LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- இலங்கை

கல்வியியல் அறிஞர் மண்டூர் கோணேச பிள்ளை மறைவு

இலங்கையின் மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் இயற்கை எய்திய செய்தியை இலங்கை நண்பர்கள் நேற்றுப் பகிர்ந்துகொண்டனர். இத் துன்பச் செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். திரு. கோணேச பிள்ளை அவர்கள் விபுலாநந்த அடிகளாரால் ஆற்றுப்படுத்தப்பட்டு, சிவாநந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்.

 சிறப்புக் கணித ஆசிரியராகவும், ஆங்கில ஆசிரியராகவும், கண்டி ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அட்டாளைச் சேனை ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையிலும், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் முனைவர் பட்டம்(1998) பெற்றவர். கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் தம் கலாநிதிப் பட்டப்பேற்றினைப் பெற்றவர். முது விஞ்ஞான மாணி, முது கலைமாணி பட்டங்களைப் பெற்றவர் "சர்வதேசக் கல்வியும் ஐக்கிய நாடுகள் சபையும்" என்னும் கற்கையில் பங்குபற்றி உச்சப் புள்ளியான  ஏ பிளசைப்
( A +) பெற்றவர்.

 அமெரிக்காவில்  கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்திற்குரிய ஆய்வறிக்கையை ஒப்படைத்துக் கல்வியியல் கலாநிதி, தத்துவக் கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றவர். பொட்சுவாணாவுக்குச் (Botswana) சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பியவர். இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணி செய்தவர். இத்தகு பெருமைக்குரியவரைக், கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் மூன்றாண்டுகளுக்கு முன்னர் எனக்கு  அறிமுகப்படுத்தினார். திரு. காசுபதி நடராசா, திருவாட்டி சிவமணி, ஒளிப்பதிவாளர் இராஜ்பரத்துடன் அவரைச் சந்திக்கச் சென்றமை நினைவுக்கு வருகின்றது.

 விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் படப்பிடிப்புக்காகச் சென்றபொழுதுதான் அந்த அறிமுகம் அமைந்தது.  மண்டூரில் உள்ள கோணேச பிள்ளையின் இல்லத்தில் அவருடன் அறிமுகம் ஆனேன். அகவை முதிர்ந்த நிலையிலும் என் முயற்சியைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார். அவரின் நேர்காணலை எங்கள் ஆவணப்படத்திற்காக ஒளிப்பதிவு செய்தோம். இந்த விவரங்களை முகநூலிலும் அப்பொழுதே பகிர்ந்திருந்தோம். சில காரணங்களால் கோணேச பிள்ளையின் நேர்காணல் எங்கள் ஆவணப்படத்தில் இடம்பெறவில்லை. ஆயினும் அவர்தம் அறிவார்ந்த பேச்சின் காணொளி எங்களிடம் உள்ளது.

 திரு. கோணேச பிள்ளையை நாங்கள் சந்தித்தபொழுது உடல் தளர்வுற்று இருந்தார். படுக்கையிலிருந்தவரை எழுப்பி, சக்கர நாற்காலியில் வெளியில் கொண்டு வந்து படப்பிடிப்பை நிகழ்த்தினோம். அவர் அறையில் கணினியில் அமர்ந்து நாளும் உலகத் தொடர்பைப் பெற்றிருந்தார். உடனுக்குடன் மறுமொழி விடுக்கும் இயல்புடையவர். ஆங்கில அறிவும், கணக்கு அறிவும், கல்வியியல் அறிவும் நிரம்பப் பெற்றவர். கல்வியிலும் ஆராய்ச்சியிலும் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த காரணத்தால் திருமணம் செய்துகொள்ளவில்லை. தம் உறவினர்களின் அரவணைப்பில் தம் இறுதிக்காலத்தைக் கழித்துவந்தார்.

திரு. கோணேச பிள்ளை அவர்கள் என்னுடன் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருந்தார். அடிக்கடி மின்னஞ்சலில் தொடர்புகொள்வார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் வரைந்த பல மடல்கள் என்னிடம் உள்ளன. விபுலாநந்தர் குறித்த அரிய செய்திகளை அவரிடமிருந்து பெற்றுள்ளேன். அண்மையில் அவர் எழுதிய பலதுறை அறிவுசார் கட்டுரைகள் (கணித, விஞ்ஞான, கல்விசார்  கடுரைகள்) என்ற நூலினை எனக்கு அனுப்பி, என் கருத்தைக் கேட்டிருந்தார். மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பான அந்த நூல்  கலாநிதி கோணேச பிள்ளையின் பெருமையை என்றும் சொல்லிக்கொண்டேயிருக்கும். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கணிதமேதை, கல்வியியல் மேதை என்று கோணேச பிள்ளையைச் சொல்லலாம். நம் காலத்தில் வாழ்ந்து, உரிய சிறப்பினைப் பெறாமல் போன எத்தனையோ மேதைகளைப் போல் நம் கோணே சபிள்ளைக்கு உரிய சிறப்புகளும் அமையாமல் போனமை நம் போகூழ் என்றே சொல்ல வேண்டும்.

கலாநிதி கோணமலை கோணேச பிள்ளையைப் பிரிந்து வருந்தும் அவர்தம் உற்றார் உறவினருக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் மாணவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

by Swathi   on 17 May 2018  1 Comments
Tags: மண்டூர் கோணேச பிள்ளை   Konesapillai   Educationist Konesapillai   கோணேச பிள்ளை   கணக்கியல் அறிஞர் கோணமலை கோணேச பிள்ளை        
 தொடர்புடையவை-Related Articles
கல்வியியல் அறிஞர் மண்டூர் கோணேச பிள்ளை மறைவு கல்வியியல் அறிஞர் மண்டூர் கோணேச பிள்ளை மறைவு
கருத்துகள்
26-Jun-2019 11:17:10 முருகேசன் சங்கர் said : Report Abuse
RIP
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.