வண்டி
முன்பெல்லாம் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் இரண்டு மாடுகளை வண்டி இழுப்பதற்காக கட்டாயமாக வீட்டில் வைத்திருப்பார்கள். மோட்டார் வாகனங்கள் அதிகம் புழக்கம் இல்லாத காலங்களில் விவசாயிகள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மாட்டு வண்டியையே பெரிதும் உபயோகித்து வந்தனர். இந்த வண்டிக்கு 'கட்டை வண்டி' என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த வண்டியானது சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. இந்த மாட்டு வண்டிகளின் பயன்பாடு தொன்றுதொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் விளையும் வேளாண் பொருட்களையும், பிற பொருட்களையும் ஏற்றிச்செல்ல அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஒரே வாகனமும், இந்த மாட்டு வண்டிதான். இந்த மாட்டுவண்டியை இன்று காண்பதே அரிதாகி வருகிறது. இந்த வகை மாடுகளை ஜல்லிக்கட்டிற்காக பெரிதும் பயன்படுத்த மாட்டார்கள், ஆனால் சில பகுதிகளில் வண்டி மாடுகளுக்கும் ஜல்லிக்கட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த வண்டிப் பயணமானது, பெரும்பாலான கிராம மக்களின் போக்குவரத்துக்காகவும் பயன்பட்டுள்ளது. விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் வண்டிப் பந்தையமான 'ரேக்ளா பந்தையம்' என்ற விளையாட்டுக்கும் இந்த வண்டிகள் பெரிதும் உதவியுள்ளன. இந்த வண்டியினுடைய ஒவ்வொரு பாகங்களும் ஒவ்வொரு சிறப்புக்காக செய்யக் கூடியது. எவ்வளவு பெரிய வாகனப் பயணமாக இருந்தாலும் மாட்டு வண்டி பயணத்துக்கு ஈடாகாது. இன்று பெரும்பாலோனோர்க்கு மாட்டு வண்டியின் பயன்பாடுகளும், அதனை பற்றிய விளக்கங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாட்டுவண்டியின் ஒவ்வொரு பாகங்களையும் பற்றி தெரிந்து கொள்வோம்...
மாட்டு வண்டி
கடையாணி:
இரண்டு சக்கரங்களையும் அச்சினை விட்டு வெளியேற விடாமல் பிடித்துக் கொள்ளும். வண்டியில் உள்ள மைய அச்சு தொடங்கி கடைசியாக உள்ள பகுதியாக இருப்பதால்'' என்று பெயர் வந்திருக்கலாம்.
அல்லைப்படல்:
பொதுவாக படல் என்றால் மறைக்க உதவுவது என்று அர்த்தம். வண்டியின் இரண்டு பக்கவாட்டுகளிலும் பொருட்கள் விழாதவாறு தடுக்கும் பாகத்திற்கு பெயர் 'அல்லைப்படல்' என்று பெயர்.
குடம்:
ஆரக்கால்களை வட்டை(சக்கரத்தின் வெளிப்பகுதி)யுடனும் மையஅச்சுடனும் இணைக்கும் பகுதிக்கு பெயர்தான் குடம்.
நுகத்தடி:
வண்டியில் பூட்டும் மாடுகளை கட்ட பயன்படும் நீளமான தடிப்பகுதியே இந்த நுகத்தடியாகும். நுகத்தடியில் மாடுகளைப்பூட்ட அதன் இரு பக்கங்களிலும் இரண்டு துளைகள் இருக்கும்.
வட்டை:
வண்டி சக்கரத்தின் வெளிப்பகுதியை வடிவமைக்க உதவும் பகுதிதான் வட்டை. ஒரு சக்கரத்தினை வடிவமைக்க ஆறு வட்டைகள் தேவை. இந்த வட்டையானது தேக்கு மரத்தால் செய்யப்பட்டு இருக்கும்.
சவாரித்தப்பை:
மாடுகள் சவாரி செய்ய ஏர்க்காலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தப்பை. இது ஆட்கள் சவாரி செய்ய வசதியாக உருவாக்கப்பட்டது.
பட்டா:
சக்கரத்தின் நுனிப்பகுதியில் இரும்பினை கொண்டு சக்கரத்தை சுற்றிலும் அதன் மேற்புறம் தேய்ந்து போகாதவாறும், சேதமடையாமலும் பாதுகாக்க 'பட்டா' அமைக்கப்பட்டிருக்கும்.
இருசு:
'இருசு'க்கட்டைதான் வண்டியின் மையப்பகுதியை தாங்கி நிற்கும். வண்டியின் அச்சானது இந்த இருசின் வழியேதான் செல்லும். அந்த அச்சின் முனையில் இருக்கும் சக்கரங்கள் இருசின் உதவியுடனே இணைக்கப்பட்டிருக்கும். வண்டி சுழல்வதில் இருசின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏர்க்கால், மூக்கேர், ஏர்க்கால் சட்டம்:
ஏர்க்கால் சட்டம் என்பது மாட்டு வண்டியினுடைய மையப்பகுதியிலிருந்து மாட்டினை பூட்ட பயன்படும் இடம் வரையுள்ள பகுதிக்கு பெயர்தான் ஏர்க்கால் சட்டம். இந்த ஏர்க்கால் சட்டத்தில் உள்ள நுனிப்பகுதி மூக்கேர் எனவும், வண்டியை ஓட்டுபவர் அமரும் பகுதிக்கு முன்பாக உள்ள பகுதி ஏர்க்கால் என பல பெயர்களால் இடத்துக்கு தகுந்தவாறு அழைக்கப்படும்.
பூட்டாங்கயிறு, பூட்டாங்குச்சி:
நுகத்தடியில் காணப்படும் துளையில் ஒன்றில் பூட்டாங்குச்சியும் மற்றொரு துளையில் பூட்டாங்கயிறும் தொங்க விடப்பட்டிருக்கும். இந்த இரண்டின் மூலமே மாடுகள் பூட்டப்பட்டு வண்டியிழுக்கும்.
முளைக்குச்சி:
அல்லைப்படல் இந்த முளைக்குச்சியின் உதவியோடு கட்டபட்டிருக்கும். வண்டியிலுள்ள பொருட்கள் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்கு இருதுவும் பக்கபலமாக இருக்கும்.
கொலுப்பலகை:
வண்டி ஓட்டுபவர் அமர்ந்து வண்டியை இயக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள பலகைதான் இந்த கொலுப்பலகை. கொலுப்பலகை சில நேரங்களில் வண்டியை ஓட்டுபவர் நின்று கொண்டே பயணிக்க ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
|