|
|||||
ஜெர்மனியில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற இந்தியப் பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் ஆர்டர். |
|||||
ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் பங்கேற்ற இந்தியப் பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
ஜெர்மனியின் நுரெம்பெர்க் நகரில் சர்வதேசப் பொம்மை கண்காட்சி கடந்த ஜனவரி 30-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 65 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன.
அதிக வரவேற்பு
மொத்தம் 5 நாட்களாக நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் இந்திய நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஏராளமான ஆர்டர்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அதிகளவில் ஆர்டர்கள் கொடுத்துள்ளன. இதுகுறித்து நொய்டாவை தலைமையகமாகக் கொண்ட லிட்டில் ஜீனியஸ் டாய்ஸ்நிறுவன தலைமை செயலதிகாரி நரேஷ்குமார் கவுதம் கூறும்போது, “ஜெர்மனியில் நடந்த கண்காட்சியில் சீன பொம்மைகளுக்கு எதிரான மனப்பான்மை நிலவியது. அதேநேரம் இந்தியப் பொம்மைகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. அந்த வகையில் எங்கள் நிறுவன பொம்மைகளுக்கு அதிக ஆர்டர் கிடைத்துள்ளது.
இந்த ஆர்டர்களை விநியோகம் செய்வதற்கு உற்பத்தியை அதிகரிக்க வேண்டி உள்ளது. இதன்மூலம் சர்வதேசச் சந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். மத்திய அரசு தரக்கொள்கையைக் கட்டாயமாக்கியது மற்றும் சுங்க வரியைக் குறைத்தது ஆகிய காரணங்களால் இந்தியப் பொம்மை உற்பத்தித் துறை வேகமாக வளர்ந்து வருகிறது” என்றார். கடந்த 2014-15-ல் இந்தியாவின் பொம்மை ஏற்றுமதி ரூ.1,300 கோடியாக இருந்தது. இது 2022-23-ல் ரூ.2,700 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Kumar on 15 Feb 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|