சென்னை: பத்திர பதிவின் போது சிறிய பிழைகளுக்கு கூட மக்களை பதிவுத்துறை அலைக்கழிப்பதாக புகார்கள் வைக்கப்படும் நிலையில் இது தொடர்பாக சார்பதிவாளர்களுக்கு பத்திரப் பதிவுத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சொத்து பத்திரம் என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம். அதில் மூல ஆவணத்தின் விவரங்கள், தேதி, பத்திர எண், சொத்து விவரம், சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், பிளாக் எண் போன்றவை சரியாக குறிப்பிடட்டிருக்க வேண்டும்.
இதேபோல் முழுப் பெயர், அடையாள அட்டை, ரேஷன் கார்டில் உள்ள முகவரி, சொத்தினை விற்பனை செய்தவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள், அவரது அடையாள அட்டை மற்றும் மூல ஆவணத்தில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் ஏதேனும் ஒன்று சரியாக குறிப்பிடாமல் தவறுதலாக குறிப்பிட்டிருந்தால் அது உங்களுக்கு சிக்கல் ஆகிவிடும். குறிப்பாக தட்டச்சு காரணமாகவோ, பழைய எண், புதிய எண், குழப்பத்தினாலோ, லே அவுட் பெயர் மாறினாலோ பின்னாளில் யாருக்காவது விற்கும் போது பெரிய குழப்பம் ஏற்படும்.. எனவே பத்திர பதிவின் போது தவறு இல்லாமல் சரிபார்த்துக்கொள்வது அவசியம். அதேவேளையில் சிறிய பிழைகளுக்கு கூட மக்களை பதிவுத்துறை அலைக்கழிப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், பத்திர பதிவின் போது சிறிய பிழைகளுக்கு கூட மக்களை பதிவுத்துறை அலைக்கழிப்பதாக சொல்லப்படும் நிலையில், சார்பதிவாளர்களுக்கு பத்திரப் பதிவுத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஆவணப்பதிவு தொடர்பாக தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சார்பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணத்தாரர்கள் தாக்கல் செய்யும் ஆவணங்களில் காணப்படும் சிறு பிழைகளுக்காக அலைக்கழிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதே போல் மக்கள் தாக்கல் செய்யும் ஆவணங்கள் தொடர்பாக பதிவு அலுவலர்களுக்கு இடையே நடைபெறும் கடித போக்குவரத்து குறித்தும் தகவல் தெரிவிப்பதில்லை. இதற்கு சான்றாக வங்கி ஒன்றால் எழுதப்பட்ட விற்பனை ஆவணத்தை ஒரு சார்பதிவாளர், இது தனது அலுவலக வரம்பிற்கு வராது என்று வேறோரு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அந்த ஆவணத்தை அனுப்பி வைத்து விட்டார். ஆனால் இந்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கி, ஆவணத்தாரர்கள் என யாரிடமும் சொல்ல வில்லை. இந்த பிரச்சினை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளது. எனவே இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்க கூடாது. எனவே சார்பதிவாளர்கள் பதிவுக்கு தாக்கல் செய்யும் ஆவணங்கள் குறித்த நிலையினை ஆவணத்தாரர்களுக்கு உரிய முறையில் தெரிவிக்க வேண்டும். அதே போல் பத்திரங்களில் சிறு பிழைகளுக்காக பொதுமக்களை அலைகழிக்க கூடாது"இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|