்கேற்ப அவர்களின் கேள்விகளுக்கு உரிய தகவல்களை பகிர்ந்து தமிழின்மேல் ஆர்வமூட்டும் வகையில் வகுப்பைக் கொண்டுசெல்லும் தேவை உள்ளது. வயதுக்கு ஏற்ப இந்த கல்விமுறை மாறும். எனவே பாடத்திட்டம் என்பதை ஒரு மேலோட்டமான வழிகாட்டியாகக் கொள்ளலாமே தவிர, ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப, அவர்களின் தாய்மொழிக்கு ஏற்ப, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தமிழ் மொழி கற்பதன் தேவைக்கு ஏற்ப, சொல்லிக்கொடுப்பது அவசியமாகிறது. இணையம் வழியே சொல்லிக்கொடுப்பவர் ஒரு தமிழாசிரியர் என்பதைவிட ஆங்கிலம் தெரிந்த , மொழிப்புலமை பெற்ற அனுபவம் சார்ந்தவர்களாக இருப்பது தேவையாகிறது. உலகளாவிய அளவில் தமிழ்மொழிக் கல்வியைப் பொதுமைப்படுத்திவிட முடியாது என்பது நிதர்சனமான உண்மை. காரணம், ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரமும் , நம்பிக்கையும், வாழ்வியல் உதாரணங்களும் வேறுபட்டது. ஒரு நாட்டிற்குக் கல்வி சொல்லிக்கொடுக்க , அந்த நாட்டின் வாழ்வியலை முழுமையான உள்வாங்கி , தேவையானால் நேரில் சென்று தங்கி, சூழலை உள்வாங்கி, முறையான புரிதலை ஏற்படுத்திக்கொண்டு கல்வியைச் சொல்லிக்கொடுக்கவேண்டியது அவசியமாகிறது. இன்றைய தேவைகள்: தமிழ்நாடு, இலங்கைக்கு வெளியே சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழ்க்கல்வி மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. தங்கள் குழந்தைகளுக்குத் தாய்மொழியைச் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்ற உந்துதலுடன் கட்டமைப்பைப் பெற்றோர்களே உருவாக்குவதாலும் , பொருளாதார வளம் இருப்பதாலும் பெரும் உதவிகள் தேவைப்படுவதில்லை. தமிழ்நாட்டு அரசின் ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் , அவ்வப்போது அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்துகொடுக்க உலகத்தமிழ்ச்சங்கத்தில் உந்துசக்தி இருந்தால் போதுமானது. ஆனால், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ் போன்ற பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் பெயரையும், ஒருசில தமிழ்க் கலாச்சாரத்தையும், இறைவழிபாட்டையும் மட்டுமே தமிழின் அடையாளமாகத் தொடர்கிறார்கள். தமிழ்மொழி அவர்களிடமிருந்து பெரும்பான்மையாக விடைபெற்றுவிட்டது. அதை மீட்டெடுக்க பெரும் பணி செய்யவேண்டியுள்ளது. தமிழ்மொழி வளர்ச்சி தவிர்த்து , தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து, உலகளாவிய தமிழ்க்கல்வி அமைப்புகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் ,தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கட்டமைப்புகளின் வழியே உரிய வழிகாட்டுதல்கள் செய்து, தமிழ்க்கல்வி வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்தியுள்ள அமைப்புகளை ஊக்குவிப்பது தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு நல்ல பலனைத் தரும். தமிழ்வழி அரசுப் பள்ளிகள்- தாய்த்தமிழ் பள்ளிகள்: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளிகளின் தமிழாசிரியர்களுக்குப் பன்னாட்டுச் சூழலில் தமிழ்க் கல்வியின் பங்கு குறித்து தொடர்ந்து புத்தாக்க பயிற்சிகளை வழங்குவது தமிழ்க்கல்வியை மேம்படுத்தும். மேலும், தாய்த்தமிழ் பள்ளிகளை ஊக்கம் கொடுத்து இருக்கும் பள்ளிகளை உரிய உதவிகள் செய்து காப்பதும், புதிய பள்ளிகளை வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அல்லது தமிழ்மேல் ஆர்வம் கொண்டவர்கள் தொடங்கி நடத்த அரசு உரிய ஊக்கத்திட்டத்தினை அறிவிப்பது நல்ல பலனை அளிக்கும். மேலும் புலம்பெயர் சூழலில் தமிழ்க்கல்வி கற்கும் மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டின் அரசுப்பள்ளிகளிலும் , தாய்த்தமிழ் பள்ளிகளில் ஆண்டுக்கு சில வாரங்கள் வந்து போகவும் , தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படிக்கும் திறன்மிக்க மாணவர்கள் உலக நாடுகளின் தமிழ்க்கல்விக் கூடங்களுக்கு அனுப்பி அங்குள்ள கல்விச்சூழலை உள்வாங்கவும் அறிவுப்பரிமாற்றத்திற்கு உதவும். |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 15 Apr 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|